ஒட்டடைக்கோலை
எடுத்து வருவதற்காக தோட்டத்துப்பக்கமாகச் சென்றபோதுதான் வேலியோரமாக நட்டிருந்த முருங்கைக்குச்சியின் பக்கவாட்டில் பொட்டுக்கடலை அளவுக்கு புதிய இலைகள் முளைவிட்டிருப்பதைப் பார்த்தேன். நாக்குநுனிபோல அவை நீண்டிருந்தன. தொட்டுப் பார்ப்பதற்கு எழும் ஆசையைக் கட்டுப்படுத்தியபடி குச்சியின் அருகில் சென்று நின்றேன். நான்கு தளிர்கள். நான்கு சுருள்கள். கூட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் குருவிகுஞ்சுகளின் அலகுகள்போல அவை குவிந்திருந்தன. அதைப் பார்த்த பரவசத்தில் எனக்கு வானத்தில் பறப்பதுபோல இருந்தது. மறுகணமே “அம்மா அம்மா இங்க வந்து பாரேன்” என்று சத்தம் போட்டேன். அந்த வேலியில் இதற்கு முன்பு நடப்பட்ட எந்தக் குச்சியும் முளைத்ததே இல்லை. நெல்மணிகளின் அளவில் அவை முளைத்து நிற்கும் தோற்றம் முதல்முறையாக அந்த வரலாற்றைப் பொய்யாக்கியது.
“காணாதத கண்டுட்டமாரி எதுக்குடா இப்ப தொண்டதண்ணி போவறாப்புல கத்தற?” என்று சிடுசிடுத்தபடி வந்த அம்மாவிடம் “மொதல்ல அங்க பாரும்மா. அப்பறமா பேசு” என்று மகிழ்ச்சியோடு சுட்டிக் காட்டினேன். “அங்க என்னடா அதிசயம் வச்சிருக்க?” என்று அலட்சியத்தோடு திரும்பிய அம்மாவின் பார்வை அந்த முருங்கைத் தளிர்கள்மீது பட்டதுமே அவள் பேச்சு நின்றுவிட்டது. அந்தத் தளிர்களையே சில கணங்கள் பார்த்தபடி நின்றிருந்தாள். பிறகு
“ரொம்ப அழகா இருக்கு இல்ல?” என்று கனிந்த குரலில்
என்னிடம் கேட்டாள். தொடர்ந்து “படுபாவி, பாத்து சந்தோஷப்படறதுக்கு அவனுக்கு குடுத்துவைக்காம போயிடுச்சி. அல்ப ஆயுசிலயே போயி சேந்துட்டான். எல்லாம் விதி” என்று சொல்லி பெருமூச்சுவிட்டாள். சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.
“அம்மா, இந்த மரத்துக்கு பழனி அண்ணன் பேரத்தான் வைக்கணும், இப்பவே சொல்லிட்டன்.”
கறாரான
குரலில் சொல்லும்போது நீண்டுவிட்ட என் சுட்டுவிரலைப் பிடித்து அழுத்தியபடி அம்மா புடவை முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். ”இன்னும் முழுசா மொளச்சி மூணு எல விடல. அதுக்குள்ள
என்னாடா பேரு கீருன்னு கெளம்பிட்ட” என்று கன்னத்தைக் கிள்ளினாள். “அதெல்லாம் எனக்கு தெரியாதுமா. இந்த மரத்துக்கு பேரு பழனி அண்ணன் மரம். அவ்ளோதான். அவுருதான வச்சாரு. அதனால அவுரு பேருதான் இருக்கணும். அத மாத்தணும்ன்னு மட்டும் யாரும் நெனைக்கக்கூடாது” என்று சொன்னபடி அவள் கையைப் பிடித்துக்கொண்டேன். “கைய கைய புடிச்சிகினு பேசற பழக்கத்த எங்கேருந்துடா கத்துகிட்ட? மொதல்ல
கைய உடு, சொல்றன். ஒங்க அப்பா பாத்தாருன்னா ஒடம்பு தோல உரிச்சிடுவாரு” என்றாள் அம்மா. “நீ சரின்னு சொல்லு. அப்பதான் உடுவன்” என்று அவள் கையைப் பிடித்திருந்த பிடியை இறுக்கினேன். “சரி சரி. பழனிமரம். போதுமா” என்று அவள் சொன்ன பிறகுதான் பிடியை விட்டேன்.
“மரத்த பாக்கறன், செடிய பாக்கறன்னு இட்ட வேலைய மறந்துடாதடா. மொதல்ல ஒட்டட கோல எடுத்துகினு தென்னந்தோப்பு ஊட்டுக்கு போயி ஒட்டட அடிக்கற வேலய பாரு. சுண்ணாம்பு அடிக்கற ஆளுங்க பத்து மணிக்குலாம் வந்துருவாங்கன்னு ஒங்கப்பா சொன்னத மறந்துட்டியா?”
அம்மாவின்
சொற்கள் வழியாக அப்பாவே பேசுவதுபோல இருந்தது. நாக்கைக் கடித்தபடி அம்மாவைப் பார்த்து தலையசைத்துக்கொண்டே ஒட்டடைக்கோலுடன் வீட்டைவிட்டு வெளியே நடந்தேன்.
பழனி
அண்ணன் செத்துவிட்டார் என்பதை நம்புவதற்கு மனம் மறுத்தது. எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார், நாளையோ நாளைக்கு மறுநாளோ வந்துவிடுவார் என்கிறமாதிரியான எண்ணம்தான் இருந்தது. இருபத்தைந்து, இருபத்தியாறு வயசெல்லாம் சாகிற வயதா என்ன? விஷக்காய்ச்சலால் செல்லதுரை பெரியப்பாவின் மரணம் நிகழ்ந்து நான்கு
ஆண்டுகள் மட்டுமே கழிந்திருந்த சமயம் அது. அதற்கும் முன்பாக சிவகாமி பெரியம்மாவும் மின்சாரத்துக்கு பலியாகியிருந்தார்.
பழனி
அண்ணனின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு சுடுகாட்டிலிருந்து திரும்பிய அன்று இரவு அப்பா ”அவுங்கப்பனுக்கும் நான்தான் கொள்ளி வச்சன். இவனுக்கும் நான்தான் கொள்ளி வச்சன். என்ன கொடுமைடா இது?” என்று புலம்பியபடியே இருந்தார். காய்ச்சலின் கடுமையால் உடல் கொதித்தது. இரவுமுழுக்க ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் பிதற்றினார். “ஒரொரு கெளயா முரிஞ்சி உழறமாரி செல்லதொர குடும்பமே அடையாளமில்லாம சிதைஞ்சிபோச்சி” என்று சொன்னதையே மீண்டும்மீண்டும் சொன்னபடி இருந்தார். ”ஒலகத்துல மனுசங்களுக்கே எடமில்லை. எல்லா எடத்துலயும் சாதிப் பேய்ங்க உலாத்துதுங்க” விழியோரங்களில் கண்ணீர் கசிந்தபடி இருந்தது.
சாவு
நடைபெற்ற அன்று காலையில் ஒரு போலீஸ்காரர் வீட்டுக்கு வந்தார். பழனி அண்ணனின் உடல் ஊருக்கு வெளியே ரயில் தண்டவாளத்துக்கு அருகில் கிடப்பதாகவும் ஒருமுறை பார்த்து உறுதிப்படுத்தவேண்டும் என்று சொல்லி அப்பாவை அழைத்துக்கொண்டு சென்றார். அதிர்ச்சியில் குழப்பத்தோடு நடந்த அப்பாவுக்குத் துணையாக நானும்
சென்றேன். ஒரு பாதி உடல் நசுங்கி கூழாகிவிட்ட நிலையில் வெட்டிச் சாய்த்த வாழைமரமெனக் கிடந்தார் பழனி அண்ணன். ’அதைப் பார்த்து பழனீ என அவர் எழுப்பிய குரலால் அந்த இடமே அதிர்ந்தது. நெருங்கிச் சென்று தொடுவதற்கோ அழுவதற்கோ போலீஸ்காரர் அவரை அனுமதிக்கவில்லை. தடுத்து ஓரமாக இழுத்து வந்துவிட்டார்.
பழனி
அண்ணனுக்கு என்னை மிகவும் பிடிக்கும். யாரிடமாவது அறிமுகப்படுத்தும்போது ‘எங்க சித்தப்பா பையன். ரொம்ப நல்லா பாடுவான்’ என்று பெருமையாகச் சொல்வார். ஏரிக்கரையின் பக்கம் நடந்துபோகும் சமயங்களிலெல்லாம் பாடச்சொல்லிக் கேட்பார். ’அமைதியான நதியினிலே ஓடம்’ பாட்டுதான் அவர் அடிக்கடி கேட்கிற பாட்டு. நான் பாடப்பாட அவர் அப்படியே கண்களை மூடிக்கொண்டு கேட்பார். ”கண்ண மூடினாதான் அந்தக் காட்சி தெரியும். ஒரொரு அங்குலமா அது நகரநகர பாக்கறதுக்கே சந்தோஷமா இருக்கும்” என்று சொல்லும்போது அவர் முகமே கனிந்திருக்கும். தணிந்த குரலில் “எங்க அப்பாவுக்கு ரொம்ப புடிச்ச பாட்டு” என்று சொல்லும்போது, அவர் கூட பக்கத்தில் எங்கோ உட்கார்ந்துகொண்டு பாட்டைக் கேட்பதுபோலத் தோன்றும். அந்தப் பாட்டைத் தொடர்ந்து அவருக்கு ‘கடவுள் அமைத்துவைத்த மேடை’ பாட்டையும் பாடிக் காட்டினால்தான் திருப்தியாக இருக்கும். அது அண்ணனுக்கு மிகவும் பிடித்த பாட்டு. அந்தப் பாட்டின் இடையிடையே வரும் பறவைகளின் குரலையும் விலங்குகளின் குரலையும் அவரே பொருத்தமான நேரத்தில் எழுப்புவார். அதில் அவருக்கு ஒரு சின்ன சந்தோஷம்.
ஒருமுறை
குரலின் ஏற்றஇறக்கத்தை வைத்து, இடிஇடித்து மழைபொழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுபோல பழனி அண்ணன் செய்துகாட்டினார். அப்போது உண்மையாகவே கண்ணெதிரில் உடலை நடுங்கவைப்பதுபோல இடி இடித்தது. சூறைக்காற்றின் ஊளை கேட்டது. மரங்கள் சடசடவென முரிந்து விழுந்தன. பறவைகள் அச்சத்துடன் குரலெழுப்பின. சாரல் அடித்தது. வெள்ளம் பெருக்கெடுத்தோடி வந்து கால்களைத் தொட்டு அசைப்பதுபோல இருந்தது. ஒன்றிரண்டு நிமிட பிரளயத்துக்குப் பிறகு அனைத்தும் அடங்கி ஒடுங்கிய அமைதி. காற்றும் தண்ணீரும் அசைகிற சத்தம் மட்டும் கேட்டது. ஒருகணம் நான் திகைத்து அவர் முகத்தையே பார்த்தபடி நின்றுவிட்டேன். பழனி அண்ணன் சகஜநிலைக்குத் திரும்பி “என்னடா மணி, பயந்துட்டியா?” என்றபடி முதுகில் ஒரு தட்டு தட்டியபிறகுதான் சுய உணர்வு வந்தது.
தென்னந்தோப்பு வீடும்
எங்கள் வீடுதான். ஒரு காலத்தில் தென்னந்தோப்பாக இருந்த இடத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து விற்றபோது, ஒரு மனையை வாங்கினாராம் அப்பா. யாருமே வீடு கட்டாதபோது, அவர்தான் தைரியமாக முதன்முதலாக அந்த இடத்தில் வீடு கட்டினாராம். அதனாலேயே அந்த வீட்டுக்கு தென்னந்தோப்பு வீடு என்று பெயர் உண்டாகிவிட்டது. அந்த வீட்டில் செல்லதுரை பெரியப்பாவின் குடும்பம் வசித்துவந்தது. செல்லதுரை பெரியப்பாவும் எங்கள் அப்பாவும் உடன்பிறந்தவர்கள் அல்ல. எங்கோ பிறந்து எங்கோ படித்து எங்கோ வளர்ந்திருந்தாலும் ஆசிரியர் பயிற்சிநிலையத்தில் ஒன்றாகப் படித்து ஒரே பள்ளிக்கூடத்தில் ஒன்றாக வேலைக்கு வந்த நண்பர்கள். ஒருவரை ஒருவர் பெயர்சொல்லி அழைத்து ஒருமையில் பேசும் அளவுக்கு அவர்களுடைய நட்பு இருந்தது.
பயிற்சிக்காலத்தில் தன்னோடு
படித்த சிவகாமி பெரியம்மாமீது செல்லதுரை பெரியப்பாவுக்கு விருப்பம் இருந்தது. அவர் ஒரு சாதி. இவர் ஒரு சாதி. இரண்டு குடும்பங்களும் திருமணத்தை எதிர்த்து நின்றன.அவர்கள் சம்மதத்துக்காக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்தும் பயனில்லாமல் போனது. கடைசியில் வேறு வழியில்லாமல், அப்பாவும் அவர் நண்பர்களும் உதவியாக நின்று இருவருக்கும் பதிவுத்திருமணம் செய்துவைத்தார்கள். அவர்கள் சேர்ந்து வாழ ஊருக்குள் எந்தத் தெருவிலும் வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில்தான் அப்பா புதியதாகக் கட்டிய வீட்டில் அவர்களுக்கு
அடைக்கலம் தந்து ஆதரித்தார். அன்றுமுதல் அவர்களுக்கு எங்கள் ஊரே சொந்த ஊரென்றும். எங்கள் வீடே சொந்த வீடென்றும் நிலைத்துவிட்டது. அதெல்லாம் நான் பிறப்பதற்கு முன்பே நடந்த கதை.
அப்பாவுக்கு
பழனியை ரொம்பவும் பிடிக்கும். பெற்றவர்கள் இரண்டு பேருமே மறைந்துபோன பிறகு, அவரை தன்னுடைய பிள்ளையாகவே நினைக்கத் தொடங்கிவிட்டார். அண்ணனுக்கு படிப்பு நன்றாகவே வந்தது. ஆனால் தேர்வுகளில் அவரால் போதுமான மதிப்பெண்களை எடுக்கமுடிந்ததில்லை. ”அது எப்பிடிடா பழனி, எல்லாப் பாடத்தயும் நல்லாதானடா படிச்சிட்டு போவற? அப்பறம் கேட்ட கேள்விக்கு பதில் எழுத எதுக்குடா தடுமாறணும்? ஒரு நாப்பது மார்க்கு கூடவா ஒன்னால வாங்க முடியல?” என்று அம்மா அவரிடம் பலமுறை கனிவோடும் கேட்டுப் பார்த்துவிட்டார். வருத்தத்தோடும் கேட்டுப் பார்த்துவிட்டார். அப்போதெல்லாம் பழனி அண்ணன் பதிலே பேசாமல் தலைகுனிந்தபடி நின்றிருப்பார். அரைமணி நேரமானாலும் ஒரு வார்த்தைகூட பதில் சொல்லமாட்டார். எப்போதாவது அந்தக் காட்சி அப்பாவின் பார்வையில் பட்டுவிடும். உடனே “இப்ப என்ன, குறுக்கு விசாரண ஆரம்பிச்சிட்டியா? போனா போறான் உடு. அடுத்ததரம் தேறிடுவான்” என்று சொல்லி எழுந்துபோகச் செய்துவிடுவார்.
அம்மாவின்
முன்னால் சொல்லமுடியாத பதிலை பழனி அண்ணன் என்னிடம் தனியாகச் சொல்வார். “அத எப்பிடி சொல்றதுனே தெரியலைடா மணி. கையில கேள்வித்தாள வாங்கனதுமே அடுப்புல ரசம் கொதிக்கறமாரி மூள கொதிக்க ஆரம்பிச்சிடும். ஒன்னுமே புரியாதுடா. எங்க
உக்காந்திருக்கோம்,
என்ன செய்றோம்ங்கறதுகூட புரியாது. இந்த கேள்விங்கள்ளாம் நம்ம பாடத்திலியா இருக்குதுன்னு ஆச்சரியமா இருக்கும். கண்ணாமூச்சி ஆட்டத்துல புள்ளைங்கள்ளாம் ஓடி ஒளிஞ்சிக்கும் தெரியுமா, அந்தமாரி ஒவ்வொரு பதிலும் மனசுக்குள்ளயே எங்கியோ ஓடி ஒளிஞ்சிக்கும். ஒரே
ஒரு வரி கூட ஒழுங்கா ஞாபகத்துக்கு வராது. நானும் இதோ வந்துடும், இதோ வந்துடும்ன்னு நானும் மூளய கசக்கிகினே இருப்பன். ஒட்டாரமா அதுவும் வரவே வராது. பதிலே எழுதாம வெறும் தாள குடுக்கறதுக்கும் கூச்சமா இருக்கும். பொறுமையா நிறுத்தி நிதானமா கேள்வித்தாள்ள இருக்கற கேள்விங்களயே பார்த்து ஈயடிச்சான் காப்பியாட்டம் எழுதிவச்சிட்டு வந்துடுவன்” என்று சொல்லிவிட்டு மரத்தில் சாய்ந்தபடி புல்தரையில் தன்னந்தனியாக நடந்துசெல்லும் மைனாவையே பார்த்தபடி மெளனத்தில் மூழ்கிவிடுவார். சில கணங்களுக்குப் பிறகு “அம்மாவும் அப்பாவும் இல்லாத உலகத்துல நான் படிச்சி பாஸாகி என்ன செய்யப்போறன்டா சொல்லு” என்றபடி பெருமூச்சு விடுவார். தொடர்ந்து “அதனால்தான் அந்த தெய்வமே என்ன கை உட்டுட்டுதுபோல” என்று சொன்னபடி துயரம் கவிந்த கண்களால் என்னைப் பார்ப்பார்.
“அப்படிலாம் சொல்லாதண்ணே. நாங்கள்ளாம் இல்லியா? எங்களுக்காகவாவது நீங்க படிச்சி பெரிய ஆளாவணும்” என்று பழனி அண்ணனிடம் சொல்லவேண்டும் என்று நெஞ்சைப் பிளந்துகொண்டு பீறிடும் சொற்களை ஒருநாளும் நான் சொன்னதில்லை. வயதை மீறிய பேச்சாகிவிடுமோ என்கிற தயக்கத்தில் அமைதியாக அவர் கைகளைப் பிடித்து என் கைகளுக்குள் வைத்துக்கொள்வேன். நெஞ்சிலிருந்த சொற்களெல்லாம் கைநரம்புகள் வழியாக அவர் நெஞ்சுக்கு நேராகச் செல்வதுபோலத் தோன்றும்.
பழனி
அண்ணன் சோர்வில் முடங்கிவிடாதபடி பல ஏற்பாடுகளைச் செய்தார் அப்பா. டுட்டோரியலில் காலையில் ஒரு டியூஷன். மாலையில் ஒரு டியுஷன். வாரத்துக்கு நான்கு நாட்கள் கம்ப்யூட்டர் வகுப்பு. சனி ஞாயிறுகளில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கான தயாரிப்பு வகுப்புகள். எல்லா இடங்களுக்கும் நேரம் தவறாமல் சென்று வந்தார் பழனி அண்ணன். ஒருநாள் அம்மா “ஏற்கனவே அவன் டென்ஷன் பார்ட்டி. அவன எதுக்கு எல்லா எடத்துலயும் சேத்துட்டு, அவனுக்கு அவஸ்தய குடுக்கறிங்க? எல்லாத்தயும் போட்டு கொழப்பிக்க போறான்….” என்று அப்பாவிடம் சொல்வதைக் கேட்டேன். “பத்து வெதய தூவனாதான ஒரு வெதயாச்சிம் மொளைக்கும்? அந்த மாரிதான். எங்கயாவது எப்படியாவது ஒரு வாசல் தெறந்து அவனுக்குன்னு ஒரு வழி பொறந்துடாதான்னு ஒரு எண்ணம்தான். அவன ஒரு ஆளா எங்கயாச்சிம் நிக்க வச்சிட்டா போதும். செல்லதொரைக்கி நான் குடுத்த சத்தியத்த காப்பாத்திடுவன்” என்றார் அப்பா.
பழனி
அண்ணன் கமலஹாசனின் ரசிகர். வெறும் ரசிகர் மட்டுமல்ல. கமல்போலவே அலையலையாக மடிந்து உயர்ந்து சரியும் தலைமுடி அமைப்பைக் கொண்டவர். கமல் அணிந்திருப்பதுபோலவே பெல்பாட்டம் பேண்ட். கமல்போலவே தொங்குமீசை. இளமை ஊஞ்சலாடுகிறது வெளிவந்த சமயத்தில் அந்த ஒப்பனை அவரை வெளிப்படையாகக் காட்டிக் கொடுத்துவிட்டது. “அண்ணே, பாக்கறதுக்கு அசல் கமல்மாரியே இருக்கிங்க. இந்த நேரம் அவர் உங்கள பாத்தாருன்னு வைங்க, அப்படியே அசந்துபோயி ஒக்காந்துருவாரு” என்றேன். அவர் உடனே சிரித்துவிட்டார். அந்தச் சிரிப்புகூட கமலின் சிரிப்புபோலவே இருந்தது. “ஒரு விஷயம் உனக்கு சொல்லட்டுமா? யாருக்கும் தெரியாத கதை இது. நீயும் யார்கிட்டயும் சொல்லக்கூடாது” என்று எச்சரித்துவிட்டு மெதுவாக ஆரம்பித்தார்.
“நான் எங்க அம்மா வயித்துல இருந்த நேரம். இன்னும் ஒருமணி நேரத்துலயோ, ரெண்டுமணி நேரத்துலயோ கொழந்த பொறந்துடும்ங்கற மாதிரியான சமயம். ராத்திரி நேரம். வைத்தியக்கார அம்மாவ வீட்டுக்குள உட்டுட்டு அப்பா வெளிய உலாத்திட்டிருந்தாராம். பக்கத்துல என்னமோ நெழலாட்டம் நிக்கறமாதிரி இருந்திருக்கு. என்னான்னு அப்பா திரும்பி பார்த்து கேட்டாராம். நாம் பிரம்மாவுடைய ஆளு. இது ஒரு உன்னதமான சகுனம். ஒரு பெரிய கலைஞனை மண்ணுல பொறக்கவைக்கணும். இந்த திசைதான் பொருத்தம்ன்னு எறங்கி வந்தன்னு சொல்லிகிட்டே உள்ள போவறதுக்கு திரும்பியிருக்காரு அவரு. நில்லுங்க நில்லுங்கன்னு அப்பா அவர அவசரமா தடுத்திருக்காரு. இங்க பாருங்க, எங்களுக்கு கலைஞனும் வேணாம், கிலைஞனும் வேணாம். கைகால் நல்லா இருக்கறமாதிரியான புள்ளயா இருந்தா போதும், நீங்க வேற எடம் பாத்துக்கோங்க, போங்கன்னு அனுப்பி வச்சிட்டாரு அப்பா. இப்பிடிகூட ஆளுங்க இருப்பாங்களான்னு வந்தவருக்கு ஒரே ஆச்சரியம். என்ன மாதிரியான அதிர்ஷ்டம் இது, இப்படி அலட்சியமா தள்ளி உடறிங்களேன்னு கேட்டிருக்காரு. ஒடம்பு முழுக்க எண்ணெய தடவிகிட்டு பொரண்டாலும் ஒடம்புல ஒட்டறதுதான் ஒட்டும். சும்மா வரக்கூடிய அதிர்ஷ்டமும்
எனக்கு வேணாம், அதனால வரக்கூடிய அவஸ்தயும் வேணாம். மொதல்ல நீங்க மூட்டய கட்டிகினு கெளம்புங்கன்னு ஒரே போடா போட்டிருக்காரு. சரி உங்களுக்கு குடுத்து வச்சது அவ்ளோதான்னு மொணவிகினே போயிட்டாராம் அவரு.”
நான்
அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் முகத்தை பக்கவாட்டில் நெருக்கமாகப் பார்த்தபோது, அவர் சொன்னதையெல்லாம் நம்பிவிடவேண்டும்போல இருந்தது. படிப்படியாக முடிக்கற்றைகள் இறங்கி பின்கழுத்தில் அடர்த்தியாக விழுந்திருக்கும் தோற்றத்தில் வசீகரமாக இருந்தது அவர் முகம். எந்தக் கணத்திலும் இடுப்பை வளைத்து விரலை நீட்டி ‘என்னடி மீனாட்சி’ என்று பாடிவிடுவார் போலத் தோன்றியது. யாரிடமும் விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்வதற்கு அவசியமே இல்லாதபடி, அக்கணத்தில் அவர் சொன்னதையெல்லாம் நான் முழுமையாக நம்பினேன். பிறகு தற்செயலாக ஒருநாள் இரவு சாப்பாட்டு நேரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அப்பா வேறுமாதிரியாகச் சொன்னார். “ரெண்டு பேரும் ஒரே நாள்ல பொறந்தவங்கடா. அத வச்சி அவனாவே ஒரு கதய கட்டிகினான்” என்றார்.
ஒருநாள்
பெங்களூர் அத்தையின் குடும்பம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தது. திருநள்ளாறு கோயிலில் பரிகார பூஜையை முடித்துக்கொண்டு வந்ததாகச் சொன்னார்கள். அத்தைக்கு என் வயதில் ஒரு பையன் இருந்தான். அத்தையையும் அவனையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கும் கடைத்தெருவுக்கும் போய் வந்ததில் பொழுதே போய்விட்டது. இரவு கவிந்து சாப்பாட்டு வேளையில்தான் டி.என்.பி.எஸ்.சி வகுப்புக்குச் சென்ற பழனி அண்ணன் வீட்டுக்குத் திரும்பவில்லை என்கிற விஷயம் உறைத்தது. உடனே
அம்மா என்னிடம் ”ஒருவேள, டுட்டோரியல்லேருந்து தென்னந்தோப்பு ஊட்டுக்கு நேரா போயிட்டானோ என்னமோ, ஓடி போயி பாத்துட்டு வா” என்று விரட்டினாள். ஒரே ஒட்டமாக ஓடிச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பினேன். வீடு பூட்டியிருந்தது. நேரம் கழியக்கழிய எங்களுக்கு பயமெழுந்தது. அவர் வரவே இல்லை. யாருக்கும் தூங்கப் பிடிக்கவில்லை.
”அங்காளம்மன் கோவில் தெருவுல ஒரு அண்ணன் இருக்காரு. அவரும் பழனி அண்ணன்கூட டி.என்.பி.,எஸ்.சி க்ளாஸ்ல ஒன்னாதான் படிக்கறவருதான். அவருகிட்ட கேட்டுட்டு வரட்டுமா?” என்று மெதுவாக அப்பாவிடம் கேட்டேன். ”இரு, ரெண்டு பேருமா போவம்” என்றபடி அப்பா உடனே எழுந்து டி.வி.எஸ்.ஸை எடுத்தார். அங்காளம்மன் தெருவில் அந்த அண்ணன் வீட்டை கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்தோம். விஷயத்தைச் சொன்னதும் “க்ளாஸ் முடிஞ்சதும் நான் வந்துட்டேன். புதுசா என்னமோ கமல் படம் வந்திருக்குது. அதுக்கு நான் போறேன்னு கெளம்பி போயிட்டான் அவன்” என்றார் அவர். ”ஆளு இன்னும் வீட்டுக்கு வரலை. அதான் விசாரிக்கலாம்ன்னு வந்தம்” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு திரும்பிவிட்டோம்.
“தியேட்டர் பக்கம் போயி பார்த்துட்டு வரலாமாப்பா” என்று நான் மெதுவாக அப்பாவிடம் கேட்டேன். “படம் முடிஞ்சா வந்துதான ஆவணும். பாக்கலாம்” என்றுதான் தொடக்கத்தில் சொன்னார் அப்பா. பிறகு ஒருசில கணங்களிலேயே மனம் மாறி “சரி வா, போவலாம்” என்றார். இரண்டு பேரும் பக்கத்து ஊரிலிருந்த தியேட்டருக்குச் சென்றோம். முதல் ஆட்டம் முடிந்து இரண்டாவது ஆட்டம் சினிமா நடந்துகொண்டிருந்தது. அக்கம்பக்கத்து கடைகளில் பலர் கும்பல்கும்பலாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த இடத்திலும் பழனி அண்ணன் முகம் தெரியவில்லை. அலைந்து திரிந்துவிட்டு ஏமாற்றத்தோடு வீட்டுக்குத் திரும்பினோம். சினிமாவுக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு வேறு எங்காவது போய்விட்டானோ என்று முதன்முதலாக ஒரு
சந்தேகம் வந்தது.
காலையில்
வீட்டுக்கு பேப்பர் போடுகிற சின்னக்கண்ணு பெரியப்பா, வண்டியில் உட்கார்ந்தபடியே என்னை அழைத்து ”தம்பி, அப்பாவ கொஞ்சம் கூப்புடு” என்றார். நான் உள்ளே ஓடிச் சென்று அப்பாவை அழைத்துக்கொண்டு வந்தேன். அப்பா அவர் அருகில் சென்றதும் “காலையில போலீஸ் ஸ்டேஷன்ல பேப்பர் குடுக்க போயிருந்தன். உள்ள நம்ம செல்லதொர வாத்தியாரு பையன பாத்தன். ஒக்கார வச்சிருக்காங்க. ஒங்களுக்கு தகவல் தெரியுமோ தெரியாதோன்னு சொல்லத்தான் ஓடியாந்தன்” என்றார். பிறகு மெதுவாக ”பக்குவமா பேசி பையன கூப்டுகினு வர வேலய பாருங்க” என்றார். ”நம்ம பழனிதானா? நல்லா பாத்திங்களா?” என்று பதற்றத்துடன் அவரிடம் கேட்டார் அப்பா. ”என்னங்க நீங்க? நம்ம பழனி அடையாளம் எனக்கு தெரியாதா என்ன? அவன்தான். சீக்கிரமா போங்க” என்றபடி வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார். அப்பா அதிர்ச்சியில் உறைந்துபோய் திண்ணையில்
உட்கார்ந்துவிட்டார்.
அம்மா அவரை நெருங்கி வந்து ”தனியா போயி ஸ்டேஷன்ல கேட்டா ஒன்னும் நடக்காது. நம்ம தெரு கவுன்சிலர பாத்து அவரயும் கையோட அழச்சிகிட்டு போங்க” என்றாள். மெளனமாக அவர் எழுந்து புறப்பட்டதும் “நீயும் போடா அவர்கூட” என்று என்னைத் தள்ளிவிட்டாள்.
ஸ்டேஷனில்
கவுன்சிலரைப் பார்த்ததுமே பழனியை விட்டுவிட்டார்கள். ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு எல்லோரும் வீட்டுக்குத் திரும்பிவிட்டோம். அப்பா அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவரைக் குளியலறைக்கு அனுப்பிவிட்டு எங்கள் பக்கம் திரும்பி வாய்மீது விரல்வைத்து எதுவும் கேட்கவேண்டாம் என்பதுபோல சைகை செய்து காட்டிவிட்டு தன் அறைக்குள் போய்விட்டார்.
குளித்து
சாப்பிட்ட பிறகு கையைத் துடைத்தபடியே கூடத்துக்கு வந்தார் பழனி அண்ணன். அப்பாவின் அறை பக்கமாக அவராகவே சென்று “நான் ஒன்னுமே செய்யல பெரியப்பா. சினிமா பாத்துட்டு திரும்பற சமயத்துல வழிமறிச்சி கூப்ட்டுகினு போயிட்டாங்க” என்று சொன்னார். அவர் கண்கள் கலங்கித் தளும்பின. “சரிசரி உடுடா. அதயே நெனச்சி கொழப்பிக்காத. போய் மத்த வேலைய பாரு” என்று எழுந்துவந்து தோளில் தட்டிக்கொடுத்தார் அப்பா.
பழனி
அண்ணனால் மனசுக்குள் இருப்பதை அடக்கிக்கொள்ள முடியவில்லை. திரும்பி தோட்டத்துப் பக்கம் வந்து தொழுவத்தில் நின்றிருந்த அக்காவிடமும் அம்மாவிடமும் சொல்லத் தொடங்கினார்.
“படம் ரொம்ப புடிச்சிருந்தது பெரிம்மா. மொத ஆட்டம் சினிமா பார்த்துட்டு வெளிய வந்ததுமே அடுத்த ஆட்டமும் பாத்துரலாம்னு ஒரு ஆச. டிக்கட் வாங்கிட்டு உள்ள போயிட்டன். படம் முடிஞ்சி வெளிய வரும்போது பசி தாங்கமுடியல. நாலு இட்லி சாப்ட்டுட்டு ஊட்டுக்கு போவலாம்ன்னு நெனச்சி, எங்கனா கடை இருக்குதான்னு அக்கம்பக்கம் பாத்துகினே வெகுதூரம் போயிட்டன். கடத்தெருவே அமைதியா அடங்கி கெடந்தது.
ஒரு கட கூட இல்ல. எல்லாம் நம்ம நேரம்னு மனசுக்குள்ள நெனச்சிகிட்டு திரும்பற சமயத்துலதான் போலீஸ் வண்டி வந்து விசாரிச்சிது. எங்க திருடலாம்ன்னு நோட்டம் உடறியாடான்னு ஒரு ஆளு அடிச்சிட்டாரு. சினிமா பாத்துட்டு வரன்னு சொன்னத அவுங்க காதுலயே வாங்கிக்கல. இந்தா பாருங்க டிக்கட்டுன்னு காட்டனாலும் அவுங்க நம்பல. குடு பாப்பம்ன்னு பாக்கறமாரி வாங்கி கிழிச்சி போட்டுட்டு நடடா ஸ்டேஷனுக்கு தள்ளிட்டு போயிட்டாங்க…..”
சில
நாட்கள் எல்லாமே சரியாகப் போவதுபோல இருந்தது. அந்த மார்ச்சில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று ஒருவழியாகப் பட்டப்படிப்பை முடித்துவிட்டார். சான்றிதழ்கள் வந்ததுமே அப்பாவும் அவரும் சென்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்தார்கள். ”எங்கனா ஒரு குமாஸ்தா வேல கெடச்சா போதும். அப்புறம் அவன் வாழ்க்கைய அவன் பாத்துக்குவான்” என்று சொன்னார் அப்பா.
போட்டித்தேர்வுக்கான தயாரிப்புகளில் தீவிரமாகவே
ஈடுபட்டிருந்தார்
பழனி அண்ணன். எந்த
நேரமும் புத்தகமும் கையுமாகத்தான் அவரைப் பார்க்கமுடிந்தது. எங்கேயாவது தோப்பிலோ, ஏரிக்கரையிலோ தனிமையான இடத்துக்குச் சென்று மாதிரி வினாத்தாளுக்கு விடைகளைக் கண்டுபிடித்து பயிற்சி செய்வதை பழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார். அந்தமாதிரி படித்துக்கொண்டிருந்த ஒரு நாளில்தான் அண்ணனை மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். அப்பா ரொம்பவும் மனம் உடைந்துபோய்விட்டார். மறுபடியும் கவுன்சிலரைத் தேடி ஓடவேண்டியிருந்தது. அப்பா போன நேரத்துக்கு அவர் இல்லை. சிதம்பரத்துக்குப் போயிருப்பதாக அவர் மனைவி சொன்னார். சாயங்காலமாக அவர் வரும்வரைக்கும் காத்திருந்து ஸ்டேஷனுக்குச் சென்று அண்ணனை மீட்டுக்கொண்டு வந்தார்.
அன்று
அண்ணன் யாரிடமும் பேசவில்லை. நாற்காலியில் உட்கார்ந்தபோது குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. உள்ளே வந்த கவுன்சிலர்தான் அம்மாவிடம் விவரமாகச் சொன்னார். “தம்பிமேல ஒரு தப்பும் இல்லங்க. ஒரு கெட்ட நேரம் வந்தா இப்பிடிலாம் தப்புதப்பா நடக்கும்போல. அந்தத் தோப்புக்காரன் பம்ப்கொட்டாய்ல அடிக்கடி மோட்டார் காணாம போயிடுமாம். ஒரு வாரமா புதுசா வெளியூரு ஆளுங்க அந்த பக்கமா நடமாடியிருக்காங்க. என்னமோ ஒரு சந்தேகத்துல ஸ்டேஷன்ல போயி சொல்லி வச்சிருக்கான். போலீஸ்காரனுங்க வந்து பாக்கற சமயத்துல தம்பி படிச்சிட்டிருக்குது போல. ஒடனே சந்தேகத்துல புடிச்சி இழுத்தும் போயிட்டானுங்க. நல்ல வேள. நாங்க ஸ்டேஷனுக்கு போவற நேரத்துக்கு சரியா தோப்புக்காரனும் வந்துட்டான். ஐயையோ, இந்த தம்பி இல்ல, நான் சொன்ன ஆளுங்களே வேறன்னு அவனே சொன்னதால எல்லாம் சுலபமாயிட்டுது. பட்ட எடத்துலயே படுதுன்னா ஏதாச்சிம் கிரக தோஷமாகூட இருக்கலாம். நல்ல ஜோசியக்காரன்கிட்ட காட்டி பரிகார பூஜை செய்ற வேலைய பாருங்க. நம்பறதும் நம்பாததும் ஒங்க இஷ்டம். என் மனசுல படறத சொல்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
பழனி
அண்ணன் அதற்குப் பிறகு யாரிடமும் பேசவில்லை. தென்னந்தோப்பு வீட்டில்தான் படிப்பு, படுக்கை எல்லாம். மற்றபடி பெரும்பான்மையான நேரங்களில் எங்கள் வீட்டில்தான் இருந்தார் என்றாலும் பேச்சு குறைந்துவிட்டது. தோட்டத்துக்குச் சென்று தென்னைமரங்களின் வேரையொட்டி தண்ணீர் நிற்கும்படி வட்டமாக எழுப்பிவைத்த மண்மேட்டை ஒழுங்குபடித்துவதில் நேரத்தை ஓட்டுவார். பிறகு, விழுந்துகிடந்த உலர்ந்த ஓலையை இழுத்துப்போட்டு கீற்று பின்னி அடுக்குவார். பன்றிகள் புகுந்துபுகுந்து அகலமான இடைவெளிகளை உண்டாக்கிவிட்ட வேலியைச் சரிப்படுத்துவார். பொருத்தமான இடைவெளிகளில் முருங்கைக்குச்சிகளையும் கல்யாணமுருங்கைக் குச்சிகளையும் ஒடித்துவந்து நட்டுவைப்பார். வேலைகள் இல்லாத நேரத்தில் மல்லிகைப்பந்தலுக்குக் கீழே போடப்பட்டிருந்த துவைகல்லில் உட்கார்ந்துகொண்டு நொண்டிக்காலை இழுத்துஇழுத்து இரைதேடும் காகத்தையோ அல்லது கனகாம்பரம் செடிகளின் கீழே ஓடும் அணில்களையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்.
வேடிக்கையில்
மெய்மறந்து உட்கார்ந்திருந்த பழனி அண்ணனிடம் ஒருநாள் அப்பா
“வர வருஷம் பி.எட். சேத்து உடறன், படிக்கறியாடா? நல்ல மார்க்கோட பாஸ் பண்ணிட்டா எங்கயாச்சிம் ஒரு ஸ்கூல்ல டீச்சரா போயிடலாம், என்ன சொல்ற?” என்று கேட்டார். அண்ணன் சட்டென்று எழுந்து நின்று தலையசைத்தார். தொடர்ந்து பேசிய அப்பா “ஆனா அதுவரைக்கும் இப்படியே இருக்கவேணாம். விழுப்புரத்துக்கு பக்கத்துல எனக்கு தெரிஞ்சவரு ஒருத்தரு பிளாஸ்டிக் பேக்டரி நடத்தறாரு. சூப்பர்வைசர் வேலைக்கு நம்பிக்கையா ஒரு ஆளு ஓணும்ன்னு சொன்னாரு. தற்காலிகமா ஒன்ன சேத்து உடறன், செய்யறியா?” என்று கேட்டார். எவ்விதமான மறுப்பும் இல்லாமல் அந்தத் திட்டத்துக்கு அண்ணன் உடன்பட்டார்.
அண்ணனைப்பற்றியும் அண்ணனுக்குச்
செய்யவேண்டிய எதிர்காலக் கடமைகள்பற்றியும் அப்பாவிடம் அம்மா ஓய்வாக உட்கார்ந்திருந்த நேரத்திலெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தாள். என்னென்னமோ திட்டங்கள். எதுவும் சரியாக காதில் விழாதபடி ரொம்பவும் தணிந்த குரலில் இருந்தது அந்தப் பேச்சு. நடு இரவில் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்திருக்கும் சமயத்தில்கூட அந்தப் பேச்சுச்சத்தம் கேட்கும். ஆனாலும் ஒரு சொல் கூடப் புரியாது.
எல்லாமே
நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்திருந்த வேளையில், இரண்டுமூன்று மாதங்களுக்குள் பழனி அண்ணன் வேறொரு பிரச்சினையில் அகப்பட்டுக்கொண்டார். அவரைப்பற்றி அப்பாவைச் சந்திக்க வந்த கடைநண்பர் பேசிக்கொண்டிருந்ததை ஒருநாள் தற்செயலாகக் கேட்கமுடிந்தது. வேற்று மனிதர்கள் காதில் விழுந்துவிடக்கூடாது என்னும் கவனத்துடன் மிகவும் தணிந்த குரலில்தான் ஒவ்வொரு வாக்கியமாக அவர் சொன்னார். இருந்தாலும் பக்கத்தில் உட்கார்ந்து பாடம் எழுதிக்கொண்டிருந்த என் காதில் எல்லாமே தெளிவாக விழுந்தது. ”வேல செஞ்சமா, நாலு காசிய சம்பாதிச்சமான்னு போவாம, காதல் கீதல்னு எதுக்கு நம்ம தலயில நாமே மண்ண அள்ளிப் போட்டுக்கணும் சொல்லுங்க? தம்பிக்கு இருக்கிற அறிவுக்கும் தெறமைக்கும் அசல் தங்கக்கொடமாட்டம் பொண்ணுங்க கெடைக்கும். இப்பவே எதுக்கு அவசரம் சொல்லுங்க? வயசுல மனசு காக்காமாரி நாலுபக்கமும் அலபாயத்தான் செய்யும், இல்லைன்னு சொல்லல. ஆனா நாமதான கட்டுப்படுத்திக்கணும். கட்டுப்படுத்தலைன்னா நமக்கும் மிருகத்துக்கும் என்னாங்க வித்தியாசம் இருக்குது? நம்ம கம்பெனியில பனங்குப்பத்து பொண்ணு ஒன்னு வேலை செய்யுது. பாக்கறதுக்கு கொஞ்சம் லட்சணமா வெள்ளயா இருக்கும். தங்க ஊசிங்கறதுக்காக எடுத்து கண்ணுல குத்திக்கமுடியுமா, சொல்லுங்க. பொண்ணு விரிச்ச வலையில இவரு உழுந்தாரா, இவுரு விரிச்ச வலையில அந்த பொண்ணு உழுந்ததா, சரியா தெரியலை. ஆனா பத்து நாளைக்கி முன்னால வேலய முடிச்சிட்டு தம்பி வெளிய போனதும் வழியில மடக்கி அந்த பொண்ணுக்கு அண்ணங்காரனுங்க அடிச்சிட்டானுங்க. அதுக்கப்பறம்தான் எனக்கே விஷயம் புரிஞ்சிது. கட விவகாரம்ன்னா நானே தம்பிகிட்ட பேசிருவன். இந்த விஷயம்ங்கறதால எனக்கு மனசுக்குள்ள ஒரு தயக்கம் இருக்குது. உங்களுக்கு எந்த விஷயமும் தெரியாதுன்னு சொல்றதால, நான் இவ்வளவயும் சொல்றன். நீங்களாவது ஒரு வார்த்த சொல்லி வைக்கணும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அவர்
சென்றபிறகு என்ன
விஷயம் என்று கேட்ட அம்மாவிடம் அப்பா எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்லி முடித்தார். “நம்ம புள்ளய ஒரு வார்த்த கண்டிச்சி வைக்கறதுதாங்க நல்லது” என்று அவசரப்பட்டாள் அம்மா. “இருஇரு, அவசரப்படாத. அப்பிடிலாம் எடுத்தம் கவுத்தம்ன்னு செய்யமுடியாது. ஏதாச்சிம் ஏடாகுடமான முடிவுக்கு போயிட்டான்னா, என்னா செய்யமுடியும், சொல்லு. தற்சமயத்துக்கு எதுவும் பேசவேணாம். அப்பிடியே ஆறப் போடுவம். அப்பறமா கேக்கலாம். சின்ன வயசுதான?. கொஞ்சம் அப்பிடி இப்பிடிதான் இருக்கும்” என்று அடக்கிவைத்தார் அப்பா. துரதிருஷ்டவசமாக அவராக எதையும் கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக பழனி அண்ணனின் வாழ்க்கையே முடிந்துவிட்டது.
அண்ணனைப்பற்றிய யோசனைகளில்
மூழ்கியபடி நடந்துவந்ததில் தென்னந்தோப்பு வீட்டுக்கு சீக்கிரமாகவே வந்துவிட்டதுபோல இருந்தது. வேலிப்படலைத்
திறந்துகொண்டு
உள்ளே சென்று முற்றத்தை ஒட்டிய புங்கமரத்தோடு சங்கிலி போட்டு கட்டிவைத்திருந்த சைக்கிளைப் பார்த்தபோது பழனி அண்ணன் தொடர்பான நினைவுகள் மறுபடியும் புதுவேகத்துடன் மோதின. கம்பெனிக்குச் செல்லத் தொடங்கிய நேரத்தில்தான் அண்ணனுக்காக அந்த சைக்கிளை வாங்கிக் கொடுத்திருந்தார் அப்பா. அதற்குப் பிறகு வேலை நாட்களில் அவர் ஓட்டுவது என்றும் விடுமுறை நாட்களில் நான் ஓட்டுவது என்றும் எங்களுக்குள் நாங்களே ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தோம்.. அக்கணமே அண்ணன் பரண்மீது ஏறி, எங்கோ ஒரு இடத்தில் ஒரு வெண்ணிற பெயிண்ட் டப்பியைக் கண்டுபிடித்து எடுத்துவந்தார். பிறகு சின்ன பிரஷ்ஷால் மட்கார்டில் ’பழனி – மணி’ என்று இருவருடைய பெயர்களையும் இணைத்து எழுதிவிட்டு சிரித்துக்கொண்டே ”எப்படிடா இருக்கு?” என்று கேட்டதை நினைத்தபோது மனம் வெடித்துவிடும்போல இருந்தது.
ஒட்டடைக்கோலுடன் கதவைத்
திறந்ததும் அமைதி முகத்தில் அறைந்தது. சுவரில் பெரியப்பா, பெரியம்மா இருவருடைய புகைப்படங்களும் தொங்கின. அதற்கு எதிர்ப்புறத்தில் பழனி அண்ணனின் படம் இருந்தது. பக்கவாட்டுத் தோற்றத்தில் பழனி அண்ணனிடம் உண்மையிலேயே கமல் சாயல் தெரிவதைக் கவனித்தேன். எல்லாவற்றையும் கழற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தேன். பிறகு ஒவ்வொரு அறையாக நுழைந்து பார்த்துவிட்டு திரும்பினேன். நான் ஒரு அறையில் நின்றிருக்கும்போது அவர் வேறொரு அறையில் இருப்பதைப்போலவே ஓர் எண்ணம் உருவானது.
வீட்டுக்குள்
நிலவிய அமைதி அடுக்கிவைக்கப்பட்ட பெரியபெரிய பாறைக்குவியல்களுக்கு நடுவில் இருப்பதுபோன்ற உணர்வைக் கொடுத்தது. எந்தக் கணத்திலும் அந்தப் பாறைகள் சரிந்து ஆளை அமுக்கி நசுக்கிவிடும் என்று தோன்றியபடி இருந்தது. அக்கணத்தில் பழனி அண்ணன் எப்போதும் விரும்பிக் கேட்கக்கூடிய பாட்டை ஒருதரம் கேட்கவேண்டும் என மனம் விரும்பியது. சுவர் அலமாரித் தட்டில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கேசட்டுகளை ஒருமுறை வேகமாகப் புரட்டிப் பார்த்தேன். மேற்புறத்திலேயே ’அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் ஒலிநாடா இருந்தது. பெட்டியில் வைத்துச் சுழலவிட்டேன். ’கடவுள் அமைத்துவைத்த மேடை’ பாட்டு கணீரென்ற குரலில் ஒலித்தது. அண்ணன் எங்கோ பக்கத்தில் நின்றபடி கேட்டுக்கொண்டிருப்பான் என நினைத்தபோது கண்கள் தளும்பின.
பாட்டை
அசைபோட்டபடி,
ஒவ்வொரு அறைக்குள்ளும் இருந்த எல்லாச் சாமான்களையெல்லாம் எடுத்து ஒதுக்கிக் குவியலாக்கி, ஒரு தார்ப்பாயை விரித்து மூடிவிட்டு ஒட்டடை அடிக்கத் தொடங்கினேன். பத்து பன்னிரண்டு முறை மீண்டும்மீண்டும் அதே பாட்டை ஓடவிட்டுக் கேட்டபடியே வேலையைச் செய்து முடித்தேன். பாட்டின் வரிகளை முணுமுணுத்தபடியே, துடைப்பத்தால் எல்லா
இடங்களையும் பெருக்கி குப்பையை ஒதுக்கிக்கொண்டு வந்தேன்.
அப்போதுதான்
தற்செயலாக பழனி அண்ணன் கட்டிலுக்குக் கீழே ஒரு பெட்டி கிடப்பதைக் கவனித்தேன். குனிந்து உள்ளே சென்று பிடியில் கைவைத்து இழுத்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். பூட்டு எதுவும் இல்லை. விரலால் அழுத்தி விலக்கியதுமே திறந்துகொண்டது. இரண்டு வேட்டிகளும் நாலைந்து புடவைகளும் சில சட்டைகளும் இருந்தன. ஒரு சட்டைக்கடியில் ஒரு பழைய தினத்தந்தி செய்தித்தாள் கிடந்தது. அண்ணாவின் இறுதி ஊர்வலம் செல்லும் படம் அதில் பிரசுரமாகியிருந்தது. அந்தத் தாளை எடுத்தபோது, இரண்டு சட்டைகளுக்கு இடையில் பருமனானதொரு பச்சை உறை இருப்பதைப் பார்த்தேன். சட்டை மடிப்பு கலைந்துவிடாதபடி மெதுவாக அந்த உறையை இழுத்தேன். அதற்குள் பத்து பதினைந்து கடிதங்கள் இருந்தன. எல்லாமே வெள்ளைத்தாளில் எழுதப்பட்டவை. அனைத்தும் கடந்த ஒன்றிரண்டு
மாதங்களில் எழுதப்பட்ட கடிதங்கள். இடதுபக்கம் சரிந்தவாக்கில் நேர்க்கோட்டைவிட்டு சிறிதுகூட பிசகாத எழுத்துவரிசை. ஒவ்வொன்றையும் வேகவேகமாகப் பிரித்துப்பிரித்து பார்த்தேன். எல்லாம் ஒருவரே எழுதியவை. ஒவ்வொரு கடிதமும் அன்புள்ள பழனிக்கு என ஆரம்பித்து காதல் நினைவுகளைச் சொற்களாக மாற்றிக் கொட்டி நிரப்பி, இறுதியில் அன்பு முத்தங்களுடன் கஸ்தூரி என்று முடிந்தது. ஒரு கடிதம் தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடியது. இன்னொரு கடிதம் காதல் நினைவுகளின் சுமையைச் சுட்டிக்காட்டியது. ஒவ்வொன்றிலும் விதவிதமான ஏக்கங்கள். கனவுகள். கொஞ்சல்கள். சீண்டல்கள். மற்றொரு
கடிதமோ தன்னை மறந்துவிடும்படி கெஞ்சியது.
“என்னடா, வேலைய முடிச்சிட்டியா?” என்று கேட்டபடி அந்த நேரத்தில் அப்பா வந்து நிற்கக்கூடும் என்று நான் நினைக்கவே இல்லை. “ம்?” என்றபடி நான் அவரை அவசரமாக நிமிர்ந்து பார்த்த தருணத்தில் பெட்டிக்குள் இருந்த எல்லாக் கடிதங்களும் திறந்த நிலையிலேயே இருந்தன. “வேலைய முடிச்சிட்டியான்னு கேட்டன். அவ்ளோதான். அதுகூட காதுல உழலியா?” என்று சொன்னதையே சொல்லிவிட்டு “அது என்னடா கையில? சினிமா பாட்டுங்கள எழுதி வச்சிருக்கானா?” என்று கேட்டபடியே அப்பா நெருங்கி வந்து என் கையில் இருந்ததை வாங்கிக்கொண்டார். கடிதங்கள் என்றதும் முதலில் அவர் கண்கள் சுருங்கின. பிறகு படிக்கப்படிக்க அவர் முகம் வாட்டத்தில் மூழ்கியது. விழிகளின் ஓரம் கண்ணீர் திரண்டு முட்டிக்கொண்டு நிற்க முதலில் அவர் என்னைப் பார்த்தார். பிறகு ஜன்னல் வழியாக வேலியைப் பார்த்தபடி பெருமூச்சுடன் உட்கார்ந்துவிட்டார்.