மீனாட்சி அக்கா ஜன்னலோரமாக தையல் மிஷினில் புடவைக்கு ஃபால்ஸ் வைத்து தைத்துக்கொண்டிருந்தாள். காமாட்சி அக்கா தூணில் சாய்ந்தபடி மடியில் முறத்தை வைத்துக்கொண்டு வேர்க்கடலையை தோல் உரித்துக்கொண்டிருந்தாள். ”வேலை விஷயமா ஒரு கம்பெனி மானேஜர பார்க்கப் போவலாம் வாடான்னு ராகவன் சொல்லியிருந்தான். நெல்லித்தோப்பு வரைக்கும் போயிட்டு வரேங்க்கா” என்று இரண்டு அக்காக்களிடமும் பொதுவாக விடைபெற்றுக்கொண்டு ’சின்னஞ்சிறு கிளியே என் சித்திரப் பூங்குயிலே’ என ஒரு சினிமாப்பாட்டை முணுமுணுத்தபடி வெளியே வந்தான் குமாரசாமி.
காலணியை அணிந்துகொண்டு வெளியே படியிறங்கி வந்தவன் தற்செயலாக
பக்கவாட்டில் திரும்பியபோது, அடுத்த வீட்டு வாசலில் ஒரு பெண் குழப்பமான முகத்துடன்
நின்றிருப்பதைப் பார்த்தான். ஒவ்வொரு நாளும் ஓரப் பார்வையால் பார்த்துப் பார்த்து ரசித்த
முகம். ஆயினும் முதல்முறையாகப் பார்ப்பதுபோல அக்கணத்தில் அவன் உடலெங்கும் அவனை அறியாமல்
ஒரு பரபரப்பு படிந்தது. சட்டென திரும்பி வேகமாக வீட்டுக்குள் சென்றான்.
“என்னடா, எதையாவது மறந்துட்டியா?” என்று கேட்டாள் மீனாட்சி அக்கா.
“இல்லக்கா. ஒரு நிமிஷம் எழுந்து வாயேன். பக்கத்து வீட்டு வாசல்ல
ஒரு பொண்ணு நின்னுட்டிருக்குது”
“அந்த வீட்டு வாசல்ல ஒரு பொண்ணு நின்னா, உனக்கு என்னடா? நீ போற
வழியிலயா குறுக்க நிக்குது?”
“ஐயோ, அது யாரோ வழியில போற பொண்ணு இல்லக்கா. நம்ம பக்கத்து வீட்டுல
விசாலாட்சி சித்திகிட்ட தெனமும் பாட்டு கத்துக்கற பொண்ணு”
“ஒனக்கு எப்படித் தெரியும்?”
“மூனு மாசமா தெனமும் இங்கதான் வந்து பாட்டு கத்துக்குது. தெனமும்
பாக்கறனே, எனக்குத் தெரியாதா?”
”மூனு மாசமாவா? நான் ஒருநாளும் பார்த்ததே இல்லியே.”
“ம்க்கும். ஒனக்கு எப்படித் தெரியும்? பொழுது முழுக்க மிஷின்லயே
உக்காந்திருந்தா, தெருவுல யாரு வராங்க, யாரு போறாங்கன்னு எப்படி தெரியும்?”
“அது சரி. அதையெல்லாம் தெரிஞ்சி எனக்கு என்ன ஆவப் போவுது சொல்லு?”
என்றபடி மிஷினுக்குப் பக்கத்தில் மேசை மீதிருந்த துணியை கையை நீட்டி எடுத்தாள். அந்தப் பெண்ணைச் சார்ந்து
தான் வெளிப்படுத்தும் அக்கறையை தன் அக்கா சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்கிற ஆற்றாமை
குமாரசாமிக்கு ஏற்பட்டது. மெதுவாக “அக்கா, “பாவமா இருக்குதுக்கா. அந்த சித்தி எங்க
போயிருக்குதோ தெரியலை. ஒரு நிமிஷம் நீ வெளியே
வந்து பாருக்கா. அவுங்க வரவரைக்கும் அந்த பொண்ண நம்ம வீட்டுக்குள்ள வந்து உக்காரச்
சொல்லுக்கா.” என்றான்.
“நமக்கு எதுக்குடா தம்பி இந்த வீணான வேலை? நின்னா நின்னுட்டு
போவட்டுமே. கால் வலிச்சா, தானா திரும்பி போயிடும்”
“பாவமா இருக்குதுக்கா. ஒரு நிமிஷம் நீ எழுந்து வாக்கா. நம்ம
வீட்டுக்குள்ள கூப்ட்டு உக்கார வை”
அவன் சொன்னதையே திருப்பித்திருப்பிச் சொன்னான்.
“ஏன், அதை நீயே போய் சொன்னா என்ன?”
“ஐயோ, நான் போய் கூப்ட்டா நல்லாவா இருக்கும்?”
முணுமுணுத்தபடியே மிஷினை நிறுத்திவிட்டு அக்கா கூடத்தைத் தாண்டி
வெளியே சென்றாள். தூணை ஒட்டி நின்றபடி “என்னம்மா,
கதவு பூட்டியிருக்குதா?” என்று அந்தப் பெண்ணிடம்
கேட்டாள்.
அவள் ’ஐயோ பாவம்’ என்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டு ”ஆமாம்க்கா”
என்றபடி தலையை மேலும் கீழும் அசைத்தாள்.
“எங்கனா வெளியூரு போவறதா இருந்தா, வீட்டைப் பார்த்துக்கிடச்
சொல்லி எங்ககிட்டதான் வழக்கமா சொல்லிட்டு போவாங்க. ஆனா இன்னிக்கு எங்கிட்ட அந்த மாதிரி
ஒன்னும் சொல்லலையே…” என்று இழுத்தபடியே வீட்டுப் பக்கமாகத் திரும்பி “ஏன்டி காமாட்சி,
உங்கிட ஏதாச்சிம் சொல்லிட்டு போனாங்களா?” என்று கேட்டாள். மடியிலிருந்த முறத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு வெளியே
வந்த காமாட்சி ”ம்ஹூம், இல்லைக்கா” என்று தலையசைத்தாள்.
“இங்க எங்கனா பக்கத்துல கடை வரைக்கும்தான் போயிருப்பாங்க. அஞ்சி
பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க. சித்த நேரம் நீ உள்ள வந்து உக்காரும்மா. எதுக்கு வாசல்ல
ஒத்தையில நிக்கிற?”
அவள் முதலில் எதையோ யோசித்துத் தயங்கினாள். பிறகு மெதுவாக அந்த
வீட்டுப் படியில் இறங்கி நடந்து அவர்கள் வீட்டின் முன்னால் இருந்த படிகளில் மெதுவாக
ஏறி உள்ளே வந்தாள். “வாம்மா, வா” என்று மீனாட்சி அக்கா மறுபடியும் சொன்னாள். இரு பக்கங்களிலும்
சுவர்களை மாறி மாறிப் பார்த்தபடி அவள் வீட்டுக்குள் வந்தாள்.
நூல்கண்டு பெட்டி வைத்திருந்த ஸ்டூலை எடுத்துவந்து அவள் உட்கார்வதற்காக
சுவரோரமாக வைத்தாள் காமாட்சி. அவள் அந்த ஸ்டூலில் அமர்ந்து அரைப்புன்னகையோடு அந்த வீட்டையும்
சுவரில் தொங்கிய காலண்டர்களையும் புகைப்படங்களையும் அலமாரிகளையும் துணிக்கொடியையும்
பார்த்தாள். அப்போதுதான் அவள் இரு பெண்களுக்கு அப்பால் குமாரசாமி நின்றிருப்பதைக் கவனித்தாள்.
ஒரு கணம் துணுக்குற்றதுபோல அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.
திகைப்புடன் “அங்க..” என்று அவன் பக்கமாக விரலைச் சுட்டிக் காட்டியபடி
மீனாட்சி அக்காவைப் பார்த்தாள்.
“அவன்தான் எங்க தம்பி. குமாரசாமி” என்றாள் அக்கா. ”பிஎஸ்சி முடிச்சிருக்கான்.
எங்க எங்கயோ அவனும் சுத்தி வரான். ஒன்னும் சரியான வேலை அமையலை. அவன்தான் நீ வெளிய ஒத்தையில
நிக்கறத பார்த்துட்டு வந்து சொன்னான்”
அவள் தயக்கத்தோடு திரும்பி அவனைப் பார்த்தாள். குச்சியான தோற்றம்.
உயரமாக இருந்தான். அந்த உயரம்தான் அவனைக் குச்சியாகக் காட்டுகிறதோ என்று நினைத்துக்கொண்டாள்.
தலைமுடி அடர்ந்து அழகாக இருந்தது. அவன் கண்கள் பளபளப்பாக கூர்மையுடன் இருப்பதாகத் தோன்றியது.
“நேத்து நீங்க பாடின ’கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்’ பாட்டு
ரொம்ப நல்லா இருந்திச்சி.”
எதிர்பாராத கணத்தில் அவன் பேசியதைக் கேட்டு அவள் திகைப்பில்
மூழ்கிவிட்டாள். “ஆங்…” என்று தடுமாற்றத்தோடு இழுத்தாள். அவன் முன்பு சொன்னதையே மீண்டும்
ஒருமுறை சொன்னான்
அவள் அதைக் கேட்டு ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தாள். “நீங்க
எப்ப கேட்டீங்க?” என்று குழப்பத்தோடு கேட்டாள்.
“அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் நடுவுல இருக்கறது இந்த
ஒரே ஒரு சுவர்தான். அங்க பாடினா ஓரளவு இங்கயும் கேக்கும்”
புருவத்தை உயர்த்தியபடி அவனைப் பார்த்தாள்.
“நாங்க தினம்தினமும் ப்ராக்டிஸ் பண்ற எல்லாப் பாட்டயும் கேப்பீங்களா?”
‘ம். வீட்டுல இருந்தா கேப்பேன்”
அவளுக்கு முகம் சிவந்தது.
”நேத்து பாருக்குள்ளே நல்ல நாடு பாடினீங்களே, அதைக் கேட்டேன்.
அதுக்கு முதல்நாள் தாமதம் தகாதய்யான்னு பாடிய பாட்டயும் கேட்டேன்.”
“ம். ஏகலைவன் மாதிரி நினைச்சிகிட்டீங்களா? இருங்க. இருங்க. எங்க
பாட்டு மிஸ்கிட்டயே சொல்றேன்”
“ஐயையோ, அப்படியெல்லாம் சொல்லி வைக்காதீங்க. நான் ஒன்னும் கத்துக்கலையே.
அந்த அளவுக்குல்லாம் எனக்கு ஞானம் கிடையாது. காதால கேக்கறேன். அவ்ளோதான்”
“ஏன் பாட மாட்டீங்களா?”
“ம்ஹூம். அந்த மாதிரி பயிற்சியோ குரலோ எனக்குக் கிடையாது. ஆனா
எங்க பாடினாலும் நின்னு கேப்பேன். அவ்ளோதான்.”
அவன் கலகலப்பாக பேசிய விதம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவனுடன் தொடர்ந்து உரையாட வேண்டும் போல ஒரு விருப்பம் எழுந்தது. “யார் யார் பாட்டையெல்லாம்
கேப்பீங்க?” என்று உற்சாகத்தோடு கேட்டாள்.
“நான் சினிமா பாட்டுக்கும் ரசிகன். கர்நாடக சங்கீதத்துக்கும்
ரசிகன். கேக்கும்போது மனசுக்கு இதமா இருந்தா போதும். எந்தப் பாட்டா இருந்தாலும் சரி,
உடனே கேக்க ஆரம்பிச்சிடுவேன்” என்று சிரித்தான். மேல் உதட்டுக்குக் கீழே ஓரமாக தெரிந்த
தெத்துப்பல்லின் தோற்றம் அவன் சிரிக்கும்போது அழகாக இருந்தது.
”அந்தப் பக்கம் சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ்,
ஏ.எம்.ராஜா, ராகவன், எஸ்.பி.பி., சுசிலா, ஜானகி, வாணி ஜெயராம் எல்லாரயும் கேப்பேன்.
இந்தப் பக்கம் மகாராஜபுரம், ஜி.என்.பி., எம்.எஸ்., வசந்தகுமாரி, அருணா சாய்ராம், பாம்பே
ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ எல்லாரையும் கலந்து கட்டி கேப்பேன்.”
மூச்சு விடாமல் பேசுபவனையே ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்
அவள். அதற்குள் காமாட்சி அக்கா கூடத்திலேயே ஒரு கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த
ஒரு பெரிய அட்டைப்பெட்டியை இழுத்து அவள் முன்னால் வைத்து திறந்து காட்டினாள். அதற்குள்
ஏராளமான கேசட்டுகள் அடுக்கடுக்காக இருந்தன. அவற்றையெல்லாம் பார்த்த அந்தப் பெண் மலைத்த
பார்வையுடன் அவன் பக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். “இவ்ளோ கேசட்டா? எத்தன வயசிலேர்ந்து
சேக்க ஆரம்பிச்சீங்க?” என்று உதடுகளின் மீது விரலை வைத்தபடி அவனைப் பார்த்துக் கேட்டாள்
அந்தப் பெண்.
அவன் பதில் சொல்லவில்லை. அவனுக்குப் பதிலாக காமாட்சி அக்காவே
பதில் சொன்னாள். “சரியான பாட்டுப் பைத்தியம்மா இவன். ஸ்கூல்ல எப்பவோ நடந்த ஒரு பாட்டுப்போட்டியில
அவனுக்கு ஒரு தரம் பரிசு குடுத்தாங்க. அதுதான் ஆரம்பம். அன்னையிலேர்ந்து ஐயா ராக்கெட்
ஆகாயத்துலயே பறந்துட்டிருக்குது” என்று சிரித்தாள்.
கேசட்டுகளின் வரிசையைக் கலைத்து பெயர்களைப் படித்தபடியே “நீங்க
பாடுவீங்களா?” என்று காமாட்சி அக்காவிடம் கேட்டாள் அவள். ”அந்தப் பழக்கம்லாம் கெடையாதும்மா. ஒரு தரம் கேட்டதயே எனக்கு ஒழுங்கா திருப்பிச் சொல்லத்
தெரியாது” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அடுத்து மீனாட்சி அக்காவின் பக்கம் திரும்பி “நீங்க?” என்று
கேட்டாள். “எனக்கும் கெடையாதும்மா. தம்பிதான் ஒன்னொன்னா ப்ளேயர்ல போட்டு இதக் கேளு
இதக் கேளுன்னு சொல்வான். அப்ப கேக்கறதோடு சரி, வேற எதுவும் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
இந்த தையல் மிஷின், இந்த கத்தரிக்கோல், இந்தத் துணிகள். அவ்ளோதான்” என்றாள் அவள்.
“வீட்டுக்கு பக்கத்துலயே பாட்டு வாத்தியாரை வச்சிகிட்டு பாடறதுக்கு
கத்துக்காம விட்டுட்டீங்களே?”
“நம்ம தலையில அப்படி எழுதலையேம்மா. நாம என்ன செய்யமுடியும், சொல்லு? இவன் பொறந்து நாலஞ்சி
வருஷத்துல வயித்துல கட்டி வந்து அம்மா செத்துட்டாங்க. அப்பா மட்டும்தான். எலெக்ட்ரிக்
வேலை பாக்கறாரு. எப்படியோ எங்க வண்டி ஓடுது. இவன்தான் அப்பப்ப பாட்டு, கூத்துனு ஓடிட்டே
இருப்பான். இவன் ஏதாவது ஒரு வேலையில உக்காந்து நிமுந்தாதான் இந்தக் குடும்பம் நிமுரும்”
பேச்சை திசைதிருப்புவதற்காக “உங்க வீடு எங்க இருக்குது?” என்று
கேட்டான் குமாரசாமி. அவள் உடனே உற்சாகத்துடன் “வில்லியனூருல” என்றாள். தொடர்ந்து “ஆனா
எங்களுக்கு உண்மையான சொந்த ஊரு தஞ்சாவூரு. நான் பொறந்து நாலைஞ்சி வருஷம் வரைக்கும்தான்
அந்த ஊருல இருந்தோம். அதுக்கப்புறம் வேலை விஷயமா அப்பா சென்னை, மதுரை, திருச்சின்னு
இடம் மாறிட்டே இருந்தாரு. நாங்களும் அவரு கூடவே இடம் மாறிட்டே இருந்தோம். இப்ப வில்லியனூருல
இருக்கோம்” என்று சொன்னாள்.
“பாட்டு கத்துக்கறதுக்காகவா வில்லியனூருலேருந்து நெல்லித்தோப்புக்கு
வரீங்க?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.
“ம்”
“எப்படி?”
“பஸ்லதான்”
அவள் அந்தக் கேசட் குவியலிலிருந்து ஒரு கேசட்டை எடுத்து ”இதுல
வேலனே சிவபாலனேன்னு ஒரு பாட்டு இருக்குது பாருங்க, அதை வையுங்க” என்று அவனிடம் கொடுத்தாள்.
அது பாம்பே ஜெயஸ்ரீ பாடிய அமிர்தம் பாடல்தொகுப்பு. அவன் அதை
வாங்கி ப்ளேயரில் வைத்து அந்தப் பாட்டைத் தேடி எடுத்து இசைக்க வைத்தான். அழகான மெல்லிய
ரீங்காரத்தோடு ஜெயஸ்ரீயின் மன்றாடும் குரலில் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அந்தப் பாடல்
முடியும் வரை அனைவரும் அமைதியாக அந்தப் ப்ளேயரின் மீதே பார்வையைப் பதித்திருந்தனர்.
அந்தப் பாடல் முடிந்ததும் அவன் அவளிடம் “நீங்க கத்துகிட்ட பாட்டுல
உங்களுக்கு எந்தப் பாட்டு ரொம்ப புடிக்கும்?” என்று கேட்டான். அவள் அடுத்த கணமே “முருகா
முருகா என்றால் உருகாதோ உன்றன் உள்ளம்னு ஒரு பாட்டு இருக்குது. அது எனக்கு ரொம்ப புடிக்கும்.
எங்க பாட்டிக்கு புடிச்ச பாட்டு அது. சின்ன வயசில என்ன இந்தப் பாட்ட அடிக்கடி பாடச்சொல்லி
கேப்பாங்க. அவுங்களுக்காகப் பாடிப் பாடி எனக்கும் அந்தப் பாட்டு ரொம்ப புடிச்சி போச்சி”
என்று சொல்லிவிட்டு புன்னகைத்தாள்.
“எனக்கும் முருகன் பாட்டுன்னா ரொம்ப புடிக்கும். மருதமலை மாமணியே முருகையா, திருச்செந்தூரில் கடலோரத்தில்,
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாட்டுகளை ஒரு நாள் முழுக்க சோறு தண்ணி இல்லாம
கேக்கச் சொன்னாலும் கேப்பேன்”
“அவ்ளோ பக்தியா?” என்று புன்னகைத்தபடி அவள் கேட்டாள்.
“உண்மையை சொல்லணும்ன்னா, என் பக்தியை நூறு பர்சண்ட் பக்தின்னு
சொல்லமுடியாது. ஒரு ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டின்னு வச்சிக்கலாம்” என்று சொற்களை தயங்கித்தயங்கி
இழுத்து எப்படியோ சொல்லி முடித்தான் அவன்.
அந்த நேரத்தில் மீனாட்சி அக்கா “பக்தியெல்லாம் இல்லம்மா. நாங்க
ரெண்டு பேரும் அடுத்தடுத்து பொண்ணாவே பொறந்துட்டோம். எங்கள பெத்தவங்களுக்கு அதுவே பெருங்கவலையா
போயிடுச்சி மூனாவதாவது பையனா பொறக்கட்டும்ன்னு மைலம் முருகன் கோயிலுக்குப் போய் வேண்டிகிட்டாங்க.
அதுக்கப்புறம்தான் அவன் பொறந்தான். அதனாலதான் குமாரசாமின்னு அவனுக்கு முருகன் பேரையே
வச்சாங்க”
அவள் அக்கா சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டாள் அவள். பிறகு
“ம். ஒரு பேருக்குப் பின்னால இவ்வளவு நீண்ட வரலாறு இருக்குது” என்று புன்னகையோடு சொல்லிக்கொண்டாள்.
வீட்டு வாசலில் இரைச்சலோடு ஒரு ஆட்டோ வந்து நிற்கும் சத்தம்
கேட்டது. குமாரசாமி ஒருகணம் சட்டென வெளியே சென்று எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே திரும்பினான்.
“சித்திதான். வந்துட்டாங்க” என்று தெரிவித்தான்.
அவள் சட்டென்று எழுந்து நின்றாள். “அப்ப நான் கெளம்பறேன்” என்று
எல்லோர் மீதும் பார்வையைப் படரவிட்டபடி பொதுவாகச் சொன்னாள்.
அக்கா அப்போதுதான் “ஐயோ” என்றபடி சட்டென மிஷினைவிட்டு பதற்றத்தோடு
எழுந்து நின்றாள். “இரும்மா கண்ணு. பேச்சுப்பெராக்குல நானும் நேரம் போவறது தெரியாம,
உன் கூடவே உக்காந்து வாயப் பார்த்துகினு இருந்திட்டேன். ஒரு டீ போடறேம்மா. சித்த நேரம்தான்.
குடிச்சிட்டு கெளம்பலாம்” என்றாள்.
“பரவாயில்லைங்க்கா. இது தெனமும் வந்து போவற இடம்தான? இன்னொரு
நாள் வந்து நானே டீ வேணும்ன்னு கேட்டு வாங்கி குடிக்கறேன்”
அவள் முன்னால் அடியெடுத்து வைத்துச் சென்று மீனாட்சி அக்காவின்
கைகளையும் காமாட்சி அக்காவின் கைகளையும் தொட்டு அழுத்தி விடைபெற்றாள்.
அவள் அறையைவிட்டு வாசலுக்கு வந்தபோது குமாரசாமி பின்னாலேயே வந்தான்.
அவனைப் பார்த்து “வரேன். ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.
“எதுக்கு?” என்று அடங்கிய குரலில் கேட்டான் அவன். அவள் அதற்குப் பதில் சொல்லவில்லை.
அதற்கு மாறாக “இனிமேல நான் பாடற சமயத்துல எல்லாம் என் பாட்ட சுவத்துக்கு மறுபக்கத்துல
உக்காந்துகிட்டு ஒரு உயிர் எனக்காக கேட்டுகிட்டிருக்குதுங்கற நெனப்போட பாடுவேன்” என்று
உணர்ச்சியோடு சொல்லிவிட்டு நடந்தாள்.
அவன் அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டே நின்றான். சித்தியின்
வீட்டு வாசலில் படியேறி கதவுக்கு அருகில் சென்றபிறகு ஒருகணம் திரும்பிப் பார்த்து புன்னகைத்துவிட்டுச்
சென்றாள்.
(அமுத
சுரபி – தீபாவளி மலர் – நவம்பர் 2024)