Home

Monday 30 January 2017

சாம்ராஜின் சிறுகதைகள் - இழந்தவர்களின் உலகம்



சமீப காலத்தில் சிறுகதைகளை எழுதி வருபவர்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக எழுதிவரும் முக்கியமான படைப்பாளி சாம்ராஜ். இதற்கு முன்பு தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வந்த அனுபவத்தில் அவருக்கு மிக இயல்பாகவே படைப்புமொழி கைகூடி வந்திருக்கிறது. ஒரு படைப்பில் எந்த அம்சம் முன்வைக்கப்பட வேண்டும், எந்த அம்சத்தை மறைக்கவேண்டும், எது இலைமறை காயென இருக்கவேண்டும் என்னும் தெளிவையும் அவர் அடைந்திருக்கிறார். பத்து சிறுகதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கும் அவருடைய முதல் தொகுதி அவருடைய வரவை அழுத்தமாகப் பதிவு செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.


தொகுப்பில் காணப்படும் நாயீஸ்வரன் மிகச்சிறந்ததொரு மானுடச்சித்திரம். பள்ளி மாணவனான சி.ஈஸ்வரன் ஒரு நாய்க்குட்டியின் காரணமாக நாநாயீஸ்வரனான சம்பவத்தை மெல்லிய நகைச்சுவை இழையோட கதையின் முதல்பகுதி விவரிக்கிறது. இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழியற்றுப் போகும் அவலத்தையும் அமைதியான வாழ்க்கையை வாழ அவன் தொடங்கி நடத்தும் பறவை வணிகத்தையும் பின்னிப் பிணைந்த நடுப்பகுதி முன்வைக்கிறது. அதிகாரத்தை எதிர்த்து வாதாட முடியாத இயலாமையும் இணையைப் பிரிந்து வாழும் உயிரின் வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கைவசமுள்ள பறவையை பறக்கவிட்டபடி வெறும் கையோடு திரும்பும் அவலமும் இணைந்த இறுதிப்பகுதியோடு கதை முடிகிறது. அறிவாளிகள், தந்திரக்காரர்கள், அதிகாரம் நிறைந்தவர்கள் அனைவரும் வாழ்க்கைமதிப்பில் தாழ்ந்துபோக, அனைத்தையும் இழந்தவன் உயர்ந்து நிற்கும் அபூர்வமானதொரு தருணத்தை சாம்ராஜ் அழகாகப் படம்பிடித்திருக்கிறார்.

நாயீஸ்வரன் பாத்திரத்தை தமிழுலகம் அவ்வளவு விரைவில் மறந்துவிட முடியாது. பறவைகள் மீதுள்ள அவனுடைய அதீத நாட்டத்தின் காரணமாக வாழ்க்கையில் பல இழப்புகளுக்கு ஆளாகிறான் அவன். ஊரில் நல்ல மதிப்பில்ல. அவன் குடும்பத்துக்கு சரியான மரியாதையும் இல்லை.  இல்வாழ்க்கை கூட அவனுக்கு அமையாமல் போகிறது. “நாளைக்கு ஒரு நாயப் பாத்தான்னா, ஒன் பொண்ண உட்டுட்டு அதும் பின்னால போயிடுவான்டி அவன், கோட்டிக்காரப் பய” என்று சொந்த மாமன்காரனே பெண் தர மறுக்கிறார். பறவைப்பாசத்தின் வழியாக அவன் அனைத்தையும் கடந்து விடுகிறான்.

அவனால் மைனாவிடம் பேச முடிகிறது. நாய்க்குட்டியை அணைத்துக்கொண்டு உறங்கமுடிகிறது. விளையாட்டுத்தனமாக அவன் சேர்த்துவைத்த சேகரிப்பில் அணில், புறா, முயல், கிளி, பூனை எல்லாமே இருக்கின்றன. அவன் படிப்பு பாதியில் தடைபட்டுவிடுகிறது. அவன் தந்தை இறந்துபோகிறார். தாயின் ஆதரவோடுதான் காலம் நகர்ந்துசெல்லும் சூழல். பறவையினங்கள் மீது அவனுக்குள்ள பிரியத்தைப் புரிந்துகொண்ட தாய்மாமன் அவற்றுக்குப் பயிற்சி கொடுத்து நல்ல விலைக்கு விற்கும் வழியை அறிமுகப்படுத்துகிறார். உள்ளார்ந்த பிரியமே வாழ்க்கையாக மாறிவிடுகிறது. பறவைகளை வாங்கி விற்கும் நுட்பங்களில் அவனும் தேர்ச்சியடைகிறான். அனுபவம் சார்ந்து பறவைகளைப்பற்றி அவனும் நிறைய செய்திகளைத் தெரிந்துகொள்கிறான். உள்நாட்டுப்பறவைகள், வெளிநாட்டுப்பறவகள் வேறுபாடுகளையும் குணவிசேஷங்களையும் புரிந்துகொள்கிறான்.  எதிர்பாராத கணத்தில் லட்ச ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டுப்பறவை காணாமல் போய்விடுகிறது. ஜோடிப்பறவையில் ஒன்று இல்லாமல் இன்னொன்று இரையெடுக்காமல் நலியத் தொடங்குகிறது. இழந்ததைக் கண்டுபிடித்தால்தான் இருப்பதைக் காப்பாற்ற முடியும் என்னும் நிலைமையில் காணாமல் போன பறவையைத் தேடுகிறான். ஒரு பணக்காரன் வீட்டில் அது இருக்கும் செய்தி கிடைத்து தேடிப் போகிறார்கள். அவன் பணக்காரன் மட்டுமல்ல, அரசியல் செல்வாகும் உடையவன். பறவையைக் கொடுக்க மறுக்கின்றான். அது மட்டுமல்ல, ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு அவனிடம் இருக்கும் மற்றொரு பறவையையும் கொடுத்துவிட்டுச் செல்லும்படி வற்புறுத்துகிறான்.   திருட்டுப்பட்டம் கட்டி காவல் துறையினரிடம் தகவல் கொடுத்துவிடுவதாக அச்சுறுத்துகிறான். மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறும் அவன் தன்வசமுள்ள பறவையின் தவிப்பைப் பார்க்க மனமில்லாமல் தன் இணையைத் தேடி ஓட அதை அனுமதித்துவிட்டு திரும்பிவிடுகிறான். இரக்கமும் அன்பும் அவனுக்கு மேலும் மேலும் தீராத இழப்பையே தேடித் தருகின்றன.

அனந்தசயனபுரி வாழ்க்கையையே இழந்தவனின் கதை. ஒருவித காவிய அமைதியுடன் முற்றுப்பெறும் இக்கதை வாசிப்பவர்களைக் கலங்கவைத்துவிடுகிறது. மணவிலக்குக்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனைவியைப் பார்க்க திருவனந்தபுரத்துக்கு வரும் கணவனின் கதை. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிப் பார்க்கலாம் என்பதுதான் அவன் திட்டம். ஆனால் வீடு பூட்டியிருக்கிறது. பகல் முழுதும் எங்கெங்கோ அலைந்துவிட்டு மீண்டும் இரவு கவிந்த பிறகு வருகிறான். அப்போதும் பூட்டியிருக்கிறது. நகருக்குள் விடுதியொன்றில் அறையெடுத்துத் தங்குகிறான். உறக்கம் வராமல் திரைப்படம் பார்க்கச் செல்கிறான். படம் முடிந்த பிறகு அறைக்குத் திரும்பாமல் மீண்டும் மனைவியின் வீட்டுக்குச் செல்கிறான். வீடு திறந்திருக்கிறது. குழந்தை அழும் சத்தம் கூட கேட்கிறது. ஆனால் கதவைத் தட்ட மனமின்றி, வாசலில் கிடந்த மனைவியின் காலணிகளையும் குழந்தையின் காலணிகளையும் எடுத்துக்கொண்டு திரும்பிவிடுகிறான். மறுநாள் காலையில் வெளிச்சத்தில் மீண்டும் அந்த வீட்டுக்குச் செல்கிறான். ஆனால் சந்திக்க மறுக்கிறாள் மனைவி. ஏமாற்றத்தோடு திரும்பி வந்து ரயில்வே ஸ்டேஷனில் மாலை வண்டிக்காகக் காத்திருக்கும்போது மனைவியிடமிருந்து குறுஞ்செய்தி வருகிறது. இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து காலணிகளை எடுத்துச் சென்ற விஷயம் தனக்குத் தெரியுமென்றும், அதுவே நம் உறவு, மிச்சம் என்றும் குறிப்பிட்டிருக்கும் அச்செய்தியை தொண்டை இடற வாசிக்கிறான் அவன்.

வழக்கின் மையத்தையும், தரப்புகளின் வாதங்களையும் பின்னோக்கிய பார்வையாகச் சொல்ல வாய்ப்புள்ள சூழலில், அந்த வாய்ப்பை முற்றிலும் நிராகரித்தபடி நிகழ்வதைமட்டும் சித்தரிக்கும் இந்தச் சிறுகதை, சாம்ராஜின் பெயரை இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் இணைக்கும் தகுதியை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஜன்னல்களும் கதவுகளும் மூடப்பட்டு ஸ்டேஷனில் ஒதுங்கியிருக்கும் ஒரு ரயிலின் சித்தரிப்பு கதையின் இறுதியில் இடம்பெறுகிறது. கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்ட மானுட சமூகத்தின் குறியீடாக அது மாறிவிடுகிறது. காலணிகளோடு வாழப்போகும் அவன் எதிர்கால வாழ்க்கையின் அவலம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

களி சொந்த வாழ்க்கையின் இழப்பையும் சமூக வாழ்க்கையின் இழப்பையும் இணைத்துச் சொல்லும் சிறுகதை. களி அவனுக்கு விருப்பமான உணவல்ல. அவன் வயிற்றுக்கு ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் அவன் தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையில் அதுதான் அவனுக்குக் கிடைக்கிறது.  ஒவ்வாமையிலிருந்து தொடங்கி காலம் மெல்ல மெல்ல அதை ஏற்றுக்கொள்ளும் புள்ளிவரைக்கும் அவனைத் தள்ளிவந்துவிடுகிறது. .

மிகவும் குறைவான சொற்கள் வழியாக நம்பகத்தன்மையுடன் ஒரு காட்சியைச் சித்தரிப்பதில் ஆற்றலுள்ளவராக இருக்கிறார் சாம்ராஜ். .இயல்பான போக்கில் கதை மையத்துக்குப் பொருத்தமான படிமங்களையும் அவரால் சில சமயங்களில் கண்டடைய முடிகிறது. அவருடைய எழுத்துகள் மீது நம்பிக்கை பிறக்க இவையே காரணங்கள். இனி, அவருடைய எதிர்கால எழுத்துமுயற்சிகள் அவர் செல்லும் திசையின் பயணத்தை அடையாளம் காட்டலாம்.


(பட்டாளத்து வீடு. சாம்ராஜ். சந்தியா பதிப்பகம். 77, 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83. விலை. ரூ.100 )