கால்நடை மருத்துவராகப் பணிபுரியும் நடேசன் தன் மருத்துவமனை அனுபவங்களை இருபது கட்டுரைகளாக இத்தொகுதியில் பதிவு செய்துள்ளார். துறைசார்ந்த ஈடுபாடும் பற்றும் மிகுதியாகும்போது, ஒருவருடைய கண்ணோட்டம் தானாகவே விரிவடைகிறது. சம்பளத்துக்காக ஒரு துறையில் வேலை செய்வது என்து ஒருவிதம். ஏன், எப்படி, எதனால் என்பவைபோன்ற கேள்விகளால் மனத்தை நிரப்பிக்கொண்டு ஒரு துறையில் வேலை செய்வது என்பது இன்னொரு விதம். இப்படிப்பட்டவர்களே அறிவியலாளர்களைப்போல ஆய்வுமனப்பான்மையோடு தனது துறையில் ஈடுபடுகிறார்கள். தொழிலிடங்களில் தமக்கு நேரும் அனுபவங்களை முன்வைத்து தம் கேள்விகளுக்கான விடைகளைத் தேடி அறிகிறார்கள். இவர்களுடைய அணுகுமுறை, இவர்களைத் திறமைசாலிகளாக உருமாற்றுகிறது. புதுப்புது அனுபவங்களின் வாசல்கள் அவர்களுக்காக திறந்து வழிவிடுகின்றன.
இரத்தப் புற்றுநோய், தோல்நோய், கட்டிகள், எலும்புத் தேய்வு, நீரிழிவு என எல்லாவகைப்பட்ட நோய்களும் மனிதர்களைத் தாக்குவதைப்போலவே மனிதர்களையும் தாக்குகின்றன. மனிதர்களைவிட குறைவான ஆயுள் கொண்ட விலங்குகள், இந்த நோய்களுக்கு ஆளாகி ஆசைஆசையாக அவற்றை வளர்த்தவர்கள் கண்முன்னாலேயே இறப்பது சோகமான விஷயம். ஒரு நாயின் அதிகபட்ச வாழ்க்கைக்காலம் 18 ஆண்டுகள். ஒரு மயிலின் வாழ்க்கைக்காலம் 30 ஆண்டுகள். நடேசன் விவரித்திருக்கும் பல கட்டுரைகளில் இடம்பெறும் நாய்கள் 12 அல்லது 13 ஆண்டுகளிலேயே மடிந்துவிடுகின்றன. குழந்தைகளைப்போல கண்ணும் கருத்துமாக வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பான சூழலில் வளர்க்கப்பெற்றாலும் நடுவயதிலேயே அவை மரணத்தைத் தழுவிவிடுகின்றன. தடுக்கமுடியாத சக்தியாக நிற்கும் மரணம் பலவிதமான எண்ணங்களை எழுப்புகின்றன.
சிகிச்சை அனுபவங்களை விவரிக்கிறபோக்கில் தன் மனத்தில் உதிர்க்கும் எண்ணங்களாக நடேசன் பதிவுசெய்யும் பல விஷயங்கள் மிக முக்கியமானவை. “ஆதிவாசிகளின் அவலம்” கட்டுரையில், வீடுகளில் சுவரோரமாக வசித்து, இடங்களை அசுத்தமாக்கிவிடும் தூரிகைபோன்ற வாலைக்கொண்ட போசம் என்னும் விலங்கைப்பற்றிய விவரங்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மூத்த விலங்கு என்ற பெயர் இதற்குண்டு. ஒரு காலத்தில் தென்கண்டம் என்ற ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் குக் என்பவரும் அவருடைய மாலுமிகளும் சிறிய குற்றம் செய்த ஆண்களையும் விபச்சாரம் செய்தவர்கள் என்று பழிசுமத்தப்பட்ட பெண்களையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு சிட்னி பொட்டன விரிகுடாவில் இறங்கினார்கள். மனிதர்கள் இல்லாத சூனியப் பிரதேசமாக ஆஸ்திரேலியாவை முதலில் பிரகடனம் செய்து தம் கூற்றை உண்மையாக்க ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த ஆதிவாசிகளைக் கொன்றார்கள். முதலில் ஐரோப்பியர்கள்., பிறகு சீனாக்காரர்கள். அதற்குப் பிறகு, வியத்னாமியர்கள். இறுதியாக இலங்கைத் தமிழர்கள். இப்படி காலம் காலமாக மனிதர்கள் ஆஸ்திரேலியாவைச் சுற்றி வளைத்து தம் வாழிடமாக மாற்றிக்கொண்டார்கள். மாசூப்பியல் என்னும் விலங்கினம் மனிதர்கள் வரவுக்கு பல ஆண்டுகள் முன்னராகவே இங்கு வாழ்ந்துவந்தது. பரிணாம வளர்ச்சியில் இவை பாலூட்டிகளுக்கு முற்பட்டவை. இந்த விலங்கினத்தின் ஒரு வகையே நடேசன் குறிப்பிடும் போசன் என்னும் தூரிகை வால் விலங்கு. காடு நாடாகி, காணும் இடங்களெல்லாம் வீடுகளாக மாறிப் போய்விட்ட சூழலில், வசிப்பிடத்துக்கு வழியற்ற போசம் மனிதர்களுடைய வீடுகளில் ஒளிந்து வாழ முற்பட்டன. இவ்விலங்கினம் தன்னோடு வசிப்பதை விரும்பாத மனிதர்கள் வேறு வழியற்றி சூழலில் அவற்றைக் கொன்றுவிடுகிறார்கள். வீட்டு விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்த்துக் கொஞ்சத் தயங்காத மனம் போசம் வசிப்பதை விரும்பவில்லை என்பது முரணாக இருக்கலாம். ஆனால் அதுதான் எதார்த்தமாக உள்ளது. இதைத் தவிர்க்க தனக்கும் வேறு வழி தெரியவில்லை என்று ஒருவித குற்ற உணர்வோடு பதிவுசெய்கிறார், புதுவீடு கட்டி குடிபுகுந்த நடேசன். மற்றவர்கள்போல கண்ணில் பட்டதும் கொல்லாமல், நமது ஊரில் பொறியில் அகப்படும் எலிகளை சாக்குப்பைகளில் மாற்றி எடுத்துக்கொண்டுபோய் தொலைவான இடங்களில் விட்டுவிட்டு வருவதுபோல, ஒவ்வொன்றாக ஒரு பெட்டியல் அடைத்துச் சென்று தொலைவான இடத்தில் விட்டுவிட்டு வருகிறார்.
சாண்டி எனப்படும் நாயைப்பற்றிய குறிப்பு இடம்பெறும் “நினைவுத் தடத்தில்” கட்டுரை முதுமையின் துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறது. மனிதர்களைப்போலவே சாண்டியையும் முதுமை வாட்டுகிறது. நடக்க முடியாமல் கால்கள் பின்னுகின்றன. இரவு பகல் வித்தியாசம் மறந்துவிடுகிறது. செவிக்கூர்மை மங்குகிறது. புலன்கள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கும்போது மருந்துகளின் சக்தியால்மட்டுமே மூச்சுவிடுகிற ஒரு பொம்மையாக மாறிவிடுகிறது அது. “போதிமர ஞானம்” என்னும் கட்டுரையில் ஒரு முதியேர் இல்லத்தின் காட்சி இடம்பெறுகிறது. மருந்துகளின் மகிமையால் மனித உயிர் நீண்ட ஆயுள் கொண்டதாக மாறுவதையும் தானாக இயங்குகிற சக்தியில்லாத அவர்களுடைய உடல் எதிர்கொள்ளும் வேதனைகளை இரக்கம் படர எழுகிறார் நடேசன். கால் ஒரு பக்கம், கை ஒரு பக்கம், தலை ஒரு பக்கம், பார்வை இன்னொரு பக்கம் என இருக்கைகளிலும் பூங்காக்களிலும் புல்வெளியிலும் உள்ள முதியோர் கோலத்தை விவரித்துக்கொண்டே வரும் நடேசன் இறுதியாக அதே இல்லத்தில் மருத்துவத்தால் காப்பாற்ற முடியாத ஒரு நாயை மயக்க ஊசி போட்டு கருணைமரணத்துக்காக வெளியே எடுத்துச் செல்லும் சம்பவத்தை எழுதுகிறார். அப்போது அவர் மனத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இறுதிக் காலத்தில் உடல் உணர்வுகளை இழந்து உயிரைமட்டும் வைத்திருக்கும் மனிதர்களின் நிலை அதிருஷ்டம் மிகுந்ததா அல்லது அமைதியாக மரணத்தைத் தழுவ இருக்கும் பூனை அதிருஷ்டம் மிகுந்ததா? இக்கேள்விக்கு நம்மால் எப்படி விடைசொல்லமுடியும்? விலங்குகளுக்கு நாம் எஜமானர்கள். அவற்றை வீட்டில் அன்போடு வளர்த்து ஆளாக்குகிறோம். அவற்றின் வாழ்வும் வளர்ச்சியும் நம் பொறுப்பில் இருப்பதுபோலவே அவற்றின் மரணமும் நம் பொறுப்பாகவே மாறிவிடுகிறது. குடும்ப உறுப்பினர்கள் சார்ந்து அப்படி ஒரு முடிவை எடுப்பது என்பது மனித குலம் செய்ய இயலாத செயல் என்பதே உண்மை.
கோயிலில் மயில் வளர்க்க ஆசைப்படும் மனிதர்கள் மயிலுக்கு தனித்த அறைகள் தேவை என்னும் உண்மையை அறியாதவர்களாக உள்ளார்கள். பல மயில்களை மந்தைபோல ஒரே இடத்தில் வைத்து அடைத்ததால் ஏற்பட்ட ஒரு மயிலின் மரணத்தைப்பற்றிய குறிப்பும், முதன்முதலாக ஓர் எருமையின் பிரசவத்துக்காக அறுவை சிகிச்சை செய்யச் சென்ற இடத்தில் இடது பக்கம் உள்ள கருப்பையைத் தேடி வலதுபக்கம் அறுத்துவிட்டு பொய்சொல்லிச் சமாளித்துவிட்டு வந்ததைப்பற்றிய குறிப்பும் படிக்கச் சுவையாக உள்ளன. சாலை விபத்தில் இறந்துபோன மிஸ்கா என்னும் நாயைத் தேடி எடுத்து வந்து அதைப் பாடம் செய்து அடக்கம் செய்ய அனுப்பும் அனுபவத்தைப்பற்றிய கட்டுரையும் வீட்டில் வளர்க்கிற எல்லா விதமான நாய்களுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதையும் தேவைப்பட்ட மருந்துகளை வாங்கி வேளை தவறாமல் தந்து காப்பாற்றி உயிரைப்போல வளர்க்கும் ஒருவர் தன் உடல்நிலையைப்பற்றி அக்கறை செலுத்தாமல் திடீரென உருவாகித் தாக்கிய இதயத் தாக்குதலால் அகால மரணமுறும் ஒருவரைப்பற்றிய கட்டுரையும் ஒரு சிறுகதைக்கு நிகரான அனுபவத்தை வழங்கக்கூடியது.
(வாழும் சுவடுகள். என்.எஸ்.நடேசன். மித்ர வெளியீடு, 32/9, ஆற்காடு சாலை, சென்னை-24)
(22.05.2008 அன்று திண்ணை இணைய
இதழில் வெளியான கட்டுரை)