நவீன ஓவியரான ஆதிமூலம் காந்தியடிகளின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தையொட்டி, காந்தியடிகளை பல்வேறு தோற்றங்களில் காட்டும் எண்ணற்ற கோட்டோவியங்களை வரைந்து ஒரு கண்காட்சியாக வைத்திருந்தார். பிறகு அந்த ஓவியங்கள் தொகுக்கப்பட்டு நூலாகவும் வெளிவந்தது. ஒவ்வொரு ஓவியமும் பத்துப் பதினைந்து கோடுகளிலும் வளைவுகளிலும் அடங்கிவிடும். ஆனால் அவையனைத்தும் ஒன்றிணைந்து காந்தியடிகளை நேரில் பார்ப்பதுபோல உணரவைக்கும்.
கோட்டோவியத்தையும் ஆதிமூலத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. கசடதபற இதழ் வழியாக அவர் இலக்கியவாசகர்களுக்கு அறிமுகமானார். ஜூனியர் விகடன் இதழில் கி.ராஜநாராயணன் எழுதிய கரிசல்காட்டுக் கடுதாசி கட்டுரைகளுக்கு ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் மிகவும் கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. கி.ரா. சுட்டிக்காட்டும் விவசாயியை மிகக்குறைந்த கோடுகளாலும் வளைவுகளாலும் கண் முன்னால் கட்டியெழுப்பி நிறுத்தியிருந்தார் ஆதிமூலம். கதையில் கி.ரா. அந்த விவசாயிக்கு ஏதோ ஒரு நாயக்கரின் பெயரைச் சூட்டியிருப்பார். ஆனால் அது அவரைமட்டும் குறிப்பதல்ல. ஒட்டுமொத்தமான விவசாய சமூகத்தின் அடையாளமாகவே அந்தப் பெயர் இருக்கும். அதுபோலவே ஆதிமூலம் தீட்டிய கோட்டோவியமும் இன்றளவும் விவசாய சமூகத்தின் அடையாளமாகவே நீடித்திருக்கிறது. அவன் படும் கவலையைக்கூட குனிந்த முகத்தில் படியவைத்த கோடுகள் வழியாக உணர்த்திருப்பார் ஆதிமூலம். கிராமிய மனிதர்களை எழுத்துலகில் கோட்டோவியங்களாகப் பதிவு செய்தவர் கி.ரா. ஓவிய உலகில் பதிவு செய்தவர் ஆதிமூலம்.
ஓவிய உலகில் ஆதிமூலத்தைத் தொடர்ந்து மருது, வீர.சந்தானம் போன்றோர் காலம்தோறும் உருவாகி வந்ததைப்போலவே எழுத்துலகில் கி.ரா.வைத் தொடர்ந்து பல படைப்பாளிகள் காலம்தோறும் உருவானபடி இருக்கிறார்கள். பூமணி, சோ.தருமன், இலட்சுமணப்பெருமாள், சு.வேணுகோபால், கண்மணி
குணசேகரன் போன்றோர் பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இன்று, இந்த வரிசையில் இடம்பிடித்திருக்கிறார் சந்தியூர் கோவிந்தன்.
கோவிந்தனின் கதைக்களன் முழுக்கமுழுக்க கிராமம் சார்ந்ததாகாவே இருக்கிறது. அனைத்தும் அவர் வாழ்ந்த, அறிந்த கிராமங்கள். ஒண்டியூர், ஆட்டையாம்பட்டி, சென்னைக்கல் புதூர், பனமரத்துப்பட்டி, நொறுக்காம்பாளையம், பனஞ்சாரி, கொளத்தூர், மல்லூர், பேளுக்குறிச்சி, சிங்களாந்தபுரம், பெரமனூர், சேந்தமங்கலம், தலைவாசல் என அவர் வாழும் ஊருக்கு அருகிலேயே இருக்கும் கிராமங்கள். அதனால் அந்த ஊர்சார்ந்த தகவல்களையும் ஊர் அமைப்புகளையும் மிகவும் துல்லியமாக அவர் காட்சிப்படுத்தியிருக்கிறார். மனிதர்களையும் அவர்களுடைய உண்மையான அடையாளங்களோடு நடமாடச் செய்திருக்கிறார். கிணறுகளுக்கு தூர் வாருபவர்கள், கல்கட்டுகிறவர்கள், வண்டிக்காரர்கள், ஆடு மேய்ப்பவர்கள், பன்றி வேட்டைக்குச் செல்பவர்கள், குழி வெட்டுபவர்கள் என உழைத்து வாழும் எண்ணற்ற மனிதர்களே கோவிந்தனின் கதைமாந்தர்களாக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கதைமாந்தருக்கும் ஓர் அடைமொழி இருக்கிறது. பொவலத்தின்னி கிழவன், தோணிவாயமூட்டுப் பையன், தொன்னையன் கிழவன், கொடாப்பன் என எண்ணற்ற அடைமொழிகள். எல்லாமே ஆர்வமூட்டுகின்றன. ஒவ்வொரு அடைமொழிக்குப் பின்னாலும் ஒரு கதை ஒட்டிக்கொண்டுள்ளது. கதையைப்போலவே அந்தக் காரணக்கதையும் சுவாரசியமானதாக இருக்கிறது. கொடாப்பு என்பது மழையில் கோழிகள் நனைந்துவிடாதபடி பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் கூண்டு போன்ற அமைப்பு. கிடை போடப்போன இடத்தில் ஓர்
இளைஞனுக்கும் பக்கத்தில் ஏதோ ஓர் ஊரில் வசிக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையில் எப்படியோ நெருக்கம் உருவாகிவிடுகிறது. நாளடைவில் அந்த நெருக்கம் வளர்ந்து, ஒருவரையொருவர் பார்க்காமலும் தொட்டுக்கொள்ளாமலும் இருக்கமுடியாது என்கிற சூழல் உருவாகிவிடுகிறது. ஒருமுறை ஊரில் இடைவிடாமல் மழை பொழிகிறது. நாட்கணக்கில் நீள்கிறது. தொடுப்புக்காரியைப் பார்க்கமுடியாத தவிப்பு இளைஞனை ஆட்டிப்படைக்கிறது. இனிமேலும் பொறுக்கமுடியாது என்னும் கணத்தில் கோழிகளுக்குப் பாதுகாப்பாக கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த கொடாப்பை எடுத்து தலைமீது கவிழ்த்துக்கொண்டு தன் ஊரைக் கடந்து அவள் வாழும் ஊருக்குச் சென்று அவளைச் சந்திக்கிறான். அவள் வீட்டு வாசலில் அவன் கவிழ்த்துவைத்துவிட்டுச் சென்ற கொடாப்பு அவன் திரும்பி வரும் வரையில் அங்கேயே இருக்கிறது. அவன் வரவை ஊருக்கே அது சொல்லாமல் சொல்லிவிடுகிறது. அன்றுமுதல் கொடாப்பு என்னும் சொல்லே அவனை அழைக்கும் அடைமொழியாகிவிடுகிறது. கால ஓட்டத்தில் அவன் உண்மைப்பெயர் மறைந்து, அடைமொழிப்பெயர் மட்டுமே நிலைக்கத் தொடங்கிவிடுகிறது. இப்படி எண்ணற்ற காரணக்கதைகள் அங்கங்கே மகிழ மரத்தடியில் கொட்டியிருக்கும் மகிழம்பூக்களென தொகுதி முழுதும் விழுந்துகிடக்கின்றன.
ஆட்களுக்கு அடைமொழி இருப்பதுபோலவே வீடுகளுக்கும் அடைமொழிகள் இருக்கின்றன. மனையாராமூடு, பூலாவரியாமூடு என்றே அவ்வீடுகள் குறிப்பிடப்படுகின்றன. அவ்வீட்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் அந்த அடையாளங்களே பெயர்களாக மாறிவிடுகின்றன.
கோவிந்தனின் கதைகளை வாசிக்கும் போக்கில் கதைக்குள் இடம்பெற்றிருக்கும் சிறுசிறு விவரணைக்கதைகள் கூட தனிக்கதைகளாகத் தோற்றமளிக்கின்றன. நினைவில் நின்றுவிடும் அளவுக்கு அந்தத் தனிக்கதைகள் வசீகரம் கொண்டவையாக உள்ளன. ‘மழை முடிந்த பிறகான பொழுது’ என்பது தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு சிறுகதை. கதையில் ஒரு கிழவர் இறந்துவிடுகிறார். வீட்டின் முன் உறவுக்காரர்கள் நிறைந்திருக்கிறார்கள். சடங்கு ஏற்பாடுகளுக்கு ஊர்க்கவுண்டர் ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார். அவரைச் சந்தித்து இறந்துபோனவரைப் புதைப்பதற்குக் குழி வெட்டுவதற்கு முன்பணம் வாங்கிக்கொண்டு இடுகாட்டுக்குச் செல்கிறான் ஒருவன். நூறு ரூபாய் கேட்ட இடத்தில் ஐம்பது ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அதனால் தான் சிறுமைப்படுத்தப்பட்டுவிட்டதாக நினைத்து நினைத்து மனம் குமுறுகிறான் அவன். அது அவனைக் கணந்தோறும் அரிக்கிறது. ‘நல்லமனுசனுக்குக் குழிவெட்ட வந்தா நாலு பணம் நறுக்குனு தருவாங்க. பிச்சைக்கார நாயிக்கு குழிவெட்ட வந்தா இப்படித்தான் செய்வானுங்க பிசுநாரிப் பசங்க’ என்று மனசுக்குள்ளேயே திட்டி எரிச்சலுக்கு வடிகாலாக்குகிறான். வேண்டுமென்றே ஒரு அடி ஆழத்துக்கு மட்டுமே குழியைத் தோண்டிவைக்கிறான். ’கெழவன நாய் நரிங்க புடுங்கி திங்கட்டும். நான் அத பாத்து சந்தோஷப்படணும்’ என்று உள்ளூர நினைக்கிறான். அது மட்டுமல்ல, அவன் என்றோ ஒருநாள் செத்துப்போனவனின் வயல்காட்டில் வேலை செய்யப் போனதையும் அவன் பின்னாலேயே நின்று அதட்டி வேலை வாங்கியதையும் கூட அந்த இடத்தில் நினைத்துக்கொள்கிறான். அன்று அவன் கேட்ட சொற்களெல்லாம் எடைமிக்க கற்களாக அவன் தலைமீது விழுந்து பாரமாகின்றன. அந்த எண்ணம் பெருகப்பெருக அவன் சீற்றம் பல மடங்காக வளர்ந்துபோகிறது. கிளைக்கதையே ஒரு தனிக்கதையாகும் அளவுக்கு நன்றாக உள்ளது.
’ஏழை சொல் அம்பலமேறாது’ என்பது பழமொழி. ஒவ்வொரு காலகட்டத்திலும் அது வெவ்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டபடியே இருக்கிறது. காலம் மாறுகிறதே தவிர, அந்தக் கருத்தோட்டத்தில் மாற்றம் நிகழவே இல்லை. மாறாத அக்கருத்தோட்டம் கோவிந்தன் எழுதியிருக்கும் ‘சாபம்’ கதையில் வெளிப்படுவதைப் பார்க்கலாம். இக்கதையில் “ஏம்புள்ளய கெடுத்து அவ வாழ்க்கைய சீரழிச்சவனோட குடும்பம் நாசமா போவணும். அவுங்க குடும்பத்துல யாருமே கன்னி கழியக்கூடாது. காப்பு நூல் பொம்பளைங்க வ்வுத்துல கரு ஒட்டக்கூடாது. ஏம்புள்ள வாயும் வவுறுமாக நிக்கறாப்புல. அவுங்க குடும்பம் நடுத்தெருவுல வந்து நிக்கணும்” என்று சொன்னபடி இரண்டு கைகளாலும் அள்ளி வீசிச் சாபமிடுகிறாள் ஒரு தாய். அவள் மகளோடு பழகி, அவளைத் தாயாக்கிவிட்டு ஒதுங்கிவிடுகிறான் இளைஞனொருவன். சொந்தம் என்றாலும் அவன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். தன் பையனை வளைத்துப்போட்டு வசதியான வாழ்க்கை வாழ கனவு காண்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள் இளைஞனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஏழைத்தாயின் பேச்சைக் கேட்க யாருமே அங்கில்லை. அதனால் நியாயம் கேட்க பஞ்சாயத்தைக் கூட்டுகிறாள் தாய். ”எந்த மாசத்திலிருந்து முழுகாம இருக்க?” என்று பஞ்சாயத்தினர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் குழம்பித் தவிக்கிறாள் பெண். அதனால் அந்தக் குற்றச்சாட்டையே அடிப்படை இல்லாத குற்றச்சாட்டெனவும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் தீர்ப்புரைத்துவிடுகிறது பஞ்சாயத்து. அதற்கும் ஒருபடி மேலே சென்று, வேறு யாரிடமோ பழகி தாய்மையடைந்துவிட்டு, செல்வந்தன் என்பதால் அவனைத் தேடிவந்து பழி சுமத்துவதாகவும் சாடைமாடையாகப் பேசுகிறது. மீளாத துக்கத்தில் ஆழ்ந்துவிடும் பெண் தூக்கு போட்டுக்கொண்டு இறந்துபோக, கோவில் வாசலில் நின்று மண்ணை வாரியிறைத்துச் சாபமிடுகிறாள் தாய். உருக்கமான கதை.
கோவிந்தன் சிறுகதைகளில் வண்டிக்காரன், வானம்பாடி, கொடாப்பன், பாட்டுச்சத்தம் ஆகிய நான்கும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன. ’வண்டிக்காரன்’ பழனி நல்ல உழைப்பாளி. வேலை தெரிந்தவன். மாடுகளோடு நெருக்கம் பாராட்டுகிறவன். அறிமுகமே இல்லாத மாட்டைக்கூட சில நொடிகளில் நெருக்கம் கொண்டதாக மாற்றிவிடும் திறமை கொண்டவன் அவன். அந்த வட்டாரத்தில் அடங்காத மாடுகளையெல்லாம் அடக்கிக் கட்டுக்குக் கொண்டுவருபவன் அவன்தான். லாடம் அடிப்பவர்கள் அவனுடைய துணையை எப்போதும் எதிர்பார்த்திருப்பார்கள். மாட்டைத் தட்டிக்கொடுத்தபடியும் கழுத்தடியில் வருடிக்கொடுத்தபடியும் சட்டென அமரவைத்து லாடமடிப்பதற்கு வாகாக கால்களை ஒருசில நொடிகளிலேயே நீட்டவைத்துவிடுவான். திடீரென காட்டுக்குள்ளும் ஊர் தாண்டியும் காணாமல் போய்விடும் மாடுகளைத் தடம் பார்த்து கண்டுபிடிக்கும் ஆற்றலும் அவனுக்கு உண்டு.
அடங்காத மாடுகளையும் காணாமல் போய்விடும் மாடுகளையும் கண்டறிந்து கட்டுப்படுத்தத் தெரிந்த அவனுக்குத் தன் மனைவியின் போக்கைக் கண்டறிந்து கட்டுக்குள் வைத்திருக்கத் தெரியவில்லை. அதுதான் துரதிருஷ்டம். ஆதரவில்லாதவனுக்கு ஆதரவளித்து தம்பிபோலப் பாசம் காட்டி பழனியால் வீட்டோடு வைக்கப்பட்டிருந்த ஒருவன் ஒருநாள் அவன் மனைவியை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டுப் போய்விடுகிறான். வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஊரூராக அவர்களைத் தேடி பைத்தியத்தைப்போல அலைகிறான் அவன். எங்கோ பவானி பக்கத்தில் இருப்பதாக ஒருவர் துப்பு கொடுக்கிறார். அதை நம்பி அவன் புறப்பட்டுச் செல்கிறான். புதிர்மிக்க அந்தப் புள்ளியில் கதை முடிந்துவிடுகிறது. அந்த ஊரில் அவளை அவன் சந்தித்துவிடுவானா இல்லையா, அவனுடைய தேடல் பயணம் ஒரு தொடர்கதைதானா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த இயலாமையின் தவிப்பை, கதையை வாசிக்கும் போக்கில் நாமும் உணரத் தொடங்கிவிடுகிறோம். அதுவே கதையின் வெற்றி. வாய்பேச முடியாத மாட்டின் சுபாவங்களைக்கூட அறிந்துகொள்ள முடிந்த ஒருவன் பேசமுடிகிற ஒரு பெண்ணின் சுபாவத்தை அறிந்துகொள்ள முடியாமல் இன்னொருவனிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கும் அவல நிலையை கோவிந்தன் முழு அளவில் நம்மை உணரவைத்துவிடுகிறார். இழந்துபோனவனின் வஞ்சத்தைக் குறைசொல்ல நம்மிடம் ஒரு சொல்லும் இல்லை.
கொடாப்பன் சிறுகதை ஒரு முதியவரின் மரணத்தோடு தொடங்குகிறது. அம்முதியவரின் இளமைக்காலம், திருமணங்கள், பிள்ளைகள், உழைப்பு, உயர்வு, வயதான காலத்தில் பிள்ளைகளோடு சேர்ந்து வாழ்ந்த நிலை என பல குறிப்புகளோடு நீள்கிறது. ஒவ்வொரு மகன் வீட்டிலும் ஒரு மாதமென வாழ நேர்ந்ததை அவர் பல நேரங்களில் சிறுமையாக எடுத்துக்கொண்டதுண்டு. ஆனால் அவை ஒருபோதும் தற்கொலையை நோக்கி அவரைத் தூண்டியதில்லை. எனினும் அவர் இறந்துவிடுகிறார். அது இயற்கைமரணம் என்றே வீட்டிலிருப்பவர்களும் ஊரில் இருப்பவர்களும் நம்புகிறார்கள். சடங்குகள் தொடர்கின்றன. பாடையில் வைப்பதற்குமுன்பாக, அவர் உடலைக் குளிப்பாட்டி உடைமாற்றவைக்கும் தருணத்தில் அவர் இடுப்பில் அரளிக்கொட்டைகளை முடிந்து வைத்திருப்பது கண்டறியப்படுகிறது. வீட்டுக்குப் பின்கட்டில் அம்மியில் அரளிவிதை அரைக்கப்பட்ட சுவட்டையும் கசப்பு தெரியாதிருக்க வெல்லம்போட்டு அரைத்த விதத்தையும் அடுத்தடுத்த கணங்களில் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவரே தேடிக்கொண்ட அந்த மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. வாழ்ந்தது போதும் என அவரே அந்த மரணத்தைத் தேடிக்கொண்டாரா, அல்லது மருமகள்கள் கொடுமை அவரை அந்த முடிவை நோக்கித் தள்ளியதா என்பது அனைவருக்கும் புதிராகவே இருக்கிறது.
பாட்டுச்சத்தம் இன்னொரு நல்ல சிறுகதை. கூத்துக்குழுவுடன் ஆர்வமுடன் இணைந்து கூத்துக்கலையைக் கற்றுத் தேர்ச்சி பெறும் சிறுவனொருவன் வளர்ந்து மெல்ல மெல்ல நல்ல கலைஞனாக மாறுகிறான். ஒருநாள் கூத்தாடிவிட்டு களைப்புடன் திரும்பிய மகனிடம் ஆடுகளை மேய்த்துவிட்டு வருமாறு சொல்கிறாள் அவன் அம்மா. ஆடுகளை தோப்புப்பக்கமாக மேய்க்க அழைத்துச் சென்றவன், அவற்றைச் சுதந்திரமாக மேய அனுப்பிவிட்டு மரத்தடியில் படுத்துத் தூங்கிவிடுகிறான். இருட்டு படர்ந்திருக்கும் வேளையில்தான் அவன் விழித்தெழுகிறான். அருகில் ஆடுகளைக் காணாமல் அஞ்சிக் கலங்குகிறான். வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் என்ன சொல்வது என்கிற கலக்கத்தாலும் அச்சத்தாலும் அங்கிருந்தே ஊரைவிட்டு வெளியேறுகிறான். ஊர்முழுக்கத் தேடியலையும் அம்மாக்காரி அவனைக்
கண்டுபிடிக்க முடியாமல் துயரத்தில் மூழ்குகிறாள். பல ஆண்டுகள் அந்தத் துயரத்தைச் சுமந்தபடி அவள் தனிமையிலேயே வாழ்கிறாள். ஒருநாள் மாரியம்மன் பண்டிகைக்காக நாமக்கல் பக்கம் உறவுக்காரர் வீட்டுக்குச் செல்கிறாள் அவள். பண்டிகையை ஒட்டி அங்கே ஒரு கூத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. உறவினர்கள் அவளை கூத்து பார்க்க அழைக்கிறார்கள். தூங்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு அவள் மறுத்துவிடுகிறாள். சிறிது நேரம் கழித்து கூத்து நிகழும் திசையிலிருந்து எழும் ஒரு பாட்டுச்சத்தத்தைக் கேட்டு அவள் திடுக்கிட்டு எழுகிறாள். அச்சு அசலாக அவள் மகனின் குரல். பரபரப்போடு எழுந்து அந்தத் திசையை நோக்கி அவள் நடந்து செல்கிறாள். அத்துடன் சிறுகதை முடிகிறது. அவள் மகனைச் சந்தித்தாளா, அல்லது அவள் கேட்ட குரல் வெறும் மனமயக்கம் மட்டும்தானா என்பது புதிராகவே எஞ்சுகிறது.
இந்த மூன்று கதைகளிலும் தற்செயலாக அமைந்துவிட்ட புதிர்த்தன்மையே கதைகளுக்கு அழகு சேர்க்கிறது. கோவிந்தன் திறமைமிக்க சிறுகதையாசிரியர் என்பதற்கு இது ஒரு நல்ல அடையாளம். நொடிதோறும் நிகழும் எண்ணற்ற கதைக்கணப் புள்ளிகளுக்கிடையில் நல்ல கணங்களை அடையாளம் காணும் நுண்ணோக்குப் பார்வை அவரிடம் உள்ளது என்பதற்கான சான்று எனவும் சொல்லலாம். நல்ல படைப்பு என்பது எப்போதும் குறிப்பால் உணர்த்தும் ஆற்றல் நிறைந்தது. வளம் மிக்க நம் சங்கக்கவிதை மரபின் நீட்சியாக அது கதையுலகிலும் ஆட்சி செய்கிறது. அந்தக் கலையிலும் நாம் வல்லவர்களாக ஆகவேண்டும். அது ஒன்றும் இயலாத செயலல்ல. இடைவிடாத பயிற்சி இருந்தால் அனைத்தும் சாத்தியமே.
மீண்டும் கி.ரா.வைப்பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அவருடைய கதவு சிறுகதையை நாம் அனைவரும் வாசித்திருப்போம். அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சிறுகதை. ஆனால் இன்றும் அது எழுதப்பட்ட தன்மையால் முதல் தரமான கதையாக வாழ்கிறது. வீட்டுக்கதவில் ஏறி
நின்றுகொண்டு பஸ் விளையாட்டு விளையாடும் குழந்தைகளின் கொண்டாட்டத்தையும் குதூகலத்தையும் விரிவான சித்திரங்களாகக் காட்டித் தொடங்குகிறது சிறுகதை. ஒரு விளையாட்டுத் தோழன்போல அவர்களுக்கு கதவு இருக்கிறது. ஆனால் நிலத்துக்குக் கட்டவேண்டிய தீர்வை பாக்கி அப்படியே பல ஆண்டுகளாக நிற்கிறது என்பதற்காக வீட்டுக்கதவை ஜப்தி செய்துகொண்டு போய்விடுகிறார் தலையாரி. கதவுப் பாதுகாப்பில்லாத வீட்டில் குளிர்காற்று புகுந்து வீசுகிறது. ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. ஆக்கிவைத்த கஞ்சியை நாய் புகுந்து குடித்துவிட்டுப் போகிறது. சில நாட்களுக்குப் பிறகு ஊர்ச்சாவடியில் தம் வீட்டுக்கதவு வைக்கப்பட்டிருக்கும் செய்தியை ஓடிவந்து சொல்கிறான் சிறுவன். அக்காவும் தம்பியும் அங்கே ஓடுகிறார்கள். தரையில் விழுந்து கிடக்கும் கதவைத் தொட்டு முத்தமிட்டுச் சிரிக்கிறார்கள். விளையாத நிலத்துக்கு வரிகேட்கும் கொடுமை என்பது கசப்பான வரலாற்று உண்மை. அதனால் விழுந்து சரிந்த குடும்பங்களும் ஏராளம். தாய் ஒரு பக்கம், தந்தை ஒரு பக்கம் ஓடி ஓடி உழைத்து பிள்ளைகளைக் காப்பாற்றுகிறார்கள். இந்தச் சமூகச்சித்திரத்தையே கி.ரா. தன் கதையில் முன்னிறுத்த நினைக்கிறார். ஆனால் அவர் அதை நேரிடையாக எழுதாமல் கதவில் ஏறி நின்று கற்பனையில் ஊரை வலம்வரும் விளையாட்டை ஆடும் சிறுவர்களைப்பற்றி எழுதுகிறார். அவர்களிடமிருந்து அக்கதவு பிடுங்கப்பட்டதைப்பற்றி எழுதுகிறார். பிறகு கண்டறிந்த குதூகலத்தையும் எழுதுகிறார். தொட்டுத்தொட்டு மகிழும் களிப்பையும் எழுதுகிறார். எழுதப்பட்ட ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் எழுதாத துயரமும் தவிப்பும் விரவிக்கிடக்கின்றன. ஒன்றை எழுதி, குறிப்பால் இன்னொன்றை உணர்த்துவது கலையின் பேரழகு. நிலைத்த உருவத்திலிருந்து கோட்டுருவத்தை நோக்கி நகரும் பயணம் அது.
கோவிந்தனின் எழுத்துப்பயணம் கோட்டுருவத்தை நோக்கிய பயணமாக அமையவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. அவருக்கு என் வாழ்த்துகள்.