Home

Sunday 6 August 2023

தந்தை என்னும் தெய்வம்

  

அப்பாவைப்பற்றிய மகளின் நினைவுப்பதிவுகள் எழுத்திலக்கியத்தில் மிகவும் குறைவு. ஆனால் வாய்மொழி இலக்கியமான நாட்டுப்புறப் பாடல்களின் ஒரு வகைமையான ஒப்பாரிப்பாடல்களில் அவை அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றன. அப்பாவின் மறைவையொட்டி மகள் பாடும் விதமாக அமைந்திருக்கும் ஒவ்வொரு ஒப்பாரிப்பாடலும் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

’கருப்புக் குடைபிடிச்சி காட்டுப்பக்கம் போனாலும் காடும் பயிராகும் நீங்க பாத்த இடமும் தோப்பாகும். நீலக் குடைபிடிச்சி நெலம் பாக்க போனாலும் நெலமும் பயிராகும் நீங்க நின்ன இடமும் தோப்பாகும்’ என்ற பாடல் வரிகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. செல்லும் இடங்களையெல்லாம்  செல்வச்செழிப்பு நிறைந்ததாக மாற்றும் ஆற்றல் தன் அப்பாவுக்கு இருந்ததாக நம்பும் மகளின் தன்னம்பிக்கையை இவ்வரிகளில் காணமுடியும். ’மாங்கா அடுப்புக் கூட்டி மல்லிகைப்பூ சோறாக்கி மல்லிகைப்பூ சோறுதின்ன அப்பா மந்தையெல்லாம் தேடுறனே தேங்கா அடுப்புக் கூட்டி தென்னபிள்ளை சோறாக்கி தென்னம்புள்ள சோறுதின்ன தெருவெல்லாம் தேடுறனே’ என்பது இன்னொரு பாடல். சின்னஞ்சிறு வயதில் தனக்கு சோறூட்டி வளர்த்த அப்பாவின் அன்பையும் அவருக்கு தன் கையால் சோறு சமைத்து ஊட்டிவிட முடியாமல் போய்விட்ட அவலத்தையும் இப்பாடலில் காணமுடியும்.

தன்னை ஓர் அரசாங்க ஊழியனாக பார்க்க நினைத்த தன் அப்பாவின் கனவையும் அதற்காக ஆங்கிலத்தையும் கணக்குப்பாடத்தையும் படிக்க வைக்க அனுப்பிய செயலையும் பற்றிய ஒரு சிறிய சித்திரத்தை பாரதியார் தன் கவிதைகளில் பதிவு செய்துள்ளார். க.நா.சு.வின் அப்பா தன் மகன் ஓர் ஆங்கில எழுத்தாளனாக வரவேண்டும் என உள்ளூர விரும்பியதையும் பல மேலைநாட்டு இலக்கியங்களை சிறுவயதில் அவருக்குப் படித்துக் காட்டியதன் வழியாக அந்த ஆர்வம் தனக்கு இயல்பாக வந்துவிட்டதென்றும் அவர் தன் கட்டுரைகளில் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். கலை இலக்கியம் என்று அலைந்துகொண்டிருந்ததால் தன் அப்பா தன்னை மிகுந்த அவநம்பிக்கையோடு பார்த்தார் என்றும் தன்னிடம் ஒரு சர்வாதிகாரியைப்போல நடந்துகொண்டார் என்றும் தன் நினைவோடைக்கட்டுரையில் ஒரு பகுதியில் சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஒரு தனிநூலாக யாரும் எழுதியதில்லை. தமிழ் கற்க விரும்பிய தன் சிறுவயதில் தக்க இடம் தேடி அனுப்பிவைத்த தன் தந்தையின் பெருந்தன்மையை தன் தன்வரலாற்று நூலில் உ.வே.சா. குறிப்பிட்டிருக்கிறார். நினைவலைகளாக அரசியல் நினைவுகளை எழுதிய அரசியலாளர்களும் அறிஞர்களும் கூட தம் தாயைப்பற்றியோ தந்தையைப்பற்றியோ தனி நூலாக எழுதியதில்லை. அப்போக்கு சமீபத்தில்தான் தொடங்கியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக வெற்றிச்செல்வன் என்பவர் எழுதிய ‘மெய்யாக வாழ்ந்த கதை’ என்னும் புத்தகத்தைப் படித்தேன். அது அவர்  தன் தந்தையார் ப.தெட்சிணாமூர்த்தி என்பவரைப்பற்றி எழுதிய நீண்டதொரு நினைவுத்தொகுப்பு.  அதைத் தொடர்ந்து திருவண்ணாமலையைச் சேர்ந்த வடிவரசு என்னும் கவிஞர் எழுதிய ‘ஐயா ( எ) 95 வயது குழந்தை’ என்னும் புத்தகத்தைப் படித்தேன். அதுவும் அவருடைய தந்தையாரைப் பற்றிய புத்தகம்.

அந்த வரிசையில் இப்போது அழகுநிலாவின் புத்தகம் வெளிவந்திருக்கிறது. தன் மீது பாசத்தைப் பொழிந்த தந்தையை, தன் நினைவுகள் வழியாக ஒரு சிற்பமென செதுக்கி நிறுத்திவைத்திருக்கிறார் அழகுநிலா. தன் நிறைகள், குறைகள் எல்லாவற்றோடும் அவர் ஒரு தெய்வமென இந்த நூலில் எழுந்துவருகிறார். பெயர் பொறித்த பித்தன், சக்தி அறியா கூத்தன், தகடுடைக்கரத்தான் என அவர் தம் கட்டுரைகளுக்குச் சூட்டியிருக்கும் தலைப்புகள் அனைத்தும் அழகுநிலா தன் தந்தைக்கு தன் மனத்தில் தெய்வத்துக்கு நிகராக கொடுத்திருக்கும் இடத்தை சொல்லாமல் உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றன.

அழகுநிலாவின் தந்தையாரின் பெயர் பஞ்சாட்சரம். அவரைப்பற்றி ஒவ்வொரு கட்டுரையிலும் சிதறிக் கிடக்கும் பல்வேறு தகவல்களை ஒருங்கிணைத்துக்கொள்வதன் வழியாக அவருடைய உருவம் திரண்டெழும் வகையில் பதிவுகளை எழுதியிருக்கிறார் அழகுநிலா. பஞ்சாட்சரம் அந்தக் காலத்தில் பள்ளியிறுதி வகுப்பு வரையில் மட்டுமே படித்தவர். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் இருந்தபோதும் குடும்பத்தில் அவரைப் படிக்க வைக்க ஆளில்லை. ஓங்கிய உருவமும் முறுக்கிய மீசையும் கொண்ட அவருடைய மிடுக்கும் துணிச்சலும் பார்ப்பவருக்கு சற்றே மிரட்சியைக் கொடுப்பவை. தேர்வெழுதி பொதுப்பணித்துறையில் வேலைக்குச் சேர்கிறார். பள்ளிக்குச் செல்வதுபோல முதல் நாள் வேலைக்குச் செல்லும்போது அரைக்கால் சட்டையைப் போட்டுக்கொண்டு அலுவலகத்துக்குச் சென்று பிற ஊழியர்களின் கிண்டலுக்கு ஆளாகிறார். தி.மு.க. இயக்கத்தோடு ஆழ்ந்த பிடிப்புள்ளவராகவே இறுதிவரைக்கும் வாழ்கிறார்.

பொறியாளராக வந்து சேரும் பெரிய பெரிய படிப்பாளிகள் எல்லாரும் பொதுமக்களிடம் கைநீட்டி லஞ்சம் வாங்கும் காட்சியைக் கண்டு வெறுப்பும் கோபமும் கொள்கிறார். புலவர் படிப்பு படித்த தமிழாசிரியையை அவருக்கு மணமகளாக தேர்ந்தெடுக்கிறார்கள்.  தி.மு.க. இயக்கத்தலைவர்களில் ஒருவரான மன்னை நாராயணசாமியின் தலைமையில் சீர்திருத்தத்திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்துக்கு முன்பு மதுப்பழக்கம் இருந்தபோதும் திருமணம் செய்துகொண்ட பிறகு மது அருந்துவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்கிறார்.

அவருக்கு மூன்று பிள்ளைகள். மூவரையும் அவர்கள் விரும்பும் அளவுக்கு உயர்படிப்பு படிக்கவைக்கிறார். அழகுநிலா என்னும் மூத்த பெண்ணை அவர் ஆண்பிள்ளையை அழைப்பதுபோல அழகப்பா என்றும் வாடா போடா என்றும் பாசம் பொங்க அழைக்கிறார். கட்டிய புதுவீட்டுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் பெயர்களையெல்லாம் கடப்பா கல்லில் பொறிக்கவைத்து வாசலில் ஊர்மக்கள் பார்வையில் படும் வகையில் பதித்துவைக்கிறார்.

படிப்பைவிட பிள்ளைகள் ஒழுக்கமாக வளரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.  தற்செயலாக ஒருநாள் தன் மகளின் வீட்டுப்பாடத்தை இன்னொரு சிறுமி செய்வதைப் பார்த்து திகைத்துவிடுகிறார். விசாரணையின் போது தானே செய்ததுபோல மகள் பொய் சொன்னது அவரைப் புண்படுத்திவிடுகிறது. “நீ படி, படிக்காம நாசமா போ. எனக்கு கவல இல்ல. ஆனா திருடுத்தனம், பொய் இதெல்லாம் வச்சிகிட்டே, கொன்னு பொதைச்சிடுவேன்” என்று சீறுகிறார். மகள் காதலிக்கும் செய்தியை அறிந்து மனமுடைந்து போகிறார். அந்தக் காதலை ஏற்க அவர் மனம் தயாராக இல்லை அதே சமயத்தில் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கவும் இல்லை.

இப்படி ஏராளமான செய்திகள் அழகுநிலாவின் நினைவுப்பதிவுகளில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு நாவலுக்குரிய அத்தியாயங்களை கலைத்து அடுக்கியதுபோன்ற வடிவத்தில் இந்த நினைவுப்பதிவு அமைந்துள்ளது. ஒவ்வொரு பதிவும் ஆர்வமூட்டும் வகையில் கச்சிதமான வடிவ ஒழுங்கோடு எழுதப்பட்டிருக்கிறது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில்  என் அப்பா இரவு நேரத்தில் பொழுதுபோக்காக திண்ணையில் அமர்ந்து அடிக்கடி  பாடிய பாடலொன்று நினைவுக்கு வருகிறது. நான் வளர்ந்து பெரியவனாகி திரைப்பாடல்களில் எனக்கும் ரசனை உருவாகிவந்த காலத்தில் அப்பாடல் தாய்க்குப்பின் தாரம் என்னும் திரைப்படத்துக்காக கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதிய பாடல் என்பதை அறிந்துகொண்டேன். தாயைப்பற்றியும் தாரத்தைப்பற்றியுமான ஒரு திரைப்படத்தில் தந்தையைப்பற்றிய பாடலொன்றைக் கொண்டிருப்பதை அக்காலத்தில் விசித்திரமாக நினைத்ததுண்டு. ’தந்தையைப்போல உலகினிலே தெய்வம் உண்டோ? ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ’ என்று தொடங்கும் அப்பாடலை இப்போது கேட்டாலும் என் மனம் விம்மி அடங்குகிறது.

யாரோ ஒருவர் தன் தந்தையைப்பற்றி பாடும்போது நம் மனம் ஏன் கனத்துப் போகிறது என்பது சொல்லில் வடிக்கமுடியாத ஒரு விசித்திரம். அழகுநிலா தன் தந்தைக்காக இப்புத்தகம் வழியாக செதுக்கியெழுப்பி நிறுத்தியிருக்கும் சொற்சிலையைப் படிக்கும்போதும் அத்தகு விசித்திரமான மனபாரத்தை உணர்ந்தேன்.

அழகுநிலாவுக்கு வாழ்த்துகள்.

 

( நூல்வனம் வெளியீடாக வெளிவந்திருக்கும் அழகுநிலாவின் ’அப்பன்’ என்னும் கட்டுரைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை )