Home

Sunday 4 June 2017

நாபிக்கமலம் - கவித்துவம் மிக்க சிறுகதைகள்



அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன் போன்றோரைத் தொடர்ந்து எழுத வந்த தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான படைப்பாளி வண்ணதாசன். தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர்கள் வரிசையில் அவருடைய இடம் மிகவும் உயர்வானது.  அவர் உருவாக்கிய தமிழ் உரைநடை மிகமுக்கியமானது. பலவிதமான ஊடுபாவுகளை ஒரே கதையின் தளத்தில் அவர் எவ்விதமான சிக்கலுமின்றி நேர்த்தியுடன் கையாளும் விதம் ஆச்சரியத்துக்குரியது. ஒரே நேரத்தில் குழந்தையின் கண்களாளும் மேதையின் கண்களாலும் பார்க்கும் ஆற்றல் அவருக்கு கைவந்த கலை.


வண்ணதாசன் தம் படைப்புகளில் எல்லாத் தருணங்களிலும் வாழ்க்கையின் ஒரு துளியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். ஒரு பேருந்து நிலையம், ஓர் அருவிக்கரை, ஒரு விடுதியறை, ஒரு தேநீர்க்கடை, ஒரு பழக்கடை போன்ற இடங்களே வண்ணதாசனின் கதைக்களங்கள்.  அங்கு நிகழும் ஒரு கண நேர நிகழ்ச்சியே கதையின் மையம். ஆயினும் வண்ணதாசன் ஒருபோதும் வாழ்க்கையைக் குறுக்கிப் பார்ப்பதுமில்லை, காட்டுவதுமில்லை. அதுவே அவர் சிறப்பு. சரியான தருணத்தில் விரிந்து காற்றில் பறக்கக்கூடிய பாராசூட் கவசத்தைப்போல  அவருடைய கதைகளின் மையம் மிகச்சரியான கட்டத்தில் விரிந்து வாழ்வின் விஸ்வரூபத்தைப் பார்க்கும் வாய்ப்புகளை உருவாக்கி அளிக்கின்றன. தரையில் கிடக்கும் கண்ணாடிச்சில்லுகளில் ஆகாயத்தைப் பார்க்கமுடிவதைப்போல, ஒரு சிறு கணத்தில் வாழ்க்கையின் வீச்சைக் காட்டி உணர்த்திவிடுகிறார்.

இப்படி சொல்லிப் பார்க்கலாம். யாரோ ஒரு தந்தை தன் மகள் அல்லது மகனோடு கடற்கரைக்குச் செல்கிறார். அவர்களை கரையில் நிற்கவைத்துவிட்டு கடலலைகளுக்கு நடுவில் நின்றுகொண்டு ‘இங்க பார், இங்க பார்’ என்று சொல்லி தைரியத்தோடு நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். குழந்தைகள் முதலில் மிரட்சியோடு தன் அப்பாவைப் பார்க்கின்றன. அப்பாவுக்குப் பின்னால் உள்ள கடலை, அலைகளை, வானத்தை, மேகத்தை எல்லாம் பார்க்கின்றன.  தன்னைப் பார்க்கத் தூண்டி, வானத்தையும் கடலையும் பார்க்கவைக்கும் தந்தையைப்போல வண்ணதாசன் ஒரு துளி வாழ்க்கைத் தருணத்தை முன்வைப்பதுபோலத் தோற்றம் காட்டி, வாழ்வின் பேருருவத்தை அறியவைக்கிறார்.

ஒழுங்கின்மை மீது வண்ணதாசன் கொண்டுள்ள பரிவுணர்ச்சி, அவருடைய கதையுலகின் ஒரு முக்கியமான அம்சம். சாதாரணமாக ஒரு படைப்பில் ஒழுங்கின்மையை களமாகக் கொள்ளும்போது , இரண்டுவிதமான விபத்துகள் நேர்வதுண்டு. ஐயோ, இப்படியெல்லாம் இருக்கிறதே என உள்ளுக்குள்ளேயே குமுறி அடங்குவது ஒரு விபத்து.  இந்த சமூகத்தில் இப்படிப்பட்ட அவலங்கள் இன்னும் தொடரவேண்டுமா என ஓங்கிய குரலை முன்வைப்பது இன்னொரு விபத்து. இந்த இரு விபத்துகளும் வண்ணதாசனின் படைப்புகளில் நேர்வதில்லை. மாறாக, ஒன்றும் கெட்டுப் போகவில்லை, இருந்துவிட்டுப் போகட்டுமே என்னும் பரிவுணர்ச்சியையே காட்டுகிறார். ஜி.நாகராஜனின் ஆரம்ப காலச் சிறுகதையான ‘குடை ராட்டினம்’ சிறுகதையை இங்கு நினைத்துக்கொள்ளலாம். தெருவுக்கு புதுசாக குடை ராட்டினம் வந்து நிற்கிறது. அதில் சுழலும்போது உருவாகும் மயக்கத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. அதே சமயத்தில் உடலின் சமநிலை குலைவதால் தலைசுற்றி வாந்தி எடுக்கவைக்கிறது. வாந்தி எடுத்தாலும் ராட்டினத்தில் சுழலும்போது கிட்டும் இன்பத்தை எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் விளையாட வருகிறான் சிறுவன். நாகராஜன் இதை நிகழ்த்திக் காட்டும்போதே, இதற்கு இணையாக ஒரு விலைமகளை மீண்டும் மீண்டும் நாடிச் செல்லும் ஒருவனையும் காட்டிச் செல்கிறார். ஒழுங்கின்மைதான் கதையின் மையம் என்றாலும், அதைப் பரிவுடன் அணுகும் மனநிலையை குடைராட்டினத்தில் ஆட வரும் சிறுவன் வழியாக வாசகர்களிடையே உருவாக்குகிறார் நாகராஜன். பிற்காலத்தில் அவரே அந்த ஒழுங்கின்மையின் இன்பத்தைக் கொண்டாடும் கதைகளை எழுதியபோது அந்தச் சமநிலை குலைந்து போனது. வண்ணதாசனின் கதைகள் அந்த விபத்துகளையெல்லாம் கடந்தவை என்றே சொல்லவேண்டும். கடலில் செல்லும் இடத்தின் திசையறிந்து நேர்த்தியாக கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியின் திறமையை நாம் வண்ணதாசனிடம் பார்க்க முடிகிறது.

வண்ணதாசனின் சமீபத்திய சிறுகதைத்தொகுதியாக நாபிக்கமலம் வெளிவந்துள்ளது. சாகித்திய அகாதெமி விருது பெற்றிருக்கும் ஒரு சிறு இசை தொகுதியை அடுத்து வெளிவந்திருக்கும் புதிய தொகுதி. இதிலுள்ள பதின்மூன்று கதைகளும் பார்த்துத் தீராத ஒரு சிற்பம்போல, படித்துத் தீர்க்கமுடியாத படைப்புகளாகவே உள்ளன. நாபிக்கமலம் என்னும் தலைப்புக்கதை தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனை.

சாகும்வரைக்கும் நம்பாத கனகலட்சுமியுடன் கனகலட்சுமியைத் தவிர வேறு யாரையும் நினைக்கத் தெரியாத சங்கரபாகம் நடத்திய இல்வாழ்க்கையின் பதிவுகளே நாபிக்கமலம். ‘அத்தான் மாம்பழத்துக்கு தொலி சீவுகிறது சாமி படம் வரைகிறது மாதிரியில்லா இருக்கும்’ என்று சொல்லும் கொழுந்தியின் கையைப் பிடித்துக்கொள்ளத் தோன்றினாலும் அவ்விழைவை அதே கணத்தில் உதறிவிட முயற்சி செய்யாதவர் அவர். அவர் செய்வது எதையுமே அவளால் நேரான கோணத்தில் எடுத்துக்கொள்ள இயலவில்லை. பெண்தோழி கையெழுத்து போட்டு அனுப்பியிருந்த பொங்கல்வாழ்த்தட்டையை உற்றுப் பார்ப்பதைக் கவனித்து நெருப்பை உமிழ்கிறாள். பட்டிமன்றத்தில் நன்றாகப் பேசிய இன்னொரு பெண் ஆசிரியைக்கு தனக்குக் கிடைத்த பரிசை கொடுத்துவிட்டு வந்ததைக் கேட்டு வசைபொழிகிறாள். மகனுடைய ஆசிரியையிடம் சிரித்துப் பேசியதைப் பார்த்துவிட்டு தூ என்று துப்பியபடி ஆட்டோவில் ஏறுகிறாள். ஏதோ ஒரு திருமணத்தகவலை சொல்லிவிட்டுச் செல்ல வந்த ஒரு பெண்மணியைப் பாராட்டிச் சொல்லும் சொல்லைக் கூடத் தாங்கமுடியாமல் அனல்போன்ற சொற்களைக் கொட்டுகிறாள். வாழ்நாள் முழுக்க அவர் இதயத்தில் தான் இடம்பெறவே இல்லை எனவும் அவ்விடத்தை நிரப்புகிறவர்கள் பிற பெண்களே எனவும் எழுந்த எண்ணத்திலிருந்து அவளால் விடுபடவே முடியவில்லை.  அவள் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர் செய்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை. தன் இதயக்கமலமாக மட்டுமல்ல, நாபிக்கமலமாகவும் கனகலட்சுமியே இருந்ததை, அந்தக் கனகலட்சுமிக்கு உணர்த்தமுடியாத சங்கரபாகத்தின் மனபாரம் ஒருபுறம். கடைசிவரைக்கும் அதை உணர்ந்துகொள்ள விரும்பாமல் அவநம்பிக்கையின் அடையாளமாகவே அவரை நிறுத்திவிட்டு மறைந்துபோன கனகலட்சுமியின் மனபாரம் மறுபுறம். தராசின் தட்டுகள் இருவகை வித்தியாசமான பாரங்களால் நிகர்பெறும் விசித்திரத்தை மானுடன் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும். இல்வாழ்க்கையின் விசித்திரமான சமன்பாட்டுக்கு விளக்கமே இல்லை.

மனக்கதவை மூடிக்கொண்டு வாசல்கதவைத் திறந்துவைத்துக்கொண்டு பேசும் தாயம்மாவைச் சித்தரிக்கும் போதாமை இத்தொகுதியின் மற்றுமொரு முக்கியமான சிறுகதை. காசி, தாயம்மா இருவரும் பட்டிமன்ற மேடைகள் வழியாக அறிமுகமானவர்கள். பிறகு நெருக்கமும் கொண்டவர்கள். நெருக்கம் எப்படி தற்செயலாக நிகழ்ந்ததோ, அதேபோல் தற்செயலாக நெருக்கம் குறைந்துபோய்விட்டது. ஆறு ஆண்டுகள் ஒருவரோடு ஒருவர் பேசாமல், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் ஓடிவிடுகிறது. ஒரு திருமணத்தை சாக்கிட்டு, தாயம்மா வசிக்கும் ஊருக்குச் செல்லும் தருணம் வாய்த்ததும் அவளைச் சந்தித்துப் பேசும் ஆவல் அவனுக்கு எழுகிறது.  தொலைபேசியில் அழைக்கும் காசியை வா என்றும் சொல்லாமல் வரவேண்டாம் என்றும் சொல்லாமல் மதிப்புக்குறையாத அன்புடன் பேசும்போதும் வீட்டுக்கு வந்தவனை உபசரித்தபடி ஏதோ உள்வேலைகளில் மூழ்கியிருப்பதுபோல நடமாடிக்கொண்டிருக்கும்போதும்  தாயம்மாவிடம் வெளிப்படும் விலகல் அளிக்கும் வேதனையை காசியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எதையும் நேரிடையாகக் கேட்க முடியாமல் பட்டிமன்றப் பேச்சை தொடர்ந்திருக்கலாமே என்று கேட்கிறான். அவளோ ‘எல்லாம் போதும்ன்னு தோணிப் போயிடுச்சி’ என்று பதில் சொல்கிறாள். இக்கதையில் தாயம்மாள் வீட்டு வாசலைச் சித்தரிக்கிற விதமாக வேப்பமரத்தடியில் உதிர்ந்துகிடக்கும் பழங்கள்மீது கட்டெறும்புகள் மொய்த்துக்கிடக்கும் காட்சியொன்று முவைக்கப்படுகிறது. மனிதனுக்குக் கசப்பைத் தரும் பழம் எறும்புகளுக்கு இனிக்குமோ என்னமோ தெரியவில்லை. அல்லது பழம் கசக்கும் என்று தெரிந்தே எறும்புகள் அதை மொய்க்கின்றனவோ என்னமோ, அதுவும் தெரியவில்லை. ஒரு தோற்றத்தில் எறும்புகள் உதிர்ந்திருப்பதுபோலவும் பழங்கள் உருண்டு செல்வதுபோலவும் தோன்றுகிறது. சிக்கலான உறவின் தன்மையை சிக்கலான படிமத்தைக் காட்டி உணர்த்துகிறார் வண்ணதாசன்.

ஒவ்வொரு கதையிலும் இப்படி நிறைந்திருக்கும் ஏராளமான படிமங்கள் வண்ணதாசனின் கதைகளுக்கு ஒருவித கவித்துவத்தை வழங்குகிறது. அதனாலேயே அவை மீண்டும் மீண்டும் படிக்கத்தக்கவையாக உள்ளன.

’உலகத்தில் எவ்வளவோ செய்யவேண்டும் என்றுதான் தோன்றுகிறது, அதையெல்லாம் செய்துவிடவா செய்கிறோம்’ என்றொரு வரி போகிற போக்கில் ஒரு கதையில் இடம்பெறுகிறது. செய்ய நினைக்கும் விழைவுக்கும் செய்யமுடியாத இயலாமைக்கும் இடையில் தத்தளிக்கிறது மானுட  வாழ்க்கை. அதைச் சீண்டிப் பார்க்கும் விதியின் விளையாட்டை துயரத்தோடும் கருணையோடும் கனிவோடும் வேதனையோடும் சித்தரிக்கின்றன வண்ணதாசன் கதைகள். அவற்றைப் படிக்கும் வாசகன் ஒரே சமயத்தில் பாரத்தால் தவிப்பவனாகவும் பாரங்களை உதறிப் பறப்பவனாகவும் மாறும் விசித்திரம் ஒருவித மாயம் என்றே சொல்லவேண்டும்.


(நாபிக்கமலம். சிறுகதைகள். வண்ணதாசன். சந்தியா பதிப்பகம், 53 வது தெரு, 9வது அவென்யு, அசோக்நகர், சென்னை-83. விலை.ரூ.140)
(தீராநதி - மே மாத இதழில் வெளிவந்த கட்டுரை)