கோவில்
வழிபாட்டையும் வைதிகச்சடங்கு முறைகளையும்
சாராத ஒரு புதுவிதமான
வழிபாட்டுமுறையையும் பக்தி
முறையையும் இந்த உலகுக்களித்தவர் பசவண்ணர். ஒவ்வொரு
பக்தனும் தன் உடலையே
கோவிலாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது
அவர் வழி. கொல்லாமை,
பொய்சொல்லாமை, தீய செயல்களில்
ஈடுபடாமை போன்ற பழக்கவழக்கங்களால் தம்மைத்தாமே தூய்மை
செய்துகொள்ளும் முறைகளை இடைவிடாமல்
பயிற்சி செய்யவேண்டும். தன்னை
சிவபக்தன் என இந்த
உலகுக்கு உணர்த்தும் விதமாக
மிகச்சிறிய லிங்கமொன்றை எப்போதும்
அணிந்திருக்கவேண்டும். இடைவிடாமல் இப்பயிற்சிகளைப் பின்பற்றும்போது, சாதி
வேறுபாடுகளையும் பால்
வேறுபாடுகளையும் கடந்து
ஒவ்வொரு பக்தனும் சிவனுக்கு
அருகில் இருக்கும் உணர்வைப்
பெறமுடியும். அவன் உள்ளமும்
உடலும் சிவன் உறையும்
இடமாக மாற்றமடையும். இத்தகு
கொள்கைகளின் அடிப்படையில் புதியதொரு
சமுதாயத்தை உருவாக்க முயற்சி
செய்தவர் பசவண்ணர்.
பசவண்ணர்
பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
வடகன்னடப் பகுதியைச் சேர்ந்த
பாகேவாடி என்னும் ஊரில்
ஒரு பிராமணக்குடும்பத்தில் பிறந்தார்.
மிகச்சிறிய வயதிலேயே மற்றவர்கள்
கடைபிடித்து வந்த பக்தி
நெறிகளையும் கட்டுப்பாடுகளையும் அவர்
மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.
அதனால் தம் இல்லத்தைத்
துறந்து கூடலசங்கம என்னும்
இடத்தில் வசிக்கத் தொடங்கினார்.
அவருடைய பக்தி, ஒழுக்கம்,
சிந்தனை ஆகியவற்றைக் கண்ட
அத்தலத்து அதிகாரி அவருக்கு
அந்நகரத்தில் உள்ள சங்கமேஸ்வரனின் ஆலயத்தில் இடமளித்தார்.
பிறகு அங்கிருந்து பிஜ்ஜளன்
ஆட்சி செய்துவந்த கல்யாண
தேசத்துக்குச் சென்றார். தொடக்கத்தில்
அவர் அரண்மனையில் மிகச்சிறிய
பதவியையே ஏற்றிருந்தார். பிறகு
தம் அறிவாற்றலால் உயர்பதவியை
அடைந்தார்.
பசவண்ணர் அத்தேசத்தில் அனுபவமண்டபம் என்னும் அமைப்பை முதன்முதலாக
உருவாக்கினார். சாதிவேறுபாடின்றி, ஊர்வேறுபாடின்றி பொதுமக்கள் அனைவரும் கூடி தமக்குள் உரையாடிக்கொள்ளும்
களமாகவும் தம் ஐயங்களை முன்வைத்து விவாதித்துத் தெளிவடையும் மேடையாகவும்
அனுபவமண்டபம் அமைந்தது. எல்லோருக்கும் புரியும் வகையில்
இறைவனைப் போற்றிப் புகழும் பாடல்களையும் சீர்திருத்தக்கருத்துகளைக் கொண்ட
பாடல்களையும் அவர் கன்னட மொழியில்
எழுதினார். அவருடைய பக்தி நெறிக்கொள்கைகளால்
ஈர்க்கப்பட்ட பலரும் அவருக்காகவே வெளிநாடுகளிலிருந்து கல்யாண தேசத்துக்குக்
குடியேறி வாழத் தொடங்கினார்கள். ’செய்யும் தொழிலில் ஒருவன்
காட்டும் சிரத்தையென்பது கைலாய வழிபாட்டுக்கு இணையானது’ என்னும்
அவருடைய கருத்து எங்கெங்கும் வேகமாகப் பரவி அவருக்குப் புகழைச் சேர்த்தது. சாதி வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் சமமாக நடத்திய விதமும் முதன்முதலாக
தமக்குக் கிட்டிய சமூக மதிப்பை நேரடியாக உணர்ந்த மகிழ்ச்சியும் மக்களை அவரை
நோக்கிச் செலுத்தியது. சமயத்துறையில் மக்களாட்சியை
ஏற்படுத்தும் முயற்சியாக அது அமைந்தது. ஆனால் மரபுவாதிகள்
இச்சமுதாயப் புரட்சியை எதிர்த்து ரகசியமாக மக்களிடையே அவநம்பிக்கையை உருவாக்கி
கொந்தளிப்பை உண்டாக்கினர்.
ஓர் அணியினர் வன்முறையை கையிலெடுத்துக்கொண்டதும் மாற்று அணியினரும் வன்முறையில் ஈடுபட்டனர். அகிம்சையாளரான பசவண்ணரின் அறிவுரைகளை மக்கள் புறக்கணிக்கத்
தொடங்கியதும் கல்யாண தேசத்தில் தொடர்ந்து
பணியாற்ற விருப்பமில்லாமல் அங்கிருந்து வெளியேறினார். அத்துடன்
அவருடைய வாழ்க்கை முற்றுப் பெற்றுவிடுகிறது. கூடலசங்கமத்தில்
அவர் சங்கமநாதனோடு ஐக்கியமாகிவிட்டதாக ஒரு நம்பிக்கை உண்டு. பசவண்ணரின்
வாழ்க்கைக்காலம் மிகக்குறுகியதென்றபோதும் அவர் ஈட்டிய பேரும் புகழும் ஈடு
இணையற்றவை.
பசவண்ணருக்கு ‘பக்திக் கருவூலம்’ என்றொரு பட்டப்பெயர் உண்டு. அவர் அடக்கத்தின்
கருவூலமாகவும் திகழ்ந்தார். சரணர் சமூகத்தில் மிகவும்
உயர்ந்த இடத்தைப் பெற்று உயர்ந்த
மதிப்போடு வாழ்ந்து வந்தாலும் ‘என்னைவிட சிறியவர்கள் இல்லை’
என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எளிமையாகவே வாழ்ந்தார். அவருடைய எளிய வஞ்சனையற்ற மனப்போக்கை அவருடைய வசனங்கள் தெளிவாக
எடுத்துரைக்கின்றன. இரக்கமே அறத்தின் அடிப்படை என்பதை
எடுத்துரைத்த அவர் மனிதகுலத்தை ஆழ்ந்து நேசித்தார். எல்லா
உயிர்களும் மேன்மை பெறவேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு இருந்தது. ஒருவன் எப்படிப்பட்டவனாக இருப்பினும் உடலை வருத்தி உழைத்து, அந்த உழைப்பினால் கிட்டும் ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு அவன் தன்
வாழ்க்கையை நடத்தவேண்டும் என்றும் சாதாரண வாழ்க்கையை நடத்தி எஞ்சிய
நேரத்தையெல்லாம் இறைப்பணியில் ஈடுபடவேண்டும் என்றும் கூறும் அவருடைய ’உடலுழைப்புக்கொள்கை’ புதியதொரு சமுதாயப் புரட்சிக்கு
அடிப்படையாக இருந்தது. உலக வாழ்வில் ஆசை, கவர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்பதை எடுத்துரைத்து, அதன்படியே அவர் வாழ்ந்துவந்தார்.
எவ்விதமான நற்பழக்கமும் நெறிமுறைகளும் இல்லாமல்
வாழ்கிறவர்களை கடுமையாகக் கண்டிக்கவும் அவர் தயங்கவில்லை. எல்லாவற்றையும்
இறைவனுக்கே வழங்கி, அவனருள் ஒன்றையே வேண்டும் நோக்கம்
கொண்டவர் பசவண்ணர்.
புதியவிதமான சமயப்பார்வையை முன்வைக்கும் அவருடைய வாய்மொழிக்கூற்றுகள் அவர்
நோக்கத்துக்குச் சான்றாக விளங்குகின்றன. அவர்
வாழ்ந்து மறைந்த நூறாண்டுகளுக்குப் பிறகே அவை சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டன.
அவருடைய வசனங்களின் எண்ணிக்கை 1250. எழுபதுகளில்
எஸ்.எஸ்.மாளவாட என்னும் கன்னட அறிஞர்
அவ்வசனத்தொகுப்பிலிருந்து 500 வசனங்களை மட்டும். தேர்ந்தெடுத்து 1962ல் ஒரு நூலாக வெளியிட்டார்.
அதன் பெருமை கருதி 1972 ஆம் ஆண்டில் அதைத்
தமிழில் மொழிபெயர்த்தவர் சித்தலிங்கையா. (தமிழில் ஆழ்ந்த
பற்றுகொண்ட சித்தலிங்கையா பசவண்ணர் என்னும் பெயரை வசவண்ணர் என்று எழுதினார்.)
தேசிய மொழிபெயர்ப்பு நிறுவனமாக சாகித்திய அகாதெமி ‘வசவண்ணர் வாக்கமுது’ என்னும் தலைப்பில் அதே
ஆண்டில் நூலாக வெளியிட்டது. இத்தொகுப்பு தமிழுக்குக் கிட்டிய
ஓர் அருங்கொடை.
இறைவனிடம் தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொள்ளும் பக்தி நெறிக்கே பசவண்ணர்
முதலிடம் அளிக்கிறார். சாத்திரம், புராணம்,
வேதாந்தம், இசை, தத்துவம்
முதலியவற்றை விவாதிப்பதால் மட்டும் பயன் விளைந்துவிடாது. மாறாக
மனம் கரைந்து இறைவனைப்பற்றிய தியானத்திலேயே ஆழ்ந்து மூழ்கிவிடவேண்டும். பசவண்ணர் சுட்டும் பக்திநெறி அடிப்படையில் மிக எளிமையானதே. ஆனால் அதற்கு ஆழ்ந்த ஒருமனப்பாடு தேவை. அலைபாயும்
மனத்துடன் அதில் ஈடுபட முடிவதில்லை. பசி, தாகம், தூக்கம், காமம்,
கோபம், பேராசை, மோகம்
முதலியவற்றை மறந்து பக்திநெறியில் மூழ்கியிருக்க வேண்டும். அதற்கு
ஆழ்ந்த அக்கறை அவசியம். எதையும் மன ஒருமையின்றிச் செய்வதும்
கடமைக்காகச் செய்வதும் பயனற்றது. வெளிவேடத்துக்கென செய்யும்
அன்பால் ஒருபோதும் இறையருள் ஏற்படுவதில்லை. பாறை எத்தனை நாள்
தண்ணீரிலிருந்தாலும் மென்மையுறுவதில்லை. அதேபோல
ஒருமனப்பாடும் ஆர்வமுமற்ற பக்தியும் பயன்தருவதில்லை. இதுபோன்ற சிந்தனைத்துளிகள்
பசவண்ணரின் வசனங்களில் நிறைந்திருக்கின்றன. இவையனைத்தும்
ஒருவகையில் அவர் கட்டியெழுப்ப நினைத்த புதிய சமூகத்துக்கான அடித்தளக்கற்கள்.
பசவண்ணரின் 500 வசனங்களும் ஆன்மநிவேதனம், பக்தி, நேர்மை, தன்னம்பிக்கை,
மனக்குரங்காட்டம்- தூய்மை செய்தல், தன்னையிழத்தல் போன்ற இருபது வெவ்வேறு தலைப்புகளில் ’வசவண்ணர்
வாக்கமுது’ நூலில் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன.
’வழி தவறிய பசு’ என்னும் சொல்லை தன்
வசனங்களில் அடிக்கடி பயன்படுத்துகிறார் பசவண்ணர்.
பாவம், பசு சேற்றில் விழுந்தால்
உதைத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி ஏது?
சிவசிவா, அழிந்தேன் அழிந்தேன் ஐயா
உன்னருகில் எனை ஈர்த்துக்கொள்வாய்
பசு நான், பசுபதி நீ
திருட்டுமாடு என்றெனைப் பிடித்து அடிப்பதன்முன்-
உரிமையாளனான உனை வைவதன்முன் காப்பாய்
கூடலசங்கம தேவா.
இறைவனின் அருளுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வது என்பது முதல் கடமை. கிட்டிய அருள் நிரந்தரமாக என்றென்றும் தன்னைக் காக்கும்
காவலரணாக அமைவதற்கு இடையறாத கடமையுணர்ச்சியுடன் வாழ்வது என்பது இரண்டாவது கடமை.
இரு கடமைகளிலிருந்தும் ஒருகணம் கூட பிறழாத வாழ்வை ஒவ்வொருவரும் வாழ
வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையை மட்டுமே பக்தியுள்ள
வாழ்க்கை என்று சொல்லமுடியும். வழிபாட்டுமுறையாக இருந்த
பக்தியை வாழ்க்கைமுறையாக விரிவாக்குகிறார் பசவண்ணர். அதன்
மூலமாக மரபான சடங்குப்பின்னணியிலிருந்து மானுடன் வெளியேறிவரும் வழியை
உருவாக்குகிறார். தனது பக்தியில் ஒரே ஒரு விழுக்காடு
பிறழ்ந்தாலும்கூட அவப்பெயருக்கு இடமளித்ததுபோலாகிவிடும். நல்ல
பசுவுக்கு திருட்டுப்பசு பட்டம் வந்து சேர்வதுபோல.
தன்னைத்தானே தகுதிப்படுத்திக்கொள்ளும் பக்திவாழ்க்கை என்பது அவ்வளவு
எளிதானதல்ல. ஒவ்வொரு கட்டமாக பலவிதமான சோதனைகளைக்
கடந்தபிறகே, அந்த நிலையை ஒருவர் எட்டமுடியும். அந்த அனுபவத்தையும் வசனமாக்கியுள்ளார் பசவண்ணர்.
’நாத்திகம் விடும்வரை பக்தனென்றால் எவ்வாறு?
பிறர் பொருள் பிறர்மனைநாட்டத்தைத்
துறக்காதவரையில் மகேஸ்வரனென்பது எவ்வாறு?
பழவினை அழியும்முன்பு பிரசாதியாவது எங்ஙனம்?
உயிர் இறைவனோடு ஒன்றாதபோது பிராணலிங்கியாவது எங்ஙனம்?
ஐம்பொறிகள் அடங்காதபோது சரணனாவது எங்ஙனம்?
இவ்விரதங்களும் நியமங்களும் நான் அறியேன்
நடக்காதது நடக்கும் இக்கால இயல்பும் நானறியேன்
உன்னடியாரைப்பற்றி நின்று அவர் தொண்டனாய்ப்
பணிபுரிவேன், கூடலசங்கம தேவா.’
ஒரு பக்தன் தன் பக்தியின் விளைவாக தன்னையே ஒரு நடமாடும் ஆலயமாக
மாற்றிக்கொள்ளமுடியும் என்பது பசவண்ணரின் நம்பிக்கை. தன்
வசனமொன்றில் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் அவர்.
’செல்வர் சிவன்கோவில் அமைத்தார்
நான் என்செய்வேன், ஏழையேன் ஐயா.
என் கால்களே தூண்கள், உடலே கோவில்
தலையே பொற்கலசம், கூடலசங்கம தேவா, கேள் ஐயா
அசையாப் பொருளுக்கு அழிவுண்டு,
அசையும் பொருளுக்கு இல்லை ஐயா.’
சடங்குகளாலான
பக்திமுறையிலிருந்து விடுபட்டு,
நெஞ்சில் நினைவுகளால் நிறைத்துக்கொள்ளும் பக்திமுறையை தன்
வசனங்களில் மீண்டும் மீண்டும்
வலியுறுத்துகிறார் பசவண்ணர்.
’எத்தனைநாள்
நீரில் கல் அமிழ்ந்திருந்தால் என்ன,
நனைந்து
மிருதுவாகவல்லதோ?
எத்தனைநாள்
உன்னை வழிபட்டால் என்ன
ஐயா
நெஞ்சில்
பக்தியில்லாதவரை?
பணங்காக்கும்
பூதமாய் மாறியதென் வாழ்வு
கூடலசங்கம
தேவா’
சரணர்கள்
அணிந்திருக்கும் லிங்கம்
அகந்தையிலிருந்து பக்தனைக்
காப்பாற்றக்கூடிய ஒரு
கவசமாக இருக்கவேண்டும் என்பது
பசவண்ணரின் எதிர்பார்ப்பு. பக்தன்
என்னும் அடையாளத்தால் கிட்டும்
புகழையும் பெயரையும் கூட
நாடாதவனாக வாழவேண்டும் என்பதுவும்
அவர் எதிர்பார்ப்பு. மேலும்
எவ்விதமான வேறுபாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் அனைவரிடமும்
ஒரேவிதமாகப் பேசிப் பழகுவதை
பக்தியின் ஓர் அடிப்படையாகவும் அவர் அறிவிக்கிறார்.
’காணும்
பக்தரையெல்லாம் வணங்குபவனே பக்தன்
இனிமையாய்ப்
பேசுவதே செபமாம்
இனிமையாய்ப்
பேசுவதே தவமாம்
பணிவும்
இனிமையும் சதாசிவன் விரும்புவன
இவையல்லவற்றை
விரும்பான் கூடலசங்கமன்’
என்பது
ஒரு முக்கியமான வசனம்.
பிறிதொரு வசனத்தில் இன்னும்
வெளிப்படையாகவே ஒரு பக்தன்
எப்படி இருக்கவேண்டும் என்பதைச்
சித்தரித்துக் காட்டுகிறார்.
’எங்கிருந்து
வந்தீர்கள்? நலமா?’ என்று
கேட்டால்
உங்கள்
செல்வம் சிதறிவிடுமா?
‘அமருங்கள்’
என்றால் நிலம் பாழாகுமோ?
வந்தவரோடு
பேசினால் தலையும் வயிறும்
வெடிக்குமோ?
ஏதும்
தாராவிடினும் குணமில்லாதிருப்பின்
அவர்
மூக்கை அறுத்தெரியாதிருப்பனோ,
கூடலசங்கம
தேவன்?’
பிறர்
செல்வத்தின் மீதான நாட்டம்,
பிறர் மனைநாட்டம் ஆகியவற்றைக்
கடுமையாக எதிர்க்கிறார் பசவண்ணர்.
உலகத்திலேயே இவையிரண்டையும் அஞ்சுதற்குரியவையாக அவர் சொல்கிறார்,
’பாய்ந்துவரும்
பாம்புக்கஞ்சேன், தீயின் நாவுக்கும்
அஞ்சேன்,
கூர்வாள்
முனைக்கும் அஞ்சேன், ஆயினும்
ஒன்றுக்கு
அஞ்சுவேன், ஒன்றுக்கு நடுங்குவேன்
பிறன்மனை,
பிறன்பொருள் எனும் சூதுக்கு
அஞ்சுவேன்
முன்பு,
அச்சமற்ற இராவணன் என்னவானான்?
அஞ்சுவேன்
ஐயா,
கூடலசங்கம தேவா.’
என்று
தன்னைப்பற்றிய ஒரு சித்திரத்தை
தெய்வத்திடமே வழங்குகிறார். அடுத்தவர்களிடம் உரையாடக் கிட்டும்
ஒவ்வொரு வாய்ப்பிலும் இதை
வெவ்வேறு சொற்களின் வழியாக
வலியுறுத்தியபடி இருக்கிறார்.
உவமைக்கதைகள்
வழியாக இக்கருத்துகளை முதலில்
கேட்பவர் மனத்தில் பதியும்வண்ணம்
எடுத்துரைக்கிறார் பசவண்ணர்.
‘துறையில்
நீராடும் அண்ணன்மாரே, துறையில்
நீராடும் தலைவர்களே
துறக்கவேண்டும்,
துறக்கவேண்டும்
பிறன்மனைக்கூடல் துறக்கவேண்டும்.
இவை
துறக்காமது போய் துறையில்
மூழ்கினால்
புண்ணியத்
துறையும் வற்றிப்போம், கூடலசங்கம
தேவா’
இப்படிப்பட்ட
குரல் எடுபடாதபோது, நேரடியாகவே
தன் கருத்தை முன்வைக்க
முற்படுகிறார் பசவண்ணர்.
‘கூடாது,
கூடாது, பக்தனுக்கு பிறன்மனை,
பிறன்பொருள்,
கூடாது,
கூடாது, காமுகனுக்கு பசுபதியின்
நோன்பு,
கூடாது,
கூடாது, பிறவிக் கடலில்
சுழல்பவனுக்கு
கூடலசங்கம
தேவனின் பிரசாதம் கூடாது’
என்று
உறுதியான குரலில் நேரடியாகவே
அறிவிக்கிறார்.
கொல்லாமை
வேண்டும், பிறன்மனை விழையாமை
வேண்டும், தீய செயல்களில்
ஈடுபடாமை வேண்டும் என்பதைப்போன்ற
நற்குணங்களின் தேவையை ஒரு
கோணத்தில் வலியுறுத்தும் பசவண்ணர்,
இன்னொரு கோணத்தில் அத்தகு
குணங்கள் உறையுமிடமாக தன்
வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்வதை ஒரு
பெருமையாகக்கூட யாரிடமும் சொல்லவோ,
காட்டிக்கொள்ளவோ கூடாது
என்பதையும் வலியுறுத்துகிறார். அதையும்
தன் வசனமொன்றில் வலியுறுத்துகிறார் அவர்.
’வேண்டும்,
சரணனுக்கு ‘பிறர்பொருள் வேண்டேன்’
என்ற பெருமை
வேண்டும்,
சரணனுக்கு ‘பிறன்மனை வேண்டேன்’
என்ற பெருமை
வேண்டும்,
சரணனுக்கு ‘இலிங்கஜங்கமம் ஒன்றே’
என்ற நம்பிக்கை
வேண்டும்
சரணனுக்கு ‘பிரசாதம் நிலையானது’
என்ற நம்பிக்கை
நம்பிக்கை
இல்லாதவரை விரும்பான் கூடலசங்கம
தேவன்’
மனம்
விரும்பும் பக்திக்கு தன்
எண்ணங்களையும் உடலையும் தகவமைத்துக்கொள்வதற்கு எதிராக மனத்தின்
மற்றொரு பகுதி வினையாற்றுவதைத் தடுப்பதும் அதைக்
கட்டுப்படுத்துவதும் மிகப்பெரிய
வேலை. அதைக் கிளைக்குக்
கிளை தாவும் குரங்கின்
செயல்பாடுகளுக்கு உவமைப்படுத்தி
வசனங்களைச் சொல்கிறார் பசவண்ணர்.
‘நானொன்று
நினைக்க தானொன்று நினைக்கும்
நான்
இப்பக்கம் இழுத்தால் தான்
அப்பக்கம் இழுக்கும்
தான்
வேறொன்றெண்ணி என்னை வருத்தும்’
என்று
மனம்நொந்து குறிப்பிடுகிறார்
‘பல்லக்கேறிய
நாயெனவே பழங்குணம் விடாது
தொடரும்
சுடுசுடு
இம்மனம் காமத்தை நாடிச்
செல்வது’
என்று
எச்சரிக்கை விடுத்தபடி இருக்கிறார்.
மனவருத்தத்தின் உச்சத்தில்
‘ஓணான்
வேலியைவிட்டு வராது, அதுபோன்றதென்
மனம்
நேரத்துக்கொரு
நிறமாய் மாறும் பச்சோந்தி
போன்றதென் மனம்
வெளவால்
வாழ்க்கை போன்றதென் மனம்
நள்ளிரவில்
எழுந்த குருடனுக்கு வாயில்
தாண்டியதும் விடிந்ததுபோல
இல்லாத
பக்தியை நான் விரும்பினால்
ஆகுமோ
கூடலசங்கம
தேவா?’
என்று
குறிப்பிடுகிறார்.
அகத்தூய்மையை
பக்தியின் இலக்கணமாக முன்வைக்கும்
பசவண்ணரின் வசனங்களில் சிகரமாகக்
கருதப்படும் வசனம் எவ்விதமான
ஒப்பனைவாக்கியங்களுமின்றி ஆழ்நெஞ்சிலிருந்து வெளிப்பட்ட சொற்களைப்போல
அமைந்திருக்கின்றன.
’திருடாதே,
கொலை செய்யாதே, பொய்யும்
சொல்லாதே
சினவாதே,
பிறரைக் கண்டு கடுகடுக்காதே
தன்னைப்
புகழாதே, பிறரைக் கண்டும்
புழுங்காதே
இவையே
எங்கள் கூடலசங்கம தேவனை
வசமாக்கும் வழியாகும்’