போ போ என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்கிற மாதிரி சொல்லி அனுப்பியபோது ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் நாவல் பழம் பொறுக்கவும், கடலோரம் ஆட்டம் போடவும் சுவாரஸ்யத்தோடு ஓடத் தொடங்கியதுதான் முதல் தப்பு. ஆட்டத்தில் ருசி கண்டு படிப்பை மறந்து எஸ்.எஸ்.எல்.சி.யில் தோற்றுப்போனது அடுத்த தப்பு. அக்டோபர் மார்ச் என்று மாற்றி மாற்றி நாலு தரம் எழுதியும் குறைந்தபட்ச மார்க்கில்கூட தேற வக்கில்லாமல் போனது அதற்கடுத்த தப்பு. எங்கேயும் நிரந்தரமாய் இல்லாமல் நாயுடு ஜவுளிக்கடையில் சில வருஷங்கள், தேவராஜ் சேட்டுக்கடையில் சில வருஷங்கள், பண்ருட்டி இரும்பு பேக்டரியில் சில வருஷங்கள் என்று மாறிமாறி உத்தியோகம் பார்த்தது இன்னொரு தப்பு. வனஸ்பதி பேக்டரியில் வாட்ச்மேன் வேலைக்கு இன்டர்வ்யூ ஒன்று வீட்டுக்கு வந்திருந்த சமயத்தில் மனசு வெறுத்து ஊர் உறவு மறந்து பதினைந்து நாட்களுக்கு மெட்ராஸ் ஓடிவிட்டு வந்தது இன்னும் ஒரு தப்பு. இந்த லட்சணத்தில் சாந்தியை கல்யாணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாகிவிட்டது பெரிய தப்பு.
தப்புகளுக்கெல்லாம் கழுவாய் தேடுகிற
மாதிரி தன் சினேகிதர் மூலம் இந்த வேலைக்கு ஏற்பாடு செய்தார் அப்பா. ஓட்டலில் பில் எழுதும்
வேலை. உள்ளூராய் இருந்தாலும் ஒத்துக் கொள்ளலாம். பெங்களூரில் என்கிறபோது கேசவன் கொஞ்சம் தயங்கினான். அப்பா மௌனமாய் திண்ணைக்குப் போய் உட்கார்ந்தபடி
கண்கலங்கினார். ‘ரெண்டு புள்ளைங்களுக்கு அப்பனாய்ட்டப்பறமும்
இப்படி நடந்துக்கறானே’ என்ற மாதிரி இருந்தது அந்த சோகம்.
நாலு வார்த்தை சத்தம் போட்டு திட்டி
இருந்தாலும் பரவாயில்லை. தாங்கிக்கொள்கிறமாதிரி இருக்கும். எதுவும் சொல்லாமல் மனசுக்குள் அழுத்திவைத்து அழுவதைப்
பார்க்கும்போது சங்கடமாய் இருந்தது மனசு. அடுத்த நாளே சாந்தியிடம் சொல்லிக்கொண்டு வண்டி
ஏறி வந்துவிட்டான்.
வந்து நாலுமாசம் ஆகிறது. ஊரும்
பாஷையும் புரிய ஆரம்பத்தில் சிரமமாய் இருந்தது. புரிந்துக் கொண்டதும் சூழ்நிலை சுலபமானது.
சக தொழிலாளர்களிடம் செலுத்திய மரியாதையும் பிரியமும் நட்பை வளர்த்தது. நட்பு மனக்காயங்களைக் கொஞ்சமாய் ஆற்ற உதவியது.
ஓட்டலின் மேல்மாடியில் சின்னதாய்
அறை ஒன்று இருந்தது. எல்லோருக்கும் வாசம் அங்குதான். அதிகாலை ஐந்து மணிக்கு ஓட்டலுக்குள்
போகிற எல்லோருக்கும் எப்போது அறைக்குத் திரும்புவோம் என்று இருக்கும். காலில் சக்கரத்தைக்
கட்டிக் கொண்டமாதிரி ஓடி ஓடி அலுத்து எப்போது அறைக்குத் திரும்பவாம் என்று இருக்கும்.
காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டமாதிரி ஓடிஓடி அலுத்து எப்போது தரையில் சாய்வோம் என்று
மனம் தவிக்கும். வந்த மேனிக்கு லுங்கியை, சுற்றிக்கொண்டு படுத்துவிடுவார்கள். படுத்த
நிமிஷத்திலேயே வருவதில்லை. யோசனைகளும் அறையின் புழுக்கமும் தவிக்க வைக்கும். தவிப்பு
அடங்க மொட்டைமாடிக்குப் போவான். தனிமையும், விரிந்த ஆகாயமும் இன்னும் கொஞ்சம் யோசனைகளைக்
கிளப்பும். யோசனை அதிகமாக தூக்கம் சுத்தமாக அறுந்துபோகும்.
தூக்கம் சிறிதும் வராமல் அன்றும்
புரண்டுபுரண்டு படுத்துக் கொண்டிருந்தான் கேசவன்.
நிலாவின் வெளிச்சத்தில் ஆகயத்தின்
கருநீலம் கவர்ச்சியாய் இருந்தது. புள்ளி புள்ளியாய் ஜொலிக்கிற நட்சத்திரங்களும், பஞ்சுப்
பொதிமாதிரி நகருகிற வெள்ளை மேகங்களும் ஆகாயத்துக்கு இன்னும் கவர்ச்சியைச் சேர்த்தது.
கொஞ்சம் வெண்மை குறைந்து நீலம் படிந்த சில மேகங்களும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.
பார்க்கப்பார்க்க கண்கள் சுழல்கிற மாதிரி இருந்தன. கவர்ச்சி குறைந்து உள்ளுக்குள் பயம்
புரண்டது. முழு ஆகாயமும் ஆயுதம் தரித்த வீரனாய் எதிரில் நிற்பதாய் இருந்தது. ஒரே அள்ளலில்
அள்ளிக்கொண்டு போக தன்னை நோக்கி நகர்வதுபோல் உணர்ந்தான். கண்ணுக்குள் அகப்படாத பிம்பமாய்
ஆகாயம் வெகு சமீபத்தில் நெருங்கிவிட்டமாதிரி தோன்றியபோது பயத்தில் எழுந்து நின்றான்.
கண்கள் நெருப்பாய் எரிந்தன. நெற்றியில்
வேர்த்திருந்தது. துடைத்துக்கொண்டு பக்கத்தில் அசோகமர விளிம்புகளின் அசைவைப் பார்த்தான்.
அடுத்த மாடியில் டெலிவிஷன் ஆன்டெனாவுக்கு அந்தப் பக்கத்தில் தள்ளாடித் தள்ளாடி நடந்து
கொண்டிருந்த மேகத்தைப் பார்த்தான். மாடி விளிம்போரம் வந்து கீழே தெருவைப் பார்த்தான்.
தெருவில் ஜனசந்தடியே இல்லை. துவைத்து உலர்த்திய துணி மாதிரி நீளமாய் இருந்தது தார்ரோடு.
கேசவனுக்கு பெரிய பையனின் நினைப்பு
வந்தது. ரோட்டில் நடப்பது என்றால் அவனுக்குத்தான் உற்சாகம். வாரக்கூலி வாங்கிக்கொண்டு
பண்ருட்டியிலிருந்து வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயம் வெளியே கூப்பிட்டுச் செல்லவேண்டும்.
இல்லாவிட்டால் அவன் படுத்தும் பாடு சொல்லமுடியாது. காலையில் குளித்து முடித்த கையோடு
வாவா என்று வெளியே இழுப்பான் ‘கொஞ்ச நேரம் அப்பா தூங்கட்டுமேடா’ என்று சாந்தி சொல்கிற
வார்த்தையும் ஏறாது. பிடித்தால் பிடித்ததுதான். ‘எங்கடா போவோம்’ என்றால் ‘எங்கனாச்சும்’
என்பான். கையை பிடித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா நடக்கவேண்டும். அப்படி
ஒரு ஆசை அவனுக்கு. தெருவில் ‘அது வேணும் இது வேணும்’ என்றெல்லாம் கேட்கமாட்டான். அடம்
கிடையாது. ‘வேணுமாடா’ என்றாலும் வேண்டாம்’ என்பான். நடக்க வேண்டும். நடந்துகொண்டே வேடிக்கை
பார்க்க வேண்டும். அதில்தான் அவனுக்கு சந்தோஷம். தெருவில் போகிற வருகிற வண்டிகள், சவாரிகள்,
ரிக் ஷாக்கள், கூடைக்காரர்கள், காத்து நிற்கிற ஜனங்கள், பிள்ளைகள், வீடுகள், எல்லாவற்றையும்
ஆவலோடு பார்ப்பான். என்ன நினைப்பானோ என்ன புரிந்துகொள்வானோ தெரியாது. சலிக்காமல் நடக்கிறதில் மாத்திரம் சந்தோஷப்படுவான்.
ஒரு தரம் ரெட்டியார் பாளையத்தில் இருந்து வில்லியனூர்வரைக்கும் கூட நடந்துபோய் வந்ததுண்டு,
இவ்வளவு தூரம் பையனை நடக்கவைக்கிறோமே என்று வருத்தமாக இருக்கும். ‘திரும்பிவிடலாமாடா’
என்று ஏழெட்டுத் தடவைகள் கேட்ட பிறகும் ‘இன்னும் போவலாம்பா’ என்பதே அவன் பதிலாய் இருக்கும்.
பார்த்ததையெல்லாம் மீண்டும் ஞாபகப்படுத்தி தாத்தாவிடமும் அம்மாவிடமும் மாற்றிமாற்றிச்
சொல்வான். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியே கூப்பிட்டுப் போகிறவரைக்கும் இந்த அனுபவமே
எல்லாரிடமும் பேசக்கூடிய விஷயமாய் அவனுக்கிருக்கும்.
இந்த நாலு மாதத்தில் அவனை யார் வெளியே அழைத்துக்கொண்டு போகிறார்களோ தெரியவில்லை. அப்பாவுக்கு வயசாகிவிட்டது. அவரால் அவன் நினைக்கிற தூரத்துக்கு நடக்கமுடியாது.
சாந்திக்கு வீட்டு வேலைகளே சரியாக இருக்கும்.
அவளாலும் முடியாது. தட்டிக் கழித்துவிடுவான்.
ரொம்பவும் ஏக்கமாய்த்தான் இருப்பான் பையன். நீளமான இந்த ரோட்டில் பையனோடு கைகோர்த்துக்கொண்டு
இந்த நிமிஷத்தில் நடக்க வேண்டும் என்று பிரியப்பட்டான் கேசவன்.
செருப்பு போடக்கூடாது. இரவின்
குளுமையை உள்வாங்கி இருக்கும் பூமியில் கால்பதிய நடக்க வேண்டும். தரையில் நடக்கிற சுகத்தை
அப்போதுதான் பூரணமாய் உணர முடியும். அப்படி நடப்பதில் பெரிய பையனுக்கு நிச்சயம் சந்தோஷமாய்
இருக்கும் என்று நினைத்தான். அடுத்த தரம் ஊருக்குப் போக நேர்கிறபோது நிச்சயம் இரவு
வேளையில் பையனை அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்று முடிவு செய்தான். இதற்கு சௌகர்யப்
படுகிறமாதிரி ஏதாவது ஒரு பௌர்ணமி நாளில் பிரயாணத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்று தீர்மானித்தான்.
பெங்களூருக்கு வந்த நாளில் இருந்து
ஒரு தரம்கூட இன்னும் ஊருக்குப் போக இயலவில்லை. ஒவ்வொரு வார விடுமுறையிலும் சக தொழிலாளர்கள்
பக்கத்தில் இருக்கின்ற ஓசூர், கிருஷ்ணகிரி, சிக்கபெல்லாப்பூர், தொட்டபெல்லாப்பூர்,
கோலார் கேம்ப் என்று புறப்பட்டுப் போய்வருவதைப் பார்க்கும்போது உள்ளுக்குள்ளே ஏக்கமாய்
இருக்கும். மனசு கதறும். என்ன கதறி என்ன பயன். எல்லாரை மாதிரியும் நினைத்த மாத்திரத்தில்
போய் வருகிற அளவுக்கு பாண்டிச்சேரி என்ன பக்கத்திலேயா இருக்கிறது. போகவர பஸ் செலவுக்கு
மட்டும் அறுபது ரூபாய் வேண்டும். சின்னப்பிள்ளைகள் இருக்கிற வீட்டுக்கு சும்மா போக
முடியாது. தின்ன ஏதாச்சும் வாங்கிக்கொண்டு போகவேண்டும். எல்லாம் சேர்த்து குறைந்த பட்சம்
நூறு ரூபாயாவது அவசியம். அதுகூட இல்லாமல் செய்கிற பிரயாணம் சுவைபடாது. எல்லாவற்றிற்கும்
மேல் இவ்வளவு தூரம் போய் ஒரு நாள் விடுப்பில் திரும்பிவர சாத்தியமே இல்லை. சாத்தியப்பட்டாலும்
திரும்பிவர மனசு கேட்காது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் ஊர்ப் பிரயாணத்தை
அடுத்த தரம் அடுத்த தரம் என்று ஒவ்வொரு தரமாய் ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தான். எப்போதாவது
கையில் பணம் சேரும்போது முதலாளியிடம் சொல்லி நான்கைந்து நாள்களாவது சேர்ந்தவாக்கில்
ஊருக்குப் போக விடுப்பு கேட்கவேண்டும் என்று யோசித்து வைத்திருந்தான். கையில் பணம்
சேர்ந்ததும் சட்டென்று சாந்தி முகமும் பிள்ளைகள் முகமும் தான் மனசுக்குள் வந்து வா
வா என்று கூப்பிடும். ஆனால் அநியாயமாய் ஒரு வாரக்கூலி அறுபது ரூபாயை பஸ்காரனுக்குத்
தர மனசு வராது. உழைத்துச் சம்பாதித்த பணம்.
பிள்ளைகளுக்குத் துணிகளாகவோ, சாப்பாடாகவோ இது பிரயோஜனப்பட்டால்தான் நல்லது என்று முடிவு
தோன்றும். அந்தப் பணத்தை சாந்தி பெயருக்கு மணியார்டர் செய்துவிடுவான். இப்படியே நாலு
மாசம் நரக வேதனையாய் ஓடிவிட்டது.
சாந்தியை நினைக்கும்போதுதான் பாவமாய்
இருக்கிறது. இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிற சுபாவம். அவ்வளவு அமைதி. பொறுமை. அவள்
குணத்துக்குத் தகுந்த பேர்தான் என்று அப்பாகூட அடிக்கடி சொல்வதுண்டு. அதிரும்படி ஒரு
வார்த்தை வராது. அலுக்கிறமாதிரி ஒரு முனகல் இருக்காது. இதழ்க்கோடியில் ஒரு புன்னகையை
ஒதுக்கிக்கொண்டு எல்லாக் காரியங்களையும் செய்வாள். அந்தக் குணத்துக்கு கோயில் கட்டிதான்
கும்பிடவேண்டும். கண்டமங்கலத்து அக்காதான் ‘ஒனக்காகவே என் பொண்ண வச்சிருக்கேன்டா’ என்று
சொல்லிக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்து தந்தாள். ‘எதுக்கும் ஒதவாதவன்’ என்று அப்பா
தினத்துக்கும் நூறுதரம் முனகினாலும் திட்டினாலும் அவளிடமிருந்து ஒரு வார்த்தை தரக்குறைவாய்
வராது. உதாசீனமாய் ஒரு செயல் இருக்காது. ராத்திரியில் சாப்பாட்டுக்கடை முடிந்து எல்லாரும்
தூங்கியானதும் தலையை வருடி அப்பா கோபத்துக்கு காரணத்தை வாத்சல்யத்தோடு கேட்பாள். அவள்
பிரியமும் இதமான குரலும் எந்த இதயத்தையும் திறக்கும். காரணம் சொல்லி முடிந்ததும் நிதானமாய்
அவள் முடிவைச் சொல்வாள். அவசரப்படாமல் வார்த்தைகள் விழும். குத்தி எதையும் காட்டாமல்
குறைகள் இயல்பாக அலசப்படும். மடியில் சாய்ந்து சொல்கிற யோசனையைத் தானாகவே மனசு ஏற்கும்.
செயல்படுத்தும் ஒவ்வொரு கட்டத்திலும் தூண்மாதிரி நின்று துணை செய்வாள் சாந்தி. அவள்
துணைதான் சகலத்துக்கும் தைரியம். இந்த நாலு மாதப் பிரிவில் அதை பரிபூர்ணமாய் உணரமுடிந்தது.
சாந்திக்கு பிள்ளைகளோடு பேசிக்கொண்டு
இருப்பதில் மிகவும் இஷ்டம். அதுவும் சாப்பாடு முடிந்து திண்ணைக்கு வந்து உட்கார்ந்தால்
தூக்கம் வருகிறவரை பேச்சுதான். அலுக்கும் வரை பிள்ளைகளும் பேசும். அவளும் பேசுவாள்.
தனக்கு தெரிந்த ராஜாராணி கதை. வேதாளம் கதை, பச்சை மிளகாய் கதை, குள்ளக் கத்திரிக்காய்
கதை, சிங்கராஜாக் கதை, நரிக்கதை, பாட்டி வடை சுட்ட கதை, குரங்கு கூடு கலைத்த கதை என்று
நிறைய சொல்வாள்.
கதையெல்லாம் முடிந்தபிறகு ‘அப்பா
இப்ப இன்னா செய்வாரு சொல்லு பார்க்கலாம்.’ என்பதுதான் அநேகமாய் அவள் பிள்ளைகளுக்கு
வைக்கிற பந்தயமாய் இருக்கும். ஒவ்வொரு பிள்ளையும்
ஒரு பதில் சொல்லும். பெரிய பையன் ‘அப்பா இப்பதா சாப்பாட்டுக்கு போவாரு’ என்பானாம்.
சின்னப்பையன் ‘இல்ல வேல செஞ்சிக்னிருப்பாரு’ என்பானாம். இரண்டுக்கும் தலையை அசைத்துவிட்டு
‘அப்பா இந்நேரம் ஒங்களப்பத்திதான் நெனச்சிக்னிருப்பாரு’ என்பாளாம் சாந்தி. பண்ருட்டியிலிருந்து
வீடு திரும்பும் போது பெரிய பையனாலும், சின்னப் பையனாலும் கதைகதையாய் மாற்றிமாற்றிச்
சொல்லப்படும். கடைசியில் முகவாயைப் பிடித்துக்கொண்டு ‘இப்ப நீயே சொல்லுப்பா. நேத்து
ராத்திரி இன்னாப்பா செஞ்சிக்னிருந்த?’ என்று கண் விரிய ஆவலுடன் கேட்பார்கள். சட்டென்று
‘ஒங்களபத்திதா யோசிச்சிக்னிருந்தன்’ என்பான். அதற்கப்புறம் ‘முந்தா நேத்து ராத்திரி
இன்னாப்பா செஞ்சிக்கினிருந்த?’ என்று கண் விரிய ஆவலுடன் கேட்பார்கள். அந்த கேள்விக்கும்
இவன் ‘ஒங்களப்பத்திதான் யோசிச்சிக்னிருந்தன்’ என்று பதில் சொல்வான். ‘அதுக்கும் மொதநாளு
ராத்திரி?’ என்று மறுபடியும் விடாமல் கேட்பார்கள் பையன்கள். அதற்கும் ‘ஒங்களப்பத்திதான்
யோசிச்சிக்னிருந்தன்’ என்று இவனும் விடாமல் பதில் சொல்வான். பையன்களுக்கு சந்தோஷமாயும்
இருக்கும். கூச்சமாயும் இருக்கும். ‘அம்மா சொல்றமாதிரியே நீயும் சொல்றியே’ என்று ஆச்சர்யப்படுவார்கள்.
‘எப்ப பார்த்தாலும் எங்களயேதா நெனச்சிக்குவியா. தாத்தா. பாட்டி, அம்மாவயெல்லாம் நெனச்சிக்க
மாட்டியா?’ என்று பாதி சிரிப்பும் பாதிக் கூச்சமாயும் கேட்டுவிட்டு நெளிவார்கள். நெளிகிற
பையனை இவன் பிடித்ததும் சிரிப்பு மூளும். சிரிப்பார்கள். தோளில் துண்டு மாதிரி தொங்குவார்கள்.
நெளிந்து சாய்ந்து பிடறி மயிரில் கையைவிட்டு அளைவார்கள். கதவுக்கு ஓரமாய் உட்கார்ந்துகொண்டு
சாந்தியும் மெல்லச் சிரிப்பது கேட்கும். அவள் பக்கமாய் திரும்பும்போது பையன்கள் கேட்ட
மாதிரியே ‘என்னப் பத்தியே நெனக்கமாட்டியா?’ என்கிறது போல் இருக்கும் பார்வை.
அசோக மரத்துக்கு அந்தப் பக்கமாக
சாந்தி வந்து நின்று பார்ப்பது மாதிரி இருந்தது. அதே பார்வை, அதே கூர்மை, அதே பளபளப்பு.
முதுகுத்தண்டு சிலிர்த்தது கேசவனுக்கு. மனசுக்குள் ஊடாடிய பிம்பமே கண்ணில் படுகிற பிரமை
என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டான்.
சின்னப் பையன் பிறந்ததற்கப்புறம்தான்
சாந்தியுடன் பேசுவது கணிசமாய்க் குறைந்திருந்தது. பண்ருட்டியில் வேலைக்குச் சேர்ந்ததுகூட
அப்போதுதான். வாரம் முழுக்க அங்கிருக்கும் போது நிறைய பேசணும் பேசணும் என்று தோன்றும்.
வீட்டுக்கு வந்ததும் பேச எதுவும் இல்லாதமாதிரி
ஆகிவிடும். குழந்தைகள் துணியைத் துவைத்தபடி, அரிசியில் கல் பொறுக்கியபடி, மாவு அரைத்தபடி
அவள் வெகு சமீபத்திலேயே நடமாடிக் கொண்டு இருந்தாலும் விசேஷமாய்ப் பேசத் தோன்றாது.
அவள் நடவடிக்கைகளைக் கவனித்தபடி
குழந்தைகளைக் கொஞ்சுவதே மனசுக்கு திருப்தியை தந்துவிடும் என்று நினைத்தான். பையன்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்கிறார்கள். வளரும் பயிர்களை ஊட்டமாய் வளர்க்கவேண்டும். அதுதான்
முக்கியம். இனி எஞ்சி இருக்கிற தன் வாழ்வை அதற்குச் செலவிட வேண்டும். வேறு ஆசைகள் அனாவசியம்தான்.
அநேகமாய் சாந்தியும் இதே ரீதியில்தான் யோசிப்பாள் என்று நினைத்துக் கொணடான்.
‘ஏங்க இன்னும் தூக்கம் வரலியா?’
சாந்தியின் குரல்மாதிரி இருந்தது.
சின்ன அதிராத குரல். குழைவும் பிரியமுமான குரல். இதயத்தில் இருந்தே மிதந்து வந்த மாதிரி
இருந்தது. மீண்டும் கனவில் ஆழ்ந்து போனதை யெண்ணிக் கூச்சப்பட்டுக் கொண்டான்.
தூக்கம் வராதது குறித்து வருத்தமாய்
இருந்தது. இரவு தூக்கம் சரியாக இல்லாமல் போகிற பட்சத்தில் நாளைக்கு ஓட்டலில் நிறையதரம்
கண் அயர்ச்சியைத் தவிர்க்க எழுந்துபோய் முகம் கழுவ நேரும். கழுவும்போது முதலாளியின்
கேள்விகளைச் சமாளிக்க வேண்டும். கஷ்டம்தான். நின்றுகொண்டே இருப்பதில் கால்கள் வேறு
வலித்தன. மெல்லத் திரும்பிவந்து விரித்திருந்த படுக்கையில் படுத்தான். வலித்த இடுப்புக்கு
இதமாய் இருந்தது. மல்லாந்த முகத்துக்கு எதிரே மீண்டும் ஆகாயம் விரிந்திருந்தது.
ஆகாயத்தைப் பார்த்தபடியே மீண்டும்
தனக்குள் முழுகிப் போனான் கேசவன்.
(மின்மினி -1986)