எனக்காக என் நண்பர் தனது புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்த புத்தகமே வேறு. ”ஒரு நிமிஷம், இதை பிடித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி என்னிடம் கொடுத்த புத்தகமே வேறு. படங்கள் நிறைந்த புத்தகம் என்பதால் ஆர்வத்தில் புரட்டத் தொடங்கினேன்.
பாறை ஓவியங்களைப்பற்றிய புத்தகம் அது. முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பிம்பட்கா குகைச்சுவர்களில் மனிதர்கள் தீட்டிய ஓவியங்கள். பலவிதமான மூலிகைச்சாறுகளையும் நிறக்குழம்புகளையும் குழைத்து வரைந்தவை. ஈட்டிகள். அம்புகள், மான்கள். மனிதர்கள். குதிரைகள். பசுக்கள்.
ஒவ்வொன்றும் ஓர் அதிசயம் என்றே சொல்லவேண்டும். ஒரு சில நேர்க்கோடுகளையும் துணையாக சில வளைகோடுகளையும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவை தீட்டப்பட்டிருந்தன.
ஒரு கோட்டுக்கு இவ்வளவு ஆற்றலா என்னும் கேள்வி எழாமலில்லை. ஒவ்வொரு கோடும் கூர்மையான அம்பாகத் தோற்றமளித்தது. இரண்டு மூன்று கோடுகளின் தொகுப்பு குதிரைகளாகவும் மான்களாகவும் மாறிக் காட்சியளித்தன. கூட்டம்கூட்டமான குதிரைப்படை என்னும் எண்ணத்திலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை. சூழ்ந்து நின்று வேட்டையாடப்படும் மான்கூட்டமாகவும் அவை விரிவடைந்தன. ஒரு கோடு முதுகாக மாறியது. இன்னும் சில கோடுகள் கால்களாகின. வளைந்து தொங்கும் கோடு வால்களாகித் தொங்கின. வளைந்த கோடுகளோ கால்நடைகளின் கொம்புகளாகக் காட்சியளித்தன. வீரனாக மாறிய கோடு ஆயுதமான கோட்டை உயர்த்தி மானாகத் தாவும் கோட்டைத் தாக்கி வீழ்த்தும் தோற்றம் உள்ளத்தைக் கிளர்ச்சிகொள்ள வைத்தது.
பார்க்கப்பார்க்க ஒரு பெரிய படைக்காட்சியே கண்முன்னால் விரிவதுபோலத் தோன்றியது. எந்த அம்பின் தாக்குதலால் எந்த விலங்கு விழப்போகிறதோ என்றொரு துடிப்பு உருவானது. பார்வையை விலக்கி வானத்தையும் சாலையையும் சிறிதுநேரம் பார்த்திருந்துவிட்டு மீண்டும் ஓவியங்கள் மீது பார்வையைப் படரவிட்டபோது, அவை எளிய கோடுகளாக தோற்றம் காட்டிக் குழப்பின.
நண்பர் கொடுத்த புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். கோட்டுச் சித்திரங்களிலிருந்து மனம் விடுபடவே இல்லை. பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் கோடுகளாக மாற்றும் விளையாட்டில் மூழ்கிவிட்டது. ஒருவகையான பித்தின் உச்சத்தில் இந்த உலகமே சில கோடுகளின் கலவையெனக் காட்சியளித்தது. மரம் ஒரு கோடு. வீடு இன்னொரு கோடு. சாலை மற்றொரு கோடு. தோட்டம், பூங்கா, கட்டடம் அனைத்துமே வளைந்துநெளிந்த கோடுகள். வாகனங்களும் சிற்சில கோடுகளே. ஆழ்மனத்தில் யாரோ அமர்ந்து ஒவ்வொரு உருவத்தையும் கோடுகளாக மாற்றிவிட, ஒவ்வொன்றும் ஒருவித ஓசையோடு கீழே சரிந்தபடி இருந்தது.
நிகழ்காலமே என் நினைவில் இல்லை. கடந்துபோன இளமைக்காலம் திடீரென புரண்டு மேலெழத் தொடங்கியது. பாறைகளில் ஓவியம் தீட்டிய பழங்காலத்து மனிதனைப்போல எங்கள் கிராமத்திலும் சுவரோவியங்கள் தீட்டிக்கொண்டிருந்தவரின் முகம் நினைவில் படர்ந்தது. ஓவியம் தீட்டுவதை பொம்மை போடும் கலை என்றுன் புரிந்துவைத்திருந்த ஊர் அவருக்கு பொம்மைக்காரர் என்னும் அடையாளத்தை வழங்கியிருந்தது. அவர் விரல்களும் முதலில் கோடுகளைத்தான் தீட்டும். ஒன்றையொன்று இணைத்தபடியும் வெட்டியபடியும் ஏராளமான கோடுகள் நீண்டபடி இருக்கும். சட்டென ஒரு கோணத்தில் அவற்றை ஆணாகவும் பெண்ணாகவும் விலங்காகவும் மாற்றிவிடுவார். அவர் வரைந்த ஓவியங்களெல்லாம் பழங்கால மனிதனின் பாறை ஓவியமென காட்சியளிக்க, ஒருநாள் அவர் ஊரைவிட்டே சென்றுவிட்டார்.
நெஞ்சிலெழும் கனவின் வடிவமே ஓவியம் என்ற பொம்மைக்காரரின் சொற்கள் நினைவில் பதிந்துள்ளன. சாதிக்க நினைக்கிற கனவை அவர் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு மனிதனும் நீந்திநீந்தி தனக்குள் ஆனந்தத்தில் மூழ்கித் திளைக்கும் கனவையே அவர் முன்னிறுத்தினார் என்று நினைக்கிறேன்.
கோட்டோவியங்களென கண்ணில் படும் ஒவ்வொன்றையும் வெட்டியெடுத்துத் தொகுத்துவைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பது என் சின்ன வயதுப் பழக்கம். ஓய்வுப்பொழுதுகளில் அதே போன்ற கோடுகளால் அதே போன்ற ஓவியங்களைத் தீட்டித்தீட்டி அவற்றையும் சில தொகுப்புகளாக வைத்திருந்தேன். படுக்கையறை, புத்தக மேசை, அலமாரியின் உச்சி, பரண் என பல இடங்களில் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றைத் தொட்டுப் பிரிக்கும் ஒவ்வொரு கணமும் ஒரு பெரிய ஓவியனாக என்னை நானே கற்பனை செய்துகொண்டு வானத்தில் மிதப்பேன். அது ஒரு பரவசமான அனுபவம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்து ஆங்கில நாளேடு திருப்பாவையின் முப்பது பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறிய உரைக்குறிப்புகளோடு வெளியிட்டிருந்தது. மொழிபெயர்த்தவர் எஸ்.சுவாமிநாதன். ஐந்து பகுதிகளாக வெளிவந்த முப்பது பாடல்களுக்கும் முப்பது வண்ணக்கோட்டோவியங்களைத் தீட்டியவர் ஆந்திர ஓவியம் சத்திராஜு லட்சுமிநாராயண. பாடல் விளக்கங்களையும் கடந்து வெவ்வேறு புராணத்தருணங்களை அவை காட்சிப்படுத்தின. கற்பனையைத் தூண்டும் அழகான அந்தக் கோடுகளில் மயங்கியே அவற்றைத் தொகுத்துவைத்திருந்தேன். .
கண்ணன் ஒருபுறமாக தலைசாய்த்து படுத்திருக்கிறான். அவனுடைய புல்லாங்குழல் அருகிலேயே இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் அம்பறாத்தூணி. அதற்குள் ஆறேழு அம்புகள். ராதை வில்லில் நாணேற்றி அம்பு பூட்டி குறிபார்க்கிறாள். ராதையின் கண் அம்பின் நுனியில் பதிந்திருக்கிறது. கண்ணனின் கண் ராதையின் மீது பதிந்திருக்கிறது. மையலுற்ற பார்வையுடன் கண்ணனுடன் ஒட்டியுரசியபடியும் கண்ணன் மடியில் சாய்ந்தபடியும் குழலோசையில் திளைத்து மயங்கியபடியுமான கோலத்திலேயே பார்த்துப் பழகிய ராதையின் வில்லேந்திய தோற்றம் விசித்திரமாக இருந்தது. குழலோசையின் இனிமையில் சதாகாலமும் ஆழ்ந்து கிடப்பவள் எதைக் குறிபார்க்கிறாளோ என தொடக்கத்தில் நினைத்துக் குழம்பி, பிறகு கண்ணனின் பசியைத் தணிக்க கனிகொய்யப் பார்த்த குறியே அதுவென நினைத்துத் தெளிந்தேன்.
இப்படி விதவிதமான விளையாட்டுகள். கண்ணன் கைகளை ஒரு கயிறால் கட்டிவிடுகிறாள் ராதை. அவள் வேகத்தையும் சொற்களையும் ரசித்தபடி புன்னகையோடு அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான் கண்ணன். கையில் கட்டிய கயிற்றை இழுத்து அவனை நடத்தி அழைத்துச் செல்கிறாள் ராதை.
சத்திராஜுவின் ஓவியங்களைப் பார்த்த பிறகு, அதே போன்ற ஓவியங்களை கண்ணில் படும் தாள்களிலெல்லாம் எழுதி வண்ணம் தீட்டிவைத்தேன். ஏதோ ஒரு கணத்தில் ராதையின் கனவோடும் கண்ணனின் கனவோடும் எனது கனவும் இணைந்துபோகும் விசித்திரத்தை உணர்ந்தபிறகு மனம் பறந்தபடியே இருந்தது. பல சமயங்களில் பசியையும் தூக்கத்தையும் கூட மறந்து கனவு மயக்கத்தில் திளைத்திருந்தேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் கனவைத் தொடர்வது சாத்தியமல்ல என்பதைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்தேன். வீடு மாறும்
சமயங்களிலெல்லாம்
எல்லாத் தொகுப்புகளையும் பெட்டிகளையும் எடுத்துச் செல்வது இயலாததாக இருந்ததால் கொஞ்சம்கொஞ்சமாக எல்லாமே தொலைந்தன. இப்போது ஒரு தாள்கூட இல்லை.
பேருந்திலிருந்து இறங்கினேன். தாகமாக இருந்தது. பக்கத்தில் கரும்புச்சாறு பிழிந்து விற்கும் கடை இருந்தது. ஒரு தம்ளர் வாங்கிக்கொண்டு நிழலோரமாக நின்று மெதுவாகப் பருகினேன். காற்றிலிருந்த வெப்பம் சட்டென தணிந்து ஒருவிதமான குளிர்ச்சி பரவுவதை உணர்ந்தேன். கரும்புச்சாற்றைப் பருகிவிட்டு நிறுத்தத்தை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கிய நேரத்தில் மழை பொழியத்தொடங்கியது. மேலிருந்து குறுக்குவாட்டில் இழுக்கப்பட்ட கோடுபோலவே தோன்றியது மழை. அவசரத்தில் வந்து நின்ற பேருந்தில் நுழைந்து இருக்கையில் அமர்ந்து திரும்பியபோது மழையின் வேகம் கூடிவிட்டது. கோடுகோடாக இறங்கிய மழையம்புகள் பித்தேறிய நிலையில் ஏதோ ஓர் ஓவியத்தை பூமியெங்கும் தீட்டத் தொடங்கியது.