Home

Friday 13 March 2020

கிருஷ்ணம்மாள் - எல்லாம் செயல்கூடும் - கட்டுரை




இந்தி பிரச்சார சபையின் வெள்ளிவிழா சென்னையில் 25.01.1946 அன்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றுவதற்காக காந்தியடிகள் வந்திருந்தார். அன்றைய கூட்டத்தில் இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் தாய்மொழிக்கல்வியிலும் இணைப்புமொழிக்கல்வியிலும் தேர்ச்சி பெறுவது மிகமுக்கியம் என்பதை காந்தியடிகள் வலியுறுத்திப் பேசினார். நான்கு நாட்கள் கழித்து அதே இடத்தில் நயி தலீம் பட்டமளிப்புவிழா நடைபெற்றது. ஆதாரக்கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சியை முடித்த இருபத்தாறு பேர்களுக்கு காந்தியடிகளே சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். அவருடைய உடல்நிலை அப்போது மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல்  தொடர்ந்து மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றிய காந்தியடிகள் 02.02.1946 அன்று மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

மதுரையில் அவரைப் பார்க்க கூட்டம் அலைமோதியது. பார்வையாளர்கள் பகுதியில் எழுந்த இடைவிடாத ஆரவாரத்தால் காந்தியடிகளால் உரையாற்றவே முடியவில்லை. முன்வரிசையில் இருப்பவர்கள் அமைதியுடன் அமர்ந்திருக்க, பின்வரிசையில் இருந்தவர்கள் முழக்கமிட்டபடியே இருந்தார்கள். காந்தியடிகளே எழுந்து நின்றுஅமைதி அமைதிஎன அறிவிக்கவேண்டியிருந்தது. “உங்களிடம் பல செய்திகளைத் தெரிவிக்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த ஆரவாரத்துக்கு நடுவில் என்னால் எதையும் சொல்லமுடியாமல் போய்விடுமோ என அஞ்சுகிறேன்என நேரிடையாகவே சொன்னார். அப்போதும் ஓசை அடங்கவில்லை. தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் அனைவரோடும் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்குள் சென்று வழிபடும் வகையில் அனுமதித்திருக்கும் மதுரை நகர மக்களை நினைத்துப் பெருமைப்படுவதாக அறிவித்தார். உடல்நிலை காரணமாக அவரால் தொடர்ந்து நிற்கவும் முடியவில்லை. ஓசையின் காரணமாக பேசவும் முடியவில்லை. “வழிபாடு என்பது தினசரிக்கடமைகளில் ஒன்றல்ல. அது வாழ்வின் ஒரு பகுதிஎன்று சொல்லி உரையை முடித்துக்கொண்டார்.
அன்று இரவு காந்தியடிகள் மதுரையிலேயே தங்கினார். செளந்திரம் அம்மாள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அப்போது காந்தியடிகளை அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்ள ஒருவர் தேவைப்பட்டார். உடனே செளந்திரம் அம்மாள் தன்னுடன் வந்த ஓர் இளம்பெண்ணை முன்னிறுத்திஇவர் உதவி செய்வார்என்று சொன்னார். அமெரிக்கன் கல்லூரியில் அந்த இளம்பெண் அப்போது செளந்திரம் அம்மாள் நடத்திவந்த பெண்கள் விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார். அக்கணமே அந்த இளம்பெண் அக்குழுவினருடன் இணைந்துகொண்டார். மறுநாள் அங்கிருந்து அக்குழு மீனாட்சியம்மன் தரிசனத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக மாலை ஆறுமணியளவில் பழனியை அடைந்தது. மலைக்கோவிலுக்குச் செல்லும் வழியில் காந்தியடிகள் அந்த இளம்பெண்ணுடன் உரையாடியபடி வந்தார். ”உனக்குப் பாடத் தெரியுமா?” என்று கேள்வியாலேயே அவரைத் தூண்டினார். அவருக்காக அந்த இளம்பெண் பாரதியார் பாடல்களைப் பாடினார். அதைக் கேட்ட மகிழ்ச்சியடைந்த காந்தியடிகள் அவரை புன்னகையோடு வாழ்த்தினார். அன்று காந்தியடிகளின் வாழ்த்து பெற்ற அந்த இளம்பெண் கிருஷ்ணம்மாள்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் தற்செயலாக மதுரையில் திருவருட்பா பற்றி கிருபானந்த வாரியார் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டு வள்ளலாரின் பாடல்களிலும் கருத்துகளிலும் ஆர்வம் கொண்டவர் கிருஷ்ணம்மாள். சொந்தமாக புத்தகம் வாங்கும் அளவுக்கு பணமில்லாத நிலையில் புத்தகக்கடைக்காரரிடம் திருவருட்பாவைக் கடனாகப் பெற்றுச் சென்று, அதன் பாடல்களைப் படித்து மனப்பாடம் செய்யும் அளவுக்கு ஊக்கம் கொண்டவராக இருந்தார். அதைத் தொடர்ந்து காந்தியடிகளைப் பாராமலேயே, காந்தியடிகளின் தொண்டு மனப்பான்மையால் கவரப்பட்டார்.  செளந்திரம் அம்மாளுடன் உருவான நெருக்கம் அவரை காந்தியப்பாதையில் செலுத்தியது. ஆரம்பப் பள்ளிப்படிப்பை கிராமத்தில் முடித்துவிட்டு மதுரையில் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர் அவர். கிருஷ்ணம்மாளின் படிப்பார்வத்தைக் கண்ட அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை ஆலிஸ் மகாராஜா செளந்திரம் அம்மாவைத் தொடர்புகொண்டு கிருஷ்ணம்மாளின் பட்டப்படிப்புக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். உடனே அவரை அருகிலேயே இருந்த அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டு, தான் நடத்தி வரும் பெண்கள் மையத்திலேயே  தங்கவைத்துக்கொண்டார் செளந்திரம் அம்மாள். கிருஷ்ணம்மாளின் கல்வியார்வத்தையும் செயல்வேகத்தையும் கண்ட செளந்திரம் அம்மாள் அவரை தன் மகளாகவே நினைத்தார். விடுமுறை நாட்களில் கிருஷ்ணம்மாளையும் மக்கள் சேவையில் ஈடுபடுத்தினார்.
ஆதரவற்ற, விதவைகளான, படிப்பைத் தொடரமுடியாத பெண்களைத் திரட்டி, அவர்களுக்கு கல்வி புகட்டி அவர்களால் செய்யமுடிந்த ஏதோ ஒரு தொழிலில் தேர்ச்சிபெறும் வகையில் ஒரு மறுவாழ்வு மையத்தை அப்போது செளந்திரம் நடத்தி வந்தார். ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் கிருஷ்ணம்மாளையும் அழைத்துக்கொண்டு தன் வாகனத்தில் மதுரை நகரத் தெருக்களில் செல்வது அவர் பழக்கம். அப்போது சாலையோரங்களில் ஆதரவில்லாமல் படுத்துக் கிடக்கும் பெண்களையும் வயிற்றுப்பாட்டுக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களையும் கண்டறிந்து தம்முடன் அழைத்துவந்து பெண்கள் மையத்தில் சேர்த்துக்கொள்வார். அவ்விதமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் அந்த மையத்தில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுக்கு எழுத்தறிவு புகட்டும் வேலையை கிருஷ்ணம்மாள் ஏற்றுக்கொண்டார். அவர்கள் அனைவரும் குறைந்தபட்ச கல்வித்தகுதியும் செவிலியர் பயிற்சியும் பெற்று பல்வேறு இடங்களுக்கு பணியாற்றச் சென்றனர். ஒருபுறம் கல்வி மறுபுறம் சேவையென கிருஷ்ணம்மாளின் கல்லூரிக்காலம் முழுதும் கழிந்தது.  தாழ்த்தப்பட்டோர் பிரிவிலிருந்து தமிழகத்திலேயே பட்டம் பெற்ற முதல் பெண்மணி கிருஷ்ணம்மாள்.
சர்க்கரை ஆலைப் போராட்டம் நிகழ்ந்துவந்த சமயத்தில்தான் கிருஷ்ணம்மாளை முதன்முதலாகச் சந்தித்தார் ஜெகந்நாதன். அவரை மணந்துகொள்ள விரும்பி தன் விருப்பத்தை அவரிடம் தெரியப்படுத்தினார். முதலில் தயங்கினாலும் சேவை மனப்பான்மை உள்ள ஒருவரை மண்ந்துகொள்வதே தன் வாழ்க்கை நோக்கத்துக்கு உறுதுணையாக இருக்குமென நம்பினார் கிருஷ்ணம்மாள். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் ஜெகந்நாதனின் வீட்டார் அத்திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. பட்டம் பெற்ற ஒரு பெண்ணை வருமானத்துக்கு வழியில்லாதவருக்கு எப்படி திருமணம் செய்துவைப்பது என எழுந்த தயக்கத்தின் காரணமாக கிருஷ்ணம்மாளின் வீட்டாரும் ஒப்புதல் வழங்கவில்லை. இறுதியில் செளந்திரம் அம்மாளும் கெய்தானும் குமரப்பாவும் முன்னின்று அத்திருமணத்தை நடத்திவைத்தனர். மணமக்கள் இருவருக்கும் கெய்தான் தன் கையால் நெய்த கதர்த்துண்டை அணிவித்தார். மஞ்சள் கிழங்கு கூட கட்டப்படாத தாலியொன்றை ஜெகந்நாதன் கிருஷ்ணம்மாளின் கழுத்தில் கட்டினார். அத்துடன் மிக எளிய முறையில்  திருமணம் முடிந்துவிட்டது.
திருமணமான மூன்றாவது நாளே ஜெகந்நாதன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று வினோபாவின் பாத யாத்திரையில் இணைந்துகொண்டார். கிருஷ்ணம்மாள் சென்னைக்கு வந்து ஆசிரியை பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். படிப்பு முடியும் வரைக்கும் இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. ஓராண்டுக்குப் பிறகு உடனே புறப்பட்டு வருமாறு பீகாரிலிருந்து ஒரு தந்தியை அனுப்பியிருந்தார் ஜெகந்நாதன். அதைப் படித்துவிட்டு கிருஷ்ணம்மாள் வினோபாவின் முகாம் செயல்படும் இடத்துக்கு ஆவலுடன் தேடிச் சென்றார். தமிழ்நாட்டுக்குச் சென்று பூதான இயக்கத்தை நடத்தும்படி வினோபா கேட்டுக்கொண்டதற்கு இணங்க  ஜெகந்நாதன் புறப்பட இருந்ததால், தன்னுடைய இடத்திலிருந்து வினோபாவுக்கு உதவிகள் செய்ய தன் மனைவியை அழைத்திருக்கிறார் என்பதை கிருஷ்ணம்மாள் அங்கு போன பிறகே தெரிந்துகொண்டார். ஏமாற்றத்தை வெளிப்படுத்தாமல் வினோபாவுக்குத் துணையாக பாதயாத்திரையில் சேர்ந்து நடந்தார் கிருஷ்ணம்மாள்.
உத்தரப்பிரதேசம், பீகார் வழியாக ஒவ்வொரு கிராமமாகக் கடந்து வினோபாவின் பாத யாத்திரை தொடர்ந்தது. அப்போதெல்லாம் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து அனைவரும் பிரார்த்தனைப் பாடல்களை முணுமுணுத்தபடி நடக்கத் தொடங்கிவிடுவார்கள். வினோபாவுக்கு அருகில் அரிக்கேன் விளக்கைத் தாங்கியபடி கிருஷ்ணம்மாள் நடப்பார். கிராமங்கள் எதிர்ப்படும்போது, அவர்களைத் திரட்டி உரை நிகழ்த்துவார் வினோபா. அவருக்கு பதினான்கு மொழிகள் தெரியும். ஒவ்வொருவரோடும் அவரவர் மொழியிலேயே பேசுவார் அவர். அவருக்கு பாரதியார் பாடல்களும் வள்ளலார் பாடல்களும் நன்கு தெரியும். அவற்றைக் குறித்து கிருஷ்ணம்மாளிடம் அடிக்கடி விளக்கங்கள் கேட்பார். அவருடைய கருணை நிரம்பிய பார்வைக்கும் பேச்சுக்கும் கட்டுப்பட்டு பெரும்பாலான நிலங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பண்ணையார்கள் தானமாக அளித்துவிடுவார்கள். கிராமத்தின் பொதுச்சொத்தாக நிலம் இருக்கவேண்டும். அரசியல் நிறுவனமானது மையமழிந்த ஒன்றாகச் செயல்படவேண்டும். இதுவே கிராம ராஜ்ஜியம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்வார் வினோபா.
அவருடைய உரைகள் ஒவ்வொரு மனிதனின் நெஞ்சிலும் சுடர்விடும் கருணையுணர்வைத் தூண்டியது. கிராமங்களில் பணக்காரர்கள் மட்டுமன்றி ஏழைகளும் தானம் கொடுத்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவருடைய இயக்கத்தில் தன்னார்வத்துடன் இணைந்து செயல்பட்டனர். அரசியல் சுதந்திரத்துக்கு காந்தியடிகள் மைய விசையாக விளங்கியதுபோல பொருளாதாரச் சுதந்திரத்துக்கு மைய விசையாக விளங்கினார் வினோபா. ஜெகந்நாதன் வழியில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றியும் பெறப்படும் தானங்கள் பற்றியும் விரிவான கட்டுரைகளை எழுதி அனுப்பும் பொறுப்பை ஆர்வத்துடன் நிறைவேற்றினார் கிருஷ்ணம்மாள். ஓராண்டுக் காலம் ஓடியதே தெரியவில்லை. அடுத்த ஆண்டில் வினோபாவைச் சந்திக்க தமிழ்நாட்டிலிருந்து வந்த ஜெகந்நாதன், திரும்பும்போது வினோபாவின் ஒப்புதலோடு கிருஷ்ணம்மாளையும் அழைத்துக்கொண்டு திரும்பினார்.
நான்காண்டுகளுக்கும் மேலாக கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் சேர்ந்து தமிழகக் கிராமங்களில் நடத்திய பாதயாத்திரையின் விளைவாக ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பெறப்பட்டது. அவையனைத்தும் அவ்வப்போதே மக்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டது.  1956 ஆம் ஆண்டில் வினோபா தமிழகத்துக்கு வந்தார். பொதுவுடைமைக் கட்சியினரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அவரை வரவேற்று பூதான இயக்கத்துக்கு ஆதரவளித்தனர். “தானமாகக் கிடைத்த நிலங்களனைத்தும் யாருக்கும் பயனில்லாத தரிசு நிலங்கள். அதை வைத்துக்கொண்டு ஏழைகளால் ஒன்றும் செய்யமுடியாது. பூதான இயக்கம் என்பது வெறும் கண்துடைப்புஎன்றொரு விமர்சனத்தை பொதுவுடைமைக்கட்சியினர் முன்வைத்தனர். ஆனால் அது உண்மையல்ல. பாதிக்கும் மேற்பட்டவை நல்ல நிலங்களே. நீர்ப்பாசன வசதியைச் செய்துகொண்டால் நெல்லும் சோளமும் பயிரடத் தக்க நிலங்களே. தரிசு நிலமோ, விளைநிலமோ இந்த முறை இப்படிப்பட்ட நிலத்தை வழங்கும் அளவுக்கு அவர்கள் மனத்தில் கருணை சுரந்திருக்கிறது. அடுத்த முறை நீர்ப்பாசன வசதியுள்ள நிலங்களைக்கூட அவர்கள் தருவார்கள் என நம்பிக்கையோடு சொன்னார் வினோபா. அந்த அளவுக்கு மக்களுடைய கருணையுணர்வு மீது அவர் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தார். தமிழகத்தில் வினோபாவுடன் பாதயாத்திரை தொடங்கிய முதல் நாளிலேயே நாற்பது கிராமங்கள் கிராமதானத்தை அறிவித்தன. அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த ஓராண்டுக் காலத்தில் ஏறத்தாழ ஐந்தாயிரம் கிராமங்கள் கிராமதானமாகக் கிடைத்தன.
ஒருமுறை வயலூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி என்னும் பண்ணையார் தனக்குச் சொந்தமான 94 ஏக்கர் நிலத்தை கிராமத்துக்குத் தானமாக அளிக்க முன்வந்தார். அவர் வழியாக மற்ற சிறு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியன் விளைவாக, அவர்களும் நிலங்களை தானமாக அளிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் அக்கிராமத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சுப்பன் என்னும் விவசாயி தன் நிலத்தை அளிக்க மறுத்துவிட்டார். இறுதியாக ராமகிருஷ்ண ரெட்டி யாரும் எதிர்பாராத வகையில் அவர் காலில் விழுந்து தானம் கேட்ட போது அவர் கொடுத்துவிட்டார். கற்பனையில் கூட நடக்காத ஒரு சம்பவம் அன்று கருணையினால் நடந்தது. கிராமதானம் முழு அளவில் வெற்றி பெற்றது என அனைவரும் நினைத்திருக்கும் வேளையில் மறுநாள் வேறொரு பிரச்சினை முளைத்தது. ராமகிருஷ்ண ரெட்டி தானமாகக் கொடுப்பதாகச் சொன்ன நிலம் முழுதும் அவருடைய மனைவியின் பெயரில் இருந்தது. அவர் பஞ்சாயத்துக்கு வந்து கையெழுத்து போட முடியாது என அறிவித்துவிட்டார். பாத யாத்திரைக் குழு சங்கடத்தில்  அகப்பட்டுக்கொண்டது. அதைச் சற்றும் எதிர்பாராத ரெட்டி தன் மனைவிக்கு எதிராக தன் வீட்டிலேயே உண்ணாவிரதத்தைத்  தொடங்கினார். முதலில் அவர் மனைவி அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஒரு மிடறுகூட தண்ணீர் அருந்தாமல் மூன்று நாட்கள் கடந்துபோன நிலையில் மனம் இளகினார். கண்ணீரும் கம்பலையுமாக ஓடி வந்து பாதயாத்திரைக் குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு கையெழுத்து போட்டு நிலங்களைத் தானமாக அளிக்க முன்வந்தார். அனைவரும் நிலப்பத்திரத்தை கோவில் முன்னிலையில் தெய்வத்தின் சாட்சியாக கிராமத்திடம் ஒப்படைத்து தெய்வத்தை வணங்கிச் சென்றனர். வயலூர் கிராமத்தில் கிராமதானம் முழுமை பெற்றது.
நிலங்கள் அனைத்தும் கிராமத்தின் பெயரிலேயே இருக்க, கூட்டுப்பண்ணை முறையில் அனைவரும் சேர்ந்து உழைத்து, விளைச்சலை அனைவரும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் நடைமுறையில்  சில சிக்கல்கள் எழுந்தன. உழுவது, விதைப்பது போன்ற உடலுழைப்பு சார்ந்த பணிகள் எப்படியோ நடைபெற்றன. ஆனால் விதைகளையும் உரங்களையும் உழுகருவிகளையும் வாங்குவதற்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் பிறருடைய நிலத்தில் கூலிக்கு வேலை செய்யும் காலத்தில் ஒவ்வொரு நாள் மாலையிலும் கையில் பணம் கிடைத்துவிடும். கூட்டுப்பண்ணை முறையில் உணவு கிடைத்ததே தவிர பணம் கிடைக்கவில்லை. பண நடமாட்டம் தடைபட்டபோது வேலைகள் சுணங்கத் தொடங்கின. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சோதனை முயற்சிகள் தோல்வியில் முடிவதை துயரத்துடன் பார்த்தார் கிருஷ்ணம்மாள். ஒவ்வொருவரும் தன்னலம் சார்ந்த ஆசைகளை விலக்கி பொதுநலம் சார்ந்து சிந்திக்கத் தொடங்கும்போதுதான் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும் என்று அவருக்குத் தோன்றியது. கிராமத்தின் சொத்தாக நிலங்கள் இருந்த காலத்தில் யாரும் ஒருவேளை கூட பட்டினியாக இருந்ததில்லை. ஆனால் அந்த வாழ்க்கையை ஏதோ அடிமை வாழ்க்கை என்பதுபோல நினைத்து கிராமத்தினர் மனம் சலித்து சோர்வுற்றனர்.
இதற்கிடையில் கிருஷ்ணம்மாள் ஓர் ஆண் குழந்தைக்குத் தாயானார். அப்போதும் பொதுச்சேவையே அவர் மனத்தில் முதலிடம் வகித்தது. கைக்குழந்தையைச் சுமந்தபடியே பாதயாத்திரையில் நடந்து சென்றார் அவர். எந்தக் கிராமத்திலாவது நிலம் தரவில்லையென்றால், கைக்குழந்தையை மடியில் கிடத்தியபடி ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்து உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிடுவார் அவர். ஒருமுறை ஒரு கிராமத்தில் பாதயாத்திரைக்கு இடையில் ஓய்வெடுப்பதற்காக அவர் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அன்று மாலை அவருடைய வயலில் வேலைசெய்த பெண்கள் வீட்டுக்கு வந்து கூலிக்காக நின்றார்கள். விளக்குவைத்துவிட்ட நேரம் என்பதால் அந்தப் பண்ணையார் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அன்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் அந்தச் சம்பவத்தை விவரித்து கண்டித்துப் பேசினார் கிருஷ்ணம்மாள். தன் வீட்டில் தங்கிக்கொண்டு தனக்கெதிராகப் பேசியதை விரும்பாத அந்தப் பண்ணையார் கிருஷ்ணம்மாளை வசைபாடினார். ஆனால் பொறுமைகாத்த கிருஷ்ணம்மாள் தன் கண்முன்னே நடக்கும் அநீதியை தன்னால் கண்டிக்காமல்  இருக்கமுடியாது என்று பதில் சொன்னார். சீற்றம் கொண்ட அந்தப் பண்ணையார் தன் வீட்டிலிருந்து அவருடைய பெட்டி படுக்கைகளையெல்லாம் எடுத்து வீதியில் வீசி கதவைச் சாத்திக்கொண்டார். அந்தப் பண்ணையாரை எதிர்த்து அவருக்கு அடைக்கலம் தர யாருமே முன்வரவில்லை. தெருக்குழாயில் தண்ணீரைக் குடித்துவிட்டு, கைக்குழந்தையோடு தெருவோரத்திலேயே படுத்துறங்கினார் கிருஷ்ணம்மாள்.
கிருஷ்ணம்மாளின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் கோனியப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. அந்தக் கிராமத்தில் சிறு நிலங்களை வைத்திருந்தவர்கள் விவசாயத்துக்காக மேல்சாதியினரிடம் கடன் வாங்கியிருந்தனர். வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்க இயலாத நேரத்தில் மேல்சாதியினரே நிலத்தை எடுத்துக்கொள்வார்கள். இப்படியாக தாழ்ந்த சாதியினர் நாலாயிரம் ரூபாய் கடனுக்காக நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இழந்தார்கள். இதைத் தடுப்பது எப்படி என ஆழ்ந்து யோசித்த கிருஷ்ணம்மாள் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பணத்தை வாங்கிச் சென்று தாழ்த்தப்பட்டவர்கள் பட்ட கடனை அடைத்துவிட்டு நிலத்தை மீட்டுக் கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டார். ஆனால் அந்த மேல்சாதிக்காரர் பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்தார். “இவர்களுக்காக பணம் கொடுக்க நீ யார்? தாயும் பிள்ளையும் போல வாழ்கிற எங்களிடையே பிரிவினையை உருவாக்க நினைக்கிறாயா?” என்று அலட்சியமாகப் பேசி அவரை அனுப்பிவிட்டார்.
எடுத்த செயலில் இறுதிவரை போராடுவது என்ற முடிவோடு, அந்தக் கிராமத்துக்கு தினமும் சென்று பணப்பையோடு ஒரு மண்டபத்தில் உட்கார்ந்து தன் கோரிக்கையை ஊருக்கே தெரியப்படுத்தினார் கிருஷ்ணம்மாள். மேல்சாதியினர் முதலில் அவரைப் பார்த்து கேலி செய்தார்கள். பிறகு கோபமாகப் பேசி மிரட்டினார்கள். சிலர் முகத்திலேயே காறி உமிழ்ந்தனர். ஆனால் எதற்கும் அசைந்துகொடுக்காமல் அங்கேயே உட்கார்ந்திருந்தார் கிருஷ்ணம்மாள். எந்தத் தாழ்த்தப்பட்டவர்களின் கடனை அடைக்க அங்கே அவர் உட்கார்ந்திருந்தாரோ, அவர்களில் ஒருவரும் முன்வந்து அவரிடம் பணத்தைப் பெற்றுச் சென்று நிலத்தை மீட்டுக்கொள்ள முன்வரவில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஒரே ஒரு இளைஞன் மட்டும் கிருஷ்ணம்மாளிடமிருந்து பணத்தைப் பெற்றுச் சென்று மேல்சாதிக்காரரிடம் தான் இழந்த நிலத்தைக் கேட்டான். ஆனால் அவர் மறுத்துவிட்டார். வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளில் முடிந்தது.  கீழே தள்ளப்பட்டவனின் தலை ஒரு பாறையில் மோதிவிட, அந்த இடத்திலேயே அவன் இறந்துவிட்டான். அனைத்துக்கும் காரணம் கிருஷ்ணம்மாளே என நினைத்து, அனைவரும் அவரை வசைபாடினர். ஆனால் அந்த மரணம் நிகழ்ந்த சில நாட்களிலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் உண்மையை மெல்ல மெல்லப் புரிந்துகொள்ளத் தொடங்கினர். கிருஷ்ணம்மாளின் நல்லெண்ணமும் மேல்சாதிக்காரர்களின்  சூழ்ச்சித் திட்டங்களும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தன. வேறு வழியில்லை என்ற கட்டத்தில் மேல்சாதிக்காரரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு நிலத்தைத் திருப்பியளித்தார். கிருஷ்ணம்மாளின் சத்தியாகிரகம் வெற்றியில் முடிந்தது.
நிலங்கள் மீட்கப்பட்டது ஒருவகையில் வெற்றி என்றபோதும், சொந்தமாக அந்நிலத்தில் விவசாயம் செய்ய அவர்களிடம் பணமில்லை. உழுவதற்கு காளைகள் வாங்கவும் விதைகள் வாங்கவும் உரங்கள் வாங்கவும் அவர்களுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அதற்கு அரசின் உதவியை நாடலாம் என்ற எண்ணத்தில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தார் கிருஷ்ணம்மாள். கிராமத்தினர் அனைவருக்கும் பணம் வேண்டும் என்று கேட்டதும் அவர் முதலில் மறுத்துவிட்டார். வழக்கம்போல மனம் சலியாத கிருஷ்ணம்மாள் தன் கோரிக்கையோடு தினமும் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று உட்கார்ந்து அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டார்.  இறுதியாக ஆட்சியர் கடனளிக்க இசைந்தார். தனக்குச் சொந்தமான நிலத்தில் சொந்தமாக விவசாயம் செய்து, முழு விளைச்சலும் தன் குடும்பத்துக்கே கிடைப்பதை முதன்முறையாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆனந்த அனுபவமாக உணர்ந்தனர்.
வினோபாவின் வழிமுறையிலிருந்து சற்றே விலகிய வழி என்றபோதும் இதுவே உகந்த வழி என நினைத்தார் கிருஷ்ணம்மாள். வன்முறையான வழியிலும் செல்லாமல், அவர்களாகவே தருவார்கள் என காத்திருக்கவும் செய்யாமல் பணத்தைக் கொடுத்து நிலத்தைப் பெற்று, தேவைப்பட்டவர்களுக்கு அளிப்பதே சிறந்த திட்டம் என்று தோன்றியது. வழக்கமாக விளைச்சலில் பாதிப் பங்கு உற்பத்திச் செலவுக்குப் போய்விடும்.  எஞ்சியதில் ஒரு பகுதி கூலிச் செலவுக்கும் மூன்று பங்கு நிலத்துக்கான குத்தகையாகவும் போக, ஒரே ஒரு பங்கு மட்டுமே விவசாயிக்கு மிஞ்சும். ஆனால் உழுபவர்களுக்கே நிலம் சொந்தமாக இருக்கும்போது நான்கு பங்கு விளைச்சல் அவர்களுக்கே கிடைக்கும்.
1958 முதல் 1962 வரை செளந்திரம் அம்மாளின் வேண்டுகோளுக்கு இணங்க கிராம சேவை மையங்களின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார் கிருஷ்ணம்மாள். முதலில் பெண்களுக்கு சுயமாக வருமானம் ஈட்டிக்கொள்வதற்கான வழிகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துவது அவருடைய கடமையாக இருந்தது. அடுத்து கல்வியறிவில்லாதவர்களுக்கு மாலைப்பள்ளிகள் வழியாக கல்வி புகட்டுவதையும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதைப் பற்றியும் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வதைப்பற்றியும் வயதானவர்களைக் கவனித்துக்கொள்வதைப்பற்றியும் தகுந்த ஆலோசனைகள் வழங்குவதையும் கடமையாகவே நினைத்துச் செயல்பட்டார். வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் பாதுகாப்புக்காக சிறுவர் நிலையங்கள் தொடங்கப்பட்டன.
பூதான இயக்கத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு இத்தாலியிலிருந்து கியோவன்னி என்னும் பேராசிரியர் இந்தியாவுக்கு வந்து கிராமதான நிலங்களுக்குத் தேவையான பாசன வசதியைச் செய்துதரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போதுதான் நிலச்சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டுஅசோசியேஷன் ஆஃப் சர்வோதயா ஃபார்ம்ஸ்என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. நாளடைவில் அது வளர்ச்சிபெற்று விவசாயக் கூட்டுறவுச்சங்கங்கள், பால் உற்பத்தியாளர் சங்கங்கள், கிராம சபைகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுக்கல்வி நிலையங்கள் என பலவற்றைத் தொடங்கி மக்களுக்கு உறுதுணையாக இயங்கியது. அரசின் உதவிகளைப் பெற்று பல நல்ல செயல்களில் ஈடுபட்டபோதும் அரசின் குறைகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டும் அம்சத்தை அது விட்டுக்கொடுக்கவேண்டி இருந்தது.  ஒருமுறை அரசின் மலிவுவிலை மது திட்டத்தை எதிர்த்து கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் போராட்டத்தை முன்னெடுத்த போது, அது அந்த அமைப்பை சங்கடத்தில் ஆழ்த்தியது. அதை உணர்ந்த இருவரும் அந்த அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டனர்.
1968ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் இரவில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்வெண்மணி என்னும் கிராமத்தில் மேல்சாதிப் பண்ணையாரும் அவருடைய அடியாட்களும் சேர்ந்து, 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர்களை ஒரு குடிசைக்குள் வைத்துக் கொளுத்திவிட்டனர். மறுநாள் காலையில் அச்செய்தி தமிழகமெங்கும் செய்தித்தாட்களில் வெளியாகி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. அதைப் படித்ததும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்னும் எண்ணத்தோடு கிருஷ்ணம்மாள் கீழ்வெண்மணிக்குப் புறப்பட்டுச் சென்றார். கருகிய உடல்களைக் கண்டு கதறி அழுதார்.
கீழ்வெண்மணியில் இருந்த கூலித்தொழிலாளர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். அறுவடை நேரம் என்பதால் கூலியாகத் தரப்படும் நெல்லை அதிகப்படுத்தி அளிக்கும்படி அவர்கள் பண்ணையாரிடம் கேட்டனர். அவர்களுடைய கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துவிட்டார். அதனால் கூலிக்காரர்களும் நிலத்தில் அறுவடை செய்ய மறுத்தனர். உடனே பண்ணையார் மேல்சாதியைச் சேர்ந்த மேஸ்திரி ஒருவர் வழியாக பக்கத்து கிராமங்களிலிருந்து கூலிக்காரர்களை வரவழைத்து அறுவடை வேலையை முடித்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட சிலர் அந்த மேஸ்திரியைக் கொன்றுவிட்டனர். அதைக் கேள்விப்பட்ட பண்ணையார் தன்னுடைய ஆளைத் தாக்கியது தன்னையே தாக்கிவிட்டதாக நினைத்து பழிக்குப்பழி வாங்க முடிவெடுத்தார். உடனே இருநூறுக்கும் மேற்பட்ட ஆட்களைத் திரட்டிக்கொண்டு கத்தி, அரிவாள், துப்பாக்கி, தீப்பந்தங்களோடு வேகவேகமாக வந்து கூலிக்காரர்களின் குடியிருப்பில் புகுந்து கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் வெட்டி வீசினார்கள். குடிசைகளுக்கு தீவைத்துக் கொளுத்தினார்கள். அச்சமுற்ற வயதானவர்களும் பெண்களும் சிறுவர்களும் ஓடி ஒரு குடிசைக்குள் ஒளிந்துகொண்டனர். தீவைத்தபடியே வந்த கும்பல் அக்குடிசையின் கதவைப் பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திவிட்டது. 44 பேரும் குடிசைக்குள் உயிரோடு வெந்து சாம்பலானார்கள்.
அங்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 74 குடும்பங்கள் இருந்தன. அக்குடும்பத்தினரிடமும் அந்த வட்டாரத்தில் இயங்கிவந்த பொதுவுடைமைக் கட்சியினரிடமும் பண்ணையாரிடமும் மாறிமாறிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் கிருஷ்ணம்மாள். யாரும் அவருடன் ஒத்துழைக்கத் தயாராக இல்லை. பொதுவுடைமைக் கட்சியினர் அவரை காங்கிரஸ்காரர் என்று ஒதுக்கினர். காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அவரை பொதுவுடைமைக்கட்சியைச் சேர்ந்தவர் என்று ஐயம் கொண்டனர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசியதால் பண்ணையார்களும் அவரை நம்ப மறுத்தனர். ஒவ்வொரு நாளும் மக்கள் நடுங்கினர். அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க ஒரு காவலரும் கிடையாது. ஆனால் பண்ணையார் வீட்டைப் பாதுகாக்க நூறு காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.  கிருஷ்ணம்மாளோ தங்குவதற்குக்கூட இடமின்றி, மரத்தடியிலும் மண்டபத்திலும் தங்கப் பழகிக்கொண்டார். பல நேரங்களில் காவலர்கள் அவரைக் கைது செய்து காவல்நிலையத்தில் அடைத்துவைத்தனர்.
ஏறத்தாழ ஒரு மாதத்துக்குப் பிறகுதான் குடிசைவாசிகள் அவர் மீது நம்பிக்கைவைத்து தயக்கமின்றி உரையாடத் தொடங்கினர். அவர்களுடைய குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து நெருக்கமாகப் பழகும் விதத்தைப் பார்த்து, பெரியவர்களும் அச்சமின்றிப் பழகினர். நாளடைவில் அவர்களே கிருஷ்ணம்மாளுக்கு உணவும் இருப்பிடமும் கொடுத்தனர். சர்வ சேவா சங்கத்தின் வழியாக அந்த இடத்தில் காந்தி அமைதி மையம் தொடங்கப்பட்டது. பிறகு அதன் சார்பில் அமைதிக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. பல மாத உழைப்புக்குப் பிறகு கிருஷ்ணம்மாளுக்கும் கிராமத்தினருக்கும் இடையிலிருந்த இடைவெளி மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
எதிர்பாராத விதமாக  ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் கிருஷ்ணம்மாளின் சேவையைக் கேள்விப்பட்டு ஒரு பெரிய தொகையை அவருக்கு நன்கொடையாக அளிக்க முன்வந்தார். அதை அறிந்ததும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அளிக்கும் திட்டம் அவர் நெஞ்சில் உதித்தது. 74 குடும்பங்களுக்கு 74 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது.  பதினைந்து இருபது மைல் சுற்றுவட்டாரத்தில் இருந்த கிராமங்களில் அலைந்து நல்ல நிலத்தைத் தேர்வு செய்யும் முயற்சியில் உடனே இறங்கினார் கிருஷ்ணம்மாள். நிலத்துக்குச் சொந்தக்காரர்களைச் சந்தித்து தன் நோக்கத்தை வெளிப்படையாகச் சொல்லியே நிலத்தை விலைக்குக் கேட்டார். கிருஷ்ணம்மாளின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பலரும் சந்தைவிலையைவிட குறைந்த விலைக்கே நிலத்தை அளிக்க முன்வந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் பெயரில் ஒவ்வொரு ஏக்கர் நிலமும் பதிவு செய்யப்பட்டது. மூன்றாண்டு காலம் அங்கேயே தங்கியிருந்து அமைதிப்புரட்சியாக இந்தச் சாதனையைச் செய்தார் கிருஷ்ணம்மாள்.
வலிவளம் என்னும் ஊரில் ஓர் இஸ்லாமிய அறக்கட்டளைக்குச் சொந்தமாக 82 ஏக்கர் நிலமிருந்தது. அந்த நிலத்தை அறக்கட்டளை விற்க இருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு கிருஷ்ணம்மாள் அந்த ஊருக்குச் சென்று அவர்களைச் சந்தித்தார். அவருக்கு அதை வாங்கினால் நிலமற்ற ஏழைகளுக்குக் கொடுத்துதவலாம் என்ற எண்ணமிருந்தது. கையில் பணமில்லாமல் என்ன செய்வது என்று அவர் தவித்தார். வங்கிகள் அவருக்கு முதலில் கடனளிக்க மறுத்தன. மூன்றுமாத இடைவிடாத முயற்சிக்குப் பிறகு வங்கி அதிகாரிகள் கடனளிக்க இசைந்தனர். ஆனால் ஒரு நிறுவனத்தின் பெயரில்தான் கடனை அளிக்கமுடியும் என்று சொன்னார்கள். இதனால் உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையின் அடிப்படையில் LAFTI (LAND FOR TILLERS) என்ற பெயரில் நிறுவனமொன்றை தன் கணவர் ஜெகந்நாதனின் உதவியோடு உருவாக்கினார் கிருஷ்ணம்மாள். வங்கியிலிருந்து கடன்தொகையைப் பெற்று அறக்கட்டளையிலிருந்து நிலத்தைப் பெற்றார்.
தற்செயலாக அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்கான மாநாடொன்று தில்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள கிருஷ்ணம்மாளுக்கு அழைப்பு வந்தது.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்தை முன்வைத்தபோது, ”தாழ்த்தப்பட்டோருக்கு இப்போதைய உடனடித்தேவை சிறு நிலம் மட்டுமே. அது கிடைத்துவிட்டால், அவர்கள் யாரையும் அண்டியிருக்கத் தேவையில்லாமல் சொந்த உழைப்பில் முன்னேறிவிடுவார்கள். அதை வாங்கிக் கொடுப்பதே நம் முதல் கடமையாக இருக்கவேண்டும்என்றொரு ஆலோசனையைச் சொன்னார் கிருஷ்ணம்மாள். அவருடைய ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறிது காலத்துக்குப் பிறகு, தில்லியிலிருந்து ஒரு குழு தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்துவிட்டுச் சென்றது. நிலம் வாங்குவதற்குத் தேவையான தொகையில் பாதித் தொகையை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.  எஞ்சிய தொகையை நன்கொடைகள் வழியாகத் திரட்டினார் கிருஷ்ணம்மாள்.  ஒரு மாத இடைவெளியில் ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு தாழ்த்தப்பட்டோர் குடும்பங்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டது. அமைப்பு தொடங்கப்பட்ட ஆறாண்டுகளுக்குள் அரசு உதவி வழியாகவும் வங்கிக்கடன் வழியாகவும் நன்கொடை வழியாகவும் தமிழகத்தில் ஏறத்தாழ ஆறாயிரம் ஏக்கர் விளைநிலம் வாங்கப்பட்டு நிலமற்ற தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
தொண்ணூறு வயதைக் கடந்த நிலையிலும் முதுமையைப் பொருட்படுத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றும் ஊக்கத்துடன் வாழ்ந்து வருகிறார் கிருஷ்ணம்மாள். அவருடைய சேவையைக் கெளரவிக்கும் விதமாக பத்மபூஷண் விருதை வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இப்போதும் கஜா புயலில் வீடிழந்த மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித் தரும் கனவுத்திட்டத்தைச் செயல்படுத்தும் வழிமுறைகளைப்பற்றிய யோசனைகளில் மூழ்கியிருக்கிறார் கிருஷ்ணம்மாள்.


(அம்ருதா - மார்ச் 2020 இதழில் வெளிவந்த கட்டுரை)