Home

Tuesday 20 June 2017

மூன்று சித்திரங்கள்- உமா மகேஸ்வரியின் "எனது நதி"



"நாடா கொன்றோ காடா கொன்றோ.." என்று தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுச் செய்யுள் "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.." என்று முடிகிறது. வாழ்கிற இடம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். புறவேறுபாடுகள் வாழ்வின் தன்மையை மாற்றும் முக்கியக் காரணிகளாக இருப்பதில்லை. ஆனால் ஓர் இடத்தில் வாழ்கிற ஆண்மக்களின் பார்வையும் போக்கும் வேறுபாடுகளை சட்டென உருவாக்கிவிடும். பெண்மக்களுக்கும் பார்வையும் போக்கும் உண்டு. ஆனால் அவை இச்சமுதாய மேற்கட்டுமானத்துடன் தொடர்புடையவை இல்லை. அதனால் அவற்றைப்பற்றி ஒளவையார் குறிப்பிடவில்லை.  


பெரும்பாலான ஆண்மக்களிடம் அதிகார வேட்கை  அளவுகடந்து குடியிருக்கிறது. தம் இடத்தில் உழைத்து, உண்டு வாழும் வாழ்வில் நிறைவு காண்பவர்கள் குறைவாக உள்ளார்கள். பலர் தம் நிறைவை இன்னும் இன்னும் என வானளவு விரிவுசெய்துகொள்ள விரும்புகிறார்கள். இவ்விருப்பம் ஒரு போதை போல அவர்களிடம் எல்லாத் தருணங்களிலும் செயல்பட்டு, அடுத்தவர்களின் செல்வத்தையும் நிலத்தையும் ஆக்கிரமிக்கும் உணர்வையும் வேகத்தையும் ஊட்டுகிறது. ஆக்கிரமிப்புகள் அடிமைத்தனத்துக்கு வித்திடுகிறது. சந்தேகம், துரோகம், பொய், அதீதப்புகழ்ச்சி, புறங்கூறுதல் என எல்லாம் ஒவ்வொன்றாக மனத்தில் குடியேறுகின்றன. தேடிய நிறைவு கண்ணில் தென்படுவதே இல்லை. மாறாக, நிராசையும் பொறாமையும் மண்டிவிடுகின்றன. தமக்காக நாள்முழுக்க உழைக்கக்கூடிய கொத்தடிமைகளாக பெண்களை நினைக்கிறார்கள். அவர்களைக் கிஞ்சித்தும் மதிப்பதில்லை. நன்மை கருதும் மனம் எள்ளளவும் இல்லை. நல்லவர்கள் என யாருமே இல்லாமல் போகிறார்கள். ஒருவரையொருவர் ஒற்றறிகிற, ஒருவரையொருவர் அழிக்கத்துடிக்கிற, ஒருவரையொருவர் விஞ்சத்துடிக்கிற வஞ்சமனம் உள்ளவர்களாகவே அனைவரும் உள்ளார்கள்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை என்பது குறள்வாக்குநல்லவர்களே இல்லாத மண்ணை மழைத்தாயின் பாதம் மிதிப்பதில்லை. மழை பொய்த்துவிடும் சூழலில் நதியும் வறண்டுபோகிறது. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை என்னும் வரிக்கு இப்படியும் பொருள்கொள்ளலாம். நதியாக இருந்தாலும் சரி, விளைச்சலாக இருந்தாலும் சரி, செழிப்பாக இருந்தாலும் சரி, மழையாக இருந்தாலும் சரி, எல்லாமே ஒரு மண்ணில் வாழ்கிற ஆண்மக்களின் பார்வையையும் போக்கையும் சார்ந்தே உள்ளன. ஆண்மக்கள் பிழை உள்ளவர்களாக இருக்கத் தொடங்கினால் அவர்கள் மண் சபிக்கப்பட்ட இடமாக மாறிவிடும். ஒளவையாரின் மனத்தில் இவ்வளவும் அலைமோதியிருக்கவேண்டும்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாலிபான்கள் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பகுதிகளில் முதல் காரியமாக அங்கே இயங்கிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகளை மூடியதையும் வேலைசெய்துவந்த பெண்களை ஒரே நாளில் வீட்டுக்குள் முடங்கச் செய்ததையும் இக்கணத்தில் நினைத்துப் பார்க்கலாம்ஓர் இனத்துக்குள்ள வாழ்வுரிமையை மறுத்து, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து, இன்னும் ஆயிரக்கணக்கானவர்களை வேலியிடப்பட்ட முகாம்களுக்குள் அடைத்து வைத்து, அதிகாரத்தில் திளைக்கிற சிங்கள அரசு நிகழ்த்திய அக்கிரமங்களையும் நினைத்துப் பார்க்கலாம். ஆண்மக்களின் பார்வையும் போக்கும் ஏராளமான விபரீதங்களுக்கு வித்தாகியுள்ளன.

சங்கப்பாடலை முன்வைத்து எழுதுவது ஏதோ கட்டுக்கதையாகத் தோன்றலாம். கடந்த அரைநூற்றாண்டு காலத்துக்குள் நம்மோடு வாழ்ந்தவர்களால் அழிந்துபோன நதிகளும் வாய்க்கால்களும் ஏரிகளும் எத்தனை என்று தெரியாதா என்ன. யார் இதற்குக் காரணம். ஆற்றில் சாயப்பட்டறை நீரையும் நகரக்கழிவுகளையும் கலக்க அனுமதிப்பது யார்? ஆற்றிலிருந்து ஏரிகளை இணைக்கும் இயற்கையான ஓட்டத்தை முதலில்  தற்செயலாக நிகழ்வதுபோல தந்திரமாகத் தடைசெய்வதும், பிறகு வறண்டுபோகிற ஏரிகளையும் வாய்க்கால்களையும் மண்மேடாக்குவதும், அடுத்து புறம்போக்கு நிலமென மதிப்பிட்டு ஆக்கிரமத்து வளைத்துக்கொள்வதும் யார்? மலைகள் மற்றும் வனங்களின் வளங்களையெல்லாம் சுரண்டி மழைவளம் குன்றக் காரணமாக இருப்பது யார்? வறண்ட நதியின் மணலை வண்டிவண்டியாகக் கொள்ளையடித்து பணமூட்டைகளாக மாற்றுவது யார்? ஆணவப்போக்கும் அதிகாரப்பார்வையும் கொண்ட ஆண்மக்கள் அல்லவா?

ஆண்மக்கள் மண்ணுலகின் செல்வங்களைமட்டுமா அழிக்கிறார்கள்? அமைதி என்கிற பெயரிலும் நல்லுறவு என்கிற பெயரிலும் குடும்ப உறவுகளில் அவர்கள் நிகழ்த்தும் வன்முறைகளுக்கு கணக்கே இல்லை. தன் தாயையும் தன்னோடு குடும்பம் நடத்துகிற மனைவியையும் தன் மகளையும் தன்னைப்போல ஓர் உயிர் என நினைத்து நடத்துகிறவர்கள் மிகக்குறைவு. ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக அவர்களை நினைத்து இயங்குகிறவர்களே அதிகம்.

உமா மகேஸ்வரியின் "எனது நதி" கவிதை ஒரு பெண்ணின் சித்திரத்தைத் தருகிறதுஅந்தப் பெண் தன் சொந்த ஊரில் பார்த்த நதியைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். மூன்று வெவ்வேறு கட்டங்களில் அவள் கண்ட நதியின் சித்திரங்கள் கவிதையில் காட்டப்படுகின்றன. முதலாவது அவள் சிறுவயதுச் சித்திரம். அப்போது அது துவைத்து உலர்த்தப்பட்டு காற்றிலாடும் அம்மாவின் புடவையென அலையோடியிருந்ததுஇரண்டாவது அவள் பருவமெய்திய இளமைச்சித்திரம். அப்போது நதியின் தோற்றத்தில் அதிர்ச்சியூட்டத்தக்க மாற்றம் உருவாகிறது. ஒரு புடவை கிழபட்டு இரண்டு தாவணிகளாக உருமாறும் குடும்பப் பொருளாதாரத்துடன் தொடர்புள்ள காலம் அது. நதி பாதியாக குறைந்து உருவக்குறைவோடு காட்சியளிக்கிறதுமூன்றாவது சித்திரம் அவள் திருமணவாழ்வில் புகுந்துவிட்ட காலம். பயன்படுத்தப்பட்ட துணியிலிருந்து பிய்ந்துபோய் அறுந்து தொங்குகிற நூலிழைகளாக நதியும் ஓட்டமிழந்து ஒடுங்கிக் கிடக்கிறது. நதியின் வெவ்வேறு காலகட்ட சித்திரங்கள் துயரமளிப்பதாக உள்ளன. நதியின் தோற்றத்துக்கு உவமையாக ஒரு புடவை பயன்படுத்தப்பட்டிருப்பது முக்கியமாகத் தோன்றுகிறது. அவள் இதுவரை எடுத்துரைத்தது நதியின் கதையைமட்டுமல்ல, நுட்பமாக தன் கதையையே எடுத்துரைத்திருக்கிறாள். ஆனந்தமான குழந்தைப் பருவம். கட்டுப்படுத்தப்பட்ட இளமைப்பருவம். ஒடுக்கப்பட்ட இல்லறவாழ்க்கைப் பருவம்.

நதியின் கதையைச் சொல்வதுபோல தன் கதையைச் சொல்லி மனபாரத்தை ஆற்றிக்கொள்கிற பெண்ணைப்பற்றிய நினைவுகள்  பற்றிப்படர்ந்தபடி இருக்கும்போதே, அப்பெண் சொல்லாமல் குறிப்பாக உணர்த்துகிற ஒரு விஷயத்தைக் கண்டடைகிறது நம் மனம். அது அப்பெண்ணின் வாழ்வையும் நடைமுறைகளையும் கண்காணித்துக் கட்டுப்படுத்துகிற ஆண்களின் கரங்கள். ஒருவன் தந்தை. இன்னொருவன் கணவன். அவர்கள் கவிதையின் வரிகளில் இல்லைஆனால் அவள் வாழ்க்கையை இயக்குகிற சூத்திரக்கயிறு இவர்களிடம்தான் உள்ளதுஅவள் சிறுவயதுச் சித்திரத்துக்குப் பின்னால் தந்தை என்னும் ஆண் இருக்கிறான். அப்போது அவள் கொஞ்சப்படுகிறாள். எல்லாவிதமான செல்லங்களுக்கும் அவள் உரியவளாக உள்ளாள். அவள் மீது கட்டுப்பாட்டின் நிழல் இன்னும் விழத்தொடங்காத பருவம் அது. அந்த ஆணுக்கு சமூகத்தில் தந்தை என்னும் படிமம் நிலைபெற உதவியாக இருந்தது அவள் பிறப்பு. அந்த நன்றியுணர்வுதான் அவன் கொஞ்சலாகவும் செல்லமாகவும் வெளிப்படுகின்றன. கட்டுப்பாட்டின் நிழல் விழுவது அவள் பருவம் எய்துகிற தருணத்தில். வாழ்வின் கசப்பையும் கட்டுப்பாட்டையும் நேரிடையாக உணர்கிற முதல் கட்டம் அது. தந்தை என்னும் ஆணின் உண்மையான முகத்தை முகமூடியில்லாமல் ஆழ்ந்த அதிர்ச்சியோடு அவள் பார்க்கிறாள். அதைத் தொடர்ந்து கசப்புகள் வாழ்நாள் முழுக்க வண்டிவண்டியாகக் கவிந்தபடியே உள்ளன. திருமணத்துக்குப் பிறகு அவளைக் கட்டுப்படுத்தும் கயிற்றுக்கு இன்னொருவன் சொந்தமாகிறான். பழைய கசப்புகள் அப்படியே தொடர்கின்றன. சூத்திரக்கயிறு இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடிஓடி அவள் தேய்ந்து உருவழிந்துபோகிறாள், சூறையாடப்பட்டு உருவமிழந்த நதியைப்போல.


*

எனது நதி

உமா மகேஸ்வரி

சிறுவயதில் பார்த்தபோது
அம்மாவின் புடவையென
அலையோடியிருந்தது.
செல்லமாய் வளைவுகளில்
சேர்த்தணைக்கும்.
வருடும் மெல்ல.
பள்ளங்களில் கால்பட்டால்
பதறிப் பாய்ந்து மிரட்டும்.
பருவ காலத்தில்
ஓரம் தைத்த தாவணிகளாய்
உருவம் மாறிக் கிடந்தது
துள்ளல் போர்த்தித் துவண்டு அடங்கி
சன்னமாய் மின்னும் ஜரிகைவரிகளோடு.

வேறு திசையில் எறிந்து
மாறுதலாக்கியது திருமணம்
திரும்பிவந்து தேடினால்
பிரிந்த நூலிழைகளாய்த்
திரிந்திருந்தது அதுவும்
அறுத்த
அடிநீரோட்டத்தோடு.


*


கவிதை, சிறுகதை, நாவல் என எல்லாத் தளங்களிலும் இயங்கிவரும் படைப்பாளி உமா மகேஸ்வரி. 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த வெறும்பொழுது என்னும் கவிதைத்தொகுதி பரவலான வாசககவனம் பெற்ற ஒன்றாகும்மரப்பாச்சி, அரளிவனம் ஆகியவை இவருடைய சிறுகதைத்தொகுதிகள். யாரும் யாருடனும் இல்லை இவருடைய நாவல்.