ஆறுதல்
அந்தப் பனி சுமந்து வரும் போர்வையை
ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்
மலை குன்று நீர்வீழ்ச்சியிலிருந்து
போர்வையின் நுனியைப் பற்றி இழுத்து வருகிறது
கடல் காடு ஆறு பாலைவனம் தாண்டி
நீண்டு வருகிறது அதன் பயணம்
அதன் வழியில் தென்படும்
மரங்களையும் கட்டடங்களையும்
சாலைகளையும் தோட்டங்களையும்
தழுவிப் போர்த்திவிட விரும்புகிறது
குடிசைகளையும் பாழும் சுவர்களையும்
சாக்கடைகளையும் சந்துகளையும்
தாவி அணைக்கத் துடிக்கிறது
அதன் தழுவலுக்குத் தப்பிய பொருள்
எதுவுமே இல்லை என்று நம்புகிறேன்
முளைத்தெழும் சூரியக்கதிர்களால்
கிழிபடும் போர்வையைக் கண்டு
மனசில் வருத்தம் கவிகிறது
எனினும் ஒரு கணம் –
ஒரு கணமேனும்
ஒரு போர்வையின் கீழ் இவ்வுலகமிருந்தது
என்பதைக் காண ஆறுதலாயிருக்கிறது
(நவீன விருட்சம்,
ஜன - மார்ச், 1994)
வீடு
நண்பரின் வீட்டு வாசலில்
ஒரு தாய்போல நிற்கிறது தென்னை மரம்
கீற்றுகளின் அசைவில் உருவாகும் இசையில்
தன் ஆசியை வழங்குகிறது அது
அது செலுத்தும் காற்று
அது வழங்கும் குளுமை
அது சேமித்துத் தரும் நிழல்
தன் வாழ்வையே கொடுக்கிறது அதன் தாய்மை
வேரடியில் வீட்டுச் சிறுமிகள்
துள்ளி விளையாடி மகிழ்கிறார்கள்
மரத்தை அணைக்க முடியாமல் தவிக்கின்றன
குழந்தைகளின் பிஞ்சு விரல்கள்
தொட்டுவிட்டு ஓடும் ஒன்று
உடனே இன்னொன்றும் ஓடும்
மீண்டும் திரும்பிவந்து கூடுகிறார்கள்
உடனே சிரிப்பு கலகலக்கிறது
மரத்தோடு அவர்கள் பேசுகிறார்கள்
மரமும் பதில் சொல்லி ஊக்கமூட்டுகிறது
தடையற்ற ஆட்டம்
அளவற்ற மகிழ்ச்சி
உலகையே மறக்கிறார்கள் குழந்தைகள்
காலடியில் இன்னொரு குழந்தையைப் போல்
மரத்தடியில் தவழ்கிறது நண்பர் வீடு
(திணை , ஏப்ரல் - ஜூன் 1994)