எங்கள்
பள்ளியில் எங்களுக்கு வரலாற்றுப்
பாடத்தை நடத்தியவர்களில் இரண்டு
ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். ஒருவர்
ராமசாமி. இன்னொருவர் சுப்பையா.
இருவருமே அடிப்படையில் வரலாற்றாசிரியர்கள் அல்லர். ஆள்
இல்லாத குறைக்கு பாடம்
எடுத்தவர்கள். ஆனால் ஒரு
வரலாற்றுப்பாடத்தை எப்படி
நடத்தவேண்டும் என்பதற்கு அவர்களே
பொருத்தமான இலக்கணம் என்று
சொல்லலாம். புத்தகத்தையே
தொடமாட்டார்கள். ஆனால் பாடத்துக்குரிய பகுதியை ஒரு
கதையைச் சொல்வது போல,
சம்பவங்களைப் பின்னிப்பின்னிச் சொல்லிக்கொண்டே செல்வார்கள். கேட்கும்போதே
நெஞ்சில் பதிந்துவிடும். ஒருவகையில்,
இந்திய வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆவல் எனக்குள்
எழ அவர்களே காரணம்.
சமீபத்தில் ஒரு வாரமாக
விட்டுவிட்டு சஞ்சீவ் சன்யாலின்
ஏழு நதிகளின் நாடு
புத்தகத்தைப் படித்தபோது பழைய
ஆசிரியர்களின் நினைவு வந்துவிட்டது.
மனத்துக்கு நெருக்கமான ஓர்
ஆசிரியரைப்போல விவரித்துச் செல்லும்
சன்யாலின் எழுத்துமுறை இந்தப்
புத்தகத்துக்கு மிகப்பெரிய பலம்.
இந்தப் புத்தகத்தைத் தமிழில்
மொழிபெயர்த்திருக்கும் சிவ.முருகேசனுக்கு
தமிழுலகம் நன்றி சொல்லவேண்டும்.