Home

Friday, 10 January 2025

முத்தைத் தேடி

 

கராச்சியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் காந்தியடிகள் முதன்முதலாக உரையாற்ற நேர்ந்தபோது இந்தியச் சமூகம் பெண்களை நடத்தும் விதத்தைப்பற்றிய தன் ஆற்றாமையை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார். நம் குடும்பங்களிலும் இதயத்திலும் ஓர் அரசியாக வைத்து மதிக்கவேண்டிய பெண்களை நாம் நிலம், வீடு, தங்க ஆபரணங்களைப்போன்ற பாதுகாக்கப்படவேண்டிய சொத்துகளைப்போல நினைத்துக்கொண்டிருக்கிறோம்.  நம் பிரச்சினைகள் அனைத்தும் அந்தக் கருத்துருவிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திகைப்புடன் அவரையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். அதைப் பொருட்படுத்தாத காந்தியடிகள் தன் உரையைத் தொடர்ந்தார். இறைவனின் உருவத்திலேயே சரிபாதியான இடத்தைப் பெண்களுக்குக் கொடுத்திருப்பதை நாம் நம்முடைய புராணக்கதைகளில் படித்திருக்கிறோம். ஆனால் நம் தினசரி வாழ்க்கையில் பெண்களை ஓர் அடிமையைவிட மோசமாக நடத்துகிறோம். பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மேன்மேலும் முடங்கிச் சுருங்குமே தவிர, ஒருபோதும் ஓங்கி வளர வழியே கிடையாது. ஒரு பெண்ணைத் தாயாகவும் சக்தியாகவும் தலைவியாகவும் கருதிப் போற்றும் சமூகமே மேம்படும் என அழுத்தம் திருத்தமாக  கூட்டத்தில் குழுமியிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார் காந்தியடிகள். 

சத்தியாகிரகத்தையும் அகிம்சையையும் தம் போராட்ட வழிமுறைகளாக காந்தியடிகள் அறிவித்த சமயத்தில் அங்கு குழுமியிருந்த பல தலைவர்களும் அவரை விசித்திரமாகப் பார்க்கத் தொடங்கினர். அவருடைய செயல்முறைகள் பெண்கள் மேற்கொள்ளும் செயல்முறைகளை ஒத்திருப்பதாகத் தெரிவித்து நகையாடினர். அவர் ஒரு தலைவருக்குரிய கம்பீரத்துடன் நடந்துகொள்ளாமல் ஒரு பெண்ணைப்போல அமைதி, விரதம் என வேறொரு வழியில் நடப்பதாகக் குற்றம் சுமத்தினர். ஆனால் அத்தகு சொற்களுக்கெல்லாம் செவிகொடுக்காமல் தன் முடிவுப்படியே இயங்கினார் காந்தியடிகள்.

பாலின அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் அமைந்திருக்கும் வேறுபாட்டைத் தவிர, பிற அம்சங்களில் இருபாலினரும்  சமமானவர்களே என்பதுதான் காந்தியடிகளின் கருத்தாகும். 1915ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தார்.  இரண்டாண்டு காலம் இந்தியா முழுதும் பயணம் செய்து மக்களின் வாழ்வியலை நேரிடையாகவே பார்த்துத் தெரிந்துகொண்டார். அதற்கிடையில் சம்பாரண், கேடா போன்ற இடங்களில் நடந்த போராட்டங்களிலும் வெற்றி கிடைப்பதற்கு அவரே முக்கிய காரணமாக இருந்தார்.  எளிய விவசாயிகளுக்காக நடைபெற்ற அப்போராட்டங்கள் வழியாக மிகவும் குறுகிய காலத்திலேயே பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் மாறினார். தேசமெங்கும் ஏராளமான ஆண்களும் பெண்களும் அவருக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கத் தொடங்கினர். அந்தக் காலகட்டத்தில்தான் பிரவபதி தேவி,  ராஜவம்ஷி தேவி, பகவதிதேவி போன்ற பல இளம்தலைவிகள் உருவாகி, இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் குடும்பப்பெண்களை விடுதலைப்போராட்டத்தை நோக்கி அழைத்துவந்தனர்.  

1921இல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, ஏராளமான ஆண்களும் பெண்களும் அவர் மீது நம்பிக்கை கொண்டு பின்தொடர்ந்தனர். கதர் பிரச்சாரத்திலும் கள்ளுக்கடை மறியல் போராட்டங்களிலும் அந்நியநாட்டு ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்னால் நிகழ்ந்த மறியல்களிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பங்குகொண்டனர். அவர்கள்தான் முதன்முதலாக தெருத்தெருவாக நடந்து சென்று கதராடைகளை விற்றனர். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். ஊர்வலங்களில் கலந்துகொண்டு முழக்கமிட்டனர். மன உறுதியோடு சிறைத்தண்டனையை ஏற்றுக்கொண்டு சிறைக்கும் சென்றனர். காவல் துறையினர் இழைத்த மனிதாபிமானமற்ற தண்டனைகளையெல்லாம் அமைதியாக ஏற்றனர்.

காந்தியடிகள் வகுத்த  போராட்டங்களே, இந்தியப் பெண்களை முதன்முதலாக அரசியல்மயப்படுத்தின. பெண்களின் போராட்டங்கள் வெறும் விடுதலையை நாடும் போராட்டமாக நின்றுவிடாமல் குழந்தைத் திருமணங்களை எதிர்க்கும் போராட்டங்களாகவும் விதவை மறுமணத்துக்கான போராட்டங்களாகவும் வளர்ந்தன. 

மேற்கு வங்காளத்தில் முதன்முதலாக சரளாதேவி செளதுராணி என்பவர் பெண்களுக்கென தனிப்பட்ட விதத்தில் பாரத் ஸ்த்ரி மகாமண்டல் என்னும் அமைப்பைத் தொடங்கி நடத்தினார். அதைத் தொடர்ந்து குறுகிய காலத்திலேயே அதையொத்த அமைப்புகள் நாடெங்கும் உருவாகின. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து இந்தியாவின் விடுதலைக்காக இந்தியப் பெண்கள் ஒரே அணியில் திரண்டு நின்றனர். ஆந்திரப்பிரதேசத்தில் காந்தியடிகளின் சுற்றுப்பயணத்தின்போது துர்காபாய் தேஷ்முக் என்னும் பெண்மணி ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேவதாசிப் பெண்களைத் திரட்டி வந்து, அவர்களிடையில்  காந்தியடிகளை உரை நிகழ்த்தவைத்தார். ஊர்வலங்களை நடத்துவதற்கும் மறியல்களை மேற்கொள்வதற்கும் பிரபாத் பேரி முழக்கங்களை எழுப்புவதற்கும்  தேவையான பயிற்சிகளை அப்பெண்கள் பெற்றனர். அதற்குப் பிறகுதான், இந்தியாவை முதன்முதலாக இந்தியத்தாய் என்னும் உருவகமாக பார்க்கும் பார்க்கும் பார்வை உருவானது. துர்காபாய், கமலாதேவி சட்டோபாத்யாய, அருணா ஆசப்ஃ அலி, ரமாதேவி, மாலதி செளதுரி, ருக்மணி லட்சுமிபதி, செளந்திரம் அம்மாள், அம்புஜத்தம்மாள் என தனித்திறமை கொண்ட ஏராளமான பெண் தலைவிகள் உருவானார்கள்.  

1930ஆம் ஆண்டில் காந்தியடிகள் உப்புசத்தியாகிரகத்தைத் தொடங்கியபோது தேசமெங்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சிறைபுகுந்தனர். காந்தியடிகள் வழியாகக் கிடைத்த உத்வேகமே, மிகப்பெரிய எண்ணிக்கையில் பெண்கள் அனைவரும் சேர்ந்து தேசிய போராட்டங்களில் பங்கேற்கத் தூண்டியது. இந்த உலகமே அதைப் பார்த்து வியந்தது. அதே ஆண்டில் அவர் யங் இந்தியா இதழில் அரசியல் களத்தில் பெண்களின் பங்கேற்பை முன்வைத்து எழுதிய ஒரு கட்டுரையில் ”பெண்களின் வலிமையை உணராமல் அவரை பலவீனமான பாலினத்தவர் என்று குறிப்பிடுவது மிகப்பெரிய அவதூறாகும். அப்படிப்பட்ட ஒரு கூற்று ஆண்கள் பெண்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்” என்று குறிப்பிட்டார் காந்தியடிகள்.

காந்தியடிகளின் ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு செயல்பாடும் இன்று ஆவணமாக்கப்பட்டுள்ளன. தேடிப் படிக்கும் ஒருவர் அவற்றையெல்லாம் மிக எளிதாகப் படித்துவிடமுடியும். விலையில்லாமல் படிப்பதற்கு ஏற்ற வகையில் அனைத்தும் இணையத்திலேயே படிப்பதற்குக் கிடைக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது, பெண்களின் ஆற்றல் மீது அவர் கொண்டிருந்த மட்டற்ற மதிப்பை மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

வடக்கே வங்காளத்திலிருந்தும் பஞ்சாபிலிருந்தும் தெற்கே தமிழ்மாகாணம் வரைக்கும் எண்ணற்ற பெண் தலைவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு, விடுதலைக்காகப் பாடுபட்டனர். கெடுவாய்ப்பாக, அப்பெயர்கள் ஆங்காங்கே சிதறியிருக்கின்றன. நாம் வாழும் வட்டாரத்திலேயே விடுதலைபோரில் ஈடுபட்டு சொல்லொணாத் துயரங்களைத் தாங்கிய  ஒருவர் வாழ்ந்து மறைந்திருப்பார். ஆனால் அவரைப்பற்றி இன்னொருவர் குறிப்பிடும் வரைக்கும் நமக்குத் தெரியாமலேயே இருக்கும். காந்தியடிகளின் கடிதங்களையும் கட்டுரைகளையும் உரைகளையும் திரட்டி முறையாக வகைமைப்படுத்தி தொகுத்து ஆவணப்படுத்தியதைப்போல பெண்களின் பங்களிப்பும் பணிகளும் ஆவணமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வட்டாரம் சார்ந்தும் அத்தகு தகவல்கள் திரட்டித் தொகுக்கப்படவேண்டும். பிறகு முறையான பரிசீலனைக்குப் பிறகு அவை தொகுதியில் சேர்க்கப்பட வேண்டும். அதுவும் நாம் செய்யவேண்டிய முக்கியமான கடமை.  கூடுதலான காலம் தேவைப்படுமே என அம்முயற்சியை மேற்கொள்ளாமல் இருந்துவிடாமல், கூடுமான வரையில் அம்முயற்சியில் ஈடுபட்டு குறைவான வெற்றி ஈட்டுவதுகூட பெருமைக்குரிய ஒரு வேலையாகும்.  ’கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் அரிது’  என்னும் திருவள்ளுவரின் சொல்லை ஒருபோதும் மறந்துவிட முடியாது.

இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் வரிசையில் பெண்களின் பங்களிப்பை மட்டும் திரட்டித் தொகுக்கும் மாபெரும் பணியை கவிஞர் உமாமோகன் கொரானா காலத்துக்கு முன்பாகத் தொடங்கினார். யாரும் சொல்லாமலேயே தன் ஆர்வத்தின் காரணமாகவே அவர் அப்பணியை மேற்கொண்டு இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்டவர்களைப்பற்றிய தகவல்களைத் திரட்டி தொகைநூல்களாக வெளியிட்டிருக்கிறார்.  செயற்கரிய ஒரு செயலை நம் கண் முன்னால் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஆவணங்களைத் தேடுதல் என்பது சாதாரணமான செயலல்ல. மலைமலையாகக் குவிந்திருக்கும் சிப்பிகளுக்கிடையில் முத்தைத் தேடி எடுக்கும் செயல். சலிப்புறாத உழைப்பின் விளைவாக, அந்தப் பணி உமா மோகனுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. 

தொகைநூலின் ஏழாவது நூலாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது. வழக்கம்போல இந்தியாவில் உள்ள குஜராத், வங்காளம், கேரளம், ஒரிசா, தமிழகம், ஆந்திரம் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தியாகப்பெண்களின் வரிசை இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. மாநிலம் வேறாக இருந்தாலும், மொழி வேறாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தன்னலத்தைத் துறந்து நாட்டுக்காகத் தியாக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் என்பதில் ஒரே அணியின் கீழ் கருதத்தக்கவர்கள். ஒவ்வொருவரும் இரண்டு முதல் பத்தாண்டுகள் வரைக்கும் சிறைத்தண்டனை பெற்றவர்கள்.

சுமித்ரா தேவி என்பவர் ஆந்திரத்தைச் சேர்ந்த முக்கியமான ஒரு தியாகி. போராட்ட குணம் மிக்கவர். மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்துவிட்டு ஆரியசமாஜம் முன்னெடுத்த பல போராட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார். கலப்புத்திருமணம் செய்துகொண்டார். காந்தியடிகளின் வார்தா ஆசிரமத்துக்குச் சென்று நூற்பு, நெசவு, வேளாண்மை, தச்சுத்தொழில், தோல் தொழில் போன்ற கைத்தொழில்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். அதைத் தொடர்ந்து ஆறாண்டு காலம் ஆசிரமத்திலேயே தங்கி கிராம சேவகர்களுக்கான பயிற்சியை அளிக்கும் ஆசிரியையாகப் பணியாற்றினார். பிறகு ஐதராபாத்துக்குத் திரும்பி வந்து கதர்க்கடைகளையும் நூற்புச் சங்கங்களையும் தோற்றுவித்தார். வசதி வாய்ப்புகள் குறைவான சிக்கட்பள்ளியிலும் நாராயண்குடாவிலும் பாடசாலைகளைத் தொடங்கி நடத்தினார். கைவிடப்பட்ட வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிக்கும் பெண்களுக்கான ஓர் அமைப்பையும் உருவாக்கி பலருடைய மறுவாழ்வுக்கும் வழிவகுத்தார். விடுதலைப்போரில் ஈடுபட்ட தியாகி என்ற வகையில் அவருக்கு அரசு அளித்த பத்து ஏக்கர் நிலத்தை காந்தியடிகள் உருவாக்கிய சேவாசதனுக்கு நன்கொடையாக அளித்துவிட்டார்.

வேதாந்தம் கமலாதேவி என்பவர் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த நண்டலூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். விடுதலைப்போராட்டம் தொடங்கிய காலத்தில் கதர்ப்பிரச்சாரம் செய்தபடி ஆந்திரம் முழுதும் பயணம் செய்தார். நூல்நூற்கவும் நெசவுத்தொழிலில் ஈடுபடவும் பலருக்குப் பயிற்சியை அளித்தார். ஒருமுறை ஸ்ரீகாகுளம் பகுதியில் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட குழுவில் அவர் ஒருவரே பெண்ணாக இருந்த காரணத்தால், மன்னிப்பு கேட்டுவிட்டுப் புறப்பட்டுச் செல்லலாம் என அதிகாரிகள் சலுகை காட்டினர். ஆனால் அச்சலுகையை ஏற்க விரும்பாத கமலாதேவி “அது என் கனவிலும் நடக்காது. பூரண சுயராஜ்ஜியமே என் குறிக்கோள்” என்று சொல்லிவிட்டு துணிச்சலோடு சிறைபுகுந்தார். .

கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஸ்வர்ணகுமாரி. கோழிக்கோட்டுக்கு வருகை புரிந்த காந்தியடிகள் அவருடைய வீட்டில்தான் தங்கினார். சில நாட்கள் மட்டுமே அவரோடு பேசிப் பழகிய அனுபவம் அவருடைய நெஞ்சில் சுதந்திரக்கனலை மூட்டிவிட்டது. தன்னைப்போன்ற பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுமிகளை இணைத்து பாலிகா பாலர் சங்கம் என்னும் பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கினார். தினமும் காலையிலும் மாலையிலும் மூவண்ணக் கொடியை ஏந்தி தேசபக்திப் பாடல்களைப் பாடியபடி ஊர்வலமாகச் செல்வதும் உண்டியலேந்தி ஹரிஜன நிதிவசூல் செய்வதும்தான்  அவர்கள் வேலை. ஒருமுறை படேல் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியைக் கண்டித்து நடைபெற்ற ஊர்வலத்தில் சிறுமியான ஸ்வர்ணகுமாரியும் கலந்துகொண்டார்.  அன்று பள்ளிக்குச் செல்லவேண்டிய நாள். ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல்தான் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அந்தச் செய்தி எப்படியோ அவருடைய பள்ளி வரைக்கும் எட்டிவிட்டது. பள்ளித் தலைமையாசிரியர் அவரைப் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. மன்னிப்புக்கடிதம் கொடுத்துவிட்டு பள்ளிக்கு வரலாம் என்று தெரிவித்துவிட்டு, வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.  ஆயினும் மன்னிப்பு கேட்க விருப்பமில்லாத ஸ்வர்ணகுமாரி அத்துடன் பள்ளிப்படிப்பைத் துறந்துவிட்டு, தன் தந்தையுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

கொல்லா கனகவல்லி தாயாரம்மா ஆந்திரத்தைச் சேர்ந்தவர். தேவரம்பேடு என்னும் கிராமம் கடற்கரையை ஒட்டியுள்ள இடம். உப்பு சத்தியாகிரகத்துக்கு அந்த இடம் பொருத்தமான இடமென தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அங்கு உப்பு காய்ச்ச விடாமல் காவல் துறையினர் மிரட்டி விரட்டியடித்தபடி இருந்தனர். ஏராளமான பெண்கள் கூட்டத்துடன் அங்கு சென்ற கனகவல்லி  தடையை மீறி உப்புக் காய்ச்சினர். உடனடியாக அவர்களைக் கைது செய்தனர் காவல்துறையினர். ஆனால் அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாமல் எண்பது மைல் தொலைவுக்கப்பால் உள்ள சிலகலூருபேட்டை என்னும் இடத்தில் இருளடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று இறக்கிவிடப்பட்டனர். இருளில்  வழி தெரியாமல் தவித்து, எங்கெங்கோ அலைந்து திரிந்து, பிறகு அப்பகுதியிலிருந்து படாத பாடுபட்டு  நடந்து ஊருக்குத் திரும்பிவந்தனர். ஒருமுறை தெனாலி பகுதியில் அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவரைக் கைது செய்ய காவல் துறையினர் வந்தனர். அப்போது அவர் ஒன்றரை வயதுக் குழந்தைக்குத் தாய். மேலும் எட்டுமாதக் கருவை வயிற்றிலும் சுமந்திருந்தார். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறைக்குச் சென்றார் கனகவல்லி. விடுதலை பெற்றதும் ஊருக்குத் திரும்பி வந்து ஹரிஜன சேவையை முன்னெடுக்கும் விதமாக ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டும் வேலையைத் தொடங்கினார். காந்தியடிகளே நேரில் வந்து அப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.

இப்படி விடுதலைக்கும் நாட்டின் நலனுக்கும் பாடுபட்ட ஏராளமான பெயர்களை நாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம். அது மிகவும் பெரியது, உமா மோகன் தம் இடையறா முயற்சியின் விளைவாக, கிடைத்த தகவல்களைக் கொண்டு இத்தொகைநூலை ஒரு முத்தாரமென உருவாக்கியிருக்கிறார். அவருடைய பணி மகத்தானது. அவருடைய அயராத உழைப்பு என்றென்றும் நம் வணக்கத்துக்குரியது.

 

(உமா மோகன் எழுதிய ’விடுதலைக்களத்தில் வீர மகளிர்’ தொகைநூலின் இறுதிப்புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை)