புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் கணிதப்பிரிவில் நான் பட்டப்படிப்பு படித்தபோது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ம.இலெ.தங்கப்பா. கவிதையின்பத்தையும் வாழ்க்கையின்பத்தையும் ஒரு புள்ளியில் இணைத்துக் காட்டிய அவருடைய வகுப்புகள் என்னுடைய புரிதலின் எல்லையை விரிவாக்கின. அவருடைய வீட்டு மேசையில் ஒருமுறை தன்னுணர்வு என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். புத்தம்புதிய மிகச்சிறிய புத்தகம். எமர்சன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை பெருஞ்சித்திரனார் மொழிபெயர்த்திருந்தார். நான் அதை எடுத்துப் புரட்டியதைக் கவனித்ததும் “எமர்சன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான சிந்தனையாளர். நீ அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்” என்று சொன்னார் தங்கப்பா. நான் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன்.