முன்னுரை
நான்
பிறந்து வளர்ந்த சிற்றூரான
வளவனூரில் ஏரிக்கரைக்கும் ரயில்வே
ஸ்டேஷனுக்கும் இடையில் நானூறு
ஐந்நூறு அடி இடைவெளி
இருக்கும். எண்ணற்ற மரங்களால்
அடர்ந்த இடம். ஆலமரம்,
அரசமரம், இலவமரம், வேப்பமரங்கள்
என அங்கே இல்லாத
மரங்களே இல்லை. காற்றுக்கும்
நிழலுக்கும் பஞ்சமே இல்லாத
இடம்.
தரையில்
விழுந்து மக்கிய வேப்பம்பூக்களின் மணத்துடன் அந்த
இடமே ஒரு பெரிய
சோலைபோல இருக்கும். கிளிகள்
கூவும். அணில்கள் ஓடும்.
இளமையில் அதுதான் என்னுடைய
வாசிப்பு இடம். நூலகத்திலிருந்து கொண்டுவரும் புத்தகங்களை
அங்கு உட்கார்ந்து படிப்பது
என் பழக்கம். என்
நண்பன் பழனியும் அந்த
மரத்தடிக்கு வந்து சேர்ந்துவிடுவான்.
அவனும் நானும் சேர்ந்துதான்
பல புத்தகங்களைப் படிப்போம்.
பள்ளிக்கூட
நாட்களில் பத்து பதினைந்து
நண்பர்களோடு மரத்தடியில் அமர்ந்து,
புத்தகங்களில் படித்த வீரதீரக்கதைகளுக்கு கண் காது
மூக்கு எல்லாம் வைத்து
கட்டுக்கதைகளை உண்மைக்கதைகளைப்போலச் சொல்லி
மகிழ்ச்சியடைவோம். புளியம்பிஞ்சுகளை பைநிறைய
சேகரித்துவைத்துக்கொண்டு வீட்டிலிருந்து தாளில் மடித்துவைத்து
எடுத்துவந்த உப்புத்தூளில் தொட்டுத்தொட்டு சுவைத்தபடி கதைபேசிய
அந்த நாட்கள் இன்னும்
நினைவில் பசுமையாகவே உள்ளன.
இன்றும் ஊருக்குச் சென்றால்
“வரயா, பள்ளிக்கூடத் தோப்புவரைக்கும் போவலாமா?” என்பதுதான்
பழனி என்னிடம் கேட்கும்
முதல் கேள்வி.
இளம்பருவத்தில் சுயசரிதை நூல்களும்
சாகசப்பயணக்கதைகளும் எனக்கு
மிகவும் பிடித்தமானவை. நாட்டிற்குழைத்த நல்லோர் என்னும்
பொதுத்தலைப்பில் எழுதப்பட்ட
இந்தியத்தலைவர்களின் கதைகள்
ஏராளமான நூல்களாக எங்கள்
நூலகத்தில் கிடைத்தன. அவற்றை
ஒன்றுவிடாமல் எடுத்துக்கொண்டு வந்து
படித்தோம். மக்களுக்கு ஆற்றும்
சேவைகளில் அவர்களுக்கு இருந்த
ஆழ்ந்த ஈடுபாடும் இரக்கமும்
கனிவும் எங்களை மனஎழுச்சி
மிக்கவர்களாக மாற்றின. அந்த
உற்சாகமான வாசிப்பைத் தொடர்ந்து
பள்ளிக்காலத்திலும் கல்லூரிக்காலத்திலும் எனக்குக் கிடைத்த
ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு இலக்கியப்படைப்புகளைத் தேடிச் சென்றேன்.
அந்தப் பசுமையான நாட்கள்
இந்த முன்னுரையை எழுதும்
தருணத்தில் வந்துபோகின்றன.
வாசிப்பு
என்பது மகத்தான அனுபவம்.
எதார்த்த வாழ்வில் நாம்
காணமுடியாத பல காட்சிகளை
அவை நமக்கு அடுக்கிக்
காட்டுகின்றன. பல மனிதர்களைச்
சந்திக்கவைக்கின்றன. பலவிதமான நிலங்கள், காடுகள், ஆறுகள்,
மலைகள், மரங்கள், பூக்கள்
என ஏராளமான புதுமைகளை
நம் முன் காட்சிகளாக
நிறுத்துகின்றன. மன உணர்வுகளுக்கு
இயைந்தவிதத்தில் அவை
ஒவ்வொன்றும் உருக்கொண்டு, நம்
புரிதலையும் மனத்தையும் விரிவாக்குகின்றன.
நம்மையறியாமல் நமக்குள் இருந்த
இருள் விலகிச் செல்வதையும்
மேகங்களைப் புரட்டிக்கொண்டு மெல்ல
எழும் சூரியக்கதிரென நம்
நெஞ்சில் உதித்துச் சுடர்விடும்
எண்ணங்களால் பெரும்பரவசமொன்று வந்து
படிவதையும் உணரவைக்கின்றன. ஒரு புத்தகத்தை
வாசிக்கத் தொடங்கும் முன்பு
இருக்கும் ‘நான்’ வேறு.
வாசித்து முடித்த பிறகு
இருக்கும் ‘நான்’ நிச்சயம்
வேறானது.
ஒருமுறை
நண்பர் கமலாலயன் எங்கள்
அலுவலகத்துக்கு வந்திருந்தார். தூங்குமூஞ்சி
மரங்கள் அடர்ந்த சாலையில்
நடந்தபடி உரையாடிக்கொண்டிருந்தபோது பேச்சோடு
பேச்சாக இந்த இளமைக்கால
அனுபவங்களையும் பேசினோம். அரைமணி
நேரத்தில் நாங்கள் இருவருமே
இளமையின் தொடக்கப்புள்ளி வரைக்கும்
சென்று மீண்டுவந்தது இனிய
அனுபவமாக இருந்தது. அன்றைய உரையாடலில்தான் புத்தகங்களைப்பற்றிய தொடரை
எழுதுவது தொடர்பாக அவர்
சொன்னார். மாதத்துக்கு ஒரு
புத்தகத்தைப்பற்றி எழுதுவது
எனக்கும் பிடித்திருந்தது. ஒவ்வொரு
கட்டுரையும் வெளிவந்ததுமே அதையொட்டி
அவர் தொலைபேசியில் அழைத்து
பகிர்ந்துகொள்வதை அவர்
ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார்.
அவருடைய ஊக்கம் நிறைந்த
சொற்கள் ஒருபோதும் மறக்கமுடியாதவை.
இத்தொகுதி வெளிவரும் இக்கணத்தில்
நண்பர் கமலாலயனை நன்றியுடன்
நினைத்துக்கொள்கிறேன். ’புத்தகம் பேசுது’
ஆசிரியர் குழுவுக்கும் என்
நன்றி.
என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உறுதுணையாக இருப்பவர் என்
அன்பு மனைவி அமுதா. அவரையும் இந்நூலைத் தொகுக்கும் நேரத்தில்
நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
இக்கட்டுரைகள் தொடராக வெளிவந்துகொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக எங்கள் ஆசிரியர் ம.இலெ.தங்கப்பாவின் மரணம் நிகழ்ந்தது.
தமிழ்மரபுப்பாடல் மரபின் முக்கியமான ஆளுமை அவர். அவருடைய வீடு முழுதும் நூல்களால் நிறைந்திருக்கும். எல்லா
மூலைகளிலும் புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்ட தாங்கிகள் நிற்கும். புத்தகங்களை ஒட்டி உரையாடுவதும் ஒரு கருத்தின் வழியாக ஒரு புத்தகத்திலிருந்து
மற்றொரு புத்தகத்தை நோக்கிச் செல்லும் பயணத்தை மிகவும் இயல்பாக நிகழ்த்தக்கூடியவர்
அவர். புத்தகங்களைப்பற்றிய இந்த நூலை என் ஆசிரியருக்குச் சமர்ப்பிப்பதில்
என் மனம் நிறைவுகொள்கிறது.