Home

Sunday, 29 September 2024

கற்பனையின் பாதை

 

தொகுதியைப் பிரித்து முதல் கவிதையைப் படித்ததுமே, இது எனக்கான கவிதை என்றும் இவர் எனக்கான கவிஞர் என்றும் என் மனம் உணர்ந்துவிட்டது. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி, கவிதையைப் படித்தபோது, என்னிடம் சில விஷயங்களைத் தெரிவிப்பதற்காக யாரோ ஒருவர் எனக்கு எதிரில் உட்கார்ந்து உரையாடுவதுபோல உணர்ந்தேன். இதற்குமுன் ஆனந்தகுமார், மதார், பொன்முகலி போன்ற கவிஞர்களின் கவிதைகளை வாசித்தபோது எழுந்த அதே எண்ணத்தை அதியமானின் கவிதைகளும் அளித்தன.

அல்பட்ரோஸ் என்றொரு பறவையைப்பற்றி சமீபத்தில் படித்தேன். உலகிலேயே மிக நீளமான இறக்கைகளைக் கொண்ட பறவை அது. அந்த இறக்கைகளின் எடையின் காரணமாக அது பிற பறவைகளைப்போல தன்னிச்சையாக எம்பிப் பறக்கமுடிவதில்லை.  எம்பிப் பறக்க அதற்கு உயரமானதொரு மலைமுகடு தேவைப்படுகிறது. அந்த உச்சிப்புள்ளி வரைக்கும் உடலின் எடையைத் தாங்கியபடி நடந்து செல்கிறது. உச்சிப்புள்ளியிலிருந்து இறக்கைகளை விரித்துத் தாவுகிறது. அதன் வேகமும் காற்றின் வேகமும் சரியான கலவையில் கலந்து ஒரு குறிப்பிட்ட கணத்தில் அப்பறவையை வானம் ஏந்திக்கொள்கிறது. கிட்டத்தட்ட ஒரு விமானம் தரையிலிருந்து மேலே எழுந்து பறந்து செல்லும் அனுபவத்துக்கு நிகரானது அது. அதற்குப் பிறகு, அந்தப் பறவை வானத்தில் பறக்கிறதா, அல்லது வானம் அப்பறவையை ஏந்திக்கொண்டு செல்கிறதா என்பது பிரித்தறியமுடியாத ஒரு புதிர். ஒருமுறை பறக்கத் தொடங்கிய அப்பறவை நாட்கணக்கில் பறந்து திரிந்த பிறகு எங்கோ ஒரு கணத்தில் ஓய்ந்து தரையிறங்கிவிடுகிறது.

பறவையின் பயணமும் ஒரு கவிஞனின் பயணமும் பிரித்தறியமுடியாத ஒன்று என்றே தோன்றுகிறது. கவிஞனின் மிகப்பெரிய சவால் அல்லது தவம் என்பது கவிதையைத் தொடங்குவதற்கு அவசியமான ஒரே ஒரு சொல்லைக் கண்டுபிடிப்பதுதான்.  அந்தச் சொல்தான் அவனை விண்ணிலேற்றுகிறது. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போல அவனை இலக்கை நோக்கிச் செலுத்துகிறது. முதல் சொல்லுக்குப் பிறகு அந்த வேகத்துக்கு இசைவாக அல்லது பறந்துசெல்லும் திசைக்கு இசைவாக ஏராளமான சொற்கள் அந்த முதல் சொல்லோடு படிப்படியாக இணைந்துகொள்கின்றன. இயல்பாக நிகழும் அத்தகு பயணத்தின் வழியாகவே கவிதை நிகழ்கிறது.

’சொல், இன்னும் எவ்வளவு நேரம் இந்தப் புல்லாங்குழலை இப்படி வாசித்துக்கொண்டே இருக்கப்போகிறாய்?’ என்னும் ஒரு வினாவோடு தொடங்குகிறது குடைக்காவல் தொகுதியின் முதல் கவிதை. அக்கணத்தில் உரையாடல் போன்றதொரு காட்சி நம் மனக்கண் முன்னால் விரிகிறது. அக்கேள்விக்கு இசைப்பவனும் உடனடியாக பதில் சொல்கிறான். ஒரு குறிப்பிட்ட நேரத்தையோ பொழுதையோ வரையறையாகக் கொண்டிருப்பதாக அவன் சொல்லவில்லை. அவன் இலக்கு வேறொன்றாக இருக்கிறது.  புல்லாங்குழல் மீண்டும் மூங்கில் மரமாகத் திரும்புகிற வரைக்கும் இசைக்கப் போவதாக அறிவிக்கிறான். தொடர்ந்து, அந்த மரம் புதராகச் செழித்து வளர்ந்து, பிறகு காடாக அடர்ந்து பெருகி, அக்காட்டின் பசுமையில் திளைத்து மர உச்சியில் அமர்ந்து எங்கெங்கும் குயில்கள் கூவிக் களிக்கும் காலம் வரைக்கும் இசைக்கப் போவதாக அடுக்கிக்கொண்டே செல்கிறான்.

புல்லாங்குழலின் இசையில் திளைக்கும் காலத்தை ஒரு முனையாகக் கொண்டால், குயில்கள் கூவிக் களித்த காலத்தை இன்னொரு முனையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த முனையிலிருந்து இந்த முனை வரைக்கும் வந்துவிட்ட மானுடத்திடம் அவன் மறந்துவிட்ட பயணத்தின் கோட்டோவியத்தை வரைந்துகாட்டுகிறான். கனவில் கேட்ட குரலைப்போல அந்தக் குரல் ஒலித்துவிட்டு மறைந்துவிடுகிறது. மானுடம் அடைந்தது என்ன, இழந்தது என்ன என்பதை மதிப்பிடுவதற்குத் தூண்டிவிட்டு அடங்கிவிடுகிறது. வெந்து தணிந்தது காடு என்பது பாரதியாரின் வரி. அதியமான் தன் கவிதைக்கு வெந்து தணியாத காடு என்று தலைப்பிட்டுள்ளார். அத்தலைப்பில், ஒரு சுழல்பயணம் போல மானுடம் மீண்டும் ஆதி முனையைத் தொட்டுவிடக் கூடும் என்றொரு நம்பிக்கை எதிரொலிப்பதை உணரமுடிகிறது.

அதியமானின் தொகுப்பில் மிகமுக்கியமான கவிதைகளில் ஒன்று இளைப்பாறல்.

 

அப்பாடி

எத்தனை ஆசுவாசம்

பழைய பாலம்

இடிந்து விழுந்து

புதிய பாலம்

எழும்பும் காலம் வரையில்

தலைகுப்புறக் குதித்து

நீச்சலடித்துக்கொண்டிருப்பதில்லை

எவன் நிழலும்

 

இப்போது

எடையில்லாத இந்த நதியின் பளிங்கில்

வானத்து மீன்களும் நதியின் மீன்களும்

ஒன்றாய் நீந்தி விளையாடுகின்றன

 

ஒரு பழங்காலத்துக் காட்சியையும் நவீன காலத்துக் காட்சியையும் பொருத்திப் பார்க்க அக்கவிதை துணையாக இருக்கிறது. நதி ஓடும் ஊர்களிலெல்லாம் பாலங்கள் இருக்கின்றன. பாலங்கள் இருக்கின்ற இடங்களிலெல்லாம் அதன் மீது தாவி ஏறி நதிக்குள் குதித்து நீச்சலடிக்கும் சிறுவர் கூட்டமும் இருக்கிறது. பகல் நேரத்துக் குளியலை விட இரவு நேரத்துக் குளியலில் திளைப்பவர்களும் இருக்கிறார்கள். பகலோ, இரவோ, ஆற்றங்கரைப்பாலம் என்பது எப்போதும் கொண்டாட்டத்துக்கு உரிய இடமாகும்.

இந்த எல்லாக் கொண்டாட்டங்களும் நீர்ப்பரப்புக்கு மேலே நிகழும் காட்சிகள். கவிஞரான அதியமானின் கண்கள் நீர்ப்பரப்புக்கு மேலே நிகழும் காட்சிகளைவிட நீர்ப்பரப்புக்குக் கீழே நிகழும் காட்சிகளில் கூடுதலாகக் கவனம் கொள்கின்றன. நீச்சலடிக்கும் சிறார்களின் நிழல் மிதந்துபோவதையே பார்த்துப் பார்த்து அவர் கண்கள் சலித்திருக்கின்றன. ஒரு காலத்தில் வானத்து விண்மீன்களின் நிழலும் தண்ணீரில் நீந்தும் மீன்களின் நிழலும் தொட்டுத் தொட்டு விளையாடும் காட்சியைப் பார்த்துப் பார்த்து ஆனந்தத்தில் திளைத்தவை.  பழைய காலத்துக்கான நினைவேக்கத்தின் காரணமாக புதிய காலத்துக் காட்சிகளில் மனம் ஒட்டவில்லை. தற்செயலாக சிறார்கள் ஏறிக் குதித்த பாலம் உடைந்துபோய்விடுகிறது.  அதன் காரணமாக பிள்ளைகள் நடமாட்டம் குறைந்துபோகிறது. அதுவரை விளையாட இடமற்றிருந்த விண்மீன்களின் நிழல்களும் மீன்களின் நிழல்களும் சேர்ந்து விளையாடத் தொடங்குகின்றன. நீருக்கடியில் நிகழும் காட்சியைக் கண்டுகளிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்.

 

தொகுப்பின் இன்னொரு முக்கியமான கவிதை பயணம்.

 

மிகச்சரியாக

தங்களின் சேருமிடம் வந்ததும்

நதியிலிருந்து

தடம் தெரியாமல்

இறங்கிக்கொள்கின்றன

ஒவ்வொரு இலையும்

 

என்றால்

நதி ஒழுக்கில்

மிதந்து செல்லும் எந்த இலையும்

கடல்பார்க்கச் செல்வதில்லையா?

 

எல்லா நதிகளும் கடலில் சென்று கலக்கும் வகையிலேயே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருநதியின் பயண வழியில் சிற்சில சமயங்களில் பல சிறுநதிகள் பிரிந்துசெல்கின்றன. சிற்சில சமயங்களில் பல சிறுநதிகள் எங்கிருந்தோ ஓடிவந்து பெருநதியுடன் கலப்பதும் நிகழ்கின்றது. நீர்வழிப்படும் புணையென மானுட வாழ்க்கையை உருவகித்துச் சொன்ன வாசகம் நம்மிடம் உண்டு. புணைக்கு மாறாக நீர்வழிப்படும் இலையை கற்பனை செய்து பார்க்கிறார் அதியமான்.

புணைக்கு இருக்கும் விசையை இலையிடம் எதிர்பார்க்க முடியாது. நீரின் விசை குறையும்போது புணையின் திசையையோ ஓட்டத்தையோ தீர்மானமாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது எப்போதும் ஒழுக்கிலேயே ஓடிக்கொண்டிருக்கமுடியாது. தயங்கியோ ஒதுங்கியோ ஓரிடத்தில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. நீர்வழிப்படும் புணைக்கு ஓர் எல்லை உள்ளதென்றால், அதைவிட கூடுதலாகவோ குறைவாகவோ நீர்வழிப்படும் இலைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. 

தொகுதி முழுக்க பல கவிதைகளில் ஏராளமான கற்பனை உரையாடல்களும் கற்பனைக் காட்சிகளும் நிறைந்துள்ளன. அத்தகு கவிதைகள் ஒவ்வொன்றும் அற்புதமான அனுபவத்தை வழங்குகின்றன. உங்கள் வாய்களுக்கு வெளியே நிற்பவன் என்றொரு கவிதை. ஒரு பசுவின் முன்னால் நின்று பேசும் ஒரு பச்சைப்புல்லின் குரலில் அமைந்திருக்கிறது அக்கவிதை. ஒரு வரப்போரமாக புல் மேய்வதற்குத் தோதாக முளைக்குச்சியில் கட்டப்பட்டிருக்கிறது ஒரு பசு. அப்பசு மேய்வதற்குச் சாத்தியமான வட்டப்பாதைக்கு வெளியே பச்சைப்பசேலென துளிர்த்திருக்கிறது ஓர் இளம்புல். பசு அப்புல்லை ஆர்வத்துடன் பார்க்கிறது. ’உன் எல்லைக்குள் நீ இரு, என் எல்லைக்குள் நான் இருக்கிறேன்’ என்று இளமை முறுக்கோடு தெரிவிக்கும் சிறுமியைப்போல பசுவிடம் கோரிக்கை வைக்கிறது புல்.

 

வரப்போரம்

மேய்ந்துகொண்டிருக்கும்

காராம்பசுவே

காராம்பசுவே

அத்தனை காதலோடு

பார்க்காதே என்னை

இதோ, இன்றும்

முளை அடித்து கட்டப்பட்டிருக்கும்

உன் கயிற்றின் வட்டத்திற்கு வெளியே

சிரித்துக்கொண்டிருக்கும்

பச்சைப்பசும்புல்நுனி நான்

 

நெடுமலைகளின் விதிகள் வேறு என்னும் கவிதையில் நிகழும் உரையாடலை ஒருபோதும் மறக்கமுடியாது. ஒரே சமயத்தில் குழந்தைமையும் மேதைமையும் தொனிக்கும் உரையாடல். அதிக எடை கொண்ட பொருளை மேலே தூக்கமுடியாது. அது மண்ணோடு ஒட்டியிருக்கும் தன்மையைக் கொண்டது என்பது நடைமுறை உண்மை. ஒரு மலையடிவாரத்தில் எடை குறைந்த கூழாங்கற்கள் அடிவாரத்தில் தரையெங்கும் இறைந்திருப்பதையும் எடைமிகுந்த வட்டப்பாறைகள் எல்லாம் மலையுச்சியில் நிறைந்திருப்பதையும் பார்க்கும்போது, அது நடைமுறைக்கு மாறான விசித்திரமாக இருக்கிறது. அந்த விசித்திரத்தையே ”எடையே எடையே, அடிவாரத்துக்கும் உச்சிக்கும் நடுவே ஓடி ஓடி கள்ள ஆட்டம் விளையாடுகிறாயே, எதற்கு?“ என ஒரு கேள்வியாக்கி மலையின் முன்வைக்கிறார் அதியமான்.

படியேறிக்கொண்டிருக்கும் முத்தங்கள் இன்னொரு முக்கியமான கவிதை. ‘எனக்கு முன்படியில் நழுவியோடிக்கொண்டிருக்கும் ஒளியின் கழுத்தை இழுத்து வளைத்து அதன் இதழில் ஆசை ஆசையாக ஒரு முத்தம் பதிக்கிறேன் நான்’ என்று தொடங்குகிறது இக்கவிதை. பகல்பொழுது முடிந்து இரவுப்பொழுது கவியத் தொடங்கும் காட்சியைத்தான் அப்படி வேறுவிதமாக தீட்டிக் காட்டுகிறார் அதியமான். விடைபெற்று பிரிந்துபோவதற்கு முன் காதலிக்கு அளிக்கும் முத்தத்துக்கு இணையானதாக இருக்கிறது அந்த முத்தக்காட்சி. அக்காட்சியைக் கவித்துவமாக்குவது, அதைத் தொடர்ந்துவரும் அடுத்தடுத்த காட்சிகள். ஒளிக்கு முத்தமிட்டு விடைகொடுத்து  அனுப்பிவிட்டு திகைத்து நிற்கும் தருணத்தில் சத்தமில்லாமல் பின்னால் வந்து அணைத்த இருள் அவன் இதழில் ஒரு முத்தத்தைப் பதிக்கிறது. அதே நேரத்தில் இந்த மண்ணில் படிந்து எங்கெங்கும் பரவி நெடிதுயர்ந்து நிற்கும் இரவின் கழுத்தில் உலகமே பார்க்கும் வண்ணம் உதடு பதித்து அழுத்தமாக முத்தமிடுகிறது தெய்வம். அத்தெய்வத்தின் கழுத்தில் முத்தமிடுவதற்காக தன் கோடிக் கைகளை நீட்டியவண்ணம் ஓடி வருகிறது ஒளி. ஒரு முழுவட்டம் நிறைவடைகிறது. அற்புதமான ஒரு கற்பனை ஒரு தருணத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றிவிடுகிறது.

இதே வகையான கற்பனை நுனியேற்றம் என்றொரு கவிதையில்  வேறு விதமாக செயல்பட்டிருந்தாலும் அதுவும் சிலிர்ப்பூட்டும் அனுபவமாகவே அமைந்திருக்கிறது. நீளமான ஒரு மாங்காய்த்துண்டை ஆளுக்கொரு பக்கமாக பற்களிடையில் கவ்வி கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துண்ணும் இரு சிறுவர்களின் கற்பனைச் சித்திரத்தை அக்கவிதையில் உருவாக்கியிருக்கிறார் அதியமான். நீளமான அந்த மாங்காய்த்துண்டை குதிரைகள் ஓடிப் பழகும் பாதையாக உருவகிப்பது முதல் கற்பனை. புளிப்பு, இனிப்பு ஆகிய இரு சுவைகளையும் இரு குதிரைகளாகக் கற்பனை உருவகிப்பது இரண்டாவது கற்பனை. இரண்டுமே கவிதை நிகழும் தருணத்தில் பொருந்திப் போகின்றன. ஒரு நுனியில் கடித்துத் தின்பவன் முதலில் இனிப்பை உணர்கிறான். மெல்ல மெல்ல, இனிப்பு இறங்கிச் சென்றுவிட புளிப்பு ஏறி வருவதை உணர்கிறான். அதே மாங்கீற்றின் மறுநுனியில் உதட்டை வைத்திருப்பவன் முதல் கடியிலேயே புளிப்பை உணர்ந்து முகம் சுளித்துத் தயங்குகிறான். அதைப் பார்த்ததும் இனிப்புக்குதிரை அவனை நோக்கி ஏறி வருவதாக இனிப்புச் செய்தியைத் தெரிவிக்கிறான்.

இங்கு, கவிதையின்பம் என்பது மகத்தான கருத்தோ, அறிவிப்போ அல்ல. மாறாக, மனத்துக்கு இனிமையான புத்தம்புதிய கற்பனை. இந்தக் கவிதையைப் படித்த பிறகு எந்த இடத்தில் மாங்காய்த் துண்டை எடுத்துச் சாப்பிட்டாலும், இனிப்புக்குதிரையையும் புளிப்புக்குதிரையையும் நினைத்துக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது. இவ்வகையில்தான் ஒருவர் மனத்தில் ஒரு கவிதைக்கு இடம் கிடைக்கிறது.

கற்பனையின் வழியாக பல இடங்களைத் தொட்டுத் திரும்பும் அதியமானின் மனம் தொகுப்பின் இறுதியில் தன் அனுபவக்குறிப்பை முன்வைப்பதுபோல ஒரு கருத்துருவை ஒரு கவிதையில் முன்வைக்கிறார். அது நினைக்கும்தோறும் இனிமை பெருகும் ஒரு ஜென் கவிதையைப்போல அமைந்திருக்கிறது. அறிவிப்பாக இல்லாமல் கண்டடைந்த அனுபவக்குறிப்பாக இருப்பதால், இக்கருத்துரு கவிதைக்குரிய மதிப்பைப் பெற்றுவிடுகிறது.

 

அந்தரத்தில்

பறந்துகொண்டிருக்கையில்

எந்தப் பறவையும்

இறப்பதில்லை

 

பறவை வானெங்கும் பறந்து திரிந்துதான் ஒவ்வொரு நாளும் தனக்குத் தேவையான இரையைத் தேடி உட்கொள்கிறது.  அதே சமயத்தில், ஒரு பறவையின் பறத்தல் என்பது வெறும் உணவைத் தேடும் பயணத்துக்காக மட்டுமானதாக சுருங்கி இருப்பதல்ல. பறவையாக இருப்பதற்காக அது பறக்கிறது. பறத்தலின் இன்பத்தைத் துய்ப்பதற்காக பறக்கிறது. பறத்தலை தன் சுதந்திரம் என அதன் மனம் கருதுவதால் பறக்கிறது.

பறக்கும் பறவையைப் பார்க்கும் ஓர் ஓவியன் அப்பறவையின் சித்திரத்தைத் தீட்டுவதாக வைத்துக்கொள்வோம். அதே பறவையைப் பார்ப்பதால் உருவாகும் மன எழுச்சியால் ஒரு கவிஞன் கவிதையை எழுதக்கூடும். ஒரி சிற்பி ஒரு சிற்பத்தை உருவாக்கக்கூடும். எந்தக் கலையையும் அறியாத பாமரன் கூட அப்பறவையைக் கண்ட அனுபவத்தை கதைகதையாக ஊரெங்கும் சொல்லிப் பரப்பிக்கொண்டிருக்கக்கூடும். அந்தப் பறவை எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும். ரத்தமும் சதையுமான பறவையின் ஆயுள் முடிந்துபோனாலும் கூட, கலைஞர்களோ பிறரோ உருவாக்கும் பறவையின் ஆயுளுக்கு முடிவே இல்லை. அவை உலகம் உள்ளளவும் வாழும் வரம் பெற்ற பறவைகள். அவற்றுக்கே அமரவாழ்வு ஒரு வரமென அமைகிறது. ஒருபோதும் மேலெழுந்து பறக்காத பறவைக்கு அந்த வாழ்க்கையே இல்லை. பறவை வாழ்க்கையின் இடத்தில் மானுடவாழ்க்கையைப் பொருத்தினால் அமரவாழ்க்கையின் பொருள் இன்னும் விரிவு பெறுவதை உணரலாம்.

 

 

(குடைக்காவல். கவிதைகள். வ.அதியமான். சால்ட் பதிப்பகம், கோடம்பாக்கம். சென்னை – 24. விலை. ரூ.130)

 

(புக் டே – இணைய இதழ் 22.09.2024)