பாடப்புத்தகங்களுக்கு அப்பால் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத்
தேடிப் படிக்கும் ஆர்வத்தை
எங்கள் பள்ளிப் பருவத்திலேயே
விதைத்த தமிழாசிரியர்களில் ஒருவர்
ராதாகிருஷ்ணன். ஒரு வரியைச்
சொல்லி, அவ்வரியை எங்கள்
மனத்தில் பதியவைக்க ஒரு
வகுப்பு நேரம் முழுதும்
ஏராளமான விளக்கங்களையும் கதைகளையும்
தங்குதடையில்லாமல் அடுக்கிக்கொண்டே செல்லும் ஆற்றல்
அவருக்கிருந்தது. படிப்பதனால் என்ன
பயன் என்னும் கேள்வியை
முன்வைத்து ஒருநாள் எங்களோடு
உரையாடினார் அவர். “எழுதப்பட்ட
புத்தகம் என்பது ஒரு
சிந்தனை. அதைப் படிக்கும்போது
அந்தச் சிந்தனை நம்மை
வந்தடைகிறது. அதைப்பற்றி யோசிப்பதன்
வழியாகவும் விவாதிப்பதன் வழியாகவும்
நாம் அதை நம்முடைய
சிந்தனையாக ஆக்கிக்கொள்கிறோம். பிறகு
நாம் அதைப்பற்றி மற்றவர்களோடு
பகிர்ந்துகொள்கிறோம்” என்றார். தொடர்ந்து
“நம் மனம் ஒரு
பெரிய அணைக்கட்டுபோல. ஒரு
பக்கம் ஆற்றிலிருந்து தண்ணீர்வரத்தும் இருக்கவேண்டும். இன்னொரு
பக்கம் மதகிலிருந்து வெளியேறிச்
சென்றபடியும் இருக்கவேண்டும்” என்று
சொன்னார்.