தனியாக நடப்பதில் ரொம்பவும் சந்தோஷமாய் இருந்தது சிவகாமிக்கு. அம்மா வந்தால் எப்போதும் தொந்தரவுதான். வீட்டில் ஆரம்பித்து வேலங்காடு சேர்கிறவரைக்கும் திட்டிக்கொண்டே வருவாள். தினம்தினமும் திட்டு வாங்கி அம்மா கூட விறகு வெட்டப் போவது என்றாலே சலிப்பு தருகிற விஷயமாகிவிட்டது.
‘நீ வர வேணாம்டி. இங்கியே இரு’ என்று அம்மா சொல்கிற தருணங்கள் ஒருநாளும் வாய்த்ததில்லை. ‘நா வரல நீ போ’ என்று இவளும் எந்த சந்தர்ப்பத்திலும் சொன்னதில்லை. காலையில் பழைய சோற்றைக் குடித்து வாய் கொப்பளித்ததுமே இறவாணத்தில் இருக்கிற கத்தியையும் புரிக்கயிறையும் எடுத்துக்கொண்டு நடக்கிறபடிதான் தினமும் வாய்க்கும். பெரும்பாலும் அம்மா கூடவே வருவாள். என்றைக்காவது ஒரு நாள்தான் ‘நீ முன்னால போ. நா வரேன்’ என்று தங்கிவிடுவாள். அன்றைய தினம் ரைஸ் மில்லுக்குப் போய் கேழ்வரகோ, கம்போ, அரைத்து வருகிறதாகவோ, கிறிஸ்தவ வாத்தியார் வீட்டில் வறட்டி தட்டுகிறதாகவோ, மேஸ்திரி வீட்டில் மாட்டுக் கொட்டகை கழுவுகிறதாகவோ, ரேவதி அக்கா வீட்டில் ராத்திரி ஒரு பொழுதுக்காக மாவு ருப்புகிற வேலையாகவோ ஏதாவது இருக்கும். இன்றைக்கு நவநீதம் வீட்டுக்கு அரிசி புடைக்கப் போய்இருந்தாள் அம்மா. எப்படியும் மத்தியானம் பால்வாடியில் உப்புமா போடுகிற வேளைக்குத்தன் வேலங்காட்டுக்கு அம்மாவால் வர முடியும். அதற்குள் அவள் தூக்குகிற சுமைக்குத் தகுந்த மாதிரி ஒரு கட்டாவது விறகு வெட்டி வைத்திருக்கவேண்டும் இவள். இல்லையென்றால் திட்டுதான்.
அம்மா திட்டுகிறதை நினைத்தாலே சிவகாமிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘ஏன்டி இப்பிடி மசமசன்னு நிக்கற மூதேவி’ என்கிற வாசகத்தோடு ஆரம்பித்தால் ‘நீயெல்லாம் எப்டித்தான் உருப்படப் போறியோ’, ‘நீயெல்லாம் ஒருத்தன்கூட இன்னா குப்ப கொட்டப் போறியோ,’ ‘மக்கு மக்குன்னு நடுமுதுவு வீங்கற மாதிரி நாலு குத்து குத்தனாதான்டி புத்தி வரும் ஒனக்கெல்லாம்,’ ‘இருந்தாலும் வர வர ஒனக்கு கொழுப்பு ஜாஸ்தியாத்தான் போச்சிடி. ஏறி நாலு மெரி மெரிச்சா சரியாப்புடும்’என்று அது பாட்டுக்கும் வளர்ந்துக்கொண்டே போகும். சமயத்தில் அடியும் விழும். திட்டும் அடியும் விழுகிற சந்தர்ப்பங்கள் தவிர இவளோடு அம்மா சிரித்துப் பேசுகிற சந்தோஷமான சந்தர்ப்பங்களும் வாய்க்கிறதுண்டு. ரேவதி அக்காவோ, நவநீதமோ கொடுக்கிற கீரைத் தோசையையும், குழம்புச் சோற்றையும் வைத்துக்கொண்டு ‘சிவகாமி சிவகாமி’ என்று ஆசை ஆசையாய்க் கூப்பிட்டபடியே சில்லு விளையாடுகிற கோயில் வாசல்வரைக்கும் வந்துவிடுகிறதுண்டு. ‘துன்னுட்டுப் போயி ஆடேன்டி’ என்று செல்லமாய்க் கொஞ்சுகிற அந்த நேரத்து அம்மாவின் மேல் சிவகாமிக்கு ரொம்பவும் பிரியமாய் இருக்கும். அவ்வப்போது அம்மாவின் நீளநீளமான திட்டுக்களெல்லாம் மறந்துபோய் அவள் பிரியமே மனசுள் பதியும்.
அம்மாவின் பிரியம் ஞாபகத்துக்கு வரும்போதெல்லாம் அப்பாவின் பிரியமும் சேர்ந்தபடியே ஞாபகம் வரும் இவளுக்கு. மற்றவர்களின் அப்பாக்களோடு தனது அப்பாவை வைத்து ஒப்பிட முடியாதபடி அப்பா ஜெயிலுக்குள் இருந்தது இவளைப் பொருத்தவரைக்கும் ரொம்பவும் துக்கமான விஷயம்தான். ‘ஒனக்கு ஏழு வயது இருக்கும்டி. அப்பத்தான் ஒங்கப்பாவ ஜெயில்ல புடிச்சிம்போனாங்க. தோ தோன்னு ஆறு வருஷம் ஓடிருச்சி’ என்று அம்மா அடிக்கடி சொன்னாலும் அப்பாவோடு வெளியுலகத்தில் கழித்த ஒரு தினத்தைக்கூட இவளால் ஞாபகத்துக்குக் கொண்டுவர முடிவதில்லை. தனக்கு கருத்து தெரிவதற்கு முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்ததில் துயரமாய் இருந்தது சிவகாமிக்கு. அப்பா என்றதும் நீளநீளமான கம்பிகளுக்குப் பின்னால் இருட்டான அறையில் எலும்பாய் இருக்கிற உருவம்தான் ஞாபகம் வரும். அப்பாவைப் பார்க்க அம்மா போகும்போதெல்லாம் இவளையும் அழைத்துப் போவாள். மூட்டைப்பூச்சி ரத்தம் திட்டுத்திட்டாய்ப் படிந்த சுவர்களும், அழுக்கு நெடியும், கம்பிக்கதவுகளுமான பின்னணியில் அப்பாவைப் பார்க்கத்தொடங்கிய ஆரம்பத்தில் கொஞ்சம் மிரட்சியாய் இருந்தது இவளுக்கு. அப்புறம் போகப்போக அம்மா தருகிற கறிச்சோற்றையும், மீன்குழம்புச் சோற்றையும், உருண்டை
உருண்டையாய்ப் பிடித்து ஊட்டி தலையைத் தடவி முத்தம் தருகிற அப்பாவைப் பிடித்துப்போனது. ‘ஏம்மா... அப்பாவப் பாக்க போவலியா’ என்று அம்மாவை நாலைந்து நாட்களுக்கொருதரம் கேட்கிற அளவுக்கு அப்பாவின்மேல் பிரியமாகிவிட்டது.
ஒருவேளை அப்பா வீட்டிலேயே இருந்திருந்தால் சரஸ்வதி, அருணா, பத்மா, ஸ்டெல்லா மாதிரி தனக்கும் பள்ளிக்கூடம் போய் வருகிற சந்தர்ப்பங்கள் நேர்ந்திருக்கலாம் என்ற யோசனை வந்தபோது தவிர்க்கமுடியாமல் மனசுக்குள் வெறுமை கூடியது இவளுக்கு. புஸ்தகப்பையும் கையில் ஏதாவது தின்கிற பண்டங்களுமாய் தத்தம் ஸ்நேகிதப் பிள்ளைகளின் சந்தோஷத்தைப் பார்க்கும்போது இவளுக்குள் ஏக்கம் பொங்கும். அனேகமாய் ஒவ்வொரு நாளும் சீக்கிரம் கிளம்பி வருவது டைலர் வீட்டுப் பெண் சரஸ்வதியாகத்தான் இருக்கும். தான் மட்டும் பள்ளிக்கூடம் போகிறவளாய் இருந்தால் ‘எந்த சரஸ்வதியானாலும் சரி, குரஸ்வதியானாலும் சரி, எல்லார்க்கும் முன்னே பள்ளிக்கூடம் போகிறவளாய் நடந்துகாட்ட முடியும்’ என்று கம்பீரத்தோடு நினைத்துக்கொண்டாள். ஆனால், அனேக சந்தர்ப்பங்களில் அம்மாவோடு இதுபற்றி சர்ச்சை தோன்றி தோற்றுப்பான கசப்பான அனுபவம் மனசின் ஒரு மூலையில் இருந்தது. ‘அது ஒன்னுதான்டி கொறச்சல் ஒனக்கு. சம்பாரிச்சி சம்பாரிச்சி பான நெறயா கொட்டி வச்சிருக்கான் பாரு ஒங்கப்பன். அதுல எடுத்துப் படிக்காததுதா பாக்கி. மூஞ்சியயும் மொகரகட்டயயும் பாரு. ச்சீ... போ.. இருந்து வீணா என் வாய கௌறாதடி. பள்ளிக்குடம் ஓணுமாம் பள்ளிக்குடம்’ என்று அம்மாவின் வசவு இன்னும் காதுக்குள் ஒலிக்கிறமாதிரி இருந்தது. எது எப்படி இருந்தாலும் ரெட்டைசடை, கலர்ப் பொட்டு, புஸ்தகப்பை எல்லாம் சந்தோஷம் தருகிற விஷயங்களானாலும் கத்தி, கயிறு, விறகு எல்லாம் தனக்கென்று விதித்திருக்கிற கஷ்டமான சமாச்சாரங்களாகவும் எண்ணிக் கொண்டாள் சிவகாமி.
மூலக்கடை வாசலில் கரும்புவண்டி நின்றுகொண்டிருந்தது. கோயில்வாசலில் சில்லு விளையாடிக்கொண்டிருந்தன சிறு பிள்ளைகள். பெண் பிள்ளைகளோடு சேர்ந்து காத்தவராயனும் ஆடினான். ரெட்டைச்சடை போட்டிருக்கிற பையன் அவன். தந்திக் கம்பத்தின் கீழ் ஐஸ் வண்டி இருந்தது. பக்கத்திலேயே நாவற்பழத்தை கூறுகட்டி உட்கார்ந்திருந்தாள் கிழவி.
சிவகாமிக்கு நாவற்பழம் ரொம்பவும் பிடித்தமான விஷயம். ரயில்வே ஸ்டேஷன் போகிற வழியில் நாலு நாவல் மரங்கள் உண்டு. மாட்டுக்காரப் பிள்ளைகள் பொறுக்கி எடுத்துப் போகும்படி
எப்போதும் மண்ணில் பழங்கள் உதிர்ந்திருக்கும். எடுத்து ஊதித் தின்ன சந்தோஷமாய் இருக்கும். ஆனால், அம்மா பார்த்தால் திட்டுவாள். ‘கண்டதயெல்லாம் தின்னாதடி கழுத. தொண்ட கட்டிக்கிச்சி, ஜொரம் வந்திருச்சின்னா யாரால் பாக்க முடியும்?’ என்று குனியவே விடாதபடி இழுத்துக்கொண்டு போய்விடுவாள். அம்மா இன்றைக்கு வராதது ரொம்பவும் அனுகூலமாய்ப்பட்டது இவளுக்கு. போகும்போது மடிநிறைய பொறுக்கி வைத்துக்கொண்டு வேலங்காடு வரைக்கும் தின்றபடி போகவேண்டும் என்று நினைத்தாள் சிவகாமி.
“இன்னாடி சிவகாமி... வெறவுக்கா...?’’
திரும்பிப் பார்த்தாள். ராஜவல்லி அத்தை நின்றுகொண்டிருந்தது. அம்மா வயசு. பார்த்துப் புன்முறுவலாய்ச் சிரித்தாள் இவள்.
”ஆமா.. அத்த...’’
”வேலங்காட்டுக்குத்தான?’’
”ம்”
”ஒங்கம்மா வரலியா?’’
”ம்ஹூம். மத்தியானமா வரும்.’’
”செத்த இருக்கியா. நானும் வரன்.’’
”ம்.’’
சிவகாமியை நிற்க வைத்துவிட்டு ராஜவல்லி மூலக்கடைக்குப் போய் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாங்கி முடிந்துகொண்டு வந்தாள். அவள் கையிலும் கத்தியும் கயிறும் இருந்தது.
”வாடி”
இரண்டுபேருமாய் நடந்தார்கள்.
அம்மா போயிருந்த இடம், போயிருக்கிற காரியம், நேற்று விறகு விற்றது. அப்பாவைப் பார்க்கப்போன கடைசித் தடவை பற்றியெல்லாம் ராஜவல்லி துருவித்துருவிக் கேட்க விகல்பமில்லாமல் சிவகாமி பதில் சொல்லிக்கொண்டே வந்ததில் வேலங்காடு வந்தது தெரியவில்லை. ரயில்வே ஸ்டேஷன் வழியில் போனால் சுற்று வழியாகும். என்று குறுக்குவழியில் ராஜவல்லி அழைத்து வந்துவிட்டதில் நாவற்பழம் பொறுக்கமுடியவில்லை சிவகாமியால்.
நெருங்கும்போதே காட்டுக்குள்ளே யாரோ விறகு வெட்டுகிற சத்தம் டக்டக்கென்று வந்தது. நிசப்தமாய் இருந்தால்தான் பயம்.
தூர நின்றே பார்வையை நாலு பக்கமும் ஓட்டி உற்றுஉற்றுப் பார்க்கவேண்டும். அதிலும் சந்தேகம் தீரவில்லையென்றால் காட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற சூளைக்காரக்கிழவியைக் கேட்க வேண்டும். காவல்காரனின் வரவும் போக்கும் அவளுக்குத்தான் தெரியும். சத்தம் வருகிற பட்சத்தில் மாத்திரம் துணிந்து உள்ளே செல்லமுடியும்.
வெயிலே தெரியாத காடு இதமாய் இருந்தது. தரை முழுக்க மஞ்சள் மஞ்சளாய்ப் பூக்கள் வசீகரமாய் இருந்தன. கிளைகளிலும் அசைந்து ஆடுகிற மஞ்சள் பூக்கள் பூப்பரப்புக்கிடையே தரையில் சின்னச்சின்னதாய் முள் கொத்து இருப்பது தெரியாமல் கிடந்தன. வேலமுள் ரொம்பவும் கொடுமையானது. தைத்தால் தைத்த இடம் பத்து நாளைக்கு வலிக்கும். குதிகாலைத் தூக்கித்தான் நடக்கமுடியும். வேதனை தாங்கமுடியாது. படியவைத்து நடந்தால் உயிர் போய் உயிர் வரும். முழு முள்ளையும் பார்த்து எடுக்கணும். உப்பும் எண்ணெயும் காய்ச்சி ஒத்தடம் கொடுக்கணும். சின்னதாய் ஒரு துணுக்கு சிக்கிக்கொண்டால்கூட சீழ் பெருகி புடம்வைத்துவிடும். எல்லாம் அம்மா சொன்னதுதான். காட்டுத் தடத்துக்குள் நடக்க நேரிடுகிற ஒவ்வொரு தருணத்திலும் அம்மாவின் இந்த புத்திமதி வார்த்தைகளும் ‘சும்மா அங்க ஆடுது, இங்க ஆடுதுன்னு பெராக்கு பாத்துக்குனு நடக்காத. கீழ தடத்த பாத்து வா’ ஆரம்பிக்கிற வசைகளும் சிவகாமிக்கு ஞாபகம் வரும்.
காட்டுக்குள் நடக்கநடக்க, வெட்டுகிற சத்தம் பெரிசாகக் கேட்டது.
”செருப்பு போட்டுகினு வரலியா சிவகாமி?’’
”இல்ல, அத்த’’
”யேன் வெறவுக்குன்னு கௌம்பனா செருப்பு போட்டுகினு வரணும்னு தெரியாதா?’’
”ஒன்னே ஒன்னுதான¢ இருந்துச்சி. ஒரு நாளு குள்ள ஓடையான் பம்ப்ல தண்ணி குடிக்கப் போனப்ப தொலச்சிட்டன். அதுலேர்ந்து இல்ல.’’
”ஒஙக ஆத்தாகிட்ட சொல்லி ஒரு செருப்பு வாங்கிக்கறதான.’’
”வாங்கணும்.’’
”சரி, ஊரப்பட்ட முள்ளு கெடக்குது. கீழப் பாத்து வா.’’
மூன்று பேர் வெட்டிக்கொண்டிருந்தார்கள். ஆண்பிள்ளைகள். அவர்களுக்குச் சமீபமாகவே தாழ்வாய் இருந்த கிளையைத்
தேர்ந்தெடுத்தாள் சிவகாமி. ராஜவல்லி இன்னும் சற்று உள்புறமாய் நடந்தாள்.
கயிற்றை மரத்தடியிலேயே வைத்துவிட்டு வாகான ஒரு பகுதியில் வெட்டத் தொடங்கினாள் சிவகாமி. இரு கையால் கத்தியை ஓங்கிப் போடுவது சற்று சிரமமாய் இருந்தது. இரண்டு கையாலும் கத்தியை ஒருசேரப் பிடித்து வெட்டினாள். மேல்பட்டை தடிப்பில் நாலைந்து தரம் வழுக்கி வெட்டு தப்பியது. அதே இடத்தில் மேலும் நாலு வெட்டு வெட்டியபோது கருப்பான மேல்பட்டை சிதறியது. ஈர மஞ்சள் நிறமான உள்தண்டில் கத்தி பதிந்தது. தொடர்ந்த வெட்டுக்களில் இரு பக்கமும் மஞ்சள் பொடி சிதறச்சிதற கத்தி பதிகிற அகலத்துக்கு வெடித்து விழுந்தது. பாதி வெட்டி முடிக்கும்போது கை வலித்தது சிவகாமிக்கு. கத்தியை கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தாள். வேர்வையான உள்ளங்கையை பாவாடையில் துடைத்து விரல் சொடுக்கு எடுத்தாள். முகத்தில் படிந்த வேர்வையை வழித்து உதறினாள். குனிந்து தடத்தில் இருந்த மண்ணைத் தொட்டு கைகளைத் தேய்த்தாள். கத்தியை எடுத்தபோது வேர்வைப் பிசுபிசுப்பு விலகி பிகுவாய் இருந்தது பிடி.
சலிக்காமல் வெட்டிக்கொண்டிருந்த பையன்களைக் கொஞ்ச நேரம் பார்த்தாள் சிவகாமி. ராஜவல்லி பையன்களையெல்லாம் தாண்டி இருந்தாள். அவளையும் தாண்டி புதுசாய் ஒரு பையன் வெட்டிக்கொண்டிருந்தான். தலைக்கு மேல் குருவிகளின் சத்தம்.
மீண்டும் வெட்டத் தொடங்கிய சிவகாமி கால் மணி நேரத்துக்குள் கிளையை வீழ்த்திவிட்டாள். சீக்கிரம் கிளை விழுந்ததில் ரொம்பவும் சந்தோஷமாய் இருந்தது இவளுக்கு. அம்மா பார்த்தால் நிச்சயம் சந்தோஷம் கொள்வாள் என நினைத்தாள். வாகாய் வளைத்து முள்களையெல்லாம் நறுக்க உட்கார்ந்தாள். கொஞ்சம்கொஞ்சமாய் பொடிப்பொடி இலையும், பூவும், முள்ளுமாய் நீட்டிக்கொண்டிருந்த நீளங்களையெல்லாம் இழந்து மொட்டையாகிக்கொண்டே வந்தது கிளை.
கிளையின் தடிமனையும், நீளத்தையும் பார்க்கப்பார்க்கப் பெருமிதமாய் இருந்தது சிவகாமிக்கு. கத்தியை ஓரமாய் வைத்து விட்டு சிதறலாய் விழுந்த முள்களையெல்லாம் எடுத்து ஒழுங்காய் அடுக்கினாள். நீளமானவற்றை கையாலேயே இணுக்கி மடித்துக் கட்டுக்குள் வைத்தாள். கயிற்றைக் கீழ்ப்பக்கமாய் தந்து இழுத்து முடிச்சு போடுகிற சமயம் கொத்தாய் இவள் முடியைப் பிடித்திழுத்தான் பின்பக்கமாய் வந்த ஒருவன்.
திடீரென்ற பிடியில் கலவரமான சிவகாமி அண்ணாந்து திரும்ப, மீசையும் சிவந்த கண்களுமாக காவல்காரன் நின்றிருந்தான். கணத்தில் திமிறி ஓட நினைத்தவளுக்கு மயிர்க்காம்பு வலித்தது. கழுத்து வலித்தது. மயிரை இழுக்கிற ஒவ்வொரு கோணத்திலும் நெளிவதில் வேதனையாய் இருந்தது. ‘‘ஐயையோ’’ என்று அலறினாள். எந்த அலறலையும் மதிக்காதவன் மாதிரி சிவகாமியின் இளம் முதுகில் நாலு அறை கொடுத்தான் அவன். வலி தாளாது அழுது கூச்சலிட்டாள் சிவகாமி.
சிறிது தொலைவில் வெட்டிக்கொண்டிருந்த பையன்கள் விறகையும் கயிறையும் போட்டதுபோட்டபடி ஓடினார்கள். ராஜவல்லியும் ஓடினாள்.
”ஒன் அப்பன் ஆத்தா சம்பாரிச்ச காடுன்னு நெனச்சிக்கினியா கழுத. யார் கண்ல மண்ணத் தூவலாம்னு நெனச்ச? அறுத்துருவன் கொண்டயப் புடிச்சி. திருட்டு வெறவு வெட்டறதுமில்லாம சத்தமா போடுற சத்தம். கிழிச்சிருவன் வாய...’’
அவனது கர்ஜனையும் முதுகில் விழுந்த உதைகளும் சிவகாமிக்குப் பயத்தையும் வேதனையையும் தந்தன. அம்மா இல்லாத நேரத்தில் மாட்டிக்கொண்டோமே என்று தவிப்பாய் இருந்தது. சட்டென்று காடு நிசப்தமாகி, தனது கூச்சல் ஒன்றை மட்டுமே வாங்கி எதிரொலிப்பதை உணரமுடிந்தது. முள்ளை வெட்டுகிற கவனத்தில் இவனைப் பார்க்க மறந்துபோனோமே என்று நொந்துகொண்டாள். பழைய காவல்காரன் இப்படி இல்லை. ‘வெயிலும் மழையும் துன்னுட்டுப் போறத நீதான் துன்னுட்டுப் போயன்’ என்று விட்டுவிடுவான். இவன் புது ஆள். மயிரைப் பிடித்து குலுக்கிய குலுக்கலில் உடம்பு நடுங்கியது. வயிறு ஒட்டி பயத்தில் ஜில்லிட்டது. கூச்சல் போட்டு அழுதாள் சிவகாமி.
திட்டுதலுக்கும் அடிக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல் சத்தம் போட்டு அழுகிற சிவகாமியை எரிச்சலுடனும் கோபத்துடனும் பார்த்தான் காவல்காரன். ‘அழுதா கொன்னுடுவன்’ என்று அடித்தொண்டையில் மிரட்டினான். தொடர்ந்து அழுதபோது ஹ்ம் என்று உறுமி மயிரைப் பிடித்த காவல்காரனின் செய்கையில் சட்டென்று அடங்கினாள் சிவகாமி. கழுத்து கோணிக்கோணி தூக்கிப் போட்டது. தொண்டைக்கடியில் அழுகை தேங்கி நின்றது. வேண்டாததை விட்டெறிகிற மாதிரி சிவகாமியை விடுவித்தான் அவன்.
”இன்னா ஊர் நீ?’’
கர்ஜித்த குரலிலேயே விசாரித்தான் அவன். வார்த்தை வரவில்லை சிவகாமிக்கு. நெஞ்சு மட்டும் கணத்துக்கு கணம் தூக்கிப்போட்டது. முகம்முழுக்க கண்ணீர் பரவி கலவரம் தெரிந்தது.
”ம், சொல்றியா, ஒத வாங்கறியா திருட்டுக் கழுத.’’
”வளவனூரு.’’
”எந்தத் தெருவு?’’
”மோட்டுத் தெருவு.’’
”ஓடிப் போனவங்கள்ளாம் யாரு?’’
”தெரியாது’’
”பொய் சொன்னா கால முரிச்சிருவன்’’
”நெஜமா தெரியாது’’
”தனியாவா வந்த நீ?’’
”ம்”
”இது இன்னா ஒங்க தாத்தா ஊட்டு காடுன்னு நெனப்பா? நெனச்சா வந்து வெறவு வெட்டிக்கறதுக்கு. இங்கல்லாம் வரக்கூடாதுன்னு தெரியாதா...?’’
”தெரியாது.’’
”ம், துன்னத் தெரியுமா?’’
சிவகாமியின் தலையைத் தட்டினான் அவன். மேலும் அடிக்கப் பல்லைக் கடித்து கையை ஓங்கினான். சிவகாமிக்கு குலை நடுங்கியது. பொலபொலவென கண்ணில் நீர் வழிய ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
”வாய... வாயமூடு கழுத. நாடகமா ஆடற நாடகம். முரிச்சிருவன். மொளச்சி மூணு எல உடல, அதுக்குள்ளார திருட்டு வெறவுக்கு வந்துட்ட. இன்னம் கொறகாலத்துல ஒலகத்தயே திருடி வித்துருவ நீ. முழிக்கறத பாரு.
கீழே முள் உதிர்ந்து மொட்டையான கிளையை காலால் உதைத்தான் அவன். அந்தக் கிளை துண்டான இடத்தை ஒரு முறை உற்றுப் பார்த்தான். சட்டென்று கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டான். கத்தியை அவன் தொட்ட கணமே பகீரென்றது. சிவகாமிக்கு மேலும் நடுக்கம் கண்டது வயிறு. ஓடி அவன் கையில் இருந்த கத்தியைக் கைப்பற்ற எக்கினாள்.
”இன்னா... இன்னா... ஆ ஊன்னா பொளந்துருவன் பொளந்து...’’
”கத்தி... என் கத்திய குடு.’’
”கத்தி கத்தின்னு கத்தின, போலீஸ்க்கு இழுத்தும் பூடுவன் ஜாக்கிரத.’’
”ஐய... என் கத்தி... கத்திய குடு.’’
”அப்ப எதுகு திருட்டு வெறவு வெட்ட வந்த...?’’
”தெரியாம வந்துட்டன். இனிமே வரல.’’
”நானும் கத்திய தெரியாம எடுத்துக்கனன். இனிமே எடுக்க மாட்டேன். போ.’’
”ஐய... கத்திய குடு. எங்கம்மா திட்டுவாங்க.’’
”யாரு ஒங்கம்மா...?’’
”மங்கநாயகி.’’
”போய்... போய் இட்டா போ ஒங்கம்மாவ. அப்பறமா கத்திய தரன்.’’
”ம்ஹ்... ம்ஹ்... கத்தி...’’
”போ... போ... மொதல்ல ஒங்கம்மாவ இட்டுக்னு வா. போ.’’
”ம்ஹ்... கத்திய குடுத்துரு. இனிமே வரமாட்டன்.’’
”போறியா இல்லியா இப்ப நீ’’
”கத்தி...’’
”ச்சி போன்னா...’’
எட்டி சிவகாமியின் பிடறியைப் பிடித்து ஒரு திருகு திருகித் தள்ளினான் அவன். அம்மா என்ற கூச்சலோடு கீழே விழுந்தாள் சிவகாமி. ஓரமாய் இருந்த முள்கட்டையில் நீட்டிக்கொண்டிருந்த முள் கிழத்து கண்டங்கால் சதையில் சத்தம் வந்தது. எழுந்து பயத்துடன் இவனை ஒரு தரம் பார்த்துவிட்டு, ‘‘கத்தி... கத்தி...’’ என்று அழுதபடி வீட்டைப் பார்த்து ஓடத் தொடங்கினான் சிவகாமி.
(தொடரும்)