Home

Sunday, 17 November 2024

இனிய சொற்சித்திரங்கள்

 

’அன்பால் என்ன செய்யமுடியும் என்னும் கேள்விக்கு, அன்பால் செய்யமுடியாதது என ஏதேனும் ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதா என்னும்  இன்னொரு கேள்வியே விடை. அன்பு எதையும் எதிலிருந்தும் எதற்காகவும் பிரியாது. நான் இதைக் கொடுத்தால் நீ என்ன கொடுப்பாய் என அன்புக்கு பேரம் பேசவும் தெரியாது. நான் கொடுக்கிறேன், நீ பெற்றுக்கொள் என பெருமை பேசும் பழக்கமும் அன்புக்கு இல்லை. யாரும் பார்க்காவிட்டாலும் யாரும் ரசிக்காவிட்டாலும் யாரும் கேட்காவிட்டாலும் பெய்துகொண்டே இருக்கும் மழையைப் போன்றது அது’

படிக்கும்போதே மனத்தைத் தொட்டு யோசிக்கத் தூண்டும் இப்படிப்பட்ட முன்னுரை வரிகளோடு  இப்புத்தகம் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து அம்பேத்கர், மார்க்கோபோலோ, காஃப்கா, டால்ஸ்டாய், யஷ்வந்த்ராவ் புலே, ஆர்.கே.நாராயண் என பலதுறை சார்ந்த இருபத்தைந்து அறிஞர்களின் வாழ்க்கைச்சித்திரங்கள் காணப்படுகின்றன. வாழ்க்கை வரலாறாக மருதன் அவற்றை முன்வைக்கவில்லை.  மாறாக, அவர்களுடைய ஆளுமைப்பண்பின் அடையாளமாக விளங்கக்கூடிய ஒரே ஒரு சித்திரத்தை மட்டுமே முன்வைக்கிறார். அந்த ஒரு சித்திரத்தின் வழியாகவே அந்த ஆளுமைகள் நம் நெஞ்சில் இடம் பிடித்துவிடுகிறார்கள். அந்தச் சம்பவத் தேர்வு மருதனின் ஆழ்ந்த படிப்பறிவுக்கும் ஞானத்துக்கும் அடையாளமாக விளங்குகிறது. சிறுவர்சிறுமியரின் கவனத்தை ஈர்த்து, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து மறைந்த ஆளுமைகளைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்யவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்திருக்கிறது. ஆயினும் வயது வேறுபாடின்றி, அனைவரும் விரும்பிப் படிக்கும் வகையிலேயே மருதன் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிரார்.

வில்சன் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த கே.ஏ.கேலுஸ்கர் என்பவரின் குறிப்பைப்போல அம்பேத்கரைப்பற்றிய கட்டுரையை அமைத்திருக்கிறார் மருதன். பள்ளிக்கூடம் முடிந்ததும் பக்கத்தில் இருக்கும் பூங்காவுக்குச் சென்று படிக்கும் பழக்கமுள்ள கேலுஸ்கர், ஒருநாள் ஒரு மரத்தடியில் ஒரு மாணவர் படித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவருடைய வயதையொத்த சிறுவர்கள் அனைவரும் விளையாட்டில் கவனம் செலுத்திய நேரத்தில் அவர் மட்டுமே படிப்பில் மூழ்கியிருக்கிறார். அந்த மாணவருடைய ஆழ்கவனம் கேலுஸ்கரை வியப்படைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் அந்தக் காட்சி தொடர்கிறது.

ஒருமுறை அம்மாணவரை நெருங்கி பேச்சுக் கொடுத்து படிப்பது தொடர்பான ஆர்வம் எப்படிப் பிறந்தது என்று கேட்கிறார் கேலுஸ்கர். தன் தந்தையார் நகைகளை அடகுவைத்தும் விற்றும் கிடைக்கும் பணத்தில் தனக்குப் பிடித்தமான புத்தகங்களை வாங்கிக் கொடுக்கிறார் என்றும் ஒரே நேரத்தில் தனக்கும் தன் அண்ணனுக்கும் கல்விச்செலவு செய்யமுடியாது என்பதால் தன் அப்பா அவரை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு தன்னை மட்டும் படிக்கவைக்கிறார் என்றும் அவர் சொல்கிறார்.

ஒருமுறை ஆசிரியர் சொன்ன ஒரு கணக்கைப் போடுவதற்காக இருப்பிடத்திலிருந்து எழுந்து கரும்பலகையை நெருங்கிச் சென்றபோது வகுப்பிலிருந்த பிற மாணவர்கள் கடுமையாகக் குரலெழுப்பி அவரைத் தடுத்ததாகவும் கரும்பலகைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த உணவுப்பொட்டலங்களை எடுத்துக்கொண்டு செல்வதற்காகவே அவர் செல்கிறார் என குற்றம் சுமத்தியதாகவும் விவரிக்கிறார். பிறர் அனைவரும் கூடி தன்னை அவமானப்படுத்திய செய்தியைக் கூட அவர் ஏதோ எங்கோ யாருக்கோ நடந்த செய்தியைக் குறிப்பிடுவதுபோன்ற தொனியில் சொன்னதாகக் குறிப்பிடுகிறார் கேலுஸ்கர். அடுத்த நாள் அவர் புத்தரைப்பற்றி தான் எழுதிய புத்தகத்தை அவருக்குப் பரிசாக அளிக்கிறார்.  அக்கணமே அவர் அப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிவிடுகிறார். அறிவு வேட்கையோடு நாடெங்கும் அலைந்த புத்தரைப்பற்றிய புத்தகத்தை அறிவுத்தாகம் கொண்ட அம்பேத்கர் ஆழ்ந்து படிக்கும் காட்சியை தொலைவிலிருந்து பார்த்து மகிழ்கிறார் கேலுஸ்கர். அம்பேத்கரின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்புணர்வையும் பற்றி சுருக்கமாக அறிந்துகொள்ளும் விதமாக இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் மருதன்.

சார்லஸ் டிக்கன் பற்றிய சித்திரம் அவர் எழுதுவதற்கான தன் நோக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது. ஒருமுறை விடிந்தால் கிறிஸ்துமஸ் என்னும் நிலையில் அன்றே எழுதிமுடிக்க வேண்டிய ஒரு அத்தியாயத்தை எழுதுவதில் மூழ்கியிருக்கிறார். நேரம் கடந்துபோனதே தெரியவில்லை. நள்ளிரவை நெருங்கும் சமயத்தில்தான் எழுதி முடிக்கிறார். ஒருவித நிம்மதியுணர்வோடு அறைக்கு வெளியே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்கிறார். எங்கும் இருள். சாலை வெறிச்சோடி இருக்கிறது. மக்கள் நடமாட்டமில்லை. ஆனால் ஒவ்வொரு வீட்டுக்குள்ளிருந்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் மக்களின் பேச்சுச்சத்தமும் சிரிக்கும் சத்தமும் சாலைவரை எதிரொலிக்கின்றன. அப்போது சாலையில் தனியொருத்தியாக ஒரு சிறுமி  கந்தல் கோலத்தோடும் துவண்ட முகத்தோடும் பொருந்தாத காலணிகளை அணிந்துகொண்டு விழுந்துவிடாதபடி குளிரில் நடுங்கியபடியும் அடிமேல் அடி வைத்து நடந்துவருகிறாள். அச்சிறுமியின் சோர்வான முகத்தையும் நடுங்கும் தேகத்தையும் பார்த்ததும் அவர் மனம் படாத பாடு படுகிறது. அவளை அழைத்து விசாரிப்பதற்காக, தன்னுடைய மாடியறையிலிருந்து வேகமாக இறங்கி வருகிறார்.

அதே சமயத்தில் தன் வீட்டுக்கூடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளையும் உறவினர்களையும் அவர் பார்க்கிறார். நாகரிகம் கருதி சில நிமிடங்கள் நின்று அவர்களுடன் பேசவேண்டி இருக்கிறது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லிவிட்டு, வேகமாக வாசலை நோக்கி ஓடோடிச் செல்கிகிறார். அப்போது பொருந்தாச் செருப்புக் காலோடு நடந்துபோன சிறுமியைக் காணமுடியவில்லை. அதற்குள் அச்சிறுமி அந்த வீட்டைக் கடந்துபோய்விட்டிருக்கிறாள். அவளைச் சந்தித்து உரையாட முடியாமல் போன தன் துரதிருஷ்டத்தை நினைத்து துயரத்தில் மூழ்குகிறார் டிக்கன்ஸ். அடுத்தடுத்து பல நாட்கள் அவளுக்காக இரவு வேளைகளில் அவர் காத்திருக்கிறார். ஆனால் அந்த ஒரு நாளுக்குப் பிறகு அவரால் அவளைப் பார்க்கவே முடியவில்லை. பெயர் தெரியாத அச்சிறுமியைத் தன் கதைகளின் ஆன்மாவாக மாற்றிக்கொள்கிறார் டிக்கன்ஸன். அவளிடம் பேச நினைத்தவற்றையெல்லாம் கதைகளாக எழுதுகிறார். அச்சிறுமிக்கென ஒரு வீடும் அந்த வீட்டுக்கொரு கிறிஸ்துமஸ் மரமும் கிடைக்கும் வரைக்கும் எழுதிக்கொண்டே இருக்க உறுதி எடுத்துக்கொள்கிறார். டிக்கன்ஸனின் கூற்றாகவே எழுதப்பட்டிருக்கும் இச்சொற்சித்திரம் மனத்தைத் தொடுகிறது.

மைக்கேலாஞ்சலோ பற்றிய சித்திரம் பலருக்குத் தெரியாத ஓர் உண்மையை எடுத்துரைக்கிறது. அடிப்படையில் அவர் ஒரு சிற்பியே தவிர, நாம் அனைவரும் நினைத்திருப்பதுபோல ஓவியரல்ல. சிற்பவேலைக்கு அப்பால் ஓவியத்தைப்பற்றிய ஞானமும் அவருக்கு இருந்தது என்று மட்டுமே சொல்ல இயலும். ஒருநாள் அவர் ஒரு சிற்பத்தைச் செதுக்கும் வேலையில் மூழ்கியிருந்தபோது, சிஸ்டைன் தேவாலயத்தைச் சேர்ந்த தலைமைப்பாதிரியார் அனுப்பிய ஒரு வேலைக்காரர் வந்து, பாதிரியார் அவரை உடனடியாக அழைத்துவரச் சொன்னதாகத் தெரிவிக்கிறார். ஏதோ பெரியதொரு சிற்பத்தை வடிக்கும் வேலை கிடைக்கப்போகிறது என்னும் ஆவலோடு அந்த வேலைக்காரருடன் தேவாலயத்துக்குச் செல்கிறார் மைக்கேலாஞ்சலோ. ஆனால் பாதிரியார் தேவாலயத்தின் உட்சுவர் முழுதும் ஆதாம் ஏவாள் தொடங்கி கடவுள் படைத்த முழு உலகத்தையும் ஓவியங்களாகத் தீட்டும்படி அவரிடாம்  கேட்டுக்கொள்கிறார். அதைக் கேட்டு குழப்பத்தில் ஆழ்ந்துபோகிறார் மைக்கேலாஞ்சலோ. தான் சிற்பியே தவிர, ஓவியரல்ல என்று பாதிரியாரிடம் பணிவுடன் தெரிவிக்கிறார். மைக்கேலாஞ்சலோ. “உன் மீது நம்பிக்கை இருக்கிறது. நீயே இந்த வேலைக்குப் பொருத்தமானவன். ஓவியவேலையைத் தொடங்கு” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார் பாதிரியார். வேறு வழியின்றி மேற்கூரையில் சாரம் கட்டி கயிறுவழியாகத் தலைகீழாகத் தொங்கியபடி வண்ணங்களைக் குழைத்து ஓவியங்களைத் தீட்டுகிறார் மைக்கேலாஞ்சலோ. தவளை போல, சிலந்தி போல, வெளவால் போல நாள் முழுதும் தொங்கிய நிலையில் ஓவியம் தீட்டும் வேலையில் மூழ்கியிருக்கிறார் அவர். இரவுமுழுதும் உடல்வலியால் அவஸ்தைப்படுவார். ஆயினும் அடுத்தநாள் காலையில் இடுப்பில் கட்டிய கயிறோடு தலைகீழாகத் தொங்கிக்கொண்டு ஓவியத்தைத் தீட்டத் தொடங்கிவிடுவார். ஓவியங்கள் உயிர்பெறத் தொடங்கியதும் பாதிரியார் ஒவ்வொரு நாளும் அவரைச் சந்தித்து பாராட்டி உற்சாகம் ஊட்டியபடி இருக்கிறார். அவருடைய ஊக்கச்சொற்கள் அவருக்குத் தன்னம்பிக்கையை அளிக்கின்றன. ஆண்டுக்கணக்கில் உழைத்து அந்த அற்புத ஓவியங்களைத் தீட்டி முடிக்கிறார். சிற்பம் செதுக்கவந்தவர் ஓவியராக மாறிய விந்தையை ஒருபோதும் மறக்கமுடியாது.

காஃப்காவைப்பற்றிய சித்திரம் அழகானதொரு கவிதையை வாசித்து அசைபோடும் அனுபவத்துக்கு நிகரானதாக இருக்கிறது. ஒருமுறை ஒரு பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் காஃப்கா. அப்போது அவர் அங்கே கண்ணீரோடு நின்றிருக்கும் ஒரு சிறுமியைப் பார்க்கிறார். சிறுமியின் அழுகையைக் கண்டு மனம் பதைபதைத்து பக்கத்தில் செல்கிறார் காஃப்கா. அழுகைக்கான காரணத்தை விசாரிக்கிறார். தான் ஒரு பொம்மை வைத்திருந்ததாகவும் அது காணாமல் போய்விட்டதாகவும் சொல்கிறாள் அச்சிறுமி. அவளை உடனடியாகத் தேற்றும் நோக்கத்துடன் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் தான் அந்தப் பொம்மையைச் சந்தித்ததாகவும் அவசர வேலையாகச் சென்றுகொண்டிருப்பதாகவும் தன்னைத் தேடி வரும் சிறுமியிடம் கொடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டு ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கிறார் காஃப்கா. “எங்கே அந்தக் கடிதம்?” என்று ஆவலோடு கையை நீட்டுகிறாள் சிறுமி. பாதுகாப்பாக வீட்டில் வைத்திருப்பதாகவும் மாலை ஆறு மணிக்கு அதே பூங்காவுக்கு நடைப்பயிற்சிக்காக வரும்போது கொண்டுவருவதாகவும் தெரிவிக்கிறார் அவர். சிறுமியும் அதை ஏற்றுக்கொண்டு தன் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறாள்.

அன்று மாலையில் இருவரும் குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்துக்கொள்கின்றனர். காஃப்கா அச்சிறுமியிடம் கடிதத்தைக் கொடுக்கிறார். சிறுமி தனக்குப் படிக்கத் தெரியாது என்றும் தனக்காகப் படித்துக் காட்டுமாறும் கேட்டுக்கொள்கிறாள். காஃப்கா அக்கடிதத்தைப் பிரித்து சத்தமாகப் படித்துக்காட்டுகிறார். தனியாக கப்பல்பயணம் செய்ய அஞ்சும் தன் தோழி ஒருத்தியை அழைத்துக்கொண்டு அவசரமாக ரஷ்யாவுக்குச் செல்வதாகவும் ஒவ்வொரு நாளும் ஒரு கடிதம் எழுதி அனுப்புவதாகவும் அக்கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தச் சொற்கள் அச்சிறுமிக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. மறுநாள் முதல் ஒவ்வொரு நாளும் சரியாக ஆறுமணிக்கு இருவரும் ஒரு மரத்தடியில் சந்தித்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அச்சிறுமிக்காக காஃப்கா ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து படித்துக் காட்டுகிறார். அந்த இனிய விளையாட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் வரைக்கும் தொடர்கின்றன.

பள்ளிக்குச் செல்லும் வயதை அடைந்ததும் அச்சிறுமி பள்ளிக்குச் செல்கிறாள். எழுதப் படிக்கக் கற்றுக்கொள்கிறாள். ஏற்கனவே தான் சேர்த்துவைத்த கடிதங்களை சொந்தமாகப் படித்துத் தெரிந்துகொள்கிறாள். ஒரு பொம்மையால் கடிதம் எழுதமுடியாது என்பதையும் அவள் புரிந்துகொள்கிறாள். தன்னைச் சமாதானப்படுத்த ஒவ்வொரு நாளும் கடிதத்தைக் கொண்டுவரும் பெரியவர் மீது அவள் ஆழ்ந்த அன்பும் பற்றும் கொள்கிறாள். அச்சிறுமிக்கு உண்மையைப் புரிந்துகொள்ளும் வயதை அடைந்துவிட்டாள் என்பதைக் காஃப்காவும் புரிந்துகொள்கிறார். ஆயினும் பொம்மையின் சார்பாக அவர் அச்சிறுமிக்குக் கடிதங்கள் எழுதி எடுத்துவருவதை நிறுத்தவே இல்லை. எழுத்து ஒரு மாய உலகம். அந்த உலகம் அனைவரையும் தழுவிக்கொள்கிறது. இருத்தலியல் கதைகளுக்காக பெரிதும் பேசப்படுகிற காஃப்கா எந்த அளவுக்கு ஆழ்ந்த நம்பிக்கைவாதியாக இருந்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள இச்சித்திரம் உதவுகிறது.

உலகெங்கும் வாசகர்களைக் கொண்ட ஒரு புத்தகம் ‘ஜங்கிள் புக்’. அது வெளிவந்து 130 ஆண்டுகள் ஆகின்றன. திரைப்படம் தயாரிக்கப்பட்ட காலத்திலிருந்து பலரால் பலமுறை படமாக்கப்பட்ட கதையும் அதுதான். அதை எழுதியவர் ருத்யார்ட் கிப்ளிங். பம்பாயில் பிறந்து பிரிட்டனில் கல்வி கற்று, மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி பத்திரிகைத்துறையில் ஈடுபட்டு எழுதத் தொடங்கியவர் அவர். அவர்தான் அந்த நாவலை எழுதினார்.

ஜங்கிள் புக் வெளிவந்த சமயத்தில் பிரிட்டனின் பிடியில்  இந்தியாவைப்போல இன்னும் பல நாடுகள் கட்டுண்டு கிடந்தன.  இந்தியா எங்கள் நாடு, எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும், உங்களுக்கு என்ன வேலை என்று இந்தியர்கள் குரல் கொடுத்தபோது, பிரிட்டனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கிப்ளிங். நாகரிகத்தின் சின்ன ஒளி கூட உள்ளே செல்லமுடியாத அளவுக்கு இருள் நிறைந்த காடு போல திகழ்ந்த இந்நாட்டைச் செம்மைப்படுத்தி சீராக்கிய பிரிட்டனுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இந்தியா இருக்கவேண்டும் என்பது அவர் எண்ணமாக இருந்தது. அந்தக் கருத்தையே படிமாக்கி தன் பெருமையைத் தாமே சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக அவர் அந்த நாவலை எழுதினார். ஆபத்திலிருந்து மீட்கும் மெளக்லி பாத்திரம் பிரிட்டனின் மறுவடிவமாகும். காட்டைக் காப்பாற்றிய செயலுக்காக மெளக்லிக்கு  காடு நன்றி சொல்லவேண்டுமே தவிர, எதிர்ப்பது முறையல்ல என்பதுதான் கிப்ளிங்கின் எண்ணம். ஜங்கிள் புக் கதையில் கிப்ளிங்க் மறைத்துவைத்திருக்கும் உண்மை அதுதான். சிறார் கதைபோலத் தோற்றமளிக்கும் படைப்பின் ஆழத்தில் படிந்திருக்கும் நஞ்சுபடிந்த எண்ணத்தை மருதன் புரிந்துகொள்ள வைத்திருக்கிறார். பிரிட்டன் வருவதற்கு முன்பு இந்தியா இருந்தது. அவர்கள் அழித்துச் சுரண்டியெடுத்துக்கொண்டு சென்றபின்னரும் இந்தியா இருந்தது. இன்றும் அது எல்லாவற்றையும் பார்த்துப் புன்னகை செய்தபடி செழிப்புடன் அச்சமின்றி தலைநிமிர்ந்து வாழ்ந்துவருகிறது.

இவ்விதமாக, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் வாழ்ந்த இருபத்தைந்து ஆளுமைகளின் வாழ்க்கையிலிருந்து முக்கியமான தருணங்களைத் தேர்ந்தெடுத்து முன்னிலைப்படுத்தும் விதமாக இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார் மருதன். ஏற்கனவே குழந்தைகளுக்காக சில முக்கியமான நூல்களை எழுதிய அனுபவம் உள்ளவர் அவர். இந்து தமிழ்திசை நாளிதழில் இக்கட்டுரைகள் ஒவ்வொரு வாரமும் தொடராக வெளிவந்து வாசகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது புத்தக வடிவில் அனைவரும் படிக்கும் வகையில் கிடைக்கிறது.

 

 

 

(கிப்ளிங்கின் காடு. மருதன். இந்து தமிழ் திசை வெளியீடு. கஸ்தூரி பில்டிங், அண்ணா சாலை, சென்னை -2. விலை.ரூ.120)

 

(புக் டே – இணைய தளம் – 14.11.2024)