Home

Sunday, 18 February 2018

கதவு திறந்தே இருக்கிறது - வேட்டை என்னும் மெய்ஞானம்



இரு ஆண்டுகளுக்கு முன்பாக கேதம்பாடி ஜத்தப்பா ரை என்னும் கன்னட எழுத்தாளர் மறைந்துபோனார். துளு, கன்னடம் என இரு மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர் அவர். துளு மொழிக்கான ஓர் அகராதியை பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் உருவாக்கியபோது, ஆறாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அவரையும் பக்கத்திலேயே வைத்துக்கொண்டே உருவாக்கினார்கள். புழக்கத்திலிருந்து மறியத் தொடங்கிய பல சொற்களை அவர் தன் நினைவிலிருந்தே எடுத்துச் சொன்னார். அந்த அளவுக்கு மொழியில் தோய்ந்தவர். 1916ல் பிறந்த அவர் இன்னும் சில மாதங்கள் வாழ்ந்திருந்தால் நூறாண்டு கண்ட எழுத்தாளராக விளங்கியிருப்பார். சாகித்திய அகாதெமி நிறுவனத்தின் தலைவராக யு.ஆர்.அனந்தமூர்த்தி பதவி வகித்த காலத்தில் அவருக்கு பாஷா சம்மான் விருதை அளித்து கெளரவித்தார். அந்த விருதை அவருடைய வீட்டுக்கே சென்று வழங்கி விழா கொண்டாடினார் அனந்தமூர்த்தி. முப்பதாண்டுகளுக்கு முன்பாக தற்செயலான ஒரு தருணத்தில்தான் நான் அவரைப்பற்றி அறிந்துகொண்டேன். அது ஒரு சுவாரசியமான கதை.


எண்பதுகளின் இறுதியில் கேபிள் வழியாக இணைக்கமுடியாத கர்நாடக ஊர்களுக்கிடையில் தொலைபேசித் தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக காட்டுப்பகுதிகளில் நுண்ணலைக்கோபுரங்களை எழுப்பிக்கொண்டிருந்தோம். அதற்குப் பொருத்தமான இடங்களைத் தேர்ந்தெடுக்கும் பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதையொட்டி மேற்குமலைத் தொடர்ச்சியோரம் அமைந்திருக்கும் பல வனப்பகுதிகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகள் கிடைத்தன.  

ஒருமுறை புத்தூருக்கு அருகில் உள்ள சுப்ரமண்யா என்னும் இடத்துக்குப் போயிருந்தேன். என்னோடு ஒரு வழிகாட்டி வந்திருந்தார். அவர் பெயரும் சுப்ரமண்யா. தமிழ்க்கடவுள் முருகனே இங்கு சுப்ரமண்யா என்னும் பெயரில் அழைக்கப்படுகிறார். வனப்பகுதி வழியாகச் செல்லும் குமாரதாரா என்னும் ஆற்றங்கரையில் அழகானதொரு ஆலயம் உள்ளது. கருடனை அஞ்சி வனப்பகுதியில் ஒளிந்திருந்த வாசுகி என்னும் பாம்பைக் காப்பாற்றிய முருகன் வணக்கத்துக்குரிய தெய்வமாக இங்கு வழிபடப்படுகிறார். அந்த மலைக்கே குமாரபர்வதம் என்றுதான் பெயர். அதற்கு எதிரில் இருந்த மலையைச் சுட்டிக்காட்டிய வழிகாட்டிஅங்க பாருங்க சார், அதுதான் சேஷபர்வதம். உத்துப் பார்த்தீங்கன்னா ஒரு ஆறுதலைப் பாம்பு படமெடுத்து நிக்கறமாதிரி இருக்கும்என்று சொன்னார். திரும்பிப் பார்த்தபோது ஒரு கோணத்தில் காடு அடர்ந்த அந்தக் குன்றின் தோற்றம் அப்படித்தான் காட்சியளித்தது.

மிகவும் குறுகலான சாலை என்பதால் எங்கள் வாகனம் மெதுவாகத்தான் செல்ல முடிந்தது. காடுகளைப்பற்றி வழிகாட்டி பல கதைகளைச் சொல்லிக்கொண்டே வந்ததால் பயண அலுப்பே தெரியவில்லை.

இந்த ரோடு கூட அஞ்சி பத்து வருஷத்துக்கு முன்னால  போட்ட ரோடுதான் சார். அதுக்கு முன்னால வெறும் மண் சாலைதான். நான் பள்ளிக்கூடம் படிக்கற சமயத்துல இங்க கூட்டம்கூட்டமா நடந்துதான் வருவோம். இங்க வந்து போவறதுங்கறது, அந்த காலத்துல எங்களுக்கு ஒரு பிக்னிக் மாதிரி”. அவர் உற்சாகத்தோடு பேசினார்.

இந்தப் பக்கம் நிறைய மிருக நடமாட்டம் உண்டு சார். புலி, யானை, மான், காட்டெருமையெல்லாம் இருக்கும். ரெண்டுமூணு தரம் நான் யானைங்க கூட்டமா போறத ரொம்ப தூரத்துலேருந்து பார்த்திருக்கேன்.”

இப்பவும் இருக்குமா?” என்று ஆர்வத்தோடு கேட்டேன். ”கண்டிப்பா இருக்கும் சார். ஆனால் நம்ம பார்வையிலேருந்து ரொம்ப தள்ளி நடமாடிட்டிருக்கும்என்றார். அதற்குப் பிறகு எந்தப் பக்கம் திரும்பினாலும் எங்கோ ஒரு திசையிலிருந்து யானை அசைந்துவருவதுபோல தோன்றத் தொடங்கியது.

அந்தக் காலத்துல இங்க வெள்ளைக்காரங்க தங்கறதுக்குன்னு ஒரு பங்களா இருந்தது. வேட்டையாடறதுக்காக மங்களூருலேருந்து இங்க வந்து தங்குவாங்க. நம்ம ஊரு வேட்டைக்காரங்க அவங்களுக்கு துணையா போய் வருவாங்க.”

அவர் சொன்ன கதைகள் ஆர்வமூட்டுவதாக இருந்தன.

எங்க பெரியம்மா வழியில சொந்தமான ஒரு தாத்தா இப்பவும் விட்டல்ல இருக்காரு. பெரிய வேட்டைக்காரர். கதை சொல்ல ஆரம்பிச்சாருன்னா மணிக்கணக்குல சொல்லிட்டே இருப்பாரு. அதயெல்லாம் அவரு எழுதனா நல்லா இருக்குமேன்னு தூண்டிட்டே இருந்தோம். அந்த வேகத்துல அவரும் எழுத ஆரம்பிச்சிட்டாரு. எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். அந்த புத்தகத்துக்காக பெங்களூருல அவருக்கு அவார்ட்லாம் கொடுத்தாங்க.” . பேச்சு புத்தகத்தைப்பற்றித் திரும்பியதால் நான் ஆர்வத்தோடு கவனிக்கத் தொடங்கினேன்

அனந்தமூர்த்தி மாதிரி பெரிய எழுத்தாளர்ங்க எல்லாம் பாராட்டி லெட்டர் போட்டதா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. அறுபது வயசுக்கு மேல எழுத ஆரம்பிச்சி, மொதல் புத்தகத்துக்கே அவார்டும் வாங்கிட்டாரு அவர். அந்த வேகத்துல இன்னும் ரெண்டு மூணு புத்தகமும் எழுதிட்டாரு

ஆச்சரியம் தாங்காமல் அவர் பேரு?” என்று உடனே கேட்டேன்.

ஜத்தப்பா தாத்தான்னு சொல்வோம். முழு பேரு கேதம்பாடி ஜத்தப்பா ரை.”

அவர நாம பார்க்கமுடியுமா?” என்றேன் வேகமாக. என் விருப்பத்தைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ந்தார். வேலை முடிந்து திரும்பிச் செல்லும் வழியில் சந்தித்துவிட்டுச் செல்லலாம் என்று சொன்னார்.  சர்வே வேலைகளை முடித்துக்கொண்டு அவருடைய வீட்டை அடைந்தபோது பொழுது சாய்ந்துவிட்டது. ஆனால் அவர் வீட்டில் இல்லை. சொந்தக்காரர் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். வழிகாட்டி என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சுவரெங்கும் காணப்பட்ட படங்களை நான் சுற்றிச்சுற்றிப் பார்த்தேன். ஜத்தப்பாவின் புத்தகமொன்றை அவர் அறையிலிருந்து கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்.

வேட்டை நினைவுகள் என்னும் தலைப்பையுடைய கைக்கு அடக்கமான அந்தப் புத்தகத்தை சில நாட்களிலேயே படித்துவிட்டேன். அடுத்தமுறை சுப்ரமண்யா செல்லும்போது அவரைச் சென்று பார்க்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு கூடிவரவில்லை. நாங்கள் தயாரித்திருந்த திட்டவரைவுகளை செலவைக் காரணம் காட்டிஇன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருக்கலாம்என்று குறிப்பெழுதி அரசு நிராகரித்துவிட்டது.

ஜத்தப்பா அடிப்படையில் புராணச் சொற்பொழிவாளர். பேசிப்பேசி அவருக்கு அழகானதொரு மொழி கூடிவந்திருந்தது. எதையும் ஆழமானதொரு ஈடுபாட்டோடும் கவர்ந்திழுக்கும் சொல்வன்மையோடும் முன்வைக்கும் ஆற்றலும் இருந்ததால் அவர் எழுத்தாளராகவும் வெற்றிபெற முடிந்தது. ஒவ்வொரு கட்டுரையும் காட்டுக்குள் வேட்டையாடச் சென்றபோது   கிட்டிய அனுபவங்களை முன்வைப்பவையே. தன் மொழியின் வலிமையால் நாமும் அவரோடு பயணம் செய்வதுபோன்ற உணர்வை அந்தப் புத்தகத்தில் ஜத்தப்பா உருவாக்கிவிடுகிறார்.

ஏராளமான படைப்பாக்கங்களை கன்னடத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கும் ராமச்சந்திரன் ஜத்தப்பாவின்வேட்டை நினைவுகள்நூலை  ’ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள்என்னும்  தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டதஒ ஒட்டி, இந்தியா முழுக்க அந்தப் புத்தகம் கவனம் பெற்றது. ஜெயசாந்தியின் தமிழாக்கத்தில் நேஷனல் புக் டிரஸ்ட் அதை 2005ல் வெளியிட்டது.

ஜத்தப்பாவின் அனுபவக்குறிப்புகள் வெறும் வேட்டையனுபவங்களை மட்டும் விவரிக்கவில்லை. கடந்த நூற்றாண்டின் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் வாழ்ந்த மக்களுடைய வாழ்க்கை முறையையும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் அந்தப் பகுதியில் வசித்த மக்களுக்கும் இருந்த தொடர்பையும் ஒவ்வொரு கட்டுரையிலும் குறுக்குவெட்டுத் தோற்றக் காட்சிகளாக எழுதியிருக்கிறார் ஜத்தப்பா.

ஜத்தப்பாவின் தாத்தாவுக்கும் மங்களூரில் வசித்த ஆங்கிலேயக் கலெக்டருக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. காட்டில் வேட்டையாடுவதற்காக கடிதம் போட்டு கலெக்டரை வரவழைத்து  அழைத்துச் செல்லும் அளவுக்கு அந்த நெருக்கம் அமைந்திருக்கிறது. அவர் அழைப்பை ஏற்று கலெக்டர் குடும்பத்தோடு வருகிறார். அவர் தங்குவதற்காக விருந்தினர் மாளிகை ஏற்பாடு செய்யப்படுகிறது. உலர்ந்த புல்மெத்தை விரிக்கப்பட்ட மாட்டுவண்டியிலும் குதிரை வண்டியிலும் அவர்கள் வருகிறார்கள். ஊர்க்காரர்கள் சமைத்தளித்த சைவ, அசைவ உணவுகளை அவர்கள் விருப்பத்தோடு உண்கிறார்கள். நன்கு ஓய்வெடுத்த பிறகு, மாலைப் பொழுதில் வேட்டைக்குச் செல்கிறார்கள். வாட்கள், அம்புகள், துப்பாக்கிகளோடு அவர்கள் காட்டுக்குள் நடக்கிறார்கள். அவர்களோடு வேட்டை நாய்கள், அவற்றைக் கையாளத் தெரிந்த ஆட்கள், தப்படித்து சத்தம் எழுப்பும் ஆட்கள் என ஒரு குழுவே அவர்களோடு செல்கிறது.

ஜத்தப்பாவுடைய தாத்தா வில்லைக் கையாளும் ஆற்றல் உள்ளவர். தன்னால் ஐம்பது மீட்டர் தொலைவில் உள்ள விலங்கைக் குறிபார்த்து அம்பெய்து கொல்லமுடியும் என்று சொல்வதை நம்பாத ஆங்கிலேய அதிகாரி தானாகவே ஒரு மரத்தில் ஓர் அடையாளத்தை குறித்துவிட்டு, அந்தப் புள்ளியை நோக்கி ஐம்பது மீட்டர் தொலைவிலிருந்து அம்பெய்யும்படி சொல்கிறார். ஒரே வாய்ப்பில் அந்த இலக்கை அவருடைய அம்பு பாய்ந்துசென்று தாக்கிவிடின், பதினைந்து ரூபாய் பரிசளிப்பதாகச் சொல்கிறார் கலெக்டர், தாத்தாவின் அம்பு மறுகணத்திலேயே அந்தப் புள்ளியைத் தொட்டு நிற்கிறது. சொல் மாறாத அதிகாரியும் பதினைந்து ரூபாயை அன்பளிப்பாக வழங்குகிறார். இருவரும் தனித்தனி குழுக்களாகச் சென்று காட்டுப்பன்றிகளையும் மான்களையும் வேட்டையாடுகிறார்கள். ஒரு மூங்கிலில் காட்டுக்கொடிகளால் அவற்றைக் கட்டி பத்துப் பேர் சுமந்து செல்கிறார்கள். மாளிகைக்கு அருகில் அவை அறுக்கப்பட்டு, வேட்டைக்குழுவிலிருந்த அனைவர்க்கும் இறைச்சி பகிர்ந்தளிக்கப்படுகிறதுஒரு பங்கு இறைச்சியை சுத்தம் செய்து அங்கேயே பாத்திரங்களுக்கு ஏற்பாடு செய்து சமைத்து உண்கிறார்கள். அதிகாரியும் குடும்பத்துடன் அவர்களுடன் சேர்ந்து உண்ணுகிறார். விலங்குகளை அறுக்கும் முன்பும் சமைக்கும் முன்பும் உண்ணத் தொடங்குவதற்கு முன்பும் அனைவரும் கூடிச் செய்யும் பிரார்த்தனைகளையும் படையல்களையும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார் அதிகாரி. தாத்தாவின் குறிபார்த்துச் சுடும் திறமையை மெச்சி, அவருக்கு தன்னுடைய உரிமமுள்ள துப்பாக்கியை அன்பளிப்பாகக் கொடுத்துவிடுகிறார். அந்தத் துப்பாக்கியை வைத்துக்கொள்ளும்படி சிறுவனான ஜத்தப்பாவிடம் அளிக்கிறார் தாத்தா. மானசிகமாக அன்றுமுதல் தன்னையும் ஒரு வேட்டைக்காரனாக நினைத்துக்கொள்கிறார் ஜத்தப்பா.

தாத்தாவின் சாதனையை நேருக்குநேர் பார்த்த உற்சாகத்தில் ஒரு விடுமுறை நாளில்  யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தன்னுடைய தோழனுடன் காட்டுக்கு வேட்டையாடச் சென்று காட்டுக்கோழிகளைச் சுட்டு வீழ்த்துகிறார். விளையாட்டுபோல இப்படி இளமையில் அவர் மேற்கொண்ட பயிற்சிகளே பின்னாளில் அவரை ஒரு வேட்டைக்காரனாக வளர்த்தெடுத்தன. தேர்வு எழுதாததால் படிப்பு தடைபடுகிறது. வேட்டையில் அவருக்கிருந்த ஆர்வம் அவர் வாழ்வின் திசையையே மாற்றிவிடுகிறது.

சின்னச்சின்ன விலங்குகளைத் தேடிச் சுட்டு பொழுதுபோக்கிக்கொண்டிருந்த ஜத்தப்பாவுக்கு ஒரு புலியையே வேட்டையாடி வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்ததை ஒரு புனைகதையை எழுதிச் செல்லும் போக்கில் ஒரு அத்தியாயம் முழுதும் விவரித்திருக்கிறார். அவருடைய நண்பனின் கிராமத்தில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடும் புலிக்கு பலர் தொடர்ந்து பலியாகிக்கொண்டே இருந்தார்கள். நண்பனுக்கு உதவும் எண்ணத்தில் தாத்தாவின் துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்கிறார் ஜத்தப்பா. அன்று இரவு வேட்டைக்குச் செல்வதாகத் திட்டம். ஆனால் அவர்கள் கிளம்புவதற்கு முன்பாக புலி ஒரு வீட்டில் புகுந்து விடுகிறது. அந்த வீட்டில் தன் குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு வந்த ஒரு அம்மா, தன் குழந்தையைத்தான் புலி இழுத்துச் சென்றுவிட்டது என அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். ஜத்தப்பாவும் அவருடைய குழுவினரும் அங்கே ஓடுகிறார்கள். புலி வீட்டுக்குள் புகுந்தது உண்மை. ஆனால் புலி குழந்தையை அணுக முடியவில்லை. வீட்டுக்குக் காவலாக இருந்த நாய்க்கும் புலிக்கும் மோதல் உருவாக, நாயை விரட்டிச் செல்கிறது புலி. இருளில் பாதை தெரியாமல் இரண்டும் அருகிலிருந்த தரைக்கிணற்றுக்குள் விழுந்துவிடுகின்றன. உறுமல் சத்தத்தை வைத்துத் தேடிச் செல்லும் நண்பர்கள் இறுதியில் அதைக் கண்டுபிடிக்கிறார்கள். நண்பர்கள் கிணற்றுக்குள் பாய்ச்சிய வெளிச்சத்தில் அந்தப் புலியைச் சுட்டு வீழ்த்துகிறார் ஜத்தப்பா. அவருடைய முதல் புலிவேட்டை. இறந்த புலியின் கால்களை உறுதியான ஒரு பெரிய கயிற்றில் கட்டி மேலே இழுக்கப்படுகிறது. பன்னிரண்டு அடி நீளமுள்ள வயதான புலி அது. உடல் வலிமை குன்றியிருந்ததால் காட்டுக்குள் வேட்டையாடி உண்ண முடியாமல் வீடுகளை நோக்கி வந்துவிட்டது. இறந்துபோன புலியை ஒரு மூங்கிலில் கட்டி ஊருக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அனைவரும் பார்க்கும்படியான இடத்தில் வைக்கிறார்கள்புலியை வேட்டையாடிய வீரனென்று ஜத்தப்பாவை அனைவரும் பாராட்டுகிறார்கள். அவருடைய தந்தை மட்டும் படித்து ஒரு நல்ல வேலைக்குப் போகக்கூடும் என நினைத்த மகனுடைய வாழ்வின் திசை இப்படி மாறிவிட்டதே என கவலையில் பேசாமலேயே விலகிச் சென்றுவிடுகிறார்.

ஒருமுறை ஜத்தப்பாவின் தமக்கை வாழ்க்கைப்பட்டிருந்த கிராமத்தில் புலி புகுந்து தமக்கையின் வீட்டுக்கொட்டிலில் கட்டப்பட்டிருந்த பசுவைக் கொன்றுவிடுகிறது. உடனே ஏற்கனவே ஒரு பசுவைக் கொன்று பிரபலமாகிவிட்ட தம்பிக்குத் தகவல் அனுப்பி வரவழைக்கிறாள் அவள்.   பதினாலு மைல் தொலைவில் இருந்த அக்கிராமத்துக்கு துப்பாக்கியோடு சென்று சேர்கிறார் ஜத்தப்பாபசுவை புலி கொன்றுவிட்டாலும் ஊரார்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்டு புலி தப்பித்து ஓடிவிடுகிறது. கொன்ற பசுவை உண்ணுவதற்காக புலி மறுபடியும் அங்கு வரக்கூடும் என்பதால், அத்தருணத்தில் அதை வேட்டையாடிக் கொல்லவேண்டும் என திட்டம் தீட்டப்படுகிறது. பசு இறந்து கிடந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு மரத்தின் உச்சியில் ஒரு பரணை அமைக்கிறார்கள். பசுவின் கழுத்தில் ஒரு மணி கட்டப்படுகிறது. புலி பசுவைத் தீண்டும் தருணத்தில் அந்த மணி ஓசையெழும். அதைக் கேட்டதும் மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒருவர் புலியின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சவேண்டும். அந்த வெளிச்சத்தில் பரணில் நின்றிருப்பவர் புலியைச் சுடவேண்டும் என்பதுதான் திட்டம்.

அமைதியான பின்னிரவு நேரத்தில்தான் புலி வெளிப்படும் நேரமென்பதால் அந்த நேரத்துக்கு அனைவரும் சென்று காத்திருக்கிறார்கள். ஆனால் புலிக்கு மாறாக அந்த இடத்துக்கு ஒரு நரி வருகிறது. மணியோசை எழாமல் சலசலப்பு மட்டும் கேட்பதை உணர்ந்து அவர்களிடையே குழப்பம் பரவுகிறது. அதுவரை வீரம் பேசிய நண்பர்கள் நடுங்கி அச்சத்தில் உறைந்துவிடுகிறார்கள். ஒருவன் அச்சத்தில் மர உச்சியிலிருந்து சிறுநீர் கழித்துவிடுகிறான். மெல்ல கிழே இறங்கி வந்து பார்த்தபோதுதான், வந்திருப்பது நரி என்பது புரிகிறது. நரியைக் கண்டே நடுங்கும் இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று குழம்புகிறார் ஜத்தப்பா. அனைவரும் கீழே இறங்கி ஓடிவிடுகிறார்கள். ஜத்தப்பா வீட்டுக்குத் திரும்பி வேறொருவரை அழைத்துக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் செல்கிறார். இந்த முறை திட்டம் மிகச்சரியாக செயல்படுத்தப்படுகிறது. பசுவை உண்ண வந்த புலி கொன்று வீழ்த்தப்படுகிறது.
ஜத்தப்பா உணர்ச்சி பொங்க சித்தரிக்கும் ஒவ்வொரு சம்பவமும் அந்தச் சம்பவத்தை நம் ஆழ்மனத்தில் மீண்டுமொரு முறை நிகழ்த்திக் காட்டுகிறது. ஆங்கிலேயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கையோடு தம் இளம்பெண்ணை அவரோடு வேட்டைக்கு அனுப்பிய சம்பவம் மிகமுக்கியமான ஒன்று. குலவழக்கப்படி தாய்மாமனுடைய சொத்து அவருக்குக் கிடைக்கிறது. நாவூர் என்னும் இடத்தில் அடர்ந்த கானகத்தில் அந்தச் சொத்து இருந்தது. குதிரைமூக்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டிய கிராமம் அது. ஏற்கனவே அந்நிலங்களை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தவர் தங்கியிருந்த பங்களா அவருக்காக தயாராகவே இருந்தது. நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட அந்த இடத்தில் வயல்வெளிக்கான இடம் குறைவாகவே இருந்தது. பெரும்பாலான இடங்கள் மூங்கில் தோப்புகளால் சூழப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் களைந்து விவசாய நிலமாக மாற்றவேண்டியிருந்தது. இதனால் அவருக்கு வேட்டையாடும்  வாய்ப்புகள் நிறைய கிடைத்தன.

அங்கு வசித்த தருணத்தில் தற்செயலாக அவருக்கு ஓர் ஆங்கிலேய அதிகாரியின் மகனுடைய நட்பு கிடைக்கிறது. இருவரும் சமவயதினர் என்பதால் எளிதில் நெருங்கிப் பழகத் தொடங்கிவிடுகிறார்கள்இருவருக்குமான பொது ஆர்வம் வேட்டை. லண்டனிலிருந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம் இருவரும் சேர்ந்து அலைந்து வேட்டையாடுகிறார்கள். படிப்பை முடித்துக்கொண்டு இராணுவத்தில் பணியாற்றும்போது அவன் இறந்துவிடுகிறான். அவன் தந்தை அவருக்கு ஒரு கடிதம் எழுதி அந்தத் தகவலைத் தெரிவிக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு அந்த அதிகாரியின் மகளிடமிருந்து ஒரு கடிதம் அவருக்கு வருகிறது. மகனுடைய மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத தன் பெற்றோர் மனமுடைந்து அமைதியின்றி இருப்பதாகவும் ஒரு மாற்றத்துக்காக அவர்களை வனப்பகுதிக்கு வந்து சில நாட்கள் தங்கியிருக்குமாறு அழைக்கும்படி அவள் எழுதியிருக்கிறாள். அந்தத் திட்டத்துக்கு நல்ல பயன் கிடைக்கிறது. அவளும் பெற்றோர்களும் அங்கே வந்து சேர்கிறார்கள். தன் பங்களாவிலேயே அவர்கள் தங்க ஏற்பாடு செய்து தருகிறார் அவர். மலையேற்றம், காட்டு உலா என இன்னொரு உலகம் அவர்களுடைய மனபாரத்தைக் குறைக்கிறது.

ஒருநாள் அந்தப் பெண் தன்னை வேட்டைக்கு அழைத்துச் செல்லும்படி அவரிடம் கேட்டுக்கொள்கிறாள். அவரும் அதற்குச் சம்மதிக்கிறார். அந்த உரையாடலின்போதுதான் அவர் வேட்டையைப்பற்றிய ஒரு உண்மையைத் தெரிந்துகொள்கிறார். வேட்டையின்போது ஒருபோதும் பெண்விலங்குகளைக் கொல்லக்கூடாது. ஒருவேளை பிழையாக அப்படி கொல்ல நேர்ந்தால் அதற்குரிய தண்டனைத்தொகையை செலுத்தவேண்டும். அதன் காரணமாக அவளுடைய பெற்றோர் வேட்டையாடும் சமயத்தில் சுடப்படுவது ஆணா பெண்ணா என்பதை உறுதி செய்துகொள்ளாமல் வேட்டையாடவேண்டாம் என்று திரும்பத்திரும்ப நினைவூட்டி அனுப்பிவைக்கிறார்கள்.

இருவரும் காட்டுக்குள் நெடுந்தொலைவு செல்கிறார்கள். ஒரு பள்ளத்தாக்கில் காட்டெருமைகள் கூட்டமாக உட்கார்ந்து அசைபோடுவதைப் பார்க்க நேர்கிறது. அதைக் கண்டதும் அந்தப் பெண்ணைப் பார்த்து அவற்றில் ஒன்றைச் சுடும்படி சொல்கிறார் ஜத்தப்பா. ஆனால் அவற்றில் எது ஆண், எது பெண் என எப்படிப் பிரித்தறிவது என்று தெரியாமல் அவள் தடுமாறுகிறாள். விளக்கம் கொடுக்க பேசத் தொடங்கினால், பேச்சுச்சத்தம் கேட்டு அவை விலகி ஓடக்கூடும் என்பதால் பார்வையாலேயே அவற்றை மதிப்பிட்ட பிறகு கூட்டத்திலிருந்து விலகி தனியாக இருக்கும் ஓர் எருமையைச் சுடும்படி சுட்டிக் காட்டுகிறார். அவளோ ஒருவேளை அது பெண்ணாக இருந்தால் என்ன செய்வது என விவாதத்தில் இறங்குகிறாள். அதற்குள் ஏதோ சத்தம் கேட்டு அவை கலையத் தொடங்குகின்றன. வேறு வழியில்லாமல் நேரத்தை வீணாக்காமல் அந்தக் காட்டெருமையை தன் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திவிடுகிறார் ஜத்தப்பா. அதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள் அவள். பெண் எருமையை அநியாயமாகச் சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சுமத்துகிறாள் அவள். அவரோ அது ஆண் எருமையே என்று அமைதியாகச் சொல்கிறார். அதைக் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லாத அவளுக்கும் அவருக்குமிடையேயான விவாதம் மேலும் வலுக்கிறது. இறுதியில்  இறந்துகிடக்கும் விலங்குக்கு அருகில் ஒரு ஆளை அனுப்பி அதன் பீஜத்தை அறுத்துவந்து அவள் முன் காட்டி அது ஆண்விலங்குதான் என்பதை அவர் நிரூபிக்கவேண்டியிருக்கிறது. தன் வாதம் தோற்றுவிட்டதால் அறுத்தெடுத்து வந்த பீஜங்களை ஒரு கீற்றில் வைத்து பங்களா வரைக்கும் அவளே சுமந்துவருகிறாள். நடந்த சம்பவத்தையெல்லாம் அவளே தன் பெற்றோரிடம் விவரித்துச் சொல்கிறாள். இறந்துபோன விலங்கின் தொடைகளை மட்டும் அறுத்தெடுத்து வந்து தமக்காக சமைக்கும்படியும் மற்ற பகுதிகளை ஊர்க்காரர்கள் பங்கிட்டுக்கொள்ளலாம் என்று சொல்கிறார் அந்த அதிகாரி.

ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் காணப்படும் இணக்கமான உறவைப் பற்றிய பதிவுகள் இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. ஜத்தப்பா விவரிக்கும் சம்பவங்கள் அனைத்தும் முதலாம் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை. எந்த இடத்திலும் வெறுப்பு தென்படாத பார்வையும் எழுத்தும் அதிசயமாகவே உள்ளன. காடு, காட்டையழித்து நடைபெறும் விவசாயம், மெல்ல மெல்ல மாறிவரும் வாழ்க்கைமுறையைப்பற்றிய தகவல்களை கட்டுரையின் போக்கிலேயே பல இடங்களில் பதிவு செய்கிறார். அவையனைத்தும் ஒரு சமூகவியல் ஆய்வாளனுக்கு ஆர்வமூட்டக்கூடிய பதிவுகள்.

வேட்டையைப்பற்றிய நினைவலைகளைப்பற்றிய புத்தகத்துக்குக் கிட்டிய வரவேற்பைத் தொடர்ந்து ஜத்தப்பா மேலும் சில புத்தகங்களை எழுதினார். எல்லாமே ஒருவகையில் அந்த நினைவலைகளின் தொடர்ச்சி என்றே சொல்லவேண்டும். ஒரு சுயசரிதையின் வெவ்வேறு பகுதிகளே அவை.


ஒரு கோணத்தில் இளமையில் படிப்பில் ஆர்வம் காட்டாத ஒரு மனிதன் தனக்குப் பிடித்த வேட்டையில் மனத்தைச் செலுத்தி வாழ்ந்து முடித்த வாழ்க்கையே இந்தப் புத்தகம். அவர் நினைவில் நீங்காமல் ஆழத்தில் தங்கிவிட்ட சம்பவங்களை எழுதுவதன் வழியாக, அவர் அவற்றை அசைபோட்டு தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொள்கிறார் என்றே தோன்றுகிறது. வேட்டையே அவர் அடைந்த மெய்ஞானம். ஒருபக்கம் எளிய நினைவலையாகவும் மறுபக்கம் வாழ்க்கையையும் மனிதர்களையும் மதிப்பிடும் பயணமாகவும் தோற்றமளிக்கிறது ஜத்தப்பாவின் எழுத்து. படிக்கும்தோறும் ஒருவித கனவுகளை நம் மனத்தில் அவருடைய எழுத்து விரியவைக்கிறது. அதனூடாகவே நம்மையறியாமல் ஒருவித புன்னகையையும் மலரவைக்கிறது