ஒரு கன்னட நாட்டுப்புறக்கதை நினைவுக்கு வருகிறது. ஓர் ஊரில் ஒரு செல்வந்தரின் மகன் நோய்வாய்ப்பட்டிருந்தான். அவனுக்கு மருத்துவம் பார்க்காத வைத்தியரே அந்த ஊரிலும் அக்கம்பக்கத்து ஊர்களிலும் இல்லை. அந்த அளவுக்கு எல்லோரும் வந்து அந்தச் சிறுவனுக்கு வைத்தியம் பார்த்துவிட்டார்கள். எந்த மருந்தும் அவனைக் குணப்படுத்தவில்லை. சிறுவனின் ஆரோக்கியமும் நாளுக்குநாள் குன்றியபடியே இருந்தது. அதை நினைத்து செல்வந்தர் மிகவும் மனம் வருந்தினார். ஏதாவது தெய்வக்குற்றமாக இருக்கக்கூடும் என்று யாரோ ஒரு சொந்தக்காரர் சொன்னதை முக்கியமானதாக எடுத்துக்கொண்டு, ஊரூராகச் சென்று எல்லாக் கோயில்களிலும் தரிசனம் செய்து மனமுருக வேண்டிக்கொண்டார். அந்தப் பிரார்த்தனைகளும் பலனளிக்கவில்லை.
ஒருநாள் ஒரு கோவில் வளாகத்தில் குளக்கரையோரத்து மரத்தடியில் அமர்ந்து மனவாட்டத்தோடு ஏதேதோ சொன்னபடி செல்வந்தர் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தார். அந்த மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் அவர் தனக்குத்தானே பேசிக்கொள்வதையும் கண்ணீர் விடுவதையும் கண்டு, அவர் அழுதுமுடிக்கும்வரை காத்திருந்து, பிறகு பொறுமையாக அவரிடம் பேச்சுக் கொடுத்தார். ஒரு வடிகாலுக்காகக் காத்திருந்ததுபோல அந்தச் செல்வந்தர் தன் நெஞ்சில் இருந்த பாரத்தையெல்லாம் சொற்களாக மாற்றி இறக்கிவைத்துவிட்டார். எல்லாவற்றையும் பொறுமையாகக்
காதுகொடுத்துக்
கேட்டுக்கொண்ட
பெரியவர் ”சரி வா, உன் வீட்டுக்குப் போகலாம். நானும் ஒரு மருத்துவன்தான். நான் உன் மகனுக்கு மருந்து கொடுத்துப் பார்க்கிறேன்” என்றார். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று நினைத்துக்கொண்டிருந்த செல்வந்தர் உடனே அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.
படுக்கையில் இருந்த சிறுவனைத் தொட்டுப் பார்த்தார் பெரியவர். நாடிகளைப் பரிசோதித்ததில் நாடிக்கணக்கு சரியான விகித அளவிலேயே இருப்பதைக் கண்டார். நோய்க்கூறுக்கான எந்தத் தடயமும் அவன் உடலில் இல்லை. அப்படியானால் அவனுடைய நோய் மனம் தொடர்பானது என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் அதை உடனடியாகச் சொல்ல விரும்பவில்லை அவர். உடல்நோய்க்கு மருந்து கொடுப்பதுபோலவே தொடர்ந்து செயல்பட்டு, அந்த இடைப்பட்ட காலத்தில் மனநோய்க்கு மருந்து தரவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். சிறுவன் தங்கியிருக்கும் அந்த அறையிலேயே தானும் தங்கி அவனுக்கு மருத்துவம் பார்க்க விழைவதாகச் செல்வந்தரிடம் சொன்னார் பெரியவர். முதல் மருந்தாக, தன் துணிமூட்டைக்குள் இருந்த ஒரு குடுவையைத் திறந்து, அதில் இருந்த துளசிதீர்த்தத்தை ஒரு பாலாடைக்குள் ஊற்றி அவனுக்குப் புகட்டினார். மூன்று வேளைக்கு மூன்று பாலாடை. அதற்குள், அந்த அறைக்குள் பெரியவர் தங்குவதற்கு ஏதுவாக சில வசதிகளைச் செய்துகொடுத்தார் செல்வந்தர்.
அறையைவிட்டு எல்லோரையும் வெளியே அனுப்பிவைத்துவிட்டு, பெரியவர் அவனிடம் பேச்சுக்கொடுத்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவன் தடங்கலெதுவும் இல்லாமல் மெதுவாக விடைகளைச் சொன்னான். அவன் மனம் வேறெந்த திசையிலும் செல்லாதபடி, தன்மீதுமட்டும் குவிந்திருக்கும்வகையில் இடைவிடாமல் பேச்சுக் கொடுத்தபடியே இருந்தார் பெரியவர். வேளாவேளைக்கு பாலாடையில் துளசிதீர்த்தத்தை ஊற்றிப் பருகும்படி செய்தார். ஒருவார காலம் கழிந்தது. படுத்த படுக்கையாகவே இருந்தவன் எழுந்து அமரும் நிலைக்கு மாற்றம் உருவானது. அவ்வளவுதான். அந்தப் பெரியவரின் மருத்துவமுறையின்மீது செல்வந்தர் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.
அடுத்த வாரம் அறைக்குள்ளாகவே நடமாடும் அளவுக்கு அவன் ஆரோக்கியம் பெற்றான். ஆனால் அவன் கண்களில்மட்டும் நோய்க்களை அப்படியே மாறாமல் இருந்தது. விழித்திருக்கும் நேரம் முழுதும் அவனுடன் இடைவிடாமல் உரையாடியபடியே இருந்தார் பெரியவர். முதலில் அவனுக்கு புராணக்கதைகள் சிலவற்றைச் சொன்னார். அவற்றை அவன் மிகுந்த ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொண்டான். அவன் முகத்தில் படிந்திருந்த சோகக்களை சற்றே குறைந்தது.
புராணக்கதைகளைத் தொடர்ந்து அவனுக்கு சில சாகசக்கதைகளைச் சொல்லத் தொடங்கினார் பெரியவர். பிறகு தந்திரக்கதைகள், விலங்குக்கதைகள், மந்திரவாதிக்கதைகள், வேற்றுகிரகக்கதைகள், குள்ளமனிதர்களின் கதைகள் என ஒவ்வொன்றாக அடுத்தடுத்து சொன்னார். அவன் முகத்தின் சோகக்களை முக்கால்பங்குக்கும் மேல் சுவடற்றுப்போய் ஒருவித பிரகாசம் படியத் தொடங்கியது.
ஒருநாள் குரங்குகள் இடம்பெறும் ஒரு நகைச்சுவைக்கதையை சிறுவனுக்குச் சொன்னார் பெரியவர். சொல்லிக்கொண்டே குரங்குபோல
முகத்தைக் கோணலாக்கிக்கொண்டு, கைகால்களை அசைத்து சேட்டைகள் செய்து காட்டினார். சிறுவன் சட்டென்று சிரிக்கத் தொடங்கினான். இடைவிடாத சிரிப்பு. கண்களில் நீர் தளும்பி நிற்கும் அளவுக்கு சிரித்தான். அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் அந்தச் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு ஓடோடி வந்து வேடிக்கை பார்த்தார்கள். அவன் முகத்தின் களை ஒரே நொடியில் மாறிவிட்டது. அவன் உற்சாகம் மேலும்மேலும் பெருகும்பொருட்டு, நகைச்சுவையின் பங்கை கதையில் பெருக்கிக்கொண்டே சென்றார் பெரியவர். கூடவே சேட்டைகளையும் அதிகப்படுத்தினார். குரங்குக்கதையைத் தொடர்ந்து, கொக்குக்கதை, மீன்கதை, கழுதைக்கதை என பல கதைகளை அவனுக்குச் சொன்னார். சிரிப்பைத் தொடர்ந்து அவன் உற்சாகமாக அறைக்குள்ளும் வெளியேயும் நடமாடத் தொடங்கினான். அதைக் கண்ட செல்வந்தரும் மற்றவர்களும் அந்த வைத்தியரை கடவுளின் அவதாரம் என்று புகழ்ந்தார்கள்.
செல்வச்செழிப்பின் காரணமாக, தரையிலேயே கால்பட விடாமல் செல்லம் கொடுத்து ஒரு பொம்மையைப்போல வளர்த்ததுதான் அவன் நோய்க்கான காரணம் என்பது பெரியவருக்குப் புரிந்தது. ஆனால் சொல்லவில்லை. மருத்துவத்தின் பகுதியாக அவனை வீட்டுக்கு வெளியே காடு, மலையடிவாரம், ஆற்றாங்கரை, தோப்பு என பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். போகும் இடங்களிலெல்லாம் உட்காரவைத்து, சிரிக்கச்சிரிக்க அவனுக்கு நகைச்சுவைக் கதைகள் சொன்னார். அடுத்து சில நாட்களிலேயே அவன் மற்ற சிறுவர்களைப்போல எழுந்து நடமாடத் தொடங்கினான். சிறுவன் சிரிப்பதைப் பார்த்து, அவன் பெற்றோர்களும் அந்த வீட்டில் இருந்தவர்களும் சிரிக்கத் தொடங்கினார்கள். பல ஆண்டுகளாக சிரிப்பு இல்லாமலேயே வாழ்ந்த வீட்டில் முதன்முதாலக சிரிப்புச்சத்தம் கேட்டது. தலைச்சுமையை இறக்கிவைத்ததுபோல எல்லோரும் நிம்மதியாக உணர்ந்தார்கள். செல்வந்தர் தகுந்த வெகுமதிகளைக் கொடுத்து பெரியவரைக் கெளரவித்து அனுப்பிவைத்தார். போகும்போது, செல்வந்தரை தனியே அழைத்த பெரியவர் இவ்வளவு காலம் சிறுவனுக்கு மருந்து எனக் கொடுத்ததெல்லாம் துளசிதீர்த்தம் மட்டுமே என்றும் சிரிப்புதான் மாமருந்தாக இருந்து சிறுவனை இயல்பான நிலைக்கு மீட்டது என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்.
சிரிப்பதுபோல இயற்கையான மருந்து உலகத்தில் வேறெதுவும் இல்லை என்பதற்காக இந்தக் கதையைச் சொல்வதுண்டு. இது எனக்கு மிகவும் பிடித்தமான கதை. எங்கள் வீட்டில் யாராவது உம்மென்று இருந்தால் போதும், மெதுவாக அருகில் சென்று ”ஒரு கதை சொல்லட்டுமா?” என்று தொடங்கி இக்கதையைச் சொல்லிச் சிரிக்கவைத்துவிடுவேன். “இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம கதை கதைன்னு அலையறான்” என்று வீட்டில் சொல்லப்படும் சொற்களை ஒருபோதும் நான் பெரிதாக நினைப்பதில்லை. அதையும் ஒரு சிரிப்பின் வழியாகவே கடந்துவிடுவேன்.
சிரிக்கச்சிரிக்க கதைசொல்வதும் கதை எழுதுவதும் மிகப்பெரிய கலை. அதற்கென ஒரு மன அமைப்பு வேண்டும். தமிழ்ச்சூழலில் பொதுவாக கிண்டல் செய்வதையும் வசைகளை வண்டிவண்டியாகக் கொட்டுவதையும் மலினப்படுத்தி அடிப்பதையும், உடல் ஊனங்களைச் சுட்டிக்காட்டிப் பேசுவதையும்தான் நகைச்சுவை என்ற எண்ணம் படிந்துவிட்டது. உண்மை அதுவல்ல. தரமான வகையில் வாழ்க்கைச்சம்பவங்களை நகைச்சுவை பொங்கக் கோர்வையாக்கி வழங்குவதுதான் நகைச்சுவை. அந்த வகையில் மிகச்சிறந்த நகைச்சுவைப் படைப்புகளை வழங்கிய முன்னோடிப் படைப்பாளியாக பம்மல் சம்பந்தம் அவர்களைச் சொல்லலாம். நாடகங்களுக்கு மட்டுமல்ல, நகைச்சுவைக்கதைகளுக்கும் அவரை ஒரு சிறந்த முன்னோடி என்றே சொல்லலாம்.
பற்பல தளங்களில் நகைச்சுவை படிந்திருக்கும் அம்சங்களை தம் கட்டுரைகளில் முன்வைத்திருக்கிறார் பம்மல் சம்பந்தம். இடத்துக்கும் பெயருக்கும் உள்ள முரண்களைத் தொகுத்தபடி செல்கிறது ஒரு கட்டுரை. ஆத்தி சூடி வரிகளை விபரீதமாக பதம் பிரித்து விளக்கங்களைத் தொகுத்தபடி நகர்கிறது இன்னொரு கட்டுரை. ஒரு விலை மலிவான ஒரு பயணச்சீட்டை வைத்துக்கொண்டு செய்யப்பட்ட ஒரு ரயில்பயண அனுபவங்களை முன்வைக்கிறது ஒரு கட்டுரை. ஒரு மருத்துவமனை அனுபவம், ஒரு நீதிமன்ற அனுபவம், சகுனம் பார்த்த அனுபவம் என ஒவ்வொன்றிலுமுள்ள நகைச்சுவை அம்சங்களையெல்லாம் பார்த்துப்பார்த்து முன்வைக்கப்பட்டுள்ளன. நம்மைச்
சுற்றி நிகழ்கிற சம்பவங்களில் நகைச்சுவைக்குரிய சங்கதிகள் நிறைந்துள்ளன. ஆர்வமுள்ள கண்கள் மட்டுமே அவற்றைக் கண்டடைந்து மகிழ்ச்சியில் திளைக்கின்றன.
இத்தொகுதியைப் பிரித்துப் படிக்கத் தொடங்கிய முதல் பக்கத்திலிருந்தே என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சிறிது நேரம் கண்ணாடியைக் கழற்றிவிட்டுச் சிரித்தேன். ஜன்னலுக்கு அப்பால் தெரியும் மரங்களை வேடிக்கை பார்த்தபடி சிரித்தேன். விழியோரம் தளும்பும் நீரை விரல்களால் தொட்டுச் சுண்டியபடி சிரித்தேன். படித்த சம்பவத்தை ஒரு
காட்சியாக மாற்றி மனத்துக்குள்ளேயே நகர்த்திப் பார்த்து இடைவிடாமல் சிரித்தேன். கடைசிப்பக்கம்வரை சிரித்துக்கொண்டே இருந்தேன். அக்கணங்களில் என் மனம் எடையற்ற இறகுபோல மிதந்தபடியே இருந்தது. அபூர்வமான பொற்கணங்கள் அவை. அவருடைய கொள்ளுப்பேரனாகவோ அல்லது எள்ளுப்பேரனாகவோ, அவருக்கு அருகில் அமர்ந்து, அவரே படிக்கப்படிக்க சிரித்துக்கொண்டே கதைகேட்பதுபோல இருக்கிறது.
( சந்தியா பதிப்பகம் வழியாக வெளிவந்திருக்கும் பம்மல் சம்பந்தம் அவர்களுடைய ’ஹாஸ்யக்கதைகள்’ தொகுபுக்காக எழுதப்பட்ட முன்னுரை.)