பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் மனம் ஆற்றுத்திருவிழாவுக்குச் செல்வதைப்பற்றி நினைக்கத் தொடங்கிவிட்டது. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் எங்கள் பேச்சு அதைப்பற்றியதாகவே இருந்தது. ரயில்வே ஸ்டேஷன் நெம்புகோல் மேடைக்கு அருகில் மாலை விளையாட்டை முடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நேரத்திலும் எங்கள் உரையாடல் மிக இயல்பாக ஆற்றுத்திருவிழாவை நோக்கியே திரும்பியது.
எங்கள் தெருவிலிருந்து
எத்தனை வண்டிகள் கிளம்புகின்றன, எந்தெந்த வண்டிகளில் எங்களைப் போன்றவர்கட்கு இடம் கொடுப்பார்கள்,
யாரிடம் சொல்லி வண்டியில் இடம் பிடிப்பது என்பது பற்றி முடிவில்லாமல் பேசிக்கொண்டே
இருந்தோம். அப்படியே பேச்சு நீண்டு, போன ஆண்டு ஆற்றுத்திருவிழாவுக்குச் சென்று ஆடித்
திரிந்த அனுபவங்களைப்பற்றி உற்சாகமாகப் பேசி பொழுதுபோக்கினோம்.
ஒவ்வொரு வருஷமும் ஆற்றுத்திருவிழாவுக்கு
தவறாமல் சென்று வருபவன் பழனி. செழியன், கஜேந்திரன், பரசுராமன் எல்லோரும் இரண்டு மூன்று
முறைகளுக்கும் மேல் சென்று வந்தவர்கள். அந்தக் கூட்டத்தில் ஒரேஒருமுறை சென்று வந்தவன்
நான் மட்டுமே. ஏழாவது படிக்கும்போது மாதவன்
அண்ணன் என்னை மிதிவண்டியில் அமரவைத்து அழைத்துச் சென்று ஆற்றைச் சுற்றிக் காட்டினார்.
அந்த அனுபவமே எனக்கு நினைக்க நினைக்க பரவசமாக இருந்தது. அதற்குப் பிறகு ஆற்றுத்திருவிழாவுக்குச்
செல்லும் வாய்ப்பு அமையவே இல்லை.
ஆற்றுத்திருவிழா பேச்சைத்
தொடங்கினாலே எனக்கு ஞாபகம் வருவது குடைராட்டினத்தில் அமர்ந்து சுற்றிய அனுபவம்தான்.
சின்ன கார் அமைப்பில் தொங்குவதுபோல வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு மரப்பெட்டியில் உட்கார்ந்ததும்
அது வேகமெடுத்துச் சுற்றும்போது உலகமே சுற்றுவதுபோலத் தெரிந்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.
அதைப்பற்றி பரவசத்துடன் விவரித்தேன் நான். ஆற்றில் அமிழ்ந்தபடி நீந்திச் செல்லும் மீன்களை
விரட்டிப் பிடித்த அனுபவத்தைச் சொன்னான் செழியன். கரையோர மணலில் பள்ளமெடுத்து தண்ணீரின்
ஊற்றைத் தேடிக் கண்டடைந்த அனுபவத்தைச் சொன்னான் கஜேந்திரன். கரையோரத்தில் ஓலைத்தடுப்புக்கு
நடுவில் இயங்கிய கடையில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்ட கதையைச் சொன்னான்
பரசுராமன். ஆற்றுத்திருவிழா அனுபவக்கதைகள் ஒவ்வொன்றும் பரவசத்தில் தொடங்கி பரவசத்தில் முடிவடைவதாக இருந்தன.
வளவனூரிலிருந்து பதினைந்து
கிலோமீட்டர் தொலைவில் தென்பெண்ணை ஆறு செல்கிறது. கார்த்திகை மாத மழையில் கரைபுரண்டு
ஓடத் தொடங்கும் ஆறு, பொங்கல் சமயத்திலும் அளவு குறையாமல் ஓடிக்கொண்டிருக்கும். மாட்டுப்பொங்கலுக்குப்
பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த ஆற்றங்கரையில் திருவிழா நடைபெறும். ஆயிரக்கணக்கில்
மக்கள் கூடுவார்கள். தென்பெண்ணை ஆற்றுக்கு இருபுறங்களிலும் உள்ள சின்னச்சின்ன கிராமங்களிலிருந்து
அலங்கரிக்கப்பட்ட ஏராளமான அம்மன் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள். எல்லா ஊர்
அம்மன்களையும் ஒரே இடத்தில் எல்லோரும் பார்க்கலாம். ஆற்றில் இறங்கிக் குளிக்கலாம்.
பொதுபொதுவென கால்கள் பதியும் மணல்வெளியில் நடக்கலாம். புரளலாம். கரையோரமாக தற்காலிகமாக
உருவாக்கப்பட்டிருக்கும் கடைகளை வேடிக்கை பார்க்கலாம். விளையாடலாம்.
ஆற்றுத்திருவிழா என்பது
எங்களைப்போன்ற பிள்ளைகளுக்கு பட்டணத்துக்குச் சென்றுவருவதுபோல. சிலருக்கு அது எட்டும் கனி. சிலருக்கு எட்டாக்கனி.
திருவிழாவுக்குச் செல்ல
எங்கள் அம்மாவிடமிருந்து அனுமதி பெறுவதுதான்
பெரிய வேலையாக இருந்தது. எந்த நாடகமும் அவரிடம் செல்லுபடியாகவில்லை. அவர் எங்களை எங்கும்
தனியாக அனுப்பியதில்லை. அனுப்பாமல் இருப்பதற்கு என்னென்ன காரணங்களைச் சொல்லமுடியுமோ,
அவை அனைத்தையும் சொல்லி வாயை அடைத்துவிடுவார். அவர் தடை சொன்னதற்குப் பிறகு யாரும்
ஒரு வார்த்தை கூட மறுப்பு சொல்லமுடியாது. எங்கள் வீட்டில் அது எழுதாத சட்டமாக இருந்தது.
எங்கள் தாத்தா வீட்டுக்குக் கூட நாங்கள் தனியாகச் சென்றதில்லை. எங்கு போனாலும் அவரோடுதான்
செல்வோம். அவரோடுதான் திரும்புவோம். எங்காவது சென்று, யாரிடமாவது பேச்சுக் கொடுத்து
வம்புகளில் சிக்கிவிடுவார்களோ என ஒவ்வொரு கணமும் எங்களை நினைத்து அவர் பெரிதும் அஞ்சினார்.
எங்கள் வீட்டுக்கு அடுத்த
வீட்டில் மூன்று வண்டிகள் இருந்தன. அந்த வீட்டில் வசித்த மூன்று சகோதரர்களுக்குச் சொந்தமானவை.
வளவனூருக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் தானிய மூட்டைகளையும் எண்ணெய் பேரல்களையும்
எடுத்துச் சென்று வணிகர்களிடம் ஒப்படைப்பதுதான் அவர்கள் வேலை. வண்டி இழுக்கும் காளைகளை
அவர்களே ஒரு தனி தொழுவத்தில் வளர்த்தார்கள். அவர்கள் வண்டிகளில் மரச்சக்கரங்களுக்குப் பதிலாக
லாரிகளில் பயன்படுத்துவதுபோல உருண்டையான டயர் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
பொதுவாக மூட்டைகளை ஏற்றி
அடுக்குவதற்குப் போதுமான உயரத்துக்கு மட்டுமே வண்டியின் இரு பக்கங்களிலும் தடுப்புப்பலகைகள்
இருக்கும். ஆற்றுத்திருவிழா சமயத்தில், அந்தப் பலகைகளோடு தட்டிகளை நிறுத்தி இறுக்கமாகக்
கட்டி உயர்த்திவிடுவார்கள். பிறகு இருபுறத் தட்டிகளையும் இணைக்கும் வகையில் சமுக்காளத்தை விரித்துக் கட்டிவிடுவார்கள்.
உடனே டயர் வண்டி கூண்டு வண்டியாக மாறிவிடும். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு
வண்டிகளில் இடம்பிடித்துவிடுவார்கள். மூன்றாவது
வண்டியை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்காக ஒதுக்கிக் கொடுப்பார்கள். நெருக்கியடித்துக்கொண்டு
உட்கார்ந்தால் பதினைந்திலிருந்து இருபது பேர் வரைக்கும் உட்காரலாம்.
ஆற்றுத் திருவிழாவுக்கு
வண்டிகள் புறப்படவிருக்கும் செய்தி கிடைத்ததும் ஆற்றுத் திருவிழாவுக்கே சென்றுவிட்டதுபோல
மனம் துள்ளியது. அன்று இரவு சாப்பாட்டுக்குப் பிறகு தூங்குவதற்கு பாய்களை விரிக்கத்
தொடங்கிய சமயத்தில் பள்ளியில் விடுப்பு விட்டிருக்கும் செய்தியையும் வண்டிக்காரர் வீட்டிலிருந்து
வண்டிகள் புறப்படும் செய்தியையும் இணைத்து ஒரு தகவலைப்போல அம்மாவிடம் சொன்னேன்.
“இப்ப எதுக்கு அந்தப் பேச்சு?
அவுங்க போனா நமக்கென்ன, போவாட்டா நமக்கென்ன?” என்று கேட்டார் அம்மா.
நான் அம்மாவின் முகத்தைப்
பார்த்தேன். கடுமையாகவும் இல்லை. இனிமையாகவும் இல்லை. அதைப் பார்த்த பிறகு, உரையாடலைத்
தொடர துணிச்சல் வரவில்லை. இருப்பினும் அந்த நல்ல தருணத்தைவிட்டால் அதற்குப் பிறகு வாய்ப்பே
வராமல் போய்விடுமோ என குழப்பமாகவும் இருந்தது.
சில கணங்களுக்குப் பிறகு
தயக்கமான குரலில் “ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஆத்துத்திருவிழா பார்த்ததோடு சரி. அதுக்கப்புறம்
பார்க்கவே இல்லை. அந்த வண்டியில நானும் போய் வரட்டுமா?” என்று கேட்டேன்.
அம்மா ஒருகணம் என்னைப்
பார்த்து முறைத்தார். பிறகு “கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும், கெழவனை தூக்கி மனையில வையின்னு
சொல்றமாதிரி இருக்குதுடா உன் கதை. இப்ப, நம்ம வீடு இருக்கிற நிலையில இது ஒன்னுதான்
குறைச்சல். போடா. ஆத்துத்திருவிழாவும் வேணாம், கூத்துத்திருவிழாவும் வேணாம், பேசாம
படு” என்றார்.
அதற்குமேல் பேச்சை எப்படித்
தொடர்வது என்று தெரியவில்லை. அமைதியாகப் படுத்துவிட்டேன். அப்பாவின் வருகையைப் பார்ப்பதற்காக
அம்மா வாசல் பக்கமாகச் சென்றுவிட்டார். என் பக்கத்தில் படுத்தபடி அந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த
தம்பியும் தங்கையும் “ஆத்துத் திருவிழா நடக்கிற இடம் நம்ம ஊருலேர்ந்து எவ்ளோ தூரம்ண்ணே?”
என்று கேட்டனர்.
“பதினஞ்சி கிலோமீட்டர்”
“அவ்ளோ தூரமா? அவ்ளோ தூரத்துக்கும்
அவுங்க வண்டியில ஏத்திம் போறாங்களா?”
“ம்”
”நீ போவும்போது மறக்காம
எங்களையும் அழச்சிட்டு போறியா?”
அவர்களுக்கு என்ன பதில்
சொல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, வாசல் பக்கத்திலிருந்து “தூங்காம என்னடா
அங்க கதை பேசிட்டிருக்கீங்க?” என்று அம்மாவின் குரல் ஒலித்தது. சட்டென நாங்கள் அனைவரும்
அமைதியாக கண்களை மூடிக்கொண்டோம்.
அடுத்தநாள் அதே வேளையில்
மீண்டும் அந்தப் பேச்சை அம்மாவிடம் தயக்கத்துடன் தொடங்கினேன். “ஏன்டா, ஒருதரம் சொன்னா,
உன் மண்டையில உறைக்காதா? படிக்கிற புள்ளைதான நீ? கேட்டதயே மறுபடியும் மறுபடியும் கேக்கற?”
என்றபடி அவர் என்னை முறைத்தார். நானும் பேச்சைத் தொடராமல் உறங்குவதற்காக கண்களை மூடிக்கொண்டேன்.
மறுநாள் முதல் ஒவ்வொரு
நாளும் அதே வேளையில் அதே கோரிக்கையுடன் என் உரையாடலை வெவ்வேறு கோணங்கள் வழியாக மெதுவாகத்
தொடங்கி, அம்மாவின் மனநிலையை அறிந்துகொள்ள முயற்சி செய்தேன். ஒருநாள் “தெனமும் ஏன்டா என்னை இப்படி பாடா படுத்தற?”
என்று எரிச்சலோடு என்னைப் பார்த்தார் அம்மா. பிறகு முறைத்தபடி அங்கிருந்து புறப்பட்டுச்
சென்றுவிட்டார். அந்த வேகத்தைப் பார்க்க எனக்கும் சங்கடமாக இருந்தது. ஆறு எங்கே போகப்போகிறது,
ஆற்றுத் திருவிழாதான் எங்கே போகப் போகிறது, அடுத்த ஆண்டு போய்க்கொள்ளலாம் என எனக்கு
நானே சொல்லிக்கொண்டேன். இனி, அதைப்பற்றிய பேச்சையே வீட்டில் எடுக்கக்கூடாது என நினைத்து
போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டேன்.
சிறிது நேரத்துக்குப் பிறகு
அம்மா மீண்டும் வீட்டுக்குள் வந்தார். தம்பியும் தங்கையும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க,
நான் மட்டும் இறவாணத்தைப் பார்த்தபடி படுத்திருந்தேன். ஒருகணம் எனக்கு அருகில் நின்று
“அதயே நெனச்சி தூக்கத்த கெடுத்துக்காதடா. கும்பல்ல போய் தனியா மாட்டிகினு கஷ்டப்படவேணாம்னு
நெனச்சித்தான் சொன்னேன். போவணும்ன்னு ஆசைப்பட்டா ஜாக்கிரதையா போய் வா” என்று சொல்லிவிட்டுச்
சென்றார். உடனே என் மனசில் இருந்த பாரமெல்லாம் கரைந்துவிட்டது. உள்ளூர மகிழ்ச்சியுடன்
கண்களை மூடி உறக்கத்தில் மூழ்கினேன்.
அடுத்த நாள் மாலையில் விளையாடிவிட்டு
வீட்டுக்குத் திரும்பும் வழியில் வண்டிக்காரர் வீட்டுக்குச் சென்றேன். அந்த வீட்டில்
ஒரு அக்கா இருந்தார். அவர் பெயர் சந்திரா. என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு
வாரமும் அவர் பார்த்துவிட்டு வரும் சினிமாக்கதைகளை என்னிடம்தான் விரிவாக சொல்வார்.
ஒவ்வொரு காட்சியாக அந்த அக்கா நிறுத்தி நிதானமாக விவரிப்பதைக் கேட்கும்போது சினிமா
பார்ப்பதுபோலவே இருக்கும். அவர் முன்னால் உட்கார்ந்து ம் கொட்டியபடி அவர் சொல்வதையெல்லாம்
கேட்பேன். நல்ல அக்கா. அம்மாவிடம் சம்மதம் வாங்கிவிட்டால், ஆற்றுத்திருவிழாவுக்கு என்னை
வண்டியில் அழைத்துச் செல்வதாக அவர் ஏற்கனவே என்னிடம் உறுதியளித்திருந்தார். அம்மா சம்மதித்துவிட்டார்
என்பதை அவருக்குத் தெரிவித்தேன். ”அப்புறம் என்ன, கவலையை விடு. கதை பேசிட்டே போய்ட்டு
வரலாம். நானும் அம்மாகிட்ட சொல்றேன்” என்றார் அந்த அக்கா. அதைக் கேட்ட பிறகுதான் எனக்கு
நிம்மதி பிறந்தது. அவர் எங்கள் அம்மாவுக்கும் நல்ல தோழி. அவர் சொன்னால் அம்மா தட்டமாட்டார்.
பொங்கலை உத்தேசித்து தைப்பதற்காக
வாடிக்கையாளர்கள் கொடுத்த துணிகளே அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அதனால் எங்களுக்குரிய
புத்தாடைகளை பொங்கலுக்குப் பிறகு ஓய்வான சமயத்தில் தைத்துக் கொடுப்பதாகவும் அப்பா தெரிவித்துவிட்டார்.
பொங்கல் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. எல்லா நாட்களையும்போல அந்த நாட்களும்
கழிந்துவிட்டன. என் மனம் ஆற்றுத்திருவிழா கனவுகளிலேயே மூழ்கியிருந்ததால், அதைத் தவிர
வேறு எதுவும் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
ஆற்றுத் திருவிழா நாளன்று
குளித்துவிட்டு புறப்படும் சமயத்தில் என் தம்பியும் தங்கையும் தம்மையும் அழைத்துச்
செல்லுமாறு அழுது அடம் பிடித்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழப்பத்துடன்
அம்மாவிடம் சொன்னேன். அம்மாவின் பேச்சு அவர்களிடம் எடுபடவில்லை. ஒருவழியாக என் தங்கையை
மட்டும் அமைதிப்படுத்தி தன்னோடு நிறுத்திக்கொண்டார். தம்பியை நிறுத்த முடியவில்லை.
”அடங்காப்பிடாரிடா அவன். அவனையும் அழச்சிகினு போடா. இங்க இருந்தா, அதயும் இதயும் உருட்டு
வம்பு வாங்கிகிட்டே இருப்பான்” என்று சொல்லிவிட்டார்.
மதிய உணவுக்கு புளிசோறு
கிளறி அலுமினிய தூக்குவாளியில் நிரப்பி, அதை ஒரு பையில் போட்டுக் கொடுத்தார் அம்மா.
மாடத்தில் இருந்த விபூதிப் பெட்டியிலிருந்து திருநீற்றைத் தொட்டெடுத்து எங்கள் நெற்றியில்
பூசிவிட்டார். “பையும் வாளியும் பத்தரம். ஜாக்கிரதையா பக்கத்துலயே வச்சிக்கோ” என்றார்.
“சரிம்மா, நேரமாச்சி. நாங்க
கெளம்பறம்” என்று அம்மாவிடம் சொன்னேன். ”இருடா, இருடா. ஏன் பறக்கற?” என்றபடி இடுப்பில்
செருகியிருந்த முந்தானைமுடிச்சை அவிழ்த்தார். இரண்டு பத்து பைசாக்களை எடுத்து ஆளுக்கொன்றைக்
கொடுத்தார். “ஏதாவது வாங்கிச் சாப்புடுங்கடா” என்றார். நாங்கள் உடனே அந்த நாணயத்தை
கால்சட்டைப்பைக்குள் வைத்துவிட்டு, அம்மா சொன்னதற்குத் தலையசைத்தேன்.
“வண்டிய விட்டு எங்க எறங்கிப்
போனாலும் அவனை கையை புடிச்சி கூப்ட்டும் போடா. அவன் பாட்டுக்கு திக்குதிசை தெரியாம
பெராக்கு பார்த்துகினே எங்கயாச்சும் போயிடப் போறான்”
“சரிம்மா” என்று மறுபடியும்
தலையசைத்தேன். பிறகு அம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டு நான் வண்டிக்காரர் வீட்டுக்குச்
சென்றேன். நல்ல பிள்ளை மாதிரி என் தம்பி ஓடிவந்து என் விரல்களைப் பிடித்துக்கொண்டான்.
வண்டிக்காரர் வீட்டு வாசலில்
மூன்று வண்டிகளிலும் ஆட்கள் ஏறி உட்கார்ந்திருந்தார்கள். வண்டிகளும் காளைகளும் அழகாக
அலங்கரிக்கப்பட்டிருந்தன. சமுக்காளத்தால் போர்த்தப்பட்ட கூண்டு வண்டி பார்ப்பதற்கு
குடிசையைப் போலவே இருந்தது. எங்களைப் பார்த்ததும் சந்திரா அக்கா கையசைத்து அழைத்தார்.
நாங்கள் ஓடிச் சென்று அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டோம்.
மூன்று வண்டிகளையும் வரிசையாக
நின்றிருக்க, வீட்டிலிருந்து வெளியே வந்த வண்டிக்காரரின் பாட்டி ஒரு தட்டில் கற்பூரம்
ஏற்றி வண்டிகளின் முன்னால் நின்று படைத்தார். பிறகு மாடுகளின் நெற்றியில் குங்குமம்
வைத்தார். படியோரமாக ஒதுங்கி நின்றுகொண்டு “ம்” என்று தலையசைத்தார். அடுத்த கணமே ஒவ்வொரு
வண்டியாக நகரத் தொடங்கியது. வண்டிக்குள் இருந்தவர்கள் எல்லோரும் ‘பொங்கலோ பொங்கல்’
என்று முழக்கமிட்டார்கள். நாங்களும் அவர்களோடு சேர்ந்து முழக்கமிட்டோம். எங்கள் தெருவைக்
கடந்து பிரதான சாலையை நோக்கி வண்டி ஓடியது.
சாலையில் எங்களுக்கு முன்னால்
பல வண்டிகள் போய்க்கொண்டிருந்தன. அந்த வண்டியிலிருந்தவர்கள் எங்களைப் பார்த்து ஆரவாரத்தோடு
கையசைத்தார்கள். எங்கள் வண்டியிலிருந்தவர்களும் கையசைத்துச் சிரித்தார்கள். சத்தமில்லாமல்
எங்களுக்குப் பின்னால் வந்த ஒரு வண்டி எங்களை வேகமாகக் கடந்து செல்ல முயற்சி செய்தது.
அதை உணர்ந்த எங்கள் வண்டிக்கார அண்ணன் லாவகமாக வண்டியைத் திருப்பி முன்னால் போகச் செய்து
வேகத்தைக் கூட்டினார். கோலியனூர் கூட்டுச்சாலையைத் தொடும் வரைக்கும் இந்த விளையாட்டுப்பந்தயம்
வண்டிக்குள் உட்கார்ந்திருப்பவர்களுக்கு உற்சாகமாகவே இருந்தது. அதற்குப் பிறகு அனைவரும்
தத்தம் சொந்தக்கதைகளைப் பேசத் தொடங்கினர். சந்திரா அக்கா மாட்டுக்கார வேலன் திரைப்படத்தின்
கதையைச் சொன்னார். வண்டியில் அமர்ந்திருந்த அனைவருமே அவர் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டோம்.
அந்தக் கதை முடிந்ததும் இன்னொரு அக்கா வசந்த மாளிகை திரைப்படத்தின் கதையை விரிவாகச்
சொன்னார். அவை இரண்டுமே வளவனூர் திரையரங்கத்துக்கு வந்து போன படங்கள். அவர் சொல்லி
முடிப்பதற்குக் காத்திருந்ததைப்போல இன்னொரு அண்ணன் புதிதாக உலகம் சுற்றும் வாலிபன்
படத்தின் கதையைச் சொல்லத் தொடங்கினார். அது இன்னும் வளவனூருக்கு வரவில்லை. பாண்டிச்சேரிக்குச்
சென்று பார்த்துவிட்டு வந்ததாக அந்த அண்ணன் சொன்னார். புதிய படம் என்பதால் எல்லோரும்
ஆர்வத்துடன் அந்தக் கதையைக் கேட்டார்கள்.
கதையை முடிக்கும் சமயத்துக்குச்
சரியாக கிட்டத்தட்ட நாங்கள் தென்பெண்ணையை நெருங்கிவிட்டோம். தொலைவில் அது பாய்ந்தோடும்
காட்சியைப் பார்க்க மனம் சிலிர்த்தது. சாலையில் நீண்ட தொலைவுக்கு ஒவ்வொரு மரத்தடியிலும்
ஏராளமாக வண்டிகள் நின்றிருந்தன.
மூன்று வண்டிகளையும் ஒன்றாக
நிறுத்துவதற்குத் தோதாக நிழல் நிறைந்த இடமாகப் பார்த்து நிறுத்தினார் வண்டிக்கார அண்ணன்.
அதற்குப் பிறகு ஒவ்வொருவராக வண்டியை விட்டு இறங்கினர்.
“வண்டி நிக்கிற இடத்தை
எல்லாரும் ஒரு தரம் நல்லா பாத்துக்குங்க. திரும்பி வரும்போது இடம் தெரியாம தவிக்காதிங்க”
என்று அறிவித்தார் ஒரு அண்ணன்.
இன்னொரு அண்ணன் “சாப்பாட்டு
மூட்டைங்க எல்லாம் வண்டியிலயே இருக்கட்டும். எங்க போனாலும் கும்பலாவே இருங்க. கும்பலவிட்டு
தனியா பிரிஞ்சி போயிடாதீங்க. நல்லா ஆசை தீர குளிச்சிட்டு, அங்கங்க நிக்கிற சாமிங்களையும்
பார்த்துட்டு ரெண்டு மணிக்கு வந்தா போதும். போங்க” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
சந்திரா அக்காவிடம் சொல்லிவிட்டு
தம்பியை அழைத்துக்கொண்டு நான் ஆற்றை நோக்கி நடந்தேன். நூற்றுக்கணக்கான வண்டிகள் சாலையெங்கும்
நின்றிருந்தன. ”எவ்ளோ வண்டிங்க. எவ்ளோ வண்டிங்க. உலகத்துல இருக்கிற வண்டிங்க எல்லாம்
இங்க ஆத்துக்கு வந்துட்டமாதிரி இருக்குது” என்றான் தம்பி.
திரும்பும் இடங்களிலெல்லாம்
அம்மன் சிலைகள் தென்பட்டன. அம்மன் சிலை ஊர்வலங்கள்
வந்துகொண்டே இருந்தன. அவற்றைக் கடந்து செல்கிறவர்களெல்லாரும் ஒரு கணம் அம்மன் முன்னால்
நின்று வணங்கி திருநீறு வாங்கிச் சென்றனர். மோர் நிரப்பிய அண்டாக்களோடு மூலைக்கு மூலை
நின்ற ஆட்கள் எல்லோருக்கும் தம்ளர்களில் குடிப்பதற்குக் கொடுத்தார். மோமேளச்சத்தமும்
பாட்டுச்சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. இசைத்தட்டுகள் ஒலித்தபடி இருந்தன. வழிநெடுக
எல்லா அம்மன்களையும் நின்று வணங்கியபடி நடந்தோம்.
ஆறு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
அலைபுரளும் இடங்களில் எல்லாம் வெள்ளிச்சரிகை போல மின்னியது. எல்லா இடங்களிலும் மனிதத்தலைகள்
தெரிந்தன. ஒருசில நீச்சல் வீரர்கள் ஒரு பக்கக்கரையிலிருந்து இன்னொரு பக்கத்துக் கரையை
நோக்கி நீந்திச் சென்றுகொண்டிருந்தனர்.
“இந்த ஆறு எங்கேர்ந்து
வருதுண்ணே?”
“சாத்தனூர்ல ஒரு பெரிய
அணைக்கட்டு இருக்குது. அங்கேருந்துதான் இந்த ஆறு இந்த ஊருக்கு வருது”
“இது எங்க போய் முடியும்?”
“எல்லா ஆறுகளும் கடல்லதான்
போய் முடியும். இந்த ஆறு கடலூர் வரைக்கும் போய், அங்க இருக்கற கடலோடு கலந்துடும்”
அவன் கேள்விகள் கேட்பதில்
பெரிய மன்னன். விட்டால் ஒரு நாள் முழுக்க கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். அதனால்
அதற்குமேல் அவனைத் தொடரவிடாமல் தடுத்து “சரி சரி, வா. எல்லாரும் குளிக்கறாங்க பாரு.
நாமும் குளிக்கலாம்” என்றேன்.
இருவரும் ஆடைகளைக் கழற்றி
கரையோரமாகவே வைத்துவிட்டு ஆற்றில் இறங்கினோம். தலைக்கு மேல் வெயில் சுடுவதுபோல இருந்தாலும்
ஆற்றுத்தண்ணீர் சில்லென்றிருந்தது. முட்டிக்கால் மூழ்கும் வரை ஆற்றுக்குள் நடந்துசென்று
அப்படியே உட்கார்ந்து தண்ணீரில் புரண்டோம். அக்கம்பக்கத்தில் குளித்தவர்கள் அனைவரும்
ஓவென்று கூச்சலிட்டார்கள். சிலர் பாட்டு பாடினார்கள். அவர்களைப் பார்த்து நாங்களும்
கூச்சலிட்டோம்.
யார் அதிக நேரம் தண்ணீருக்குள்
மூச்சையடக்கிக்கொண்டு மூழ்கியிருக்கிறார்கள் என்னும் பந்தயம் நடந்துகொண்டிருந்தது.
ஒருவர் மூழ்கி மூச்சடக்கியிருக்க, சூழ்ந்திருந்தவர்கள் அனைவரும் சத்தமாக ’ஒன்னு ரெண்டு
மூனு’ என எண்ணினார்கள். அதைப் பார்த்துவிட்டு கிளர்ச்சியோடு என் தம்பி என்னிடம் “நான்
மூச்ச அடக்கிகிட்டு தண்ணிக்குள்ள இருக்கறேன். எவ்ளோ நேரம்னு நீ எண்ணுண்ணே?” என்று சொல்லிக்கொண்டே
தண்ணீருக்குள் மூழ்கிவிட்டான். பதினைந்து சொல்லி முடிக்கும் போதுதான் வெளியே வந்தான்.
பிறகு “இப்ப நீ மூழ்கு. நான் எண்ணறேன்” என்று என்னை மூழ்கச் சொன்னான். முடிந்த வரைக்கும்
தண்ணீருக்குள் இருந்துவிட்டு வெளியே வந்தபோது அவன் “பத்தொன்பது” என்று சத்தமாகச் சொன்னான்.
தண்ணீருக்குள் உட்கார்ந்து
வட்டமடித்தோம். பெரிய வீரர்கள் போல எங்களை நினைத்துக்கொண்டு சுற்றிச்சுற்றி தரைநீச்சல்
அடித்தோம். எவ்வளவு நேரம் தண்ணீரில் கிடந்தோம் என்றே தெரியவில்லை. பசிக்கத் தொடங்கியதும்
எழுந்து வெளியே வந்தோம். உடல் ஈரம் உலரும்வரை சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்தபடி வெயிலில் நின்றிருந்தோம். பிறகு ஆடைகளை
அணிந்துகொண்டு வண்டியை நோக்கி நடந்தோம்.
பெண்கள் அனைவரும் வண்டிக்குத்
திரும்பியிருந்தார்கள். நீளமான தலைமுடியை உதறித் துவட்டியபடியே சந்திரா அக்கா எங்களைப்
பார்த்து “என்னடா, ஆசை தீர குளிச்சிங்களா?” என்று கேட்டார். நாங்கள் “ம்” என்று மகிழ்ச்சியோடு
தலையசைத்தோம்.
தூக்குவாளியைத் திறந்து,
நானும் தம்பியும் புளிசோறு சாப்பிட்டோம். சந்திரா அக்கா தன் பாத்திரத்தைத் திறந்து
எல்லோருக்கும் ஒரு ஜாங்கிரியும் எள்ளுண்டையும் எடுத்துக் கொடுத்தார். அதற்குப் பிறகு
ஒரு பிடி காராசேவ் கொடுத்தார். நாங்கள் எவ்வளவோ மறுத்தும் அவர் விடவில்லை. வாளிக்குள்
வைத்துவிட்டார். பேசிக்கொண்டே சாப்பிட்டதில் பொழுதுபோனதே தெரியவில்லை.
சாப்பிட்ட களைப்பில் சிலர்
வண்டிக்குப் பக்கத்திலேயே கால்களை நீட்டி உட்கார்ந்து வெற்றிலை பாக்கு போட்டார்கள்.
சிலர் அந்த நிழலிலேயே படுத்துவிட்டனர். சிலர் மட்டுமே ஆற்றை நோக்கி மீண்டும் புறப்பட்டோம்.
எங்களைப் பார்த்து வண்டிக்கார அண்ணன் “சாமியை பாக்கறவங்க, ஆத்த சுத்திப் பாக்கறவங்க
எல்லாரும் சுத்தி பார்த்துட்டு சீக்கிரமா வண்டிக்கு வந்துடணும். புரியுதா? அப்பதான்
பொழுதோடு வீட்டுக்குப் போய் சேரமுடியும்” என்றார். ”சரிண்ணே, சரிண்ணே” என்றபடி நாங்கள்
உற்சாகமாகத் தலையசைத்துக்கொண்டே நடக்கத் தொடங்கினோம்.
என் கண்கள் அந்தக் கூட்டத்தில்
குடைராட்டினத்தைத் தேடின. கண்டரக்கோட்டை பக்கத்திலிருந்து வந்து சேரும் பாதைக்கு அருகில்
அது இருந்தது. நாங்கள் வேகமாக நடந்து அதன் முன்னால் நின்றோம்.
அப்போதுதான் தன் சுற்றை
முடித்துவிட்டு குடைராட்டினம் நின்றது. ஒவ்வொருவராக மலர்ந்த முகத்துடன் பெட்டியைவிட்டு
இறங்கி வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
“வா வா.
வந்து உக்காரு. நம்ம ராட்டினத்துல பறந்தா ராக்கெட்டுல பறக்கறமாதிரி இருக்கும். உட்கார்ந்த
இடத்துலிருந்தே ஊரை சுத்தலாம். உலகத்தை சுத்தலாம். சந்திரமண்டலம் பார்க்கலாம். சூரிய
மண்டலம் பார்க்கலாம். பத்தே பைசா. வா வா. பத்தே பைசா”
கூடியிருந்தவர்களைப் பார்த்து
அழைப்பு விடுத்தார் குடைராட்டினக்காரர். தொடர்ந்து
”பாரு பாரு, பறந்து பாரு. சீனா பாரு, சிங்கப்பூர் பாரு, அமெரிக்கா பாரு ஆப்பிரிக்கா
பாரு” என்று ராகமாக இழுத்துப் பாடினார்.
அதற்காகவே காத்திருந்ததுபோல
கூடியிருந்த கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராகச் சென்று சில்லறை கொடுத்துவிட்டு பெட்டியில்
உட்கார்ந்தார்கள். எல்லாப் பெட்டிகளும் சில நொடிகளிலேயே நிறைந்துவிட்டன. அவர் உடனே
குடைராட்டினத்தைச் சுற்றத் தொடங்கினார். முதலில் நிதானமாகச் சுற்றிவந்த ராட்டினம் கொஞ்சம்
கொஞ்சமாக வேகமெடுத்தது. உட்கார்ந்திருவர்கள் அனைவரும் ஓவென்று ஆனந்தக்கூச்சல் எழுப்பினர்.
அக்கூச்சலைக் கேட்கக்கேட்க கிளர்ச்சியாக இருந்தது.
“என்னடா, நாமும் ராட்டினத்துல
சுத்தலாமா?” என்று தம்பியிடம் கேட்டேன். அவன் உறுதியான குரலில் “ம்ஹூம்” என்று மறுத்தான்.
எனக்கு ஆசையாக இருந்தது. ஏற்கனவே சுற்றிய அனுபவம் நினைவுக்கு வந்து ஆசையைத் தூண்டியது.
“பத்து பைசாதான்டா. போகலாம்.
அம்மா கொடுத்த காசு இருக்குதில்ல. அப்புறமென்ன?” என்றேன்.
“ம்ஹூம். வேணாம். ஏதாவது
வாங்கிச் சாப்புடறதுக்குத்தான் அம்மா கொடுத்திருக்காங்க” என்றான் அவன்.
அவன் உறுதியாக இருந்தான்.
எப்படிச் சொன்னாலும் அவன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. வேறு வழியில்லாமல் “சரி, நான்
மட்டும் சுத்தட்டுமா?” என்று கேட்டேன். ஒரு கணம் தலையை உயர்த்தி என்னை முறைத்துப் பார்த்தான்.
பிறகு “உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிக்கொண்டான்.
நான் சிறிது நேரம் அவனையும்
குடைராட்டினத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, கடைசியாக குடைராட்டினக்காரரை நெருங்கிச்
சென்று என்னிடமிருந்த பத்து பைசாவைக் கொடுத்தேன். அவர் அதை வாங்கி தன் பையில் போட்டுக்கொண்டு
பச்சை நிறப் பெட்டியில் உட்காரும்படி சொன்னார். எனக்கு முன்னால் நீல நிறப் பெட்டியில்
ஒரு பெண்ணும் சிவப்பு நிறப் பெட்டியில் இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். கண்ணை மூடி
கண்ணைத் திறப்பதற்குள் எனக்குப் பிறகு வந்த நான்கு பேர் நான்கு பெட்டிகளில் அமர்ந்துகொண்டனர்.
எல்லாப் பெட்டிகளும் நிரம்பியதும்
ராட்டினத்தைச் சுழலவிட்டார். திடீரென எனக்கு உடலெல்லாம் சிறகு முளைத்ததுபோல இருந்தது.
வானவெளியைக் கிழித்து வட்டமிட்டுப் பறப்பதைப்போல இருந்தது. பெட்டிகளில் அமர்ந்திருந்தவர்கள்
எல்லோரும் ஓவென்று ஓசையெழுப்பினர். அவர்களோடு சேர்ந்து நானும் ஓசையெழுப்பினேன். குடைராட்டினம்
வேகமெடுத்ததும் குடைராட்டினக்காரர் ‘பாரு பாரு, பறந்து பாரு. சீனா பாரு, சிங்கப்பூர்
பாரு, அமெரிக்கா பாரு ஆப்பிரிக்கா பாரு’ என்று தாளத்தோடு ராகமிழுக்கத் தொடங்கினார்.
சுழலச்சுழல அந்தரத்தில் நீந்திச் செல்வதுபோல இருந்தது.
ராட்டினம் நின்ற பிறகு
கூட பறந்து செல்வது போலவே இருந்தது. உடலில் அந்த விசையை உணரமுடிந்தது. ஒவ்வொரு பெட்டியையும்
தன்னை நோக்கித் திருப்பி, ஒவ்வொருவராக இறங்கிச் செல்ல ராட்டினக்காரர் உதவினார். என்
முதுகில் தட்டி “எப்படி இருக்குது நம்ம ஏரோப்ளேன்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
நானும் சிரித்துக்கொண்டே அவரிடம் “நல்லா இருக்குது” என்று பதில் சொல்லிவிட்டு தம்பிக்குப்
பக்கத்தில் சென்று நின்றேன்.
எனக்கு அங்கேயே நின்று
அடுத்த சுற்றை வேடிக்கை பார்க்கவேண்டும் போல இருந்தது. ஆனால் தம்பி “வா, அங்க போகலாம்”
என்று வேறு பக்கம் இழுத்தான். அதனால் அங்கிருந்து வெளியேறி நடக்கத் தொடங்கினோம்.
ஒரு கூடாரத்துக்கு வெளியே
ஒரு பெரிய விளம்பரப்பலகை வைத்திருந்தார்கள். பெண்ணின் தலையும் பாம்பு உடலும் கொண்ட
அதிசய உயிரைப் பார்க்க வருக வருக என்று அந்தப் பலகையில் எழுதியிருந்தது. அந்தப் படத்தை
நானும் தம்பியும் வேடிக்கை பார்த்தோம். “இப்படி ஒரு பாம்பு உண்மையிலேயே இருக்குமாண்ணே?”
என்று தம்பி கேட்டான். “வாய்ப்பே இல்லைடா. இது எல்லாமே ஏதோ செட்டிங் வேலை” என்றேன்.
அடுத்தடுத்து ஏராளமான பொம்மைக்கடைகள்
இருந்தன. பிளாஸ்டிக் பொம்மைகள். மரப்பாச்சிப்பொம்மைகள். மாவுக்கல்லால் செய்யப்பட்ட
பொம்மைகள். கடைக்காரர்கள் கூவிக்கூவி விற்பனை செய்தார்கள். ஒரு மேசையில் பல நிறங்களில்
கொத்துக்கொத்தாக கண்ணாடி வளையல்களைப் பரப்பிவைத்துவிட்டு “ஒரு டஜன் எட்டணா, ஒரு டஜன்
எட்டணா” என்று கூவினார். யாரும் எதிர்பாராத நேரத்தில் “கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல் அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்” என்று
படகோட்டி திரைப்படத்தின் பாட்டைப் பாடியபடி வளையல் விற்றார். வளையல் மேசைக்கு அருகில்
சென்ற தம்பி ஒருமுறை வளையல்களின் நிறங்களைப் பார்த்துவிட்டு வந்தான். பிறகு “அந்தப் பச்சை வளையல் அம்மா கைக்கு சரியா
இருக்கும், இல்லண்ணே?” என்று கேட்டான். நான் ஒருமுறை அதைத் திரும்பிப் பார்த்துவிட்டு
பதில் சொல்லாமல் நடக்கத் தொடங்கினேன்.
ஒரு கடையில் ஒரு குச்சியின்
மீது ஒரு சிறுமியின் பொம்மையை நிறுத்திவைத்திருந்தார்கள். தலை, உடல், கைகள், கால்கள்
எல்லாமே தனித்தியங்கும் வகையிலும் சேர்ந்தியங்கும் வகையிலும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
அருமையான வண்ண வேலைப்பாடு. தம்பி அந்தப் பொம்மையைக் காட்டி “அது என்ன விலை?” என்று
கடைக்காரரிடம் கேட்டான். அவர் “மூனு ரூபா” என்று சொன்னபடி மூன்று விரல்களை உயர்த்திக்
காட்டினார்.
அதையடுத்து காய்கறிகளும்
பழங்களும் விற்பனை செய்யும் கடைகள் காணப்பட்டன. நாங்கள் வேகவேகமாக அந்த இடத்தைக் கடந்து
சென்றோம்.
ஒரு மரத்தடியில் ஒரு மேசையில்
வட்டமான வளையங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து சிறிது தொலைவில் செங்குத்தாக ஒரு
பலகை நிறுத்தப்பட்டிருந்தது. அதில் பல இடங்களில் முளைகள் அடிக்கப்பட்டிருந்தன. நின்ற
இடத்திலிருந்து வளையத்தை வீசி ஏதேனும் ஒரு முளைக்குச்சியில் சிக்கவைத்துத் தொங்கும்படி
செய்யவைப்பதுதான் ஆட்டம். ஒரு வளையத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். பத்து
பைசா கட்டணம். கட்டணம் செலுத்துவோருக்கு ஐந்து வளையங்கள் கொடுக்கப்படும். அந்தப் போட்டி
பார்ப்பதற்கே சுவாரசியமாக இருந்தது. ஒருவரால் கூட வளையத்தை முளைக்குச்சியில் சிக்கும்
வகையில் வீச முடியவில்லை. எல்லா வளையங்களும் குச்சியைத் தொட்டுவிட்டு மணலில் விழுந்தன.
என்னால் சிக்கவைக்கமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால் திறமையைக் காட்டுவதற்கு
சில்லறை இல்லை. ”என்னடா, ஆடணுமா?” என்று தம்பியிடம் கேட்டுப் பார்த்தேன். “ம்ஹும்.
வேணாம். போவலாம். வா” என்றபடி எனக்கு முன்னால் நடந்தான்.
ஒரு மரத்தடியில் தலைப்பாகை
கட்டியிருந்த ஒருவர் குலைகுலையாக நுங்கு வைத்திருந்தார். சீவிச்சீவி நுங்கை மட்டும்
வெளியே எடுத்து ஒரு பனைமட்டையின் மீது குவித்தார். “பத்து பைசாவுக்கு ரெண்டு, பத்து
பைசாவுக்கு ரெண்டு” என்று கூவிக்கூவி விற்றார் இன்னொருவர். பெண்கள் கூட்டம் அவரைச்
சுற்றி நின்று வாங்கிக்கொண்டு சென்றது. “என்னடா, சாப்புடலாமா?” என்று தம்பியிடம் கேட்டேன்.
அவன் “ம்ஹூம்” என்று உடனடியாக மறுத்தான்.
அதையடுத்து கடலைமிட்டாய்க்கடை
வந்தது. அதற்கடுத்து பஞ்சு மிட்டாய், கொய்யாப்பழம், மாம்பழம், முந்திரிப்பழம் விற்கிற
கடைகள் வரிசையாக இருந்தன. எந்தக் கடையின் முன்னால் நின்றாலும் “வேணாம் வேணாம்” என்று
தம்பி சொல்வதைக் கேட்டு நான் சலிப்படைந்தேன். அதனால் அதற்குப் பிறகு தென்பட்ட கடைகளை
அப்படியே நடந்து கடந்தோம்.
ஒரு திருப்பத்தில் ஒருவர்
சைக்கிள் கேரியரில் ஜீவா ஐஸ் என்று எழுதப்பட்ட ஒரு சதுரமான பெட்டியை வைத்துக்கொண்டு
நின்றிருந்தார். நொடிக்கொரு முறை “பாலைஸ் தேனைஸ் பாலைஸ் தேனைஸ்” என்று ராகமாக இழுத்துக்
கூவினார்.
தம்பி திடீரென அந்த ஐஸ்
பெட்டி சைக்கிள் முன்னால் நின்றான். ஒரு சிறுவன் ஒரு குச்சி ஐஸை வாயில் வைத்து ருசிப்பதுபோல
ஐஸ் பெட்டியின் முனையில் ஒரு ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. சிறிது நேரம் அந்தப் படத்தை
வேடிக்கை பார்த்தான். பிறகு மெதுவாக என் பக்கமாகத் திரும்பி “ஐஸ் சாப்பிடலாமா?” என்று
கேட்டான். “இப்ப எதுக்குடா ஐஸ்? வழியில கிழங்கு ஏதாவது விக்கும். அதை சாப்பிடலாம்”
என்று நான் வேண்டுமென்றே ஈடுபாடு இல்லாதவனைப்போல சொன்னேன்.
தம்பி எதுவும் பேசாமல்
ஒருகணம் அந்தச் சின்னஞ்சிறிய ஓவியத்தையே கண்கொட்டாமல் பார்த்தான். அதற்குப் பிறகு
“கெழங்கு வேணாம், வெயிலுக்கு ஐஸ்தான் ஜில்னு இருக்கும்” என்றான். பிறகு அவனாகவே கடைக்கார
அண்ணனிடம் “ஒரு ஐஸ் என்ன விலைண்ணே?” என்று கேட்டான். அதற்கு
அந்த அண்ணன் “அஞ்சி பைசா, பத்து பைசா, அம்பது பைசா, ஒரு ரூபா எல்லா விதத்துலயும் ஐஸ்
இருக்குது. ஒனக்கு எந்த ஐஸ் வேணும்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். உடனே தம்பி
”அஞ்சி பைசா ஐஸே போதும். இந்தாங்க பத்து பைசா. ரெண்டு ஐஸ் குடுங்க” என்று சொல்லிக்கொண்டே
தன்னிடமிருந்த பத்து பைசா நாணயத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
ஏதோ ஒரு சினிமா பாட்டை
முணுமுணுத்துக்கொண்டே, பெட்டியின் மேற்புறத்தில் இருந்த சின்னஞ்சிறு பலகையைத் திறந்தார்
அந்த அண்ணன். வெள்ளையாய் ஆவி மேலெழுந்து பரவியது. ”பாலைஸ் வேணுமா, தேனைஸ் வேணுமா?”
என்று கேட்டார். உடனே தம்பி ”எனக்கு பால் ஐஸ்” என்றான். நான் “எனக்கு தேன் ஐஸ்” என்றேன்.
கடைக்காரர் தம்பியிடம்
வெள்ளைவெளேரென்ற நிறத்தில் இருந்த ஐஸை எடுத்துக் கொடுத்தார். பட்டையான அதன் நுனிப்பகுதியில்
சேமியா ஒட்டிப் பரவியிருந்தது. எனக்குக் கொடுத்த ஐஸ் தேன் நிறத்தில் இருந்தது. அதன்
நுனியிலும் சேமியா ஒட்டிப் பரவியிருந்தது. ஐஸை வாய்க்குள் வைத்ததுமே அதன் குளிர்ந்த
சுவையான நீர் நாக்கில் பரவியது.
ஐஸை ருசித்தபடியே வேடிக்கை
பார்த்துக்கொண்டு நடந்தோம். ஒரு குரங்காட்டி வித்தை காட்டிக்கொண்டிருந்தார். சிறிது
தொலைவில் ஒரு பாம்பாட்டி மகுடி ஊதி பாம்பு வித்தை காட்டினார்.
திடீரென எழுந்த மேளத்தின்
சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தோம். நாலைந்து மரங்கள் தள்ளி ஒரு பெரியவர் மேளம் அடித்தபடி
நின்றிருந்தார்.
“அம்மாமாரே அப்பாமாரே,
அண்ணன்மாரே தம்பிமாரே, அக்காமாரே தங்கைமாரே, தர்மதுரைகளே தாராள பிரபுகளே, உங்களுக்காக
நடைபெறுகிற ஆட்டத்தை வந்து பாருங்க. உங்க அன்பான கையாலே இந்த ஏழைகளுக்கு அள்ளி அள்ளி
தாருங்க”
மேளத்தின் சத்தத்துக்கு
இணையாக அவருடைய குரலும் கேட்டது. நாங்கள் அந்தக் கூட்டத்தை நெருங்கிச் சென்று ஓரமாக
நின்றுகொண்டோம்.
ஒரு சிறுமி வட்டத்துக்கு
நடுவில் நின்று உடலை வில்போல வளைத்து வளைத்து வித்தை காட்டினாள். கைளைக் தரையில் ஊன்றி
கால்களை மேலே செங்குத்தாக உயர்த்தி, கைகளாலேயே நடந்து காட்டினாள். அவள் முதுகெலும்பு
உடைந்துவிடுமோ என நினைத்து அஞ்சுகிற அளவுக்கு அவள் பல கோணங்களில் உடலை ரப்பரைப்போல
வளைத்தாள். அவளுடைய ஒவ்வொரு அசைவும் பார்ப்பவர்களை திகைப்பில் ஆழ்த்தியது.
தரையில் நிகழ்த்திய வித்தைகளைத்
தொடர்ந்து அச்சிறுமி அங்கே வட்டத்தின் இரு புறங்களிலும் நடப்பட்டிருந்த கம்பங்களை நோக்கிச்
சென்றாள். அந்த இரு கம்பங்களையும் ஒரு கயிற்றால் இணைத்துக் கட்டியிருந்தார்கள். தரையில்
நின்றிருந்த பெரியவர் தன் மேளத்தைத் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்க, அச்சிறுமி சட்டென
கம்பத்தைப் பற்றி ஏறி ஒரே நொடியில் கயிற்றின் மீது இரு கைகளையும் விரித்தபடி புன்னகைத்தபடி
நின்றாள். அதைப் பார்த்தபோது வயிற்றுக்குள் ஒரு நடுக்கம் பரவியது. தம்பி என்னை நெருங்கி
வந்து என் உடலோடு ஒட்டிக்கொண்டான். பீதியோடு அண்ணாந்து அச்சிறுமியையே கண்ணிமைக்காமல்
பார்த்தான்.
பெரியவர் மேளம் அடித்தபடி
ஓங்கிய குரலெடுத்து “வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில ஆடுறான் பாரு. ஆடி முடிச்சி
இறங்கி வந்தா அப்புறம்தான்டா சோறு” என்னும் வரிகளை மீண்டும் மீண்டும் பாடினார். கயிற்றில்
நடந்த சிறுமி ஒவ்வொரு அடியாக அடியெடுத்து வைத்து முன்னேறினாள். சுற்றியிருந்தவர்களின்
பார்வை அவளுடைய பாதத்தின் மீதே படிந்திருந்தன. மெல்ல மெல்ல நடந்து அடுத்த கம்பத்தைத்
தொட்டு, அதன் வழியாக சர்ரென்று வழுக்கிக்கொண்டே இறங்கிவந்து எல்லோரையும் வணங்கினாள்.
பார்வையாளர்கள் கைதட்டி ஓவென்று சத்தமெழுப்பி ஆரவாரம் செய்தனர்.
ஒரு புறம் அந்தச் சிறுமி
ஒரு தட்டை ஏந்தியபடியும் இன்னொரு புறம் அந்தப் பெரியவர் மற்றொரு தட்டை ஏந்தியபடியும்
பார்வையாளர்களைச் சுற்றி வந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் தட்டுகளில் சில்லறைக்காசுகள்
விழுந்தன.
தன் கால்சட்டைப்பைக்குள்
அனிச்சையாக கையை விட்டு சில்லறைக்காகத் தேடினான்
தம்பி. பிறகு த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடியே “ஐஸ் தின்னாம இருந்திருந்தா நாமளும்
சில்லறை போட்டிருக்கலாம்” என்று என்னைப் பார்த்துச் சொன்னான். அவனைச் செலவு செய்ய வைத்ததை
நினைத்து எனக்குள் குற்ற உணர்வு பெருகியது. சங்கடத்துடன் அவனைப் பார்த்து பெருமூச்சு
விட்டுக்கொண்டேன். என்னால் அச்சிறுமியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை.
ஒடுங்கியிருந்த அவளுடைய முகம் எனக்குள் என்னமோ செய்தது.
“போவலாம்டா, வண்டிக்கு
நேரமாய்டுச்சி” என்றபடி அந்தக் கும்பலிலிருந்து விலகினேன். தம்பியும் எதுவும் பேசாமல்
என்னோடு நடந்தான். பிரதான சாலையைத் தொட்டுவிட்டால் வண்டிகள் நிற்கிற இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம்
என்பதால் அந்தச் சாலையை நோக்கிச் செல்லும் கூட்டத்தோடு நடந்தேன்.
ஒரு திருப்பத்தில் சந்திரா
அக்காவைப் பார்த்துவிட்டேன். என்னை அறியாமல் ஒரு வேகத்தில் அக்கா என்று அழைத்தேன்.
அவர் உடனே திரும்பிப் பார்த்து எங்களை நோக்கி கையை அசைத்தார். அக்காவின் கையில் ஒரு
பல்லாங்குழிப் பெட்டி இருந்தது. வளையல், ரிப்பன், பழங்கள் என ஏராளமாக வாங்கி அடுக்கிய
பையை மற்றொரு கையில் வைத்திருந்தார். நான் அவருக்கு அருகில் சென்று அந்தப் பையை வாங்கிக்கொண்டேன்.
பிரதான சாலைக்குத் திரும்பியதும்
அனைவரும் ஒருமுறை திரும்பி ஆற்றைப் பார்த்தோம். ஒரு நீண்ட வெள்ளைத்துணி காற்றில் நெளிந்து
அசைவதுபோல ஆறு நகர்ந்துகொண்டிருந்தது. திரும்பிய திசைகளில் எல்லாம் இசைத்தட்டுகளில்
அம்மன் பாடல்கள் ஒலித்தன.
வீடு வந்து சேர்வதற்குள்
இருட்டிவிட்டது. சந்திரா அக்கா எங்களை வீடு வரைக்கும் அழைத்துவந்து விட்டுவிட்டுச்
சென்றார். தம்பி அக்கணமே எல்லாக் கதைகளையும் அம்மாவிடம் விவரித்துச் சொல்லத் தொடங்கினான்.
சமையல் செய்துகொண்டே அவன் சொன்ன கதைகளுக்கெல்லாம் அம்மா ம் கொட்டினார். “என்னை விட்டுட்டு
நீங்க ரெண்டு பேரும் மட்டும் ஆத்துக்குப் போய் வந்துட்டீங்க” என்றாள் தங்கை. அவள் சங்கடத்தை
நீக்குவதற்காக ”அடுத்த வருஷம் ஆத்துக்குப் போவும்போது அவளையும் அழச்சிட்டு போவணும்,
புரியுதா?” என்று கோபமாகச் சொல்வதுபோல எங்களைப் பார்த்து குரலை உயர்த்திச் சொன்னார்
அம்மா. ”சரிம்மா சரிம்மா” என்று நாங்களும் அவருக்குப் பதில் சொன்னோம்.
பகலெல்லாம் வெயிலில் திரிந்ததால்
உடல்முழுதும் வேர்வை படிந்து பிசுபிசுப்பாக இருந்தது. குளித்தால் நல்லது என்று தோன்றியதால்
அம்மாவிடம் சொல்லிவிட்டு தோட்டத்துப் பக்கம் சென்றேன்.
தொட்டியில் தண்ணீர் நிரப்பியிருந்தது.
அதிலிருந்து ஒரு வாளியில் தண்ணீரை நிரப்பிவைத்துக்கொண்டு குளியல் தடுப்புக்குப் பின்னால்
சென்று குளித்தேன். குளிர்ந்த நீர் உடலில் பட்ட பிறகுதான் புத்துணர்ச்சியை உணரமுடிந்தது.
ஆற்றுக்குள் படுத்துக்கொண்டு புரண்டுபுரண்டு குளித்ததை நினைத்துக்கொண்டேன். எல்லாமே
கனவுபோல இருந்தது.
உடலைத் துவட்டிக்கொண்டு
புதிய சட்டையணிந்தபடி குளியல் தடுப்பைவிட்டு வெளியே வந்தேன். துண்டை உதறி கொடிக்கம்பியில்
உலரவைத்துவிட்டு நிமிர்ந்தபோது வானத்தில் நன்றாகப் பார்க்கிற உயரத்துக்கு நிலா சென்றிருப்பதைப்
பார்க்கமுடிந்தது. அரைகுறையாக ஒடுங்கிய நிலா. அங்கங்கே கரிய திட்டுகள். கம்பியின் மீது
அந்த நிலவே நடந்துபோவதுபோல இருந்தது. ஒவ்வொரு அடியாக நடந்துசெல்லும் அந்த நிலவையே கண்ணிமைக்காமல்
பார்த்தேன். ஒருகணம் ஆற்றுத்திருவிழாவில் கண்ட வித்தைக்காரச் சிறுமியின் முகம் ஆழ்மனத்திலிருந்து
மிதந்து வருவதை உணர்ந்தேன்.