காற்று குளிர்ச்சியாக இருந்தது. எனினும் உடல்முழுக்க கசகசவென்று வியர்வை துளிர்ப்பதை உணர்ந்தாள் மாலதி. அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் மரங்கள் நிற்கும் கோலம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அங்கங்கே ஏற்பாடு செய்யப்பட்ட மேசைகளில் அருந்திமுடித்த மதுக்கோப்பைகளும் பாட்டில்களும் உண்டு முடித்த இறைச்சித் துண்டுகளும் கலைந்துகிடந்தன. நாற்காலிகளிலும் சோபாக்களிலும் நண்பர்கள் அடங்கிய குரலில் பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தார்கள். ஒரு கையில் அருந்தி முடிக்காத மதுக்கோப்பையும் மறுகையில் சிகரெட்டுமாக ஒருசிலர் மட்டும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சிரித்த முகத்துடன் எல்லாரோடும் சில நிமிடங்கள் பேசியவண்ணம் வலம்வந்து கொண்டிருந்தான் ராகவன். அவனுடைய சகஜநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தோழிகளிடமிருந்து விலகி ஒரு மரத்தடிக்கு வந்து நின்றாள் மாலதி.
மிகப்பெரிய தோப்புக்கிடையே அந்த விடுதி திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மரத்தின்மீதும் படிந்திருந்த கருத்த இருள் வசீகரமாக இருந்தது. முன்புறம் ஒரு நீரூற்று பொங்கியெழுந்து நாலாபக்கமும் தண்ணீரை இறைத்துக்கொண்டிருந்தது. வண்ணவண்ண விளக்குகளின் ஜாலத்தால் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு வேகத்துடன் தண்ணீர் வழிந்தது. முன்பக்க பிரதான கட்டடத்தின் கம்பீரம் மின்சார ஒளியிலும் நிலவொளியிலும் பலமடங்காகப் பெருகிவிட்டதைப்போல காணப்பட்டது. விடுதலை பெற்று பறப்பதற்குத் தயாராக நிற்கிற மாபெரும்
பறவையாக அக்கட்டடத்தை நினைத்துப் பார்க்கத் தோன்றியது. தரையோடு அதை இழுத்துக்கட்டி இறுக்கிவைத்திருக்கிற சங்கிலிகள் அந்த ஒற்றைக்கணத்தில் அறுபட்டு விடுதலையானதும் நிலவொளியில் வானத்தின் உச்சியை நோக்கி அது சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் பறக்கத் தொடங்கிவிடும் என்று தோன்றியது. அப்பால் கடல் தெரியாவிட்டாலும் அலைகளின் ஓசை விசித்திரமான ஒரு சங்கீத லயத்துடன் கேட்டது.
புத்தம்புதுசாக நகரில் கட்டியெழுப்பப்பட்டிருந்த விடுதி அது. யாரோ ஒரு நடிகைக்கு சொந்தமான பழைய தோப்பு. புகழின் உச்சத்தில் இருந்தபோது ஊர்முழுக்க வாங்கிக் குவித்த சொத்துகளில் ஒன்று. திரைப்படத்துறையிலேயே நாயகனாக ஒளிவீசிக் கொண்டிருந்த ஒருவனைத்தான் அவள் இரண்டாம் தாரமாக மணந்திருந்தாள். ஆறேழு வருஷ தாம்பத்தியம். மூன்று பிள்ளைகள். ஆனால் உறவில் சமநிலை உருவாகவே இல்லை. ஏதோ ஒரு படத்துக்கு அவள் முதலீடு செய்ய விரும்பியதை அவன் தடுத்தான். அவளோ அக்காரியத்தில் பிடிவாதமாக இருந்தாள். தன் விருப்பத்துக்கு மதிப்பளிக்கத் தெரியாதவனோடு சேர்ந்து வாழ விருப்பமின்றி பரஸ்பர பேச்வார்த்தைகளின் அடிப்படையில் இருவரும் பிரிந்து போனார்கள். நடுவயதில் சிறுநீரகக் கோளாறில் அவள் இறந்துபோக பிள்ளைகள் வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடும் ஆவலில் சொத்தை விற்றுவிட்டுச் சென்றுவிட்டார்கள். இவ்வளவு பெரிய தோப்பில் ஒரு சில மரங்களையாவது அவள் தம் கைப்பட நட்டிருக்கலாம் என்று தோன்றியது. மரங்களிலிருந்து வீசும் காற்றில் அவள் நிறைவேற்றிக் கொள்ளத் துடித்த ஆசையின் மிச்சம் பெருமூச்சாக வெளிப்படுவதைப்போல இருந்தது.
“என்ன மாலதி? ஏன் தனியா வந்து நிக்கற?” அருகில் வந்து நின்றான் ராகவன்.
“நாளையிலேருந்து தனியாதானே நிக்கணும். தனிமை எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்ன ஒத்திகை. அவ்வளவுதான்.”
அவள் உதடுகளைக் கடித்துக்கொண்டாள். மறுகணமே அவளிடமிருந்து ஒரு புன்னகை வெளிப்பட்டது. சட்டென்று பேச்சிழந்து நின்றுவிட்டவனைப் பார்த்து “பிரியப்போறது உங்களுக்கு ரொம்ப விடுதலையா இருக்கும் இல்லையா?” என்று கேட்டாள்.
“அப்படியில்ல மாலதி.”
“வேற எப்படிங்க ராகவன்? எதுவுமே நடக்காத மாதிரி ரொம்ப சகஜமா இத்தன நாளும் இல்லாத அளவுக்கு சுறுசுறுப்பா சுத்திசுத்தி வர்றதைப் பாக்கும்போது வேற எப்படிங்க நினைக்கறது ராகவன்?”
“இவுங்க நம்ம விருந்தாளிங்க மாலதி. நாமதானே இவுங்கள இங்க வரவழச்சிருக்கம். வரவழச்சிட்டு ம்ன்னு இறுக்கமா என் பிரச்சினை என் துக்கம்ன்னு உக்காந்திருக்கமுடியுமா? துக்கத்தயும் வலியயும் விழுங்கிக்கிறது வேற. வந்த விருந்தாளிகள உபசரித்து பேசறது வேற. ஒவ்வொரு நிமிஷத்திலயும் எது முக்கியமோ அதத்தானே செய்ய முடியும்?” ராகவன் அமைதியான குரலில் சொன்னான். பையிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்து மெதுவாக இழுத்தான்.
“நம்ம பிரச்சினையே இதுதான் ராகவன். எனக்கு முக்கியமா படறது உங்களுக்கு முக்கியமா படலை. உங்களுக்கு முக்கியமா தோணக்கூடிய பல விஷயங்கள்ள எனக்கு பெரிசா எந்த ஆர்வமும் இல்ல. இந்த குழப்பத்துல வேற எந்த முடிவ எடுக்கமுடியும்? மாலதி பின்னல் நுனியில் இருக்கும் முடிக்கற்றையால் விரலைச் சுற்றுவதும் விடுவிப்பதுமாக இருந்தாள்.
“நீ சந்தோஷமா இருக்கறதப் பாக்கறதுதான் இந்த உலகத்துல எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் மாலதி. அத நம்பறதும் நம்பாததும் உன்விருப்பம். இந்த நிமிஷம் வரைக்கும் நான் அப்படித்தான் நடந்து வந்திருக்கேன்” ராகவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். அவள் முகத்தை வேறொரு பக்கம் திருப்பியிருந்தாள். அவள் உதடுகளில் ஒருசில கணங்கள் அவநம்பிக்கையைப் புலப்படுத்தும் புன்னகைக் கோடுகள் எழுந்து மறைவதைக் கண்டாள். மறுகணம் பெருமூச்சுடன் சிகரெட் நுனியில் சேர்ந்துவிட்ட சாம்பலை நுனிவிரலால் தட்டி விட்டான்.
சில நிமிஷ மௌனத்துக்குப் பிறகு, மாலதி மெதுவான குரலில் “அதயெல்லாம் என்னால நம்ப முடியலை ராகவன். அதனாலதான் இந்த முடிவு” என்றாள். சொன்னதும் உதடுகளை அழுத்திக்கொண்டாள். அவள் சொல்லத்தொடங்கும் முன்பே செல்பேசியில் அழைப்பு வர அவசரமாக அதை எடுத்து பதில் சொன்னபடி கண்களாலேயே மாலதியிடம் கேட்டவாறு பக்கவாட்டில் நகர்ந்தான் ராகவன்.
அடிபட்டதைப்போல ஒரு வேதனை மாலதியின் நெஞ்சில் பரவியது. வருத்தத்தில் அந்த இடத்திலிருந்து விலகி மேலும்
நாலைந்து மரங்களைக் கடந்து நடந்தாள். ஜில்லென்ற காற்று உடலைத் தழுவி நகர்ந்தது. ஒரு பெரிய மரத்தடியில் வந்து நின்றாள். பல கொடிகள் அம்மரத்தைச் சுற்றி இறுக்கிக்கொண்டு மேலேறி புதராக மண்டிக் கிடப்பது நிலவொளியில் தெரிந்தது. நிலவின் வெளிச்சம் கண்களுக்குப் பழகிவிட்டதால் கிளைகளையும் இலைகளையும் தனித்தனியாகப் பார்க்கமுடிந்தது. அசையும் ஒரு கிளையின் நிழல் பூமியின்மீது ஒரு நடனப்பெண்ணின் அசைவைப் போலத் தெரிந்தது.
இளமையில் கேட்டு வளர்ந்த மரங்களைப் பற்றிய பல கதைகள் நெஞ்சில் நிழலாடின. மரமாக மாறத் தெரிந்த ஒரு பெண்ணின் சோக வரலாறாக விரியும் ஒரு கதை எக்கணத்திலும் மறக்கமுடியாதபடி நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. வறிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவள். காட்டுக்குள் மலர் சேகரிக்கப்போன ஒரு சமயத்தில் பசியால் வாடிய ஒரு முனிவருக்கு தன் மதிய உணவைக் கொடுத்துப் புசிக்கவைக்கிறாள். வயிறு நிறைந்த முனிவர் காலமெல்லாம் அவளும் அவள் குடும்பமும் வயிறு நிறைய சாப்பிட ஒரு வழிசொல்லித் தருகிறார். ஒரு மந்திரத்தை அவள் காதருகே ரகசியமாக கற்றுத் தந்து அதைச் சொல்வதன்மூலம் அவளே மலர் சொரியும் ஒரு மரமாக மாறிவிடுவாள் என்றும் பூக்களெல்லாம் பறிக்கப்பட்ட பிறகு மீண்டும் அம்மந்திரத்தைச் சொல்வதன்மூலம் பெண்ணாக மாறிவிடமுடியும் என்றும் சொல்கிறார். மந்திரத்தின் மகிமையால் அக்குடும்பம் பசியின்றி காலத்தைத் தள்ளுகிறது. அவள் உருமாற்றமடையும் தருணத்தை தற்செயலாகப் பார்க்க நேர்ந்த இளைஞனொருவன் அவள்மீது ஆசைகொண்டு மணந்து கொள்கிறான். விருப்பப்பட்ட போதெல்லாம் அவளை மரமாக நிற்கவைத்து மலர்களின் அழகில் சொக்கியும் பெண்ணாக மாற்றி அவள் முகஅழகில் சொக்கியும் உருமாற்றி உருமாற்றிச் சந்தோஷத்தில் திளைக்கிறான். சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்ட தவறுகளால் மரத்திலிருந்து மாற்று உருவை அடைய முடியாமல் ஒருமுறை, மரமாகவே நின்றுவிடுகிறாள் அவள். ஆணின் அலட்சிய உணர்வு அவளை அப்படியே காலமெல்லாம் நிற்க வைத்து விடுகிறது. காற்றோடு காற்றாக அவன் ஆவி பிரிந்துபோகிறது.
அல்லும் பகலும் காற்று எல்லா மரங்களையும் சுற்றிச் சுற்றி வருகிறது. தனது மொழியில் எதைஎதையோ சொல்லி யாசிக்கிறது. உருகுகிறது. குழைகிறது. கிளைகளையும் இலைகளையும் அவள் உடலாகவும் கூந்தலாகவும் எண்ணியெண்ணி வருடிக்கொடுக்கிறது. இரவுகளில் அதன் கெஞ்சுதலும் கொஞ்சுதலும் அதிகமாகிவிடுகிறது.
எப்படியாவது அந்த நரம்புகளில் உயிர்ப்பையூட்டி மீண்டும் பெண்ணாக்கிவிடும் கனவோடு விடாமல் அலைகிறது. வெல்ல முடியாத தோல்வியுணர்வில் மௌனமாக கதறி அழுகிறது. சில தருணங்களில் வேதனை தாளமுடியாத நிலைக்குப் போய்விடும் போது வீறுகொண்டெழுந்து பைத்தியத்தைப்போல அலறி ஆர்ப்பாட்டம் செய்கிறது. பூமியையே அதிரவைத்து குலுங்க வைக்கிறது. துக்கத்தை முறையிட்டபடி உலகையே வலம் வருகிறது. இறுதியாக ஒருவித இயலாமையோடும் ஏக்கத்தோடும் மீண்டும் மரத்தை நெருங்கி நின்று நெஞ்சைத் தொட்டுவிடுவதைப்போல பெருமூச்சு விடுகிறது. அலட்சியப்படுத்தப்பட்டதையும் மறக்க முடியாமல் ஆசை வாக்கியங்களை முழுசாக நம்பி ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தளர்கிறது மரம்.
அந்தக் கதையின் தீவிரத்தை மாலதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதயத்தின் ஆழத்தில் எப்போதோ சிறுவயதில் கேட்டு ஒதுங்கி ஒட்டியிருந்த இக்கதை இக்கணத்தில் திடீரென மேலெழுந்து மிதந்துவந்ததை நம்பமுடியாமல் திகைத்தாள். அலட்சியப்படுத்தப்பட்ட மரமான பெண்ணாக ஒரு கணம் தன்னையே நினைத்துக்கொண்டாள். சட்டென ஓராண்டு இல்லற அனுபவங்களின் கசப்பும் சுமையும் அவள் நெஞ்சைப் பாரமாக்கின. எங்காவது ஓரிடத்தில் மௌனமாக உட்கார்ந்து அழுதால் நல்லதென நினைத்தாள். ஆனால் அழுகை வரவில்லை. வலது கை மோதிரத்தைக் கழற்றுவதும் இடதுகையில் ஏதோ ஒரு விரலில் அதை மாற்றிப் போடுவதும் பிறகு அதிலிருந்து கழற்றி இந்த விரலில் போடுவதுமாக இருந்தாள்.
விருந்துப் பகுதியிலிருந்து வெகுதொலைவு வந்துவிட்டாள். ஏவலர்கள் சுறுசுறுப்பாக விருந்தாளிகளிடையே புகுந்து புகுந்து வேலை செய்வது அங்கிருந்தே தெரிந்தது. ராகவனின் செல்பேச்சு இன்னமம் முடியவில்லை. அவனால் ஒரு இடத்தில் நிற்கவே முடியவில்லை. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்தை நோக்கிச் செல்கிறான். பேச்சுக்குரல் உயர்ந்து கேட்டுவிடக்கூடாது என்பதற்காக அடங்கிய குரலில் உரையாடுகிறான். எதையோ வலியுறுத்தி வலியுறுத்திச் சொல்வதைப்போல இருந்தது. எளிதாக கத்தரித்துவிடமுடியாத அளவுக்கு அப்பேச்சில் தீவிரம் அதிகமாகி விட்டதைப்போல தென்பட்டது. ஏதாவது ஒரு கம்பெனியின் சம்பளப் பாக்கி அல்லது போனஸ் பிரச்சினையாகவும் இருக்கக்கூடும். புதுசாக ஆரம்பிக்கப்பட இருக்கும் கம்பெனி கட்டடத்துக்கான மின்சார இணைப்பை வாங்குவது தொடர்பான
பிரச்சனையாகவும் இருக்கலாம். எதையோ உள்ளூர விருப்பத்தோடு சொல்ல விழைந்தவனை எங்கோ வெகுதொலைவு அழைத்துச் சென்று விட்டது அந்த செல்போன் அழைப்பு.
நெருக்கமாக நட்பு கொண்டவர்கள் ஒருசிலரை மட்டும் விருந்துக்கு அழைப்பதென்றும் விருந்தின்முடிவில் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விலகி வாழ எடுத்திருந்த தீர்மானத்தை அறிவிப்பதென்றும் பேசி முடிவெடுத்தபிறகு மனத்தில் பெருகிய நிம்மதியுணர்வு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. நாள்கணக்கில் மனத்தை விரட்டிக்கொண்டிருந்த பதற்றம் திடீரென தணிந்து விட்டதைப்போல இருந்தது. மறைமுகமான ஒருவித மகிழ்ச்சியில் அவள் உள்ளம் திளைக்கத் தொடங்கிவிட்டதை அவளாலே நம்ப முடியவில்லை. சுறுசுறுப்பாக அக்கணமே இயங்க ஆரம்பித்தாள். யார்யாரை விருந்துக்கு அழைக்கலாம் என்பதை இருவரும் சேர்ந்து ஒரு பட்டியலைத் தயாரித்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசியில் அழைத்து தகவலைத் தெரியப்படுத்தினார்கள். விருந்துக்கான இடத்தைத் தீர்மானித்ததுகூட அவள்தான். அவள் மனத்தில் நிறைந்திருந்த வேகத்துக்கான காரணத்தை அவளால் பிரித்தறிய முடியவில்லை. அப்போதெல்லாம் ஒரேஒரு காட்சிதான் அவள் மனத்தில் மீண்டும் மீண்டும் அரங்கேறியபடி இருந்தது. அதாவது விருந்து நள்ளிரவில் முடிந்து புதிய நாள் உதயமாகும் தருணத்தில் பிரிவு அறிவிப்பு சொல்லப்படும். மெல்ல அவள் ராகவனை நெருங்கி “எல்லாவற்றுக்கும் மிகவும் நன்றி மிஸ்டர் ராகவன்” என்று சொல்லி புன்னகையோடு கைகுலுக்குவாள். இருவரும் கைகுலுக்கியபடி வெளியே வருவார்கள். அவன் அவனுடைய காரில் ஏறிச்செல்வான். அவள் வேறொரு காரில் உட்கார்ந்து தாய்வீடு உள்ள மயிலாடுதுறைக்குச் செல்வாள். பாண்டிச்சேரியிலிருந்து நாலைந்து மணிநேரப் பயணம். அதிகாலை தன்னந்தனியாக காரில் வந்து இறங்கக்கூடிய தன்னைக் கண்டு அம்மாவும் அப்பாவும் அதிர்ச்சியுடன் உறைந்துபோகக்கூடும் என்று தோன்றியது. மெல்ல தான் எடுத்திருக்கும் முடிவை அறிவித்ததுடன் அவர்கள் உறைநிலை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக நினைத்தாள்.
“ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி மாலதி” என்றபடி அருகில் வந்து நின்றான் ராகவன். அவள் தோள்களை இதமாகத் தொட்டு அழுத்தி தன் இயலாமையைப் பகிர்ந்துகொள்ள அவன் உள்ளூர விரும்பினான். ஆனாலும் ஏதோ இன்னொரு உணர்ச்சி அவனைக் கட்டுப்படுத்தியது. அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஏதோ
ஒரு கோட்டை உள்ளுக்குள் சரிந்ததைப்போல இருந்தது. அந்த வெறுமையான பார்வையை அவனால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை.
“ஒரு பிசினெஸ் கால் மாலதி. சிங்கப்பூர். ரெண்டு நாளாகவே வரும்வரும் என்ற எதிர்பார்த்த ஒரு கால். அது போகட்டும், விருந்துல யாராச்சும் ஏதாவது விசாரிச்சாங்களா?” பேச்சை திசைதிருப்பினான் ராகவன்.
“எதப்பத்தி?” ஒன்றும் தெரியாதவளைப் போலக் கேட்டாள் மாலதி.
“இந்த விருந்துக்கான அவசியத்தைப் பத்தி.”
“பெஞ்சமின் லெபோ தம்பதிகளும் சிவரஞ்சினியும் மட்டும் துளைச்சி துளைச்சி கேட்டாங்க. விருந்தின் கடைசி நிமிஷத்துல அறிவிக்கப்படும்னு சொல்லி சமாளிச்சேன். மத்தவங்க வழக்கம் போல வச்ச கண்ணு வாங்காம பாக்கறதும் அவுங்களுக்குள்ளேயே குசுகுசுன்னு பேசிக்கறதுமா இருந்தாங்க.”
“நம்ம துரை சார் மனைவி சந்தியா மெதுவா கிட்ட வந்து என்ன சார் அப்பாவா ஆவப்போறீங்களான்னு கேட்டாங்க. எனக்கு சிரிப்பு தாங்கலை. ஓ.. நோன்னு சொல்லி நழுவிட்டேன்.”
“பெரிய குறும்புக்காரம்மா அவுங்க.”
“மிஸ்டர் தனசேகர் வந்து என்ன சார் புதுசா ஏதாச்சிம் பிஸினெஸ் இனாகுரேஷனான்னு கேட்டு ஆல் த பெஸ்ட் வரைக்கும் போயி கைய குலுக்கிட்டாரு. என்ன பேசவே விடலை. தொட்டதயெல்லாம் தங்கமாக்கனவரு உங்க தாத்தா. அதுக்கப்பறம் ஒங்க அப்பாவும் அப்படியேதான் வாழ்ந்தாரு. வழிவழியா வர்ற அதிர்ஷ்டம்பா அது. ஒனக்கு அந்த அதிர்ஷ்டம் உண்டுன்னாரு.”
“மைதாஸ் போலவா?”
“அவர்கிட்ட நம்ம பிரச்சினையை திடுதிப்புன்னு எப்படி சொல்ல முடியும் மாலதி? நம்ம குடும்பத்துமேல ரொம்ப மரியாதயும் அபிமானமும் வச்சிருக்கவங்க அவுங்க. அவுங்களுக்கு நம்மபத்தி ஒரு மதிப்பீட்டா அது இருந்துட்டு போவட்டும்னு விட்டுட்டேன்.”
ஒரு மரத்தின்மீது சாய்ந்து ஒரு சில கணங்கள் அமைதியாக நின்றான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கலாமா என்று நினைத்து
பாக்கெட்வரை நீண்ட விரல்களை ஒருகணம் கட்டுப்படுத்தினான். பார்வையை தொலைவில் தெரிந்த விருந்தினர்கள்மீது ஒரு கணம் படரவிட்டான். மனம் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளியை நோக்கி தாவிக்கொண்டே இருந்தது. இருவரும் எந்தத் தூண்டுதலும் இல்லாமல் தோப்பிலிருந்து விலகிக் கடலை நோக்கி நீளும் சின்ன கிளைப்பாதையில் நடந்தார்கள். மணற்பரப்பில் கால் அழுந்துவது யாரையோ மிதித்துக்கொண்டு நடப்பதைப்போல இருந்தது. ஒரு கணம் பக்கவாட்டில் திரும்பி மாலதியைப் பார்த்தான். அலைபாயும் கூந்தல். அச்சில் வார்த்தெடுத்ததைபோல அழகான முகம். தங்கச் சங்கிலி புரளும் கழுத்து. அவளிடமிருந்து எழுந்து வீசிய மணம் எப்போதும் இல்லாத அளவுக்கு தடுமாறவைத்தது. எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்தி சட்டென உரையாடலைத் தொடர்ந்தான் ராகவன்.
“ஏழுல அஞ்சி கம்பெனிகளுக்கு விலை பேசியாச்சி மாலதி. இன்னும் ஒரு மாதத்தில் பேரம் முடிஞ்சி கைமாறிடும்.”
“எதுக்காக இந்தத் திடீர் முடிவு?” அவள் திகைத்து நம்ப முடியாதவளாக அவன் பக்கமாகத் திரும்பிப் பார்த்தாள்.
“பணம் போதும் மாலதி. பணம்பணம்னு ரொம்ப அலஞ்சாச்சி. நமக்காக நாமும் கொஞ்சம் வாழணும் இல்லையா?” ராகவன் புன்னகைத்தபடி கேட்டான்.
“என்ன திடீர் ஞானோதயம்?”
“எதயாவது இழக்கும்போதுதான ஏதாவது ஒரு ஞானம் வரும்னு சொல்வாங்க இல்லயா?” அவன் குரல் அவனையறியாமல் இடறியது.
“ராகவன்.”
“நீ இல்லாமல் போவது என்பது உண்மையில் ரொம்ப காஸ்ட்லியான இழப்பு மாலதி. இதுதான் விதின்னா என்ன செய்ய முடியும் சொல்லு.” அவன் சிரிப்பில் வேதனை வெளிப்பட்டது. அக்கணம் கரைந்துவிடுவோமோ என்று அஞ்சினாள் மாலதி. தன் முடிவிலிருந்து எக்கணத்திலும் பின்வாங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுமாறு மனத்தைத் தூண்டிக்கொண்டே இருந்தாள். அவள் மனத்தில் அதிகாலை நேரத்தில் மயிலாடதுறைக்குத் தன்னந்தனியாக காரோட்டிச் செல்லும் சித்திரமும் அம்மா அப்பாவின் முன்னால் போய் நிற்கும் சித்திரமும் மீண்டும் மீண்டும் எழுந்தபடி இருந்தன. ஆண்டு
முழுக்க தானும் தன் விருப்பங்களும் அலட்சியப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களைத் தொகுத்துப் பார்த்துக்கொண்டாள். மறுகணமே எதையோ தற்செயலாக பேசத் தொடங்குகிறவளைப் போல அவனுக்கு ஆணின் அலட்சியத்தால் மரமாகி உறைந்துபோய் உலர்ந்த பெண்ணின் கதையை விரிவாகச் சொல்லிமுடித்தாள். ஆண்களுடைய அலட்சியத்துக்கு அளவே இல்லை ராகவன். அவனுக்கு பெண் ஒரு விளையாட்டுப் பொம்மை. ஆடு என்றால் ஆடவும் நில் என்றால் நிற்கவும் ஓடு என்றால் ஓடவும்..... அம்மம்மா, என்னதான் இருக்கிறதோ இந்த ஆணின் மனசில்....”
“ஓர் அலட்சியத்தின் பலியா காலம் காலமா மரம் நிக்கறது எவ்வளவு சங்கடம் தரக்கூடிய விஷயமோ, அதே அளவுக்கு சங்கடம் தரக்கூடியதாக, தப்பை உணர்ந்தபிறகும் மரத்திலிருந்து ஆசைக்குரிய பெண்ணை மீட்டுக்கொள்ளத் தெரியாமல் காலம் காலமா யாசிக்கிற தவிப்பையும் சொல்லலாமில்லையா?”
அவள் மௌனமானாள். அவன் கேள்வி மீண்டும் மீண்டும் நெஞ்சில் ஒலித்தபடி இருந்தது. இருவரும் நின்றுவிட்டார்கள். அலையோசை மிக அருகில் கேட்டது. அலைகளின் நுரைவெண்மை நிலவொளியில் வசீகரமாக சுருண்டு கிடக்கிற மல்லிகை மாலையாகத் தெரிந்தது. அவன் அவளை நிமிர்ந்து பார்த்தாள். “என்ன மன்னிச்சிடு மாலதி. எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை நானே இழந்துட்டேன்” என்ற அமைதியான குரலில் சொன்னான்.
பெயர் தெரியாத ஒரு பறவைக் கூட்டம் நிலவொளியில் நிதானமாகச் சிறகசைத்தபடி கடந்துபோனதை இருவரும் ஆர்வத்தோடு பார்த்தார்கள். “இந்த நேரத்தில் பறவைகளா?” அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“இலங்கையிலிருந்து வலசை வரக்கூடிய பறவைகள் மாலதி. நிலவொளி அதுக்கு மிகவும் பிடித்த வெளிச்சம். பிச்சாவரத்துக்குத் தான் இதுங்க போகும். அங்க ரெண்டுமூணு மாசம் தங்கியிருக்கும். அப்பறமா இலங்கைக்கு திரும்பிப்போகும். இதனுடைய பெயர் நெஞ்சிலேயே இருக்கு, சட்டுனு சொல்ல வரமாட்டுது” அவன் அப்பாவியாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பும் அவள் ஆச்சரியமும் அக்கணத்தில் இதற்குமுன் கவிந்திருந்த பாரத்தை சட்டென கரைத்து லேசாக்கியது.
“இந்த விஷயமெல்லாம் எப்படித் தெரியும் உங்களுக்கு?” மாலதி வழி விரியக் கேட்டாள்.
“நான் சின்ன வயசுலே பாத்திருக்கேன் மாலதி. நானும் எங்க அம்மாவும் அப்பாவும் மாசாமாசம் பௌர்ணமி அன்னிக்கு மாடியில ஒன்னா உக்காந்து நிலாச்சோறு சாப்பிடுவம். அந்த சமயத்திலே இத அப்பா காட்டியிருக்காரு. நிலா வெளிச்சத்துல பறக்கற ஒரே பறவை இதுதான்னு சொல்வாரு.”
“இதுலயெல்லாம் உங்களுக்கு ஆர்வம் உண்டா?”
“என்ன மாலதி, இப்படி கேட்டுட்டே? பிசினெஸ்காரன் மூளைன்னா வெறும் பணம் அடுக்கற அலமாரின்னு நெனச்சிட்டயா? அவனுடைய விருப்பம், நாட்டம், ருசிய வெளிக்காட்டிக்க முடியாதபடி சில சந்தர்ப்பங்கள் நெருக்கமா அமஞ்சிடுதே தவிர அவனுக்குள்ளயும் சாதாரண மனுஷனுக்குள்ள இருக்கற எல்லா அம்சங்களும் இருக்கும் மாலதி.”
அவன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை நம்பமுடியாத வளாகப் பார்த்து உறைந்து நின்றாள். மாலதி. வார்த்தைகளுக்கு வார்த்தை அவன் மாலதி மாலதி என்று பெயர் சொல்லி அழைத்தபடியும் அந்த அழைப்பில் பிரியத்தின் ஆழ்ந்த அடையாளம் புலப்படுவ¬யும் அவளால் உணரமுடிந்தது.
பால்போலப் பொழியும் நிலவின் வெளிச்சத்தில் வானமும் கடலும் வசீகரத்துடன் பரந்து விரிந்திருந்தன. அலையின் எழுச்சியும் வானத்தின் அமைதியும் பிரம்மிப்பூட்டின. வானத்தில் திட்டுத் திட்டாக ஏராளமான மேகங்கள் மிதந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோலம்போல படர்ந்திருந்தது. எழுந்து நிற்கிற யானையைப் போன்றவை. குதிரைகளைப்போலப் பாய்ந்து நிற்பவை. ஓடிப் பிடிக்கும் மான்களைப் போன்றவை. கூந்தல் பறக்க காற்றின் முன் பறவையைப்போல கைவிரித்து நிற்கும் பெண்களைப் போன்றவை. அசாதாரணமான அனுபவத்தைக் கொடுத்தது அக்காட்சி. ஆனந்தத்தில் மிதப்பதைப்போல இருந்தது.
“மனிதர்களாலயும் இந்த மேகத்தைப்போல நீந்த முடிந்தால் ரொம்ப நல்லா இருக்குமில்லயா மாலதி....”
“உண்மைதான் ராகவன்” அவன் மனம் மின்னியது.
“கடல், வானம், மேகம் எல்லாவற்றிலுமே காலம்காலமாக தொடர்கிற ஒரு தவிப்பு இருக்குது மாலதி. பகிர்ந்துகொள்ள முடியாத தவிப்பு. இயற்கைக்கும் மனிதனுக்குமிடையே எந்த வித்தியாசமும் இல்லை போல....”
ராகவனின் முகமே மாறிவிட்டதைப்போல இருந்தது. தன் மனத்தில் ஓடும் எண்ணத்தை அவன் அப்படியே சொல்லிவிட்டதைக் கேட்டு அவளுக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தத. வாழ்வின் முதன்முதலாக இருவருடைய உள்ளங்களிலும் ஒரே சித்திர. ஒரே எண்ணம். ஒரே ஆனந்தம். அவளால் அக்கணத்தை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
அவன் அவளடைய முகத்தை நேருக்கு நேர் பார்த்து “எனக்குக் கிடைத்திக்கிற கடைசி வாய்ப்புல உன்னிடம் எதை எதையோ சொல்லணுமின்னு நெனச்சிருந்தேன். சொல்ல நெனச்சதயெல்லாம் விட்டுட்டு வேற எதையோ பைத்தியக்காரன் மாதிரி உளறிக்கிட்டிருக்கேன்” என்றான்.
“பரவாயில்லங்க ராகவன்.”
“ஒரு வருஷத்துல உன் மனசுல இனிமையான ஞாபகமா தங்கியிருக்கற மாதிரி எந்த அனுபவத்தயும் உனக்கு தரமுடியலைங்கறது பெரிய குற்ற உணர்ச்சியா இருக்குது. மாயமானத் துரத்திப் போய் சீதைய இழந்துட்ட மாதிரி முடிஞ்சிட்டுது இந்த ஒரு வருஷம்...” அவன் குரல் நெகிழ்ந்தது.
“இருக்கட்டும் ராகவன். துரதிருஷ்டவசமா என்னாலயும் அப்படி எதயும் பெரிசா உங்களுக்கும் தரமுடியாமயோ போயிடுச்சி” யோசித்து யோசித்துச் சொன்னாள் மாலதி.
“நீ எப்ப வேணுமின்னாலும் திரும்ப வரலாம் மாலதி. அதுகூட வேணாம். ஒரே ஒரு போன் செய். அது போதும். நானே வந்து அழச்சிட்டு வரேன். நீ இல்லாத வாழ்க்கைய என்னால நெனச்சிக்கூட பாக்கமுடியலை.”
அவள் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனையே உற்றுப் பார்த்தாள். அவன் கண்கள் தளும்பி நிறைந்திருந்தன. அதைப் பார்த்ததும் அவள் குரல் இடறியது. நேரத்தைப் பார்த்தாள். மணி ஒன்றரையைத் தொட்டுக்கொண்டிருந்தது.
“சரி வாங்க ராகவன். போவலாம். விருந்தாளிகள் காத்திருப்பாங்க. விருந்தை சம்பிரதாயமாக முடிச்சி வைக்கணுமில்லயா?”
காற்றுக்காக புடவையை இழுத்துத் தடுத்து சரிப்படுத்தியபடி அவனைப் பார்த்துக் கேட்டாள். கடலையும் வானத்தையும் இறுதியாகப் பார்ப்பதைப் போல ஒருகணம் ஆழ்ந்து உற்றுப் பார்த்துவிட்டுத் திரும்பினான் ராகவன். அவன் மனம் பாரத்தால் தளர்ந்ததைப்போல இருந்தது.
மௌனமாக இருவரும் நடந்தார்கள். கிளைப்பாதையையும் மரங்களையும் கடந்து விருந்து நடைபெற்ற இடத்தை அடைந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் நண்பர்கள் இருந்த இடத்தலிருந்தே ஆளாளுக்கு ஏதோ சொன்னார்கள். சிறிதளவும் எழுந்து நிற்க முடியாதவர்கள் போதையில் மேசையின்மீது சரிந்து கிடந்தார்கள்.
“என்னம்மா மாலதி? எதுக்காக விருந்துன்னு கேட்டப்போ கடைசி நிமிஷத்துல அறிவிக்கப்படும்னு சொன்னியே, இப்பவாவது அந்த சர்ப்ரைஸ உடைக்கலாமா?”
பெஞ்சமின் லெபோ உரிமையோடு அவளைப் பார்த்து சத்தமிட்டார். இருந்த இடத்திலிருந்து அவரைப் பார்த்து புன்னகைத்தாள் அவள். சட்டென்று வியர்வையில் நனைந்ததைப் போல இருந்தது உடல். சோர்ந்தும் தளர்ந்தும் காணப்பட்ட மற்ற நண்பர்களும் விசையூட்டப்பட்டவர்களைப்போல எழுந்து நின்றார்கள்.
“சொல்லுங்க ராகவன் சொல்லுங்க” தனசேகரன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே சத்தமுடன் கேட்டுக்கொண்டார்.
பிரிவை அறிவிக்கப்பட வேண்டிய கணம் நெருங்கியதை முழு தீவிரத்துடன் உணர்ந்தான் ராகவன். தன்னால் அந்த அறிவிப்பைத் தயக்கமின்றி செய்யமுடியும் என்பதில் அவனுக்கு நம்பிக்கையில்லை. மாலதியே வெளியிடட்டும் என்று தோன்றியது.
“ஒரே ஒரு நிமிடம்..” கூட்டத்தைப் பார்த்து புன்னகையோடு சொல்லிவிட்டு மாலதியின் பக்கம் திரும்பினான்.
“மாலதி. இந்த ஒரு வருஷமா என்ன சகிச்சிகிட்டதுக்கு ரொம்ப நன்றி. நம்ம முடிவை நீயே அறிவிக்கணும்னு கேட்டுக்கறதுல வருத்தமாதான் இருக்குது. ஸாரி.” அவன் அவளுடைய முகத்தைப் பார்த்து நிதானமாகச் சொன்னான். அவள் அவனிடம் எதையோ சொல்வதற்கு முனைந்து வார்த்தைகள் திரண்டெழாததால் தடுமாறினாள். குரல் இடறியது. தோப்பின் இனிய காற்று திடீரென மிகவும் விசையோடு வீசித் தழுவியது. கலைந்து புரளும் காதோடி முடிகளைச் சரிப்படுத்தியடி உலர்ந்துவிட்ட உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டாள். பெருமூச்சுடன் திரும்பி சீரியல் பல்புகள் எரியவிடப்பட்ட தோப்பின் பக்கமாக நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருந்தாள். நெடுங்காலத்துக்கு முன்னர் மரமாக நிற்கவைக்கப்பட்டவள் மீண்டும் எழுந்து நடந்து வந்துவிடுவாள் என்று எதிர்பார்ப்பவளைப் போல. திடீரென
மரத்துக்கு அருகே யாசித்து நிற்கும் உருவத்தின் அசைவையும் கண்டாள். அந்த உருவத்தின் கரங்களிடையே இன்னொரு உருவம் நகர்ந்து தழுவிக்கொள்வதைப்போலவும் தோன்றியபோது தூக்கிவாரிப் போட்டது. அவசரமாக முகத்தை விருந்தினர்கள் பக்கமாகத் திரும்பினாள். எல்லாரும் அவளையே பார்ப்பதை அறிந்து ஒரு கணம் உடல் கூசியது.
“நண்பர்களே. ஒரு சந்தோஷமான விஷயதைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்த விருந்து. நேற்றுவரை இருவரும் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறவர்களாக மட்டுமே செயல்பட்டு வந்தோம். இன்றுமுதல் என்னை அவருடைய எல்லாத் தொழில் நிறுவனங்களிலும் சமபங்குதாரராக இணைத்துக்கொண்டுள்ளார். அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்தச் சின்ன விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். உங்களுடைய இனிய வருகைக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி.”
மூச்சுவிடாமல் பேசிவிட்டு நிறுத்தினாள் மாலதி. கூட்டத்திலிருந்தவர்கள் கைதட்டிவிட்டு நெருங்கிவந்து கைகுலுக்கினார்கள். அதே நேரத்தில் அவர்கள் தமக்குள்ளாக ரகசியமாக புருவங்களை உயர்த்திக்கொள்வதையும் உதடுகளைப் பிதுக்கிக்கொள்வதையும் தோள்களைக் குலுக்கிக்கொள்வதையும் இருவராலும் பார்க்க முடிந்தது. நம்பமுடியாதவனாக சிலைபோல உறைந்து நின்ற ராகவன் இறுதியில் மாலதியை நெருங்கி “ரொம்ப நன்றி மாலதி... ரொம்ப நன்றி” என்றபடி அவள் கைகளைப் பற்றிக் குலுக்கினான்.
(தீராநதி -2005)