ஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் மனத்தில் பதிந்த மிகப்பெரிய அறிவியலாளர் ஸ்டீபன் ஹாகிங். இயற்பியல், அண்டவியல் தொடர்பான ஆய்வுகளை வாழ்நாளின் இறுதிக்காலம் வரைக்கும் அவர் மேற்கொண்டிருந்தார். புவி ஈர்ப்பு தொடர்பாகவும் கருந்துளை கதிர்வீச்சு தொடர்பாகவும் அவர் கண்டறிந்து உலகுக்கு உரைத்த உண்மைகள் விண்வெளி ஆய்வுகளில் ஒரு பெரும்பாய்ச்சலை உருவாக்கியது.
மாபெரும்
அறிவியல் சாதனைகளை நிகழ்த்திய ஸ்டீபன் ஹாகிங் ஒரு மாற்றுத்திறனாளி. முகம் ஒருபுறம்
திரும்பியிருக்க, கைகள் இன்னொருபுறம் திரும்பியிருக்க அவர் தன் உடலை மடித்தவாக்கில்
சக்கர நாற்காலியில் அமர்ந்துவருவதை புகைப்படத்தில் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இத்தகைய
உடற்குறைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, இவர் எப்படி சாதனை நிகழ்த்தினார் என்னும் கேள்வியும்
திகைப்பும் எழுவது உறுதி. அதற்கு ஒரே பதில்தான். அவர் தன் வழியில் குறுக்கிட்ட அனைத்துத்
தடைகளையெல்லாம் தன்னுடைய விடாமுயற்சியாலும் மன உறுதியாலும் அறிவாற்றலாலும் அன்பு மனைவியின்
உற்ற துணையாலும் கடந்து வெற்றிப்புள்ளியைத் தொட்டார். அதுவே அவரை உலகத்தின் முன்னிலையில்
சாதனையாளராக நிறுத்தியது.
அந்த
மாபெரும் அறிவியலாளரைப் பற்றிய அறிமுகத்தை தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதற்காக ‘ஸ்டீவன் ஹாகிங் :முடிவிலிருந்து ஒரு தொடக்கம்’ என்னும்
சிறுநூலை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான
கமலாலயன் எழுதியிருக்கிறார். அவருடைய முழு வரலாற்றையும் தேடிப் படிக்க ஆர்வம்
கொண்டவர்களுக்கு இது ஒரு நல்ல தொடக்க நூலாக அமைந்திருக்கிறது.
கல்லூரிக்காலம்
வரைக்கும் அவர் எல்லா இளைஞர்களையும் போலவே நடமாடிக்கொண்டிருந்தார் ஹாகிங். அவருடைய
21வது வயதில் அமியோடிரோபிக் லாட்டெரல் செலரோசிஸ் எனப்படும் அரிதான நோய் அவரைத் தாக்கியது.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிகபட்சமாக அவர் இன்னும் இரண்டாண்டுகள் மட்டுமே உயிர்த்திருக்க
முடியும் என்று தெரிவித்தார்கள். அவரால் தெளிவாகப்
பேசமுடியாது. இயல்பாக உண்ண முடியாது. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து எல்லாவிதமான உடல்
உபாதைகளோடு 76 வயது வரைக்கும் வாழ்ந்தார். தடைகளையெல்லாம் கடப்பதற்கு அவர் காட்டிய
மனஉறுதியையே நாம் அவரிடமிருந்து கற்கவேண்டிய முதல் பாடம்.
கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கிய காலத்திலேயே அவர் தன் நோய் முற்றி வருவதையும்
அதன் விளைவுகள் மோசமாக இருப்பதையும் அவர் உணரத் தொடங்கிவிட்டார். ஒருசில அடிகளே நடக்கவேண்டுமென்றாலும்
கூட அவருக்கு அச்சமயத்தில் ஊன்றுகோல் தேவைப்பட்டது. பல நேரங்களில் பல்கலைக்கழக நூலகங்களுக்கும்
விரிவுரை வகுப்புகளுக்கும் வரும் வழியிலேயே கீழே விழுந்து அடிபட்டு ரத்தக்காயங்களோடு
வருவது வழக்கமாக இருந்தது. அந்த நிலையிலும் தன் கல்வியையும் ஆய்வுகளையும் தொடர்ந்து
மேற்கொள்வதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஒருமுறை
அவர் தம் நண்பர்களோடு ரயிலில் பயணம் செய்து ரோஜர் பென்ரோஸ் என்னும் மூத்த அறிவியல்
ஆய்வறிஞர் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டுவிட்டு அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
ஒருமைக்கணம் என்னும் தேற்றத்தை முன்வைத்து அன்று அந்த ஆய்வாளர் நிகழ்த்திய உரையை வழிநெடுக
அசைபோட்டபடி வந்தார். அதன் முடிவில் அதே தேற்றத்தை பிரபஞ்சவெளி முழுமைக்கும் பொருத்திப்
பார்த்தால் என்ன நடக்கும் என்றொரு வினா அவர் நெஞ்சில் மின்னலென எழுந்தது. அந்த வினாவே
அவருடைய பிற்காலத்திய எல்லா ஆய்வுகளுக்கும் முதற்புள்ளி, தொடர்சியாக பல மாதங்கள் உழைத்து
அதே தலைப்பில் தன் ஆய்வுக்கட்டுரையை அவர் எழுதி வெளியிட்டார். அது அவருக்கு முனைவர்
பட்டம் கிடைப்பதற்கு வழிவகுத்தது.
அவர்
ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரிந்திருந்தும் அவரைக் காதலித்து மணம் புரிந்துகொண்டார்
ஜேன். அவரும் ஆய்வுத்துறையில் ஈடுபட்டிருந்தார். பட்டம் பெற்ற பிறகு, கேம்பிரிட்ஜிலேயே
புதிதாக உருவான வானியல் ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்
ஹாகிங். அவருடைய ஆய்வுக்கட்டுரைகளுக்கு உலகமெங்கும் வசிக்கும் ஆய்வறிஞர்களின் பாராட்டுகள்
கிடைத்தன. அவர் புகழ் உலகெங்கும் பரவத் தொடங்கியது.
ஜெனிவா
நகரில் அவருக்கு நடைபெற்ற ஓர் அறுவை சிகிச்சை பலனளிப்பதற்கு மாறாக, அவரிடம் இருந்த
கொஞ்சநஞ்ச பேச்சுத்திறனையும் பறித்துக்கொண்டது. அந்தக் குறையையும் அவர் தனக்கே உரிய
முறையில் வென்றார். ஒவ்வொரு எழுத்தையும் கண்ணசைவு மூலமாகத் தெரியப்படுத்தும் ஒரு புதிய
முறையை அவரே வகுத்துக்கொண்டார். ஒருமுறை கண்ணசைத்து நிறுத்தினால் அது ஓர் எழுத்தையும்
அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று முறை கண்ணசைத்து நிறுத்தினால் அது இன்னொரு எழுத்தையும்
குறிப்பதுபோல அவரே ஓர் அட்டவணையைத் தயாரித்து, அந்த அட்டவணைப்படி புரிந்துகொள்ளும்
ஓர் உதவியாளரையும் தயார்ப்படுத்தி வைத்துக்கொண்டார். அவருடைய உதவியோடு தான் நினைக்கும்
ஆய்வுக்கட்டுரைகளை அவர் எழுதினார்.
அவருடைய
நண்பரொருவர் அவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தோடு கணிப்பொறியில் ஒரு செயலியை உருவாக்கி
அனுப்பினார். அதன் மூலம் கணினித் திரையில் எழுத்துகளை ஒளிரவிட்டு, விரல்களுக்கிடையில்
இயங்கும் சிறு டார்ச் லைட் வழியாக குறிப்பிட்ட எழுத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி,
அந்த எழுத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் அந்த வழிமுறை. அதையும் அவர் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்டார்.
ஒன்றை
அடுத்து ஒன்றென புதுப்புது வழிமுறைகளைப் பயன்படுத்தி தன் எண்ணங்களை வெளிப்படுத்த முயற்சி
செய்தபடி இருந்தார். அதற்காக அவரும் உதவியாளரும்
அதிக நேரம் உழைக்கவேண்டி இருந்தது. அந்த உழைப்பை
அளிப்பதற்கு ஹாகிங் தயாராக இருந்தார். 1998இல் வெளிவந்த அவருடைய ‘காலம் – ஒரு சுருக்கமான
வரலாறு’ என்னும் புத்தகம் அவரை உலகப்புகழுக்குரியவராக மாற்றியது. அந்த நூல் உலகின்
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழிலும் வெளிவந்தது. தன் ஆய்வுகளை மேன்மேலும்
விரிவுபடுத்தி, அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் இரு நூல்களை எழுதி வெளியிட்டார் ஹாகிங்.
அவருடைய இறுதிப் பத்தாண்டுகளில், உலகமே வியந்து கொண்டாடும் இயற்பியல் மேதையாக விளங்கினார்.
புவி
ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, அணுக்கரு மென்விசை, அணுக்கரு பெருவிசை ஆகிய நான்கு விசைகளே
பிரபஞ்ச வெளியில் இயங்கிக்கொண்டிருக்கும் கோள்கள், விண்மீன்கள், கருந்துளைகள் ஆகிய
அனைத்துக்கும் அடிப்படையான விசைகள். இவ்விசைகளை ஓர் ஒருங்கிணைந்த கோட்பாட்டுக்குள்
கொண்டுவர வேண்டுமென்பது அறிவியலாளர் ஐன்ஸ்டீனின் பெருங்கனவாக இருந்தது. ஆனால் தன் ஆய்வை
முடிக்கும் முன்பாகவே அவர் மறைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து அதே ஆய்வை ஸ்டீவன் ஹாகிங்கும்
மேற்கொண்டு உழைத்தார். ‘தியரி ஆஃப் எவ்வரிதிங்’
என்று அக்கொள்கைக்கு பெயர் கூட சூட்டியிருந்தார். ஆனால் ஐன்ஸ்டீன் சென்ற தொலைவுக்கு
அப்பால் சிற்சில அடிகள் தொலைவு மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. அவரும் அந்த ஆய்வை
முடிக்காமலேயே இறந்துவிட்டார்.
ஸ்டீவன்
ஹாக்கிங் என்னும் பெயர் ஓர் அறிவியலாளரின் பெயர் மட்டுமல்ல. விடாமுயற்சி, எந்தத் துன்பத்திலும்
பின்வாங்காத பண்பு, மன உறுதி, தேடல் என பல பண்புகளின் அடையாளமாக மாறி நிற்கும் பெயராகும்.
தன் திறமையின் மீது நம்பிக்கை கொண்டு உழைக்கும் ஒவ்வொருவருக்கும் அவருடைய பெயரும் வாழ்க்கையும்
வழித்துணையாக விளங்கும்.
ஒரு வேகவாசிப்பில்
மிக எளிதாகப் படித்து முடிக்கும் வகையில் அந்த ஆய்வறிஞரின் வாழ்க்கை வரலாற்றை தடையற்ற
எளிய மொழியில் எழுதியிருக்கும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான கமலாலயனுக்கு தமிழ்
வாசக உலகம் கடமைப்பட்டுள்ளது. நூலெங்கும் பல பக்கங்களில் காணப்படும் டாரத்தியின் ஹாகிங்
கோட்டோவியங்களும் சிறப்பாக உள்ளன.
( ஸ்டீவன் ஹாகிங் : முடிவிலிருந்து ஒரு தொடக்கம்.
கமலாலயன். ஓங்கில் கூட்டம். பாரதி புத்தகாலயம், இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை
-18. விலை. ரூ.70)
(புக்
டே – இணைய இதழ் 24.09.2024)