வீட்டில் இனிப்பு வாங்கிவரச் சொன்ன தகவல் எப்படியோ மறந்துவிட்டது. அந்த இனிப்பகம் வேறொரு திசையில் இருந்தது. நான் இறங்கிய பேருந்திலேயே இன்னும் இரு நிறுத்தங்கள் கடந்து சென்று இறங்கவேண்டும். மறந்துவிட்டது. அதனால் திரும்பி நடந்தேன்.
இளநீர்க்கடைக்குப் பக்கத்தில் சிக்னலுக்காக ஒரு வேன் நின்றிருந்தது. கட்டில், அலமாரி, படுக்கைச்சுருள்கள், பாத்திரமூட்டைகள், மேசைகள், நாற்காலிகள், தொலைக்காட்சிப்பெட்டி, சிலிண்டர், குளிர்சாதனப்பெட்டி, தட்டுமுட்டுச்சாமான்கள் என அடுக்கி வைத்திருந்தார்கள். நிற்கவைக்கப்பட்டிருந்த நாடாக்கட்டிலின் விளிம்பில் முடிச்சிட்டிருந்த துணிகள் கொடிபோல காற்றில் அலைபாய்ந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறுவனும் சிறுமியும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றி ஏழெட்டு ரோஜாச்செடித்தொட்டிகள். அவை உருண்டுவிடாதபடி அவர்கள் கைகள் பற்றியிருந்தன. ஒவ்வொரு செடியிலும் இரண்டு மூன்று ரோஜாப்பூக்கள். குழந்தையின் கன்னத்தை வருடுவதுபோல சிறுவர்கள் ரோஜாவின் இதழ்களைத் தொட்டுத்தொட்டு மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
இரண்டு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வீடு மாறிக்கொண்டே இருக்கும் குடும்பங்களால் நிறைந்திருக்கிறது நகரம். சின்னச்சின்ன காரணங்களுக்காக வாடகைத்தொகை உயர்ந்துகொண்டே போவதை யாராலும் தடுக்கமுடியாது. மெட்ரோ ஸ்டேஷன், மால்கள், ரிலையன்ஸ் மார்க்கெட், மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைகள் என ஒவ்வொன்றும் நம்மைச் சுற்றி முளைத்து வரவர மறைமுகமாக வாடகை பெருகிவிடுகிறது. அதை வழங்கமுடியாதவர்கள் மூட்டைமுடிச்சுகளோடு வேறு இடம்நோக்கிச் செல்வது தவிர்க்கவியலாத ஒரு நெருக்கடி
இனிப்புக்கடைக்குத் திரும்புகிற தெருமுனையில் இரண்டாயிரம் சதுர அடியில் தெரிந்த வெற்றிடம் முகத்தில் அறைந்தது. அறுவை சிகிச்சை தையல் வடுவென தரைமுழுதும் தகர்க்கப்பட்ட சுவர்களின் அடித்தடங்கள் காணப்பட்டன. அங்கே காலம்காலமாக இருந்த மூன்று பெரிய கடைகள் இருந்த அடையாளமே இல்லை. முதலில் மூக்குக்கண்ணாடிக்கடை, அடுத்து ஆயத்த ஆடைக்கடை,
அதற்குப் பிறகு, அன்பளிப்புப்பொருட்களை விற்கும் கடை. ஒரு பெரிய நிலமே
வெட்டியெடுக்கப்பட்டமாதிரி
வெறுமை சூழ்ந்திருந்தது.
இனிப்புக்கடைக்காரருடன் பேசும்போதுதான் விவரம் கேட்டேன். ”இடம் கைமாறிடுச்சி சார். நோட்டீஸ் குடுத்து காலி பண்ண வச்சிட்டாங்க. மூணு பெரிய நோட்டு. ஆச யார விட்டுது சொல்லுங்க? யாரோ ஒரு பெரிய பில்டர் வாங்கிட்டான்” என்றார் அவர்.
“என்ன வரப்போவுது?”
“அப்பார்ட்மெண்ட்தான். வேற என்ன? அதுலதான் ஒன்னு போட்டு பத்தா எடுக்கலாம்”
என்னால் அந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் கடக்கவே முடியவில்லை. மூன்று கடைக்காரர்களுமே எனக்கு நீண்ட காலமாக பழக்கமானவர்கள். ஒருநாளும் அந்த இடத்தைக் கடக்கும்போது, அவர்களிடம் பார்க்காமலோ பேசாமலோ கடந்ததில்லை.
மூக்குக்கண்ணாடிக்கடை என்பது விற்பனைக்கூடம் மட்டுமல்ல, ஒரு சோதனைக்கூடமாகவும் செயல்பட்டது. குளிரூட்டப்பட்ட அந்த அறையில்தான் எனக்கு முதன்முதலாக கண்பரிசோதனை நிகழ்ந்தது. சுவரோடு பதிக்கப்பட்டிருந்த ஆங்கில எழுத்துவரிசையைப் படிக்கவைத்தார் கடைக்கார்ர். வெவ்வேறு அளவிலான ஆடிகளை வெவ்வேறு வரிசையில் மாற்றிமாற்றி அடுக்கி பொறுமையாக என் பார்வைத்திறனைப் பரிசோதனை செய்தார். கடைசியில் “படிக்கறதுக்கு மட்டும் உங்களுக்கு ஒரு கண்ணாடி போதும் சார். வேற எந்தப் பிரச்சினையும் இல்லை. தைரியமா இருங்க” என்றார். இரண்டே நாட்களில் எனக்குரிய கண்ணாடியையும் தயார் செய்துகொடுத்தார். அப்படி தொடங்கிய பழக்கம் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்தது. ஆறு மாதத்துக்கொரு சோதனை. தேவைப்பட்டால்தான் கண்ணாடி மாற்றும்படி சொல்வார். இல்லையென்றால் அழகாகச் சுத்தம் செய்து கொடுத்துவிடுவார்.
0.5 எண்ணில் தொடங்கிய எனது கண்ணாடிப்பயணம் இருபதாண்டு இடைவெளியில் 2.5 க்கு வந்து நிற்கிறது. பத்து முறையாவது கண்ணாடியை மாற்றியிருப்பேன். பயன்படுத்தாத போது கண்ணாடியை அதற்குரிய கூண்டுக்குள் வைக்கும்படி அவர் சொல்லும் ஆலோசனையை என்னால் ஒருபோதும் கடைபிடிக்க முடிந்ததில்லை. பெரும்பாலும் அதை சட்டைப்பையில் வைத்திருப்பேன். அது மற்ற பொருட்களோடு உரசி வேகமாக தேய்ந்து தெளிவற்றதாக மாறிவிடும்.
கண்ணாடிக்கடைக்குப் பக்கத்தில் ஆயத்த ஆடைகளின் கடை. கடையின் வாசலில் படிப்படியாக வாரப்பட்ட தலைமுடியுடன் திரைப்பட நடிகருக்குரிய சாயலில் நின்றிருந்தார் கடைக்காரர். ஊரிலிருந்து வந்திருந்த சொந்தக்காரரின் மகளோடு நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்த தருணத்தில்
கடையின் கண்ணாடிக்கதவுகளுக்கு இந்தப் பக்கமாகத் தெரிந்த ஒவ்வொரு துணியாக சுட்டிக் காட்டி “இது என்ன நிறம் இது என்ன நிறம்” என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அதே நேரத்தில் துணி வாங்க வந்தவன் என என்னை நினைத்து “சார், உள்ள வந்து பாருங்க. நெறய டிசைன்ஸ் இருக்குது” என்று வெளியே வந்து அழைப்பு விடுத்தார்.
உள்ளே நுழைந்த வேகத்தில் மேசைமீது சரசரவென பல நிறங்களில் பல மாதிரிகளில் துணிகளை ஒன்றின்மீது ஒன்றென போட்டு அடுக்கிவிட்டார். அவர் கைகள் வேகவேகமாகப் புரள சட்டென ஒரு சட்டையை எடுத்து அந்தச் சிறுமியின் முகத்துக்கெதிரே பிடித்து “சொல்லி வச்சி தச்சமாதிரி இருக்கு பாருங்க சார்” என்றார். மறுகணமே அதை எடுத்துவிட்டு, இன்னொன்றை வைத்துக் காட்டினார். மிகவும் லாவகமாக அவர் விரல்கள் ஆடைகளை மடிப்பு கலையாமல் பிரித்து மடிக்கும் கலையை அறிந்திருந்தன. அவருக்கு ஏமாற்றமளிக்கக்கூடாது
என்பதற்காகவே நான் அன்று ஒரு சட்டையை வாங்கினேன். அது எங்களிடையே நட்பு தொடங்கிய நாள்.
அதற்குப் பிறகு பல நாட்கள் உரையாடிக்கொண்டிருப்பதற்காகவே அவருடைய கடைக்குச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அந்தத் தொழிலில் இருக்கும் போட்டிகளையும் சிரமங்களையும் அவர் சொல்லத் தொடங்கினால் அதற்கு முடிவே இருக்காது. தன்னுடைய திருமணத்துக்கு அவர் என்னை அழைத்ததுதான் மிகப்பெரிய ஆச்சரியம். ஒரு வாடிக்கையாளர் என்பதையும் கடந்து அவர் என் மீது வைத்திருந்த மதிப்பை அன்று புரிந்துகொண்டேன். சேலத்துக்கு அருகில் ஒரு கிராமத்தில் நடைபெற்ற அத்திருமணத்துக்கு நான் சென்று வந்தேன்.
கிருஷ்ணன் குழலூதியபடி நின்றிருக்கும் ஓவியத்தை சட்டகமிட்டு நான் அவருக்கு அன்பளிப்பாக அளித்தேன். என் வருகையால் அவர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். என் கைகளை அழுத்தி இறுக்கிப் பற்றிய செயலில் நான் அதை உணர்ந்தேன். பாட்டுக்கச்சேரியின் ஓசையில் குனிந்து தன் மனைவியின் காதருகில் அவர் என்னைப்பற்றி சொன்ன சொற்களை என்னால் கேட்க முடியவில்லை. ஆனால் அதே கணத்தில் அவர் என் மீது படரவிட்ட பார்வை வழியாக அவர் என்ன சொல்லியிருக்கக்கூடும் என்பதை ஊகிக்க முடிந்தது.
அன்பளிப்புப்பொருட்கள் விற்பனைக்கடைக்காரர் அறிமுகமான விதமே ஒரு விசித்திரமான கதை. பிறந்தநாள் அன்பளிப்பு ஒன்றை வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தோம். பொருட்களையெல்லாம் தேர்ந்தெடுத்துக் கொடுத்த வேகத்தில் ஊழியர்கள் வண்ணத்தாள் சுற்றி கல்லாவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் பணம் கணக்குப் பார்க்கும்போது இருநூறு ரூபாய் குறைந்தது. நான் ஒருகணம் பேச்சு வராமல் நின்றேன். அவர் சட்டென புரிந்துகொண்டார். “சார், எடுத்துட்டு போய் முதலில் பார்ட்டி வேலய முடியுங்க. பணத்துக்கு என்ன சார் அவசரம்? நாளைக்கு கொண்டு வாங்க, போதும்” என்று புன்னகைத்தார். வேகவேகமாக ஒரு பையில் போட்டு அனுப்பிவைத்தார். வேறு பேச்சே இல்லை.
எப்போதுமே அவர் அப்படித்தான். பணத்துக்கு எவ்விதமான பெரிய மதிப்பையும் அளித்ததில்லை. பேசத் தொடங்கும்போதுதான் அவர் என்னைப் பார்த்துப் பேசுவார். பிறகு அப்படியே முகம் திரும்பி தொலைவில் தெரியும் தென்னை மரத்திலோ பாக்குமரத்திலோ பார்வை பதிந்துவிடும். கடைசியாக முடிக்கும்போது சரியாக மறுபடியும் அவர் பார்வை திரும்பி வரும். அப்புறம் ஒரு சிரிப்பு. அவ்வளவுதான் அவருடைய உரையாடல். அவர் சொன்ன சொற்களையெல்லாம் ஏதோ காற்றிலிருந்தும் ஆகாயத்திலிருந்தும் எடுத்துக் கொட்டியவையென தோன்றும்.
மேற்கொண்டு அங்கே நிற்க முடியவில்லை. இருபதாண்டுகளாக பார்த்துப் பேசிப் பழகிய முகங்கள் அங்கில்லை என்பதே எனக்கு வேதனையாக இருந்தது. அவர்கள் நகரைவிட்டுச் செல்லக்கூடும் என்றே நான் நினைக்கவில்லை. எங்கள் முந்தைய உரையாடல்களில் அப்படி ஒரு சாயலையே நான் உணர்ந்ததில்லை. அவர்களே எதிர்பாராத ஏதோ ஒரு அழுத்தமே அவர்களை வெளியேற்றியிருக்க வேண்டும்.
நம்மோடு பலகாலம் பழகியவர்கள் திடீரென பார்க்கமுடியாதவர்களாக மாறிவிடுவதை உணரும் கணத்துக்கு உள்ள எடை இரும்பைவிட அதிகம். ‘இன்று நான், நாளை நீ’ என யாரோ எங்கிருந்தோ சொல்வதுபோல இருந்தது.