எங்கள் கிராமத்தில் எங்களுடைய வீட்டுக்கு அருகிலேயே ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. ஸ்டேஷன் என்பது ஓடுகள் வேய்ந்த ஒரு பெரிய கூடம். ஸ்டேஷனுக்கு வெளியே வில்வண்டிகளும் குதிரைவண்டிகளும் காத்திருக்க, உள்ளே ரயிலுக்காக காத்திருப்பவர்கள் உட்கார்ந்து கதைபேசிக்கொண்டிருப்பார்கள். சிறுவர்களாகிய நாங்கள் இன்னொரு ஓரத்தில் விளையாடிக்கொண்டிருப்போம். ரயில்கள் ஸ்டேஷனைக் கடக்கும்போதெல்லாம் ”இது ராமேஸ்வரம் போகும் ரயில், இது காசிக்குப் போகும் ரயில்” என்று சுட்டிக்காட்டிப் பேசும் உரையாடல்கள் எங்கள் காதில் விழுந்தபடி இருக்கும். காசி, ராமேஸ்வரம் எல்லாம் எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் இடங்கள் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்த வயது அது.
ஒருமுறை எங்கள் தெருவில் வசித்துவந்த ஒரு தாத்தா ஒருநாள் காசிக்குப் புறப்பட்டுச் சென்றார். தெருவில் வசித்துவந்த எல்லோருமே கூட்டமாக ஸ்டேஷனுக்கு வந்து அவரை ரயிலேற்றி அனுப்பிவைத்தார்கள். இரண்டுமூன்று வாரங்கள் கழித்து அவர் திரும்பிவந்தபோதும் மேளதாளத்தோடு வந்து அவரை வரவேற்று மாலையெல்லாம் போட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். வாசலில் உறவுக்காரர்களும் அக்கம்பக்கத்து வீட்டினரும் அவருடைய காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். ஏறத்தாழ ஒரு மாதம் வரையில் அவரைச் சந்திக்கச் செல்லும் அனைவரும் அவருடைய காலைத் தொட்டு வணங்குவது வழக்கமாகிவிட்டது.
சிறுவர்கள் எல்லாம் வாசலில் கூடியிருக்க, அந்தத் தாத்தா காசிப்பயணத்தின் அனுபவங்களை கதைகதையாகச் சொன்னார். எங்கள் கிராமத்து ஏரியைத் தவிர வேறெதையும் பார்த்திராத எங்களுக்கு அவர்
வெள்ளம் பெருக்கெடுத்தோடும் கங்கையைப்பற்றிச் சொன்ன கதைகள் சிலிர்ப்பூட்டும்படி இருந்தன. கங்கையின் கரையில் அமைந்திருக்கும் கோவில்கள், வழிபாடுகள், படகுகள் பற்றியெல்லாம் அவர் ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டே இருந்தார். மெல்ல மெல்ல கங்கை என்னும் நதியைப்பற்றியும் காசி என்னும் நகரத்தைப்பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்குள் தெளிவான சித்திரங்கள் உருவாகத் தொடங்கின.
பொதுப்பள்ளி, பொதுப்பாடம், பொது நூலகம் என்னும் அமைப்பு உருவாகும் முன்பு ஒரு நகரத்தைப்பற்றிய அறிவும் தெளிவும் அங்கு சென்று திரும்பியவர்கள் வழியாகவே முதன்முதலாக அறிந்துகொள்ளும் முறையே நம் நாட்டில் இருந்தது. படிப்பு என்பது உருவாகி, படித்தவர்கள் என்னும் வட்டம் உருவானதும், படித்தவர்கள் தான் அறிந்துகொண்ட தகவல்களை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் முறை தோன்றியது. தர்க்கங்களின் அடிப்படையில் தனக்குத் தெரிந்த தகவல்களை அடுக்கிச் செறிவூட்டி ஒரு கருத்தாக மாற்றத் தெரிந்தவர்கள், அதை கச்சிதமாக முன்வைக்க முனைந்தபோது அவர்கள் மீது மக்களின் கவனம் குவிந்தது.
தமக்குத் தேவையான, ஆனால் தெரியாத ஒன்றைச் சொல்பவர் என்னும் அடையாளத்தை சமுதாயம் அவருக்கு வழங்கியது. எண்ணற்ற முறைகள் எடுத்துரைத்துப் பழகிப்பழகி அவருடைய நாவன்மை மேலோங்கியபோது அவருக்குரிய முக்கியத்துவமும் பெருகியது. கால ஓட்டத்தில் துறை சார்ந்த பேச்சாளர்கள் உருவாகத் தொடங்கினார்கள். இலக்கியம், அறிவியல், அறவியல், ஓவியம், சிற்பம், சமூகவியல், சூழியல், அரசியல், வரலாறு, பண்பாடு, தத்துவம், மதங்கள் என ஒவ்வொரு தளம் சார்ந்தும் தம் கருத்துகளை விரிவான வகையில் முன்வைக்கும் ஆளுமைகள் மலர்ந்தனர். இத்துறைகளை மேலும் ஆழ்ந்து புரிந்துகொள்ளும் வகையில் புதிய புதிய கோணங்கள் வழியாக வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஆளுமைகளின் உரைகள் பார்வையாளர்களுக்குத் தூண்டுகோல்களாக இருக்கின்றன.
ஒவ்வொரு ஊரிலும் படித்த இளைஞர்கள் ஒன்றிணைந்து சிறுசிறு அமைப்புகளை உருவாக்கினார்கள். பல ஊர்களிலிருந்து பேச்சாளர்களை அழைத்துவந்து பேசவைத்து புதிய கருத்துகளை ஊருக்குள் கொண்டு வந்தார்கள். மக்களின் மனத்தில் மெல்ல மெல்ல ஒரு சிந்தனை மாற்றம் உருவாகத் தொடங்கியது. திருக்குறள்
மன்றங்கள், கம்பன் மன்றங்கள், பாரதியார் மன்றங்கள், ஆழ்வார் மையங்கள், சேக்கிழார் மன்றங்கள், இளங்கோவடிகள் மன்றம், மணிமேகலை மன்றம், காந்தி நிலையங்கள், நேரு நிலையங்கள், கார்ல் மார்க்ஸ் படிப்பகங்கள், அம்பேத்கர் படிப்பகங்கள், எம்.ஜி.ஆர்.மன்றங்கள் என ஏதேனும் ஒன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் தொடங்கப்பட்டு செயல்படத் தொடங்கின. கல்வியின் தொடக்கப்புள்ளியாக பள்ளிக்கூடங்கள் இருக்க, அறிதலின் தொடக்கப்புள்ளியாக இந்த அமைப்புகள் இருந்தன. இன்று இருபதுகளையொட்டிய வயதினருக்கு இது ஒரு புனைகதை போலத் தோன்றலாம். ஆனால் அறுபதுகளைக் கடந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இதன் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும்.
அறிவூட்டும் அமைப்புகளின் வரிசையில் ’சுதந்திரச்சிந்தனை’ அமைப்புக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. எந்த மனச்சாய்வும் இல்லாத ஒரு ஜனநாயகத்தன்மை இந்த அமைப்பிற்கு வலிமை சேர்க்கிறது. அறிவை அறிவாக மட்டுமே பார்க்கிற, முரண்பட்ட கருத்துகளுக்கும் இடமளிக்கிற விசால மனப்பான்மையுடன் இந்த அமைப்பு இயங்கிவருவதைக் காண முடிகிறது. இந்த அமைப்பின் வெற்றிக்கு இதுவே முக்கியமான காரணம்.
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆளுமைகளை சுதந்திரச்சிந்தனை இராஜபாளையத்துக்கு அழைத்து உரையாற்ற வைத்திருக்கிறது. அது ஒரு பெரிய சாதனை. ஜெயமோகன், அ.மார்க்ஸ், நக்கீரன், கலாப்ரியா, தேவதேவன், ரவிசுப்பிரமணியன், இமையம், தியடோர் பாஸ்கரன், ரவி சுப்பிரமணியன் என அந்த ஆளுமைகளின் வரிசை மிக நீண்டது. அவர்கள் வழியாக இந்த ஊரைச் சேர்ந்த கல்வியாளர்களுக்கும் மாணவமாணவிகளுக்கும் கவிதை, சிறுகதை, நாவல், பழங்கால இலக்கியம், சூழியல், வரலாறு, பண்பாடு சார்ந்த உரையாடல்களை இந்த
அமைப்பு சாத்தியப்படுத்தியிருக்கிறது. ஐயங்களைத் தெளிவுபடுத்தும் மன்றமாகச் செயல்பட்டிருக்கிறது.
ஓர் உரையைக் கேட்பதும் கேட்கவைப்பதும் முக்கியமான செயல்களா என ஒருவருக்கு ஐயம் எழலாம். சீசரின் வரலாற்றை மையப்புள்ளியாகக் கொண்டு ஷேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீசர் நாடகத்தை நாம் அனைவரும் படித்திருப்போம். சீசர் மிகப்பெரிய வீர்ர்.
ரோம் பேரரசின் அரசர். மக்கள் தலைவர். மக்கள் முன்னேற்றத்துக்கான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தியவர். இன்று நாம் பின்பற்றும் காலண்டர் முறையை உருவாக்கியவர் இவரே. தன் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பை ரைன் நதி வரை நீட்டி, ரைன் நதியின் மீது பாலத்தைக் கட்டி அதன் வழியாக பிரிட்டனுக்குள் ஊடுருவி போர் தொடுத்தார் சீசர். ஆனால் அவருடைய செயல்பாடுகள் ரோம் நகரில் இருந்த செனட்டுக்கு உவப்பளிக்கவில்லை. அதனால் சீசரின் நண்பனான புருட்டசின் தலைமையில் செனட் உறுப்பினர்கள் சீசரைக் கொலை செய்தனர். முப்பத்தைந்து கத்திக்குத்துகளுடன் சீசர் உயிரிழந்தார். நல்லடக்கம் செய்வதற்காக அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
உண்மையறியாத மக்கள் துயரத்துடன் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அப்போது சீசருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உரை நிகழ்த்துவதற்காக எழுந்து நின்றான் ஒருவன். அவன் பெயர் மார்க் ஆண்டனி. ’நண்பர்களே, ரோமானியர்களே, எனதருமை தேசத்தவரே, நான் சொல்வதைக் காதுகொடுத்து கேளுங்கள். சீசரை அடக்கம் செய்வதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அவனைப் புகழ்வதற்காக அல்ல’ என்று தன் உரையைத் தொடங்குகிறான் அவன். பேச்சுவாக்கில் சீசர் மீது புருட்டஸ் சுமத்திய பழிகளுக்கெல்லாம் பதில்களை அடுக்குகிறான். ஒவ்வொரு பதிலையும் சொல்லி முடிக்கும்போது ‘உண்மைதான், சீசர் குற்றவாளி. புருட்டஸ் மேன்மையான மனிதன்’ என்று சொல்லி முடிக்கிறான். அவன் உரையாற்றி முடிக்கும் தருணத்தில் உண்மையை உணர்ந்துகொண்ட மக்கள் மார்க் ஆண்டனிக்கு ஆதரவாகத் திரள்கிறார்கள். உண்மை சார்ந்த ஓர் உரை அரசியல் சூழலையே மாற்றிவிடுகிறது.
சாக்ரடீஸ் ஆற்றிய உரைகள் உருவாக்கிய மாற்றங்களையும் நாம் இத்தருணத்தில் நினைத்துக்கொள்ளலாம். இந்தியத் தத்துவத்தைப்பற்றி சிகாகோ நகரில் விவேகானந்தர் நிகழ்த்திய உரைகளின் விளைவை இந்த உலகமே அறியும். அவர் உரைகள் இந்தியத் தத்துவம் சார்ந்து மேலைநாட்டினர் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றி அதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் மதிப்பையும் தூண்டின. அகவிடுதலை சார்ந்து ஜே.கிருஷ்ணமூர்த்தி நிகழ்த்திய பேருரைகளாலும் அவருடன் நிகழ்த்திய உரையாடல்களாலும் தெளிவடைந்தவர் பலர்.
கடந்த நூற்றாண்டில் தன் உரைகளால் மாபெரும் அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியவர் காந்தியடிகள். காசி இந்து பல்கலைக்கழகத்தில் ஆடம்பரமான ஆடை அணிகலன்களோடு நிறைந்திருந்த அவையினர் நடுவில் அவற்றையெல்லாம் துறந்துவிடுமாறு காந்தியடிகள் ஆற்றிய உரை இந்திய வரலாற்றில் ஒரு பெரிய திருப்பத்தை உருவாக்கியது. காந்தியடிகளின் ஒவ்வொரு உரையும் மிக எளிமையான வாக்கியங்களாலும் சுருக்கமான சொற்களாலும் நேரிடையாக நெஞ்சில் பதியும் வகையில் அமைந்திருந்தது.
அவருடைய உரைகள் இன்று பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இன்று எடுத்துப் படித்தாலும் அவை புத்தம்புதியதாக உள்ளன. உண்மையும் கனிவும் சுடர்விடும் அவர் உரைகள் ஒவ்வொரு கணமும் அவர் இருப்பை உணர்த்தியபடியே இருக்கிறது.
சென்னை கடற்கரையில் அவர் நிகழ்த்திய உரை எண்ணற்ற தியாகிகளை தமிழகத்தில் உருவாக்கியது. அவருடைய தலைமையையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அன்றுமுதல் அவருடைய கிராம நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு இறுதிமூச்சு வரைக்கும் பாடுபட்டார்கள். காந்தியடிகளின் உரையைக் கேட்ட பிறகு, அவர்கள் ஒவ்வொருவரும் காந்தியடிகளைப்போலவே நூல்நூற்று, கதராடை அணிந்து, தியாகம் என்னும் சொல்லுக்கு இலக்கணமாகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்கள்.
சுதந்திரச்சிந்தனை நிகழ்ச்சியில் இன்று பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்கும் யாரோ ஒருவர் எதிர்காலத்தில் ஓர் ஆளுமையாக மலரலாம். அல்லது ஒரு பள்ளியாசிரியராகவோ கல்லூரி ஆசிரியராகவோ மாறலாம். எங்கோ ஓர் ஊருக்கு அதிகாரியாகவும் செல்லலாம். அல்லது ஒரு சேவையாளராக எங்கோ ஓரிடத்தில் சேவையாற்றலாம். அவர்களில் யாராவது ஒருவர் எதிர்காலத்தில் தானறிந்த ஒரு விஷயத்தைப்பற்றி ஆர்வத்தோடு முன்வைக்கும் ஓர் அவையில் தன்னுடைய அறிவின் தொடக்கப்புள்ளியாக இந்தச் சுதந்திரச்சிந்தனை அமைப்பை நெகிழ்ச்சியோடு நினைவுக்கூர்வார்.
இத்தகு அபூர்வமான கணங்களின் வழியாகவே ஓர் அமைப்பின் செயல்பாடு வரலாற்றுச் சம்பவமாக மாறுகிறது. சுதந்திரச்சிந்தனையும் வரலாற்றுச்சம்பவமாக மாறும் ஒரு காலம் விரைவில் வரும். வாழ்த்துகள்.
(இராஜபாளையம் சுதந்திரச்சிந்தனை சிறப்பு மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை)