Home

Friday 13 March 2020

ஜெகந்நாதன் - கலங்கரை விளக்கம் - கட்டுரை

ஒருமுறை ஓர் ஆங்கிலேய அதிகாரி காந்தியடிகளைக் கைது செய்து விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தார். நீதிபதி தன் வழக்கப்படி காந்தியடிகளிடம்நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். “நான் நூல் நூற்கிறேன். நெசவு செய்கிறேன். விவசாயமும் செய்கிறேன்என்று காந்தியடிகள் பதில் சொன்னார். அப்போது அவருக்கு வயது 64. சுதேசிப்பொருட்களைப் பயன்படுத்துவதைப்பற்றிஇந்திய சுயராஜ்ஜியம்எழுதிய காலத்திலிருந்தே வலியுறுத்தி வந்த காந்தியடிகள் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது ஒன்றே இந்திய விடுதலைக்கு வழிவகுக்கும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளின் விற்பனையால் இந்திய நெசவாளர்களின் வாழ்க்கை பாழடைந்துவிட்டதை அவர் கண்கூடாகக் கண்டுணர்ந்தார். இங்கிலாந்து துணிகளின் விற்பனைக்காக கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் டாக்காவில் மஸ்லின் நெசவு செய்துவந்த நெசவாளர்களின் கட்டைவிரலைத் துண்டித்து நெசவுத்தொழிலே அற்றுப்போகச் செய்த துயரவரலாற்றை அறிந்து அவர் துயரத்தில் உறைந்தார்.

ஆண்டுதோறும் முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளமுடன் இருந்த இந்திய நெசவுத்தொழில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கிய நாற்பது ஆண்டுகளுக்குள் படிப்படியாக மங்கி மறையத் தொடங்கியது. அடுத்த அரைநூற்றாண்டுக்குள் அறுபது கோடி மதிப்புள்ள துணிகள் இறக்குமதி தேவைப்படும் அளவுக்கு இந்திய நிலைமை மாறிவிட்டது. நெசவாளர்கள் பலர் பட்டினியில் இறந்தனர். சிலர் கிடைத்த தொழிலைச் செய்யக்கூடிய கூலித்தொழிலாளர்களாக மாறினர். துணிகள் வழியாகக் கிடைக்கும் வருமானமே ஆங்கிலேய அரசுக்குக் கிடைத்துவரும் வருமானத்தின் பெரும்பகுதி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது.
தம் தேவைகளை தாமே நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்களாக இந்தியர்களை மாற்றுவதையே தன் நோக்கமாகக் கொண்ட காந்தியடிகள் அயல்நாட்டுத் துணிகள் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.  நூற்பும் நெசவும் மீண்டும் தழைத்தெழ வேண்டும் என அவர் விரும்பினார். நாட்டுமக்கள் அனைவரும் நூல் நூற்பதை தினசரிக் கடமையாக வைத்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். கதராடை அணிவது என்பது அதன் இன்னொரு வடிவமே. நாடெங்கும் காந்தியின் சொல் செயல்வடிவம் கொண்டது. மோதிலால் நேரு தன்னிடமிருந்த அயல்நாட்டுத் துணிகளை எரித்துவிட்டு, கதராடையை அணிந்துகொண்டு அலகாபாத் நகரில் தெருத்தெருவாக நடந்து கதராடைகளை விற்றார். ஆயிரக்கணக்கானோர் அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றினர்.
இந்தியாவெங்கும் வீசிய தேசிய எழுச்சியலை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமநாதபுரத்திலும் வீசியது. அந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தன் தந்தையின் வழியாக காந்தியடிகளைப்பற்றி தெரிந்துவைத்திருந்த ஒரு மாணவன் வசித்துவந்தான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த மற்ற சிறுவர்களோடு சேர்ந்து அவன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில், அருகிலிருந்த சாலையில் ஒரு பெரிய ஊர்வலம் சென்றது. தேசியக் கொடியையும் காந்தியடிகள் படத்தையும் அவர்கள் ஏந்தியிருந்தார்கள். அதைப் பார்த்ததும் அவர்களுடைய ஆட்டம் நின்றது.  உடனே தம் புத்தகப்பைகளோடு அவர்களும் அந்த ஊர்வலத்தின் பின்னாலேயே சென்றுவிட்டனர். நடைபயணமாகவே அவர்கள் அடுத்த கிராமத்தை அடைந்தார்கள். நெசவுத்தொழிலுக்கான ஆதரவு முழக்கங்களையும் அயல்நாட்டுத் துணிகள் எதிர்ப்பு முழக்கங்களையும் அவர்கள் உற்சாகத்துடன் முழங்கினார்கள்.
அடுத்த கிராமத்தின் எல்லையிலேயே ஒரு பெரிய மைதானம் இருந்தது. ஊர்வலக்காரர்கள் தம்முடன் எடுத்து வந்திருந்த அயல்நாட்டுத் துணிகளை அங்கு குவித்து முழக்கமெழுப்பியடி எரியூட்டினார்கள். அதைக் கண்டு ஊக்கம் கொண்ட  மாணவன் உடனடியாக தான் அணிந்திருந்த வெளிநாட்டுச் சட்டையைக் கழற்றி எரியும் நெருப்பில் வீசினான். அப்போது அவனிடம் அவன் அப்பா கொடுத்திருந்த வெளிநாட்டுப் பேனாவும் இருந்தது. அதுவும் அயல்நாட்டுப் பொருள்தானே என நினைத்து, அதையும் நெருப்பில் வீசிவிட்டு  வெற்று உடலுடன் வீட்டுக்குத் திரும்பினான். அந்த மாணவனின் பெயர் ஜெகந்நாதன்
ஜெகந்நாதன் பள்ளிப்படிப்பை முடித்து ராமநாதபுரத்தில் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பைப் படித்தார். அவருடைய நண்பரொருவர் தம் கிராமத்தில் சிறுவர்களுக்காக பள்ளிக்கூடமொன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.  அதைப் பார்க்கும் ஆவலால் ஒரு விடுமுறையில் அக்கிராமத்துக்குச் சென்றார் ஜெகந்நாதன். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்துவந்த காந்தியடிகள் அப்போது அந்தக் கிராமம் வழியாகச் செல்லவிருக்கும் செய்தியை தற்செயலாக அவர் கேட்டார். அந்தக் கிராமத்தில் தங்குவதாகவோ பேசுவதாகவோ காந்தியடிகளுக்கு எந்தத் திட்டமும் இல்லை. தம் ஊர் வழியாகச் செல்லும் காந்தியடிகளை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்னும் ஆவல் இருவருக்கும் தோன்றியது.
அக்கம்பக்கத்தில் வாழும் நூறு நண்பர்களை ஜெகந்நாதன் உடனடியாகத் திரட்டி ஊர்வலமாக அழைத்துச் சென்று சாலைச்சந்திப்பில் நின்றுகொண்டார். எல்லோரிடமிருந்தும் நன்கொடையாக ஒரு தொகையைத் திரட்டி கையில் வைத்துக்கொண்டார். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த வாகனங்கள் ஒவ்வொன்றாக நெருங்கிவந்து அவர்களைக் கடந்து செல்லத் தொடங்கின. ஜெகந்நாதனும் மற்ற இளைஞர்களும் பதற்றத்தோடு சாலையையே பார்த்தபடி இருந்தனர். எல்லா வாகனங்களும் சென்றபடியே இருக்க காந்தியடிகள் அமர்ந்திருந்த வாகனம் அவர்களுக்கு அருகில் வந்து நின்றது. இளைஞர்கள் மகிழ்ச்சியோடு உற்சாகக் குரலெழுப்பினர். வாகனத்திலிருந்து இறங்கிவந்த காந்தியடிகள் அவர்களிடம் வந்து உரையாடினார். ஜெகந்நாதன் சேகரித்து வைத்திருந்த நன்கொடையை அவரிடம் கொடுத்தார். அப்போது ஜெகந்நாதன் ஒரு தங்கக் கடிகாரத்தை அணிந்திருந்தார். அவருடைய அப்பா பர்மாவிலிருந்து அனுப்பிய கடிகாரம். ஒருகணம் எதையும் யோசிக்காத ஜெகந்நாதன் சட்டென கைக்கடிகாரத்தைக் கழற்றி காந்தியடிகளிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட காந்தியடிகள் புன்னகையுடன் அவர் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றார்.
ஜெகந்நாதன் மற்றொருமுறையும் காந்தியடிகளைச் சந்தித்தார். அப்போது தீண்டாமைக்கு எதிராக பிரச்சாரம் செய்தபடி அவர் தமிழகத்துக்கு வந்திருந்தார். தீண்டாமைப்பழக்கத்தை உதறாமல் நாம் பெறும் சுதந்திரம் என்பது பொருளற்றதாகவே இருக்கும் என்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவர் குறிப்பிட்டார். தன் நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாக 23.01.1934 அன்று காந்தியடிகள் ராமநாதபுரத்துக்கு வந்து உரையாற்றினார். கூட்டம் முடிந்த பின்பு ஓய்வெடுப்பதற்காக காந்தியடிகள் தன் அறைக்குத் திரும்பினார். அவரைத் தொடர்ந்து சென்ற ஜெகந்நாதன் காந்தியடிகளைச் சந்திப்பதற்காக ஒரு கடிதம் எழுதி வாசலில் இருந்த உதவியாளர் வழியாகக் கொடுத்தனுப்பினார். அதில்நான் அறிந்தவரையில் ராமர், கிருஷ்ணர், புத்தர், ஏசு ஆகியோரில் ஏசுவின் அவதாரமே மிகச்சிறந்தது  என்று தோன்றுகிறது. ஏனென்றால் உலகமக்களின் நலனுக்காக சிலுவையில் அறையப்பட்டு அறையப்பட்டு அவர் அடைந்த துயரமே மிகப்பெரிது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று எழுதியிருந்தார்.
கடிதத்தை வாங்கிப் படித்த காந்தியடிகள் ஜெகந்நாதனை அழைத்து அருகில் உட்காரவைத்துக்கொண்டார். ஒவ்வொரு அவதாரமும் தோன்றிய காலகட்டத்தையும் சேவைகளையும் பெருமைகளையும் பொறுமையாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.
ராமர் தோன்றிய காலகட்டம் என்பது அரசு உருவாகிவந்த காலம். அரசர்களுக்கான நெறிகள் என்பதே எழாத காலம். அனைவரும் வாழ்நாள் முழுக்க பல திருமணங்களைத் தொடர்ந்து செய்துகொள்பவர்களாக இருந்த காலம். ராஜ்ஜியத்துக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் வாழ்ந்த காலம் அது. அப்படிப்பட்ட காலத்தில் ராஜ்ஜியத்தையே துச்சமாக உதறிவிட்டு ஒருவர் செல்வதும், ஒரு பெண்ணோடு மட்டும் ஒருவர் வாழவேண்டும் என்னும் நெறியோடு வாழ்வதும் மிகப்பெரிய விஷயங்கள். ராமர் உருவான காலத்தில் அந்த ஒழுக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அரசனாக வாழ்வதோடு ஆன்மிக ஞானியாகவும் செழுமைப்படுத்தப்பட்ட நெறிகளோடு வாழ்ந்தவர் கிருஷ்ணர். அரசகுடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைத்தையும் துறந்து மானுட துயரத்துக்கான காரணத்தையும் மீட்சியையும் தேடிச் சென்றவர் புத்தர். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஒழுக்கத்தையும் நீதியையும் வலியுறுத்துவதற்காகவே அவதார புருஷர்கள் இந்த மண்ணில் தோன்றினார்கள். அதைத்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்
காந்தியடிகளின் சொற்கள் ஜெகந்நாதனுக்கு ஏற்புடையதாக இருந்ததால் நிறைவோடு விடைபெற்றுக்கொண்டார். பத்திரிகைகளில் காந்தியடிகள் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளைத் தேடிப் படித்தார். உயர்வு தாழ்வின்றி மனிதர்களை நேசிக்கத் தூண்டும் காந்தியடிகளின் எழுத்துகள் அவரை ஈர்த்தன. ஒரு புத்தகத்தில்கல்லூரிப்படிப்பு என்பது ஆங்கிலேயருக்கு அடிமையாக வேலைசெய்யும் அறிவைத்தான் தருகிறது. நாம் நமது பாரம்பரியமான விஷயங்களைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். கல்லூரிப்படிப்பை விட்டுவிடுவதால் எவ்விதமான இழப்பும் ஏற்படுவதில்லைஎன்ற வரிகளைப் படித்து ஜெகந்நாதன் ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார். நான்குபேர் கூடி நின்று பேசினாலே கைது செய்து சிறையிலடைக்கும் காவல்துறையின் சட்டத்தை  எதிர்த்து மாணவர்களைத் திரட்டிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றார் ஜெகந்நாதன். அந்த வழியாக வந்த காவலர்கள் மாணவர்களைச் சுற்றி வளைத்து அடித்தனர். அடிபட்ட ஜெகந்நாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நலம் தேற சில நாட்கள் பிடித்தன. ஆனால் அதற்குப் பிறகு அவர் கல்லூரிக்குச் செல்லவே இல்லை.
கல்லூரியை விட்டு விலகிவிட்டேன். உங்கள் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்துகொள்ளலாமா?” என்று கேட்டு காந்தியடிகளுக்கு ஒரு மடல் எழுதினார் ஜெகந்நாதன். விரைவிலேயே காந்தியடிகளிடமிருந்து அவருக்கு ஒரு பதில் வந்தது. மிகவும் தொலைவில் இருக்கும் மொழிதெரியாத ஊருக்கு வரவேண்டாம் என்று அவர் எழுதியிருந்தார். தேவதாஸ் காந்தி திருச்செங்கோடு ஆசிரமத்துக்குச் செல்லவிருப்பதாகவும், அங்கு சென்று அவரோடு இணைந்து பணிபுரியுமாறு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் உடனே திருச்செங்கோடு ஆசிரமத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால் அக்கடிதத்துக்கு பதிலே வரவில்லை. ஏறத்தாழ ஓராண்டுக்காலம் அவர் விவசாய வேலைகளைச் செய்தபடி வீட்டிலேயே காத்திருந்தார்.
ஒருநாள் ஜெகந்நாதன் தன் பெற்றோர்களுக்குத் தெரிவிக்காமலேயே கிராமத்தைவிட்டு வெளியேறி திருமணமாகாதவர்கள் மட்டுமே தங்கியிருக்கும் ஃபாஸ்டரின் ஆசிரமத்துக்குச் சென்று சேர்ந்துவிட்டார். காந்தியப்பாதையில் ஆழமான பற்று கொண்டவர் ஃபாஸ்டர். கதராடை அணிந்து ஆதரவற்றவர்களுக்கு பள்ளியையும் மருத்துவமனையையும் நடத்திவந்தார். அந்தப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார் ஜெகந்நாதன். நாளடைவில் அங்கு நடைபெற்றுவந்த மதமாற்ற முயற்சிகளைப் பார்த்து மனம் கசந்து, அங்கிருந்து வெளியேறி பெங்களூரில் இயங்கிவந்த தீன சர்வ சேவா சங்கத்தில் சேர்ந்தார். அந்த ஆசிரமத்தின் சேரிப்புற மேம்பாட்டுப் பிரிவில்தான் கெய்தானும் அவர் துணைவியாரும் பணியாற்றிவந்தனர். பகலில் கடைகளிலும் விடுதிகளிலும் வேலைசெய்துவிட்டுத் திரும்பும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இரவுப்பள்ளியை ஏற்படுத்தி, அவர்களுக்குக் கற்பிக்கும் வேலையைச் செய்தார் ஜெகந்நாதன். ஏறத்தாழ மூன்றாண்டுகளை அந்த ஆசிரமத்தில் கழித்தார் ஜெகந்நாதன்.
ஜப்பானின் காந்தி என்று அழைக்கப்படும் காட்வா என்பவர் சேரிக்குழந்தைகளுக்கு புதிதாக ஒரு பள்ளியைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியாவுக்கு வந்து இரு மாத காலம் தங்கி ஆரம்பகட்ட வேலைகளைச் செய்தார். அவரிடமிருந்து அப்பொறுப்பைப் பெற்றுக்கொண்ட கெய்தானும் ஜெகந்நாதனும் அப்பள்ளியைச் சிறப்புற நடத்தினார்கள். மூன்றாண்டுக்காலம் அப்பள்ளிக்காக கடுமையாக உழைத்தார் ஜெகந்நாதன்.
ஒருநாள் இதேபோல ஒரு பள்ளியை தமிழகத்தில் தொடங்கி நடத்தவேண்டும் என்ற எண்ணம் ஜெகந்நாதனுக்கு ஏற்பட்டது. உடனே அவர் தமிழகத்துக்குத் திரும்பி மதுரைக்கு அருகில் தன் கனவுத்திட்டத்தைச் செயல்படுத்தினார். பல ஆண்டுகள் தொடர்ச்சியான உழைப்புக்குப் பிறகு அவர் தொடங்கிய பள்ளி வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. தான் இல்லாமலேயே பள்ளி இனி இயங்கும் என்ற நிலையை அடையும் நேரத்துக்குச் சரியாக காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். முதல் சத்தியாகிரகியாக வினோபா பாவே களத்தில் இறங்கி சட்டமறுப்பில் ஈடுபட்டு சிறைபுகுந்தார். காந்தியடிகளும் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து நாடெங்கும் ஒவ்வொரு நகரிலும் ஏராளமான சத்தியாகிரகத் தொண்டர்கள் தொடர்ச்சியாக கைதானார்கள். மதுரையில் செளந்திரம் அம்மாள், சொர்ணம்மாள், ஜானகி அம்மாள், அகிலாண்டத்தம்மாள் போன்றோரின் கைது தொடர்நிகழ்ச்சியானது. மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை மாலை ஆறுமணி முதல் காலை ஆறுமணி வரை யாரும் வெளியே வரக்கூடாது என ஊரடங்குச் சட்டத்தை விதித்தது. யாராவது வெளியே தென்பட்டால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுக்கு அஞ்சாமல் அச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருபது முப்பது மாணவர்களைத் திரட்டிக்கொண்டு எதிர்ப்பு ஊர்வலம் நிகழ்த்தினார் ஜெகந்நாதன். காவலர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் ஜெகந்நாதனுக்கு பதினைந்து மாத சிறைத்தண்டனை கிடைத்தது. அவர் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை பெற்றுத் திரும்பியதும் மீண்டும் சத்தியாகிரகப் போராட்டத்தில் இறங்கி கைதானார். இம்முறை ஆந்திரம், கேரளம், தஞ்சாவூர் என பல சிறைகளில் அவர் மாறிமாறி இருக்க நேரிட்டது.
இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்படவிருந்த நேரத்தில் ஜெகந்நாதன் சிறையில் இருந்தார். நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்னும் செய்தி அவருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், வறுமையில் உழன்று அடித்தளத்தில் வாழும் மக்களுக்கு இந்தச் சுதந்திரத்தால் விளையக்கூடிய பயன்கள் என்னவாக இருக்கும் என்கிற திசையில் அவர் எண்ணங்கள் விரிந்தன. விடைகாண முடியாத அந்தக் கேள்வியால் அவர் தினமும் மனம் சலித்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் வறுமையில் வாடுவதற்கு, அவர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் இல்லை என்பதுதான் காரணம். விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒரு நாட்டில் நிலம் இருப்பவர்கள் மட்டுமே மேலும் மேலும் முன்னேற முடியும். நிலமற்றவர்கள் மேலும் மேலும் பின்னடைவையே சந்திக்க நேரும். எனவே நிலமற்றவர்கள் வாழ்க்கைக்கு முதல் தேவை நிலமே என்னும் முடிவை அவர் வந்தடைந்தார்.
அந்தக் காலத்தில் கரும்பைப் பிழிந்து சாறெடுக்க ஒவ்வொரு கிராமத்திலும் பாரம்பரியமான சிறிய இயந்திரங்கள் மட்டுமே இருந்தன. உரல்போன்ற இயந்திரத்தில் வெட்டப்பட்ட கரும்புத்துண்டுகள் போடப்படும். அந்த உரலை இரு காளைகள் இழுத்தபடி சுற்றிவரும். உரலில் நசுக்குண்டு வழியும் சாறு பாத்திரங்களில் சேகரிக்கப்படும். பிறகு அது ஒரு பெரிய இரும்புப்பாத்திரத்தில் காய்ச்சப்பட்டு வெல்லமாக்கப்படும். காலம்காலமாக இதுவே எல்லா இடங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வந்த வழிமுறை. 1949 ஆம் ஆண்டில் சில செல்வந்தர்கள் ஒரு சர்க்கரைத்தொழிற்சாலையை நிறுவ முற்பட்டனர். அதற்காக அரசுக்கு விண்ணப்பித்து உரிமமும் பெற்றுவிட்டனர். விளையும் கரும்பு எல்லாவற்றையும் சர்க்கரை ஆலைக்கே கொண்டுசெல்லவேண்டும் என்று முதலாளிகள் வற்புறுத்தத் தொடங்கினார்கள். அதனால் பாரம்பரியமான முறையில் அதுவரை வெல்லம் தயாரித்த தொழிலாளிகள் தொழிலின்றி வறுமையுற்றனர். அதைக் கண்டதும் அரசின் திட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிக்கொண்டு காந்திய வழியில் போராட்டத்தில் இறங்கினார் ஜெகந்நாதன்.
பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கு மாறாக, காவல்துறை அதிகாரிகள் திடீரென தொழிலாளர்கள் வீட்டுக்குள் சென்று கல் எந்திரத்தை எடுத்துச் செல்லத் தொடங்கினார்கள். ஒருநாள் எங்கோ ஒரு கிராமத்துக்கு நடந்துசெல்லும் வழியில் காவல் அதிகாரிகள் கல் எந்திரத்தைப் பறிமுதல் செய்து வண்டியில் ஏற்றும்   காட்சியைப் பார்த்து திகைத்துவிட்டார் ஜெகந்நாதன். வேகமாக காவல்துறை அதிகாரியை அணுகி அந்தச் செயலைக் கண்டித்துப் பேசினார்.  எதையும் செவிகொடுத்துக் கேட்கும் எண்ணமின்றி கைப்பற்றிய கருவிகளையெல்லாம் காவல் துறையினர் ஒரு வாகனத்தில் ஏற்றிமுடித்தனர். கையறுநிலையில் அனைவரும் அக்காட்சியை தவிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சட்டென எழுந்த ஒரு வேகத்தில், புறப்படவிருந்த வாகனத்தின் முன்னால் சென்று தலைவைத்துப் படுத்துவிட்டார் ஜெகந்நாதன். அதைக் கண்டதுமே கூடியிருந்த தொழிலாளிகள் அனைவரும் வாகனத்தின் முன்னால் படுத்துவிட்டனர். ஏறத்தாழ அறுநூறு பேர்கள் அமைதியான முறையில் வாகனத்தின் முன்னால் படுத்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தனர். நாலைந்து மணி நேரம் கடந்த பிறகும் யாரும் எழுந்திருக்கவில்லை. செய்தியை அறிந்து அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த உயர் அதிகாரிகள் கலைந்து செல்லவில்லையென்றால் அடித்து உதைத்துவிடுவதாகவும் சுட்டுவிடுவதாகவும் அச்சுறுத்தினர். இரவு கவிந்தபிறகும் யாரும் எழவில்லை. மறுநாள் சென்னையிலிருந்து அமைச்சர் வந்து சேர்ந்தார். செளந்திரம் அம்மாவும் குமரப்பாவும் கிராமத்தினர் சார்பில் சென்று அவரோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.  முடிவில், இனி சர்க்கரை ஆலைகள் மட்டுமே இயங்கவேண்டும் என்னும் சட்டம் கம்பெனி ஆலைகளோடு பாரம்பரிய ஆலைகளும் இயங்கலாம் என திருத்தி வெளியிடப்பட்டது. கிராமியத்தொழிலை சமூகத்தில் தக்கவைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றுத் தந்த இப்போராட்டம் ஜெகந்நாதனின் வாழ்க்கையில் மகத்தானதொரு சாதனை.
காந்தியடிகளின் மற்றொரு வடிவமாக விளங்கிய வினோபா பாவேவின் பூதான இயக்கம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. அந்தத் தருணத்தில்தான் மற்றொரு காந்தியரான கிருஷ்ணம்மாளை அவர் திருமணம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு மணவாழ்க்கையின்பால்  ஏற்பட்ட ஈர்ப்பைவிட, பொதுவாழ்க்கையின்பால் ஏற்பட்ட ஈர்ப்பே மிகுதியாக இருந்தது. முடிவாக, சென்னையில் இருந்த ஆசிரியைப் பயிற்சிக்கல்லூரியில் அவரைச் சேர்த்துவிட்டு, வினோபாவை நோக்கிச் சென்றார்.
வினோபாவின் உரை கல்மனத்தையும் கரைக்கும் தன்மையுடையது. அன்பினாலும் ஆன்மிக வலிமையாலும் அவர் ஏராளமான நிலங்களை உயர்சாதிக்காரர்களிடமிருந்து பெற்று நிலமற்ற ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வழங்கினார். அடுத்த கட்டமாக, ஒரு கிராமத்தில் உள்ள நிலங்களனைத்தையும் தானமாகப் பெற்று, அதை கிராமசபையின் பொறுப்பில் ஒப்படைத்து, கூட்டுப்பண்ணை முறையில் அனைவரும் உழைத்து அனைவரும் உண்ணும் வழிமுறைக்கு வழிவகுத்துக்கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். இது கிராமதானம் என்று அழைக்கப்பட்டது. “நீர், காற்று, வானம் எதுவுமே யாருக்கும் சொந்தமில்லை. அப்படி இருக்க, நிலத்தை மட்டும் மனிதன் ஏன் சொந்தம் கொண்டாட வேண்டும்? உண்மையில் நிலம் என்பதும் யாருக்கும் சொந்தமில்லை. இந்த எண்ணம் மக்கள் மனத்தில் உதிக்கும் நாளில் தனிநபர் சொத்துரிமை என்னும் கருத்து மறைந்து மனித குலத்துக்கு விடிவு பிறக்கும்என்பது வினோபா அடிக்கடி சொன்ன வாக்கியம்.
ஏறத்தாழ ஓராண்டுக்காலம் வினோபாவுடன் பாதயாத்திரை சென்றார் ஜெகந்நாதன். அக்காலத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் அவருடைய உரைகளையும் விரிவான கட்டுரைகளாக பத்திரிகைகளுக்கு எழுதிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். ஒருநாள் வினோபா அவரை அழைத்து, “நீ தமிழ்நாட்டுக்குச் சென்று பூதான இயக்கத்தை நடத்துஎன்று சொன்னார். அதைக் கேட்டு ஜெகந்நாதன் அதிர்ச்சியடைந்தார். தயக்கத்தோடுதமிழ்நாட்டில் நான் தெரிந்த முகமில்லை. மேலும் என்னைவிட பெரிய தலைவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தால் என்னைவிட சிறப்பாகச் செயல்படுவார்கள்என்று தெரிவித்தார்.
ஆனால் ஜெகந்நாதனே அந்த வேலைக்குப் பொருத்தமானவர் என்பதில் வினோபா பிடிவாதமாக இருந்தார். வேறு வழியில்லாமல்அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். என் மனைவி எனக்குப் பதிலாக உங்களுடன் இருந்து நான் செய்த வேலைகளைக் கவனித்துக்கொள்வார். நான் புறப்படுகிறேன்என்று கேட்டுக்கொண்டார் ஜெகந்நாதன். அந்த ஏற்பாட்டுக்கு வினோபா ஒப்புக்கொண்டார். ஊரில் ஆசிரியை பயிற்சிப்படிப்பை முடித்துவிட்டு காத்திருந்த மனைவியை உடனே வரச்செய்து வினோபாவிடம் ஒப்படைத்தார் ஜெகந்நாதன். தமிழ்நாட்டுக்குப் புறப்படும் சமயத்தில் அவரிடம் வினோபாநான் தமிழகத்துக்கு வருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அதற்குள் நீ குறைந்தபட்சமாக நூறு கிராமங்களையாவது தானமாகப் பெற முயற்சி செய்யவேண்டும்என்று சொல்லியனுப்பினார்.
தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்திலிருந்து ஜெகந்நாதனின் பாதயாத்திரை தொடங்கியது. தேசிய அளவில் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருக்கவேண்டும் என்பதால் மராத்திய மண்ணைச் சேர்ந்த சங்கர் ராவ்தேவ் என்பவரை அழைத்துவந்து யாத்திரையில் பங்குபெறச் செய்தார். முதலில் அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜாவைச் சென்று சந்தித்து விவரங்களைச் சொன்னார்கள். ராஜா உற்சாகமாக ஆயிரம் ஏக்கர் நிலம் தருவதாக வாக்களித்தார். அது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. மதுரை, கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் அவர்களூடைய பாதயாத்திரை  தொடர்ந்தது. ஒரு மாத காலத்தில் அவர்களுக்கு 3500 ஏக்கர் நிலம் தானமாகக் கிடைத்தது. இதற்கிடையில் சங்கர் ராவ் தேவ் விலகிவிட, ஜெகந்நாதனே தலைமையேற்று ஏறத்தாழ ஓராண்டு வரை பாதயாத்திரையைத் தொடர்ந்தார்.
அடுத்த ஆண்டில் வினோபா தேசிய அளவிலான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஜெகந்நாதன் கலந்துகொண்டு தன் கிராமதான இயக்க அனுபவங்களை அனைவரோடும் பகிர்ந்துகொண்டார். திரும்பி வரும்போது  வினோபாவின் அனுமதியைப் பெற்று தன் மனைவியையும் தன்னுடன் அழைத்துவந்தார்.  திருமணமாகி மூன்றாண்டுகளுக்குப் பிறகு தம்பதியினர் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். அடுத்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தனர்.
பாதயாத்திரையில் ஜெகந்நாதனுக்கு சில கசப்பான அனுபவங்களும் நேர்ந்தன. செங்கல்பட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு பண்ணையார் வினோபா முன்னிலையில் நிலம் தருவதாக வாக்களித்துவிட்டு, அச்செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் இடம்பெற்றுவிட்ட நிலையில் நிலத்தைத் தர மறுத்துவிட்டார். பல நாட்கள் பல முறை சந்தித்துக் கேட்டபோதும் அவர் மனம் இளகவில்லை. ஒருமுறை கிராமத்தினர் அவரைச் சந்தித்து, :”நீங்கள் நிலம் அளிப்பதாகச் சொன்ன கோவில் வாசலுக்கு வந்து அந்தத் தெய்வத்தை சாட்சியாக வைத்து நீங்கள் சொல்ல நினைப்பதைச் சொல்லுங்கள்என்று அழைத்தனர். தெய்வத்தைச் சாட்சியாக இழுத்ததும் அவரால் சொன்ன சொல்லை மீறமுடியவில்லை. தவறை உணர்ந்து நிலத்தை அளித்துவிட்டார். வத்தலகுண்டு, வேலம்பட்டி என ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை எதிர்கொண்டார் ஜெகந்நாதன்.
ஒருசமயம் உத்தர்காண்ட் பகுதியைச் சேர்ந்த சுந்தர்லால் பகுகுணா தொலைபேசியில் ஜெகந்நாதனிடம் ஒரு செய்தியைச் சொன்னார். தன் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஒரு சாமியாருக்குச் சொந்தமாக இருப்பதாகவும் அதை எப்படியாவது பெற்று மக்களுக்குப் பிரித்துத்தரவேண்டும் என்றும் தெரிவித்தார். ஜெகந்நாதன் உடனே அங்கு புறப்பட்டுச் சென்றார். பல நாட்கள் நடந்தே அலைந்து திரிந்து உண்மையான கள நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். ஏழு மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கியிருந்து மக்களோடு தங்கி, தொடர்ச்சியாக உரையாடி, அவர்களைத் திரட்டி நில உரிமை மீட்புப் போராட்டத்தைத் திட்டமிட்டு நடத்தினார். இறுதியில், ஒட்டுமொத்த நிலத்தையும் சட்டவழியிலேயே மீட்டெடுத்து, அங்கு வசித்த பெண்களின் பெயர்களில் பதிவு செய்து கொடுத்துவிட்டுத் திரும்பினார்.
ஜெகந்நாதனின் வாழ்க்கை முழுக்க முழுக்க பல்வேறு போராட்டங்களால் நிறைந்தது. அவர் முன்னெடுத்த இறால் பண்ணை ஒழிப்புப் போராட்டம் இந்திய வரலாற்றில் மிகமுக்கியமானது. பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய முதலாளிகளும் அரசியல் செல்வாக்குள்ள புள்ளிகளும் சேர்ந்து பங்குபோட்டு அழிக்க நினைத்திருந்த இந்தியக் கடலோரங்களையும் நிலவளத்தையும் இந்தப் போராட்டமே காப்பாற்றியது. தொண்ணூறுகளில் தொடங்கிய இறால் பண்ணைத்தொழில் முதல் மூன்றாண்டுகளிலேயே கடலோரமாக உள்ள எண்பதாயிரம் ஏக்கர் விளைநிலத்தை நாசமாக்கியது. முதலாளிகள் காட்டிய பணத்தாசைக்கு மயங்கி இறால் பண்ணைகளை அமைக்க விவசாயிகள் தம் விளைநிலங்களைக் கொடுத்தார்கள். தொடர்ச்சியாக பாத்திகளில் தேக்கப்பட்ட கடல்நீராலும் கொட்டி நிரப்பப்பட்ட வேதியியல் பொருட்களாலும் மிகவிரைவில் மண் தன் வளத்தை இழந்து மலடானது.  குத்தகைக்காலம் முடிந்து ஒப்படைக்கப்படும் நிலம் கிட்டத்தட்ட தரிசுநிலத்துக்குச் சமமாகவே இருந்தது.
முற்றிலும் வளமிழப்பதற்கு முன்பாக நிலத்தை மீட்கும் எண்ணத்தோடும் இனி ஒருபோதும் இறால் பண்ணைத் தொழிலே இந்தியாவில் இருக்கக்கூடாது என்ற முடிவோடும் ஜெகந்நாதன் ஒரு சட்டப்போரை முன்னெடுத்தார். உள்ளூர் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அவர் ஏறி இறங்காத மன்றங்களே இல்லை. எல்லா இடங்களிலும் அவருக்குச் சாதகமான தீர்ப்பே கிடைத்தபோதும் அரசு நிர்வாகம் அதை நிறைவேற்றுவதில் காட்டிய தாமதமும்  மெத்தனமும் கொஞ்சநஞ்சமல்ல. ஒவ்வொரு சிறிய விஷயத்துக்கும் அவர் நீதிமன்றத்தின் படிகளில் ஏறி இறங்கினார். சட்டத்தின் துணையோடும் அரசியல் செல்வாக்கின் துணையோடும் கிடைக்கும் சின்னச்சின்ன இடைவெளிகள் வழியாக நுழைந்து மண்ணை அழிக்க நினைத்த முதலாளிமார்களின் ஒவ்வொரு திட்டத்தையும் பொறுமையாக அதே சட்டத்தின்  துணையோடு முறியடித்தார் ஜெகந்நாதன். முதுமையையும் பொருட்படுத்தாமல் அவர் முன்னெடுத்த போராட்டமே நம் கடற்கரையையும் நிலவளத்தையும் காப்பாற்றியது.
பிறருக்காக தொண்டு செய்வது என்பது ஒரு வாழ்க்கைமுறை. தொண்டு செய்வதற்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்வது என்பது இன்னொரு வாழ்க்கைமுறை. இவ்விரு விதமான முறைகளையும் பின்பற்றி வாழ்பவர்களின் வாழ்க்கை ஒருவிதத்தில் கலங்கரை விளக்கத்தைப்போல வழிகாட்டுகிறது. ஜெகந்நாதனின் தியாக வாழ்க்கை நாம் கண்ணால் கண்ட கலங்கரைவிளக்கம்.

(சர்வோதயம் மலர்கிறது - மார்ச் 2020 இதழில் வெளிவந்த கட்டுரை)