கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் புகுமுக வகுப்புத் தேர்வை எழுதிய மாணவரொருவர் முடிவுக்காகக் காத்திருந்தார். அந்த வட்டாரத்திலேயே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்ற முதல் மாணவர் அவர். அவருடைய அம்மா, அப்பா, உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவருமே அவருடைய தேர்வு முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்த மாணவர் மட்டும் தன் முடிவைப்பற்றிய பதற்றமோ, கவலையோ இல்லாமல், தொடர்ச்சியாகக் கிடைத்த விடுப்பை மனத்துக்குப் பிடித்த விதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புத்தகமே உலகமென வாசிப்பின்பத்தில் மூழ்கியிருந்தார்.
தேர்வு
முடிவுநாள் வந்தது. காலையில் வந்து சேர்ந்த செய்தித்தாளை அனைவரும் ஆவலோடு பிரித்து
அவருடைய எண்ணைத் தேடினார்கள். தேர்ச்சியடைந்தவர் பட்டியலில் அவருடைய எண் இல்லை. ஆங்கிலப்
பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவர் தோல்வியடைந்திருந்தார். அந்தத் தோல்வி
அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவருடைய
அப்பா அந்த ஊர் காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்தார். மகனுடைய தோல்வியை அவரால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை. கதைப்புத்தகம் படிக்கும் பழக்கம்தான் தன் மகனைத் தேர்வில்
தோல்வியுற வைத்துவிட்டது என அவர் உறுதியாக நம்பினார். மறுநாள் முதல் ஒவ்வொரு நாளும்
காலையில் காவல்நிலையத்துக்கு வேலைக்குப் புறப்படும்போது, தன் மகனையும் தன்னோடு அழைத்துச்
சென்றார். புத்தகப்பையோடு மகனை சிறைக்கூடத்தில்
தள்ளி கதவைப் பூட்டி, பாடப்புத்தகங்களை கவனமுடன் படிக்கும்படி சொன்னார்.
ஒரு மாணவரால்
எவ்வளவு நேரம்தான் பாடப்புத்தகத்தின் பக்கங்களையே புரட்டிக்கொண்டிருக்கமுடியும்? கதைப்புத்தகத்தைப்
படிப்பதற்குத்தானே தடை, கதையை எழுதுவதற்குத் தடையில்லையே என அந்த இளம்மனம் நினைத்தது.
அக்கணமே தன் குறிப்பேட்டைத் திறந்து தனக்குத் தெரிந்த ஓர் அனுபவத்தை மையக்கருவாகக்
கொண்டு மனம் போன போக்கில் ஒரு கதையை எழுதத் தொடங்கினார் அந்த மாணவர். எதிர்காலத்தில்
தான் ஓர் எழுத்தாளராவோம் என்ற எந்தக் கனவும் இல்லாமல் அந்த மாணவர் தன் முதல் சிறுகதையை
எழுதிமுடித்தார். சிறைக்கூடத்தில் தன் முதல் சிறுகதையை எழுதிய அந்த மாணவர்தான் இன்று
கன்னட மொழியில் நவீன எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் தேவனூரு மகாதேவ.
10.06.1948
அன்று நஞ்சன்கூடு பகுதியைச் சேர்ந்த தேவனூரு என்னும் கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய தந்தையார் நஞ்சையா. அவருடைய தாயார் நஞ்சம்மா.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பவர் அவர். இதுவரை
அவருக்கு கர்நாடக அரசும் நடுவண் அரசும் அவருக்கு
பல விருதுகளை வழங்கிக் கெளரவித்திருக்கின்றன. நிருபதுங்கா விருது, பத்மஸ்ரீ விருது,
சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். அவருக்குத்தான்
தமிழக அரசு இந்த ஆண்டுக்குரிய வைக்கம் விருதை அளித்து கெளரவித்திருக்கிறது.
இரண்டாம்
முறையாக எழுதிய புகுமுக வகுப்புத் தேர்வில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மைசூர் மகாராஜா
கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பையும்
படித்து பட்டம் பெற்றார் மகாதேவ. சில ஆண்டுகள் ஆசிரியராவும் பணிபுரிந்தார். சில ஆண்டுகள்
இந்திய மொழிகள் ஆய்வு மையத்திலும் பணி புரிந்தார். ஆயினும் அப்பணிகளைவிட விவசாயத்தின்
மீதுதான் அவருக்கு அதிக நாட்டம் இருந்தது.
அதனால் அந்தப் பணிகளிலிருந்து வெகுவிரைவில் வெளியேறினார். மனத்துக்குப் பிடித்த விவசாயம்,
மனத்துக்குப் பிடித்த இலக்கியம் என மனம்போல தன் வாழ்வை அமைத்துக்கொண்டார்.
எழுபதுகளில்
அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாட்டைப்போலவே கர்நாடகத்திலும் நவீனத்துவ அலை
ஓங்கியிருந்தது. சமகால அலையின் வீச்சில் அவரும் இழுத்துச் செல்லப்பட்டார். அந்தச் செல்வாக்கின் விளைவாக ஒருசில ஆக்கங்களையும்
எழுதினார். வெகுவிரைவில் அந்த எழுத்து வகைமையின்
போதாமையை அவர் உணர்ந்தார். மனிதர்கள் மீதும் வாழ்க்கையின் மீதும் அவநம்பிக்கை கொண்ட
போக்கும் செயல்பாடுகளும் அவரை ஈர்க்கவில்லை. நவீனத்துவர்கள் உண்மை என முன்வைப்பவை எல்லாமே
அவருக்கு அற்பமாகத் தோன்றின. சாதாரண எறும்பை பூதக்கண்ணாடி வழியாகப் பார்க்கவைத்து மிரட்சியடைய
வைப்பதுபோல உணர்ந்தார். மானுட உள்ளத்தில் நிகழும் பிறழ்எண்ணங்களையும் வஞ்சனைகளையும்
கசப்புகளையும் உருப்பெருக்கிக் காட்டும் படைப்புகள் அவரைச் சலிப்புறவைத்தன. இன்னொரு
பக்கத்தில் முற்போக்குப் படைப்பாளிகளுடைய ஆக்கங்களின் செயற்கையான கட்டுமானங்களும் முடிவுகளும்
அவரை ஏமாற்றமுறை வைத்தன. அவர்கள் காட்டும் உலகத்தைவிட தன் விவசாய மனம் திளைத்திருக்கும்
உலகம் மிகப்பெரியதென்றும் அந்த உலகத்தின் நம்பிக்கைகள் உறுதியானவை என்றும் அவருக்குப்
புரிந்துவிட்டது.
தன் வாழ்க்கைச்சூழலிலும்
தனக்கு அறிமுகமான மனிதர்களுடைய வாழ்க்கைச்சூழல்களிலும் கண்டறிந்த சில அரிய தருணங்களையும்
கண்டுபிடிப்புகளையும் முன்வைத்து கதைகளை எழுதத் தொடங்கினார் மகாதேவ. கதைச்சூழலை மட்டுமன்றி,
கதைமொழியையும் மனிதர்களின் உரையாடலையும் அச்சூழலுக்கு நெருக்கமாக அமைத்துக்கொண்டார்.
கதைகளைக் கூறுவதற்குப் பதிலாக, அவற்றைச் சொல் வழியாக நிகழ்த்தினார். புதிய மொழி, புதிய
களம், புதிய கட்டுமானம் என ஒரு புதிய தடம் உருவானது. தலித்துகளுக்கே உரிய பேச்சுமொழியாலும்
தலித் பிரக்ஞை கொண்ட உரையாடல்களாலும் அப்படைப்புகள் உடனடியாக வாசகர்களின் கவனத்தை ஈர்த்தன.
தலித் வாழ்வியலை அவரால் எளிதாகக் கட்டமைக்கமுடிந்தது. நாளடைவில் அவருடைய படைப்புகள்
கன்னடக் கதையுலகத்துக்கு ஒரு பெருங்கொடையாக அமைந்தன. தலித் பிரக்ஞையோடு எழுதும் படைப்புகளுக்கு
தேவனூரு மகாதேவ ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தார்.
ஒரு கதையின் மொழி என்பது, கதைக்கு உடுத்தி
அழகுபார்க்கும் ஆடையாக இருக்கக்கூடாது. மாறாக, அது கதையின் தோலாகவும் உணர்ச்சியாகவும்
இருக்கவேண்டும் என்பது மகாதேவருடைய புகழ்பெற்ற கூற்று.
கடந்த
ஐம்பது ஆண்டுகளாக அவர் எழுதிக்கொண்டிருந்தாலும் அவருடைய படைப்பாக்கங்களின் பட்டியல்
மிகவும் சிறியது. இதுவரை ஒரு நாவலையும் ஒரு குறுநாவலையும் இரு கதைத்தொகுதிகளும் இரு
கட்டுரைத்தொகுதிகளும் மட்டுமே எழுதியிருக்கிறார். அனைத்துப் படைப்புகளையும் சேர்த்தாலும்
ஆயிரம் பக்கங்களுக்குக் குறைவானதாகவே இருக்கும். அவரைப்போன்ற திறமை மிக்க படைப்பாளிக்கு
அது மிகவும் குறைவு. ஆயினும் அவர் படைப்புகள் தரத்திலும் வாசக மதிப்பிலும் உயர்ந்தவை.
சுருக்கமாகவும் ஆழமாகவும் சொல்லத் தெரிந்தவர் அவர். அவருடைய ஒவ்வொரு புத்தகமும் ஒரு
லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் இருபத்தைந்து பதிப்புகளைக்
கடந்து இன்றும் விற்பனையில் இருக்கிறது. எழுத்துக்கு இணையாகக் கருதத்தக்க அவருடைய பொதுவாழ்க்கைப்
பக்கங்கள் மிகவும் பிரகாசமானவை.
யு.ஆர்.அனந்தமூர்த்தி,
லங்கேஷ், பூரணசந்திர தேஜஸ்வி போன்ற நவீன எழுத்தாளர்களின் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க
படைப்புகளை அவர் எழுதியிருக்கிறார். நஞ்சன்கூடு வட்டார வழக்குச் சொற்களுக்கு தம் படைப்புகள்
வழியே புத்துயிரூட்டியவர். மொழிப் பிரக்ஞையோடு ஒவ்வொரு வாக்கியத்தையும் அவர் எழுதுவதால்,
அவருடைய ஒவ்வொரு படைப்பும் கச்சிதமாக வடிக்கப்பட்ட சிற்பமென உருக்கொண்டிருக்கின்றன.
தொண்ணூறுகளின்
தொடக்கத்தில் கன்னட தலித் எழுத்தாளர்களின் கதைகளை அடங்கிய தொகுப்பொன்றை நான் உருவாக்க
நினைத்ததும், அவருடைய ’தாரின் வருகை’ என்னும் கதையைத் தேர்ந்தெடுத்து முதலில் மொழிபெயர்த்தேன்.
ஓர் அறிக்கையின் சாயலில் அமைந்த அக்கதை உள்ளார்ந்த நகைச்சுவையுணர்வோடும் ஒரு தார்ச்சாலை
சிற்றூர் சார்ந்த மனிதர்களின் மனநிலையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் நம்பிக்கைகளையும்
அவநம்பிக்கைகளையும் நுட்பமாகச் சித்தரிக்கிறது.
கிராமங்களை
நகரத்தோடு இணைக்கும் தார்ச்சாலை ஒருவிதத்தில் புதிய நாகரிகத்தின் அடையாளம்.. ஊர்த்தலைவரான
படேல், அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டிருக்கும் ஊர்மக்கள் என்ற பழைய அமைப்பைக் கொண்டது
அக்கிராமம். சாலை போட்ட பிறகு எஞ்சும் பணத்தில் ஊர்மக்களுக்காக கோவிலைப் பழுதுபார்த்து புதுப்பித்துத் தருவதாக
வாக்களிக்கிறார் படேல். உண்மையில் கோவில் பெயரில் செலவுக்கணக்கைக் காட்டிவிட்டு பெரும்பகுதியான
பணத்தைச் சுருட்டிவிட வேண்டும் என்பதுதான் அவர் திட்டம்.
அடுத்த
ஊருக்குச் சென்று கல்வி கற்றுத் திரும்பும் நான்கு நண்பர்கள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள்.
அரசாங்கத்துக்கு புகார்க்கடிதம் எழுதுகிறார்கள்.
பத்திரிகைகளுக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஓர் அற்பக்காரணத்துக்காக, காவல்நிலையம்
வரைக்கும் அவர்களை இழுத்து அவமானப்படுத்துகிறார் படேல். பழைய அமைப்பு புதிய அமைப்பாக
மாறினாலும் பழைய அடித்தட்டு பழைய அடித்தட்டாகவே நீடிக்கும் புதிரை, மகாதேவ அவர்களின்
கதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தேவனூரு
மகாதேவ ஒடலாள என்னும் தலைப்பில் ஒரு குறுநாவலையும்
குஸுமபாலை என்னும் தலைப்பில் ஒரு நாவலையும்
எழுதி வெளியிட்டார். ஒரு பாத்திரம் தனக்குள் ஆழ்ந்து சிந்தனை மோதல்களில் சிக்குண்டு
தவிக்கும் கதைகள் பெருகிவந்த காலகட்டத்தில் ஏராளமான பாத்திரங்களின் நடமாட்டத்தைக் காட்சிப்படுத்தும்
சித்திரங்களோடு வெளிப்பட்ட அந்தப் படைப்புகள், அமைதியைக் கிழித்தபடி அதிரடியாக ஒலிக்கும்
மத்தள ஓசையென வெளிப்பட்டன. வாசகர்களிடையில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. எண்ணங்களின்
தொகைக்கு மாறாக, காட்சிச்சித்திரங்களின் தொகையாக மகாதேவ அவர்களின் படைப்புகள் அமைந்தன. அந்த வெளிப்பாட்டுக்குக் கிடைத்த வரவேற்பு
தேவனூரு மகாதேவ அவர்களை கன்னடச்சூழலில் கவனிக்கத்தக்க படைப்பாளியாக முன்வைத்தது.
ஒடலாள குறுநாவலையும் நான் மொழிபெயர்த்தேன்.
அது எனக்கு மிகவும் பிடித்த கதை. பசிதான் அந்த நாவலின் மையம். அதனால் நான் அந்த நாவலுக்கு
பசித்தவர்கள் என்ற தலைப்பைச் சூட்டினேன். அந்த நாவலின் பாத்திரங்கள் பசியின் காரணமாக எல்லோரோடும்
மோதுகிறவர்களாக இருக்கிறார்கள். அதே சமயத்தில், தர்மநியாயம் பேசாமல் கிடைத்ததை உண்டு
பசியைத் தணித்துக்கொள்கிறவர்களாகவும் வாழ்கிறார்கள். குற்றம், பிழை, அறம் அனைத்தும்
அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதே சமயத்தில், அவை அனைத்தையும்விட பசியைத் தணித்து
உயிர்த்திருப்பது என்பது அனைவருக்கும் மிகமுக்கியமாகத் தோன்றுகிறது.
ஒடலாள
நாவலை ஒரு நாடகமாகத்தான் நான் முதலில் பார்த்தேன்.
நாவலைத் தழுவி எழுதப்பட்ட நாடகமாகவே அது தெரியவில்லை., நாடகமாக எழுதப்பட்ட படைப்பாகத்
தோன்றியது. காட்சிகள் அனைத்தும் கச்சிதமாக வகுக்கப்பட்டிருந்தன. அந்த வசீகரத்தாலேயே
அந்த நாவலை நான் மொழிபெயர்த்தேன்.
அந்த
நாவலின் மையப்பாத்திரம் சாக்கவ்வா என்னும் பெண்மணி. அவளைச் சுற்றி அவளுடைய மகன்கள்,
மகள்கள், பேரன்கள், பேத்திகள் என ஏராளமானவர்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமானவர்கள். உழைப்பாளி, சோம்பேறி, திருட்டுப்புத்தி கொண்டவன், நேர்மை பேசுபவன், பரோபகாரி,
பிள்ளைகுட்டியோடு இருப்பவன், பிள்ளைகளே இல்லாதவன் என அனைத்து விதமானவர்களும் அந்தக்
குடும்பத்தில் சாக்கவ்வாவைச் சுற்றி வசிக்கிறார்கள். ஒரு நாட்டுப்புறக்கதையின் சாயலில்
எழுதப்பட்டிருக்கும் அந்தக் கதையில் ஏராளமான நுண்சித்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
உறவுகளையும் பிளவுகளையும் சித்தரிக்கும் நுண்சித்திரங்கள் அவை.
காணாமல்
போய்விட்ட கோழியைத் தேடித்தேடி சலித்துப் போனவளாகத்தான் தொடக்கத்தில் சாக்கவ்வாவை அறிமுகப்படுத்துகிறார்
மகாதேவ. பிறகு மகன்களும் மகள்களும் பேரப்பிள்ளைகளும் அறிமுகமாகிறார்கள். அவர்களிடையில் நிகழும் உரையாடல்கள்
அவர்களுடைய நெருக்கங்களையும் பூசல்களையும் அடுத்தடுத்து வெளிப்படுத்துகின்றன.
சாக்கவ்வாவின்
மூத்த மகன் காளய்யா வேலை செய்யும் மில்லிலிருந்து சிறிய வேர்க்கடலை மூட்டையை திருட்டுத்தனமாக
எடுத்து வருகிறான். அது திருட்டுப்பொருள் என்பதைப்பற்றி
ஒருவருக்கும் குற்ற உணர்வு எழவில்லை. குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் வேர்க்கடலையை
ஆளுக்குக் கொஞ்சம் என பங்கு பிரித்து உண்ணத் தொடங்குகிறார்கள். பசி அடங்குகிறது. அதுவரை
அவர்களிடையில் நிலவிய பூசல் சட்டென அடங்கி ஒற்றுமை நிலவத் தொடங்குகிறது. பக்கத்து வீட்டில்
இருப்பவர்களுக்கும் கூட பகிர்ந்தளிக்கிறார்கள். சிரித்துச் சிரித்துப் பேசத் தொடங்குகிறார்கள்.
அதுதான் நாவலின் உச்சம்.
காணாமல்
போன வேர்க்கடலை மூட்டையைக் கண்டுபிடித்துக் கொடுக்கச் சொல்லி மில் முதலாளி போலீஸ் ஸ்டேஷனில்
புகார் கொடுக்கிறார். காவலர்கள் திருட்டைப்பற்றி விசாரிப்பதற்காக சாக்கவ்வாவின் வீட்டுக்கு
வருகிறார்கள். அவர்களால் பையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிச்
செல்ல முனைகிறார்கள் காவலர்கள். அப்போது காணமால் போன கோழியைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி
அவர்களிடம் கேட்கிறாள் சாக்கவ்வா.
வாழ்வியல்
சூழல்களின் விளைவாக விளிம்பு நிலைக்கு வந்து நேர்ந்த அவலம், வறுமை, பசி, சுரண்டல்,
அடக்குமுறை, கையறுநிலை, வன்முறை, சமரசம் அனைத்தும் தலித்துகளுடைய வாழ்வில் முக்கிய
பகுதிகளாக நிறைந்துள்ளன. மிகுந்த முயற்சியோடு ஒரு தளையிலிருந்து விடுபட்டு எழுவதும் மறுகணமே இன்னொரு தளையின் பிடியில் சிக்கி விழுவதும்
தலித்துகளின் வாழ்க்கையில் மாறிமாறி நிகழ்கின்றன. இயல்புவாதப்பார்வை கொண்ட மகாதேவரின்
படைப்புகள் அந்த வாழ்க்கைச்சித்திரங்களை நிறம் மாறாமலும் கூட்டாமலும் குறைக்காமலும்
முன்வைக்கின்றன. எவ்விதமான தனிப்பட்ட முயற்சியும் எடுக்காமலேயே அவருடைய படைப்புகளின்
விவரணைகளிலும் உரையாடல்களிலும் இயல்பாகவே தலித் வாழ்வியல் சாயலை அவரால் கொண்டுவர முடிந்தது.
முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவராக மகாதேவ கருதப்படுவதற்கு அதுவே காரணம்.
தொடக்கத்திலிருந்தே
இலக்கியச் செயல்பாடுகளுக்கு இணையாக தேவனூரு மகாதேவ இயக்கச் செயல்பாடுகளிலும் ஈடுபாடு
கொண்டிருந்தார். சுதந்திரத்துக்குப் பிறகான கர்நாடகத்தில் ராமசந்திர லோகியாவின் சிந்தனை
மிகுந்த செல்வாக்குடன் பரவிய காலத்தில் தன் இளமையைக் கழித்தவர் அவர். காந்தியவாதியும் சோசலிசவாதியுமான லோகியா இரு தளங்களிலும்
அமைந்த நல்ல கருத்துகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய சிந்தனைமுறையைத் தோற்றுவித்தார். ஐம்பதுகளிலும்
அறுபதுகளிலும் வளர்ந்த பெரும்பாலான கர்நாடக இளைஞர்கள் அச்சிந்தனையின் செல்வாக்குக்கு
உட்பட்டனர். அவர்களில் ஒருவர் தேவனூரு மகாதேவ. அதன் நீட்சியாகவே எழுபதுகளில் மகாதேவ
பிற நண்பர்களுடன் இணைந்து தலித் சங்கர்ஷ சமிதியை உருவாக்கினார். பிறகு, தலித் எழுச்சியோடு
விவசாயிகள் எழுச்சியும் இச்சமூகத்தில் இணைந்து ஏற்படுவதே இரு தரப்பினருக்கும் நலன்
பயக்கும் என்பதை உணர்ந்து ’சர்வோதய கர்நாடக’ என்னும் புதிய அமைப்பைத் தோற்றுவித்தார்.
தொடக்கத்தில்
சிந்தனையாளரான லோகியாவின் பார்வையால் ஈர்க்கப்பட்டிருந்த மகாதேவ, மெல்ல மெல்ல
காந்தியடிகள், அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார். பிறகு அவற்றை
சமூகத்துக்கு ஏற்ற வகையில் தன்வயப்படுத்திக்கொண்டு, தன் தனித்துவமான பார்வையை
வளர்த்துக்கொண்டார். அதையே தன் கட்டுரைகளிலும் மேடையுரைகளிலும்
வெளிப்படுத்தினார்.
2022ஆம் ஆண்டில் தேவனூரு
மகாதேவ ஆர்.எஸ்.எஸ். : ஆழமும் அகலமும் என்னும்
தலைப்பில் அறுபது பக்கங்களில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். மதம் கலந்த அரசியல் கண்ணோட்டத்தால்
ஏற்படக்கூடிய ஆபத்துகளை எடுத்துரைக்கும் விதமாக அவர் எழுதிய அந்தப் புத்தகம், அவர்
அதுவரை எழுதிய இலக்கியப்படைப்புகளைவிட, இலக்கிய வாசகர்களிடையிலும் பொது
வாசகர்களிடையிலும் நன்கு கவனம் பெற்றது. ஒரு நூற்றாண்டு காலமாக பல்வேறு தலைவர்களால் நம் நாட்டில்
மேற்கொள்ளப்பட்டு வந்த தீண்டாமைப் போராட்டங்களின் விளைவாகவும் சீர்திருத்தங்களின்
விளைவாகவும் உருவாகி நிலைபெறத் தொடங்கியிருக்கும் சமூக மாற்றங்களையெல்லாம்
அழித்துத் தரைமட்டமாக்கிவிடும் ஆபத்துகளுக்கு மதச்சாய்வு கொண்ட அரசியல் வழிவகுத்துவிடும்
என்னும் எச்சரிக்கைக்குரலாக அப்புத்தகம் அமைந்திருந்தது.
புத்தகப் பதிப்புலகத்தில்
அந்தப் புத்தகம் ஒரு பெரிய புரட்சியையே ஏற்படுத்தியது. நாற்பது ரூபாய் விலையுள்ள
அப்புத்தகம் லட்சக்கணக்கில் விற்பனையானது. அந்தப் புத்தகத்தை எந்தப் பதிப்பகம்
வேண்டுமானாலும் பதிப்பித்து விற்றுக்கொள்ளலாம் என பொதுவாக மகாதேவ விடுத்த
அறிவிப்பு அப்புத்தகத்தை கடைக்கோடி மனிதன் வரைக்கும் கொண்டுசென்றது. அவர் விதித்த
ஒரே நிபந்தனை, புத்தகத்தைப் பதிப்பிப்பவர் யாராக இருந்தாலும் அப்புத்தகத்தின்
விலையை நாற்பது ரூபாய்க்கு மேல் வைக்கக்கூடாது என்பதுதான். முதல் புத்தகம்
வெளிவந்த சில மாதங்களிலேயே கர்நாடகத்தில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த
முப்பத்தாறு பதிப்பகங்கள் அப்புத்தகத்தை வெளியிட்டு வாசகர்களிடையில் கொண்டு
சென்றன. கன்னடத்திலிருந்து ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, உருது, மராத்தி ஆகிய
மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டன. முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த குழுக்களும் பிற
தன்னார்வலக் குழுக்களும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி,
பொதுமக்களிடையில் விலையில்லாப் பிரதிகளாக வழங்கின.
அந்தப் புத்தகம் வெளியான
சமயம் கர்நாடகத்தில் மிகமுக்கியமான தருணம். தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில
மாதங்களே உள்ளன என்னும் நிலையில் அப்புத்தகம் வெளிவந்தது. மனிதகுலம் தழைப்பதற்கும்
சமத்துவமான வாழ்க்கையை சமூகத்தில் உருவாக்குவதற்கும் தனிமனிதனாக இருந்தாலும் சரி,
அமைப்பாக இருந்தாலும் சரி, மதம் கடந்த நல்லிணக்கப்பார்வையே உற்ற துணையாகவும்
இணைப்புச்சங்கிலியாகவும் இருக்கும் என்பதையே அவர் வெவ்வேறு ஆவணங்களின் துணையோடு
அப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். பல
தளங்களில் அப்புத்தகம் நீண்ட விவாதத்துக்கு வழிவகுத்தது. விவாதங்கள் அப்புத்தகத்தை
நெருக்கமாக உணரவைத்தன.
2023இல் நடைபெற்ற சட்டமன்ற
பொதுத்தேர்தலில் மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல இடங்களில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த பிரச்சாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார் மகாதேவ.
விவசாய சங்கத்தைச் சேர்ந்த தர்ஷன் புட்டண்ணையா என்பவர் மைசூர் மாவட்டத்திலேயே ஒரு
தொகுதியில் போட்டியிட்டார். அவருடைய வெற்றிக்காக, அவர் போட்டியிடும் தொகுதியில் பல
இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களிலும் மகாதேவ உரையாற்றினார்.
அவருடைய தேர்தல் உரை
பேச்சுமொழியால் ஆனது. அவற்றை நாம் இன்றும் சமூக வலைத்தளங்களில் காணலாம். “இந்தத் தேர்தல் போட்டி கட்சிகளுக்கிடையிலான
தேர்தலோ, அல்லது போட்டியிடக்கூடிய இரு தலைவர்களுக்கிடையிலான தேர்தலோ கிடையாது.
பாபாசாகிப் அம்பேத்கர் அல்லும் பகலும் பாடுபட்டு உருவாக்கிய இந்திய அரசியல்
சட்டத்துக்கும் சாதிமத அமைப்புகளை உருவாக்கிய மனுதர்ம சாஸ்திரத்துக்கும் இடையில்
நடைபெறும் போட்டியாகும். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு
செய்துகொள்ளுங்கள்” என்பதுதான் அவர் பேச்சின் சாரமாக இருந்தது. எந்த மேடையிலும் இந்தக் கட்சிக்கு வாக்களித்து
வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அவர் சொல்லவே இல்லை. அந்த உரை தன் முடிவைப்
பரிசீலிக்க உதவியது என்று சிலர் சொன்னார்கள். அந்த உரை தன் அகக்கண்ணைத்
திறந்துவிட்டது என்றும் சிலர் சொன்னார்கள்.
அவருடைய உரை மக்களைத் திசை திருப்புகிறது என்றும் சிலர் சொன்னார்கள். இறுதியில் அவருடைய
மேடையுரைக்கு நல்ல பலன் இருந்தது. அவர்கள் அனைவரும் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குச்
சென்றனர்.
நம் சூழலில் இலக்கியச்
செயல்பாடுகளிலும் சமூகச் செயல்பாடுகளிலும் சம அளவில் தீவிரத்தன்மையோடு
இயங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அத்தகு படைப்பாளிகளின் பட்டியலில்
தேவனூரு மகாதேவ அவர்கள் முதன்மைத்தகுதி கொண்டவர். தம்முடைய இலக்கியப்படைப்புகள்
வழியாக, தம் கலாச்சார வடிவங்களான கதைகளையும் பாடல்களையும் மொழியையும் உருவகங்களையும்
கூடுதலான பரிமாணங்களோடு பொலிவுபடுத்தி பதிவு செய்தவர் அவர். இலக்கியம் என்பது வெறும்
கதையோ பாட்டோ மட்டுமல்ல, அது நம் சுயமரியாதை என்ற எண்ணத்தை தம் செயல்பாடுகள் வழியாக
விதைத்தவர். வைக்கம் விருது பெறும் அவருக்கு இத்தருணத்தில் நம் வணக்கமும் வாழ்த்தும்.
(காலச்சுவடு – ஜனவரி 2025)