Home

Monday 12 June 2017

இயற்கையும் செயற்கையும் - ராஜ மார்த்தாண்டனின் "நிகழாத அற்புதம்"


நட்சத்திரத் தகுதியுள்ள ஓர் உணவு விடுதிக்கு நண்பரொருவர் அழைத்துச் சென்றார். நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு அருகில் பச்சைப்பசேலென ஒரு கொடி பற்றிப் படர்ந்திருந்தது.  சின்னச்சின்ன மொட்டுகளும் மலர்ந்திருந்தன. கண்ணைப் பறிக்கும் அதன் அழகில் மனம்சொக்கி தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. சூரிய வெளிச்சமும் இயற்கையான காற்றும் நுழையமுடியாத குளிரூட்டப்பட்ட அறைக்குள் இந்த அளவுக்கு புத்தம்புதுசாக பச்சைப்பசேலென ஒரு கொடி எப்படி இருக்கமுடியும் என்று உள்ளூர ஒரு கேள்வி ஓடியபடி இருந்தாலும் ஒருவேளை ஏதாவது குளிர்த்துருவத் தேசத்துக் கொடியாக இருக்கலாமோ என்றொரு பதிலும் அதற்கிணையாக ஓடிவந்தது.


நம்பலாமா நம்பக்கூடாதா என்ற குழப்பத்தில் சில கணங்கள் தடுமாறினேன். சற்றே நகர்ந்து உட்கார்கிற சாக்கில் இலைகளைத் தொட்டுப் பார்த்தேன். சந்தேகமே இல்லை. உண்மையான இலைகளைத் தொடுவதுபோலவே இருந்தது.  நண்பரும் தொட்டுப் பார்த்தார். எங்கள் ஆச்சரியம் பெருகத் தொடங்கியது. அக்கொடியின் பூர்வீகத்தை அறியும் ஆர்வம் ஒரு தவிப்பாக மாறிவிட்டது. சிற்றுண்டி முடித்து வெளியேறும் வேளையில் அந்த அறையின் பொறுப்பாளரிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்து, கொடியைப்பற்றி விசாரித்தோம். புன்னகையோடு அவர் அது செயற்கைக்கொடி என்றும் ஜெர்மனிக்குச் சென்றிருந்த தம் விடுதி முதலாளியால் வாங்கிவரப்பட்டது என்றும் சொன்னார். இயற்கையான மலரைப்போலவே செயற்கையாக உருவாக்கக்கூடிய மனித ஆற்றலைக் கண்டு பாராட்டுவதா அல்லது அஞ்சுவதா என்ற குழப்பத்தோடு வெளியேறினோம். அன்று எழுந்த உணர்வு கடந்த வாரம் நகரில் நடைபெற்ற செயற்கை மலர்க்கண்காட்சிக்கு தற்செயலாகச் சென்றிருந்தபோது  பல மடங்காகப் பெருகியது. ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு கொடியும் செடியும் நம்பமுடியாத அளவுக்கு துல்லியமும் கச்சிதமும் கொண்டவையாக  இருந்தன. மலரிதழ்களின் மென்மையும் நிறமும் பிரித்தறியமுடியாதபடி பொருத்தமான அளவில் காணப்பட்டன.

செயற்கையாக ஒன்றை உருவாக்குவதிலும் அதை ரசிப்பதிலும் மனிதர்களுக்கு இருக்கிற நாட்டம் புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர். இயற்கையை ஒதுக்கி செயற்கையோடு உறவாடத் தொடங்குவது அதற்கடுத்த புதிர். மனிதர்கள் படைப்புத்திறன் மிகுந்தவர்கள். தம் படைப்பாற்றல் வழியாகவே இந்த உலகில் தம்மை நிறுவிக்கொள்கிறார்கள் மனிதர்கள். படைப்புத்திறமையோடு கற்பனைத்திறமையும் இணையும்போது பல அதிசயங்கள் உருவாகின்றன. படைப்பாற்றலோடும் கற்பனையோடும் எதிர்காலம்பற்றிய நுண்ணோக்கும் இணையும்போது பல அரிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  இன்று நாம் காணும் கோயில்கள், சிற்பங்கள், அணைக்கட்டுகள், கலைக்கூடங்கள் அனைத்தும் அவர்களுடைய படைப்பாற்றலின் விளைவுகளே.  இது படைப்பாற்றலின் ஒருமுகம்மட்டுமே. தன் படைப்பாற்றலை ஒரு விற்பனைச்சரக்காக உருமாற்றுவது இன்னொரு முகம். அக்கணத்தில் எழும் போட்டியுணர்வு தவிர்க்கப்படமுடியாததாக உள்ளது. இயற்கைக்கு நிகரான கச்சிதத்தை முடிந்தவரைக்கும் உருவாக்கிக்காட்டும் திறமையால்மட்டுமே பார்வையாளர்களை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்பது சந்தைவிதி. அதிகக் கூர்மையான போட்டியுணர்வு அதிகப் பார்வையாளர்களை வசப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் செயற்கை, இயற்கையைவிட மதிப்புமிகுந்ததாக மாறிவிடுகிறது. இயற்கையான நீரூற்றைக் காண, அது இருக்கும் இடம்தேடிச் செல்லவேண்டும். நமக்கு அருகிலேயே உருவாக்கப்படுகிற செயற்கை ஊற்று பரவசப்படுத்துகிறது.

இயற்கையும் செயற்கையும் பற்றிய நம் புரிதலை விரிவாக்குகிறது ராஜ மார்த்தாண்டனின் "நிகழாத அற்புதம்" கவிதை. மிக இயல்பாக நாம் காணக்கூடிய ஒரு காட்சியை முன்வைத்து கவிதையை நகர்த்துகிறார் மார்த்தாண்டன். சிவராத்திரியை முன்னிட்டு ஊர்ப்பொதுவில் திரைப்படம் போடுகிறார்கள். திருவிளையாடல் படத்தில் சிவனாக சிவாஜி நடித்த காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சிவாஜியின் நடிப்பாற்றலில் பார்வையாளர்கள் சிவனையே பார்த்த பரவசத்தில் மிதக்கிறார்கள்.  பளிரென்ற ஒளிக்கீற்றோடு வானிலிருந்து உண்மையான சிவன் வந்து நிற்கும்போது, நின்று பார்க்கவோ, வணங்கவோ ஒருவரும் இல்லை.  கடவுள் நம் கண்முன் தோன்றுவது என்பது எவ்வளவு பெரிய அற்புதம். அதே கடவுள் பார்வையாளர்களே இல்லாத ஒரு திடலில் தன்னந்தனியாக நிற்பது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்.  நம் அறிதல்முறையும் வாழ்க்கைமுறையும் இயற்கையைவிட்டு விலகவிலக அற்புதங்களெல்லாம் அபத்தங்களாக செயலற்றுப்போவது மிகப்பெரிய துரதிருஷ்டம்.

கவிதையில் இன்னொரு கட்டமும் உள்ளது.  ஒளிக்கீற்றின் வருகையை ஏவுகணையென நினைத்து அஞ்சி,  வெடியோசை கேட்டதும் சிதறிப் பறக்கும் கொக்குகளாக பார்வையாளர்கள் ஓடோடி மறைந்த பிறகு உருவாகும் சித்திரம் முக்கியமானது.  திரையில் செயற்கைச் சிவனுடைய சிம்மகர்ஜனையைக் கேட்பதற்கும் யாருமில்லை.  ஏமாற்றத்தாலும் வேதனையாலும் பாதிக்கப்பட்ட இயற்கையான சிவனுடைய நிசப்தமான வெடிச்சிரிப்பைக் கேட்பதற்கும் யாருமில்லை. பார்வையாளர்களின் உயிரச்சத்தின் முன்னால் இயற்கை அற்புதமும் செயற்கை அற்புதமும் தனித்துவிடப்படுவது அபத்தத்தின் உச்சம்.


*

நிகழாத அற்புதம்

ராஜ மார்த்தாண்டன்

சிவராத்திரி நள்ளிரவு
ஒளிக்கீற்றொன்று
இறங்கிற்று வான்விட்டு
திறந்தவெளியில் 16எம்எம்மில்
திருவிளையாடல் கண்டு
பரவசத்தில் உறைந்திருந்த மக்கள்
ஏவுகணையோ ஏதோவென்றஞ்சி
அலறி ஓடினர்
வெடியோசை கேட்டதும்
சிதறிப் பறக்கும் கொக்குகளாக

குனித்த பருவமும் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணீறுமாய்ச்
சுற்றிலும் நோக்கினார் சிவனார்
வண்ணத்திரையில் சிவாஜியின் சிம்மகர்ஜனை
நிசப்தத்தை நடுங்கவைத்தது
பக்தர்கள் எங்கே?

துறுதுறுத்த கையை
மார்போடணைத்துக்கொண்டார்
குமிண்சிரிப்பு மறைந்து
ஏமாற்றத்fதில் இருண்டது முகம்
மறுகணம்
நிசப்தமான வெடிச்சிரிப்பு
சிவரூபம் ஒளிக்கீற்றாகி மேலெழுந்து மறைந்தது

*


சங்கப்பாடல்கள் முதல் நவீன கவிதைகள்வரையில் விரிவும் ஆழமும் கொண்ட வாசிப்பனுபவம் மிக்க கவிஞர் ராஜ மார்த்தாண்டன். ஆய்வுநோக்கில் புதுக்கவிதையின் வரலாற்றை ஒரு நூலாகவே எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் படைப்புகளையொட்டி ஏற்படும் எல்லாவிதமான ஐயங்களையும் தீர்த்துவைக்கக்கூடிய ஒரு நடமாடும் தகவல்நிலையமாக வாழ்ந்துவந்தார். தினமணியின் வார இணைப்பாக ராஜ மார்த்தாண்டனின்  பொறுப்பில் வெளிவந்த தமிழ்மணி, தினமணி கதிர் இதழ்களை ஒருசேர வாசிப்பவர்கள் அவர் வாசகர்களுக்கு வழங்கநினைத்த படைப்புகளின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். 'கொல்லிப்பாவை' என்னும் சிற்றிதழையும் சிறிதுகாலம் பொறுப்பேற்று நடத்தி வந்தார். என் கவிதை, அப்படியே நிற்கட்டும் அந்த மரம் ஆகிய தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிச்சமூர்த்தி முதல் தென்றல் முடிவாக 93 கவிஞர்களின் படைப்புகளைக்கொண்ட மிகச்சிறந்த தொகுப்பொன்றை 'கொங்குதேர் வாழ்க்கை' என்னும் தலைப்பில் உருவாக்கினார். தமிழினி வெளியீடாக வந்துள்ள இந்தத் தொகுதியை  இளம்வாசகர்களுக்கான கையேடு என்று குறிப்பிடலாம். 06.06.09 அன்று சாலை விபத்தில் இயற்கையெய்தினார்.