நாள் முழுக்கப் பார்த்தாலும் இன்னும் கொஞ்சநேரம் பார்க்கலாமே என்று தோன்றவைக்கிற அளவுக்கு அழகு நிறைந்தவை ஹொய்சளர் காலத்துச் சிற்பங்கள். ஒரே ஒரு சதுர அடி பரப்பளவுள்ள கற்களில்கூட கச்சிதமும் நளினமும் சொக்கவைக்கிற அழகும் பொருந்திய சிற்பங்களைச் செதுக்கிவைத்திருக்கிறார்கள். பலவிதமான நிலைகளில் அவர்கள் செதுக்கியருக்கும் நடனநங்கையர்களுடைய தோற்றத்தின் வசீகரத்துக்கு ஈடு இணையே இல்லை. மல்லிகார்ஜூனனுக்கும் லட்சுமிநாராயணனுக்கும் எழுப்பப்பட்ட கோயில்களில் கருவறை தவிர வேறொன்றும் வேறுபாடில்லை. தூண்களிலும் சுற்றுச்சுவர்களிலும் எங்கெங்கு நோக்கினும் சிற்பங்களே காணக்கிடைக்கின்றன. என் சுவையை அறிந்துவைத்திருக்கும் நண்பரொருவர் தன்னுடைய கிராமத்தில் உள்ள ஹொய்சளர் காலத்துக்கு கோவிலொன்றை காண்பதற்காக அழைத்துச் சென்றார்.
Wednesday, 26 April 2017
காலம் எழுப்பும் அடையாளம் - இரா.மீனாட்சியின் "கோட்டையும் கோயிலும்"
கரிகாலன் கட்டிய அரண்மனையும் கோட்டையும்
இன்று இல்லை. ஆனால் அந்த அரசன் கட்டியெழுப்பிய
கல்லணை நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நின்றுகொண்டிருக்கிறது. அதன் வழியாக அவன் நினைவுகளையும் மக்கள் மனம் சுமந்துகொண்டிருக்கிறது. கரிகாலன் மக்கள்மீது கொண்ட அன்புக்கும் அக்கறைக்கும்
சாட்சி அந்த வரலாற்றுச்சின்னம். அன்பில்லாமல்
ஆட்சி செய்யமுடியாது. முறைசெய்து காப்பாற்றும்
மன்னவர் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்பது வள்ளுவர் வாக்கு. அத்தகையவன் காட்சிக்கு
எளியவனாக இருப்பான். கடுஞ்சொல் இல்லாதவனாக
இருப்பான். காதுபட தன்னை மற்றவர்கள் இழிவாகப்
பேசினாலும் கூட பொறுத்துக்கொள்ளும் பண்புள்ளவனாகவும் விளங்குவான். இயற்றல், ஈட்டல், காத்தல், காத்ததை வகுத்தல் அனைத்தையும் முறையாகச்
செய்பவனாகவும் அவன் இருப்பான்.
Saturday, 22 April 2017
அ.முத்துலிங்கம்: புதிதைச் சொல்பவர், புதிதாகச் சொல்பவர்
ஒருநாள் ஹளபீடு சிற்பங்களைப் பார்த்துவிட்டு ஒரு கல்மண்டபத்துக்கு அருகில் ஒதுங்கி நின்றேன். எனக்குப் பக்கத்தில் வேறொரு தூணில் சாய்ந்தபடி ஒரு வெளிநாட்டுக்காரர் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்தவாக்கில் தன் கேமிராவைத் திருப்பி சற்று தொலைவில் தெரிந்த ஓர் அணிலை விதவிதமான கோணங்களில் படமெடுத்தபடி இருந்தார். அணில் நகரும் திசையிலெல்லாம் அவருடைய கேமிராவின் கோணமும் மாறியபடி இருந்தது. அணில் எங்கோ ஓடி மறைந்துவிட, அவரும் படம் பிடிப்பதை நிறுத்தி கேமிராவை மூடியபடி திரும்பினார். நான் அவரையே கவனிப்பதையே பார்த்துவிட்டு புன்னகைத்தார்.
Tuesday, 18 April 2017
அசோகமித்திரன் : என்றென்றும் வாழும் கலைஞன்
கல்லூரியில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்திருந்த
நேரம். ஒரு ஞாயிறு அன்று காலை நேரத்தில் எங்கள் வீட்டருகே இருந்த நூலகத்தில் செய்தித்தாள்
படிப்பதற்காகச் சென்றிருந்தேன். ஒரு மணி நேரத்தில் செய்தித்தாட்களையும் புதிய வார இதழ்களையும்
படித்துவிட்டு, என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்த மேசைகள் மீது பார்வையைப் படரவிட்டேன்.
அங்கிருந்த நூலகர் எனக்கு மிகவும் பழக்கமானவர். ஒரு பத்து நிமிடம் தனக்கு எதிரில் போடப்பட்டிருந்த
நாற்காலியில் வந்து உட்கார்ந்திருக்கும்படி சொல்லிவிட்டு தேநீர் அருந்தச் சென்றார்.
அந்த நேரத்தில் யாரேனும் வாசகர்கள் வந்துவிட்டால், அவர்களுடைய கேள்விகளுக்குப் பொருத்தமான
பதில்களைச் சொல்லி அவர் வரும்வரைக்கும் அப்படியே உரையாடலை இழுக்கவேண்டும். அதுதான்
என் வேலை.
Friday, 14 April 2017
எட்டுச் சிறுகதைகள்
2016 ஆம் ஆண்டு குறிப்பேட்டை
முடித்து அட்டைப்பெட்டிக்குள் வைக்கும் முன்பாக ஒருமுறை மெதுவாகப் புரட்டினேன். இந்த
ஆண்டில் படித்த சில நல்ல சிறுகதைகளின் பெயர்களையும் அவற்றைப்பற்றிய சிறுகுறிப்புகளையும்
எழுதிவைத்திருந்த பகுதியில் ஒருகணம் பார்வை படர்ந்தது. ஒவ்வொரு குறிப்பையொட்டியும்
மனத்துக்குள் விரிவடையும் கதையின் காட்சிகளை அசைபோடும் அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.
ஓராண்டு கடந்த நிலையில் சில முக்கியமான அசைவுகளும் தருணங்களும் மட்டுமே நினைவில் பதிந்திருக்கின்றன.
ஒரு கிளையைப் பற்றிக்கொண்டு இன்னொரு கிளைக்குத் தாவுவதைப்போல இந்த நினைவுகளின் துணையோடு
கதைகளின் மையத்தைத் தொட விழையும் ஆசையே இப்பதிவு.
Sunday, 9 April 2017
பறவையாக முடியாத மானுடப்பறவை - திரிசடையின் "ஜோடிக்காகம்"
எங்கள் கிராமத்துக்கு நுழைவாயிலாக இருந்த கிராமணியாரின் உணவு விடுதி ஒருபோதும் மறக்கமுடியாத சித்திரம். ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே அந்தக் கடையைத் திறந்துவிடுவார்கள். இட்லிகளும் பூரிகளும் கொண்ட அகலத்தட்டுகளை ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து பலகார அடுக்குகளில் வைப்பார்கள். திருநீறு துலங்க கடைக்குள் நுழையும் பெரிய கிராமணி கல்லாப்பெட்டிக்கு மேலிருக்கும் தெய்வப்படங்களை தொட்டு வணங்கிவிட்டு நாலைந்து இட்லிகளை துண்டுதுண்டாகக் கிள்ளி ஒரு தட்டில் நிரப்பிக்கொண்டு வாசலுக்குச் செல்வார்.
Labels:
தமிழ்க்கவிதை,
திரிசடை,
ஜோடிக்காகம்
கருணையின் படிமம் - பிரமிளின் "முடிச்சுகள்"
ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியும் அல்ல
பல என்னும் திருக்குறளில் தொனிக்கும் ஆற்றாமையையும் துயரத்தையும் நாம் புரிந்துகொள்ள
முயற்சி செய்யவேண்டும். வாழ்க்கையை அழகுறவும்
பயனுறவும் வாழ்வது எப்படி என்று தெரியாதவர்களுக்கு பல கோடி விஷயங்கள் முக்கியமானவையாகப்
படுகின்றன. அவற்றில் ஒன்றுகூட நிலையானதல்ல
என்ற உண்மையைப் புரிந்துகொள்ள இயலாத அறியாமையால், கோடி கோடியென்று எப்போதும் அலைந்துகொண்டே
இருக்கிறது நம் மனம். இங்கே கோடி என்பது செல்வம்
மட்டுமல்ல. பட்டம், பதவி, வீண்பெருமை, சாதிப்பித்து,
இனப்பித்து, மதப்பித்து, மொழிப்பித்து, குடும்பப்பெருமைப்பித்து, அகங்காரப்பித்து,
அதிகாரப்பித்து என ஏராளமானவை இந்தக் கோடிக்குள் அடக்கம். நிலையற்ற ஒன்றுக்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தை
நிலையான வாழ்வின் அழகுக்குக் கொடுfப்பதற்கு நம் மனம் தயக்கம் காட்டுகிறது.
Labels:
தமிழ்க்கவிதை,
பிரமிள்,
முடிச்சுகள்
Subscribe to:
Posts (Atom)