Home

Sunday 4 June 2017

பெருமூச்சின் வெப்பம்- தேவமகளின் "காணவில்லை"



அலுவலகத்தில் மதிய உணவுக்குப் பிறகான சின்ன உரையாடலில் ஒரு நாள் கலாச்சாரக் காவலர்கள்பற்றிய பேச்சு இடம்பெற்றதுபத்து நாட்களாக எல்லாப் பத்திரிகைகளிலும் அதுவே மையப்பொருளாக அமைந்து பற்பல கட்டுரைகளும் பல முக்கியஸ்தர்களின் கருத்துகளும் தொகுக்கப்பட்டு வெளிவந்தபடி இருந்தனஅதை முன்வைத்துத்தான் எங்கள் உரையாடல் தொடங்கியதுகணக்கு அதிகாரியாக இருக்கிற நடுவயது அம்மா ஒருவர் திடீரென இடைமறித்து "ஊருல இருக்கற ராம சேனதான் ஒங்க கண்ணுக்குத் தெரியுதா?" என்றபடி எங்களைப் பார்த்தார்.


"ஒவ்வொரு ஊட்டுலயும் ஒரு ராமசேன பின்னாலயே நிக்குதே, அது தெரியலையா? அத செய்யக்கூடாது, இத செய்யக்கூடாது, அங்க போவக்கூடாது, இங்க போவக்கூடாது, அவர பாக்கக்கூடாது, இவர்கிட்ட பேசக்கூடாதுன்னு எத்தன கூடாதுகள்? ஒரு கோடி இருக்குமா? தாலிகட்டினு வந்த நாள்ளேருந்து எல்லா கூடாதுங்களயும் சகிச்சிகிட்டாதான் வாழ முடியுது, இல்லன்னா வாழாவெட்டி பட்டம்தான்."

குரலை உயர்த்தாமல் அவர் சொல்லச்சொல்ல நாங்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோம்அவர் சொற்களில் இருந்த சத்தியம் சுடுவதாக இருந்தது. எதைச் சொல்லியும் அமைதிப்படுத்த இயலாதபடி அவருடைய ஆற்றாமை பொங்கி வழிந்தது. "எல்லா கூடாதுங்களயும் பொம்பளைங்கதான் காது குடுத்து கேக்கணும். ஒரு நல்லதுக்காகக்கூட பொம்பளைங்க ஒரு தரம்கூட கூடாதுன்னு ஆம்பளைங்கள பாத்து சொல்லிட முடியுமா? அப்படியே சொல்லிட்டா ஆம்பளைங்க கேட்டுருவாங்களா? யோசிச்சி பாருங்க" என்று மேலும் சொன்னார் அவர்

அருகில் இருந்த செய்தித்தாளை மெதுவாக இழுத்து நான்காம் பக்கத்தில் வெளிவந்திருந்த ஒரு செய்தியைக் காட்டி "இத படிச்சி பாருங்க" என்றார். மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்ட ஒரு கணவனைப்பற்றிய செய்தி வெளிவந்திருந்தது. "என்ன குற்றம் செஞ்சிட்டாள்ன்னு கழுத்த நெரிச்சான் தெரியுமா? அஞ்சி மணிக்கு ஆபீஸ் முடிஞ்சா, அஞ்சரைக்கு ஊட்டுல இருக்கணுமாம். அதுதான் அவன் சட்டம். நாலு நாளா ஏதோ கூடுதலான வேலைன்னு ஆறு மணிக்கு போயிருக்கா, உடனே அது குற்றமாய்ட்டுது அந்த ஆளுக்கு. கழுத்த நெரிச்சி உயிர எடுத்துட்டான். ஒரு அரமணிநேரம் தாமதமா போகற உரிமைகூட இல்லாமதான் பொம்பளைங்கள வச்சிருக்குது, ஊட்டுல இருக்கற ராமசேனைங்க. இதுக்கு எதாச்சிம் பதில் இருக்கதா?"

பதில் சொல்லத்தெரியாமல் அவர் சொல்வதையே இமைகொட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தோம். அவரும் பேசும் வேகத்தில் இருந்தார்.

"இதுங்ககிட்ட மாட்டிட்டு, ஒரு பொம்பளை எதஎதயெல்லாம் இழந்துபோறா தெரியுமா? சிரிப்பு, உற்சாகம், வேடிக்கை எல்லாம் தொலஞ்சிபோயிடுது. கூடப்படிச்சவங்க நட்ப தொடரமுடியுமா, சொந்தக்காரங்கன்னு உறவ தொடரமுடியுமா? திடீர்னு அம்மா அப்பா ஞாபகம் வந்துதுன்னு போய்தான் பாக்கமுடியுமா? ஆசயா ஒரு புத்தகம் படிக்கமுடியுமா? ஒரு கவிதை கட்டுரைன்னு எழுத உக்கார முடியுமா? இப்ப எழுதறதுதான் ரொம்ப முக்கியமா போயிடுச்சான்னு எத்தன குத்தல், எத்தன எள்ளல் தெரியுமா? ஒவ்வொரு வார்த்தயும் ஊசியால இந்தப்பக்கம் குத்தி அந்தப்பக்கம் எடுத்துரும். எல்லாத்தயும் தொலச்சிட்டு பொம்மமாதிரி வாழறதுன்னாதான் இந்த உலகத்துல வாழலாம். இல்லன்னா காலமெல்லாம் வம்பு வழக்குன்னு கசந்துபோவவேண்டிதுதான்."

நம்மைப்பற்றி நாமே இன்னொருமுறை மதிப்பிட்டுக்கொள்ளத் தூண்டுகிறவகையில் இருந்தது அவர் பேச்சுகடைசியில் "உங்க அக்கறையெல்லாம் சும்மா வாய்ப்பேச்சுன்னு சொல்றதுக்காகவோ இல்ல, நீங்கள்ளாம் இடிஞ்சி உக்காரணும்னோ நான் இத சொல்லலை சார். நீங்க நல்லவங்களாவே இருக்கலாம். அப்படி இருக்கறவங்க நம்ம நாட்டுல ரொம்ப கொறைவா இருக்காங்க சார், எல்லார் ஊட்டலயும் ஒரு குட்டிகுட்டி ராமசேனைங்கதான் இருக்குது. அதுதான் அதிகம். நம்ம நேரம் நமக்கு வாச்சது அப்படி. நீங்க பேசுங்க. நான் கௌம்பறேன்." உதடுகளில் புன்னகை நெளிய சொன்னபடி அவர் தன் மேசைக்குச் சென்றுவிட்டார்.

சற்றும் மிகையில்லாத அவருடைய சொற்களில் அடங்கியிருந்த உண்மையின் ஆழம் என் மனத்தில் பதிந்துவிட்டதுமனம்நொந்துபோன பெண்களின் உரையைத் தொகுக்கத் தொடங்கினால் இந்தத் தேசத்தின்  சரித்திரத்தையே எழுதிவிடலாம் என்று தோன்றியது. சடங்குகளாலும் நம்பிக்கைகளாலும் நிறைந்த வாழ்க்கை, கண்ணுக்குத் தெரியாத கயிற்றால் ஆண்களையும் பெண்களையும் கட்டிப் போட்டிருக்கிறது. அதற்கும் கூடுதலாக இன்னொரு கயிற்றையெடுத்து பெண்களைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள் ஆண்கள். கட்டுண்ட இந்த வாழ்வில் அமைதியும் இன்பமும் காணும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுகல்வி எல்லாருடைய கண்களையும் திறக்கும் ஓர் அறிவாயுதம் என்று சொல்வதுண்டுஅந்த ஆயுதத்தாலும் திறக்கமுடியாத அறிவுக்குருடர்களாக ஆண்கள் வாழ்வது துரதிருஷ்டமான எதார்த்தம்.

பெண்கல்வியில் இருந்து தொடங்கப்பெற்ற சமூகச்சீர்திருத்த நடவடிக்கைகள் பெண்களின் வாழ்நிலையில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்தன என்பது உண்மை. ஆனால் புறவாழ்வின் மாற்றத்துக்கு இணையாக அகவாழ்வின் மலர்ச்சி அமையவில்லை. கல்விக்காலத்திலும் பிறந்த வீட்டிலும் பெண்கள் பெறும் ஊக்கமும் உற்சாகமும் குடும்பவாழ்வில் காணாமல் போய்விடுகின்றன. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்வதுண்டுஆனால் பெண்களின் கனவுகளையும் உற்சாகங்களையும் பலிவாங்கிக்கொண்டுதான் ஒரு பல்கலைக்கழகத்தால் நிமிர்ந்து நிற்கமுடியும் என்பது மிகப்பெரிய சோகம்.

தலைமுறைதலைமுறையாக வளர்ந்துவருகிற மாபெரும் சோகத்தை ஒரு முனகலாக முன்வைக்கிறது தேவமகளின் கவிதை. ஒரு புகாராக முன்வைக்கக்கூட எழுந்த தயக்கத்தால் அது முனகலாக முடிந்திருக்கலாம்ஒரு பெண் தன்னுடைய கல்லூரிக்காலத்தை நினைத்துக்கொள்வதில் கவிதை தொடங்குகிறது. கல்லூரியை நினைத்ததுமே, கல்விக் காலத்தில் மனத்தில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் ஊக்கத்தையும் நினைத்துக்கொள்கிறாள். அதையடுத்து அவை காணாமல் போய்விட்ட துரதிருஷ்டத்தையும் நினைத்துக்கொள்கிறாள். எங்கே தொலைத்தோம் என்பதே தெரியாத தன் அப்பாவித்தனத்தை நொந்துகொண்டபடி அவற்றைத் தேடிக்கொண்டே இருப்பதாக முனகுகிறாள். அவ்வளவுதான் கவிதை. கல்வியை முடித்துவிட்டு பேரிளம்பெண்ணாக, பிறந்த வீட்டிலேயே இருப்பவளா அல்லது திருமணமாகி குடும்பவாழ்வில் தன்னைப் பொருத்திக் கொண்டவளா என்னும் குறிப்பு  கவிதையில் இல்லை. வேலையைத் தேடுபவளா அல்லது வேலையில் சேர்ந்திருப்பவளா என்னும் குறிப்பும் இல்லை. நம்பிக்கையும் ஊக்கமும் காணவில்லை என்னும் வருத்தம் மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவள் நம்பிக்கை இழக்கும்படி வாழ்வில் என்ன நடந்திருக்கும் என்னும் கேள்வியிலிருந்து கவிதை விரிவடைகிறது. என்னென்னவெல்லாம் இன்று நடைபெறுகின்றனவோ, அவையனைத்தும் அவள் வாழ்வில் நடந்திருக்கலாம். ஒரு மாதச் செய்தித்தாள்களை ஒருசேர வைத்துக்கொண்டு குறிப்பெடுக்கத் தொடங்கினால் ஒரு பெண்ணின் நம்பிக்கை காணாமல் போவதற்கான ஆயிரம் காரணங்களைத் தொகுத்தெடுக்க முடியும்.

நம்பிக்கையைத் தக்கவைக்க உறுதுணையாக இருக்கிற கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ள இன்றைய சமூகச்சூழலில் இக்கவிதையில் வெளிப்பட்டிருக்கிற பெருமூச்சின் வெப்பத்துக்கு வேறொரு பொருள் உருவாகியிருப்பதைக் காணலாம்.



*

காணவில்லை


தேவமகள்


கடலோரக் கல்லூரி
இரண்டாம் மாடியில்
முதுகைக் கடலுக்குக் காட்டி
முனைந்த படிப்புச்சுமையில்
ஓர இருக்கை
நாற்காலியை ஒருபக்கம் சாய்த்து
கல்வி உளவியல் முழக்கத்திடையே
கண்ணை
திருப்பிப் பார்த்த
விவேகானந்தரும் காந்தியும்
தூரப்புள்ளிக் கப்பலும்
ஸ்கூட்டர் தாத்தாவும்
தந்த
நம்பிக்கை ஒளியை
தேடுகிறேன்


*

எழுபதுகளில் நம்பிக்கையூட்டும் பெண்குரலாக எழுந்த தேவமகள் குறிப்பிடத்தக்க கவிஞர். "முரண்" என்பது இவருடைய தொகுப்பின் பெயர். அவருடைய எழுத்தியக்கம் ஆற்றலோடு வெளிப்படுவதற்குள் மரணம் அவரைத் தழுவிக்கொண்டுவிட்டது.