குடுமி குலுங்க மேளம்
அடித்த ஆளைப் பார்த்ததுமே என்னால் சிரிப்பைத் தாங்கமுடியவில்லை. அது கோயில்
என்பதுகூட மறந்துவிட்டது. பக்கத்தில் இருந்த சிவராமன் “ஸ்.சும்மா இருடா” என்று கண்ணை உருட்டி
சமிக்ஞை கொடுத்தும்கூட அடக்கிக்கொள்ளமுடியவில்லை. வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். சிவராமன் முறைத்தான். ஒருகணம் வாயைப் பொத்திக்கொண்டேன்.
மறுகணமே ஆடும் அந்தக் குடுமியில் பார்வை பட்டுவிட மீண்டும் சிரிப்பு பொங்கியது. “யார்டா அது
க்ளுக்க்ளுக்னு சிரிக்கிறான். ஊருக்குப் புதுசா?” என்று சிவராமனைப் பார்த்துக் கேட்டார் ஒருவர். “எங்க ஆஸ்டல் பையன்...
திருழா பார்க்கணும்னான்...” என இழுத்தான்
சிவராமன். “சரி... சரி.. மசமசன்னு
எதுக்கு வந்து நிக்கறிங்க?
வயசுப் பசங்க, போய் ஆளுக்கு ஒரு கட்டு மாஎல பறிச்சாங்க. காப்பு கட்டணுமில்ல” என்று எங்களை
விரட்டினார் அவர்.
அவர்தான் மணியக்காரர்
என்றான் சிவராமன். எனக்கு அவருடைய தொப்பை ஞாபகம் வந்தது. அவரைப் போலவே நடந்து “யார்டா அது... க்ளுக்
க்ளுக்ன்னு சிரிக்கிறான். ஊருக்குப் புதுசா?” என்று பேசிக் காட்டினேன். உடனே கூட வந்த நாலுபேரும்
என் தோளைத் தட்டி சிரிக்கத் தொடங்கி விட்டனர். எனது உற்சாகம் அதிகரித்தது.
மீண்டும் அந்தக் கொண்டை போட்ட மேளக்காரன் போல அபிநயித்தேன். மறுபடியும் சிரிப்பு.
கண்கள் தளும்பிவிட்டன. “எங்க ஊருக்கு வந்து
எங்க ஆளுங்களயே நக்கல் அடிக்கறியா?” என்று கேட்ட சிவராமனாலும் சிரிப்பை நிறுத்தமுடியவில்லை.
நடந்தே ரயில்வே
ஸ்டேஷன் அருகில் வந்து விட்டோம். சுற்றிலும் பெரிய பெரிய மாமரங்கள். சிவராமன் மேலே
ஏறிச் சின்னச்சின்னக் கிளைகளை உடைத்துப்போட்டான். நானும் மாரிமுத்துவும்
சுந்தரமும் வாரிவாரி அடுக்கினோம். “டேய்... ஏதாவது மாங்கா இருந்தா பறிச்சிப் போடுடா. உப்பு வச்சி சாப்புடுவம்” என்று சத்தம்
கொடுத்தான் மாரிமுத்து. கீழே விழுந்த மாங்காயை யார் வைத்துக்கொள்வது என்று போட்டி.
சுந்தரம் கையிலிருந்து மாரிமுத்து பிடுங்க, அவனிடமிருந்து பறிக்க நான் முயற்சி செய்ய, சற்றும் எதிர்பாராத ஒருகணத்தில் மாங்காயை உயரே வீசி எறிந்தான் சுந்தரம். இலக்கு
மாறித் திசை விலகிப் பறந்த மாங்காய் அருகில் இருந்த குடிசையின் கூரையில் விழுந்து, உருண்டு வரும்போது
பெரிய ஓட்டையில் சரிந்து,
குடிசைக்குள் விழுந்தது. ஒருகணம் மௌனம். எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்தபடி நின்றோம். கீழே இறங்கி வந்த சிவராமன் “மூளை இல்லாத பசங்கடா”
என்று திட்டினான். மாங்காயை எடுத்து வரும் பொறுப்பு எனக்குத்
தரப்பட்டுவிட்டது.
குடிசையின் வாசலில்
தயங்கித்தயங்கி நின்றேன். முதல் பார்வைக்கு எதுவும் தெரியவில்லை. ஒருகணம் பயம்
வந்து தாக்கியது. மெல்லமெல்ல மேல்கூரை ஓட்டையின் சதுரவெளிச்சம் தெரிந்தது. மண்தரை.
மாங்காய் எங்கே விழுந்திருக்கக் கூடும் என்று பார்வையில் துழவினேன். ஒரு பக்கம்
செங்கல் அடுப்பு. அதையொட்டிச் சாம்பல் குவியல், சட்டிகள். பானைகள். குப்பை வீச்சம் மூக்கை அடைத்தது. மாங்காயைத் தூக்கிப்
போட்டவன் மீது கோபம் கோபமாக வந்தது. அறை முழுக்கப் பார்வையை நகர்த்திக்கொண்டிருந்த
போது சுவரோரம் ஓர் உருவம் தெரிந்தது. அதிர்ச்சியில் எனக்குத் தூக்கி
வாரிப்போட்டது. கால்கள் பின்வாங்கத் தயாராகின. எனினும் ஏதோ ஓர் எண்ணம் என்னைக்
கட்டி இழுத்து நிறுத்தியது.
எலும்பும் தோலுமாய்க்
கிடந்தது அந்த உருவம். கந்தல் புடவை. குழி விழுந்த கண்கள். அவளுக்கு அருகில்
கிடந்தது மாங்காய். அவள் என்னைப் பார்த்து பக்கத்தில் வருமாறு கையை அசைத்தாள்.
நான் பயத்தில் உறைந்தேன். நகர முடியாதபடி கால்கள் இறுகின. “இங்க வாடா” என்றாள் அந்த ஆயா
மீண்டும்.
“எதுக்கு?”
“அங்க வெத்தல நாலு
கெடக்குது பாரு. கொஞ்சம் எடுத்துக் குடு.”
அவள் காட்டிய திசையில்
ஒரு சிறிய கல் உரல் தெரிந்தது. செய்யக்கூடாது என மனசின் ஒரு மூலையிலிருந்து கட்டளை
வந்து கொண்டே இருந்தது. எனினும் செலுத்தப்பட்டவன் போல நான் நகர்ந்து அதை எடுத்து
அவள்முன் வைத்தேன். அவள் மாங்காயைக் கையில் வைத்து உருட்டியபடி இருந்தாள். நான்
மாங்காய்க்காகக் கையை நீட்டினேன். அதைக் கவனிக்காதவள் போல “யாரு நீ?” என்றாள்.
பயத்துடன் நான் பின்வாங்குவதைக் கண்டு அவள் சிரித்தாள். “சொல்லுடா பையா.. யாரு
நீ?” என்றாள். திடீரென
வெட்கம் கவ்வியது.
“புச்சேரி நானு. திருழா
பாக்கறதுக்கு ஆஸ்டல் சிநேகிதன் கூட வந்தன்.”
“எப்ப திருழா?”
“இன்னிக்கு எல்ல கட்டி, கூழு ஊத்தறாங்க.
நாளைக்கு நெருப்புத் திருழா“
அவள் இடுப்பில் இருந்த
சுருக்குப் பையைப் பிரித்து வெற்றிலையை எடுத்து. மடித்து உரலில் வைத்து இடிக்கத்
தொடங்கினாள். கூடவே அவள் வாய் முணுமுணுத்தது. “இந்த பேமானி ஊருக்கு
திருழாதான் ஒரு கேடு. சரியான மொள்ளமாறி ஊரு. முடிச்சவுக்கறவன் ஊரு. சங்கமாங்கிப்
பசங்க சாம்பலா போவணும். தட்டுவாணிப் பசங்க
கட்டையில போவணும்.”
அரைகுறையாய் கேட்ட அவள்
வார்த்தைகள் எதுவும் புரியவில்லை. அவசரமாக நான் மாங்காய்க்காக கையை நீட்டினேன். அவள்
என் பக்கம் திரும்பவே இல்லை. தன் முணுமுணுப்பை நிறுத்தவும்
இல்லை. மாங்காயை மட்டும் என்பக்கம் வீசிவிட்டுத் தனக்குள்ளேயே பேசிக் கொள்ளத்
தொடங்கினாள். சட்டென்று வெற்றிலை உரலை இடிக்கும் வேகம் அதிகரித்தது. நான் மெல்லக்
குனிந்து மாங்காயை எடுத்தபடி அவள் முகத்தைப் பார்த்தேன். நெருப்புப் போலச்
சிவந்திருந்தது. மறுகணமே நான் வெளியே ஓடிவந்துவிட்டேன்.
சுந்தரம் அவசரமாய் என்
கையில் இருந்த மாங்காயை வாங்கி உடைத்துக் கூறு போட்டான். கால்சட்டைப் பைக்குள்
உப்பைப் பொட்டலமாய்க் கட்டி வைத்திருந்தான் சுகுமாரன். பங்கு வைத்தபடி “என்னடா, பைத்தியக்காரக் கெழவி
புடுச்சிகிச்சா?”
“பைத்தியமா?”
“கால், அரையெல்லாம் கெடையாது.
முழுப் பைத்தியம்.”
எனக்கு அவள் கதையைத்
தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. வேண்டுமென்றே, “பாத்தா அப்படித்
தெரியலயே” என்று இழுத்தேன். “தோ வந்துட்டாருடா டாக்டரு.
எங்க ஊரு கெழவியப் பத்தி எங்களுக்குத் தெரியாதா?“ என்றான் சிவராமன்.
“என்னமோ மொணமொணன்னு
யாரயோ திட்டிக்கிட்டே இருக்குது.”
“சங்கமாங்கிப் பசங்க
சாம்பலா போவணும். தட்டுவாணிப்பசங்க
கட்டையில போவணும்.”
கிழவியின் குரலில் அதே
ஏற்ற இறக்கத்தோடு சொன்னான் சுகுமாரன். என்னால் ஆச்சரியம் தாங்க இயலவில்லை. நான்
அவனைப் பரபரப்போடு கவனித்தேன்.
“சொத்தப்
புடுங்கனவனுக்குத் துரோபதயம்மா கூலி தருவா, கையேந்த வச்சவனுக்கு காளியம்மா கூலி தருவா.”
உடனே சுந்தரம்
ஆரம்பித்தான்.
“அனாதயாக்கிப் போட்டானே
அவன் குடும்பம் வௌங்குமா. அவமானம் செஞ்சானே அவன் கட்ட வேகுமா.”
மாங்காயை
நக்கிக்கொண்டே சுகுமாரன் தொடங்கினான்.
“மவராசன் எனக்கிருந்தா
மறிச்சிக் கேட்டிருப்பான். ஆம்படையான் எனக்கிருந்தா அதட்டிக் கேட்டிருப்பான்.”
ஆளாளுக்குப் பாட்டு
மாதிரி பாடி விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.
“அது பெரிய பைத்தியம்.
வாயத் தெறந்தாலே வசவுதான். யாரப் பாத்தாலும் எதப் பாத்தாலும் திட்டிகிட்டே இருக்கணும் அதுக்கு. வீடு வீடா
வந்து பிச்சை எடுத்துத்தான் சாப்புடுது. அது திட்டறதக் கேட்டுக்கேட்டு
எங்களுக்குப் பள்ளிக்கூடப் பாடம் மாதிரி பதிஞ்சி போச்சு.”
மா இலைகளைக் கட்டாகக்
கட்டி ஆளுக்கு ஒரு கட்டு தூக்கிக்கொண்டு நடக்கத்தொடங்கினோம்.
“இன்னிக்கு கூழு வாங்க
வரும் பாரு. அப்ப காட்டறன்.”
“மணியக்காரு
சொந்தம்தான் அது. லூசுங்கறதால தள்ளி வச்சிட்டாங்கன்னு எங்க அம்மா சொல்வாங்க.”
“அப்படி இல்லடா. மொதல்ல
எல்லா சொத்தும் இதுங்கிட்டதான் இருந்திச்சாம். புருஷன் சின்ன வயசுல
செத்துட்டாராம். புள்ள வேற இல்லயா, மணியக்காரு எல்லாத்தயும் சுருட்டிக்கிட்டு அடிச்சி பைத்தியமாக்கி
துரத்திட்டாராம். எங்கம்மா சொல்வாங்க.”
இதெல்லாம் என்னவென்று
புரியவில்லை. ஆயாவின் கதை ஒரு சரித்திரக் கதை போல நீண்டுகொண்டே போவதை நினைத்துக்
குழம்பினேன். எல்லாமே ஒரு கனவு போல இருந்தது.
கோயிலை நெருங்கி
விட்டோம். குடுமி வைத்த மேளக்காரர் என்னைக் கண்டதும் குறும்போடு நெருங்கி வந்து
தலையை ஆட்டி ஆட்டி என்னைப் பார்த்தபடியே அடித்தார். என்னமோ இந்தமுறை சிரிப்பு
வரவில்லை. மனசுக்குள் அந்தப் பரிதாபமான ஆயாவின் சித்திரம் எழுந்துஎழுந்து
கலைந்தது.
“சீக்கிரம்
சீக்கிரம்... தோரணம் தயாராவட்டும்” என்று அதட்டினார் மணியக்காரர். இரண்டு நடுவயசுக்காரர்கள் ஓடி வந்தார்கள்.
நாங்கள் சிறுசிறு கொத்தாய்க் கொடுத்தோம். அவர்கள் அழகான தோரணமாய்ப் பின்னினார்கள்.
அதே நேரத்தில் இன்னொரு கும்பல் வேப்பிலைக் கொத்துகளோடு வந்து சேர்ந்தது.
அவற்றையும் தோரணத்தின் இடையே சேர்த்துக் கொண்டார்கள்.
“மதுரை வீரன்” புதிய வர்ணத்தில்
செக்கச் செவேலென்று மின்னியது. கத்தி விளிம்பில் எலுமிச்சம்பழத்தைச் செருகியதும்
இடுப்பில் துணிகட்டியவர் தலையில் தூக்கிக்கொண்டார். மேளக்காரர் பின்னால் நடக்க
மணியக்காரர்களும் மற்ற ஆள்களும் அதற்கடுத்து நடந்தார்கள். நாங்கள் நாலு பேரும்
ஆளுக்கொரு தோரணக்கட்டைத் தூக்கியபடி ஓட்டமும் நடையுமாய்ப் பின்தொடர்ந்தோம். வெயில்
ஏறி விட்டிருந்தது. வெடிச்சத்தம் அதிர வைத்தது. எதிரே வந்த பஸ் ஓரமாய் ஒதுங்கி
நின்று எங்கள் ஊர்வலத்திற்கு வழி விட்டது. ஊர்க்கோடிக்குச் சென்றதும் மதுரை
வீரனும் மேளக்காரனும் நின்றார்கள். சாலையின் இருபுறங்களிலும் இருந்த கம்பங்களில்
ஏறித் தோரணத்தைக் கட்டினார்கள். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க என் மனம்
பரவசத்தில் மூழ்கியது.
நான்கு திசைகளிலும்
எங்கள் ஊர்வலம் சென்று எல்லை கட்டிவிட்டுக் கோயிலுக்குத் திரும்பியது. மீண்டும்
வெடிச்சத்தம். மேளக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடித்தார்கள். திடுமென
கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் மேள அடிகளுக்குத் தகுந்த
மாதிரி அடி வைத்து ஆடத் தொடங்கினான். அவன்தான் அடிக்கடி மேளக்காரனின் கொண்டையில்
கைவைத்துச் சீண்டினான். சீண்டுதல் அதிகரிக்கஅதிகரிக்க மேளத்தின் வேகம்
அதிகரித்தது.
வெடிச்சத்தம்
கேட்டதுமே கூழ்ப்பானைகளைச் சுமந்தபடி பெண்கள் வரத்தொடங்கினார்கள். கோயில் வாசலில்
வேப்பிலைக் கொடிகள் சுற்றிய டிரம்கள் வைக்கப்பட்டிருந்தன. குடங்களை வாங்கிவாங்கி
டிரம்களில் கூழை ஊற்றினோம் நாங்கள். எங்கும் சலசலப்பு. நேரம் போனதே தெரியவில்லை.
கோயிலுக்குள் மணியடித்துத் தீபாராதனை காட்டும் சத்தமெழுந்தது. உடனே ஜனங்கள் இரு
பக்கமாய்ப் பிரிந்து நின்று கும்பிட்டார்கள். மேளக்காரர்களும் கும்பிட்டார்கள்.
இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்ட மணியக்காரர் முதல் ஆளாய் நின்றிருந்தார்.
தீபாராதனைத் தட்டு முதலில் அவரிடம் காட்டப்பட்டது. அவர் கைகளை குவித்து தீபத்தைத்
தொட்டு வணங்கினார். அப்புறம் தட்டு மெல்ல வரிசைக்கிடையே இறங்கியது. சூடான கற்பூர
அனல் கையில் படும்போது சுகமாக இருந்தது.
திடுமென கும்பலில்
இருந்த ஓர் இளம் பெண்ணுக்கு சாமி வந்தது.
பக்கத்தில் இருந்த பெண்கள் அவளைத் தாங்கி விசாரித்தார்கள். கடைசியில்
கொளுத்தப்பட்ட கற்பூரத்தை விழுங்கி மலையேறியது சாமி.
“வரிசையா நின்னு கூழு
வாங்கிக்குங்க.”
மணியக்காரர் முதலில்
இருந்த பத்துப் பதினைந்து பெண்களுக்குக் கூழ் ஊற்றினார். அதற்கப்புறம் செம்புகள்
எங்களிடம் தரப்பட்டன. நாங்கள் சுறுசுறுப்போடு செயல்பட்டோம்.
“நெறிக்காதிங்கம்மா...
நெறிக்காதிங்கம்மா.”
சுகுமாரன் பெண்கள்
பக்கமாகவே ஊற்றிக் கொண்டிருந்தான். கீழே தரையில் கூழ் சிதறி வழவழத்தது.
முட்டிமுட்டி மோதும் பாத்திரங்களிடையே முகத்தைப் பார்க்க முடியவில்லை.
மொண்டுமொண்டு ஊற்றினேன். பலர் இரண்டாவது, மூன்றாவது முறையாக வந்து நீட்டினார்கள். கும்பலில் எதுவும் சொல்லமுடியவில்லை.
திடுமென நான் அந்த முகத்தைப் பார்த்தேன். அந்தக் கிழவி. பாத்திரத்தை வைத்துக்
கொண்டுமதிலோரம் நின்றிருந்தாள். சரேலென விலகி நான் செம்புக்கூழோடு அவள்முன்
நடந்தேன். அவள் பாத்திரம் வழிய ஊற்றினேன். என் மனம் நிரம்பியதுபோல இருந்தது.
அப்போதும் அவள் என்னமோ முணுமுணுத்தபடி இருந்தாள்.
அதற்குள் “அங்கேயே எதுக்குடா
நின்னுட்ட?” என்று சிவராமனின்
குரல் அதட்டியது. வேகமாக எல்லா நினைவுகளையும் உதறிவிட்டு நான் ஓடினேன்.
அன்று மாலையே மாட்டு
வண்டியில் கட்டைகள் வந்து இறங்கின. கோயில் மதிலையொட்டி எல்லாவற்றையும் இறக்கி
அடுக்கினோம். கோயில் திருவிழாவே எங்களால்தான் என்பது போலப் பெருமித உணர்வில்
மிதந்தோம். கோயிலைச் சுற்றி நிறையக் கடைகள் முளைத்துவிட்டன. பொரி, கடலை, புல்லாங்குழல்கள், பலூன்கள், பாட்டுப் புஸ்தகம், தேன் மிட்டாய், வளையல்கள், பொட்டு. சற்றே தள்ளி
குடை ராட்டினக்காரன் கூட வந்து நங்கூரம் பாய்ச்சி விட்டான். பெட்டிக்குள் சினிமா
காட்டுகிறவனும் கம்ப்யூட்டர் ஜாதகம் சொல்பவனும் சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு வந்து
நின்று கொண்டார்கள்.
இரவுச் சாப்பட்டுக்கு
சிவராமனின் அப்பா எங்களைத் தேடி வந்து அழைத்துப் போனார். என்னைப் பார்த்து “என்னப்பா, திருழா
புடிச்சிருக்குதா?” என்றார். நான் உற்சாகமாய்த்
தலையசைத்தேன்.
கை கழுவிக்கொண்டு
சாப்பிட உட்கார்ந்தோம். கருவாட்டுக் குழம்பு. விரும்பிச் சாப்பிட்டேன். அப்போது
வாசலில் ஒரு குரல். நான் திரும்பிப் பார்த்தேன். மீண்டும் அந்தக் கிழவி. அதே
குரல். அதே கண்கள்.
“குடுத்து வச்சவ மாதிரி
இது ஒண்ணு வந்துடுது எப்பப் பார்த்தாலும்.”
அலுத்தபடியே ஒரு
கிண்ணம் சோறு எடுத்துக் கொண்டு போய் போட்டுவிட்டு வந்தாள் சிவராமனின் அம்மா.
“எதுக்கு அந்த ஆயா எப்ப
பார்த்தாலும் யாருக்கோ சாபம் குடுத்துக் கிட்டே இருக்குது?”
“ஆமா... இவ
சாபத்துக்கொன்ன கொறைச்சல். இதுஞ்சாபத்துக்கு இந்நேரம் ஊரே எரிஞ்சிருக்கணும். என்னமோ
ஆத்தமாட்டாம பொலம்புது.”
என்று சொல்லிவிட்டு “ஒனக்கு எதுக்கு ராஜா
அதுங் கதை? இன்னம் கொஞ்சம்
கொழம்பு ஊத்திச் சாப்புடுப்பா” என்றாள்.
சாப்பாடு முடிந்ததும் “கோயிலுக்குப் போவலாமா?” என்று கிள்ளினான்
சிவராமன். அனுமதியை நான் வாங்கித் தர வேண்டும் என்பது அந்த சமிக்ஞையின் அர்த்தம்.
நான் மெதுவாய்ச் சென்று தயங்கித்தயங்கி சிவராமனின் அம்மாவிடம் சாமி ஊர்வலம்
பார்க்கப் போவதாய்ச் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு வெளியேறினோம்.
“ரொம்பவும் கண்
முழிக்காதீங்கடா. நாளைக்கி திருழா சமயத்துல தூக்கம் வரும்...”
கோயிலுக்குப் போகிற
தெருவில் நடந்து குறுக்குச் சந்தில் புகுந்து வீடியோ போடும் தெருவுக்கு வந்தோம்.
ஏற்கனவே சுந்தரமும் மாரிமுத்துவும் வந்து இடம் பிடித்திருந்தார்கள். படம்
ஆரம்பித்தது. ரஜினி குதிரை வண்டியில் பாட்டுப் பாடியபடி வந்துகொண்டிருந்தார்.
தொடர்ந்து இரண்டு
சினிமாக்கள் பார்த்ததில் கண்கள் வலித்தன. தூக்க மயக்கத்தோடு வந்து வீட்டுத்
திண்ணையில் சுருண்டோம். ஏதோ தெருவில் ஊர்வலம் செல்லும் மேளச் சத்தம் கேட்டது. தலை
வலித்தது. திரௌபதை அம்மன்,
கிழவி, ரஜினி எல்லா
முகங்களும் குழம்பிக்குழம்பி அலைந்தன. எப்போது தூங்கத் தொடங்கினேன் என்று
தெரியவில்லை. எழுந்திருக்கும்போது வெயில் கள்ளென்று அடித்தது.
“எழுந்திருங்கடா...
திண்ணைய மொழுவணும்.”
பரபரப்போடு எழுந்து
குளிக்க ஓடினோம். அவரசக் குளியல். அவசர சாப்பாடு. அடுத்த நிமிடம் கோயில் முன்
சேர்ந்து விட்டோம்.
நெருப்பைப்
பரப்புவதற்காக நீளமான இடம் சுத்தம் செய்யப்பட்டது. அடுத்து கால் நனைக்கச்
செயற்கையான குளமும் தயாரானது. சைக்கிள்களில் ஆள்கள் தண்ணீர்குடம் சுமந்து வந்து
ஊற்றிக்கொண்டே இருந்தார்கள். நாங்கள் ராட்டினத்தின் பக்கம் ரொம்ப நேரம் வேடிக்கைப்
பார்த்தோம். வயசுப்பெண்களின் வெட்கம் பார்ப்பதற்குச் சந்தோஷமாய் இருந்தது.
திடுமென மேளச்சத்தம்
கேட்டது. மணியக்காரரும் மற்ற சிலரும் கோயிலில் இருந்து சிறு ஊர்வலமாக வந்தார்கள்.
அடுக்கிய கட்டைகள் நடுவில் கற்பூரத்தை வைத்து திரௌபதை அம்மன் இருக்கும் திசையில்
கும்பிட்டபடி ஏற்றினார் மணியக்காரர். கற்பூரம் எரிந்து, அதன் அடியில் பொதிந்து வைக்கப்பட்ட வைக்கோல் எரிந்து, அதன் அடியில் பரப்பப்பட்ட கட்டைகளில் நெருப்பு பற்றியது. முதலில் ரொம்ப நேரம்
புகைந்தது. ஆள்கள் வேட்டியை மடக்கிக் கட்டிக் கொண்டு கிளறிக்கிளறிப் பற்ற
வைத்தார்கள். இரண்டு ஆள் உயரத்திற்குச் சுடர் எழுந்தது. பத்தடி தள்ளி அனல்
வீசியது.
சுற்றிலும்
ஜனக்கூட்டம். மதில்கள், மரங்கள் மீதெல்லாம்
ஏறி உட்கார்ந்திருந்தார்கள். நெருப்பு ஜுவாலை வானத்தைத் தொட்டுவிடுவதுபோல
உயிர்தெழுந்தது.
இன்னும் தள்ளி பெண்கள்
கல் அடுப்பில் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள். வேட்டிப் பந்தலுக்குக் கீழே
சின்னப் பிள்ளைகளுக்கு மொட்டை போடுதலும் காது குத்தலும் நடந்தன. ஒரே ஆரவாரம்.
சலசலப்பு. காது குத்தும் அழகை ஒரு கணம் பார்ப்போம். அடுத்த கணம் மாட்டு வண்டியில்
நடக்கும் வாழைப்பழ ஏலத்தைப் பார்ப்போம். எங்கும் கால் தரிக்காமல் சுற்றி விட்டு
அக்கினி குண்டத்தின் முன் வந்து நிற்போம்.
ஏறத்தாழ ஆறு மணி நேரம்
எரிந்த கட்டைகள் நெக்குவிடத் தொடங்கின. நீளத்தடியால் சிறுசிறு துண்டுகளாக
நொறுக்கினார்கள். எங்கும் அனல் வீசியது. தயாரிக்கப்பட்ட இடத்தில் துண்டுகள்
பரப்பப்பட்டன. பலரும் கையெடுத்துக் கும்பிட்டார்கள். ஏறத்தாழ முப்பதடி தூரத்திற்கு
இருந்தது நெருப்புப் பரப்பு.
திடுமென மேளங்கள்
அதிர்ந்தன. ஈர உடம்புடன் மஞ்சள் துணி உடுத்திய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும்
வரிசையாக அக்கினிப் பரப்பின் முன் நின்று கும்பிட்டார்கள். மீண்டும் கற்பூரம்
கொளுத்தித் தீபாராதனை காட்டினார்கள்.
“திரௌபதை அம்மனுக்கு
ஜே. திரௌபதை அம்மனுக்கு ஜே.”
சத்தம் எழும்பியது.
என் இதயத்துடிப்பு மெல்ல மெல்ல அதிகரித்தது. நெருப்பில் இறங்கி நடக்கப்போகும்
கால்களையே கவனித்தபடி இருந்தேன் நான். முதல் வரிசையில் ஆறு வயசுக் குழந்தை. அதன்
தந்தை அதன் கையைப் பிடித்திருந்தார். என்னால் மூச்சேவிட முடியவில்லை. “கடவுளே” எனப் பதறினேன். ஆராதனை
முடிந்ததும் முதலில் மணியக்காரர் இறங்கினார்.
“அரோகரா... அரோகரா...”
தொடர்ந்து எல்லாரும்
நெருப்பில் இறங்கி நடந்தார்கள். ஆண்கள். பெண்கள். சிறுவர்கள். சிறுமிகள். ஒரே அரோகரா, அரோகரா முழக்கம்.
நாலைந்து கணங்களுக்கு என்ன நடந்தது. என்றே தெரியவில்லை. நடந்ததெல்லாம் கனவா என்று
தோன்றியது. எல்லாரும் குளத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். மறுகணம் குளத்தின்
கரை உடைக்கப்பட்டது. தண்ணீர் ஓடி வந்து நெருப்பைத் தழுவியது. பெரிய அளவில்
கர்ரென்று சத்தமெழுந்தது. புகை மண்டலத்தோடு நெருப்பு அணைந்தது.
புகையின் போக்கைக்
கவனித்தபடி அண்ணாந்தேன். நெளிந்து நெளிந்து மர உயரத்திற்கு அலைந்து விண்ணை
அடைந்தது புகை. அழகான கோலம் போல இருந்தது அது. புகையின் போக்கில் பதிந்திருந்தது
என் பார்வை. அப்போது இன்னொரு திசையிலிருந்தும் புகை வந்து வானில் தேங்குவதை
உணர்ந்தேன். முதலில் அலட்சியமாய்த் தான் நினைத்தேன். பிறகுதான் அதன் தீவிரத்தை
உணர்ந்தேன். நான் சிவராமனைச் சீண்டி புகை விஷயத்தைச் சொன்னேன். அவன் முதலில் என்னை
பைத்தியக்காரன் என்றான். “திருழா பாக்க வந்தியா, இல்ல எங்க பொகையுது
எங்க எரியுதுன்னு பாக்க வந்தியா?” என்று அதட்டினான். அதற்கப்புறம்தான் அவன் முகுத்திலும் சந்தேகக் கோடுகள்
எழுந்தன. நாங்கள் நின்றிருந்த மதிலிலிருந்து குதித்துக் கத்த வாயெடுத்தோம். அதே
நேரத்தில் இன்னொரு திசையிலிருந்து “நெருப்பு நெருப்பு“ என்று குரல் எழுந்து
விட்டது. ஜனங்கள் தாறுமாறாக ஓடத் தொடங்கினார்கள்.
“மணியக்காரு ஊட்டுக்கு
யாரோ நெருப்பு வச்சிட்டாங்க.”
நானும் சிவராமனும்
கும்பலோடு ஓடத் தொடங்கினோம். “சிவராமா... அந்த ஆயா“
என்று அவசரமாய் அவனிடம் கிசுகிசுத்தேன். அப்போது தான் காலையில் இருந்தே அவளைப்
பார்க்காததும் ஞாபகம் வந்தது. அவன் முகத்தில் அதிர்ச்சி. குழப்பம். “அப்புறம் பேசிக்கலாம்.
மொதல்ல ஓடுடா”என்றான்.
(1997இல் இந்தியா டுடே இதழில் வெளிவந்த சிறுகதை )