மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் பிறந்திருந்தால் மதுரைவீரன், தேசிங்குராஜா, கட்டபொம்மன் போல மக்களின் வாய்வழிப்பாடல்களிலும் கதைகளிலும் இடம்பெற்றிருக்கக்கூடிய மாபெரும் ஆளுமையாக வ.வே.சு.ஐயர் விளங்கியிருக்கக்கூடும். அதற்கு முற்றிலும் தகுதியானவராகவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. எங்கள் பள்ளிக்கூட நாட்களில் தேசவிடுதலைப் போராட்டவீரர்களைப்பற்றி உணர்ச்சியும் நெகிழ்ச்சியுமான குரலில் எங்களுக்கு எடுத்துச் சொன்ன கதைநேர ஆசிரியர்தான் முதன்முதலாக எங்களுக்கு வ.வே.சு.ஐயரைப்பற்றிச் சொன்னார். அவர் சொன்ன பல தகவல்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையை சிறையில் அடைத்து செக்கிழுக்கவைத்த ஆங்கிலேய கலெக்டர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிப்பயிற்சி கொடுத்தவர் வ.வே.சு.ஐயர் என்கிற தகவல் எங்கள் இளம்நெஞ்சில் பசுமரத்தாணிபோலப் பதிந்துவிட்டது. அப்போதெல்லாம் அவர் பெயரைக்கூட எங்களால் சரியாக உச்சரிக்கத் தெரியாது. பாலாஜி ஐயர், மகாலிங்கம் ஐயர் என்பதுபோல வாவேசு ஐயர் என்றுதான் வெகுகாலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் அது வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய
ஐயர் என்கிற பெயரின் முதலெழுத்துகள் கூடி உருவான பெயர் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
வ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்துகொள்ளமுடிந்தது. ஒரு பிரயாணக்கப்பலில் “நீங்கள்தான் வ.வே.சு.ஐயரா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் சாமர்த்தியமாக “இல்லை. நான் வீர்விக்ரம் சிங்” என்று தன்னை பஞ்சாபிக்காரராக துணிச்சலோடு அறிமுகப்படுத்திக்கொண்டு தப்பித்தவர் என்பது ஒரு தகவல். காந்தியைப்போலவே வழக்கறிஞர் பட்டம் பெற லண்டன் சென்று படித்துவிட்டு, பட்டமளிப்புவிழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற விதியின்மீது விருப்பமில்லாத காரணத்தால் பட்டம் பெறாமலேயே விட்டுவிட்டார் என்பது இன்னொரு தகவல். கைது செய்ய நினைத்த லண்டன் காவல்துறையினரிடமிருந்து தப்பித்து வெவ்வேறு மாறுவேடங்களிலும் வெவ்வேறு பெயர்களிலும் பிரான்சு,
கொழும்பு என மாறிமாறிப் பிரயாணம் செய்து இறுதியில் புதுச்சேரியில் தஞ்சமடைந்தார் என்பது மற்றுமொரு தகவல். சொந்தவாழ்வைவிட தேசநலமே பெரிதென சுதந்திர தாகத்தோடு, பாரதியார் எழுதிய ’இந்தியா’ ஏட்டிலேயே லண்டன் செய்திகளை பத்திகளாக அந்தக் காலத்திலேயே எழுதிப் பதிவுசெய்தவர் என்பது பிறிதொரு தகவல். லண்டன் வாசத்தின்போது, பிரிட்டிஷ் படையுடன் போரிட்டு வென்று இந்தியாவை விடுதலை செய்யவேண்டும் என்று வினாயக் சாவர்க்கருடன் இணைந்து கனவு கண்டவர் எனறபோதும், இந்தியாவுக்குத் திரும்பிவந்து காந்தியைச் சந்தித்த கணத்தில் மனம் தெளிந்து உயர்வான அகிம்சைவழியில் தன் பயணத்தை வகுத்துக்கொண்டவர் என்பது மேலுமொரு தகவல். வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்த நாளந்தா, காஞ்சி பல்கலைக்கழகத்தைப்போல மிகச்சிறந்த ஒரு வாழ்க்கைப்பயிற்சி நிலையமாக ஒரு குருகுலத்தை கட்டியெழுப்ப கனவு கண்டவர் என்பது இன்னொரு தகவல். சிறுகதை வடிவத்தை தமிழ்மொழிக்கு அறிமுகப்படுத்தியவர் என்பதும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்பதும் கம்பராயணத்தைப்பற்றி ஆய்வுநூலொன்றை ஆங்கிலத்தில் எழுதியவர் என்பதும் இன்னும் சில கூடுதல் தகவல்கள். இப்படி ஒன்றை அடுத்து ஒன்றாக, தெரிந்துகொண்ட தகவல்கள் ஏராளம். அவரைப்பற்றி புதியபுதிய தகவல்கள் தெரியவரும்போதெல்லாம் நான் அடையும் மனஎழுச்சிக்கு அளவே
இல்லை.
வ.வே.சு.ஐயரைப்பற்றி தி.சே.செள.ராஜன் ஓர் அறிமுகநூலை எழுதியிருக்கிறார் என்று தகவலளவில் தெரியுமே தவிர, அதைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. தி.சே.செள.ராஜன் எழுதிய தன்வரலாற்று நூலான ‘நினைவு அலைகளைப் படிப்பதற்கே நான் கால் நூற்றாண்டு காலம் காத்திருக்கவேண்டியிருந்தது. வ.வே.சு.ஐயரைப்பற்றி அவர் எழுதிய புத்தகத்தைத் தேடியெடுக்க இன்னும் சிறிது காலம் தேடிக்கொண்டிருக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். அதற்கான தேவையே இல்லாமல் நண்பர் நடராஜன் அதைத் தேடியெடுத்து வந்து கொடுத்தார். இப்படி நான் படிக்க நினைக்கிற பல பழைய புத்தகங்களை எனக்காகத் தேடியெடுத்துத் தருகிற நண்பர்களைப் பெற்றது நான் பெற்ற பெறும்பேறு. குற்றாலம் தர்மராஜன், சிபிச்செல்வன், ஸ்ரீராம், சீனிவாசன் ஆகியோர் செய்த உதவிகளை ஒருபோதும் மறக்கமுடியாது. இந்த வரிசையில் இப்போது நடராஜன் நான் படிக்க நினைக்கும் புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுக்கிறார். இன்று ராஜனின் புத்தகம் மறுபிரசுரம் காண்பதும், அந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதுவதும் சந்தர்ப்பவசத்தால் நேர்ந்த ஒற்றுமை.
வ.வே.சு.ஐயர் வழக்கறிஞர் பட்டத்துக்காகப் படித்துக்கொண்டிருந்த லண்டனில் மருத்துவர் பட்டம் பெற படிக்கச் சென்றவர் ராஜன். லண்டனில் இயங்கிவந்த இந்தியா விடுதியில் ஒன்றாக வசித்தவர்கள். இருவரும் திருச்சி மாநகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தற்செயலான ஒற்றுமை. இருவருமே தேச விடுதலைக்கு தன்னாலான சேவைகளைச் செய்யவேண்டும் என்கிற ஒத்த கருத்துள்ளவர்களாக இருந்தார்கள் என்பதுதான் முக்கியமான அம்சம். இருவரும் சாவர்க்கரின் தீவிரவாதப் புள்ளியில் தொடங்கி காந்தியின் அகிம்சை வழியில் பயணம் செய்தவர்கள். தன் நண்பரின் மறைவையொட்டி எழுந்த துயரின் பாரத்தைப் போக்கிக்கொள்ளும் விதமாக, அவர் தொடர்பான சில சம்பவங்களை ராஜன் அவர்கள் மனத்துக்குள்ளேயே அசைபோட்டுப் பார்த்திருக்கக்கூடும். அது ஒரு நல்ல வடிகால் என்று தோன்றியதும் அதை எழுதிப் பார்த்திருக்கக்கூடும் என்றும் அதையே பிற்காலத்தில் கலைமகள் இதழில் பிரசுரத்துக்குக் கொடுத்திருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது. இந்த நூலின் அமைப்பு அப்படி ஒரு ஊகத்துக்கு இடமளிப்பதாக உள்ளது. மரபான தொடக்கம் எதுவும் இல்லாமல், சட்டென்று முதல் அத்தியாயமே லண்டனில்தான் தொடங்குகிறது. வேறு
நூல்கள் வழியாக நமக்குத் தெரிந்த பல தகவல்களை, இந்த நூலோடு இணைத்து விரிவாக்கிக்கொள்ளும்போது வ.வே.சு.வின் ஆளுமை மென்மேலும் துலக்கம் பெறுகிறது.
44 வயது என்பது மரணமெய்துவதற்கான வயதே அல்ல. ஆனால் மரணம் வ.வே.சு.ஐயரை அள்ளிக்கொண்டு போய்விட்டது. அவருடைய நண்பரான பாரதியாரை நாற்பது வயதிலேயே அள்ளிக்கொண்டுபோன அதே மரணம். அர்ப்பணிப்புமிகுந்த தம் வாழ்க்கைமுறைகளால் இருவருமே வரலாறாக மாறிவிட்டார்கள். வரலாறு வகுத்த பாதையில் வாழ்வது ஒருவிதம். பாதையை வகுத்து வரலாறாகவே வாழ்வது இன்னொரு விதம். வ.வே.சு.ஐயர் வரலாறாக வாழ்ந்த மாமனிதர்.
( வ.வே.சு. ஐயர் அவர்களைப்பற்றி தி.சே.செள.ராஜன் அவர்களால் எழுதப்பட்ட நூல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பாக சந்தியா பதிப்பகம் வழியாக வெளிவந்திருக்கும் புதிய பதிப்புக்கு எழுதப்பட்ட புதிய முன்னுரை )