கைப்பேசியில் மணியொலித்தது. சாரதாவின்
அழைப்புக்காகவே உருவாக்கப்பட்ட இசைக்கோவை.
எடுத்து காதில் வைத்ததுமே
“எப்படி இருக்கிங்க? பிரயாகைலாம்
எப்படி இருக்குது?” என்றாள்.
பதில் சொல்லி முடித்ததும்
அந்தப் பக்கத்திலிருந்து நாக்கை
சப்புக்கொட்டும் சத்தம்
கேட்டது. “நீங்க கெளம்பிப்
போயி இன்னியோட ஏழு
நாளாயிட்டுது. இன்னும்
எட்டு நாளை ஓட்டணும்.
இப்பவே எங்க எங்கன்னு
ரெண்டு கண்ணும் தேடுது”
என்று சிணுங்கலோடு சொல்வதும்
கேட்டது. சட்டென நான்
பேச்சின் திசையை மாற்றி
“சந்திரா எப்படி இருக்கா?
பிடிவாதம் பிடிக்காம ஸ்கூல்
போறாளா?” என்று கேள்விகளை
அடுக்கினேன்.
ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு
சுற்றுலாவுக்கான பேச்சைத்
தொடங்கியதுமே எல்லோருக்கும் சேர்த்துத்தான் பயணச்சீட்டுகளை முன்பதிவு
செய்துவைத்திருந்தேன். கடைசி
நேரத்தில் அவர்கள் வரமுடியாதபடியான சூழல் உருவாகிவிட்டது. மாதாந்திர சுழற்சி
இருபது இருபத்தைந்து நாட்களுக்குமேல் தள்ளிப்போய் பரிசோதித்ததில் குழந்தைதான் என்பது
உறுதியாகிவிட்ட தருணம் அது.
ஏழெட்டு ஆண்டுகள் கழித்து
உருவாகியிருக்கும் கர்ப்பம்
என்பதால் அந்த டாக்டரம்மாவின் எச்சரிக்கைக்குக் கட்டுப்பட்டாக
வேண்டியிருந்தது.
அன்று பார்த்த அனுபவங்களைச்
சுருக்கமாகச் சொல்லிவிட்டு உரையாடலை
முடித்துக்கொண்டேன்.
பிரயாகையிலிருந்து புறப்படும்போது மழை பொழிந்துகொண்டிருந்தது. மழையைக் காரணமாகக்
காட்டியாவது இன்னும் சிறுது
நேரம் சங்கமக்கரையோரம் நிறுத்துவார்கள், இன்னும் கொஞ்சம்
ஆசை தீர வேடிக்கை
பார்க்கலாம் என்றொரு சின்ன
ஆசை எழுந்தது. ஆனால்
அது நடக்கவில்லை. புறப்படுவது
என்பதில் திவாரி வழக்கம்போல
மிகவும் உறுதியாக இருந்தார்.
சுற்றுலா நிறுவனத்தின் சார்பாக
வந்தவர் அவர். ஒரு
மணிக்கு பத்து முறையாவது
“ஜல்தி ஜல்தி” என்று
திவாரி விரட்டிக்கொண்டே இருந்தார்.
இந்தி, ஆங்கிலம்,
தமிழ், தெலுங்கு, கன்னடம்
என எல்லாமே கலந்த கலவையில் இருந்தது
அவர் பேச்சு. உடைந்த
மொழித்துண்டுகளை இணைத்து
அவர் சொல்ல வந்த
ஒரே விஷயம் “பாக்கறதுக்கு இன்னும்
கோடி இடங்கள் இருக்குதுங்க. ஒரொரு எடத்துலயும்
ஒரொரு காரணத்த சொல்லி
நின்னுநின்னு போனா ஊருக்கு
திரும்ப ஒரு மாசமாயிடும், பரவாயில்லயா?” என்பதுதான்.
எங்கள் குழுவிலும் பல
பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். எல்லோருக்கும்
புரிவதற்காகத்தான் அப்படிப்
பேசுவதாக அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்.
வண்டியின் சக்கரங்கள் அசைந்து
நகர்ந்த பிறகுதான் பயணம்
உண்மையிலேயே தொடங்கிவிட்டதை மனம்
உணர்ந்தது. வெளியே எங்கெங்கும்
மனிதக்கூட்டம். அவர்களுக்குப்
பின்னால் வெகுதொலைவுவரைக்கும் கங்கையும்
யமுனையும் அசையும் நீர்வெளி.
இரண்டு நதிகளும் எதிரெதிர்
நீரோட்டங்களைக் கொண்டவை என்பதை
நம்பவே முடியவில்லை. மழைத்தூறலுக்கு நடுவில் அந்தத்
தண்ணீர்ப்பரப்பு மங்கலான
சித்திரத்தைப்போல காணப்பட்டது. பிறகு ஒரு
கோடுபோல சிறுத்து மறைந்துவிட்டது. ஒரு
கணம் இனிமேல் இந்த
நதியை எப்போது பார்க்கப்
போகிறோம் என்ற எண்ணம்
எழுந்துவிட ஏக்கத்தில் மனம்
கனத்தது.
பிரயாகையைப் பார்க்கவேண்டும் என்கிற
கனவு என் பள்ளிக்கூட
வயதிலேயே ஆழ்மனத்தில் விதையென
விழுந்துவிட்டது. ஆறாவது
வகுப்பில் படிக்கும்போது நடைபெற்ற
வினாடிவினாப் போட்டியொன்றுதான் அதற்குக்
காரணம். கேள்வி கேட்டவர்
”இந்தியாவில் மூன்று கடல்களின்
சங்கமம் எங்கே நிகழ்கிறது?”
என என்னிடம் கேட்டதும்
”கன்னியாகுமரி” என்று உடனடியாகப்
பதில் சொன்னேன். அந்த
உற்சாகத்தில் அவர் என்னிடமே
மீண்டும் “இந்தியாவில் மூன்று
நதிகளின் சங்கமம் எங்கே
நிகழ்கிறது?” என்று மிகுந்த
எதிர்பார்ப்புடன் கேட்டார்.
எனக்கு பதில் தெரியவில்லை. நான் சொல்லிவிடுவேன் என அவர்
எதிர்பார்த்திருப்பார் போல.
குறித்த நேரத்துக்குப் பிறகும்
கூடுதலான சில நொடிகள்
என் பதிலுக்காகக் காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் பார்வையுடன் அடுத்த
மாணவனின் பக்கம் விரலைத்
திருப்பினார் அவர். அவனும்
சொல்லவில்லை. வகுப்பில் யாருக்குமே
பதில் தெரியவில்லை. பிறகு அவரே
பதில் சொல்லி முடித்தார்.
அன்றுமுதல் பிரயாகையை நினைக்காத
நாளே இல்லை. கங்கை,
யமுனையைப்பற்றிய பாடங்களை
அடுத்தடுத்த வகுப்புகளில் கேட்ட
பிறகு பிரயாகையின் நினைவு
இன்னும் அதிகரித்துவிட்டது.
வாகனம் வேகமெடுத்து சாலையிலிருந்து திரும்பும்போது ஒரு
பெரிய பிறை வடிவத்தில்
பிரயாகை ஒளிர்வதைப் பார்த்தேன்.
காலையில் குளிப்பதற்காக கரையோரத்தில்
நின்றிருந்தபோது, அந்த
ஒளி கண்களைக் கூசவைத்தபடி
இருந்தது. சங்கமப் பரப்பிலிருந்து சூரியன் பத்து
பதினைந்தடி உயரத்துக்குச் சென்றுவிட்டிருந்தான். சூரிய ஒளியில்
வெண்கடல்போல அசைந்துகொண்டிருந்தது நதி.
கோடிக்கணக்கில் வெண்பாம்புகள் புரண்டு
நெளிவதுபோல அலைகள் நெளிந்தன. வானத்தைவிட நதியே
மனத்தைக் கொள்ளைகொள்வதாக இருந்தது.
“நம்ம
பூனை காலை நக்குமே,
அதுமாதிரி இருக்குதுப்பா” கரையலைகளில்
கால் நனைத்தபடி நின்றிருந்த
சிறுவனொருவன் அருகிலேயே நின்றிருந்த
தன் அப்பாவிடம் அண்ணாந்து
சொன்ன சொற்கள் காதில்
விழுந்தன. தமிழில் ஒலித்த
குரலைக் கேட்ட உற்சாகத்தில்
உடனே திரும்பினாலும் கரையோர
மணல்மேட்டைப் பார்ப்பதுபோல ஓரவிழியால்
அவனைப் பார்த்தேன். ஒல்லியான
தேகம். முதுகுப்பட்டைகள் தனித்துத்
தெரிந்தன. “உனக்கு எப்படிப்பா
இருக்குது?” என்று விடாமல்
கேட்டான் அவன். “வழவழன்னு
ஒரு துணி கால்மேல
பட்டுட்டு போகறமாதிரி இருக்குது”
என்று பதில் சொன்னார்
அவர்.
குனிந்து இரு கைகளாலும்
நீரை அள்ளி அள்ளி
தண்ணீரிலேயே விட்டபடி இருந்த
சிறுவன் ஒருகணம் நின்று
”எந்தப்
பக்கம் கங்கை? எந்தப்
பக்கம் யமுனை?” என்று
கேட்டான். அவர் சுட்டிக்
காட்டியதும் “கங்கையில
ஆழம் அதிகமா, யமுனையில ஆழம்
அதிகமாப்பா?” என்று
மறுபடியும் கேட்டான். அவர்
“ரெண்டுலயும் ஒன்னுதாம்பா” என்றார்.
அவன் அடுத்த கணமே
“அலைகள் எதுலப்பா அதிகமா
இருக்குது, கங்கையிலயா யமுனையிலா?”
என்று மற்றொரு கேள்வியைக்
கேட்டான். அவர் அதற்கும்
“ரெண்டுலயும் ஒன்னாதான் இருக்குது”
என்றார். அவன் சிணுங்கிக்கொண்டே அவர் முகத்தைப்
பார்த்து “போப்பா, ஒனக்கு
ஒன்னுமே தெரியலை. ஆழம் அதிகமா
இருந்தா அலைகள் குறைவா
இருக்கும். ஆழம் குறைவா
இருந்தாதான் அலைகள் அதிகமா
இருக்கும். எங்க வித்யா
மிஸ் சொல்லியிருக்காங்க” என்று
சொல்லிவிட்டு சிறிது நேரம் அமைதியாக
இருந்தான்.
மறுகணமே எல்லாவற்றையும் மறந்தவனாக
”ரெண்டு நதிங்கதான இங்க
இருக்குது? அப்புறம் எதுக்குப்பா
மூணு நதிகளின் சங்கமம்னு சொல்றாங்க?
மூணாவது நதி எங்கப்பா
இருக்குது?” என்று கேட்டான்.
அவர் அவன் தலைமுடியை
கோதியபடி “மூணாவது நதி
பூமிக்குள்ள மறைஞ்சி ஓடுதுன்னு
ஒரு நம்பிக்கை” என்றார்.
“பூமிக்குள்ளயா?” என்று
ஆச்சரியத்துடன் அவர் முகத்தை
அவன் ஏறிட்டுப் பார்த்தான்.
தொடர்ந்து ”நம்ம
காலுக்கு கீழயா?” என்று
சந்தேகத்துடன் மறுபடியும் கேட்டான்.
ஆமாம் என்பதுபோல அவர்
தலையசைத்துவிட்டு சிரித்தார்.
பிறகு “மண்ணுக்குள்ள
மட்டுமா நதி ஓடுது?,
ஒரொருத்தவங்க மனசுக்குள்ளயும் பல
நதிகள் ஓடிட்டிருக்குது” என்றார்.
அவன் தன் மார்பில்
தொட்டபடி “மனசுலயா?” என்று
ஆவலோடு கேட்டான். “ஆமாம்டா
செல்லம். ஆசைன்னு ஒரு
நதி, அமைதின்னு ஒரு
நதி, ஆத்திரம்னு ஒரு
நதி, வெறுப்புன்னு ஒரு
நதி…..” என்று அவர்
பதில் சொல்லிக்கொண்டிருந்த கணத்தில்
”வந்தமா, நாலுபேர போல
குளிச்சமான்னு இல்லாம நிக்கற
எடத்துல எல்லாம் அப்பாவுக்கும்
புள்ளைக்கும் என்ன பேச்சு
வேண்டி கெடக்குது, வாங்க
வாங்க சீக்கிரமா” என்று
அந்தச் சிறுவனின் அம்மாவைப்
போல தோற்றமளித்த பெண்மணி
அதட்டியபடி இருவரையும் அழைத்துச்
சென்றுவிட்டார்.
சாலையின் இருபக்கங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வாகனங்களில்
ஏதேனும் ஒன்றில் அந்தச்
சிறுவன் இருக்கக்கூடும் என
நினைத்துக்கொண்டேன். வாகனங்களின்
பதிவு எண்ணை வைத்துக்கொண்டு அந்த எண்ணுக்குரிய
மாநிலங்களின் பெயரைக் கண்டுபிடித்து
யாருக்கோ சொல்வதுபோல மனத்துக்குள்
சொன்னபடி வந்தேன்.
கண்களை மூடும்போதெல்லாம் நதியலைகளின்
விதவிதமான கோலங்கள் காட்சிகளென
விரிவதை மாறிமாறிப் பார்த்தபடி
இருந்தேன். துள்ளித்துள்ளி ஓடிவரும்
அலைகள். அடிபணிவதுபோல விழுந்து
தொழும் அலைகள். வெறியுடன்
சீறிவரும் அலைகள். அடங்காத
சீற்றத்துடன் ஆர்ப்பரிக்கும் அலைகள்.
அஞ்சி நடுங்கி பின்வாங்கும்
அலைகள். திகைத்து மயங்கிவிழும்
அலைகள். அடுத்தடுத்து அலைகள்
பொங்கி வந்தபடி இருந்தன.
ஆறேழு மணி நேரப்
பயணத்தில் விதவிதமான நிலக்காட்சிகள் கடந்து சென்றன.
வயல்வெளிகள். பச்சைப்பசேலென சிறுசிறு
குன்றுகள். மணல்மேடுகள். சின்னச்சின்ன
நகரங்கள். ஆறுபோல பெருக்கெடுத்தோடும் கால்வாய்கள். சூரியன்
மறையும் தருணத்தில் ஏதோ
ஒரு பெருநகரத்தை இன்னும்
ஒன்றிரண்டு மணிநேர பயணத்தில்
அடைந்துவிடலாம் என்றும் தங்குவதற்கான
ஏற்பாடுகளை அந்த ஊரில்
செய்துகொள்ளலாம் எனவும்
சொன்னார் திவாரி.
காற்றின் வெம்மை குறைந்து
குளிர் பரவத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் இருளும்
கவிந்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச்
சுற்றுலா நிறுவனத்தில் வேலை
செய்வதாகவும் நிறுவனத்தின் முதலாளி
தன்மீது மிகுந்த பிரியமுள்ளவர்
என்றும் விவரித்தார் திவாரி.
பிரயாகைப் பயணத்துக்கு எப்போதும்
தன்னைமட்டுமே அவர் தேர்ந்தெடுத்து அனுப்புவார் என்றும்
அந்த அளவுக்கு தன்மீது
அவருக்கு நம்பிக்கை அதிகமென்றும்
பெருமையுடன் சொன்னார். இந்த
நிறுவனத்துக்கு வருவதற்கு முன்பாக
ஐதராபாத் நிறுவனமொன்றில் நான்கு
ஆண்டுகளும் புவனேஸ்வர் நிறுவனமொன்றில் ஐந்து ஆண்டுகளும்
வேலை செய்ததாகவும் தெரிவித்தார். அந்த முதலாளிகளிடமும் நம்பிக்கைக்குரிய சேவகனாகவே
பணிபுரிந்ததாகவும் தன்
சொந்தக் காரணங்களுக்காகவே அந்த
நிறுவனங்களிலிருந்து வெளியேறி
வந்ததாகவும் பகிர்ந்துகொண்டார். “அங்கயே
இருந்திருந்தா இந்நேரத்துக்கு மாசத்துக்கு இருபத்தஞ்சி
சொளயா கெடச்சிருக்கும். என்ன
செய்யறது? நமக்கு விதிச்ச
விதி அப்படி” என்று
சொல்லிவிட்டு சிரித்தார். ஜன்னல்
வழியே வந்த நிலா
வெளிச்சத்தில் அவர் தன்
நெற்றிமீது விரலால் கோட்டை
இழுத்தபடி புன்னகைப்பதை என்னால்
பார்க்கமுடிந்தது.
எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த ஒரு வண்டியின்
ஓட்டுநர் கையசைத்து எங்கள்
வாகனத்தை நிறுத்துவதைப் பார்க்கமுடிந்தது. எங்கள் வாகனம்
சட்டென வேகத்தைக் குறைத்து
நின்றதும், இரு ஓட்டுநர்களும்
ஜன்னல் வழியாகவே பேசிகக்கொண்டார்கள். திவாரியும் அவர்களுடைய
உரையாடலில் சென்று சேர்ந்துகொண்டார். அவர்களுடன் பேச
ஆரம்பித்ததுமே அவர் முகத்தில்
மெல்ல மெல்ல பதற்றம்
படிவதைப் பார்த்தேன். அடுத்த
முனையிலிருந்து சொல்லப்பட்டதற்கெல்லாம் அவர்
சரி சரி என்று
பதில் சொன்னார். கடைசியில்
அந்த வண்டி விலகி
எங்களைக் கடந்து சென்றது.
அதைத் தொடர்ந்து சிறியதும்
பெரிதுமான ஆறேழு வண்டிகள்
அடுத்தடுத்துச் சென்றன.
எங்கள் வாகனம் நின்ற
இடத்திலேயே நின்றிருந்தது. ஓட்டுநர்
வாகனத்தின் விளக்குகளை அணைத்தார். ஓட்டுநரும் திவாரியும்
சிறிது நேரம் மாறிமாறிப்
பேசிக்கொண்டார்கள். உரையாடல்
முடிந்ததும் ஒருகணம் ஜன்னலுக்கு
வெளியே இருண்டு தெரிந்த
வானத்தையும் அதில் கரிய
உருவங்களெனத் தெரிந்த மரங்களையும்
பார்த்தபடி பெருமூச்சு விட்டார்
திவாரி. அவர் முகம்
திகைப்பில் உறைந்திருப்பதையும் அவர்
கண்களில் கவலையின் சுவடுகள்
படிந்திருப்பதையும் என்னால்
உணரமுடிந்தது. ஓட்டுநர்
பகுதியிலிருந்து பயணிகள்
பகுதிக்குள் வந்ததும் அவர்
என்ன சொல்லக்கூடும் என்பது
புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
பயணிகளுக்கு நடுவில் வந்து
நின்ற திவாரி வழக்கம்போல
கலவைமொழியில் ”நான்
சொல்றத கேட்டு யாரும்
பயப்பட வேணாம். இந்த
ஊருல எப்பவாச்சிம் இதுமாதிரி
நடக்கறதுண்டு” என்று
ஆரம்பித்தார். அவர்
குரலில் தொனித்த பதற்றத்தாலேயே
பலரும் பயப்படத் தொடங்கினார்கள். “என்ன விஷயம்
திவாரி, எதுவா இருந்தாலும்
தெளிவா சொல்லுங்க” என்றார்கள்.
“சொல்றன்
சொல்றன்” என்றபடி தொண்டையைச்
செருமினார் திவாரி. பிறகு,
“நாம தங்கலாம்ன்னு நெனச்ச
ஊருல சாயங்காலத்துலேருந்து மதக்கலவரம்
நடக்குதாம். ஆறேழு எடத்துல
குண்டு வெடிச்சிருக்காம். பத்து பன்னெண்டு
பேரு அந்த எடத்துலயே
செத்து, நாப்பது அம்பது
பேருக்கும் மேல ஆஸ்பத்திரியில
சேத்திருக்காங்களாம். வழியில
பாக்கற வண்டிங்கள நிறுத்தி
ஆளுங்கள எறக்கி உட்டுட்டு
நெருப்பு வச்சி கொளுத்தறாங்க, ஊருக்குள்ள நூத்தி
நாப்பத்துநாலு சட்டம் போட்டிருக்காங்க, அதனால் வேற
பக்கமா வண்டிய திருப்பி
போங்கன்னு சொல்லிட்டு போறாங்க”
என்று நிறுத்தி நிறுத்திச்
சொன்னார்.
“அவுங்க
யாரு?”
“பிரயாகைக்கு
போறவங்க. எப்படியோ தப்பிச்சி
இந்தப் பக்கமா வந்துருக்காங்க” என்றார் திவாரி.
”இப்ப
நாம என்ன செய்யப்போறம்?” கேட்கும்போதே குரலில்
பீதி படியத் தொடங்கிவிட்டது.
“மறுபடியும்
பிரயாகைக்கு திரும்பிப் போவறதுல
அர்த்தமே இல்லை. வேற
ஏதாச்சிம் வழியில நாம
நம்ம திட்டப்படி போயிட்டிருப்போம். அதான் நல்லது”
என்றபடி திவாரி பெருமூச்சு
விட்டார்.
வண்டியில் உட்கார்ந்திருந்தவர்கள் அனைவரும்
ஒரே நேரத்தில் சத்தமாக
ஏதேதோ கேள்விகள் கேட்க
ஆரம்பித்தார்கள். மாறிமாறி
கூச்சல் போட்டதில் யாருடைய
பேச்சும் யாருடைய காதிலும்
விழவில்லை. திவாரி “அமைதி
அமைதி” என்று இரண்டு
கைகளையும் தூக்கிவைத்துக்கொண்டு கெஞ்சினார்.
“யாருக்கும்
எதுவும் நடக்காது சார்.
எங்கமேல நம்பிக்கை வைங்க.
தயவுசெஞ்சி சத்தம் போடாதீங்க.
ஒங்க எல்லாரையும் பத்திரமா
ஊருக்கு கொண்டுபோய் சேர்க்கறது
என் பொறுப்பு. என்ன
நம்புங்க. என்னை மீறி
ஒரு துரும்புகூட ஒங்க
மேல படாது. தயவுசெஞ்சி
அமைதியா இருங்க….” என்று
மன்றாடினார்.
“ஒங்களுக்கு
மாத்து வழி தெரியுமா?” என்று
கேட்டார் ஒரு பெரியவர்.
“கொஞ்சம்
தெரியும் சார். சமாளிக்கலாம்” என்று தலையாட்டினார்
திவாரி. “ப்ளீஸ், என்ன
நம்புங்க” என்று மீண்டும்மீண்டும் கைகளைக் குவித்து
கும்பிட்டபடி சொன்னார். சலசலப்புகள்
அடங்கி ஒருவழியாக ஒவ்வொருவரும்
இருக்கைக்குத் திரும்பினார்கள்.
“இந்த
நேரம் பார்த்து செல்
சிக்னல் கெடைக்கவே மாட்டுது.
எந்த நேரத்துல அவசியமோ,
அந்த நேரத்துக்கு இது
உதவாது……”
யாரோ ஒருவர் சொன்னதும்
ஒவ்வொருவரும் தத்தம் கைப்பேசிகளை
எடுத்து பரிசோதித்துப் பார்த்தார்கள். நானும் பார்த்தேன்.
சிக்னல் வலிமையைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக இருந்த
இடம் மொட்டையாக இருந்தது.
“யார்கிட்டயாவது இண்டர்நெட்டோடு கனெக்ட்
ஆவற செல் இருந்தா,
அங்க என்ன நடக்குதுன்னு
தகவல் தெரியுதான்னு பாருங்களேன்…….”
“பேசறதுக்கே
சிக்னல் இல்ல, இதுல
நெட்டுக்கு எங்க போவறது?”
”இப்ப
நாங்க என்ன செய்யணும்?”
என்று ஒரு அம்மா
கேட்டார். “வண்டி இப்ப
திரும்பி வந்த வழியிலயே
கொஞ்ச தூரம் போவப்
போவுதும்மா. பதினஞ்சி இருபது
கிலோமீட்டர் தூரத்துல வேற
ஒரு பாதை வரும்.
அது ஒரு சின்ன
கிராமத்து பாதை. ஒரு பத்து
கிலோமீட்டர் தூரம் அதுல
போயி வேற ஒரு
மெயின் ரோட்ட புடிச்சிடலாம். ஒரு அம்பது
நூறு கிலோமீட்டர் சுத்துவழியா
போனாலும் பாதுகாப்பா போயிடலாம்”
என்றார். தொடர்ந்து “நீங்க
அமைதியா இருந்தாதான் எனக்கு
தெம்பா இருக்கும்” என்று
சொன்னார்.
”எது
செஞ்சாலும் பாதுகாப்பா செய்ங்க
சார்……” என்றபடி பீதியிலிருந்து இன்னும் விலகாத
நிலையில் இருக்கையில் சாய்ந்து
கண்களை மூடிக்கொண்டார் ஒருவர்.
வாகன ஓட்டி வண்டியைக்
கிளப்பி ரிவர்ஸ் எடுத்தார்.
நிலா வெளிச்சம் சற்றே
ஆறுதலாக இருந்தது. திடீரென
சந்தடியே இல்லாத காட்டுவழிபோலக் காணப்பட்டது பாதை.
“எந்த
ஊருல இருக்கம் நாம
இப்ப?”
திவாரி என்மீது ஒரு
பார்வையும் சாலையின்மீது ஒரு
பார்வையுமாக பார்த்தபடி ஏதோ
ஒரு பெயரைச் சொன்னார்.
என்னால் அந்த உச்சரிப்பை
சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. வெறுமனே தலையை
அசைத்துக்கொண்டேன். நிமிடத்துக்கு
ஒருமுறை கைப்பேசியைத் தொட்டு
சிக்னல் நிலைமையைப் பார்த்துவிட்டு வானத்தை அண்ணாந்து
பார்த்தேன். நிலாவைச் சுற்றி
அங்கங்கே நட்சத்திரங்கள் தெரிந்தன.
இடதுபுறத்தில் ஒரு பெரிய
மணல்மேடு தெரிந்தது. அதையடுத்து
சின்னச்சின்ன மரங்கள் அடர்ந்த
தோப்பு விரிந்துபோவதைப் பார்க்கமுடிந்தது. வெளிச்சத்தில் அஞ்சி
ஓசையெழுப்பிய பறவைகள் மரங்களுக்கு
மேலெழுந்து வட்டமிட்டுச் சுழன்றன.
சட்டென ஒரு திருப்பத்தில்
நீர் தேங்கிய ஒரு
பள்ளத்தைப் பார்க்கமுடிந்தது. நிலா
வெளிச்சத்தில் அந்த நீர்
ரத்தக்குட்டைபோல செந்நிறத்தில்
இருப்பதைப் பார்க்க விசித்திரமாகவும் அச்சமாகவும் இருந்தது.
காற்று வீசிய திசையில்
பொசுங்கும் பச்சைத்தழையின் மணம்
வீசியது.
பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் “டவரே
இல்லாத காடு சார்
இந்த இடம். ஒரு
பாய்ண்ட்கூட இல்லை” என்று
கசப்போடு நாக்கைச் சப்புக்கொட்டினார். வண்டிக்குள் பல
பேர் சிக்னல் கிடைக்காத
வெறுப்பில் சீச்சீ என்று
கையை உதறினார்கள்.
அந்தக் குளிரிலும் வேர்வைத்துளிகளால் நிறைந்துவிட்ட நெற்றியை
கைக்குட்டையால் துடைத்தபடி அருகில்
வந்து உட்கார்ந்த திவாரி
“என்னா நாடு சார்
இது? ஒருநாள் சோத்துக்கே
இங்க ஒரொருத்தனும் நாயா
பேயா அலையவேண்டி இருக்குது.
இதுல சாதி மதம்லாம்
யாரு சார் பாக்கறாங்க
இந்த காலத்துல? எங்கயோ
கொழுப்பு புடிச்ச ஆளுங்க
சேந்து போடற ஆட்டத்துல
அப்பாவி மக்களுக்குத்தான் சார்
கஷ்டம்” என்று பக்கத்தில்
இருந்த பெரியவரைப் பார்த்துச்
சொன்னார். அவர் பதில்
எதுவும் சொல்லாமல் ஜன்னலுக்கு
வெளியே பார்வையைத் திருப்பினார். மிக விரைவிலேயே
நிலா வெளிச்சமும் அரைகுறையான
இருட்டும் கண்களுக்குப் பழகிவிட்டது.
வலது பக்கத்தில் ஒரு
கிளைப்பாதை பிரிந்துபோகும் இடத்தில்
வண்டி வேகம் குறைந்து
நின்றது. ஓட்டுநர் திவாரியைப்
பெயர்சொல்லி பக்கத்தில் வருமாறு
அழைத்தார். “இந்த ரோடுதானா
நீ சொன்னது?” என்று
கேட்பதையும் திவாரி அக்கம்பக்கம்
பார்த்துவிட்டு “ஆமாம்
ஆமாம்” என தலையசைப்பதையும் பார்க்க முடிந்தது.
வண்டி அந்தப் பாதையில்
இறங்கி மெதுவாக ஓடத்
தொடங்கியது.
திவாரி மறுபடியும் திரும்பிவந்து
என் அருகில் உட்கார்ந்தார். “இனிமே ஒரு
கவலயும் இல்ல சார்.
இன்னம் ஒரு கால்
மணிநேரத்துல என்.எச்.ச
புடிச்சிடலாம்” அவர்
தன் நெஞ்சைத் தொட்டு
நிம்மதியுடன் சொன்னார். மணியைப்
பார்த்தேன். பத்தரை.
“எதாச்சிம்
அங்க சாப்புட கெடைக்குமா?”
என்று ஒரு தெலுங்குக்காரர் கேட்டார். “என்.எச்.தான
சார்? நிச்சயமா எங்கயாச்சிம்
ஒரு கடை கெடைக்கும்
சார்” என்று சொன்னார்
திவாரி. சற்றே பதற்றம்
அடங்க, ஒவ்வொருவராக இருக்கையில்
சாய்ந்து வெளியே வேடிக்கை
பார்க்கத் தொடங்கினார்கள்.
”குக்கிராமமா
இருக்கும்ன்னு நெனைக்கறேன். ஒரே
ஒரு பாய்ண்ட் கூட
சிக்னல் கெடைக்கமாட்டுது.”
“பி.எஸ்.என்.எல்.
சிக்னலே இல்லைங்கறபோது, மத்த
ஆப்பரேட்டர்ங்க சிக்னல் கிடைக்கறதுக்கு சான்ஸே இல்லை.”
ஏறத்தாழ அரைமணி நேரமாகியும்
வண்டி போய்க்கொண்டிருந்ததே தவிர,
திவாரி சொன்ன திருப்பம்
வரவில்லை. திவாரியின் முகத்தில்
குழப்பம் படிந்திருப்பதை முதன்முதலாகப்
பார்த்தேன். “என்ன திவாரி,
ஏதோ என்.எச்.
வரும்ன்னு சொன்னிங்க? ஒன்னயும்
காணோமே” என்று குத்தலாகக்
கேட்டார் ஒரு மலையாளி. திவாரி “இந்நேரத்துக்கு வந்திருக்கணும் சார்.
ஏன் வரலைன்னுதான் எனக்கும்
புரியலை” என்று இழுத்தார்.
“எங்கயாச்சிம்
வழி மாறி தப்பான
வழியில வந்துட்டமா?” நடுங்கும்
குரலில் பயந்துகொண்டே கேட்டார்
ஒரு அம்மா. “தெரியலைம்மா. அதான் குழப்பமா
இருக்குது” என்றார்
திவாரி. கன்னத்தில் படர்ந்திருந்த
நரைமுடியைச் சொறிந்தபடி நிலைகொள்ளாமல்
தவித்தார் அவர். பயணிகளின்
அடுத்தடுத்த குத்தலான கேள்விகளுக்கெல்லாம் “இதோ வந்துடும்,
இதோ வந்துடும்” என்று
நிதானமாக பதில் சொல்லிக்கொண்டே வந்தார் திவாரி.
சிலர் அவரைப் பார்த்து
கோபத்துடன் கடுமையான வார்த்தைகளை
மாறிமாறிக் கொட்டினார்கள். “மாஃப்
கரோஜி, மாஃப் கரோஜி”
என்று ஒரு வார்த்தை
பதிலையே திரும்பத் திரும்ப
சொல்லிக்கொண்டிருந்தார் திவாரி. பிறகு மெதுவாக
வாகனஒட்டிக்கு அருகில் சென்று
உட்கார்ந்தார். அடங்கிய
குரலில் இருவரும் மாறிமாறிப்
பேசிக்கொண்டிருந்தார்கள்.
எதிர்பாராத கணத்தில் வண்டி
வேகம் குறைந்து நின்றது.
அது ஒரு திருப்பம்.
இரண்டு பக்கங்களிலும் நீண்டு
செல்லும் பாதைகள் காணப்பட்டன. ஆனால்
நெடுஞ்சாலைக்குரிய தோற்றம்
அந்தப் பாதையில் இல்லை.
ஏதோ கிராமத்துப் பாதைபோலவே
காணப்பட்டது.
என் இருக்கைக்குப் பின்னாலிருந்து நான்கு பேர்
வேகமாக எழுந்து ஓட்டுநரிடம்
சென்றார்கள். “பயப்படாதீங்க பயப்படாதீங்கன்னு இப்படி நடுக்காட்டுல
கொண்டாந்து நிறுத்திட்டிங்களே, என்னய்யா
இது? இதுதான் டூர்
நடத்தற லட்சணமா?” என்று
சத்தம் போட்டார் ஒருவர்.
இன்னொருவர் திவாரியின் பக்கம்
திரும்பி “எல்லாம்
தெரிஞ்சாப்புல கத உட்டியே,
இதுதான் என்.எச்.சா?
எல்லாரயும் எங்கியாச்சிம் கூண்டோட
தள்ளிடலாம்ன்னு நெனச்சிட்டியா?” என்று
குரலை உயர்த்தினார். “ப்ளீஸ்.
ப்ளீஸ். ஆத்தரப்படாதீங்க சார்.
நாம பாதுகாப்பான எடத்துலதான்
இருக்கறோம். குழப்பத்துல எங்கயோ
ரோட்ட மிஸ் பண்ணிட்டோம்ன்னு நெனைக்கறேன். கவலப்படாதீங்க
சார். எல்லாத்தயும் சரி
பண்ணிடிடலாம். அவுங்கவுங்க
இடத்துலயே எல்லாரும் உக்காருங்க
சார்” என்று கெஞ்சினார்
திவாரி. “இந்த கெஞ்சல்
கொஞ்சல் கதயே வேணாம்.
மொதல்ல சரியான ரூட்ட
கண்டுபுடிக்கற வழிய பாருங்க”
என்று சத்தம் போட்டுவிட்டு
திரும்பினார் ஒருவர். அடிவாங்கியதுபோல திவாரியின் கண்கள்
கலங்கின. ஒருகணம் திகைத்து,
மறுகணமே நடுங்கும் தன்
கைகளைக் குவித்து வண்டிக்குள்
இருப்பவர்கள் அனைவரையும் பார்த்து,
“என் அம்மா மேல
சத்தியம். என் புள்ளமேல
சத்தியம். எங்கள நம்புங்க.
கண்டிப்பா உங்க எல்லாரயும்
பாதுகாப்பா ஊருக்கு அழச்சிட்டு
போவேன். அது என்
கடமை” என்று மன்றாடினார்.
வண்டியில் இருந்தவர்களின் உரத்த
குரல்கள் சட்டென அடங்கி
அமைதி நிலவியது. ஓட்டுநர்
எழுந்துவந்து திவாரியின் பக்கத்தில்
நின்றார்.
“என்
ஞாபகப்படி நாம இந்த
எடத்துலதான் என்.எச்.ரோட்டதான்
தொட்டிருக்கணும். எந்த
இடத்துல தப்பு நடந்திச்சின்னு தெரியலை. எங்கயோ
எடம் மாறி வந்துட்டம்.
ரெண்டு பக்கமும் பாதை
இருக்கறதால, எந்தப் பாதை
சரியான பாதைன்னு தெரியலை.
யாராவது ரெண்டு பேரு
என் கூட வரணும்.
இன்னும் ரெண்டு பேரு
அவரு கூட போவணும்.
ஆளுக்கொரு திசையில போயி
பாக்கலாம். எது சரியான
பாதைன்னு தெரிஞ்சிட்டு வந்து
வண்டிய எடுத்தும் போவலாம்”
ஒருவரையொருவர் பார்த்தபடி நான்கு
பேர் இறங்கினார்கள். திவாரிக்குப்
பின்னால் இருவர். ஓட்டுநருக்குப் பின்னால் இருவர்.
இரண்டு குழுக்களும் இரு
திசைகளில் நடக்கத் தொடங்கின.
திகைப்போடு நாங்கள் அவர்களையே
பார்த்துக்கொண்டிருந்தோம். “சீக்கிரமா
வந்துடுங்க…” என்று அடங்கிய
குரலில் சொன்னார்கள் சிலர்.
நிலா உச்சிக்குப் போய் சரியத் தொடங்கியிருந்தது. மணியைப் பார்த்தேன். பன்னிரண்டரை. இன்னும் சிக்னல் வரவே இல்லை. ஒருபுறம் பசி. இன்னொரு புறம் அச்சம். யாரோடும் இயல்பாக உரையாட முடியவில்லை. சட்டென்று அந்த அமைதியைக் கலைத்தபடி யாரோ ஒருவர் “ஸ்ரீகுரு சரண் சரோஜ் ரஜ் நிஜ் மனு முகுரு சுதாரி,
பரனவூ ரகுபர் பிமல்
ஜஸு ஜோ தாயகு
ஃபல் சாரி” என்று ஹனுமான் சாலீஸைத் தொடங்குவதைக் கேட்டேன். சற்றே அழுத்தமான
முதிய பெண்
குரல் வாகனத்தின் முன்வரிசைப் பக்கத்திலிருந்து கேட்டது. பல்லவியை
முடித்துவிட்டு அவர் சரணத்தை
”ஜய ஹனுமான் ஞான
குண சாகர், ஜய
கபீஸ் திஹு லோக்
உஜாகர்” என்று தொடங்கியதும்
அவருடன் மற்றொரு இணைந்துகொண்டது. அடுத்த வரியைத்
தொட்ட கணத்தில் வேறொரு ஆண்குரலும் சேர்ந்துகொண்டது. கொதித்துக்கொண்டிருந்த மனநிலை மெல்ல மெல்ல தணியத் தொடங்கியது. யாருடைய முகமும் தெரியவில்லை. அந்த வரிகளும் வரிகளுக்குப் பொருளும் புரியாதவர்கள்கூட மானசீகமாக அவற்றைப் பின்தொடர்வதைப்போல கண்களை மூடிக்கொண்டார்கள். எனக்கு அருகில் இருந்தவர் விழிமூடி மனத்துக்குள்ளேயே எதையோ முணுமுணுத்தபடி இருந்தார். சிலர் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி உட்கார்ந்திருந்தனர்.
ஹனுமான் சாலீஸைத்
தொடர்ந்து ஒரு பெரியவர்
ராம கீர்த்தனைகளைத் தொடங்கினார். அடுத்து இன்னுமொருவர்
புரந்தரதாசரின் கன்னடக்கீர்த்தனைகளைப் பாடினார்.
அது முடிந்ததும் அடுத்து
யார் தொடங்குவது என
தயங்குவதுபோல சில நொடிகள் அமைதியில் கடந்து
சென்றன. எதிர்பாராத கணத்தில்
பின்னிருக்கையிலிருந்து ஒரு
பெண் “உதிக்கின்ற செங்கதிர்
உச்சித்திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற
மாணிக்கம்” என்று தமிழில்
அபிராமி அந்தாதியைத் தொடங்கினார்.
பாட்டில் லயித்தபடி ஜன்னல்
பக்கமாகத் திரும்பியபோது அடர்ந்திருந்த
இருட்டுக்குள் எங்கோ ஒரு
புள்ளிபோல ஒரு சுடர்
அசைவதைப் பார்த்தேன். முதலில்
அதை நான் பொருட்படுத்தவில்லை. சில கணங்களுக்குப்
பிறகுதான் அது நகர்ந்துசெல்வதை உணர்ந்தேன். ஆச்சரியமாக
இருந்தது. அக்காட்சி உண்மையா
அல்லது என் மனமயக்கமா
என்று தீர்மானமாகத் தெரியாததால்
யாரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றவில்லை. பீதியின்
பிடியிலிருந்து விடுபட்டு இயல்பான
நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்களை மீண்டும்
பீதிக்குள் அழுத்தவும் தயக்கமாக
இருந்தது. அதே கணத்தில்
அந்தச் சுடர் எங்கள்
வாகனம் நின்றிருந்த திசையில்
திரும்பி வருவதைப் பார்த்தேன்.
நெருங்கி வரட்டும் பார்க்கலாம்
என நினைத்தபடி அமைதியாக
அதன் அசைவையே கவனிக்கத்
தொடங்கினேன். அதற்குள் ”ஆனந்தமாய்
என் அறிவாய் நிறைந்த
அமுதமுமாய்” என இரண்டாவது
பத்து தொடங்கிவிட்டது. மூன்றாவது
பத்து தொடங்கிய தருணத்தில்
அந்தச் சுடர் வாகனத்தை
நெருங்கிவிட்டது.
“கோன்
ஹை? கோன் ஹை?”
என்று கேட்டு அதட்டும்
குரல் கூட அப்போதுதான்
காதில் விழுந்தது. எல்லோருக்கும்
அந்தக் குரல் கேட்டிருக்கும் என எண்ணுகிறேன். பாடல் சட்டென
நின்றுவிட எல்லோரும் ஜன்னல்
பக்கமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அந்தக்
குரலுக்குரிய மனிதர் கம்பளியைப்
போர்த்திக்கொண்டு கையில்
வைத்திருந்த லாந்தரோடு மிகவும்
நெருங்கி வந்துவிட்டார். “கோன்
ஹை? கோன் ஹை?”
என அவர் குரல்
அப்போதும் அதட்டியபடி வந்தது.
சட்டென்று எங்கள் குழுவில்
வந்திருந்த நான்கு இந்திக்காரர்கள் வாகனத்திலிருந்து இறங்கி
“ஆயியே ஜி. ஹம்
டூரீஸ்ட் லோக்” என்றார்கள்.
தன் கேள்விக்குரிய பதில்
கிடைத்ததும் லாந்தர்காரரின் நடையில்
வேகம் குறைந்ததைக் கண்டேன்.
இந்திக்காரர்கள் இன்னும்
சிறிதுதூரம் நடந்து லாந்தர்காரரை
எதிர்கொண்டார்கள். லாந்தரை
உயர்த்தி அந்த வெளிச்சத்தில்
வாகனத்துக்குள் இருந்தவர்களை ஒருகணம் பார்த்தார் அவர்.
நகரத்தை நெருங்கும் சமயத்தில்
கலவரச்செய்தியைக் கேட்டதிலிருந்து மாற்றுவழி தேடிய
முயற்சியில் பிழையான திசையில்
வந்து அகப்பட்டது வரைக்கும்
லாந்தர்காரரிடம் விரிவாகச்
சொன்னார்கள். தொடர்ந்து அவர்களுடைய
உரையாடல் சிறிது நேரம்
இந்தியிலேயே நடைபெற்றது. “தப்பாதான்
வந்துட்டிங்க. ஆனா
இந்தப் பக்கமா போயி
என்.எச்.ச
புடிச்சிடலாம். டிரைவர்
வந்தா சொல்லுங்க” என்றார்.
பிறகு, “இங்கதான் எங்க
தோட்டம். வாரத்துக்கு ஒருநாள்
தண்ணி கட்டணும். நாள்முழுக்க
இங்க கரண்டே இருக்காது.
ராத்திரி ரெண்டுமணிக்கு மேலதான்
வரும். திடீர்னு பாட்டு
சத்தம் கேட்டதும் ஒரு
பயம் வந்துட்டுது. அதான்
ஓடியாந்தன்” என்று புன்னகைத்தபடி
திரும்பி நடக்கத் தொடங்கினார். ”இந்தப் பக்கம்,
இந்தப் பக்கம் போவணும்”
என்று ஞாபகமாக சுட்டிக்காட்டினார்.
அவர் உருவம் மறைந்ததும்
தெலுங்குக் கீர்த்தனை ஒன்றைத்
தொடங்கினார் ஒருவர். அடுத்தடுத்து
அவரே ஆறேழு கீர்த்தனைகளைப் பாடிவிட்டார். அது
முடிந்த கையோடு தொடக்கத்தில்
ஹனுமான் சாலீஸ் பாடிய
மூதாட்டி மறுபடியும் ஹனுமான்
சாலீஸ் வரிகளைச் சொல்லத்
தொடங்கினார். வாகனத்திலிருந்து இறங்கி
மறைவாகச் சென்று சிறுநீர்
கழித்துவிட்டு திவாரி சென்ற
பாதையையே பார்த்துக்கொண்டு நின்றேன்.
குளிர் இதமாக இருந்தது.
என் நெஞ்சின் ஆழத்திலிருந்து அபிராமி அந்தாதி
வரிகளை ஒவ்வொன்றாக
எடுத்து அசைபோட்டேன். சாரதாவுக்கு
மிகவும் பிடித்த பாடல்கள்.
அதை ராகமுடன் பாடவேண்டும்
என்பதற்காகவே பாட்டு வகுப்பில்
சேர்ந்து கற்றுக்கொண்டிருந்தாள். அவள்
கைப்பேசியின் சேமிப்பில் அந்தப்
பாடல்கள்தான் முதல் வரிசையில்
இருக்கும். காய்கறி வெட்டும்போது, வாஷிங் மெஷினிலிருந்து துணிகளை எடுத்து
அலசும்போது, உலர்ந்த துணிகளுக்கு
அயர்ன் போடும்போதெல்லாம் அவளுக்கு
அருகிலேயே அந்தப் பாட்டு
ஒலித்தபடி இருக்கும். ”என்ன,
பக்கத்துலயே அபிராமி நிக்கறாளா?”
என்று கிண்டலோடு கேட்கும்போது “உங்களுக்கு வேற
வேலயே கெடையாதா? பேசாம
போங்கப்பா” என்று சொன்னபடி
அவள் உதிர்க்கும் புன்னகையைப்
பார்க்கும்போதே அவளை அப்படியே
அள்ளித் தழுவி முத்தமிடலாம்போல இருக்கும்.
பையிலிருந்து கைப்பேசியை எடுத்துப்
பார்த்தேன். சிக்னல் இருப்பதற்கான
அடையாளமே இல்லை. சாரதாவின்
நினைவுகளை அசைபோட்டபடி வாகனத்துக்குத் திரும்பியபோது லாந்தர்
சுடர் மீண்டும் வாகனத்தை
நோக்கி அசைந்து வருவதைப்
பார்த்தேன். உற்றுப் பார்த்த
பிறகுதான் இரு சுடர்கள்
அருகருகே அசைவதை அறிந்துகொள்ள
முடிந்தது. படிக்கட்டுக்கு அருகில்
வந்தபிறகுதான் என்னைப்போலவே பலரும்
அந்தத் திசையில் பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்தேன். இரண்டு
மூன்று நிமிடங்களில் அச்சுடர்கள்
நெருங்கிவிட்டன. இரண்டு
பேர் வந்து நின்றார்கள். இருவருடைய கைகளிலும்
லாந்தர் விளக்குகள் இருந்தன.
விளக்குகளைக் கீழே வைத்துவிட்டு
இருவரும் தம் தோள்களில்
சுமந்துவந்த வாழைக்குலைகளை வாகனத்தின்
படிக்கட்டில் இறக்கிவைத்தார்கள். பிறகு
கம்பளியிலேயே தம் முகத்தில்
வழிந்த வேர்வையைத் துடைத்துக்கொண்டார்கள்.
அதற்குள் இந்திக்காரர்கள் கீழே
இறங்கிச் சென்று லாந்தர்காரரின் தோளைத் தொட்டு
எதையோ சொல்லத் தொடங்கி
சொற்கள் வராமல் கண்கள்
கலங்க அவருடைய கையைப்
பற்றிக்கொண்டார்கள். பித்துப்
பிடித்ததுபோல ”ஷுக்ரியா
ஷுக்ரியா” என்று சொன்னார்கள். லாந்தர்காரர் அருகில்
நின்றிருந்த இளைஞனைச் சுட்டிக்
காட்டி “என் பையன்.
பஸ்ன்னு சொன்னா அம்பது
பேருக்கு மேல இருப்பாங்க.
ஒரு குலை போதாதுப்பான்னு அவன்தான்
இன்னொரு குலையை வெட்டியாந்தான்” என்று சொன்னார்.
”ஷுக்ரியா ஷுக்ரியா” என்றபடி
அவன் தோள்களைப் பற்றி
அவனுக்கு நன்றி சொன்னார்கள்.
“எல்லாரும்
எறங்குங்க. எறங்குங்க. நேத்து
எப்ப சாப்பிட்ங்களோ, எறங்கி
ஆளுக்கு நாலு பழம்
சாப்புடுங்க…..” என்று வண்டிக்குள்
இருந்தவர்களைப் பார்த்து அழைத்தார்
லாந்தர்காரர். எல்லோரும்
இறங்கி பழங்களை எடுத்துச்
சாப்பிட்டார்கள்.
“நாங்க
கெளம்பறம். கரண்ட் வர
நேரம். வந்ததும் மோட்டார்
போட்டாதான் விடியறதுக்குள்ள தோட்டம்
முழுக்க தண்ணி பாய்ச்ச
முடியும். நல்லபடியா போயிட்டு
வாங்க” என்று கிளம்புவதற்காகத் திரும்பினார். ”ஷுக்ரியா.
ஷுக்ரியா” என்று மறுபடியும்
கைகூப்பி வணக்கம் சொன்னார்கள்
இந்திக்காரர்கள். ஒரு
கணத்துக்குப் பிறகு மூத்த இந்திக்காரர்
எதையோ நினைத்துக்கொண்டவராக வேகமாக
நாலு எட்டு வைத்து
அவர் தோளைத் தொட்டு
“சரியான நேரத்துல கடவுள்மாதிரி
வந்து நீங்க செஞ்ச
உதவிய நாங்க எப்பவும்
மறக்கமாட்டம். தப்பா
எடுத்துக்கக்கூடாது. தயவு
செஞ்சி இத வச்சிக்கணும்” என்றபடி அவருடைய
கையில் ஆயிரம் ரூபாய்
நோட்டொன்றை எடுத்து வைத்தார்.
மின்சாரத்தால் தாக்குண்டவர்போல திகைத்து
கைகளை உதறியபடி பின்வாங்கிய
லாந்தர்காரர் “என்னங்க
இது? கடவுள்னு நீங்களே
சொல்லிட்டு, கடவுளுக்கு பணத்த
கொடுக்க வரீங்களே, நியாயமா
இது. கடவுள் என்னைக்காவது
பணம் வாங்குவாரா?” என்று
புன்னகைத்தபடி மறுத்துவிட்டு ‘வாடா
போவலாம்” என்று மகனை
அழைத்துக்கொண்டு திரும்பிப்
பார்க்காமலேயே நடந்துவிட்டார். அவர்கள்
பின்னால் இரு விழிகள்போல
லாந்தர் சுடர்கள் அசைந்து
அசைந்து நகர்ந்தன.
வயிறு நிறைந்ததுமே எல்லோருக்குள்ளும் இடைவிடாது ஓடிக்
கொந்தளித்தபடியிருந்த எண்ணங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக அடங்கின.
மனமும் உடலும் களைத்துவிட
பலரும் இருக்கைகளிலேயே சாய்ந்து
விழிமூடித் தூங்க ஆரம்பித்தார்கள். நானும் இன்னும்
சிலரும் குளிரைப் பொருட்படுத்தாமல் தரையில் உட்கார்ந்து
பேசிக்கொண்டிருந்தோம். உணர்ச்சிகரமான
கட்டத்தில் மொழியின் தடையை
யாருமே உணரவில்லை. நிலா
வேகவேகமாக வேறொரு திசையில்
சரிந்துகொண்டிருந்தது.
நீண்ட நேரத்துக்குப் பிறகு
ஓட்டுநரின் குழு திரும்பி
வந்தது. அவர்கள் முகத்தில்
ஏமாற்றமும் களைப்பும் கவிந்திருந்தன. அவர்கள் சென்ற
பாதை ஏழெட்டு கிலோமீட்டர்
தொலைவில் உள்ள கிராமத்துக்குச் செல்லும் பாதை
என்றும், அந்தத் திசையில்
அதுவே கடைசிக் கிராமமென்றும்
சொன்னார்கள். அவர்களுக்காக வைத்திருந்த
பழங்களைச் சாப்பிட்டுவிட்டு தண்ணீர்
அருந்தினார்கள்.
அடுத்த அரைமணி நேரத்தில்
திவாரியின் குழுவும் வந்து
சேர்ந்தது. அந்தப் பாதை
என்.எச்.சுடன்
சேரும் இடம் வரைக்கும்
சென்று பார்த்துவிட்டு வந்ததாகவும்
அதுவே பாதுகாப்பான பாதையென்றும்
சொன்னார். “எங்களுக்கு ஏற்கனவே
தெரியும்” என்று சிரித்தார்
ஒரு இந்திக்காரர். “எப்படி,
எப்படி?” என்று குழப்பத்துடன்
அவரைப் பார்த்தார் திவாரி.
“இப்பதான் ஒரு விவசாயி
சொல்லிட்டு போனாரு” என்று
சொல்லிவிட்டு நடந்ததையெல்லாம் விரிவாகச்
சொன்னார். பிறகு அவர்களுக்கென
தனியாக எடுத்து வைத்திருந்த
பழங்களையும் எடுத்துக் கொடுத்தார்.
திவாரி பழத்தை விழுங்கியபடி “என்னா நாடு
சார் இது? வெட்டறவனும்
இங்கதான் இருக்கறான். வாழவைக்கறவனும் இங்கதான் இருக்கறான்”
என்று சொல்லிவிட்டு சத்தமில்லாமல்
சிரித்தார். தொடர்ந்து “சரி,
கெளம்பலாமா?” என்று கேட்டார்.
“இப்பதான்
சரியான வழி தெரிஞ்சிட்டுதே. எங்களுக்கென்ன, வண்டியில
ஏறி உட்கார்ந்ததும் தூங்கிடப்
போறம். பாவம் டிரைவர்.
அவருக்கும் களைப்பா இருக்குமில்ல. கொஞ்ச நேரம்
படுத்து எழுந்திருக்கட்டும் சார்.
அப்பறம் போவலாம்” என்றார்
இந்திக்காரர். “அப்படியா
சொல்றிங்க?” என்றபடி திவாரி
ஓட்டுநரின் பக்கம் பார்த்தார்.
அந்த முடிவில் தனக்கும்
சம்மதம் என்பதுபோல அப்படியே
வண்டியின் ஓரமாக படுத்து
கம்பளியைப் போர்த்திக்கொண்டார் அவர்.
திவாரி அக்கம்பக்கம் கிடந்த
சுள்ளிகளை கைப்பேசியுடைய விளக்கு
வெளிச்சத்தின் துணையோடு
சேகரித்து எடுத்து வந்து
குவித்து கொளுத்தினார். அந்த
அனலில் நானும் இன்னும்
நான்கு பேர்களும் சுற்றி
உட்கார்ந்து குளிர் காய்ந்தோம்.
எப்போது தூங்கினோம் என்பது
தெரியாமலேயே தூக்கத்தில் மூழ்கிவிட்டேன். தூக்கத்தில் யானையின்
முதுகிலேறி சவாரி செல்வதுபோல
ஒரு கனவு வந்தது.
ஏதோ ஒரு தருணத்தில்
பிடிமானமின்றி நழுவி விழுந்துவிட்டேன். விழுந்ததைப் புரிந்துகொண்ட
யானை நின்று திரும்பி
தனது தும்பிக்கையால் என்
காலை வருடிவிட்டது. “சரி
விடு, சரி விடு”
என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்த
வேளையில் என் காலுக்கு
அருகில் தொட்டு எழுப்பியபடி
திவாரி உட்கார்ந்திருந்தார். அடுத்த கணத்திலேயே
சுய உணர்வுக்குத் திரும்பிவிட்டேன். “விடியப் போவுது.
கிளம்பலாம்” என்றார் திவாரி.
அருகில் உறங்கியபடி இருந்த
வாகன ஓட்டியையும் மற்றவர்களையும் அடுத்தடுத்து எழுப்பினார். ஒரு பெரிய
சுண்ணாம்புத்தொட்டிபோல வானம்
தெளிவாக இருந்தது. நிலவு
மங்கி எங்கோ ஒதுங்கியிருந்தது.
வாகன ஓட்டி சிறிது
தொலைவு ஒதுங்கிச் சென்று
சிறுநீர் கழித்தபிறகு புகைபிடித்துவிட்டு திரும்பினார். வண்டிக்கு
அருகில் வந்ததும் ஒவ்வொரு
சக்கரத்தையும் தொட்டு அழுத்தி
பரிசோதித்துவிட்டு வண்டியைக்
கிளப்பினார். எல்லோரும் வண்டிக்குள்
ஏறி உட்கார்ந்தோம். வண்டி
கிளம்பியது. ஒருகணம் வாழைக்குலைகளைக் கொண்டுவந்து கொடுத்த
லாந்தர்காரர்களை நினைத்தபடி
அந்தத் திசையைப் பார்த்தேன்.
ஒரு சில நிமிடங்களிலேயே களைப்பில் உறங்கிவிட்டேன்.
”லேடீஸ்
பாத்ரூம்லாம் அந்த பக்கம்
இருக்கு பாருங்க” என்று
யாரோ சத்தமாகப் பேசிய
குரலைக் கேட்டபிறகுதான் எனக்கு
விழிப்பு வந்தது. நன்றாக
விடிந்துவிட்டிருந்தது. வண்டி
ஏதோ ஒரு ஓட்டல்
வளாகத்துக்குள் நுழைந்து நிறுத்துவதற்காக அசைந்து குலுங்கிக்கொண்டிருந்தது. கண்களைக் கசக்கியபடி
வெளியே பார்த்தேன். காக்கிச்சட்டை
போட்டிருந்த ஒரு காவல்காரன்
கழிப்பறைக்குச் செல்லும் வழி
தெரியாமல் தடுமாறிக்கொண்டிருப்பவர்களுக்கு வழிகாட்டியபடி
இருந்தான். கொட்டாவி விட்டபடி
எல்லோருக்கும் பின்னால் நான்
இறங்கினேன்.
“வாங்க,
டீ குடிக்கலாம்” என்றபடி
திவாரி என்னை ஓட்டலுக்குள்
அழைத்துச் சென்றார். நான்
உள்ளே நுழைந்து முகம்
கழுவிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். மேசையைத் தேடி
உட்கார்ந்தபோது தொலைக்காட்சியில் கலவரச்செய்திகளைப்பற்றிய காரசாரமான விவாதங்கள்
நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதைக்
கேட்டபடி டீ அருந்தியவர்களும் கோபமாக கருத்துகளைப்
பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.
”எந்த
இடம் இது?” என்று
திவாரியிடம் கேட்டேன். அவர்
தொலைக்காட்சியைப் பார்த்தபடி
சொன்ன பதில் சரியாகக்
கேட்கவில்லை. அதற்குள் மேசைக்கு
டீ வந்துவிட்டது. தொடர்ந்து
கேட்கத் தோன்றாமல் டீயைப்
பருகத் தொடங்கினேன்.
கைப்பேசியில் மணியொலித்தது. அந்த
இசைக்கோவை சாரதாவின் முகத்தை
நினைவில் நிறுத்தியது. பேச
முடியாமல் இரவெல்லாம் பட்ட
கஷ்டங்கள் அடுத்தடுத்து நினைவுக்கு
வந்தன. பச்சைப் பொத்தானை
அழுத்தி ”என்னம்மா, எப்படி
இருக்க?” என்றதுமே ”ஏன்
நேத்து ராத்திரி பேசவே
இல்லை?” என்று மறுமுனையில்
சாரதா கேட்ட கேள்வி
துடித்தது. “ஐயோ, அது
பெரிய கதை சாரதா,
இந்த பக்கத்துல எந்த
ஊருலயும் சிக்னலே இல்ல”
என்றபடி நிமிர்ந்தபோது கடைச்சுவரில்
பிரயாகையின் பெரிய ஓவியமொன்று
தொங்கியதைப் பார்த்தேன். கங்கையும்
யமுனையும் பொங்கியெழும்
வேகத்தை அந்த ஓவியம்
துல்லியமாக வெளிப்படுத்துவதாக இருந்தது.
பிரயாகையைப்பற்றி அவளுக்கு
அக்கணமே சொல்லவேண்டும் என்று
ஆவலோடு எழுந்த சொற்களை
அப்படியே நெஞ்சுக்கடியில் அடக்கிக்கொண்டேன். கலவர அச்சத்தில்
கழிந்த இரவைப்பற்றியும் சொல்லத்
தோன்றியது. அதையும் சொல்லத்
தோன்றவில்லை. எல்லாவற்றையும் நேரில்
சொல்லிக்கொள்ளலாம் என்று
திடீரென தோன்றிவிட்டது. டீயைப்
பருகியபடி அவள் சொல்வதைமட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்.