-இரண்டு-
அம்மா வீட்டிலும் இல்லை, நவநீதம் அக்கா வீட்டிலும் இல்லை. தேடிப் பார்த்து மறுபடியும் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்தாள் சிவகாமி.
அழுகை இன்னும் நின்றபாடில்லை. ஒவ்வொரு நிமிஷமும் பயம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. கத்தியைத் தொலைத்து விட்டு வெறும் கையோடு வந்து நிற்கும் தன்னை அம்மா நிச்சயம் நொறுக்கிவிடுவாள் என்று நினைத்தாள். வெட்டிப் பலி குடுத்துருவன் என்று திட்டும்போது அம்மா உபயோகப்படுத்துகிற வார்த்தை மாதிரி ஏதோ ஒன்று இன்றைக்கு நிகழப்போகிறது என்ற நினைப்பு மேலும்மேலும் பயம் தருவதாய் இருந்தது. கொஞ்ச நேரத்தில் முகம் வெளுத்து விட்டது. அழுகையை நிறுத்தினாலும் வேதனை தாங்கமுடியாததாக இருந்தது.
தெருவில் வாழை இலை வண்டி ஒன்று போனது. செருப்பு தைக்கிறவர் கூவிக்கொண்டே போனார். பலகாரம் வாங்கிய தட்டை பாவாடைத்துணியால் மூடியபடி போனது ஒரு பெண். பித்தளைக்குப் பேரீச்சம்பழம் விற்றான் ஒரு கிழவன். தெருவில் போகிற வருகிறவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு காரியத்தில் சாமர்த்தியமாய்ப் பிழைக்கிறமாதிரியும், தான்மட்டும் துப்பு இல்லாமல் கத்தியை இழந்துவிட்டுப் பரிதாபமாய் இருக்கிறதாயும் நினைத்தபோது துக்கம் பொங்கியது. சிவகாமிக்கு. நெஞ்சுக்குள் அழுகை புரண்டது. குனிந்து ரத்தம் உலர்ந்த முள் காயத்தைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு நிமிர்ந்தாள்.
மேஸ்திரி வீட்டுப் பக்கமே பார்த்தபடி இருந்தாள். ஒரு மாறுதலுக்கு ரோட்டுப் பக்கம் திரும்பியபோது அம்மா வருவது தெரிந்தது. இடுப்பில் மாவுக்கூடை தெரிந்தது. அம்மாவைக் கண்டதும் மொத்த பயமும் வயிற்றில் குழைந்தது. அவள் தெருவில் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் இவளது இதயத்தில் எடுத்து வைக்கிற மாதிரி இருந்தது.
வாசலுக்குச் சமீபமாய் அம்மா வரும்போதே எழுந்து நின்று கொண்டாள் இவள்.
”இன்னாடி... இன்னுமா காட்டுக்குப் போவாம ஒக்காந்துக்னிருக்க நீ?’’
”இல்லம்மா’’
”இன்னா இல்லம்மா?’’
”காட்டுக்குத்தாம்மா போனன்.’’
”அப்ப எதுக்குடி இங்க ஒக்காந்துக்னிருக்க?’’
”இப்பதாம்மா வந்தன்”
”எதுக்காகடி வந்த? அங்கியே இரு மத்தியானத்துக்கு மேல வான்னு சொன்னன்ல...’’
”ஆமாம்மா.’’
”அப்பறம் யேன்டி வந்த?’’
”இப்பதாம்மா வந்தன்.’’
”எதுக்குடி வந்தன்னா... கழுத... புரியற மாதிரி சொல்லு. இல்லைன்னா நாரு கிழிக்கிற மாதிரி கிழிச்சிருவன்.’’
”வெறவுதாம்மா வெட்டிக்னருந்தன். முள்ள கட்டறதுக்கோசரம் கத்திய கீழ வச்திகிட்டு போனம்மா. அதுக்குள்ளார அந்த காவக்காரன் வந்து கத்திய தூக்கிகிட்டாம்மா...’’
இதற்குமேல் பேசவராமல் அழ ஆரம்பித்தாள் சிவகாமி. கத்தியைப் பறிகொடுத்துவிட்டாள் என்கிற விஷயத்தைக் கேட்டதும் அம்மாவுக்கு பகீர் என்றது. தொழிலுக்கான ஆதாரத்தையே இழந்து நிற்கிற கோலம் ஆத்திரத்தை மூட்டியது. கூடையை இறக்கி வைத்துவிட்டு சிவகாமியை இழுத்து நாலு அடி கொடுத்தாள்.
”அவன் வந்து எடுத்துக்கறவரிக்கும் ஒன் கை இன்னாடி புடுங்கிச்சி?’’
”இல்லம்மா. வெறவுதாம்மா கட்டனன்.’’
”நீ ஒருத்திதா இருந்தியா அங்க, வேற யாரும் இல்லியா?’’
”நெறைய பேரு இருந்தாங்கம்மா.’’
”அவுங்கள ஒன்னும் செய்யலியா?’’
”அவுங்கள்ளாம் ஓடிட்டாங்கம்மா’’
”அவுங்க ஓடறவரிக்கும் ஒன் கால மண்லியா பொதச்சி வச்சிருந்த? முண்டம். முண்டம். பொண்ணா பொறந்ததுக்கு ஒரு துப்பு இருக்குத ஒனக்கு? அவன் வந்தானாம். கத்திய எடுத்துக்னானாம், இவ பாத்துக்னு இருந்தாளாம். கதயாடி சொல்ற கத, துப்பு கெட்ட கழுத. வயசு மாத்ரம் கழுதக்கு ஆவற மாதிரி பதிமூணு ஆவுதில்ல. அதுக்கு சரியான புத்தியும் தைர்யமும் வேணாமா? ஒனக்குன்னு புத்தி இல்லாட்டியும் ஊருல ஒலகத்ல பாத்தாச்சும் கத்துக்க வேணாம். ஒன் வயசுல அததும் ஜகத்தயே வெலைக்கு வாங்குதுங்க. எனக்குன்னு நீயும் இருக்கறிய, இருக்கறத தொலைக்கறதுக்கு. என் உயிர வாங்கறதுக்குன்னே வந்து வாச்சிருக்கடி.’’
எரிச்சல் தலைக்கேறுகிற ஒவ்வொரு நிமிஷத்திலும் அடித்தாள் அம்மா. வலி தாளாது தடுமாறி விழுந்த சிவகாமி உரலில் கண்டங்கால் தசையை மோதிக்கொள்ள ரத்தம் பட்ட காயம் நெருப்பாய் எரிந்தது. வேதனையில் சிவகாமி துடித்தாள்.
”இனிமே தொலைக்கலம்மா’’
”அதான் இருக்கறத தொலச்சிட்டு வந்து நிக்கிறியே. இனிமே இன்னாடி வச்சிருக்க தொலைக்கறதுக்கு.’’
மாவுக்கூடையை உள்ளே சென்று வைத்தாள் அம்மா. ஆத்திரமும் எரிச்சலும் பொங்கி வந்தது அவளுக்குள். பிழைப்புக்கு இருந்த ஒரே ஆயுதத்தை இழந்துவிட்ட விஷயம் ரொம்பவும் படபடப்பு தந்தது.
”ஏந்துருடி முண்டம். ஏந்துருடி. எவன் எடுத்துப் போனான். வந்துகாட்டு. இன்னிக்கு கத்தி மட்டும் கொடைக்கல, மொவள பலி குடுத்துவருவன் பலி. ஆட்டமா ஆடற ஆட்டம்? வேளா வேளக்கி கூழோ கஞ்சியோ நாயா லோள்பட்டு லொங்கழிஞ்சி கொண்டாந்து ஊத்தறம் பாரு. அந்த கொழுப்புலதா இந்த மாரி செய்றடி பாவி முண்ட. ஊர்ல ஒவ்வொன்னும் வெட்டிக்னு வான்னா கட்டிக்னு வருதுங்க. மூதேவி. இருக்கறதயும் தொலச்சிட்டு வந்து நிக்கிறியே நீ. ஒன்னயல்லாம் வச்சா நான் உருப்படப் போறன்? ஏந்துருடி. வாயப் பாத்துக்னே ஒக்காந்துக்னிருந்த பொல்லாத கோவம் வரும். வீணா என் ஈசாமய கௌப்பாத. அப்றம் பத்ரகாளியாய்டுவன் பத்ரகாளியா. வா. ஒழுங்கா வந்து எந்த பையன் கத்திய எடுத்தான்னு காட்டு.’’
இழுக்காத குறையாய் சிவகாமியை இழுத்துக்கொண்டே தெருவில் இறங்கினாள் அம்மா.
-மூன்று-
வேலங்காடே வெறிச்சென்றிருந்தது. சுழன்று சழன்று அடிக்கிற காற்றின் சத்தமும் குருவி சத்தமும் தவிர வேறு ஆள் சத்தம் எதுவும் இல்லை. சூளைப்பக்கத்தில் செவ்வகம் செவ்வகமாய் புதுச்சிவப்பு மினுக்க குவியல் குவியலாய் இருந்தன செங்கற்கள். கிழவியைக்கூட காணவில்லை. பழைய காவல்காரனாய் இருந்தால் பிரச்சினையே இல்லை. வெற்றிலை பாக்குக்கு என்று நாலணாவோ, எட்டணாவோ தந்தால் போதும். இந்தப் புதியவன் சுபாவம் எப்படியோ என்று அறியாத நிலைமை வேறு மனசுக்கடியில் பயத்தைக் கோடாய் இழுத்தது.
காவல்காரனுக்காக காடு முழுக்கப் பார்வையை ஒட்டிக் கொண்டிருந்த அம்மாவுக்குப் பத்து பதினோரு வருஷத்துக்கு முன்பு அந்தக் கத்தியை வாங்க நேரிட்ட சந்தர்ப்பம் கீற்றாய் நினைவுக்கு வந்தது. கோலியனூர் புட்லாய் அம்மன் கோயிலில் முடியிறக்கப் புருஷனும் இவளுமாய் போனது. காது குத்தியது. வரும்போது கத்தி வாங்கியது. இரண்டு பேரும் மகதடிப்பட்டுக்குப் பக்கம் விறகு வெட்டப் போனது. எல்லாம் நினைவுக்கு வந்தது. அவனோடு வாழ்ந்த சந்தோஷமான கணங்கள் நினைவுக்கு வந்தது. கொலைக்குற்றம் விழுந்து ஜெயிலுக்குப் போனது நினைவுக்கு வந்தது. ஆறு வருஷமாய் நாயாய்ப்படுகிற தன் கஷ்டங்கள் நினைவுக்கு வந்தது. இத்தனை வருஷ காலத்து ஜீவிதத்தின் ஆதார ஸ்தானத்தில் அந்தக் கத்தி இருந்தது நினைவுக்கு வந்தது. அப்படிப்பட்ட கத்தி இழக்கப்பட்டதில் தலைக்குள் உஷ்ணம் பொங்கியது. ஆத்திரம் வந்தது. சந்தர்ப்ப சூழ்நிலை அறியாது மகளை அடிக்கக் கைக்குப் பலம் தந்தது.
”அழாத... அழுதா வாய புடிச்சி கிழிச்சிருவன். எவங்கிட்ட குடுத்த. எங்க இருக்கான்னு சொல்லு.’’
”இங்கதாம்மா வெட்டிக்னு இருந்தன். பின்னாலேயே வந்து புடிச்சான்மா அந்த ஆளு’’
”ஒழுங்கா உண்மய சொல்லு. அவந்தா புடுங்கிக்னும் போனானா?. இல்ல வேற எங்கியாச்சும் தொலச்சிட்டு பொய் சொல்றியா.’’
”சத்தியமா காவகாரந்தாம்மா புடுங்கிம் போனான்.’’
சிவகாமி காட்டிய இடத்தில் முள்கட்டு மட்டும் இருந்தது. புதுசாய்ச் சிதறிய மஞ்சள் பூக்கள் சின்ன வாடுதலோடு இருந்தது. பொடிப்பொடியாய் மரத்தூள் இருந்தது. விறகுக் கிளை இழுத்துக் கொண்டு போன தடயம் இருந்தது. சிவகாமி பொய் சொல்லவில்லை என்பது அம்மாவுக்கும் புரிந்தது. ஆனால், ஆள் இல்லாமல் யாரைப் போய் என்ன கேட்பது எனப் புரியாமல் தவித்தாள். குழப்பம் ஏறஏற சிவகாமி மேல்தான் கோபம் பொங்கியது. திருப்பித்திருப்பி அவளைப் போட்டு அடிப்பதில் சலிப்பாயும் இருந்தது. பார்வையைத் தூரமாய்ச் சுழலவிட்டபோது அய்யனார் திட்டுப்பக்கம் மாட்டுக்காரச் சிறுவர்கள் தெரிந்தார்கள். அவர்களை விசாரித்தால் தெரியுமே என்கிற ஆசையில் சிவகாமியை இழுத்துக் கொண்டு போனாள் அம்மா.
கருவாடு சுட்டுக்கொண்டிருந்த பையன்தான் முதலில் இவர்களைப் பார்த்தான். குனிந்து சுள்ளியை ஊதிக்கொன்டிருந்தவனும் அப்புறம் நிமிர்ந்தான்.
”காவகாரன் இந்தப்பக்கம் வந்தானா பாத்தியா தம்பி?’’
”அவுரு போயி எவ்வளவோ நாழியாச்சே.’’
”யார சொல்ற நீ?’’
”வேலங்காட்டு காவகாரனத்தானே கேக்கற நீ.’’
”பழைய ஆளு இல்ல. புது ஆளு.’’
”ம். அவருதா. வெறவ ஒன்னு இழுத்துக்னு இந்தப் பக்கம்தான போனாரு.’’
”அந்த ஆளு ஊடு எங்க இருக்குது, தெரியுமா?’’
”சாலையாம்பாளயத்ல.’’
விஷயம் விசாரித்த பையன்களுக்கு உட்கார்ந்து கதையாய்ச் சொன்னாள் அம்மா. காவல்காரன் எடுத்துப் போய்விட்ட கத்திக்கும் ஒவ்வொரு வேளை சோற்றுக்கும் இருக்கின்ற சம்பந்தத்தை எடுத்துச் சொன்னாள். ‘சரி போனா போவுது புதுசா வாங்கிக்கலாம்’ என்று விடமுடியாத கஷ்டத்தையும் துர்ப்பாக்கியத்தையும் சொன்னாள். அதை ரொம்ப அலட்சியமாய் எண்ணிப் பறிகொடுத்துவிட்ட சிவகாமியின் சக்தியீனத்தையும் புத்தியீனத்தையும் சொன்னாள். எல்லார்க்கும் சாமர்த்தியமாய்ப் பிள்ளைகள் பிறந்திருக்கும்போது தனக்கு மட்டும் மண்டூகம் பிறந்திருக்கிற விஷயத்தைத் துக்கத்தோடு சொன்னாள். ‘சரிசரி கவலப்படாதம்மா. ஊட்ல போயி கேட்டா குடுத்திருவாரு’என்று பையன்கள் சொன்ன வார்த்தையை நல்ல சகுனமாக நம்பிக்கையோடு நினைத்துக்கொண்டு எழுந்தாள்.
”கொஞ்சம் கருவாடு துன்றியாமா?’’
”இல்லப்பா. மொதல்ல கத்திய வாங்கணும். அப்பம்தான் கொதிக்கற இந்த வவுத்ல எத துன்னாலும் துன்ன மாதிரி இருக்கும்.’’
-நான்கு-
சூரியன் உச்சியில் இருந்தது. பாளம்பாளமாய் வெடித்துக் கிடந்தது தரை. பள்ளம்பள்ளமாய் இருக்கிற இடத்தில் மட்டும் கொஞ்சமாய் அழுக்குத் தண்ணீர். இரண்டு வட்டாரத்துக்கு முழுக்கவும் அப்படித்தான் இருந்தது. கோடுபோட்டமாதிரி கோணல் கோணலாய் ஒற்றையடிப் பாதைமட்டும் இருந்தது. ஏரிக்கரையைத் தாண்டி அந்தப்பக்கம் போனால்தான் சாலையாம்பாளையம்.
விசுக்விசுக்கென்று முன்னே நடந்துகொண்டிருந்தாள் அம்மா. காவல்காரன் கத்தியைக் கொடுப்பானோ மாட்டானோ என்கிற சந்தேகமும் ‘இல்ல போ’ என்று சொல்லிவிட்டால் என்ன ஆகும் என்கிற பயமும் மனசுக்குள் மாறி மாறிப் படர்ந்தது. அவனோடு எப்படி வினயமாய்ப் பேசவேண்டும், எப்படிப் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் வார்த்தைகளை ஜோடித்துக்கொண்டே வந்தாள். வார்த்தை ஜோடனை நிற்கிறபோது வெயிலைக் கரித்துக் கொட்டினாள். நெருப்பாய் சுடுகிற தரையைத் திட்டினாள். ‘எல்லாம் ஒன்னாலதான்டி’ என்று பின்னால் வருகிற சிவகாமியைக் கோபித்தாள்.
அம்மாவின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடப்பது ரொம்பவும் கஷ்டமாய் இருந்தது சிவகாமிக்கு. எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடியும் நெருப்புமேல் வைக்கிறமாதிரி இருந்தது. பாதம் வெந்து எரிந்தது. பூமி மணல் ஊசியாய்க் குத்தியது. தயங்கி நிற்கவோ ஆயாசம் நீங்க உட்காரவோ முடியாமல் பயம் நெஞ்சுக்குள்ளேயே ஊர்ந்தது. எல்லோரையும் விட்டுவிட்டு அந்தக் காவல்காரன் தன்னைமட்டும் ஏன் பிடித்தானோ என்று மனசுக்குள் நொந்துகொண்டாள். அவனை நினைக்கும்போதே அவன் முதுகில் தந்த அறைகளும், கண்டங்கால் சதை கிழிந்து ரத்தம் வந்த காயமும் ஞாபகம் வந்து அவன்மேல் ஒரு பயத்தையும் படரச்செய்தது. ஒருவேளை தன்னிடம் பேசியது போலவே காவல்காரன் அம்மாவிடம் கோபமாய்ப் பேசி கத்தியைத் தராவிட்டால் அம்மா நிஜமாகவே பலிகொடுத்துவிடுவாள் என்று நினைத்தாள். தலையை வருடி பிடறியை வருடி முத்தம் தரும் அப்பாவின் ஞாபகம் சம்பந்தம் இல்லாமல் வந்தது சிவகாமிக்கு.
”வேகமா நடயேன்டி கழுத... இப்பதா ஆம நட நடக்கற...’’ அம்மா திரும்பி சிவகாமி பக்கம் சிடுசிடுத்தாள்.
”இருக்குதோ இல்லியோ ஏதோ தெனம் சாப்டம் நிம்மதியா சாஞ்சம்னிருக்குதா. தெனம் இம்சயா போச்சு. புருஷன்லேர்ந்து புள்ள வரிக்கும் இம்ச குடுக்கறதுக்குன்னே வந்து வாச்சிருக்குதுங்க. எந்த ஜன்மத்ல யாருக்கு இன்னா பாவம் பண்ணனோ, எல்லா இம்சயும் ஒன்னா வந்து சேந்திருக்குது. யாருகிட்ட சொல்லி அழுவன் நான். ஒன்னு புருஷனாவது தெறமா இருக்கணும். இல்ல பொண்ணாவது தெறமா இருக்கணும். ரெண்டும் தெரவிசி இல்லன்னா இன்னா பண்றது-? மாரியாத்தாகிட்டதா சொல்லி அழணும். இந்த வேவாத வெய்யில்ல வெறும் வவுத்தோட ஓட வய்க்கறியே, இதுக்கொரு முடிவல்லையான்னு அவகிட்டதா சொல்லி அழணும். இந்த காவகாரனுக்குதா ஆவட்டும், ஊர்ல ஒலகத்லேர்ந்து யாரும் காட்டுல
வெறவு வெட்டாமயா இருக்காங்க. பெரிசா வேலி போட்டு தண்ணி ஊத்தி காவ காக்கறமாதிரி கத்திய புடுங்கினானே பாவி. புடுங்கறவன் பெரியவங்களுதா பாத்து புடுங்கி இருக்கணும். சின்ன புள்ளைதா பாத்து எதுக்குப் புடுங்கணும்...’’
ஆழங்கால் வந்தது. தாண்டி ஏரிக்கரை வந்தது. கரை மேல் ஏறி நின்றபோது தென்னந்தோப்பும், கருப்பந் தோப்புமாய் சாலையாம்பாளையம் சிலுசிலுவென்று இருந்தது. முகத்தில் குவிகிறமாதிரி குளிர்ந்த காற்று வந்தது. நெருப்பால் கீறிய மாதிரி திகுதிகுவென்று எரிகிற தேகத்துக்கு இதமாய் இருந்தது காற்று. கணநேரம் ‘அப்பாடா’ என்று நின்று பெருமூச்சுவிட்டு ஊருக்குள் இறங்கினாள் அம்மா. பின்னாலேயே சிவகாமியும்.
கொஞ்சதூரம் வரை எல்லாமே வயல்கள். கருப்பஞ்சோலை வெய்யில் மின்னியது. கம்பும் தினையுமாய் ஒரு வயல் திணித்துக் கொண்டு நின்றது. வெற்றிலைப் பந்தலுக்குள் நாலைந்து பெண்கள் இருந்தார்கள். தென்னைமர நிழலில் குழந்தைக்குப் பால் தந்துகொண்டு இருந்தாள் ஒருத்தி. கொஞ்சம் தள்ளிக் கும்பலாய் இளநீர்க் காய்களைப் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தான் ஒரு கிழவன். இரண்டு பேர் குத்துக்கால் போட்டு இளநீர் உறிஞசிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் பம்ப் இறைந்தது. முந்தானையை இழுத்து செருகிக்கொண்டு வாய்க்காலில் இறங்கி கைகால் கழுவினாள் அம்மா. சளார்சளார் என்று நீரை அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டாள். குனிந்து நாலைந்து வாய் தண்ணீர் குடித்தாள். மேலே வந்து முந்தானையை உதறி முகத்தைத் துடைத்தாள். தண்ணீர் மட்டுமே குடித்துவிட்டு ஓடிவந்தாள் சிவகாமி.
வயல்கள் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாய் குடிசைகள் வந்தன. அரச மரத்தடியில் சின்னதாய்ப் பிள்ளையார் கோயில் இருந்தது. வெற்றிலை குதப்பியபடி ஒரு கிழவன் மரத்தடியில் இருந்தான். அவன் பக்கமாய் அம்மா சென்றாள்.
”வேலங்காட்டு காவகார ஊடு எது தெரிமா தாத்தா?’’
அம்மாவை நிமிர்ந்து பார்த்த கிழவன் சற்று தள்ளி வெற்றிலைச் சக்கையைத் துப்பிவிட்டு வந்தான்.
”யாரு ஊடு?’’
”காவகாரர் ஊடு’’
”எந்த காவகாரன்?’’
”ஏரி உள்ளார வேலங்காடுல்ல, அதுங்காவகாரர்.’’
”ஓஹோ... மீசைக்காரனா... தோ.. நேராப் போனா திரோபத அம்மன் கோயில் வரும். கோயிலுக்குத் தெக்கால திரும்பி நடந்தா புளியமரம் தெரியும். அவ்டத்ல கேட்டா விவரம் தெரியும்.’’
தெரிந்தது.
புளியமரத்துக்கு நேர் எதிராய் புதுசாய் கோரை போட்டு வேய்ந்த குடிசை இருந்தது. மரத்தடியில் குண்டு விளையாடிய பையன் கையோடயே கூப்பிட்டுப் போய் வீட்டெதிரில் நிற்க வைத்து உள்ளே போய் விஷயத்தைச் சொன்னான்.
ரெண்டு நிமிஷம் கழித்து தாட்டிகமாய் நடுத்தர வயசில் ஒரு அம்மா வந்தாள். படபடப்போடு நிற்கிற அம்மாவைப் பார்த்து சற்றே கலவரப்பட்ட மாதிரி இருந்தது. சட்டென்று பாதம் தயங்கி இறவாணத்துக்கடியிலேயே நின்று கொண்டது.
”யாரு ஓணும்?’’
”காவகாரு ஊடு இதுதாங்களே.’’
”ஆமா.’’
”அவரைத்தான் பாக்கணும்.’’
”அவுரு இல்லியே. காலைல போனவரு இன்னும் வரல. இன்னா வெஷயமா பார்க்கணும்?’’
எல்லாவற்றையும் சொன்னாள் அம்மா. அந்தக் கத்தி தனக்கு சோறு போடுகிற தெய்வம் என்று சொன்னாள். ‘‘எப்படியாச்சும் வாங்கிக் குடுத்தா புண்ணியமா போவும்” என்று முடித்தாள். அந்த அம்மா ரொம்பவும் நல்லமாதிரியாய்ப் பட்டது. அம்மாவுக்காகவும் சிவகாமிக்காகவும் பரிதாபப்பட்டது. சிவகாமியின் காயங்களைப் பார்த்து ‘‘அதுக்கு புள்ளய இப்டியா அடிக்கிறது” என்று செல்லமாய்க் கடிந்தது. ‘‘ஆத்திரத்தில் புத்தி எழந்துட்டன்”
என்று மனம் நொந்து, சின்ன அழுகையோடு சிவகாமியை இழுத்து அணைத்துக்கொண்டாள் அம்மா.
”ஏதாச்சும் சாப்டறியாமா நீ?’’
”வேணாம் தாயி.’’
”கம்மங்கூழுதா இருக்குது. ஓணும்னா கரச்சித் தரன்.’’
”பரவாயில்ல தாயி. ஒன் சொல்லிலியே வவுறு குளுந்திருச்சி. நீ போய் குடி தாயி.’’
”ஒனக்கு வேணாம்னா ஒம் புள்ளயாச்சும் குடிக்கட்டுமே. வதவதன்னு இருக்குதே.’’
‘பரவால்ல தாயி. ஒனக்கெதுக்கு சிரமம். கத்திய மட்டும் வாங்கிக் குடுத்துரு. ஒனக்கு கோடி புண்ணியம் கெடைக்கும்.
”அவுரு வரட்டும். வந்ததும் கேட்டு வாங்கித் தரன்னு சொல்றனே. இன்னம் ஏம்மா அதயே நெனச்சிக்னு.’
-ஐந்து-
அந்த அம்மா நினைத்தது மாதிரி சுலபமாய் எதுவும் நடக்கவில்லை. மீசைக்காரன் வரும்போதே வெறும் கையோடுதான் வந்தான்.
அந்த அம்மாவின் குணத்துக்கு மீசைக்காரன் சரியான புருஷனாய்த் தெரியவில்லை. காட்டுத்தனமாய் சத்தம் போட்டான். எகிறினான். எந்த வார்த்தைக்கும் காது கொடுக்காமல் ஆடினான். ‘நீ யார்டி சிபாரிசு பண்ண?’’ என்று துள்ளினான். ஆபாசமாய்த் திட்டினான். திட்டிக்கொண்டே வாசலுக்கு வந்து அம்மாவை முறைத்தான்.
”யாருமா நீ... இங்க எதுக்கு வந்த?’’
”எங்க கத்திய குடுத்துருயா.. நா போய்டறன்’’
”அதெல்லாம் கத்தியுமில்ல.. கித்தியுமில்ல. போ போ...’’
”இந்த புள்ள வெட்டிக்னு இருக்கும்போது நீதான்யா புடுங்கிக்னு வந்த? கத்திய குடுத்துரு, போறம்.’’
”அதெல்லாம் குடுக்க முடியாது போ.’’
”ஒனக்குப் புண்ணியமா போவும், குடுத்துருய்யா.’’
”ஒன் புண்ணியம் கிண்ணியம் எதுவும் எங்களுக்கு வேணாம் போ...’’
முரட்டுத்தனமாய் அவன் பேசும்போதே சிவகாமி அழுதபடியே கேட்டாள், ‘‘நீதான ஒங்கம்மாவ இட்டா. கத்திய தரன்னு சொன்ன.’’
”ஓஹோ.. ஒங்கம்மா பெரிய கலெக்டரா. அதெல்லாம் தர முடியாது... போ.’’
அம்மா அவனிடம் மறுபடியும் கெஞ்ச ஆரம்பித்தாள்.‘
”சோத்துக்குனு இருக்கிற ஒரே கதி அதான்யா. தயவு செஞ்சி குடுத்துருயா.’’
”த.. பாரு, திருப்பித்திருப்பி சொல்லிக்னு இருக்கமாட்டன் நானு. ஒழுங்கா போயிடு.’’
”வெத்தல பாக்குக்கு வேணா ஒனக்கு தெனமும் காசி குடுக்கறம்யா. கத்திய மாத்திரம் குடுத்துரு.’’
”ஓஹோ... பழைய காவக்காரன இப்படிதா ஏமாத்தினீங்களா? அந்த கதயெல்லாம் எங்கிட்ட நடக்காது. மரியாதையா போய்டு.’’
”எங்க வவுத்துல அடிச்சிராதயா. குடுத்துரு.’’
”ஒங்களுக்கு வவுத்துக்கில்லங்கறதுக்காக கௌர்ன்மென்ட் காட்டுல பூந்து வெறவு வெட்டச் சொல்லுதா?’’
”நாங்கமட்டுமா வெட்டறம்? ஊர்ல எல்லாரும்தான் வெட்டறாங்க.’’
”ம். எல்லாரும் துன்னறாங்கன்னு எத குடுத்தாலும் துன்னுருவியா நீ?’’
அம்மாவுக்கு நெஞ்சில் குத்திய மாதிரி இருந்தது. சட்டென்று யார் முன்னாலேயோ அசிங்கப்பட்டதுமாதிரி உடம்பு குறுகியது. ஆத்திரம் வந்தது. பொறுத்துக்கொண்டு பேசினாள்.
”இனிமே வரமாட்ம்யா. போய்டறம். கத்திய குடுத்துருயா.’’
”த பாரு... சும்மா கத்தி கத்தின்னு கலாட்டா பண்ணிக்ணு இருக்காத. நல்லபடியா சொல்றன். ஒழுங்கா எடத்த காலி பண்ணு. ஏதாச்சும் தகராறு செஞ்ச. திருட்டு வெறவு வெட்டனன்னு போலிஸ்ல புடிச்சிக் குடுத்திருவன்.’’
”இனிமே அந்தப் பக்கமே வரல, கத்திய குடுயா.’’
”எங்கிட்ட இல்ல கத்தி. போலீஸ்ல குடுத்துட்டன். போய் வாங்கிக்க போ.’’
”யோவ், அப்படியெல்லாம் சொல்லாதய்யா. குடுத்துரு. ஒன்புள்ள குட்டிங்க நல்லா இருக்கும்.’’
”போ. போ.. போலீஸ்ல வாங்கிக்க போ.’’
”யோவ்.. குடுத்துருய்யா.’’
”ச்சீ... போ... ஒரு தரம் சொன்னா கேக்கமாட்ட. போ... போ.. இங்க கத்தியுமில்ல, கித்தியுமில்ல...’’
சாராய வாசனை சிந்தச் சிந்த உதிர்ந்த அவன் வார்த்தைகள் அம்மாவை ரொம்பவும் சிறுக்க வைத்தன. வாய் அடைத்துக் குனிந்தாள். தளர்ந்து அறைக்கால் பக்கம் நின்ற அந்த அம்மாவைப்
பார்த்தாள். திரும்பி, சிவகாமியைப் பளார் பளார் என்று கன்னத்திலும், முதுகிலும் மாறிமாறி அறைந்தாள். ‘‘அம்மா அம்மா...’’ என்று துடித்தாள் சிவகாமி. துவண்டு துவண்டு சரிந்தாள். மூச்சு திணற அழுதாள். அழுகை பெருத்து இருமினாள். இரும இரும மூச்சு நீண்டு தொண்டை நரம்பு இறுகிப் புடைத்து அடங்கியது. வெள்ளமாய் கண்ணீர் வழிந்தது. ஒடுங்கி சாய்ந்த சிவகாமியை தரதரவென்று இழுத்தபடி திரும்பி நடந்தாள் அம்மா.
மரக்கிளையையும், கத்தியையும் சேர விற்ற காசில் குடித்துவந்த சாராய போதையில் ஒரு விரோதியைப் பார்க்கிற மாதிரி எரிச்சலாயும் சலிப்பாயும் அவர்களைப் பார்த்தான் மீசைக்காரன்.
கேவலோடு நடந்தாள் சிவகாமி. கண்ணீர் வற்றிவிட்டது. புடைத்து அழுந்துகிற குரல்வளையும் தூக்கிப் போடுகிற நெஞ்சும் இன்னும் அமைதிப்படவில்லை. அடிபட்ட இடம் ஒவ்வொன்றும் ரணமாய் வலித்தது. கண்டங்கால் வீங்கி எடுத்து வைக்கிற அடியெல்லாம் வலித்தது. பசித்தது. வயிற்றை மடக்கி படுத்துக் கொள்ள உடம்பு துடித்தது. பக்கத்திலேயே அம்மாவும் வந்தாள்.
அம்மாவுக்கு நிறைய யோசனை. புருஷன்கூட ‘சீ போ’ என்று சொல்லாத தன்னை ஒரு அனாமத்தான ஆள் ரொம்ப சுலபமாய் ‘சீ போ’ என்று சொல்லிவிட்டானே என்ற யோசனை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று போய்க்கொண்டிருக்கிற தன்னை மாரியாத்தா இப்படி சோதிக்கிறாளே என்கிற யோசனை. தான் போகாமல் சிவகாமியை மட்டும் அனுப்பியதால்தானே இத்தனை பிரச்சினைகளும் என்கிற யோசனை. ஒரு புதுக்கத்தி வாங்க ஆகும் பணத்தை யாராச்சும் கடன் தருவார்களா என்கிற யோசனை. மேஸ்திரி பொண்டாட்டி நவநீதம், ரெஜினா, ரேவதி என்று எல்லாரையும் ஒன்று மாற்றி ஒன்று மனசுக்குள்ளேயே பார்த்து உதட்டைப் பிதுக்குகிற யோசனை.
யோசனைகளோடு நடந்ததில் வழிசொன்ன தாத்தா ‘இன்னாமா கிடைச்சானா?’ என்று கேட்டதைக்கூட கவனிக்கவில்லை அம்மா. மௌனமாய் நடந்தாள்.
பம்ப் செட்டுக்கு வந்து தண்ணீர் குடித்தாள். ஏறும்போது குறுக்கே வந்த ஆட்டை விரட்டினாள். தண்ணீர் குடிக்க வராமல் மேலேயே நின்றிருந்த சிவகாமியோடு கொஞ்ச நேரம் உட்கார்ந்தாள்.
வெயில் உக்கிரமாய் இருந்தது. தெருவில் யாரும் இல்லை. வயல்கள் மாத்திரம் மினுக்கிக்கொண்டிருந்தன. குனிந்தபடி
வேலை செய்யும் மனித உடல்கள் தவிர நடமாடுகிற ஜனம் யாரும் இல்லாதது தெரிந்தது. ஒரு சுற்று பார்வையை ஓட்டிவிட்டு திருப்பியவளுக்கு இளநீரில் குத்தி இருந்த கத்தி தெரிந்தது. நீண்ட பிடியுடன் கருகருவென்று பட்டையாய் அளவான நீளத்துடன் இருந்தது கத்தி.
கத்தியைப் பார்த்ததும் சொந்தக்கத்தி ஞாபகம் வந்தது. தொலைந்தது ஞாபகம் வந்து, திட்டுப்பட்டது ஞாபகம் வந்து நீண்ட பெருமூச்சில் முடிந்தது. தொடர்ந்து சின்னப் பொறியாய் ஒரு யோசனை தட்டியது.
சட்டென்று சுறுசுறுப்பானவளாய் சுற்றும்முற்றும் பார்த்தாள். மறுபடியும் வயல்களைக் கவனித்தாள். உற்றுஉற்று ஆள் நடமாட்டம் பார்த்தாள். மெல்ல எழுந்து இளநீர்க் குலையில் குத்தி இருந்த கத்திக்கருகில் சென்றாள். ஒரு கணம் கை நடுங்கியது. இதயம் நடுங்கியது. குலை நடுங்கியது. ரத்தமே இல்லாதது போல் கால் நடுங்கியது. அடுத்த கணம் கத்தியைப் பிடுங்கி ஒரு எட்டு வைத்தாள். பிழைப்புக்கு ஒரு ஆதாரத்தைக் கண்டுபிடித்த திருப்தியோடும் படபடப்போடு நடந்தாள்.
”கத்திய திருடிக்னு போறாடோய் ஒரு பொம்பள... புடி... புடி...’’
அடுத்த அடி வைக்கும் முன் வந்த குரல் இவளைத் திகைக்க வைத்தது. வயிறு சுருங்கியது. குரல் வந்த திசையைத் தேடிப் பார்த்தாள். தென்னந்தோப்பில் மர உச்சியில் இருந்து சாணான் ஒருவன் சத்தமிட்டபடியே வேகமாக இறங்கிக்கொண்டிருந்தான். சட்டென்று பொங்கிய அவமானமும் குழப்பமும் அம்மாவுக்கு கால்களைக் கட்டியது. வெற்றிலைக்கொடி, கருப்பந்தோப்பு, தென்னந்தோப்பில் இருந்து நிமிஷத்தில் ஜனம் திரண்டுவிட்டார்கள். எல்லார் முன்னாலும் குனிந்து நின்றாள் அம்மா. கத்தியை எடுத்த இடத்திலேயே வைத்தாள். சுற்றிலும் கூடிய ஆண்கள் தலைக்குத் தலை பேசினார்கள். கை நீட்டி சத்தம் போட்டுத் திட்டினார்கள். நியாயம் சொன்னார்கள். பொம்பளையாகிவிட்டபடியால் பாவம் பார்ப்பதாய்க் கூறினார்கள். ஒவ்வொரு வார்த்தையும் அம்பாய்த் தைத்தது. சாட்டையால் அடிக்கிறமாதிரி இருந்தது. உள்ளுக்குள் உடம்பே துண்டு துண்டாகி ரத்தம் ஆறாய் ஓடியது. பதில் பேசாமல் குனிந்திருந்தாள். பேசுகிறதையெல்லாம் பேசிவிட்டு ‘போ... போ.... ஒழுங்கா ஊடுபோய் சேரு’’ என்று எரிச்சலாய் ஒருவன் சொன்ன போது திரும்பி நடந்தாள்.
மௌனமாய் நடக்கிற அம்மாவைப் பார்க்க சிவகாமிக்குத் துக்கமாய் இருந்தது. இவ்வளவு விஷயத்துக்கும் தான்தான் காரணம் என்று நினைத்தபோது அவள் வேதனை பெருகியது. துக்கமும் மௌனமுமாய் இருவரும் கரையைநோக்கி நடந்தார்கள்.
இதயம்போல் பாளம்பாளமாய் வெடித்து நீண்டிருந்தது தரை.
(பிரசுரமாகாதது -1985)