Home

Tuesday, 19 December 2017

எட்டு மாம்பழங்கள் - சில பாடல்கள்



ஆசைகள்

அப்பா அப்பா ஏரிக்கரைக்கு
போகலாமா?
ஆல விழுதில் ஊஞ்சல் ஆடி
குதிக்கலாமா?

விழுந்து கிடக்கும் நாவல் பழத்தை
எடுக்கலாமா?
மண்ணை ஊதி அகற்றிவிட்டு
தின்னலாமா?

எட்டு மாம்பழங்கள் - புதிய சிறுவர் பாடல் தொகுதி முன்னுரை






ஹூப்ளி என்னும் ஊருக்குப் பக்கத்தில் பத்து நாட்கள் தொடர்ச்சியாக தங்கி வேலை பார்க்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஊர் தொலைபேசி நிலையத்திலேயே ஓர் அறையில் தங்கியிருந்தேன். வேலையிடத்துக்கு என்னை அழைத்துச் செல்லவேண்டிய நண்பர் தன் சொந்த வீட்டிலிருந்து கிளம்பி வந்து என்னை அழைத்துச் செல்வார். அவருடைய சிரமத்தைக் குறைப்பதற்காகவும் பயணத்தொலைவைக் குறைப்பதற்காகவும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு பொது இடத்தை, இருவரும் சந்தித்துப் புறப்படும் இடமாக அமைத்துக்கொண்டோம்.

Wednesday, 13 December 2017

கனவுகளின் அறைகள் - தூயனின் சிறுகதைகள்


                               
கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அடுத்தடுத்து குறிப்பிடத்தக்க நல்ல சிறுகதைகளை எழுதி வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர் தூயன். பலவிதமான கூறுமுறைகளுக்கு ஏதுவாக கதைக்களங்களைக் கட்டமைக்கும் விதங்களில் தூயனின் ஆர்வமும் ஆளுமையும் வெளிப்படுகின்றன. வடிவப்பிசகில்லாதபடி ஒரு கதையைத் தொடங்கும் கலையும் சரியான புள்ளியில் முடிக்கும் கலையும் தூயனுக்கு இயல்பாகவே கைகூடி வரும் அம்சங்களாக உள்ளன.

Sunday, 10 December 2017

கசப்பும் கனவும் - உமா மகேஸ்வரியின் சிறுகதைகள்


உமா மகேஸ்வரியை ஒரு கவிஞராகவே நான் முதலில் அறிந்துவைத்திருந்தேன். நான் எழுதி வந்த கணையாழி இதழில் அவரும் அடிக்கடி எழுதி வந்தார். ‘எனது நதி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையொன்று என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. நதியையும் ஒரு பெண்ணின் புடவையையும் பல்வேறு நிலைகளில் ஒப்புமைப்படுத்தியபடி செல்லும் அக்கவிதை. சின்னஞ்சிறு வயதில் அம்மாவின் புடவையென அலையோடியிருக்கிறது நதி. பருவ வயதில் ஓரம் தைத்த தாவணியாக உருவம் மாறிக் கிடக்கிறது. திருமணமாகி வேறு திசைக்குச் சென்று திரும்பி வந்து பார்க்கும் தருணத்தில் நூலிழை பிரிந்த கந்தலாகக் கிடக்கிறது. ஒருபுறம் காலம் ஒரு சிறுமியை திருமணம் முடித்த பெண்ணாக வளர்ந்து நிற்கவைக்கிறது. மறுபுறத்தில் அதே காலம் அலைகளோடிய நதியை நீரோட்டம் இல்லாத சிறு குட்டையாகச் சிறுக்க வைத்திருக்கிறது. இந்தக் கவிதையை இன்னும் என் நினைவில் பதிந்திருப்பதற்குக் காரணம் நதியைக் குறிப்பிட உமா மகேஸ்வரி ’அம்மாவின் புடவை’ என கையாண்டிருக்கும் உவமை. எந்த நதியைப் பார்த்தாலும் அந்த உவமை ஒருகணம் என் மனத்தில் எழுந்து மறையும்.

Saturday, 2 December 2017

கதவு திறந்தே இருக்கிறது - மனைவி என்னும் மகாசக்தி


உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஒரு பேச்சுப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது. நான்கு புத்தகங்களை ஒரே கட்டாக வண்ணக்காகிதத்தில் சுற்றிக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்ததும் எங்கள் அம்மா அந்தக் கட்டைப் பிரித்தார். “எல்லாமே ஒரே எழுத்தாளர் எழுதிய புத்தகமா இருக்குதுடா” என்றார். நான் அவற்றை எடுத்துப் பார்த்தேன். எல்லாமே மு.வரதராசனார் எழுதியவை. அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு ஆகியவை. அந்த வாரத்திலேயே அவை அனைத்தையும் படித்துமுடித்தேன். கடித வடிவத்தில் கூட ஒரு புத்தகத்தை எழுதமுடியும் என்னும் அம்சம் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்தது. அறிவுரைகள், வாழ்க்கைச்சம்பவங்கள், சின்னச்சின்ன கதைகள், எடுத்துக்காட்டுகள் என ஏராளமான விஷயங்களின் கலவையாகவும் தொகுப்பாகவும் இருந்தது. ஒரு பயணம் போய்வந்த அனுபவத்தைக்கூட அவர் ஒரு கடிதமாக எழுதியிருந்தார். ஏதோ ஒரு கடிதத்தில் அன்று படித்து மனத்தில் பதியவைத்துக்கொண்ட ஒரு கருத்து, (சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாத நிலையில் புறக்கணிக்கக் கற்றுக்கொள்) இன்றும் என் நெஞ்சில் பசுமரத்தாணியென பதிந்திருக்கிறது.

கதவு திறந்தே இருக்கிறது - பால்யத்தின் அடித்தளம்

வில்லியம் சரோயன், சிங்கர் ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும்படி முதன்முதலில் எனக்கு ஆலோசனை வழங்கியவர் அசோகமித்திரன். அதற்குப் பிறகுதான் அவர்களுடைய சிறுகதைத்தொகுதிகளைத் தேடி வாங்கிப் படித்தேன். இருவருமே மகத்தான எழுத்தாளர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஓர் எழுத்தாளனுக்கு தன் இளம்பருவத்து அனுபவங்கள் விதைகளாகவும் உரங்களாகவும் எவ்விதம் அமைந்திருக்கின்றன என்பதை இத்தொகுதிகளைப் படிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும். இவர்களுக்கு இணையாக தமிழில் சொல்லத்தக்க ஒரே எழுத்தாளர் அசோகமித்திரன் மட்டுமே.