ஒருசில நாட்களுக்கு முன்னால்தான் செந்தில் பாலா என்னும் கவிஞர் தொகுத்து வெளியிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுதியைப் படித்து மகிழ்ந்தேன். பல கவிதைகளின் வரிகள் இன்னும் என் நினைவலைகளில் மிதந்தபடி இருக்கின்றன. அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாகப் பெருக்கும் வகையில் இப்போது கும்பகோணம் பகுதியில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி மாணவர்களின் கதைத்தொகுதியைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் இளம் வாசகர்வட்டத்தின் செயல்பாடுகள் மாணவர்கள் தம் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள பலவகைகளில் உதவியிருப்பதற்கு இதுபோன்ற தொகுதியே நல்ல எடுத்துக்காட்டு.
பல கதைகள்
ஒன்று அல்லது இரண்டு பக்க எல்லைக்குள்ளேயே முடிவடைகின்றன. அந்த வடிவத்துக்குப் பொருந்திப்
போகும் வகையில் சின்னஞ்சிறு கருக்களையே மாணவமாணவிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
முடிந்தவரை வடிவப்பிசிறு இல்லாதபடி எழுதவும்
அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இத்தொகுதியில்
இருபத்தைந்து கதைகள் மட்டுமே உள்ளன. இதற்கு மேலும் கதைகள் இருக்கக்கூடும். அவர்கள்
தம் குறைகளைக் களைந்து மீண்டும் மீண்டும் தம் முயற்சிகளில் ஈடுபட்டபடி இருந்தால், எதிர்காலத்தில்
அவர்களும் சிறந்த கதைகளை எழுதக்கூடும். அவர்களுடைய கதைகளைக் கொண்ட தொகுதியும் விரைவில்
வரக்கூடும்.
இக்கதைகளை
எழுதியிருக்கும் ஒவ்வொரு மாணவரும் மாணவியும் மையக்கருவோடு ஒருங்கிணைந்திருக்கும் விதமாக
வடிவப்பிரக்ஞையோடு கதைகளை எழுதியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. வடிவத்துக்கு
வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்படியாக ஒரு வரி கூட இல்லை. அந்த அளவுக்கு அவர்கள் எழுதி
எழுதிப் பழகியிருக்கிறார்கள்.
ஏழாம்
வகுப்பு படிக்கிற அனுஷ்வேல் என்னும் மாணவர் சரியான பாடம் என்னும் சிறுகதையை எழுதியிருக்கிறார்.
பழைய நாட்டுப்புறக்கதையின் சாயலோடு இருந்தாலும் அவருடைய கதையை புன்னகை மலரப் படிக்கமுடிகிறது.
ஒரு பச்சோந்தி
அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக்கொள்வதைப் பார்க்கும் ஓணானுக்கு அந்த நுட்பத்தை அறிந்துகொள்ள
விரும்புகிறது. ஒருநாள் பச்சோந்தியிடமே அந்தக் கேள்வியைக் கேட்கிறது. நேர்மையில்லாத
பச்சோந்தி ஓணானை அலைக்கழிக்க விரும்புகிறது. தனக்கு உருவம் மாறவேண்டும் என்று மந்திரத்தை
முணுமுணுப்பதுபோல முணுமுணுத்துக்கொண்டே 108 முறை மாமரத்தைச் சுற்றவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறது.
பச்சோந்தியின்
சொற்களை நம்பிய ஓணான் தினமும் மாமரத்தைச் சுற்றத் தொடங்குகிறது. ஆனால் நாட்கள் கடந்தனவே
தவிர, ஓணானுக்கு நிறம் மாறும் கலை கைவரவில்லை. ஒருநாள் அது மாமரத்தைச் சுற்றும்போது,
அங்கு வந்த அணில் நடந்ததையெல்லாம் அறிந்துகொண்டு பச்சோந்தி ஏமாற்றிவிட்டதாகத் தெரியப்படுத்துகிறது.
அதே நேரத்தில் வருத்தப்படவேண்டாம் என்றும் பச்சோந்திக்கு தானே சரியான பாடம் புகட்டுவதாகச்
சொல்லி அமைதிப்படுத்தி அனுப்பிவைக்கிறது.
அன்றே
பச்சோந்தியைச் சந்திக்கிறது அணில். குதித்துக் குதித்து வரும் அணிலைப் பார்த்த பச்சோந்தி
உன்னால் மட்டும் அடிபடாமல் எப்படி குதிக்கமுடிகிறது என்று கேட்கிறது. அதற்கு ஒரு மந்திரம்
இருக்கிறது. அதைச் சொல்லிக்கொண்டே ஆயிரம் முறை
மரத்திலிருந்து கீழே குதிக்கவேண்டும் என்று தெரிவிக்கிறது அணில். குதிக்கும் கலையை
அறிய விரும்பிய பச்சோந்தி அக்கணமே மரத்திலேறி குதிக்கும் பயிற்சியில் ஈடுபடுகிறட்து.
ஒவ்வொரு முறையும் குதிக்கும்போது அதன் உடலில் ஏதோ ஒரு பாகத்தில் அடி படுகிறது. மீண்டும்
மீண்டும் குதித்ததும் எழமுடியாதபடி அடிபட்டுவிடுகிறது. பச்சோந்திக்கு சரியான பாடம்
கிடைத்தது என்று அணிலும் ஓணானும் சிரிக்கின்றன.
ஏழாம்
வகுப்பு படிக்கிற ஸ்ரீதுர்க்காதேவி மீன், பாம்பு, கொக்கு என்னும் தலைப்பில்
ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். ஒரு ஆற்றில்
ஒரு மீன் தன் குஞ்சுகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தது. அதே ஆற்றில் ஒரு பாம்பு தம்
குட்டிகலோடு வாழ்ந்துவந்தது. ஒவ்வொரு நாளும் பாம்பு மீன் குஞ்சுகளை ஒவ்வொன்றாகச் சாப்பிடத்
தொடங்கியது. மீன் மிகவும் வருத்தம் கொண்டது. ஒருநாள் பாம்பு வெளியே சென்றிருந்த சமயத்தில்
பசியின் காரணமாக பாம்புக்குட்டிகள் வெளியே வந்தன. அப்போது பசியோடு வந்த ஒரு கொக்கு
கரையில் நின்றிருந்தது. அந்தக் கொக்கு ஒவ்வொரு குஞ்சாகப் பிடித்துத் தின்னத் தொடங்கியது.
மீனைப்போல கொக்கு வருத்தப்படத் தொடங்கியது.
ஒன்பதாம்
வகுப்பு படிக்கிற நிஷா எலியும் தோட்டக்காரரும் என்னும் தலைப்பில்
ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். ஒரு கிராமத்தில் ஒருவர் ஒரு பெரிய தோட்டம் வைத்திருந்தார்.
அத்தோட்டத்திலேயே அவருக்குச் சொந்தமாக ஒரு வீடும் இருந்தது. தோட்டக்காரரும் அவர் மனைவியும்
அதில் வசித்துவருகின்றனர். ஒருநாள் ஒரு எலி வந்து அத்தோட்டக்காரரிடம் தான் தங்கிக்கொள்ள
ஓர் இடம் ஒதுக்கிக் கொடுக்கும்படி கேட்டது. தோட்டக்காரன் அதற்கு உடன்படவில்லை. ஆயினும்
அந்த எலிக்கு அந்த இடத்தைவிட்டு எங்கும் செல்ல விருப்பமில்லை. அதனால் அடுத்தநாள் தோட்டக்காரரிம்
மனைவியைச் சந்தித்து மீண்டும் தன் வேண்டுகோளை முன்வைத்தது. நேரிடையாக மறுப்பதற்கு மனமில்லாத
அவள் தனக்கு ஒரு ரோஜாச்செடி வேண்டுமென்றும் அதைக் கொண்டுவந்து கொடுத்தால் தங்கிக்கொள்ள
அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தது.
அடுத்த
நாள் காலையிலேயே அவள் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த எலி எங்கிருந்தோ ஒரு ரோஜாச்செடியைக்
கொண்டுவந்து நட்டுவைத்தது. மனைவி அந்த எலிக்கு
நன்றி சொல்லி தோட்டத்தில் தங்குவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார். அடுத்தநாள் விடிந்ததும்,
தனக்கொரு மல்லிகைச்செடி வேண்டும் கேட்டார்.
அதையும் எலி எங்கிருந்தோ கொண்டுவந்து கொடுத்துவிட்டது.
அந்த
எலி அங்கு வசிப்பது அந்தத் தோட்டக்காரனுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படியாவது விரட்டிவிட
வேண்டும் என்று திட்டமிட்டான். அதனால் அந்த வட்டாரத்திலேயே இல்லாத முல்லைச்செடியைக்
கொண்டுவருமாறு கேட்கும்படி மனைவியிடம் சொன்னான். அவன் வகுத்த திட்டத்தின் பின்னணி தெரியாமல்
அவளும் எலியிடம் முல்லைச்செடியைக் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டாள். எலியும் முல்லைச்செடியைத்
தேடி தோட்டத்தைவிட்டு வெளியேறியது.
அன்று
எலி தோட்டத்துக்குத் திரும்பிவரவில்லை. வெளியூருக்குச் சென்று தேடுகிறதுபோலும் என நினைத்துக்க்கொண்டாள்
தோட்டக்காரனின் மனைவி. மேலும் இரண்டுமூன்று நாட்கள் கடந்தன. எலி அப்போதும் திரும்பி
வரவில்லை. தன் திட்டம் பலித்துவிட்டது என்று உள்ளூர மகிழ்ந்தான் தோட்டக்காரன்.
ஒரு வாரத்துக்குப்
பிறகு எலி முல்லைக்கொடியை வேரோடு கொண்டுவந்து தோட்டத்தில் நட்டுவைத்தது. எலி திரும்பி
வந்ததை நினைத்து தோட்டக்காரி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். தோட்டக்காரனுக்கும் வேறு
வழி தெரியவில்லை. உள்ளே வா என்று அதை ஏற்றுக்கொண்டான்.
ஒன்பதாம்
வகுப்பில் படிக்கும் எஸ்.ஜெயஸ்ரீ எழுதிய ஒரு குட்டிக்கதை என்றொரு கதையும் இத்தொகுதியில்
உள்ளது. அருமையான அனுபவ உண்மையைக் கருவாகக் கொண்ட கதை. ஒரு ரயில் பயணத்தில் அப்பாவும்
மகனும் பிரயாணம் செய்கிறார்கள். மகன் இருபது வயது இளைஞன். ரயில் ஓடத் தொடங்குகிறது.
ஜன்னலோரமாக உட்கார்ந்திருக்கும் இளைஞன் குழந்தைக்கே உரிய பரவசத்தோடும் ஆச்சரியம் மின்னும்
கண்களோடும் வெளியுலகத்தை ஆவலோடு பார்த்துக்கொண்டு வருகிறான். ஒவ்வொன்றையும் பார்த்து
ஆரவாரத்துடன் கைதட்டி ரசிக்கிறான்.
ரயில்
முன்னோக்கிச் செல்லும்போது பின்னோக்கி நகர்வதுபோல தோற்றமளிக்கும் மரங்களின் வரிசையை
நம்பமுடியாமல் விழிமலரப் பார்க்கிறான். வானத்தில் நகரும் மேகங்கள் ஓடுவதுபோல தோற்றமளித்து
அவனை வியப்புக்குள்ளாக்குகின்றன. ஒவ்வொன்றையும் அருகிலிருக்கும் தன் அப்பாவிடம் சுட்டிக்
காட்டி சிரிக்கிறான்.
அந்தப்
பெட்டியில் அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த மற்றவர்கள் அக்காட்சியை விசித்திரமாகப்
பார்த்து சிரிக்கிறார்கள். அந்த இளைஞனின் அப்பாவிடம் ‘இவன் ஏன் இப்படி இருக்கிறான்?
முதலில் இவனை நல்ல ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள்” என்று சொல்கிறார்கள்.
“டாக்டரின் சிகிச்சையை முடித்துக்கொண்டுதான் வருகிறோம்” என்று சொல்கிறார் அவர். அவர்களுக்கு
அவர் சொல்வது புரியவில்லை. அவரையே விசித்திரத்தோடு பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு
விளக்கும் விதமாக அந்த அப்பா “குழந்தைப் பருவத்தில் அவனுக்கு கண்ணில் அடிபட்டு பார்வை
போய்விட்டது. இப்போதுதான் கண் சிகிச்சையால் அவனுக்குப் பார்வை திரும்ப வந்திருக்கிறது”
என்று சொல்கிறார். அதைக் கேட்ட பிரயாணிகள் தம் தவற்றை உணர்ந்துகொள்கிறார்கள்.
அப்போது
ரயில் ஒரு ஆற்றைக் கடந்து போகிறது. அதைப் பார்த்ததும் இளைஞன் கைதட்டியபடி அந்த இளைஞன்
“அங்கே பாருங்கள் அப்பா, ஆறு ஓடுகிறது” என்று சொல்கிறான். அப்பா மட்டுமல்லாமல், அங்கிருந்த
மற்றவர்களும் அதைக் கேட்டு புன்னகைக்கிறார்கள்.
நேரடியாக
தமிழில் எழுதப்பட்ட கதைகளோடு, வேறு சில மொழிபெயர்ப்புக்கதைகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
மாணவர்களே ஆங்கிலத்தில் எழுதி, மாணவர்களே மொழிபெயர்த்த கதைகள். அனைத்தும் பாராட்டத்தக்க
முயற்சி என்றே சொலல்வேண்டும்.
நெ.ஷ்யாம்சுந்தர்
என்னும் மாணவரும் சா.ஹரிணி என்னும் மாணவியும் தொகுப்பாசிரியராக இருந்து இச்சிறு கதைத்தொகுதியை
உருவாக்கியிருக்கிறார்கள். அவ்விருவரும் இணைந்து ஒரு பத்து வரிகளுக்கு ஒரு முன்னுரையும்
எழுதியிருக்கின்றனர். ‘நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறோம். எனவே புத்தகங்கள்
வாசிக்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியாகவே வாழ விரும்புகிறோம். ஆகவே எழுதுகிறோம்’ என்னும்
வரிகள் அம்முன்னுரையில் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வரிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியவை
என்றே சொல்லத் தோன்றுகிறது. இப்படி நுட்பமாகவும் கச்சிதமாகவும் சொல்லத் தெரிந்த இவ்விளங்கலைஞர்கள்
எதிர்காலத்தில் படைப்புலகத்தில் மிகச்சிறந்த இடத்தை அடைவார்கள் என்பது என் நம்பிக்கை.
இலக்கியத்தையும் இதயத்தையும் இணைக்கும் நுட்பத்தை உரைப்பதற்கு இதைவிட பொருத்தமான சொல்
கிடையாது.
(என் கனவின் கதை . அரசுப் பள்ளிக் குழந்தைகள்
எழுதிய கதைகள். தொகுப்பு: நெ.ஷ்யாம்சுந்தர், சா.ஹரிணி, தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி,
புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை -635307. விலை.ரூ.70)
( புக் டே இணையதளம் – 19.01.2025 )