Home

Wednesday 14 June 2017

மூன்று சிறுகதைகள் - அசோகமித்திரன் அஞ்சலி


சில ஆண்டுகளுக்கு முன்பாக அசோகமித்திரனுடைய நாவலொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு பெங்களூரில் ஓர் அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக அசோகமித்திரன் பெங்களூருக்கு வந்திருந்தார். நான் என்னுடைய கன்னட நண்பரொருவருடன் அரங்குக்குச் சென்றிருந்தேன். தற்செயலாக அதற்கு முந்தைய வாரத்தில்தான் நான் ஒரு மாலை நடையின் சமயத்தில் கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷனின் சித்திரம் இடம்பெற்றிருக்கும் அசோகமித்திரனுடைய சிறுகதையொன்றை அவருக்குச் சொல்லியிருந்தேன். ‘அப்பாவிடம் என்ன சொல்வது?’ என்பது அந்தக் கதையின் தலைப்பு. அந்தக் கதையின் சிறப்பம்சத்தைக் கேட்டுவிட்டு சில நிமிடங்கள் பேச்சே இல்லாமல் அமைதியில் உறைந்துவிட்டார் அவர். அவருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துவிட்டது. ’க்ரேட் ஸ்டோரி’ என்று மீண்டும் மீண்டும் சொன்னார். அசோகமித்திரனே நேரில் வந்து நாவலின் ஓர் அத்தியாயத்தைப் படிக்கவிருக்கிறார் என்ற செய்தியை அவரிடம் தெரியப்படுத்தியதுமே என்னுடன் கிளம்பி வந்துவிட்டார். அசோகமித்திரனிடம் அவரை அறிமுகப்படுத்தினேன். ‘அப்பாவிடம் என்ன சொல்வது?’ சிறுகதையை அவருடன் பகிர்ந்துகொண்டதையும் சொன்னேன். நண்பர் தன் உற்சாகமான குரலில் இரண்டு மூன்று முறை ‘க்ரேட் ஸ்டோரி சார்’ என்று சொல்லி கைகுலுக்கினார். அசோகமித்திரன் புன்னகையோடு தலையசைத்தபடி நண்பரைப் பார்த்துவிட்டு அவர் கைகளைப் பல கணங்கள் பற்றிக்கொண்டிருந்தார்.


“சார், கண்டோன்மெண்ட் ஸ்டேஷன்ல அந்தக் கதை நடக்கறமாதிரி நீங்க எழுதனதுல கூடுதலான ஒரு சிறப்பு தானாவே அமைஞ்சிட்டுதுன்னு தோணுது…..” என்றபடி அசோகமித்திரனின் கண்களைப் பார்த்தார் நண்பர். நான் நண்பரைப் பார்த்தேன். நண்பர் உற்சாகமான குரலில் தொடர்ந்து “சார், கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் முக்கியமான எடத்துல இருக்குது. ஒரு நாளைக்கு இங்க நூறு ரயில் வரும், போகும். ஆனா ஒரு ரயிலுக்கும் இங்க தங்கறதுக்கு எடமில்லை. அவ்வளவுதான். நிக்கறது, தங்கறதுலாம் மெஜஸ்டிக் ஸ்டேஷன்ல மட்டும்தான். அந்த அம்மாவுடைய பிள்ளை எப்படியோ இந்த ஊருக்கு பிழைக்க வந்து தாக்கு புடிச்சிட்டு நிக்கறான். ஆனா அவன் யாரையும் அவனோடு தங்க வச்சிக்க முடியாது. அம்மாவாகவே இருந்தாலும் கூட, அது சாத்தியமில்லை. அதுதான் கசப்பான உண்மை. கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் மாதிரிதான் அவன் வாழ்க்கை. ரயில் மாதிரி வரலாம், ரெண்டு நிமிஷம் நிக்கலாம், அப்புறம் கெளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதான். அந்த அம்மாவுக்கு அது புரிஞ்சிடுது. கண்டோன்மெண்ட் ஸ்டேஷன்ங்கற பேருக்கே இந்தக் கதை ஒரு புதிய அர்த்தத்தை கொடுக்கறமாதிரி இருக்குது. மறக்கமுடியாத கதை”

மழை பொழிகிறமாதிரி அவர் சொல்லி முடித்தார். அசோகமித்திரன் மெதுவாக அவர் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு மெல்லிய குரலில் ஆங்கிலத்தில் ‘ஆல் டீப் சாரோஸ் லீவ் டீப் ஸ்கார்ஸ். ஆஃப்டர் சம் இயர்ஸ், ஆல் டீப் ஸ்கார்ஸ் பிகம் மெமரபில் அண்ட் க்ரேட்’ என்று பொதுவாகச் சொன்னார்.

நிகழ்ச்சி தொடங்கியதும் நாவலின் ஓர் அத்தியாயத்தை அவர் அந்த அரங்கில் தன் மென்மை தோய்ந்த குரலில் படித்தார். அந்தச் சிறிய அரங்கில் ஐம்பது அறுபது பேர் அமர்ந்திருந்தார்கள். அனைவரும் அவர் படிப்பதை உன்னிப்பாகக் கேட்டார்கள். வாசிப்பைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது.

கேள்வி நேரத்தில் ஒரு பெண் வாசகர் எழுந்து “உங்கள் எழுத்தில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் புனைவு?” என்று கேட்டார். அவர் தனக்கேயுரிய அமைதியோடும் புன்னகையோடும் “தயவுசெய்து எந்த எழுத்தாளரிடமும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிடாதீர்கள். உண்மையும் புனைவும் ஏதோ ஒரு விகிதத்தில் கலந்ததுதான் படைப்பு. ஒரு வாசகருக்கு அதன் சதவீதக்கணக்கு தேவையில்லை. அந்தப் படைப்பிலிருந்து அவர் என்ன பெற்றுக்கொள்கிறார் என்பதுதான் முக்கியம்” என்று பதில் சொன்னார்.

அடுத்த கேள்வியை வேறு யாரோ ஒரு பெரியவர் கேட்டார். அதற்கு அசோகமித்திரன் பதில் சொல்லி முடிக்கும் கணத்துக்காகவே காத்திருந்ததுபோல அந்தப் பெண் வாசகர் மறுபடியும் எழுந்து “கிளாஸிக் நாவலுக்கும் எளிய நாவலுக்கும் என்ன வித்தியாசம் சார்?” என்று கேட்டார். அசோகமித்திரன் மிகவும் நிதானமான குரலில் “இந்த நேரத்தில் நான் எப்படிப்பட்ட வித்தியாசத்தை சுட்டிக் காட்டினாலும் அது எந்த விதத்திலும் உங்களுக்கு முக்கியமான வித்தியாசமாகத் தெரியாது. எல்லோருக்கும் பொதுவான ஒரு பகுப்புமுறையை அவ்வளவு சீக்கிரமா வகுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் ஒரு முக்கியமான வாசகர் என்றால் ஒரு நூறு புத்தகங்கள் படித்து முடித்த பிறகு, அந்த வாசிப்புப் பழக்கத்தாலேயே எது கிளாஸிக் எது நான்கிளாஸிக்னு வரையறுக்கிற ஒரு மதிப்பீட்டு முறை உங்களுக்குப் பிடிபட்டுவிடும். உங்கள மாதிரி பத்து வாசகர்கள் தனித்தனியான வாசிப்புப் பழக்கத்தால் தனக்கே உரிய ஒரு மதிப்பீட்டு முறையில கை தேர்ந்தவர்களா இருப்பாங்க. இந்த பத்து மதிப்பீடுகளிலும் இருக்கக்கூடிய குறைந்தபட்ச பொது அம்சம் கிளாஸிக் பற்றிய சின்ன வரையறையை உணர்த்தறமாதிரி அமையும். அதை பல நண்பர்களுடன் உரையாடி உரையாடி நீங்கள் பெரிசா வளர்த்தெடுக்கணும். அப்படி நீங்கள் உருவாக்கும் கருத்துதான் கிளாஸிக் படைப்பை தீர்மானிக்கும் அளவுகோலா இருக்கும்.”

அந்தப் பெண் அமைதியாக உட்கார்ந்துவிட்டார். அசோகமித்திரனின் சொற்களை மீண்டும் மனத்துக்குள் அடுக்கி அசைபோடுவதுபோல காணப்பட்டார். வேறு சிலர் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தொடங்கினார் அசோகமித்திரன். நாலைந்து பேர் கேட்ட பிறகு அவையில் அமைதி நிலவிய ஒரு  கணத்தில் அந்தப் பெண் மீண்டும் எழுந்து “ஒரு கிளாஸிக் எழுத்தாளருடைய எல்லாப் படைப்புகளையும் படிக்க வேண்டியது அவசியமா?” என்று கேட்டார்.
அசோகமித்திரன் சில கணங்களுக்குப் பிறகு “ஒரு குறிப்பிட்ட  எழுத்தாளர் கிளாஸிக் எழுத்தாளரா இல்லையாங்கற கேள்விக்கு விடை தேடக்கூடியவரா நீங்கள் இருந்தா, அவசியம் எல்லாவற்றையும் படித்துதான் ஆகணும். ஏற்கனவே உருவாகிவிட்ட பட்டத்தை ஏற்றுக்கொள்கிறவராக இருந்தால், தேர்ந்தெடுத்து ஒரு சிலவற்றை படித்தால் போதும்” என்றார்.

அந்தப் பெண் “ஒரு வாசகர் படித்ததையெல்லாம் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமா? அது அவசியமா?” என்று மற்றொரு கேள்வியைக் கேட்டார்.

“அது உங்கள் தேவையைப் பொறுத்தது. ஒரு எழுத்தாளருடைய படைப்புலகத்தைப்பற்றி மறுபடியும் மறுபடியும் பேச ஆசைப்படுகிற ஒரு ஆளா நீங்கள் இருந்தால், குறைந்தபட்சம் ஒரு மூணு கதைகளையாவது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம்னு நினைக்கறேன்” என்றார்.

அந்தப் பெண் உண்மையிலேயே அந்தப் பதிலைக் கேட்டு குதூகலமடைந்தவளைப்போல காணப்பட்டாள். உற்சாகமும் குறும்பும் படர்ந்த குரலில் “ஒரு எழுத்தாளர் மூன்று கதைகள்ங்கற சமன்பாடு ரொம்ப நல்லா இருக்குது சார்” என்று துள்ளினார். அசோகமித்திரன் சிரித்தார்.

வேறு யாரும் கேள்வி கேட்க எழுந்திருக்கவில்லை என்பதை அறிந்துகொண்டதும், அந்தப் பெண்ணே மீண்டும் புன்னகையோடு “செகாவ்னு பேர கேட்டதும் உங்களுக்கு ஞாபகம் வரக்கூடிய ஒரு மூணு கதைகளுடைய பேரச் சொல்ல முடியுமா சார்?” என்று கெஞ்சுவதுபோலக் கேட்டார்.

“சொல்றேன் சொல்றேன். விட மாட்ட போலிருக்கே நீ” என்றபடி மேசை மீதிருந்த தம்ளரிலிருந்து கொஞ்சம் தண்ணீரைப் பருகினார் அசோகமித்திரன். பிறகு “திருவிளையாடல் கேள்வி பதில் போல எதுக்கோ தயாரா வந்துட்ட மாதிரி இருக்கு” என்று புன்னகைத்தார்.

“த பெட், வான்கா, டெத் ஆஃப் எ கெளர்மெண்ட் க்ளெர்க்”

அந்தப் பெண் படபடவென்று கைதட்டி ஆரவாரம் செய்து தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்தினார். “மார்வெலஸ் சார். அப்படியே மாப்பஸானுக்கும் சொல்லுங்க சார்” என்று கேட்டார்.

எல்லோருடைய பார்வையும் அசோகமித்திரன் மீது பதிந்திருந்தது. அவர் தன் நெற்றியை மெதுவாக விரல்களால் தேய்த்தபடியே அவரையே ஒரு கணம் உற்றுப் பார்த்தார். “உமன்ஸ் ஸீக்ரெட்,     ஃபாதர்ஸ் கன்ஃபெஷன், டைரி ஆஃப் எ மேட்மேன்” என்றார்.

அந்தப் பெண்ணின் கைதட்டலோடு பார்வையாளர்களின் கைதட்டல்களும் இணைந்துகொண்டன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் அத்துடன் முடித்துக்கொள்ளும் நோக்கில் எழுந்தார். அந்தப் பெண் அப்போதும் விடவில்லை. “சார் சார், இன்னும் ஒரே ஒரு கேள்வி. இல்லைன்னா என் தலை வெடிச்சிடும். ஆஸ்கார் வைல்ட் படிச்சிருப்பீங்க இல்லயா, ஒரு சின்ன லிஸ்ட் ப்ளீஸ்” என்று எழுந்து நின்று கேட்டார். அசோகமித்திரன் மெதுவாக “ஆஸ்கர் வைல்ட்…..” என்று தனக்குள்ளாகவே இழுத்தபடி ”செல்ஃபிஷ் ஜயண்ட், நைட்டிங்கேல் அண்ட் ரோஸ், மாடர்ன் மில்லியனர்” என்று சொன்னார். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று சில கணங்கள் தொடர்ச்சியாகக் கைதைட்டினார்கள்.

அன்றைய நிகழ்ச்சி மறக்கமுடியாத அனுபவம். நானும் நண்பரும் அசோகமித்திரனிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினோம். அவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. வழியில் ஒரு விடுதிக்குள் சென்று காப்பி அருந்தியபடி பேசத் தொடங்கினோம். சுடச்சுட ஆவி பறக்க வந்த காப்பிக் கோப்பையைப் பார்த்ததும் எனக்கு அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை நினைவுக்கு வந்துவிட்டது. காப்பியின் கசப்புணர்வையும் காந்தி முன்வைத்த கசக்கும் உண்மைகளையும் ஒரு கோட்டில் இணைத்துக் காட்டி நீளும் அந்தக் கதையை அவர் விருப்பத்துடன் கேட்டார். “உண்மையிலேயே அவர் ரொம்ப ரொம்ப அசாதாரணமான எழுத்தாளர்” என்று உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னார்.

காப்பியை அருந்தி முடித்த தருணத்தில் அவர் மெதுவாக என்னைப் பார்த்து “அவர் சொன்ன சூத்திரப்படியே அவரை எப்போதும் ஞாபகத்துல வச்சிக்கறமாதிரி மூன்று கதைகளைச் சொல்லணும்னா நீங்க எந்தெந்தக் கதைகளை சொல்லுவீங்க?” என்று கேட்டார்.

“என்ன, நீங்களும் அந்தப் பொண்ணுமாதிரி செஷன் ஆரம்பிச்சிட்டீங்களா?” என்றபடி அவரைப் பார்த்தேன் நான். “ஏற்கனவே கண்டோன்மெண்ட் கதையை சொல்லிட்டிங்க. இதோ இப்ப காந்தி கதை. மொத்தம் ரெண்டாய்டுச்சி. ரெண்டும் கிளாஸிக்தான். இன்னும் ஒரே ஒரு கதை சொல்லுங்க, அது போதும்” என்றார் நண்பர்.

ஒரு கணம் கூட நான் யோசிக்கவில்லை. உடனே அவருக்கு நான் ‘புலிக்கலைஞன்’ சிறுகதையைச் சொன்னேன். பத்து நிமிடங்கள் மறு பேச்சில்லாமல் அவர் அந்தக் கதையைக் கேட்டார். அதற்குப் பிறகு உருகி உருகி ஒரு மணி நேரம் பேசினார். இறுதியில் “அந்த சர்மா சாப்ட்டுட்டு போடான்னு பணம் கொடுக்கறப்போ பணம் வேணாம் சார், ரோல் வேணும் சார்னு கேக்கற இடம் மனச என்னமோ பண்ணுது. ரைட்டர்ங்கற கெளரவத்தை ஒருத்தன் நமக்கு கொடுக்கலைன்னா எப்படி வலிக்கும்? அந்த வலிதான் அது, இல்லையா? ஒரு கலைஞனுடைய உண்மையான வலி. தன்னை நிராகரிக்கிற இந்த உலகத்தின் முன்னால அவன் தன்னை ஒரு கலைஞனா ஒரே ஒரு கணம் நிலைநிறுத்திட்டு போயிடணும்னு நினைக்கிறான். துரதிருஷ்டவசமா அது நடக்கலை. அழுதுட்டு போவறத தவிர வேற என்ன வழி இருக்குது சொல்லு” என்றார்.

“ஆத்தங்கரையோரமா நின்று கொண்டு, ஓடிட்டே இருக்கிற ஆத்த மணிக்கணக்குல பார்க்கிற மாதிரி அசோகமித்திரனுடைய பாத்திரங்கள் ஒரு ஆதரவில்லாத சூழல்லயும் கையாலாகாத நிலைமையிலயும் நின்னுட்டு இந்த வாழ்க்கையை பார்த்துட்டே இருக்காங்க. ஒவ்வொருத்தவங்க மனசுலயும் ஆயிரக்கணக்கான கேள்விகள். ஒரு விதத்துல அசோகமித்திரனுடைய உலகம்ங்கறது இந்தக் கேள்விகளுடைய தொகுப்புன்னு சொல்லலாம்” என்றேன்.

“மூணு கதைகளுமே முத்தான கதைகள். சந்தேகமே இல்லை.  உண்மையிலேயே அவர் கிளாஸிக் ரைட்டர்” என்றார். இருவரும் அந்த விடுதியிலிருந்து வெளியே வந்து வீட்டுக்குத் திரும்பினோம்.

24.03.2017 அன்று அசோகமித்திரனுடைய மரணச்செய்தி கிடைத்ததை அடுத்து ஒருவித தவிப்புக்கு ஆளாகியிருந்தேன். அவருடைய பெருந்தொகுதியைப் புரட்டிப்புரட்டி விரல்பட்ட பக்கத்திலிருந்த கதைகளைப் படித்தபடி இருந்தேன். நண்பர்களை அழைத்து “என்ன இப்படி நேர்ந்துவிட்டது?” என்று துக்கத்தைப் பகிர்ந்துகொண்டபடி இருந்தேன். ஏதோ ஒரு கணத்தில்தான் அந்தக் கன்னட நண்பருடைய முகம் நினைவுக்கு வந்தது. அவருக்குத் தகவல் சொல்லும் வேகத்தில் அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார். எப்போதும் பயணத்தில் இருப்பவர் அவர். ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அவருக்கு அனுப்பிவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன். அப்போதுதான் விழாச் சம்பவங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.

மறுநாள் அலுவலகத்தில் இருக்கும்போது அவர் அழைத்தார். கோவாவிலிருந்து அப்போதுதான் திரும்பியதாகச் சொன்னார். “நம்ம செல்லுங்க வெளி மாநிலத்துக்கு போனாலே வேலை செய்ய மாட்டுதே, அது ஏன்?” என்று அலுத்துக்கொண்டார். குறுஞ்செய்தி கிடைத்த தகவலையும் சொன்னார். புத்தக வெளியீட்டு விழாவில் அசோகமித்திரனைச் சந்தித்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார். ”கிளாஸிக் ரைட்டர்” என்று பெருமூச்சு விட்டார்.


முன்பு காப்பி அருந்திய அதே விடுதியில் அன்று மாலை சந்தித்தோம். காப்பி அருந்தியபடி மீண்டும் அசோகமித்திரனைப்பற்றி உரையாடினோம். புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியன்று நடைபெற்ற ஒவ்வொரு சம்பவத்தையும் ஒவ்வொரு உரையாடலையும் நினைவுக்குக் கொண்டு வந்து பகிர்ந்துகொண்டோம். நண்பர் சட்டென்று அசோகமித்திரன் முன்வைத்த ’மூன்று கதைகள் சூத்திரத்தை’ நினைவுபடுத்தினார். ”மிக எளிமையான வழிமுறையை அந்த கூட்டத்துல நான் கத்துக்கிட்டேன். இன்னைக்கு ஒரு பத்து எழுத்தாளர ஞாபகப்படுத்தி சொல்லமுடியும்னு சொன்னா, அதுக்குக் காரணம் அந்தச் சூத்திரம்தான்” என்றபடி காப்பியை மெதுவாக அருந்தினார். அசோகமித்திரனுடைய உருவம் என் ஆழ்மனத்தில் நிழலாட, நான் நண்பரின் முகத்தையே பார்த்தபடி இருந்தேன். அந்த மாலையில் அந்த உரையாடல் வழியாகவே நாங்கள் அவருக்கு மானசிகமாக அஞ்சலி செலுத்தினோம்.

(விருட்சம்-102 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை)