1857 ஆம் ஆண்டு, இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு கட்டம். அந்த
ஆண்டில்தான் ஆங்கிலேயரின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்தும் ராணுவத்துறையில் ஆங்கில அரசாங்கம் அறிமுகப்படுத்திய நடைமுறைகளை வெறுத்தும் இந்தியச் சிப்பாய்களிடையே ஒரு பேரெழுச்சி உருவானது. அந்த எழுச்சி ஆட்சியில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டியது. கிளர்ச்சியைத் தொடர்ந்து தில்லியைக் கைப்பற்றி, தன்னை அரசராக அறிவித்துக்கொண்டவர் நானா சாகிப்.
அவரை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கி, தப்பித்து ஓடவைத்து, அவரைப்போன்ற கிளர்ச்சியாளர்களைக் கொன்றடக்கி எல்லாப் பகுதிகளையும் மீண்டும் தன் வசப்படுத்தும் வரையில் ஆங்கிலேயர்கள் ஓயவில்லை. அதற்குள்
பல மாதங்கள் கடந்துவிட்டன. தில்லியிலிருந்து வெளியேறிவிட்டாலும் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபடி, நாடெங்கும் சுற்றியலைந்து, மீண்டுமொரு கிளர்ச்சிக்காக மக்களை அணிதிரட்டியபடி பல ஆண்டுகள் சுற்றியலைந்துகொண்டே இருந்தார் நானாசாகிப். அவருடைய மறைவு வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. இது வரலாறு. இந்த வரலாற்றுச் சம்பவத்தை மையக்கருவாக்கி, ஒரு பிரெஞ்சு எழுத்தாளர் ஒரு வரலாற்று நாவலாக பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார் என்னும் தகவல் புதுமையாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. அவர் பிரபல பிரெஞ்சு எழுத்தாளரான டூமாஸின் நண்பர் என்பது கூடுதலான தகவல்.
ஜூல்ஸ் வெர்ன் தேர்ந்த எழுத்தாளர் என்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய ஆளுமையைப் புரிந்துகொள்ள ‘Twenty thousand leagues
under the sea’ என்கிற
ஒரு நாவல் போதும். இன்றளவும் எல்லா உலக மொழிகளிலும் அதற்கு வாசகர்கள் இருக்கிறார்கள். அவர் இந்திய நாட்டுச் சம்பவமொன்றை மையக்கருவாகக் கொண்டு
ஒரு நாவலைப் படைத்திருக்கும் செய்தியை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அவர்
இக்கருவை எப்படி கையாண்டிருப்பார் என்கிற ஆர்வத்தால் இந்த நாவலை உடனடியாகப் படிக்கவைத்தது. மேலைநாட்டு நாவல்களுக்கே உரிய கட்டமைப்பில் படிக்க சுவாரஸ்யமான வகையில் ’நானா சாகிப்’ இருப்பதை முக்கியமான அம்சமாகக் குறிப்பிடுதல் வேண்டும். இந்திய நிலவமைப்பைப்பற்றியும் ஆற்றுப்படுகைகள்பற்றியும் மலைப்பகுதிகளைப்பற்றியும் சின்னச்சின்ன கிளைநதிகளைப்பற்றியுமான தகவல்களை பிழையே இல்லாமல் நாவலின் போக்கில் மிகவும் பொருத்தமான இடத்தில்
வெர்ன் கையாண்டிருக்கிறார்.
ஆங்கில அரசாங்கம் நானா சாகிபை விரட்டியடித்துவிட்டு தில்லியை தன் வசப்படுத்திக்கொண்ட கணத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. பிடிபடாமல் தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் நானாசாகிபையும் அவர் சகோதரரையும் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு இரண்டாயிரம் பிரிட்டன் பவுண்டு பரிசாக அளிக்கப்படும் என்கிற அறிவிப்பு நாடெங்கும் சுவரொட்டியாக ஒட்டப்படுகிறது. அதுதான் முதல் அத்தியாயம். சுவரொட்டிச் செய்தியைப் படித்துவிட்டு மக்கள் தமக்குள் பேசிக்கொள்கிறார்கள். நானா சாகிபின் திறமையைப்பற்றியும் ஆங்கில ராணுவத்தின் திறமையைப்பற்றியும் மாறிமாறிப் பேசிக்கொள்கிறார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு யாராவது காட்டிக் கொடுத்தாலும் கொடுக்கக்கூடும் என்கிற பேச்சும் அடிபடுகிறது.
அடுத்த அத்தியாயத்தில் கர்னல் மன்றோ அறிமுகமாகிறான். நானா சாகிபைப் பிடித்துக் கொல்வதையே தன் இலட்சியமாக நினைப்பவன் அவன். தனிப்பட்ட
வகையில் தன் மனைவியின் மறைவுக்கு
நானா சாகிப்தான் காரணம் என்பது அவன் எண்ணம். சிப்பாய்களின் எழுச்சியில் அகப்பட்டு தப்பிக்க முடியாமல் கான்பூருக்கு அருகில் அவள் கொல்லப்பட்டுவிடுகிறாள். அதனால் நானாசாகிபைப் பிடித்துக் கொன்றால்தான் தன் மனம் அமைதியடையும் என்பது அவன் நம்பிக்கை. அடுத்தடுத்த அத்தியாயங்களில் பின்னோக்கு உத்தியில் இந்தியப் போர்வீரர்களின் கிளர்ச்சிகள் விரிவாகப் பேசப்படுகின்றன. ஆங்கிலேய வீர்ர்களை இந்திய வீரர்கள் கொல்வதும் கைதிகளாகப் பிடித்து சிறைவைப்பதும் அந்தக் கிளர்ச்சிகளில் நானா சாகிபின் இடமும் வரையறுக்கப்படுகிறது. பல
மாதங்கள் இடைவிடாத போராட்டத்துக்குப் பிறகு கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டு தில்லி கைப்பற்றப்படுவதும், தப்பித்தோடிய கிளர்ச்சியாளர்களைப் பிடித்துக் கொல்வதற்காகச் சென்ற வீரர்கள் தேசத்தின் நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்துவிட்டு திரும்பி வருகிறார்கள்.
இந்த நாவலின் வடிவமும் எழுத்துமுறையும் மிகமுக்கியமானது. வெர்ன் இந்தியாவைப் பார்த்திருக்கக்கூடும். ஆனாலும் இந்திய மனம் இயங்கும் தன்மையைப்பற்றி தன்னால் சரியாகச் சொல்லமுடியுமா என்கிற தயக்கம் அவருக்கு இருந்திருக்கவேண்டும். அதனால் மிகவும் கவனமாக உணர்ச்சிமயமான காட்சிகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் வெர்ன்.
தனிப்பட்ட சோகங்களைப்பற்றியோ, இழப்புகளைப்பற்றியோ, ஆவேசங்களைப்பற்றியோ, முழக்கங்களைப்பற்றியோ எதையும் முன்னிறுத்தாமல் அழகாக விலகி நடக்கிறார் வெர்ன்.
மேலைநாட்டினருக்கு மிகவும் ஆர்வமூட்டக்கூடிய வேட்டைமீதான விருப்பத்தையும் பயணம்மீதான விருப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார். மொத்த நாவலையும் வேட்டையும் வேட்டைக்கான பயணமுமாக மாற்றிவிடுகிறார். ஒரு படைப்பாளியாக, என்னை இந்தத் தொழில்நுட்பம் மிகவும் கவர்கிறது. வேட்டைப்பயணத்துக்கு முன்பு இந்தியாவின் புறச்சூழல் எப்படி இருந்தது என விரித்துரைக்கும் விதமாக சில அத்தியாயங்கள் எழுதும்போது சிப்பாய்களின் எழுச்சியின் போக்கை தகவல்களாக இணைத்துக்காட்டியதோடு விட்டு விடுகிறார் வெர்ன். அடுத்து வேட்டைக்கான பயணம் தொடங்குகிறது. மனைவியை இழந்த துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் கர்னலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும்வகையில் இந்த வேட்டைப்பயணம் அமைந்திருக்கிறது. இந்தப் பயணத்துக்காகவே ஒரு புதிய வாகனத்தை வடிவமைக்கிறார்கள். அது தரையிலும் செல்லக்கூடியது. நீரிலும் செல்லக்கூடியது. ரயிலாகவும் ஊர்ந்து செல்லக்கூடியது.
காடுகள் வழியாகவும் இமயமலை அடிவாரம் வழியாகவும் நீளும் பயணத்தில் வேங்கையை வேட்டையாடுவது என்னும் நோக்கத்தோடு நானாசாகிப் என்னும் வேங்கையை வேட்டையாடுவதையும் ஒரு படிமமாக இணைத்துக்கொள்கிறார் வெர்ன். நாவலை வளர்த்துச் செல்ல இந்தப் படிமம் பெரிதும் உதவுகிறது. பயணம் முழுதும் நானா சாகிபைக் கொல்லும் வேகத்தோடும் வெறியோடும் இருக்கிறார் கர்னல். ஒரு கட்டத்தில் அவர் உயிரோடு இல்லையென்றும் கொல்லப்பட்டுவிட்டார் என்றும் பம்பாய் மாகாண ஆளுநர் வெளியிட்ட ஓர் அரசாங்க அறிவிப்பை அவர் படிக்க நேர்கிறது. அது அவர் மனநிலையைத் தளர்ச்சியடையச் செய்தாலும் பயணத்தைத் தொடர்கிறார். வேட்டையின்போது அவர்கள் குறிபார்த்துச் சுட்ட வேங்கை எப்படியோ தப்பிவிடுகிறது. ஆனால், அவர்கள் உள்ளூர வேட்டையாட நினைத்த நானாசாகிப் என்னும் வேங்கை கொல்லப்பட்டதாக செய்தி பரப்பப்படுகிறது.
சிறைபிடிக்கப்பட்ட ஆங்கிலேயப் பெண்கள் அடைத்துவைக்கப்பட்ட இடம் பீபிகர். ஆட்டை அறுத்துக் கொல்பவர்களை வாடகைக்கு அமர்த்தி, அவர்கள் மூலமாக அப்பெண்கள் கொல்லப்பட்டார்கள். சித்தரிப்பாக இல்லாமல் அதையும் ஒரு தகவலாகவே
வெர்ன் பயன்படுத்துகிறார். ஐந்து நண்பர்கள் பயணம் செய்யும் நவீன வாகனம் ஒரு கட்டத்தில் புயலில் சிக்கிக்கொள்கிறது. அதே சமயத்தில் வேறொரு புறத்தில் உருவாகிப் படர்ந்த காட்டுத்தீயிலும் சிக்கிக்கொள்கிறது. வாகனத்தைவிட்டு இறங்கிச் சென்ற இருவர் இன்னும் திரும்பவில்லை. அவர்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து இறுதிக்கணத்தில் தயக்கத்தோடு கிளம்புகிறது வாகனம். பாதை புரியாத அடர்ந்த இருண்ட
காட்டுக்குள் காலுடைந்த நண்பனை கைத்தாங்கலாகப் பிடித்தபடி தட்டுத்தடுமாறி நடந்த நண்பர்களும் கடைசிக்கணத்தில் ஒருவழியாக வந்து வாகனத்துக்குள் ஏறிவிடுகிறார்கள். காட்டுத் தீயின் வெளிச்சத்திலும் மின்னல் கீற்றுகளின் ஒளியிலும் வனவிலங்குகளின் நிழல்களை அவர்கள் காண்கிறார்கள். வாகனத்துக்குள் தாவி, உயிர் தப்பிக்க நினைத்த புலியொன்று காற்றின் சுழற்சியால் தடித்த கயிறுகளாகச் செயல்பட்ட மரக்கிளைகளில் சிக்கி கழுத்து நெரிபட உயிர்விடுகிறது. இவை அனைத்தும் கற்பனையால் கட்டியெழுப்பப்பட்ட புனைவுகள் என்றாலும் அவற்றை உணர்ச்சிமயமானதாக வெர்ன் சித்தரிக்கிறார். நாவலின் கட்டமைப்புக்குள் எது பொருந்தும் என்பதை அறிந்து செயல்பட்டிருக்கிறார் வெர்ன்.
நானா சாகிப்பைக் கொல்வதற்காக எடுக்கப்படும் முயற்சியைப்பற்றிய காட்சியை இறுதிக்காட்சியாக்கி நாவலை முடிக்கிறார் வெர்ன். புரட்சிக்குப் பிறகு, கூந்த் என்னும் பழங்குடி இனத்தவரின் ஆதரவில் அவர் தன் சகோதரரோடு தலைமறைவுவாழ்க்கை வாழ்ந்தபடி படைதிரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் நானாசாகிப். தற்செயலாக ஒரு பைத்தியக்காரிபோல அப்பகுதியில் தீப்பந்தத்துடன் திரியும் ஒரு பெண் ஒருநாள் நானாசாகிபை அடையாளம் கண்டுகொள்கிறாள். பெண் என்பதால் அவளை ஒரு பெரிய ஆபத்தாக நானாசாகிப் கருதவில்லை. ஆனால், அவள் கையாலேயே இறுதியில் நானாசாகிப் இறக்க நேர்ந்ததாக, ஒரு செய்தியை ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள். மாகாண கவர்னரும் அந்த மரணத்தை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டு, நானாசாகிப் விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
நாவலை வாசித்து முடித்தபின்னர் வெர்னின் எழுத்தாளுமையை மீண்டும்மீண்டும் அசைபோடுகிறது மனம். எழுத நினைக்கும் ஒரு படைப்பாளி, இந்த உலகில் எதைப்பற்றியும் எழுத நினைப்பது இயற்கை. எழுத நினைப்பதைப்பற்றிய முழு ஞானமும், எப்படி முன்வைப்பது என்கிற தேர்வுமுறையும் மிகமுக்கியம் என்னும் உண்மையை நானாசாகிப் நாவல் வாசிப்பு உணர்த்துகிறது. புனலாடும் மங்கையர்கள்முதல் பேய்கள் ஆடிக் களிக்கும் திருவாலங்காடுவரைக்கும் வேறுவேறு களங்களைப்பற்றி எழுதிய பழங்காலக் கவிஞர்களின் ஆளுமைகளை ஒருகணம் நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.
(நானா சாகிப் – சிப்பாய்க் கலகத்திற்குப் பின். பிரெஞ்சு நாவல். மூல ஆசிரியர் ஜூல்ஸ் வெர்ன். ஆங்கிலம் வழி தமிழாக்கம்: சின்னத்தம்பி முருகேசன். சந்தியா பதிப்பகம். சென்னை – 83. விலை. ரூ.160.)