Home

Sunday 18 February 2018

புதிய வெளிச்சம் - ஏழு நதிகளின் நாடு


எங்கள் பள்ளியில் எங்களுக்கு வரலாற்றுப் பாடத்தை நடத்தியவர்களில் இரண்டு ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் ராமசாமி. இன்னொருவர் சுப்பையா. இருவருமே அடிப்படையில் வரலாற்றாசிரியர்கள் அல்லர். ஆள் இல்லாத குறைக்கு பாடம் எடுத்தவர்கள். ஆனால் ஒரு வரலாற்றுப்பாடத்தை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு அவர்களே பொருத்தமான இலக்கணம் என்று சொல்லலாம்.  புத்தகத்தையே தொடமாட்டார்கள். ஆனால் பாடத்துக்குரிய பகுதியை ஒரு கதையைச் சொல்வது போல, சம்பவங்களைப் பின்னிப்பின்னிச் சொல்லிக்கொண்டே செல்வார்கள். கேட்கும்போதே நெஞ்சில் பதிந்துவிடும். ஒருவகையில், இந்திய வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆவல் எனக்குள் எழ அவர்களே காரணம். சமீபத்தில் ஒரு வாரமாக விட்டுவிட்டு சஞ்சீவ் சன்யாலின் ஏழு நதிகளின் நாடு புத்தகத்தைப் படித்தபோது பழைய ஆசிரியர்களின் நினைவு வந்துவிட்டது. மனத்துக்கு நெருக்கமான ஓர் ஆசிரியரைப்போல விவரித்துச் செல்லும் சன்யாலின் எழுத்துமுறை இந்தப் புத்தகத்துக்கு மிகப்பெரிய பலம். இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சிவ.முருகேசனுக்கு தமிழுலகம் நன்றி சொல்லவேண்டும்.

இந்திய வரலாற்றை அதன் நில அமைப்புடன் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ளும் முயற்சியாக இந்த நூலை எழுதியிருக்கிறார் சன்யால். ஒரு நாட்டின் நில அமைப்பைப் பொருத்தே அதன் வரலாறு தொடங்குகிறது. பிறகு வரலாறு நில அமைப்பை மாற்றியமைக்கிறது.  ஒன்றையொன்று நிரப்பி, தம்மைத்தாமே வளர்த்தெடுத்துக்கொண்டபடி முன்னகரும் விசித்திரம் இதுவரைக்கும் நமக்கிருந்த புரிதலிலொரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் தொடங்கி, இன்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் குர்கான் நகர் வரைக்கும் நீண்டுள்ள இந்தப் புத்தகத்தின் பயணம் சுவாரசியமானது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் சிதறிக்கிடக்கும் பல தகவல்களை அவர் ஒரு கோணத்தில் ஒருங்கிணைத்துச் சொல்லும்போது, அதற்கு ஒரு வெளிச்சம் கிடைத்து விடுகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தின் மரபியலும் கட்டுமானமும் என்னும் முதல் கட்டுரை கற்காலத்துக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து தன் ஆய்வைத் தொடங்குகிறது. கற்காலத்தைச் சேர்ந்த ஆரம்பகால மனிதர்களின் எச்சங்கள் நாடு முழுதும் சிதறியுள்ளன. மிக அதிகமான சான்றுகள் கிட்டிய இடம் மத்திய இந்தியாவில் பீம்பேத்கா என்னும் இடம். இங்கு நூற்றுக்கணக்கான குகைகளும் பாறைகளால் அமைக்கப்பட்ட தங்குமிடங்களும் உள்ளன. இங்கு 30000 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். குதிரை மீது சவாரி செய்யும் போர்வீரர்களையும் நடனமிடும் கடவுளரையும் சித்திரங்களாகத் தீட்டிவைத்திருக்கும் குகையோவியங்கள் மிக முக்கியமானவை. தொடக்கத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் பனிக்கட்டிகளின் காலமாக இருந்தது. ஒரு கட்டத்தில் புவி வெப்பம் மிகுதியான போது பனிப்பாளங்கள் உருகின. இதன் காரணமாக பல இடங்களில் கடல்மட்டம் உயர்ந்தது. அதனால் பருவநிலையும் மாறியது. பாரசிக வளைகுடாப் பகுதி நீரில் மூழ்கியது. சுமேரிய நூல்களிலும் வேதாகமத்திலும் கூறப்படும் பிரளயமாக இது இருக்கக்கூடும். இத்தகு பிரளயம் இந்தியப்பகுதியிலும் நிகழ்ந்திருக்கக்கூடும். இந்தியக்கடற்கரைப் பகுதி வெகுதொலைவு உள்நோக்கி நகர்ந்தது.
வரலாற்றாய்வில் நிலவிய இருவித நம்பிக்கைகளை சன்யால் முன்வைக்கிறார். கி.மு.1500 ஆம் ஆண்டுவரையில் இந்தியாவில் வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை மத்திய ஆசியாவிலிருந்து குதிரைகளோடும் இரும்பு ஆயுதங்களோடும் புறப்பட்டு வந்த இந்தோ ஐரோப்பிய மக்கள் இந்தியாவை ஆக்கிரமித்தார்கள் என்பதும் இந்திய நாகரிகம் என்பதே இந்த ஆக்கிரமிப்பின் நேரடிப் பின்விளைவு என்பதும் ஒரு நம்பிக்கை. ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு முன்பிருந்த எல்லாக் கருத்துகளையும் மாற்றிக்கொள்ளும்படி நேரிட்டது. மிகப்பெரிய ஆக்கிரமிப்பை உறுதி செய்யும் அளவுக்கு போதுமான சான்றுகள் எதுவும் இன்றுவரை கிடைக்கவில்லை. ஒருகட்டம் வரைக்கும் மிகச்சிறப்பாக வளர்ந்தோங்கிய ஹரப்பா நாகரிகம் காலப்போக்கில் மறையத் தொடங்கியது. அதற்குக் காரணம் மிகமுக்கியமான ஒரு நதி வறண்டு மறைந்துபோனதும் சுற்றுச்சூழல் மோசமடைந்ததும்தான். இது இன்னொரு நம்பிக்கை. இந்திய நில அமைப்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது, இரண்டாவது நம்பிக்கையை ஒட்டியே அதிக அளவில் சான்றுகள் கிடைப்பதாகக் குறிப்பிடுகி|றார் சன்யால். இது ஒரு முக்கியமான முடிவு.
ஆரியர்களின் வருகையும் இனப்படிநிலை அமைப்புமுறை மிகக் கடுமையாக திணிக்கப்பட்டதுமே சாதிகள் ஏற்பட்டதற்குக் காரணங்கள் என முன்பு கருதப்பட்டு வந்தது. இக்கருத்தை மரபியல் ஆய்வுகள் நிராகரிப்பதை சன்யால் சுட்டிக் காட்டுகிறார். அதாவது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் காரணமாக ஒரு குழுவினர் மற்றவர்களிடமிருந்து பிரிந்து சென்று, அகமண உறவுக்கட்டுப்பாடாலும் புறமணத்தடையாலும் புதிய இனமரபுக்குழுவாக மாறினார்கள். காலம் செல்லச்செல்ல இதே முறையில் வேறு குழுக்களும் தனிக்குழுக்களும் உருவாகின. சில சமயங்களில் இரு தனிக்குழுவினர் ஒன்று சேர்ந்தார்கள். அல்லது பிரிந்து சென்றார்கள். இதன் காரணமாக பல இனங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்தாலும் ஒருங்கிணைந்த மக்கள் தொகுப்பை நம்மால் காண முடியவில்லை. மாறாக, பல இனங்களின் வலைப்பின்னலைத்தான் காண முடிகிறது. மரபியல் அடிப்படையிலான உண்மைக்கும் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள கடுமையான வருணாசிரம தர்மத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. தொல்லுயிரியல், மரபியல் துறைகளில் இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றன.
இந்தியாவின் மிகமுக்கியமான நதி்களில் ஒன்றாக இருந்த, ரிக் வேதத்தால் சரஸ்வதி என்றழைக்கப்பட்ட மிகப்பெரிய நதி வறண்டுபோன விதத்தையும் அதன் விளைவுகளையும் ஆய்வுசெய்யும் தொலைந்துபோன நதிதீரத்து மக்கள் என்னும் கட்டுரை ஒரு புனைவுப்படைப்பை வாசிக்கும் அனுபவத்தைத் தருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் லாகூர் நகருக்கும் முல்ட்டான் நகருக்கும் இடையில் இருப்புப்பாதை அமைக்கப்பட்ட சமயத்தில் இருப்புப்பாதையின் அடிப்பரப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் தரத்தைப் பார்த்து வியந்த தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் மொகஞ்சதாரோவுக்குச் சென்றார். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக புறக்கணிக்கப்பட்ட ஒரு நகரத்தைச் சேர்ந்தவை என அவற்றைப்பற்றி உள்ளூர் மக்கள் சொன்ன சொற்களைக் கேட்டுக்கொண்டு திரும்பி விட்டார். ஏழெட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பகுதிக்குச் சென்ற வேறு சில ஆய்வாளர்களே அக்கற்கள் மிகப்பழமையான ஒரு நாகரிகத்தின் எச்சங்கள் என்று கண்டறிந்தார்கள். சுமேரிய, எகிப்திய நாகரிகத்தைவிட அது பழமையான நாகரிகமென தம் ஆய்வுகளின் வழியாக முன்வைத்தார்கள். சிந்து சமவெளி அல்லது ஹரப்பா நாகரிகம் என அதற்குப் பெயரிட்டார்கள்.
ஹரப்பா போன்ற இடங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு, மக்களைக் கவர்ந்திழுக்கும் கட்டுமானங்கள் எதுவும் அங்கே இல்லாததே காரணம். அகழ்வாய்வின்போதுதான் கட்டிடங்கள் கண்டறியப்பட்டன. ஹரப்பாவின் முக்கிய நகரமாக தோலவிரா இருந்துவந்துள்ளது. குஜராத் கரையோரமாக சதுப்புநிலப்பகுதியை ஒட்டி இது அமைந்துள்ளது. குஜராத்,சிந்து, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற பல மாநிலங்களை உள்ளடக்கிப் பரவியிருந்தது ஹாரப்பா நாகரிகம். ஹரப்பா நாகரிகத்தின் முதல் இடம் கி.மு.3500 இல் தோன்றியிருக்கலாம். இதன் முதிர்ந்த நிலை கி.மு.2600 தொடங்கி கி.மு.2000 வரை தொடர்ந்தது. இந்தக் காலகட்டம் வெண்கலக் காலக் கலாச்சாரம். இரும்பு முறைப்படி பயன்பாட்டுக்கு வராத காலம். கி.மு.2000 தொடங்கி கி.மு.1400 வரைக்கும் அதன் வீழ்ச்சிக்காலம். அந்த நாகரிகத்துக்கு வளம் சேர்த்த காகர் நதி வறண்டுபோகத் தொடங்கியது ஒரு முக்கியக் காரணம். அனைத்துக்கும் நீராதாரமாக இருந்த சரஸ்வதி நதியின்  வறட்சியே மூலகாரணம். அப்பகுதியை ஒட்டி அடிக்கடி நிகழ்ந்த நிலநடுக்கம் யமுனையையும் சரஸ்வதியையும் பிரித்திருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. சட்லெஜும் விலகிவிட, சரஸ்வதி மெல்ல மெல்ல வறண்டுவிட்டது. நீர்வரத்து நிரந்தரமாக அற்றுப்போனதால் மழையை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய ஒரு நதியாக சரஸ்வதி சுருங்கிவிட்டது. பிறகு மழையும் பொய்த்துவிட, நதி அங்கங்கே தேங்கி நிற்கக்கூடிய ஏரிகளாக மாறியது. இன்று மிச்சமிருப்பது காகர் என்னும் பெயரில் உள்ள ஒரு மணற்படுகை மட்டுமே. ஆயினும் சரஸ்வதி நதி மக்களால் மறக்கப்படவில்லை. அது புராணங்களிலும் நாட்டார் பாடலகளிலும் எதிரொலித்தபடியே உள்ளது.
மூன்றாவது பகுதியான சிங்கங்களின் காலம் மிகவும் சுவாரசியமானது.கி.மு.1300 முதல் கி.மு.300 வரையிலான காலப்பகுதியை சிங்கங்களின் காலம் என சுட்டுகிறார் சன்யால். கங்கைச்சமவெளியில் சின்னச்சின்ன குடிகள் தோன்றி, அதன் வழியாக ஒரு நாடு உருவாகி, பிறகு அரசுகள் உருவாகி, இறுதியில் பேரரசு எழும் கட்டம் வரைக்குமான காலம் இது. இக்காலத்தின் முக்கியமான பண்பாட்டுப் பங்களிப்பு இராமாயணமும் மகாபாரதமும். இராமயணத்தின் புவியியல் அமைப்பு வடக்கு-தெற்கு அச்சிலும் மகாபாரதத்தின் புவியியல் அமைப்பு கிழக்கு- மேற்கு அச்சிலும் காணப்படுகின்றன. அந்த அச்சுகள் இரு முக்கியமான வணிகத் தடங்களில் பொருந்துவது தற்செயலான ஒன்று. இரும்புக்காலத்தின் தொடக்கத்தில் தெற்குப்பாதை அலகாபாத்துக்கு அருகில் தொடங்குகிறது. கப்பல் போக்குவரத்துக்கு இசைவாக கங்கையும் யமுனையும் இங்கு இணைகின்றன. இங்கிருந்து இப்பாதை தென்மேற்குத் திசையில் சித்ரகூடம், பஞ்சவடி வழியாக கிஷ்கிந்தையை அடைகிறது. தன்னுடைய வனவாசத்தின்போது இராமன் சென்ற பாதை இதுதான். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் மெளரியர்கள் ஏற்படுத்திய அரசியல் ஒருங்கிணைப்புக்கு முன்பாகவே தெற்குப்பாதையில் ஏற்பட்ட பொருட்பரிமாற்றமும் கருத்துப் பரிமாற்றமும் இந்தியர்களிடையே ஓர் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்திவிட்டது.
மகாபாரதம் என்னும் பெயரே நமது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பெயர். மிகப்பெரிய இந்தியா என்பதே அதன் பொருள். இந்திய துணைக்கண்டத்தின் அனைத்துக் குலங்களின் கதையாக இருப்பதால் மகாபாரத இதிகாசத்துக்கு அப்பெயர் பொருந்திப் போகிறது.
புத்தர் இந்திய நேபாள எல்லையில் உள்ள கபிலவாஸ்து என்னும் இடத்தில் பிறந்தார். மகதத்தின் தலைநகரான இராஜகிரிக்கு அருகில் உள்ள கயா என்னும் இடத்தில் ஞானம் பெற்ற புத்தர் உத்திரபாதையும் தட்சிணபாதையும் இணையும் புள்ளியான காசியின் புறநகர்ப்பகுதியான சாரனாத்தில் தன் முதல் உரையை நிகழ்த்தினார்.
சக்கிரவர்த்தி அல்லது உலகப்பேரரசர் என்ற எண்ணத்தை மெளரியர்கள் பெற்றிருந்தார்கள். தம்மைப்பற்றி தூண்களிலும் பாறைகளிலும் பல இடங்களில் பதிவு செய்து வைத்தார்கள். தாம் எழுப்பிய எல்லா நினைவுச்சின்னங்களிலும் அவர்கள் சிங்கங்களின் உருவத்தைப் பொறித்துவைத்தார்கள். சிங்கங்களின் காலம் என்பது குறியீட்டளவில் பேரரசுகள் உருவாகிய காலத்தையே குறிக்கிறது.
நான்காவது பகுதியான வணிகர்களின் காலம் மிகவும் முக்கியமானது. சன்யால் இக்கட்டுரையை சங்கப்பாடல்களின் ஆய்விலிருந்து தொடங்குகிறார். சங்கப்பாடல்கள் காட்டும் சமுதாயம் இந்தியாவின் பிற பகுதிகளோடு மட்டுமன்றி, உலக நாடுகளோடும் வைத்திருந்த வணிக உறவை உறுதிப்படுத்துவதாக சொல்கிறார் சன்யால். இந்தத் தொடர்பில் பெளத்த, வைதிக, சமணப் பிணைப்புகள் அடங்கும். சோழர்கள் உருவாக்கிய பேரரசு மிகமுக்கியமான ஒன்று. தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் சோழர்கள் நல்ல நட்புற்வோடு இருந்தார்கள். சோழப் பேரரசின் வணிகவரம்பு இலங்கை, மாலத்தீவுகள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகவும் இருந்தது.
உலகெங்கும் ஓங்கியிருந்த வணிகவலைப்பின்னலை நாம் அறிந்துகொள்ள உதவும் ஒரு புத்தகம் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பெரிபிளஸ் என்னும் புத்தகமாகும். கடல் வணிகத்துக்குத் துணையிருந்த எல்லாத் துறைமுகங்களையும் நாம் இந்தப் பின்னலில் காணமுடியும். இந்தியாவின் கடற்கரையோரப்பகுதிகளில் ஓங்கியிருந்த எல்லாத் துறைமுகங்களும் இந்தப் பின்னலில் அடங்கும். இதையொட்டிய ஆய்வில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு கால வணிகவளர்ச்சியை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார் சன்யால். கப்பல் பயணங்களை முன்வைத்துப் பேசும்போது பயணிகளாக நம் நாட்டுக்குள் வந்தவர்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்ற குறிப்புகளையும் அவற்றின் வழியாக விரிந்து செல்லும் இந்திய வரலாற்றையும் முன்வைக்கிறார்.
சிந்துபாத் முதல் ஸெங்ஹி வரை என்னும் ஐந்தாவது கட்டுரை  பல சுவாரசியாமன தகவல்களைக் கொண்டிருக்கின்றன. பேரரசர் ஹர்ஷர் தன் பேரரசை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தபோது இந்தியாவுக்குள் வந்த பயணி யுவான் சுவாங் என்று குறிப்பிடுவது ஒரு மரபான கருத்து. சன்யால் இக்கருத்துடன் இதே காலகட்டத்தில் நபிகள் நாயகத்தின் வழியாக உருவான அரசியல் மாற்றத்தையும் அதற்கு முன்னும் பின்புமாக இந்தியாவுடன் அமைந்திருந்த இஸ்லாமிய வணிகத் தொடர்புகளையும் இணைத்துப் பார்க்க முயற்சி செய்கிறார் சன்யால். கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களுக்கு வணிகர்களின் வருகை தொடங்கிவிட்டது. பாக்தாதைத் தலைமையிடமாகக் கொண்டு இஸ்லாமியப் பேரரசு உருவானதும் அரேபியர்கள் உலகெங்கும் பல வணிக மையங்களை உருவாக்கினர். அது நிகழ்ந்த காலம் கடற்பயணி சிந்துபாத்தின் காலம். ஆயிரத்தொரு இரவுகள் கதைகளில் அக்காலத்தின் நிழல் படிந்துள்ளது. பாக்தாத்துக்கு அருகில் பஸ்ரா துறைமுகம் அல்-ஹிந்த்துக்குரியது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு நிகழ்ந்த வணிகத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் இந்தியர்களே என்பதால் இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவிலிருந்து மிகவும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள் இரும்பிலான வாட்கள். சிலுவைப்போர்கள் நடைபெற்ற காலத்தில் கூட இந்திய வாட்களையே போர்வீரர்கள் பயன்படுத்தினார்கள். கேரளப்பகுதியில் வணிகர்களாக வந்து தங்கிய இஸ்லாமியர்களுக்கென உருவான சேரமான் ஜீமா மசூதியே இந்தியாவில் எழுப்பப்பட்ட முதல் மசூதி. அரேபிய முஸ்லிம்கள் கேரளத்தில் மதம் மாறிய முஸ்லிம்களுடன் இரண்டறக் கலந்துவிட்டார்கள். அவர்களுடைய வழித்தோன்றல்களே மாப்ளா முஸ்லிம்கள்.
எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ஆதிசங்கரர் தத்துவ விவாதங்கள் நிகழ்த்தியபடி நாட்டின் தென்கோடியிலிருந்து வடகோடி வரைக்கும் பயணம் செய்தார். அவருடைய கருத்துகள் இந்தியத்துணைக்கண்டம் முழுதும் பரவியது. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயிலும்பொருட்டு உலகின் பல பகுதிகளிலிருந்து பலரும் வந்து சென்றார்கள். பத்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த துருக்கியப்படையெடுப்பு இங்கிருந்த இந்து- பெளத்த அரசுகளை அழித்துச் சூறையாடின. இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கஜினி என்ற ஊரை முதலில் கைப்பற்றிய துருக்கியர்கள், அங்கிருந்தபடி காபூலில் ஆட்சி செய்துவந்த ஷாஹி அரசுடன் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வெற்றியடைந்தனர். அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் கஜினி முகம்மதுவின் படையெடுப்புகள் பதினேழு முறைகள் இந்தியாவின் மீது நிகழ்ந்தன. மதுரா, நாகர்கோட், சோமநாதபுரம் போன்ற செல்வச்செழிப்பு மிக்க கோவில்கள் அமைந்த நகரங்கள் மீதே அத்தாக்குதல்கள் நிகழ்ந்தன. தங்கம், வெள்ளி, ரத்தினம் என ஏராளமான செல்வங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட அடிமைகள் மத்திய ஆசியாவின் கடைவீதிகளிலும் மத்திய கிழக்கு நாடுகளின் கடைவீதிகளிலும் விற்கப்பட்டார்கள். ஆப்கானிய மலைப்பகுதியில் நிலவிய குளிருக்குப் பழக்கப்படாத அந்த அடிமைகளில் பலர் உயிரிழந்தார்கள். அதனால்தான் அங்குள்ள மலைத்தொடர் இந்துகுஷ் மலைத்தொடர் என அழைக்கப்படுகிறது. இந்துக்களைக் கொல்லும் மலைத்தொடர் என அதற்குப் பொருள். இதற்கு முன்பு நிகழ்ந்த அயல்நாட்டுத் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடித்த மெளரியர்களைப்போலவோ குப்தர்களைப்போலவோ கஜினியின் காலத்தில்  யாருமில்லை. வட இந்தியாவில் கடைசியாக ஆட்சி செய்தவர்கள் கூர்ஜரர்களும் பிரதிஹரர்களும் மட்டுமே. அந்தப் பேரரசு உடையத் தொடங்கியதும் இந்திய நாகரிகத்தின் மையம் விந்திய மலைக்குத் தெற்கே மாறிவிட்டது.
ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து நீடித்த பல்வேறு தாக்குதல்கள் குறித்தும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் பல பயணியர்களின் குறிப்புகளின் உதவியாலேயே இணைத்து முன்வைக்கிறார் சன்யால். ஸெங்-ஹி ஒரு சீனக்கடற்பயணி. கடற்பகுதிகளில் மேலாதிக்கம் செலுத்தியவன். தென்கிழக்கு ஆசியா இஸ்லாமியமயமாவதற்கு இப்படையெடுப்பு உதவியது. பல படையெடுப்புகளையும் இணைத்துச் சொல்லும் போக்கில் இந்திய நாட்டின் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தையும் மதமாற்றங்களையும் புரிந்துகொள்ளும் விதமாக ஒரு புனைவு மொழியில் குறிப்பிட்டிருக்கிறார் சன்யால்.
இந்தியாவின் வரைபடத்தைத் தயாரித்தல் கட்டுரை தகவல்களின் களஞ்சியமாக உள்ளது. சீனர்களின் பிடியும் அரேபியர்களின் பிடியும் தளரத்தொடங்கிய சமயத்தில் ஐரோப்பியர்கள் கிழக்கு நோக்கி தங்கள் பயணங்களைத் தொடங்கினார்கள். டாலமி எழுதி வைத்திருந்த வருணனைகளின் அடிப்படையில் முதலில் இந்தியாவின் வரைபடங்கள் வரையப்பட்டன. 1497 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமாவின் தலைமையில் ஒரு போர்ர்சுகிசிய குழு கடற்பயணத்தைத் தொடங்கியது. பயண அனுபவங்களையும் பயணத் திசைகளையும் அக்குழு பதிவு செய்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்து கோழிக்கோட்டுக்கு அருகில் வந்து சேர்ந்தது. கோழிக்கோட்டில் இருந்தவர்கள் இந்துக்கள். அந்தத் துறைமுகத்தில் ஏற்கனவே இஸ்லாமிய வணிகர்கள் இருந்தார்கள். தம் வருகையை அவர்கள் விரும்பமாட்டார்கள் என அவர்களுக்குப் புரிந்திருந்தது. அதனால் அவர்களை வெல்லவேண்டிய அவசியம் உருவானது.
கோழிக்கோட்டை அடைந்த வேகத்தில் வாஸ்கோடகாமா உடனே மீண்டும் நாடு திரும்பி அரசரிடம் செய்தியைத் தெரிவித்துவிட்டு 1200 பேர்கள் அடங்கிய பதின்மூன்று படைக்கப்பல்களோடு மறுபடியும் கோழிக்கோட்டுக்குத் திரும்பி வந்தார். பீரங்கிகளும் துப்பாக்கிகளும் இருந்ததால் அவர்கள் மிக எளிதில் வெற்றியடைந்தார்கள். பிறகு மேற்குக் கடற்கரையை ஒட்டி காணப்பட்ட கோட்டைகள் நிரம்பிய இடங்களை எல்லாம் வசப்படுத்திக்கொண்டார்கள். இந்தியாவை நோக்கி வந்த பயணியரே இதன் வரைபடத்தைத் துண்டுதுண்டாக வரைந்து வைத்தார்கள்போர்த்துகீசியரைத் தொடர்ந்து டச்சுக்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியாவை நோக்கி பயணம் செய்து வந்தார்கள். டச்சுக்காரர்கள் வரைபடக்கலையில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். இந்தியாவின் கிழக்குக்கடற்கரைப் பகுதி, வங்காளம், பர்மா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், சுமித்ரா தீவுகள் ஆகிய அனைத்து இடங்களைப்பற்றிய பதிவுகளும் அப்படங்களில் காணப்பட்டன.
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக்கம்பெனி குஜராத்தில் சூரத் நகரில் தன் முதல் கிளையைத் தொடங்கியது. ஷாஜகான், ஒளரங்கசீப் காலத்தில் வந்த பிரெஞ்சுப் பயணியர்களான பெர்னியரும் டேவர்னியரும் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளும் வரைபடங்களும் மிகமுக்கியமான ஆவணங்கள். இந்தியாவின் வரைபடங்களைத் தயாரிப்பதில் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் அனைவருமே பெரிய அளவில் ஆர்வம் காட்டினார்கள். வணிகநோக்கமே முதன்மையான காரணம். வணிகப் பெருக்கம் நிகழும்போது போட்டிகள் உருவாகின. அதையொட்டி பூசல்களும் நிகழ்ந்தன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தத்தம் செல்வாக்கை அவர்கள் இந்தியமண்ணில் நிலைநாட்ட முயற்சி செய்தார்கள். 1757இல் நிகழ்ந்த பிளாஸிப்போரைத் தொடர்ந்து நிலைமை மாறத் தொடங்கியது. அப்போரில் ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்த வெற்றி ஒரு பெரிய மாகாணத்தையே சொந்தம் கொள்ள வழிவகுத்துவிட்டது. அந்த வெற்றி தொடர்ந்து நாளடைவில் நாட்டையே தம் வசமாக்கிக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். பயண வசதிக்காக தீட்டப்பட்ட வரைபடங்களும், வரைபடங்களை வைத்துக்கொண்டு நிகழ்ந்த பயணங்களும் இறுதியில் நாட்டைக் கைப்பற்றும் முயற்சிகளாக மாறிவிட்டன.
திரிகோண விதியும் நீராவியும் கட்டுரை கல்கத்தா உருவான வரலாற்றை ஒரு நாவலின் சுருக்கம்போல வழங்கியுள்ளார் சன்யால். 24.08.1690 அன்று சார்நாக் என்பவர் சுதாநுதி என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அதன் கிழக்கே உவர் சதுப்புத்தன்மை உள்ள ஏரிகள் இருந்தன. தெந்திசையில் புலிகள் நிறைந்த காட்டுப்பகுதி இருந்தது. வடக்குத்திசையில் கழிமுகக்கால்வாய் இருந்தது. இயற்கையாகவே ஒரு துறைமுகத்துக்கு உரிய எல்லாப் பண்புகளையும் அது கொண்டிருந்தது. அந்த இடம் அவருக்குப் பிடித்திருந்ததால் அங்கே ஒரு வணிகமையத்தை உருவாக்க நினைத்தார். அது சுதாநுதி, கோபிந்தபூர், காளிகட்டம் என்ற மூன்று கிராமங்களைக் கொண்ட ஒரு பகுதி. அவர் உருவாக்கிய பகுதிக்கு அவர் காளிகட்டம் என்ற பெயரைச் சூட்டினார். பின்னால் அதுவே கல்கத்தாவானது. கோட்டையும் அதைச் சுற்றி குடியிருப்புகளும் எழுந்தன. சதுப்புநிலக் கொசுத்தொல்லையால் அங்கே குடியேறிய பல ஆங்கிலேயர்கள் இறந்தனர். அந்த நகரைப் பாடுபட்டு உருவாக்கிய சார்நாக்கும் அதற்கு விதிவிலக்கல்ல. நகரைச் சுற்றி இந்திய ஆட்சியாளர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஏராளமான பதுங்கு குழிகள் உருவாக்கப்பட்டன.
அரசு விரிவடையத் தொடங்கியதும் ஆங்கிலக்கல்வி அறிமுகமானது. ஆங்கிலேயர்கள் எதிர்பார்த்தபடி அவர்களுக்கு விசுவாசம் மிக்க ஊழியர்களை அது உருவாக்கித் தந்த அதே நேரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னிலையில் நின்ற வீரர்களையும் அக்கல்வி உருவாக்கியது. இந்திய நாட்டோடு அதிக அளவில் தம்மை இணைத்துக்கொண்ட பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம் வரிவசூல், இராணுவ நடமாட்டம் போன்ற்வற்றில் தமக்குத் துணைசெய்யும் வகையில் தம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளைக் கொண்ட ஒரு வரைபடத்தைத் தயாரிக்க நினைத்தது. அதன் விளைவாகவே முதன்முதலாக சுற்றாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொலைவுமானியைத் தூக்கிக்கொண்டு ஒரு குழு நாடு முழுதும் அலைந்தது. இப்படித்தான் ரென்னல் என்பவர் கல்கத்தாவின் வரைபடத்தை உருவாக்கினார். கம்பெனியின் கட்டுப்பாடு மென்மேலும் விரிவடையத் தொடங்கியதும், வரைபடத்தையும் விரிவு செய்யும் தேவை எழுந்தது. அந்த வேலையை மேற்கொண்டவர் லாம்ப்டன். அவரே திரிகோண விதிகளைப் பயன்படுத்தி நாட்டின் நீள அகலங்களைக் கணக்கிட முடியும் என்று கண்டறிந்தார். அவர் மறைவுக்குப் பிறகு எவரெஸ்ட் அந்த வேலையைத் தொடர்ந்தார். அது அறுபது ஆண்டுகள் நிகழ்ந்தது. அவரால் கண்டறியப்பட்ட மலைச்சிகரமே உலகில் மிக உயரமான சிகரம். அச்சிகரத்துக்கு அவருடைய பெயரே சூட்டப்பட்டது.
1857 ஆம் ஆண்டில் நிகழ்ந்த புரட்சி அரசியல் தளத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது. கம்பெனியின் ஆட்சிக்கு மாறாக ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி மலர்ந்தது. அந்த ஆட்சி ஊக்குவித்த மதமாற்றக்கொள்கையால் உருவான வெறுப்பு ஆட்சியின் மீதான வெறுப்பாக மாறியது. அவர்களை எதிர்கொள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளவாடங்கள் வலிமைப்படுத்தப்பட்டன. பீரங்கிச்சண்டையில் டில்லி வீழ்ந்தது. மொகலாயர்களின் பிடி முற்றிலுமாக அறுந்தது.  1858 இல் பிரிட்டிஷ் மகாராணி இந்தியாவில் இயங்கிவந்த சமஸ்தானங்களையும் ஜமீன்களையும் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கும் ஆணையைப் பிறப்பித்தார். வணிகக்காரணங்களுக்காக அரசு மெல்ல மெல்ல நகரங்களை உருவாக்குவதில் ஈடுபட்டது. அந்த நகரங்களை இணைப்பதற்க்காக சாலைகளும் வாகனப்போக்குவரத்தும் உருவாக்கப்பட்டன. இருப்புப்பாதைகள் போடப்பட்டு நீராவியின் உதவியால் ரயில் இயக்கப்பட்டது.
முதல் ரயில் பம்பாய்க்கும் தானே நகருக்கும் இடையில் 21 மைல் தொலைவில் வெற்றிகரமாக உருவானது. எல்லாத் துறைமுகங்களும் ரயில்பாதைகள் வழியாக இணைக்கப்பட்டன. இந்த நகர வலைப்பின்னல் வெற்றிகரமான வணிகத்துக்குத் துணையாக இருந்தது. அவர்கள் ஈட்டிய செல்வம் தங்குதடையின்றி ஏற்றுமதியானபடி இருந்தது. ஆங்கிலேயர்கள் செல்வமீட்டிய காலத்தின் உச்சகட்டம் அது. எதிர்பாராத விதமாக 1874 முதல் இயற்கைச்சீற்றத்தின் விளைவாக வங்காளத்திலும் பீகாரிலும் வறட்சி ஏற்பட்டது. எங்ன்கெங்கும் கடுமையான பஞ்சங்கள். அப்பொழுது வைஸ்ராயாக இருந்த புருக் என்பவர் பர்மாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து நிலைமையை ஒருவழியாகச் சமாளிக்க முயற்சி செய்தார். அதற்காகச் செய்யப்பட்ட செலவைக் காரணமாகக் காட்டி அரசு அவரைக் கண்டித்து பதவியிலிருந்து விலக்கியது. அதைத் தொடர்ந்து பத்தாண்டுகள் வரைக்கும் கொடுமையான பஞ்சங்கள் தலைவிரித்தாடின. ஏறத்தாழ 55 லட்சம் பேர் மடிந்தார்கள். நிர்வாகம் அதை கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்தி நடவடிக்கைகள் எடுத்த அதிகாரிகளை மிரட்டித் தடுத்தது நிர்வாகம். மறுபக்கத்தில், விளைச்சல் அதிகமாக இருந்த மாகாணங்களிலிருந்து தானியங்கள் பிற நாடுகளுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருமானத்தைப் பெருக்கும் வழியிலேயே ஈடுப்பட்டது. அத்தருணத்தில்தான் துணைக்கண்டத்தின் பல்வேறு அரசர்களின் முன்னிலையில் அரசி விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக அறிவித்துக்கொண்டார். இந்த வெறுப்பின் காரணமாகவே 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான பல சுதந்திர இயக்கங்களுக்கு அதுவே முன்னோடியாக இருந்தது. ஓர் அரசு உருவாகும் தருணத்திலேயே அதை எதிர்க்கும் மாற்றுவிசை உருவாகும் விதத்தை சன்யாலின் குறிப்புகள் வழியாக உணரமுடிகிறது.
நவீன இந்தியாவின் புறத்தோற்றம் என்னும் இறுதிக்கட்டுரை இந்தியா பெற்ற விடுதலையை முன்வைக்கிறது. ஒரே நேரத்தில் தேசப்பிரிவினையும் சுதந்திர இந்தியாவுக்குள் தனியாக இயங்கிவந்த சமஸ்தானங்களையெல்லாம் இந்தியாவோடு இணைக்கும் செயலையும் முன்வைக்கிறது. இந்தியாவுக்கான புதிய வரைபடத்தை மீண்டும் உருவாக்கும் தேவை எழுந்தது. சுதந்திரத்துக்கான நாளை அறிவித்த பிறகு மெளண்ட்பேட்டன் நாட்டைப் பிரிப்பதற்குத் தேவையான வரைபடத்தை உருவாக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அந்தப் பணியை ரெட்கிளிஃப் என்பவரிடம் இரண்டு மாதங்களில் முடிக்கவேண்டிய பணியாக ஒப்படைத்தார். எந்த இடத்துக்கும் நேரிடையாகச் சென்று கள ஆய்வு செய்யப் போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் ஏற்கனவே இருந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு அந்தப் பிரிவினையை அவர் செய்தார். விடுதலையை ஒட்டி இரு தரப்பிலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதை நேருக்கு நேர் பார்த்த பிறகு அவர் தனக்கு வழங்கப்பட்ட 2000 பவுண்ட் ஊதியத்தை திருப்பி அளித்துவிட்டு தனது நாட்டுக்கே திரும்பிவிட்டார். பாகிஸ்தானுடன் சேர விரும்பிய ஜூனகர், ஹைதராபாத், காஷ்மீர் அரசுகள் நீண்ட கால இழுபறிக்குப் பிறகு இந்தியாவுடன் இணைந்தன. புதிய இந்தியா உருவானது. பதினாறு ஆண்டு கால நேருவின் ஆட்சியில் அது நிலைபெற்றது. சீனப்போர் அவரைப் பெரிதும் அதிர்ச்சுக்குள்ளாக்கியது. அதுவே அவருடைய மறைவுக்கும் காரணமானது.
சன்யாலின் நூலை மாபெரும் தகவல்களஞ்சியம் என்றே சொல்லவேண்டும். குறுக்கும் நெடுக்குமாக அவற்றை அவர் பின்னித் தொகுத்து முன்வைக்கும்போக்கில் அதன் மீது விழும் புதிய வெளிச்சத்தை நாம் பார்க்கும்படி செய்கிறார். இந்தியாவின் தோற்றத்தையும் காலம்தோறும் நிகழ்ந்துவரும் மாற்றங்களையும் புரிந்துகொள்ள இந்த வெளிச்சம் உதவுகிறது.

(ஏழு நதிகளின் நாடுசஞ்வீவ் சன்யால். தமிழில் சிவ.முருகேசன். சந்தியா பதிப்பகம். 77, 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை-83. விலை.ரூ.315.)