Home

Tuesday, 24 April 2018

புக்கில் அமைந்தின்று கொல்லோ?



இரண்டு மூன்று ஆண்டுகளாக எனக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை சிறுகச்சிறுகக் குறைந்து இப்போது ஒன்று அல்லது இரண்டு என தேங்கிவிட்டது. அவை கூட நண்பர்களிடமிருந்து வந்தவையாக அல்லாமல் ஏதோ நிறுவனங்களிடமிருந்து வந்த நினைவூட்டு மடல்களாகவே பல சமயங்களில் இருக்கும். சில நாட்களில் ஒன்று கூட வந்திருக்காது. மின்சாரமில்லாத நேரத்தில் அறையைத் திறந்துபார்த்ததுபோல இருக்கும். புதிய மடல்கள் எதுவுமற்ற அஞ்சல் பெட்டியின் வெறுமை முகத்தில் அறையும். அக்கணம் கவியும் தனிமையுணர்விலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல.

எனக்குத் தனிமை ஒன்றும் புதிய விஷயமல்ல. காலம் காலமாக என்னைத் தொடர்ந்துவரும் தனிமையின் இறுக்கத்திலிருந்து தப்பிக்க, இளமையில் எனக்கொரு எண்ணம் உதித்தது. தனிமையை ஒரு குழந்தைபோல ஆக்கி, அதை மடியிலிட்டு கொஞ்சத் தொடங்கினேன். என்னை இறுக்க நினைத்த தனிமையை நானே விரும்பித் தழுவிக்கொண்டேன். திகைத்துப்போன தனிமை அன்றுமுதல் என்னுடன் தோழைமையுடன் ஒட்டிக் கொண்டது. என் உளைச்சல்களிலிருந்து விடுபட்டெழ எழுத்தென்னும் நிழலடிக்கு என்னை அதுதான் மெளனமாக விரல்பற்றி அழைத்துவந்து சேர்த்தது. இலக்கியம் என்னும் திரையின் வழியாகக் காணக்கூடிய விரிந்த வானத்தையும் கடல்களையும் மலைகளையும் காடுகளையும் நதிகளையும் மனிதர்களையும் வாழ்க்கையையும் பார்க்க வைத்தது. ஒரு திருவிழாக் கூட்டத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் சிறுவனைப்போல என்னை அலையவைத்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.
காலடியில் விழும் நிழலைப்போல தனிமை எனக்களித்த மகிழ்ச்சியின் அடித்தளத்தில் ஒட்டியிருக்கும் துயரத்தை நான் மட்டுமே அறிவேன். அந்தத் துயரத்தை வெல்வதற்காகவே மீண்டும் மீண்டும் தனிமையை நாடி ஓடுகிறேன். அதன் இழைகளைப் பிரித்தெடுத்து எனக்குத் தேவையான மகிழ்ச்சியென்னும் ஆடையை விதவிதமாக நெய்துகொள்ள முயற்சி செய்கிறேன். மூச்சுமுட்ட நிற்க நேரும் ஒருசில கணங்களில் அந்தத் தனிமை நூறு கைகளுடனும் நூறு ஆயுதங்களோடும் விஸ்வரூபம் கொண்டு வழிமறித்து ஆர்ப்பரிப்பதைக் கண்டு திகைத்துவிடுகிறேன். ஒரு மோகினியென வழிகாட்டி அழைத்து வந்தவளே என்னை வீழ்த்திவிடக்கூடுமோ என்று குழம்புகிறேன்.  
என்னுடைய மனக்குறையை உள்ளூர உணர்ந்துகொண்டவனைப்போல ஒருநாள் திடுமென என்னுடைய இளம்பருவத்துத் தோழன் பழனி ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தான். அது ஓர் அதிசயமான நாள். அஞ்சல் கூட அல்ல. அது ஒரு படம் மட்டுமே. தன் கைப்பேசியின் வழியாக அவன் எடுத்த ஒரு பூசணிப்பூவின் படம். மார்கழி மாதம் தொடங்கிய நாள் அது. அழகாக மலர்ந்த அந்தப் பூவின் மஞ்சள் நிறத்தைப் பார்த்ததுமே என் மனமும் சட்டென்று மலர்ந்துவிட்டது. விசித்திரமான ஒரு துள்ளல். விலாப்புறத்தில் இறக்கைகள் முளைத்து வானை நோக்கித் தாவிப் பறக்கத் துடிப்பதுபோல ஓர் எழுச்சி. மிக அற்புதமான பொற்கணம் அது. ஒவ்வொரு நாளத்திலும் புதுவேகத்துடன் ரத்தம் பாய்ந்து செல்லும் அதிர்வை ஒவ்வொரு கணமும் உணர்ந்தபடியே இருந்தேன். நான் விழுந்துவிடாமல் இருக்கும் வகையில் என்னைப் பற்றி மீட்டெடுத்த ஆதரவுக் கரமென அப்பூவை நினைத்துக்கொண்டேன்.  அக்கணத்தில் என் அறை அற்புதமான ஓர் உலகெனத் தோன்றியது. என் மேசை, கதவு, ஜன்னல் திரைச்சீலை, பூந்தொட்டி எல்லாமே அழகு பொருந்தியவையாக மாறிவிட்டன. அந்தப் பூவைக் கண்டதால் பொங்கிய ஆனந்தம் மனத்தில் சூழ்ந்திருந்த வெறுமையை எங்கோ விரட்டிவிட்டது. அவனை உடனடியாக அழைத்து நன்றி சொல்லவேண்டும் எனத் தோன்றினாலும் நான் அவனை அழைக்கவில்லை. ஒரு பதில் மடல் மட்டும் அனுப்பியிருந்தேன்.
யாரோ அவன் மனத்தில் புகுந்து தூண்டிவிட்டதுபோல மறுநாளிலும் அவனிடமிருந்து வேறு சில பூக்களின் படங்கள் வந்தன. வெள்ளை, மஞ்சள், நீலம், சிவப்பு என வெவ்வேறு நிறங்களில் செம்பருத்திப்பூக்களின் படங்கள். அல்லிவட்டமும் புள்ளிவட்டமும் கூட துல்லியமாகத் தெரியும் வகையில் நேர்த்தியாக இருந்தன. காலை நேரத்தில் மின்னஞ்சல் பெட்டியைத் திறக்கும் தருணத்தை அந்தப் படங்கள் அற்புதமானவையாக மாற்றிவிட்ட அதிசயத்தை என்னால் உணரமுடிந்தது. அவனை அன்றும் நான் அழைக்கவில்லை. பதில் மட்டுமே விடுத்திருந்தேன்.
அடுத்த நாள் அவனிடமிருந்து பன்னீர் ரோஜாக்களின் படங்கள் வந்து சேர்ந்தன. அவற்றின் இதழ்களில் பனித்துளிகள் தேங்கி நிற்பதைப் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அன்றுதான் நான் அவனை அழைத்து தினம் வரும் பூக்களுக்காக முதன்முறையாக நன்றி சொன்னேன். அயல்நாட்டில் படிக்கும் மகனுடன் முகம்பார்த்தபடி தினமும் உரையாடும் வகையில் ஒரு புதிய கைப்பேசியை வாங்கியிருப்பதாகவும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் கேமிரா வழியாக மார்கழி நேரத்து அதிகாலை நடைப்பயிற்சியின்போது அப்படங்களை எடுத்ததாகச் சொன்னான். “உனக்கு புடிக்கும்ன்னு திடீர்னு தோணிச்சிடா, அதுக்கப்புறம் யோசிக்கவே இல்ல, உடனே அனுப்பி வச்சிட்டன்என்றான். என் காலை நேரத்தை உற்சாகமாக மாற்றும் அப்படங்களின் அற்புத ஆற்றலைக் குறிப்பிட்டு வெகுநேரம் பேசினேன். 
அதைத் தொடர்ந்து அவனிடமிருந்து ஒவ்வொரு நாளும் படங்கள் வரத் தொடங்கின. பூவரசம்பூ, மகிழம்பூ, ஊமத்தம்பூ, பரங்கிப்பூ, ரோஜாப்பூ, சாமந்திப்பூ, போகன்வில்லா என ஒரு பெரிய வரிசை. பசு, கன்று, எருமை, ஆடு, காகம், குயில், மைனா, புறா, அணில், சேவல் என மற்றொரு வரிசை. தும்பைச்செடி, தக்காளிச்செடி, முடக்கத்தான் கீரைக்கொடி, சூரியோதயம், பனைமரங்கள், பாளம்பாளமாக வெடித்துக் கிடக்கும் ஏரியின் தரை, சருகுகள், வாசல்களை அலங்கரித்திருக்கும் வண்ணக்கோலங்கள் என பிறிதொரு வரிசை. எங்கோ இருக்கும் என் கிராமத்தை, வேலிகளை, செடிகளை, கொடிகளை, சாலைகளை, தெருக்களை அவை நினைவூட்டிப் பரவசத்தைப் படரவைத்தன.
ஒரு மாதத்துக்கும் மேல் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த படங்கள் தெம்பூட்டும் உற்சாக ஊற்றுகளாக இருந்தன. ஒவ்வொரு நாளும் மின்னஞ்சல் பெட்டியைத் திறக்கும்போது ஒருவித எதிர்பார்ப்பில் என் மூச்சுத்துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அவன் அனுப்பிவைத்திருக்கும் படம் கணித்திரையில் விரிந்து படரும் கணத்தில் மனம் பூரித்துவிடும். சட்டென ஒரு சாரல் வீசியதுபோல உடலும் மனமும் குளிர்ந்துபோகும். பல கணங்கள் அப்படத்தை வைத்த கண்ணை எடுக்கமுடியாமல் பார்த்தபடியே இருப்பேன். அதன் வழியாக ஊற்றெடுக்கும் எண்ணங்களை ஒருபக்கம் மனம் பின்தொடர்ந்தபடியே இருக்கும். மறுபக்கம் என் தினசரி வேலைகளில் மூழ்கத் தொடங்கிவிடுவேன். எக்கணமும் விரித்தெடுத்துப் பார்க்கும் வகையில் அப்படத்தை மூடாமல் சுருட்டி கணிப்பொறியில் விளிம்பிலேயே வைத்திருப்பேன். தேவைப்படும் கணத்தில் அதைத் தொட்டால் போதும், உடனே அது மலர்ந்து விரிந்துவிடும்.
இன்றும் ஒரு படம் வந்திருந்தது. ஒரே ஒரு துண்டு வெண்மேகம். வெட்டவெளியான நீல வானத்தில் வழிதெரியாத குழந்தைபோல எங்கோ போய்க்கொண்டே இருக்கும் மேகம். மனம் போன போக்கில் எதையோ பாடியபடி செல்வதுபோலத் தோன்றியது. எங்கும் ஒலிக்காத அந்த இசையை என் ஆழ்மனம் உள்வாங்கி ஒலித்த விதம் ஆச்சரியமாக இருந்தது. அதில் திளைக்கத் தொடங்கி உறைந்திருந்த நிலையில் தற்செயலாக மனத்தில் காளிதாசனின் பெயர் எழுந்தது. அதைத் தொடர்ந்து மேகசந்தேஷத்தின் கவிதை வரிகள் மிதக்கத் தொடங்கின. அந்த மேகம் யாரோ ஒருவருடைய தூதுச்செய்தியை எடுத்துச் செல்கிறது என நினைத்துக்கொள்வது மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த மேகத்தையே கண்விலக்காமல் பார்த்தபடி இருந்தேன். தூதுச் செய்தியை அது மனத்திலேயே எண்ணங்களாக ஏந்திச் செல்கிறதா அல்லது எழுதியளிக்கப்பட்ட மடலை தன் இதயத்தோடு ஒட்டிவைத்துக்கொண்டு பறந்து செல்கிறதா என்று கேட்கத் தோன்றியது. இப்படி ஒரு தனிமையில் கடந்துபோகும் துண்டு மேகத்தின் காட்சிதான் காளிதாசனுக்கு அக்காவியத்தை எழுதத் தூண்டிய ஊற்றாக இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன்.
மாறிமாறி எழுந்த பரவசமான எண்ண அலைகள் ஓய்ந்த பொழுதில் அந்த மேகத்தை ஓர் இளைஞனாக, இளம்பெண்ணாக, முதியவராக உருமாற்றி விதவிதமான கற்பனைகளில் மூழ்கி அசைபோடத் தொடங்கினேன். எதைத் தேடி நகர்கிறது இந்தப் பயணம்? ஞானத்தையா? அடைக்கலத்தையா? அனுபவத்தையா?
படத்தின் மீது பதிந்த பார்வையை எடுக்கவே முடியவில்லை. ஒருகணம் அதை இறகுவிரித்துப் பறந்துசெல்லும் ஒரு பறவையாக உருவகிக்கத் தொடங்கினேன். கூட்டத்தைவிட்டு விலகிய பறவை என்ற சொல் எழுந்ததுமே குடம்பை தனித்தொழிய புள்பறந்தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு என்னும் திருக்குறளின் வரிகள் நினைவில் விரிந்தன. எந்தக் கூட்டைவிட்டுச் செல்கிறது இந்த வெண்மேகப்பறவை?  இன்னொரு கூடு அமையும் வரைக்கும் இப்படியே பறந்தலைந்தபடியே இருப்பதுதான் இதற்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையா? ஒருகணம் அம்மேகத்தோடு சேர்ந்து நானும் பறப்பதுபோல கற்பனை செய்துகொண்டேன். அது கடந்து செல்லும் தோப்புகளையும் நதிகளையும் நகரங்களையும் குன்றுகளையும் அதன் இறக்கையோடு ஒட்டியபடி நானும் கடந்துசென்றேன். புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு என்னும் மற்றொரு குறளும் நினைவில் படரத் தொடங்கியபோது என் உற்சாகம் சட்டென வடியத் தொடங்கியது. அந்த மேகம் உற்சாகத்தில் நீந்தும் உல்லாசப் பறவையல்ல, வாழ இடம்தேடும் பறவை என்று தோன்றியதும் அதன்மீது ஒரு பரிவு சுரந்தது.  அனைத்து எண்ணங்களும் விலகியோட, ஆதரவின்றி நின்றிருக்கும் அதன் தனிமை என்னைத் தாக்கியது. அது சுமந்துசெல்லும் துயரத்தையும் வலியையும் கூட என்னால் உணரமுடிந்தது. அந்தத் தனிமைப் புள்ளியை நான் தொட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் மனம் இத்தனை நூறு சொற்களை என்மீது குவிக்கிறதோ என்று தோன்றியது.
படத்திலிருந்து விழிகளை விலக்கவே முடியவில்லை. அதன் பிசிறுகள் அடர்ந்த விளிம்புகள் ஆடை குலைந்து தடுமாறி நடந்துபோகும் பித்தனென அதைக் கருத வைத்தது. அதன் மொழி புரியவில்லை. அதன் சைகையும் புரியவில்லை. அது எதையோ சொல்கிறது. எதையோ முன்வைக்கிறது. அது எது என்னும் கேள்வி முகத்தில் அறைவதுபோல இருந்தது.
அதற்குப் பிறகு அந்தப் படத்தை என்னால் தொடர்ந்து பார்க்கமுடியவில்லை. மூடிவைத்துவிட்டு எழுந்தேன். ஆனாலும் என் முன்னால் விஸ்வரூபம் கொண்டு அது மீண்டும் மீண்டும் நிற்பதுபோலவே இருந்தது. விலகிச் செல்லச் செல்ல இன்னும் நெருக்கம் கொண்டு வந்து நின்றது. என்னைத் தொட்டு இழுத்துச் செல்ல வந்ததைப்போல அருகில் நிற்பதை உணரமுடிந்தது. அந்தத் துயரம், வலி. முனகல், தவிப்பு அனைத்தும் என்னை வந்தடைந்தபடி இருந்தன.
அதன் தனிமையை யாருமே உணரப் போவதில்லை. ஆற்றங்கரையில் விரிப்பின் மீது கிடத்தப்பட்ட ஒரு குழந்தைபோல அது வானத்தைப் பார்த்தபடியே கிடக்கிறது. யாரும் நிமிர்ந்துகூட பார்க்காத வெட்டவெளியில் பாதைகளே அற்ற திசையில் அது அப்படியே இருக்கவேண்டியதுதான். அழுதாலும் புரண்டாலும் தொட்டெடுக்க யாருமே இல்லாத கொடுமைமிக்க தனிமை. இரக்கமுடன் நெருங்கி நிற்க யாருமற்ற உலகம். முழுமையான தனிமை. திசைமுழுதும் பரவி விரிந்த வானத்தின் காலடியில் தன்னையே அர்ப்பணித்தபடி காத்திருக்கிறது அது. அல்லது சென்றுகொண்டே இருக்கிறது. எந்த விசை அதற்கு நம்பிக்கையூட்டுகிறதோ? இரக்கத்தின் ஈரம் என்று அதன்மீது படியுமோ?
ஒரு வேலையில் பொருத்திக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் நான் முதன்முதலாக வீட்டைவிட்டுக் கிளம்பி முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த முதல் பயணத்தின் தூக்கமற்ற தனிமை சூழ்ந்த இரவை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. ஜன்னலுக்கு வெளியே தெரியும் வானத்தையே பார்த்தபடி விழித்திருந்தேன். கருமையிலிருந்து நீலம் வரைக்கும் அதன் நிறம் மாறும்  ஒவ்வொரு கணமும் அதன் மீதே பார்வையைப் பதித்திருந்தேன். ஏதோ ஒரு கணத்தில் அதற்கும் எனக்குமிடையில் இசைவான வகையில் ஒரு நட்பு உருவாகிவிட்டது. எனக்கும் அதற்குமிடையில் நிகழ்ந்த நீண்ட உரையாடல் பொழுது கழிவதையே உணரவிடாமல் செய்துவிட்டது. உன்னை நோக்கியே வந்துகொண்டிருக்கிறேன் என அதனிடம் மனமாரச் சொல்லத் தொடங்கிவிட்டேன். என்னைக் கைவிட்டுவிடாதே என்று உருக்கமுடன் கோரிக்கை வரிகளை முன்வைத்தபடி இருந்தது என் மனம். படிப்படியாக மனம் இளகத் தொடங்கிய தருணத்தில் பாரம் விலகி அமைதி பிறப்பதை உணர்ந்தேன். விடிந்த போது இன்னும் சூரியன் உதித்து வராத வானத்தில் ஒரு ஒற்றை மேகம் தவழ்ந்து செல்வதைப் பார்த்தேன். எவ்வளவு அழகான மேகம். எவ்வளவு அழகான தூய வென்மை. ஒரு கணம் அது நான் நான் என மனம் கூவியது. ஓயாத பயணமே உன் வழி என அது என்னிடம் சொல்லாமல் சொல்வதை அறிந்துகொண்டேன். எனக்கான ஞானத்தை, வழியை அக்கணம் வழங்கியதாகவே உணர்ந்தபோது மனம் சிலிர்த்தடங்கியது.
அறையை விட்டு வேகமாக வெளியேறி, எங்கள் அலுவலகத்துக்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டேன். எங்கெங்கும் மனிதர்கள். வாகனங்கள். இரைச்சல்கள்.  பத்துப் பதினைந்து நிமிடங்கள் சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்தபடியே பொழுதை ஓட்டினேன். ஒரு கணம் சற்றே ஆறுதலாக இருந்தது. எல்லாமே சிறிது நேரம்தான். உண்மையில் அந்த இரைச்சல்களில் மனம் பதியவே இல்லை என்பதை தாமதமாகவே உணர்ந்தேன். பெருங்கூட்டத்திலும் தனியன் நீ என்று யாரோ சொல்வதுபோல இருந்தது. விலகியோடிய பாசி மெல்ல மெல்லப் பரவி குளம்முழுதும் விரிவதுபோல தனிமையின் சித்திரம் மறுபடியும் கண்முன்னால் விரிந்தது.
அந்த மேகத்தின் வெண்மையை என் அகக்கண்களால் துல்லியமாகப் பார்க்க முடிந்தது. என்னையே உருக்கி வார்த்ததுபோல இருந்தது அதன் கோலம். மெதுவாக நடந்து அலுவலகத்துக்குத் திரும்பி கணிப்பொறியைத் தொட்டேன். சட்டென திரை விழித்தெழுந்து படத்தை ஒளிரவைத்தது. ஒரு கணம் கண்ணாடியின் முன்னால் நின்று என்னை நானே பார்த்துக்கொள்வதுபோல இருந்தது.
பரபரப்பினால் நேரக்கூடுவது ஒன்றுமில்லை என்பதை மனம் உணர்ந்தே இருந்தது. அங்கிருந்து தப்பி ஓடுவதன் மூலம் எந்தப் பிரச்சினையும் முடிவுறப் போவதில்லை. எங்கு ஓடி நின்றாலும் அது என்னை விடப்போவதில்லை. என்ன செய்வது என்னும் கேள்வியோடு மீண்டும் மேகத்தின் மீதே பார்வையைப் படரவிட்டேன். சட்டென்று ஒரு திட்டம் தோன்றியது. படத்தை மறுபடியும் திரைவிளிம்புக்குத் தள்ளிவிட்டு வெண்திரையில் ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்யத் தொடங்கினேன். எழுத்தே எனக்கு விதிக்கப்பட்ட வழி. அதுவன்றி நான் நடந்து செல்ல வேறு வழியில்லை. கரிய எழுத்துகள் வெண்திரையில் கூடியிணைந்து சொற்கூட்டம் பெருகியது. மனம் உருகி அருவியெனப் பொங்கிய சொற்களனைத்தும் திரைக்குள் ஓடிப் பாய்ந்தபடி இருந்தது. எனக்குள் இவ்வளவு சொற்களா என்று திகைப்பாக இருந்தது.
எழுதி முடித்த பின்னரே மெல்ல மெல்ல மனம் அமைதி நிலைக்குத் திரும்பியது. தனிமையின் சாபத்தை தனிமையின் வரத்தால் கடந்து மறுகரைக்கு எப்படியோ வந்து சேர்ந்துவிட்டேன். களைப்பும் பரவசமும் இணைந்த மனநிலையில் மேகத்தை அனுப்பிய பழனியை நினைத்துக்கொண்டேன்.
நான் இருக்கிறேன். இந்த வாழ்க்கைக்கு அது போதும். என்னுடன் மோதும் தனிமையும் வேதனையும் ஒருவகையில் என்னைக் கலைத்து விளையாடும் கருணைத்தெய்வங்கள். அடித்தும் அணைத்தும் என்னை ஏந்திக்கொள்ளும்  அத்தெய்வங்களின் காலடியில் ஒரு மேகமென நான் தவழ்ந்தபடி இருப்பேன்.

(செப்டம்பர் 2017 உங்கள் நூலகம் இதழில் வெளிவந்த கட்டுரை)