கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியப்படைப்புகளை எந்த வடிவத்தில் படித்தாலும், அந்தப் படைப்பில் புகைப்படத்தைப்போல அரிதான ஒரு காட்சிச்சித்திரத்தைக் கண்டடையும்போது மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறது. உடனடியாக அது மனத்தில் பதிந்துவிடுகிறது. அந்தப் படைப்பை காலமெல்லாம் நினைத்துக்கொள்ள அப்படிப்பட்ட ஒரு துண்டுக்காட்சியே போதும். அதன் வழியாக அந்தப் படைப்பை நினைவிலிருந்து மீட்டெடுத்துவிடலாம்.
”நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்”
என்னும் ஒற்றைவரிச் சித்திரம் கபிலரின் பாடலை மிக எளிதாக நினைவுக்குக் கொண்டுவந்து
விடுகிறது. ”அவள் ஆடை திருத்தி நின்றாள் அவன்
ஆயிரம் ஏடுகள் திருப்புகின்றான்” என்கிற சித்திரம் வழியாக பாரதிதாசனின் கவிதை நினைவில்
இன்னும் நீடிக்கிறது. கர்ணமோட்சம், திரெளபதை துகிலுரிப்பு, அர்ஜுனன் தவம், இராவணவதம்
போன்றவை அனைத்தும் ஒற்றைச்சொல்லாக மக்களின் நினைவில் நீடித்திருப்பதற்கு, அச்சொற்கள்
வழியாக முழுக்கதையையும் மீட்டெடுப்பதற்கு இசைவாக இம்மண்ணில் ஊறிவிட்டன என்பதுதான் காரணம்.
மனிதர்கள் நெஞ்சில் இலக்கியம் இப்படி சிறுசிறு சித்திரங்கள் வழியாகவே நிலைத்திருக்கின்றன.
ஆனால் இத்தகு சித்திரங்களை உருவாக்குவது எளிதல்ல. அது முயற்சியால் விளைவதுமல்ல. எழுத்தென்னும்
பித்து ஒரு படைப்பாளியின் நினைவை ஆக்கிரமித்து, அதுவே சொற்களைத் தன் ஊடகமாக ஆக்கிக்கொள்ளும்போது,
அத்தகு சித்திரங்கள் இயல்பாக உருவாகி படைப்பின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன.
குப்புசாமியின் இருபது கதைகள் அடங்கிய
இத்தொகுதியை ஒரே அமர்வில் படித்துமுடித்தேன்.
வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழல்களில் அமையும் வாழ்க்கைத்தருணங்கள் புயலில்
சிக்கிய படகாக மனிதவாழ்க்கையை அலைக்கழிக்கும் பல காட்சிகளை அவர் எழுதிப் பார்த்திருக்கிறார்.
அனைத்துக்கதைகளையும் ஒருசேர அசைபோடும் நேரத்தில், அவருடைய படைப்புகளில் என்றென்றும் நீடிக்கும் வகையில் சில சித்திரங்கள்
அமைந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது. அப்படி எஞ்சுவதே ஒரு படைப்பின் வெற்றி.
A FOR APPLE என ஆங்கிலத்தலைப்பைக் கொண்ட
சிறுகதையில் ஒரு காட்சி. குழந்தை ஆங்கிலக்கல்வியைக் கற்கவேண்டும், ஆங்கிலத்தில் உரையாடவேண்டும்,
வெளிநாட்டுக்குச் சென்று மேற்படிப்பு படிக்கவேண்டும் என்று ஆசைப்படும் கோடிக்கணக்கான
இந்தியத்தாய்மார்களின் பிரதிநிதியாக இக்கதையிலும் ஒரு தாயின் சித்திரம் இடம்பெறுகிறது.
தன் கணவனின் கனிவான ஆலோசனைகளையும் கண்டிப்பான சொற்களையும் பொருட்படுத்தாமல் மிகுதியான
பொருட்செலவில் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கவைக்கிறாள். பிள்ளை ஆங்கிலத்தில் படிப்பதையும்
பேசுவதையும் பார்த்து மனம் பூரிக்கிறாள். சிறுவன் வளர்ந்து பெரியவனாகி, பொறியியல் பட்டதாரியாகி,
அயல்நாட்டில் வேலை கிடைத்ததால் பறந்து சென்றுவிடுகிறான்.
அதுவரை மகிழ்ச்சிக்கடலில் திளைக்கவைத்த
மகனின் செயல்பாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக துயரக்கடலில் திளைக்கவைப்பதாக மாற்றமடைகின்றன.
அந்த நாட்டிலேயே திருமணம், அந்த நாட்டிலேயே வாழ்க்கை என எல்லாமே மாறிவிடுகிறது. பேரக்குழந்தைகளின்
முகங்களைக்கூட புகைப்படங்களில் மட்டுமே அவள் கண்டு களிக்கவேண்டிய நிலை. இறுதிக்காலத்தில்
தம்முடன் வந்து தங்கி தம்மைக் கவனித்துக்கொள்வான் என கனவு கண்டதெல்லாம் பொய்த்துவிடுகிறது.
நிலங்களை விற்றுப் படிக்கவைத்த கணவன் இறந்துவிட, மனைவி மட்டும் தனிமையில் வாடுகிறாள்.
இறுதிக்காட்சியில் ஏதோ ஓர் உந்துதலில் தாயாரைப் பார்க்க மகன் விமானமேறி ஊருக்கு வருகிறான்.
நிலத்துக்கு நடுவில் இருந்த வீடு பராமரிப்பின்றி கிடக்கிறது. வாசலெங்கும் குப்பை. தன்
வீடுதானா அது என அவனுக்கே ஐயமெழும் அளவுக்கு சூழல் மாறிக் கிடக்கிறது. கதவும் சாத்தப்பட்டிருக்கிறது.
அவன் கதவைத் தட்டுகிறான். பதில் இல்லை. கதவைத்
தட்டும் சத்தம் உள்ளே கேட்கிறதோ இல்லையோ என அவனுக்கே ஐயமெழுகிறது. மெதுவாக சாவித்துவாரத்தின்
வழியே குனிந்து அறைக்குள் பார்க்கிறான். சாய்வுநாற்காலியில் படுத்தவாக்கில் அசைவற்ற
உடலாகக் கிடக்கும் அம்மாவைப் பார்த்து திகைத்து உறைந்து நிற்கிறான். அவள் காலடியில்
அவன் சிறுவயதில் படித்த ஆங்கில அரிச்சுவடிப் புத்தகம் கவிழ்ந்துகிடக்கிறது.
சாவித்துவாரத்தின் வழியாக அம்மாவின்
உடலைப் பார்க்கும் சித்திரத்தை ஒருபோதும் மறந்துவிடாத
அளவுக்கு நெஞ்சம் உள்வாங்கிக்கொண்டது. அங்கே பூட்டப்பட்ட கதவு அழகானதொரு படிமமாக மிக
இயல்பாக அமைந்துவிட்டது. ஒருபுறம் அன்புக்கான ஏக்கம். மறுபுறம் புறக்கணிப்பின் மூர்க்கம்.
ஒன்றையொன்று நெருங்க முடியாதபடி அடைக்கப்பட்ட கதவு தடுத்துவிடுகிறது. மகன் நெருங்கி
வருவான் என்ற கற்பனையில் காலமெல்லாம் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு காத்திருந்த அம்மா
அலுத்துச்சலித்து கதவை அடைத்துவிட்டாள். தன் வீட்டுக் கதவு தனக்காக எப்போதும் திறந்திருக்கும்
என்ற தப்பான நம்பிக்கையில், தாயின் அழைப்பை ஒரு தொல்லையாகவும் எரிச்சலூட்டும் அனுபவமாகவும்
மட்டுமே நினைத்து ஒதுக்கிவந்த மகன் ஏதோ ஒரு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு நெருங்கிவரும்போது
கதவைத் திறக்கும் வழி தெரியாமல் திகைத்து நிற்கிறான். அந்த ஒரே ஒரு கோட்டுச்சித்திரம்
வழியாக வாசகர்கள் பல கதைகளை எழுதிப் பார்த்துக்கொள்ள முடியும். தமக்குத் தெரிந்த பலருடைய
வாழ்க்கையைத் தொகுத்துப் பார்த்துக்கொள்ளவும் முடியும்.
’தனிமை’ என்னும் கதையிலும் இப்படி ஒரு
காட்சியைச் சித்தரித்திருக்கிறார் குப்புசாமி. அது தனிச்சித்திரமாக இல்லாமல் இரு முரண்களின்
புள்ளிகளை எதிரும்புதிருமாக நிறுத்திவைக்கிறது. முதலில் சொன்ன கதையில் மகனுடைய அன்புக்கு
ஏங்கும் அம்மாவைச் சித்தரித்த குப்புசாமி, இச்சிறுகதையில் தன் அன்பிலும் உபசரிப்பிலும்
தன் மகனை மூழ்கவைத்து அவன் வாழ்க்கையை உப்புச்சப்பில்லாமல் ஆக்கிவைக்கிற அம்மாவின்
பாத்திரத்தைச் சித்தரித்துள்ளார். மகன் மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ள விழைந்தபோதும்,
தன் சொந்தப்பகையை மனத்தில் வைத்துக்கொண்டு மகனுடைய விருப்பதைத் தட்டிக்கழித்து விடுகிறாள்
அம்மா. ஆசைப்பட்டவள் குடியிருந்த மனத்தின் கதவுகளை மற்றொருத்திக்காக திறந்துவைக்க மனமின்றி
திருமணமில்லாமலேயே வாழ்ந்துவிடுகிறான் அவன். அம்மாவின் திடீர் மறைவு அவனைத் தடுமாற
வைத்துவிடுகிறது. நண்பர்களின் திருமண ஆலோசனைகளை முழுமனத்துடன் ஏற்கவும் மனமின்றி, சொந்தமாக
ஒரு முடிவையெடுக்கும் துணிச்சலுமின்றி ஆண்டுகளை வீணாக்கிவிடுகிறான்.
முதுமையும் தனிமையும் தீண்டும்போது
அவனுக்கு உதவ யாருமில்லை. அது அவனே தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கை. அதைக் குறித்து
கருத்துரைக்க ஒன்றுமில்லை. இந்த விவரங்களையெல்லாம் கடந்து ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார்
குப்புசாமி. அவர் தன் நண்பரைச் சந்திக்கச் செல்கிறார். அவருடைய தனிமைத்துயரைக் கேட்டு
மனம் வருந்துகிறார் அந்த நண்பர். அவர் புறப்பட்டுச் சென்றதும், அவரைத் தன் சகோதரராகவே
நினைத்து தன்னோடு வைத்துக்கொண்டால் என்ன என அவருடைய கருணைமனம் திட்டமிடுகிறது. ஆனால்
தன் திட்டத்தைப்பற்றி மனைவியுடன் வெளிப்படையாகப் பேசி விவாதித்து முடிவெடுக்கத் தயக்கம்
காட்டுகிறார். தான் ஆற்றவிருக்கும் செயல் சரியா தப்பா என ஒரு பட்டிமன்றமே அவருடைய மனத்தில்
நடைபெறுகிறது. இரு வாரங்களுக்குப் பிறகே அவருக்கு தன் மனைவியுடன் உரையாடும் துணிவு
வருகிறது. எவ்வித எதிர்ப்புமில்லாமல் மனைவி உடனடியாக ஒப்புக்கொள்கிறாள். மனைவியின்
சம்மதம் அவருக்கு பெருத்த நிம்மதியைக் கொடுக்கிறது. அவரை அழைத்து வருவதற்காக இருவரும் புறப்படுகிறார்கள்.
அதே தருணத்தில் தனிமையில் வசித்துவந்த அந்த நண்பரின் மரணச்செய்தியைத் தெரிவிப்பதற்காக
வாசலில் ஒருவர் வந்து நிற்கிறார். ஒரு முடிவை எடுப்பதில் ஒருவர் காட்டும் தாமதம் இன்னொருவரின்
மரணத்துக்குக் காரணமாகிவிடுகிறது. அபத்தமான இத்தகு தருணங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும்
நிறைந்திருக்கும். அவை உருவாக்கும் குற்ற உணர்ச்சியை ஒருவராலும் மறக்கமுடியாது.
’தீவினை’ சிறுகதையின் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்ட ஒரு
கதை. ஆயினும் இதன் மையமான குற்ற உணர்ச்சி மிகமுக்கியமான ஒரு கரு. கணவனின் சிகிச்சைக்காக
வீட்டை விற்று எடுத்துச் சென்ற பணத்தை தொலைத்துவிட்டு ஒரு குடும்பம் நடுத்தெருவுக்கு
வந்துவிடுகிறது. தற்செயலாக தெருவில் கிடைத்த பணத்தை முதலீடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில்
உயர்கிறது இன்னொரு குடும்பம். பசியுடன் வாசலில் மயங்கிக் கிடந்த தாயையும் மகளையும்
காப்பாற்றி ஆதரிக்கிறது அந்தக் குடும்பம். பணத்தைப் பறிகொடுத்த குடும்பம் என்று உள்ளூரத்
தெரிந்தபோதும் உண்மையை மறைக்கிறார் அவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மரணப்படுக்கையில்
உண்மையைச் சொல்லிவிட்டு உயிர்துறக்கிறார். குற்ற உணர்ச்சிக்குப் பிராயச்சித்தமாக அந்த
ஏழைக்குடும்பத்து மகளுக்கு வாழ்க்கை கொடுக்க முன்வருகிறாள் அவர் மனைவி. ஆனால் உண்மை
தெரிந்ததும், அதுவரை நெஞ்சில் ஊறிவிட்ட நன்றியுணர்ச்சியை இழந்து வேறொரு விதமான பகையுணர்ச்சிக்கு
இடம்கொடுத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த ஊரைவிட்டே வெளியேறிவிடுகிறது அக்குடும்பம்.
இலக்கியத்தை வாழ்வின் வழியாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்
அனைவருமே ஒருவகையில் பேறு பெற்றவர்கள். அத்தகையோரே வாழ்க்கையை மதிப்பிடுபவர்கள். தன்
வாழ்க்கையை மதிப்பிடத் தெரிந்தவர்களே, பிறர்
வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் மதிப்பிடத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இலக்கியம்
என்பதே ஒரு வகையில் வாழ்க்கையை மதிப்பிடும் கலை.
ஒரு படைப்பில் ஒரு தருணத்தை எந்த அளவுக்கு
நேரிடையாக முன்வைக்க வேண்டும், எந்த அளவுக்கு
மறைமுகமாக முன்வைக்க வேண்டும் என்பது மிகமுக்கியமான கலை. ஒரு புகைப்படத்தில்
வெளிச்சம் எந்த அளவுக்கு இருக்கவேண்டும், இருள் எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்று
தீர்மானிப்பதைப்போலவே சிறுகதைக்கலையிலும் ஒரு கணக்குத் தீர்மானம் உண்டு. படித்துப்
படித்துத்தான் நாம் அதில் தேர்ச்சி பெறவேண்டும். தமிழில் நாம் படித்து அறிந்துகொள்வதற்கு
நம் முன்னோடிகளின் படைப்புகள் சுரங்கமென நம் முன்னால் இருக்கின்றன. அவற்றை இடைவிடாமல்
வாசிக்கும்போது நம் மனம் தானாக அதற்குப் பழகிவிடும். ஏற்கனவே கலை அறிந்தவர் என்கிற
நிலையில் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் குப்புசாமிக்கு
இப்பயிற்சி நிச்சயம் உதவி செய்யும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
(எழுத்தாளர்
குப்புசாமியின் ‘இன்பம் இங்கே’ சிறுகதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை)