விட்டல்ராவின் வீட்டுக்கு மாலை நேரப் பொழுதுகளில் செல்லும்போதெல்லாம் நானும் அவரும் உரையாடிக்கொண்டே சிறிது தொலைவு நடந்துவிட்டுத் திரும்புவோம். திரும்பும்போது ஏதாவது ஒரு கடையில் தேநீரோ, காப்பியோ அருந்திவிட்டு வருவோம். நடைக்காக ஒதுக்கமுடிந்த நேர அளவை ஒட்டி, நாங்கள் நடக்கிற திசையும் தொலைவும் மாறும். அரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கமுடியும் என்றால் அடையாறு ஆனந்த பவன் பக்கமாக நடப்போம். ஒரு மணி நேரம் ஒதுக்க முடிந்தால் கல்கரெ சாலையில் உள்ள தேவாலயம் வரைக்கும் செல்வோம். அங்கே உள்ள ஈரானி கடையில் தேநீர் அருந்திவிட்டுத் திரும்பிவிடுவோம்.
ஒருநாள் அந்தக் கடையில் தேநீர் அருந்திவிட்டு திரும்பும்போது
பொழுது இருட்டிவிட்டது. எல்லாக் கடைகளிலும் விளக்குகள் சுடர்விடத் தொடங்கின. தெரு விளக்குகளும்
பளீரென ஒளியைப் பொழிந்தன. இரண்டு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் வெளிச்சத்தைப்
பாய்ச்சியவண்ணம் ஒன்றை ஒன்று முந்தியபடி ஓடின.
நாங்கள் உரையாடிக்கொண்டே நடைபாதையின் விளிம்பில் மெதுவாக நடந்துகொண்டிருந்தோம்.
இடையிடையே என் பார்வை கடைதோறும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகையின் வாசகங்கள் மீது
பதிந்துவிட்டுத் திரும்பியது. வித்தியாசமான வகையில் எழுதப்பட்டிருக்கும் விளம்பர வரிகளைக்
கண்டால் நான் உடனே அவருக்கு அதைச் சுட்டிக் காட்டுவேன். அவரும் அதைப் படித்துவிட்டு
தனக்குத் தோன்றும் கருத்துகளை சொல்வார்.
ஒரு கடையில் வட்டமான எல்.இ.டி. விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட
ஒரு விளம்பரப்பலகை கட்டப்பட்டிருந்தது. அந்தப் பலகையின் வெளிச்சம் கண்கள் கூசும் அளவுக்கு
அந்தத் தெருவே நனையும்வண்ணம் ஒளிமழையைப் பொழிந்தபடி
இருந்தது. நுரைத்துப் பொங்கும் பால் பாத்திரத்தைப்
போன்ற அந்த விளக்கின் வடிவத்தைப் பார்க்கப்பார்க்க வசீகரமாக இருந்தது. நான் அதை விட்டல்ராவுக்குச்
சுட்டிக் காட்டினேன். அவரும் அந்த விளம்பரத்தை சில கணங்கள் திரும்பிப் பார்த்தார்.
“விளக்குக்கான விளம்பரத்தை ஒரு விளக்கை வச்சே சொல்லிட்டாங்க. ஒரு வார்த்தை கூட தேவைப்படலை.
இதுவும் கலையின் ஒரு வடிவம்தான்” என்று பாராட்டும் விதமாகச் சொன்னார்.
விளம்பரப்பலகையின் முன்னால் நின்றுகொண்டே விட்டல்ராவ் என்னிடம்
“நீங்கள் அந்தக் காலத்துல இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிகையைப் பார்த்திருக்கீங்களா?”
என்று கேட்டார்.
“பார்த்திருக்கேன் சார். எங்க கிராமத்து லைப்ரரிக்கு அது தொடர்ந்து
வந்துகிட்டிருந்தது. ஆங்கில அறிவை வளர்த்துக்கிறதுக்கு அதையெல்லாம் படிக்கணும்னு எங்க
பள்ளிக்கூடத்துல ஆங்கில ஆசிரியர் ஒவ்வொரு வகுப்புலயும் சொல்வாரு. அப்பதான் ஒரு ஆங்கில
வார்த்தையை ஒரு வாக்கியத்துல எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்ங்கற எண்ணம் உருவாகும்னு
சொல்வாரு. நானும் என் கூட்டாளிங்களும் ஒவ்வொரு வாரமும் ஞாயித்துக்கெழமையில லைப்ரரிக்குப்
போய் அந்தப் பத்திரிகையில வரக்கூடிய விஷயங்களை எழுத்து கூட்டிப் படிப்போம். அப்படி
படிச்சிப் படிச்சிதான் நாங்க இங்லீஷ் கத்துகிட்டோம்”
“வெள்ளைக்காரன் காலத்துலயே வர ஆரம்பிச்ச பத்திரிகை அது. தொடக்கத்துல
நாப்பது அம்பது வருஷங்களா டைம்ஸ் ஆஃப் இன்டியா வீக்லி எடிஷனா வந்திட்டிருந்ததுன்னு
சொல்வாங்க. நான் பார்த்ததில்லை. அதுக்கப்புறம்தான் தனி பத்திரிகையா வர ஆரம்பிச்சிது.
அப்பல்லாம் அதுக்கு ஒன்னும் பெரிய பேரு வரலை. அந்தப் பத்திரிகைக்கு குஷ்வந்த் சிங்
எடிட்டரா பொறுப்பேத்துகிட்ட பிறகுதான் இந்தியா முழுக்க மூலை முடுக்குலாம் அதும் பேரு
தெரிய ஆரம்பிச்சிது. அவரு ஒரு பத்து வருஷ காலம் அந்தப் பத்திரிகைக்கு எடிட்டரா இருந்தாரு.
அந்தப் பத்திரிகையுடைய நிறம், மணம், குணம் எல்லாத்தயும் அடியோடு மாத்தி பிரபலமாக்கிட்டாரு…..”
“இங்க்லீஷ்ல எழுதக்கூடிய இந்திய எழுத்தாளர் பேரச் சொல்லுங்கன்னு
கேட்டா, அந்தக் காலத்துல அவர் பேரையும் ஆர்.கே.நாராயண் பேரையும்தான் சொல்வாங்க சார்.”
“இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வச்சி, அவரு பாகிஸ்தானுக்கு
போகும் ரயில்னு ஒரு நாவல் எழுதியிருக்காரு.
நல்ல நாவல். அந்தக் காலத்துல அதை ஒரு படமா கூட எடுத்தாங்க.”
“தமிழ்ல கூட மொழிபெயர்ப்பாகி வந்திருக்குது சார். நான் படிச்சிருக்கேன்.
அப்பாவிப் பொதுமக்கள்கிட்ட ஒரு கூட்டம் அதையும் இதையும் பேசிப் பேசி மதவெறியை உருவாக்கற
இடம்லாம் ரொம்ப நல்லா இருக்கும். கடைசியா யாரோ ஒருத்தனுடைய உயிர்த்தியாகம் அவுங்க திட்டத்தையெல்லாம்
தவிடுபொடியாக்கிடும். படிக்கறதுக்கு விறுவிறுப்பா இருக்கும் சார்”
“படத்தையும் அப்படித்தான் எடுத்திருந்தாங்க. அறுபத்தெட்டோ, அறுபத்தொம்பதோ,
சரியா ஞாபகம் இல்லை, இந்திரா காந்தி ஆட்சி நடந்திட்டிருந்த சமயத்துல அவரு அந்தப் பத்திரிகைக்கு
எடிட்டரா வந்தாரு. ஒவ்வொரு வாரமும் அவரு எழுதற
தலையங்கக் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்தப் பக்கத்துக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல்
அடையாளமா ஒரு லோகோ இருக்கும்”
“லோகோன்னா…?”
“நம்ம ஆனந்தவிகடன் பத்திரிகையில தலையங்கப் பக்கத்துக்கு போட்டிருக்கிற
மாதிரியான ஒரு சின்ன படம்”
“அப்படியா? அதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை சார்”
“இப்ப எல்.இ.டி. பல்பு பார்த்தமே, அதே மாதிரியான ஒரு பல்பு ஒரு
ஒயர்ல தொங்கிட்டிருக்கிற மாதிரியான படம்தான் அவருடைய லோகோ.”
“ஆகா. அந்த ஐடியா அருமையா இருக்குதே”
“ஹோல்டர் இருக்கவேண்டிய இடத்துல அதே அமைப்புல எடிட்டர்ஸ் பேஜ்னு
இங்க்லீஷ்ல எழுதியிருக்கும். அந்த பல்புக்கு நடுவுல சீக்கியர்கள் தலைப்பாகையோடு குஷ்வந்த்
சிங் உட்கார்ந்திருப்பாரு. ஒரு கையில பேனா. இன்னொரு கையில நீளமான ஒரு தாள். பக்கத்துல
புத்தக அடுக்கு. தரையில நாலு பக்கமும் எழுதி எழுதி வீசிய தாள்கள், ஒரு மதுப்புட்டி,
ஒரு கண்ணாடிக்கிண்ணம் அத்தனையும் இருக்கும். அந்தப் படத்தைப் பார்க்கும்போது உலகத்துக்கு
ஒளிபாய்ச்சக் கூடிய கருத்தைச் சொல்றவர்ங்கற தோற்றம் தெரியும். ரொம அர்த்தபூர்வமா இருக்கும்
அந்த லோகோ”
“நீங்க சொல்றத வச்சி அது எப்படி இருந்திருக்கும்ன்னு என்னால
கற்பனை பண்ணி பார்க்கமுடியுது சார்”
“இந்த எல்.இ.டி.விளக்கு விளம்பரத்தை பார்க்கறபோது, எனக்கு அந்த
ஞாபகம்தான் வருது. அந்தக் காலத்து குஷ்வந்த் சிங் ஐடியா இன்னைக்கு யாரோ ஒரு விளம்பர
ஏஜென்சி வரைக்கும் வேற வேற வடிவத்துல தொடர்ந்துகிட்டே இருக்குது”
“நூறு வருஷ காலம் நடந்த பத்திரிகைக்கு பல பேரு எடிட்டரா மாறி
மாறி இருந்திருப்பாங்க. ஆனா அவுங்க எல்லாரையும் விட, குஷ்வந்த்சிங் பேருதான் பலருக்கும்
தெரிஞ்ச பேரா இருக்குது, அது ஏன் சார்?”
“அதுதான் அவருடைய சிறப்பம்சம். குஷ்வந்த்சிங் எடிட்டரா பொறுப்பேத்துக்கற
வரைக்கும் அந்தப் பத்திரிகை இங்க்லீஷ் படிச்ச ஒரு மேல்தட்டு வர்க்கத்து ஆட்களும் டில்லி,
கல்கத்தா, பம்பாய் மாதிரியான பெரிய நகரங்கள்ல வசிக்கக்கூடிய பணக்காரக் குடும்பங்களும்
படிக்கக்கூடிய பத்திரிகையா மட்டும்தான் இருந்தது. அதனுடைய சர்க்குலேஷனும் அந்த அளவுக்குத்தான்
இருந்தது. அந்தப் போக்கை மாத்தி, அதை எல்லோருக்குமான பத்திரிகையா மாத்தனது குஷ்வந்த்சிங்தான்.
இங்லீஷ் நடையையே சுத்தமா மாத்தினாரு. அதுவரை விவாதத்துக்குள்ள வரவே வராத பல விஷயங்களை
தொட்டு எழுதக்கூடிய ஆட்கள எழுத வச்சி வாங்கி போட்டாரு. புது சங்கதிகள். புதி வடிவங்கள்.
புது எழுத்தாளர்கள்னு ஒரு பாய்ச்சல் அவருடைய காலத்திலதான் நடந்தது. வீக்லின்னு சொன்னா
குஷ்வந்த்சிங், குஷ்வந்த்சிங்னு சொன்னா வீக்லிங்கற அளவுக்கு ஒரு மாற்றத்துக்கு அந்தப்
பாய்ச்சல் காரணமா இருந்திச்சி.”
“அப்படி என்ன சார் பண்ணார்?”
“தகுதியான கட்டுரைகளை தகுதியான ஆளுங்கள கொண்டு எழுத வச்சி வெளியிட்டாரு.
அதனால பல பேரு உள்ள வந்தாங்க. அதுக்கப்புறம் பல மாற்றங்கள் படிப்படியா நிகழ ஆரம்பிச்சிது.
இந்திய மொழிகள்ல சிறப்பாக தெரியக்கூடிய நாவல்களை இங்க்லீஷ்ல மொழிபெயர்க்க வச்சி, அழகான
தொடரா ஒவ்வொரு வாரமும் வெளியிட்டாரு. அது ஒரு அருமையான தொடக்கம். மாநில மொழிகள்ல இலக்கியப்போக்கு
எப்படி இருக்குதுன்னு உலகத்துக்கு உணர்த்தறதுக்கு அது ஒரு நல்ல வழியா அமைஞ்சது”
“அப்படியா?”
“ஆமாம். யு.ஆர்.அனந்தமூர்த்தியுடைய சம்ஸ்கார நாவலை ஏ.கே.ராமானுஜம்
வழியா மொழிபெயர்க்க வச்சி, அதை ஒவ்வொரு வாரமும் தொடரா வெளியிட்டாரு. நான் அந்தத் தொடர்
வழியாதான் அந்த நாவலைப் படிச்சேன். அருமையான ஆரம்பம் அது.”
“இந்த மாதிரியான வேலையை செய்யறவங்க யாரா இருந்தாலும் அவுங்கள
நாம என்னென்னைக்கும் நினைச்சிக்கணும் சார். அது ஒரு வகையில நாம அவுங்களுக்குச் செலுத்தக்கூடிய
ஒருவித நன்றிக்கடன்”
“மலையாளத்துல அப்ப பெரிய ஆளுமையா இருந்த எம்.டி.வாசுதேவன் நாயருடைய
ஒப்போள்ங்கற நாவலையும் இங்க்லீஷ்ல மொழிபெயர்க்க வச்சி தொடரா வெளியிட்டாரு”
“தமிழ் நாவல் எதுவும் வரலையா சார்?”
”வந்தது. தி.ஜானகிராமனுடைய அம்மா வந்தாள் நாவலை மொழிபெயர்க்க
வச்சி வெளியிட்டாரு. அப்புஸ் மதர்ங்கற பேருல அது வந்தது. அவருடைய காலம் அப்படி ஒரு
அருமையான தொடக்கத்தைக் கொடுத்தது”
“இந்திய இலக்கியத்துக்கு அது ஒரு குறிப்பிடத்தக்க சேவைதான் சார்”
“குஷ்வந்த்சிங் நாவலோடு மட்டும் நிறுத்திக்கலை. மொழி வேறுபாடு
பார்க்காம, இந்தியாவில பரவலா நல்ல எழுத்தாளரா தெரிய வந்த முக்கியமான எல்லா எழுத்தாளர்களுடைய
ஒன்னு ரெண்டு கதைகளை வாங்கி மொழிபெயர்க்க வச்சி வெளியிட ஏற்பாடு செஞ்சாரு. அதையெல்லாம்
அவுங்க ஒரு புத்தகமா கொண்டுவந்திருந்தா சாகித்திய அகாதெமி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிடற
புத்தகம் மாதிரி வரவேற்பைப் பெற்று இன்னைக்கும் ஒரு முக்கியமான ஆவணமா இருந்திருக்கும். துரதிருஷ்டவசமா
அப்படி நடக்கலைங்கற குறை எனக்கு இப்பவும் உண்டு.”
“ஆமாம் சார். நீங்க சொல்லும்போது எனக்கும் அப்படி தோணுது. தீபம்
கதைகள், கணையாழி கதைகள்னு தமிழ்ல தொகுப்புகள் வந்த மாதிரி வீக்லி ஸ்டோரிஸ்னு ஒரு தொகுப்பு
கொண்டு வந்திருக்கலாம். எங்கள மாதிரி தேடித் தேடி படிக்கிற ஆளுங்களுக்கு பயனுள்ளதா
இருந்திருக்கும்.”
“என்னமோ தெரியலை, அது நடக்காம போயிடுச்சி. அப்ப படிச்ச பல கதைகள்
எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்குது. கிஷன் சந்தர்னு ஒரு உருது எழுத்தாளர் இருந்தார்.
ரொம்ப ரொம்ப முக்கியமான எழுத்தாளர். அவர் கதைகள்ல வடிவம் ரொம்ப கட்டுக்கோப்பா இருக்கும்.
அதே சமயத்துல சமூகத்தின் மேல ஒரு கூர்மையான விமர்சனப் பார்வையும் அடியாழத்துல இருக்கும்.”
“அவருடைய எந்தக் கதை வீக்லியில வந்தது?”
“ப்ரிஞ்சால் ஸ்டோரினு ஒரு கதை. அற்புதமான கதை இப்ப கூட நீங்க
அந்தக் கதையைத் தேடி எடுத்துப் படிக்கலாம். அது வந்து ஐம்பது அறுபது வருஷம் நகர்ந்துபோயிருந்தாலும்
இப்பவும் புதுசாதான் இருக்கும். இன்னைய சூழலுக்கும் ஒத்துப் போகிறமாதிரி இருக்கும்.”
“என்ன மாதிரியான கதை சார்? சுருக்கமா சொல்லுங்களேன். நானும்
தெரிஞ்சிக்கறேன்”
நான் கேட்டதும், விட்டல்ராவ் மிகவும் உற்சாகமடைந்தார். குதூகலமான
முகத்துடன் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
“ஒரு ஊருல ஒரு பாட்டி இருக்காங்க. ஒருநாள் சமையல் செய்ய சமையல்கட்டுக்கு
போறாங்க. பொறியலுக்கு காய்கறி வெட்ட ஆரம்பிக்கிறாங்க. கூடையிலிருந்து பெரிசா அஞ்சாறு
கத்தரிக்காய்ங்கள எடுக்கறாங்க.”
“சரி”
“அந்த ஊரு கத்தரிக்காய் நம்ம ஊரு கத்தரிக்காய் மாதிரி இருக்காது.
பெரிசா தேங்காய் மாதிரி உருண்டையா குண்டா வழவழன்னு இருக்கும். உச்சிக்காம்பு கூட நீளமா
வளைஞ்சி இருக்கும். அவுங்க அந்தக் கத்தரிக்காய நீளவாட்டத்துல சீவி வாழைக்காய் பஜ்ஜி
மாதிரி கூட போட்டு சாப்புடுவாங்க.”
“சரி”
“கூடையிலிருந்து அவுங்க எடுத்த கத்தரிக்காய்கள்ல ஒரு காய் அழுகி
போயிருக்குது. அதனால், பாட்டி அந்தக் கத்தரிக்காய தனியா எடுத்து காம்ப புடிச்சி தூக்கி
ஜன்னல் வழியா தெருப்பக்கமா வீசி எறிஞ்சிட்டாங்க. தொப்புனு அது வெளியில போய் விழுந்தது.
பாட்டி மத்த காய்களை வச்சி சமையலை தொடங்கிட்டாங்க”
“சரி”
“அந்த நேரத்துல ரோட்டுல யாரோஒருத்தரு வேடிக்கை பார்த்துகிட்டே
வராரு. கீழ கத்தரிக்காய இருக்கறது தெரியாம காலால மிதிச்சிடறாரு. குண்டா இருந்த கத்தரிக்காய்
நீளமா சப்பையா மாறிடுது. அவரு அதை திரும்பிக் கூட பார்க்கலை. தன்னுடைய வழியில போயிடறாரு….”
“எதை மிதிச்சோம்னு கூட பார்க்கலையா?”
“இல்லை. அவரு கவனம்லாம் வேற எங்கோ இருக்குதுனு வச்சிக்குங்க.
அவரு போயிடறாரு. கொஞ்ச நேரம் கழிச்சி அதே வழியில வேற ஒருத்தர் வராரு. அவரு சப்பையா
கெடந்த அந்த கத்தரிக்காய பார்க்கறாரு. அவரு கண்ணுக்கு ஒரு கோணத்துல அது தும்பிக்கை
இருக்கற பிள்ளையாருடைய முகம் மாதிரி தெரியுது. ஒருவேளை பிரமையா இருக்குமோன்னு மறுபடியும்
மறுபடியும் அந்தக் கத்தரிக்காயை வெவ்வேறு கோணங்கள்ல பார்க்கறாரு. சந்தேகமே இல்லை. நூத்துக்கு
நூறு விழுக்காடு அது பிள்ளையாருடைய ரூபம்தான்னு அவருக்கு தோண ஆரம்பிச்சிட்டுது. அவரும்
அதை நம்ப ஆரம்பிச்சிடறாரு”
“உண்மையாவா சார்?”
“ஆமாம். உடனே அதை பக்தியோடு குனிஞ்சி எடுத்துகிட்டு தம் போக்குல
நடக்கறாரு. கொஞ்ச தூரம் தள்ளி ஒரு மரத்தடியில ஒரு மேடை இருக்குது. அங்க பிள்ளையார்
சிலை இருக்குது. அந்த மேடையிலேயே இன்னொரு ஓரத்துல அவரு அந்தக் கத்தரிக்கா பிள்ளையாரை
வச்சிட்டு கண்ண மூடி பிரார்த்தனை செஞ்சிட்டு போயிடறாரு.”
“ஆச்சரியமா இருக்குது சார்”
“இனிமேலதான் சுவாரசியமே இருக்குது, கேளுங்க. அவரு கீழ விழுந்து
கும்புடறத பார்த்துட்டு, தெருவுல போனவங்க எல்லாருமே அந்த மரத்தடிக்கு வந்து அந்தக்
கத்தரிக்காய் பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு போனாங்க. ஒரு அம்மா வந்து பார்த்தாங்க.
அதுக்கு குங்குமம் பொட்டு எல்லாம் வச்சிட்டு போனாங்க. இன்னும் ஒரு அம்மா வந்தாங்க.
கடைக்குப் போய் அரளிப்பூ மாலை வாங்கியாந்து போட்டாங்க. அப்புறம் பள்ளிக்கூடத்துக்குப்
போற பசங்கள்லாம் பயபக்தியோடு வந்து பிள்ளையாரை கும்பிட்டுட்டு பரீட்சையில பாஸ் பண்ணணும்னு
பிரார்த்தனை செஞ்சிட்டு போறாங்க.”
“யாருமே உண்மை என்னன்னு கண்டுபிடிக்கலையா?”
“அவசரப்படாதீங்க. ஒவ்வொரு கட்டமா சொல்லறேன். இன்னும் ரெண்டுநாள்
போச்சி. அந்த சப்பைக் கத்தரிக்காய் அடிக்கிற வெயில்ல கருத்து மெலிஞ்சி குச்சி மாதிரி
ஆயிடுது. பூவும் வாடி வதங்கி கீழ கெடந்தது”
“சரி”
“அப்ப அந்தப் பக்கமா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஒரு ஆள் வரான். அந்த மேடையில இருந்த அந்த ரூபத்தைப்
பார்க்கறான். எலும்பும் தோலுமா மெலிஞ்சி சப்பையா இருக்கறத பார்த்ததுமே சிலுவையில அறையப்பட்ட
ஏசுவைப் போல இருக்கற மாதிரி தோணுது.”
“சரி”
“உடனே அது அந்த இடத்துல இருக்கறது அவனுக்குப் பொருத்தமா தெரியலை.
ஆடாம அசையாம மெதுவா அதை எடுத்து துணிக்குள்ள வச்சி எடுத்துட்டு போறான். எங்கயோ ஒரு
தெரு முக்குல சின்னதா கண்ணாடி அலமாரி மாதிரி சட்டம் போட்டு அதுக்குள்ள மாதாவை வச்சி
கும்புடற இடம் இருந்தது. அவன் எடுத்துவந்த ரூபத்தை அந்த மாதா கண்ணாடிக்குக் கீழ வச்சிட்டு,
சிலுவை போட்டுகிட்டே போயிடறான்.”
“கேக்க கேக்க சுவாரசியமாதான் இருக்குது”
“அங்க வந்தவங்க எல்லாரும் அது மாதாவின் மைந்தன் ஏசுன்னு நெனச்சி
அதுக்கு முன்னால நின்னு பிரார்த்தனை பண்ணிட்டு போறாங்க. ஒருத்தரு செஞ்சத பார்த்துட்டு அடுத்தடுத்து பலர்
செஞ்சிட்டு போறாங்க.”
“அப்புறம்?”
“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி, அந்தப் பக்கமா கடைக்குக் கடை,
வீட்டுக்கு வீடு வந்து சாம்ப்ராணி அடிச்சிட்டு போகிற முஸ்லிம் பெரியவர் ஒருவர் வந்தாரு.
இது என்னடா இந்த இடத்துல புதுசா இருக்குதுனு கிட்ட போய் பார்க்கிறாரு. தவம் செஞ்சி
எலும்பும் தோலுமான யாரோ ஒரு சூஃபி மாதிரி இருக்கறதா அவரு நெனச்சாரு.”
“சரி”
“உடனே அந்த உருவத்தை ரொம்ப பக்குவமா மெதுவா எடுத்து ஒரு கூடையில
வச்சி தூக்கிட்டு போய் ஒரு தர்காவுல வச்சிட்டு போயிடறாரு. அடுத்த நாள்லேர்ந்து அங்க
வந்த ஜனங்க எல்லாரும் அது ஏதோ ஒரு சூஃபியுடைய வடிவம்னு நெனச்சி வழிபட்டுட்டு போக ஆரம்பிக்கிறாங்க.”
“அருமையா இருக்குது சார் கதை”
“மனிதர்கள் ஒரு வடிவத்தைக் கண்டடையறாங்க. பிறகு அதும் மேல தன்
எண்ணங்களை ஏற்றிவைக்கிறாங்க. அப்புறம் அதுதான் தன்னுடைய வடிவம்னு நம்ப ஆரம்பிக்கிறாங்க.
இன்னொரு கூட்டம் தன்னுடைய எண்ணங்கள போட்டு பார்க்கறப்போ, அவுங்களுக்கு அது தம்முடைய
வடிவமா தெரியுது. மனிதர்கள் பலரா இருக்கலாம். ஆனா வடிவம் ஒன்னுதான். ஆனா ஒவ்வொருத்தங்களும்
தன்னுடைய எண்ணங்கள அதும் மேல ஏத்தி தன்னுடைய வடிவமா நெனைக்க ஆரம்பிச்சிடறாங்க. அடிப்படையான
உருவம் ஒன்னுதான். ஆனாம் பார்க்கிறவங்களுக்குத்தான் ஒவ்வொரு சமயத்துல ஒவ்வொரு வடிவமா
தோண ஆரம்பிக்குது. கிஷன் சந்தருடைய கதை நம்ம நாட்டுல எழுதப்பட்ட முக்கியமான ஒரு சிறுகதை.”
“நீங்க சொல்றத கேக்கறதே அற்புதமான அனுபவமா இருக்குது சார். எப்படியாவது
அந்தக் கதையைத் தேடிக் கண்டுபிடிச்சி படிச்சிடுவேன் சார்.”
“கலையின் வெற்றியும் அதுதான். ரகசியமும் அதுதான். இதுக்கு இதுதான்
பொருள்னு அகராதியில இருக்கற மாதிரி கலை ஒருநாளும் அர்த்தம் சொல்றது கிடையாது. பார்க்கிற சந்தர்ப்பம் சார்ந்தும் பார்க்கிற மனிதர்கள்
சார்ந்தும் அர்த்தங்களும் மாறி மாறி பெருகிட்டே போகும்.”
விட்டல்ராவ் அக்கருத்தைச் சொன்ன போது, கலை சார்ந்த ஆழமான விளக்கமொன்றைப்
புரிந்துகொண்டதுபோல உணர்ந்தேன். என் மனம் தளும்பியது. எனக்குள்ளேயே அச்சொற்களை மீண்டும்
நினைவுக்குக் கொண்டுவந்து ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.
“வீக்லி இல்லைன்னா, இந்த மாதிரியான கதைகளைப் படிக்கிற வாய்ப்போ
தெரிஞ்சிக்கிற வாய்ப்போ நமக்கெல்லாம் வரவே வழியில்லை. அந்த ஒரு விஷயத்துக்காகவே காலமெல்லாம்
குஷ்வந்த்சிங்குக்கு நாம நன்றி சொல்லணும்” என்று சொல்லிமுடித்தார் விட்டல்ராவ்.
(அம்ருதா
– நவம்பர் 2024)