1962 ஆம் ஆண்டு. கல்லூரியிலும் பல்வேறு அலுவலகங்களிலும் பணிபுரிபவர்களுக்கு மதிய உணவுப் பெட்டிகளை அவரவர் வீட்டிலிருந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு, அவர்கள் உண்ணும்வரைக்கும் அங்கேயே காத்திருந்து வெற்றுப்பெட்டிகளை திரும்ப வாங்கிக்கொண்டு மீண்டும் அவரவர் வீடுகளில் ஒப்படைக்கும் பணியைச் செய்வதற்கென்றே கூடைக்காரர்கள் வாழ்ந்த காலம். கூடைக்காரர்களில் ஆண்களும் உண்டு. பெண்களும் உண்டு. அனைவரும் நடுவயதைக் கடந்தவர்கள். பெரும்பாலும் ஆதரவில்லாதவர்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள். முதியவர்கள்.
ஒருமுறை
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கும்பகோணம் கல்லூரிக்குச் சென்றிருந்தார். காலையில் தொடங்கிய நிகழ்ச்சி நண்பகல் உணவு இடைவேளை வரைக்கும் நீண்டுவிட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகு அரங்கத்திலிருந்து காமராஜர் நண்பர்கள் புடைசூழ வெளியே வந்தார். அவரைச் சுற்றியும் மாணவர்களும் பேராசிரியர்களும் நிறைந்திருந்தார்கள். அது உணவு இடைவேளை நேரம் என்பதால் கூடைக்காரர்களும் அந்த வாசலில் நின்றிருந்தார்கள். கூடை வைத்திருந்த ஒரு மூதாட்டி வாசலில் இறங்கி வரும் காமராஜரைப் பார்த்துவிட்டு, அவரிடம் உரையாடுவதற்கு வேகமாக நெருங்கினார். ஆனால் அவரைச் சுற்றியிருந்தவர்கள் அந்த மூதாட்டியைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அந்த வாக்குவாதத்தை தொலைவிலிருந்து பார்த்துவிட்ட காமராஜர் அவரை அருகில் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
வணங்கியபடியே காமராஜரை நெருங்கிவந்த மூதாட்டி கண்கலங்க கூடை சுமந்து பிழைக்கும் தன் கதையைச் சொன்னார். “என்ன மாதிரி
ஆதரவில்லாத பல பேரு இந்த ஊருல கூடைய சுமந்து பொழைக்கறாங்க. ஒடம்புக்கு ஏதாவது வந்து கைகாலு உழுந்திடுச்சின்னா, எங்கள காப்பாத்த யாருமே இல்லை” என்று கண்ணீர் விட்டார். அவர் ஏதோ பண உதவி கேட்டு வந்திருக்கிறார் என நினைத்து அருகில் நின்றிருந்த ஒருவர் தன் பையிலிருந்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்க மறுத்த மூதாட்டி காமராஜரைப் பார்த்து கலங்கிய குரலுடன் “எங்களுக்கு நிரந்தரமா உதவறமாதிரி ஏதாவது செய்யுங்கய்யா” என்றார். “ஆகட்டும்மா பார்க்கலாம்” என்றபடி அவருக்கு ஆறுதலாக சில சொற்களைச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவரோடு வாகனத்தில் பயணம் செய்த அதிகாரிகளிடம் அந்த மூதாட்டியைப்போல ஆதரவில்லாதவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என தகவல் திரட்டி உடனடியாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பத்து நாட்களில் அவர் கேட்ட தகவலைச் சேகரித்து அவரிடம் கொடுத்தனர் அதிகாரிகள். அன்று மாலை தமிழக அரசின் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கான உதவித்தொகையாக ஒவ்வொருவருக்கும் இருபது ரூபாய் அளிக்கப்படும் என காமராஜர் அறிவித்தார். இன்று ஆயிரம் ரூபாயாக வளர்ந்து நின்றிருக்கும் முதியோர் உதவித்தொகைத் திட்டம் இப்படித்தான் தொடங்கியது.
ஒரு தொடக்கப்பள்ளியில் கணவனும் மனைவியும் ஒன்றாக வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நான்கு குழந்தைகள். குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு பள்ளிக்குழந்தைகளுக்கும் அன்புடன் பாடம் எடுத்துக்கொண்டு நல்ல மதிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள் அவர்கள். அதைப் பார்த்து அந்த வட்டார கல்வி ஆணையர் எரிச்சலுறுகிறார். உடனே அந்த ஆசிரியையை மட்டும் ஆறு மைல் தொலைவில் உள்ள இன்னொரு பள்ளிக்கு மாற்றிவிடுகிறார். அந்த அம்மாவும் தன் விதியை நொந்தபடி புதிய பள்ளிக்குச் சென்றுவருகிறார். அவர் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவர் என்பதால் கிராமத்திலிருந்து பள்ளிக்கூடம் வரைக்கும் மிதிவண்டியில் சென்று வருகிறார். இதைப் பார்த்த ஆணையரின் சீற்றம் மேலும் அதிகரிக்கிறது. பெண்கள் மிதிவண்டி ஓட்டக்கூடாது என நினைக்கும் தலைமுறையைச் சேர்ந்தவர் அவர். உடனே அந்த ஆசிரியையை அழைத்து மிதிவண்டியில் வரக்கூடாது, காலணிகள் அணியக்கூடாது என்றெல்லாம் ஏராளமான விதிகளை விதிக்கிறார். பள்ளிக்கு நடந்துதான்
வரவேண்டும் என்று அறிவுரை சொல்கிறார். வேறு வழியின்றி அவர் ஆணைக்கு இணங்கும் ஆசிரியை தன் தருணத்துக்காகக் காத்திருக்கிறார்.
ஒருமுறை அவர் வசிக்கும் ஊருக்கு அருகில் ஒரு வேலையாக வந்த முதலமைச்சர் காமராஜர் அங்கேயே தங்கிவிடுகிறார். அப்போது தன் நிலைமையை சுருக்கமாக ஒரு கடிதத்தில் எழுதி எடுத்துக்கொண்டு காமராஜரைச் சந்திக்கச் செல்கிறார் அந்த ஆசிரியை. அவருடைய கடிதத்தை வாங்கிக்கொண்டு அவரைத் திருப்பி அனுப்ப முயற்சி செய்கிறார் உதவியாளர். ஆயினும் தன் கோரிக்கையை முன்வைத்து கெஞ்சிக்கொண்டிருந்த
அந்த ஆசிரியையை கூடத்திலிருந்தே பார்த்துவிட்ட காமராஜர் அவரை அருகில் அழைக்கிறார். நடந்ததையெல்லாம் சுருக்கமாக எடுத்துச் சொன்ன ஆசிரியை தன்னை மீண்டும் பழைய ஊருக்கே மாற்றிவிடும்படி கெஞ்சுகிறார்.
ஒரு பெண்ணை மிதிவண்டி ஓட்டக்கூடாது என்று ஒரு கல்வி ஆணையர் சொன்னார் என்கிற செய்தியைக் கேட்டு அவர் சீற்றம் கொள்கிறார். உடனடியாக அந்த ஆணையரை வரவழைத்து அவர் மீது கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். “பெண்கள் என்றால் உனக்கு அவ்வளவு இளக்காரமா? மிதிவண்டியை மட்டுமல்ல, ஆகாய விமானத்தைக்கூட பெண்கள் ஓட்டுவார்கள். அப்படித்தானே ஒரு சமூகம் முன்னேற முடியும்? அதைத் தடுக்க ஒரு அதிகாரிக்கு என்ன உரிமை? முதல் வேலையாக நீங்கள் போட்ட ஆர்டரை நீங்களே கேன்சல் செய்யுங்கள்” என்று சத்தம் போட்டு அனுப்புகிறார். அடுத்த நாளே அந்த மாற்றலாணை ரத்து செய்யப்பட்டு அந்த ஆசிரியை தன் பழைய பள்ளிக்கூடத்திற்கே
வேலை செய்யப் போகிறார்.
திருப்பூரைச் சேர்ந்த காவலர் ஒருவரை வேலைக்காரரைப்போல நடத்துகிறார் அவருடைய அதிகாரி. அது அவருக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அவர் அதிகாரி என்பதால் பொறுத்துக்கொண்டு போகிறார். ஒருமுறை தன் வீட்டுக்குச் சென்று சாப்பாடு எடுத்துக்கொண்டு வருமாறு அனுப்பிவைக்கிறார் அதிகாரி. ஏதோ காரணத்தால் வழியில் தாமதமாகிவிடுகிறது. உடனே வழக்கம்போல அதிகாரி வசைமழை பொழியத் தொடங்குகிறார். எரிச்சலில் காவலரின் சாதிப்பெயரைச் சொல்லி திட்டுகிறார். வழக்கம்போல தொடக்கத்தில் அவ்வசையைப் பொறுத்துக்கொண்டு செல்லவே அவர் நினைக்கிறார். ஆயினும் அதிகாரி அத்து மீறி அவருடைய தாயை தகாத சொற்களால் வசைபாடுகிறார். அதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அக்கணமே பொங்கியெழுகிறார். தனக்கும் வசைமொழிகள் தெரியும் என்றும் அதே சொல்லால் திருப்பித் திட்டினால் அவரால் என்ன செய்யமுடியும் என்றும் அதிகாரியைப் பார்த்து கேள்வி கேட்கிறார். அதை எதிர்பார்க்காத அதிகாரி வெகுண்டெழுந்து அவரை பணியிடைநீக்கம் செய்துவிடுகிறார். வேலையும் இல்லை, வருமானமும் இல்லை என்கிற நிலையில் அவர் வாட்டமடையத் தொடங்குகிறார்.
சென்னைக்குச் சென்று முதலமைச்சர் காமராஜரைச் சந்தித்து அதிகாரியிடம் அவமானப்பட்ட விஷயங்களைக்
கூறுகிறார் காவலர். அதைக் கேட்டு காமராஜருக்கும் சீற்றம் பொங்குகிறது. உடனே அதிகாரியை தொலைபேசியிலேயே
அழைத்து சாதிப்பெயரைச் சொல்லி அழைத்ததும் ஓர்
அரசு ஊழியரை சொந்த வேலைக்குப் பயன்படுத்தியதும் எவ்வளவு பெரிய விதிமீறல் என்பதைச் சுட்டிக் காட்டி அவர் தன் தவற்றை உணரும்படி செய்கிறார். விரைவிலேயே அந்த பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஒருமுறை அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவர்கள் விடுதியில் சில வசதிகள் இல்லை என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நீண்டபோது காவல்துறை குறுக்கிட்டு மாணவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தது. 73 மாணவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. பல்கலைக்கழகம் மூன்று மாத காலத்துக்கு மூடப்பட்டது. வறுமையில் வாடும் மாணவர்கள் கடலூரில் இருக்கும் நீதிமன்றத்துக்கு சிதம்பரத்திலிருந்து வந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மனம் நொந்துபோன மாணவர்கள் தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதலமைச்சர் காமராஜரைச் சந்தித்து நடந்ததையெல்லாம் சுருக்கமாக எடுத்துரைத்தனர். அவர்கள் கோரும் வசதிக்குறைவுகள் உண்மையானவையே என்பதையும் மாணவர்கள் யாரும் எந்த விதமான தனிப்பட்ட கட்சிச்சார்பும் உள்ளவர்கள் அல்ல என்பதையும் ஒவ்வொருவரும் மிகவும் வறிய பின்னணியிலிருந்து படிக்க வந்தவர்கள் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். உடனடியாக அந்தக் காவல்துறை அதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர் தரப்பு சொற்களை சிறிது நேரம் கேட்டுவிட்டு மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தரை அழைத்து பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கவேண்டிய அவரே காவல்துறையை காரணமின்றி பல்கலைக்கழக வளாகத்துக்கு வரவழைத்துச் செய்த பிழையைச் சுட்டிக் காட்டி அறிவுரை சொன்னார். மாணவர்கள் சிதம்பரத்துக்குத் திரும்புவதற்குள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
காமராஜருடன் பழகியவர்கள் தாம் நேரில் கண்ட அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகள் இவை. திருத்துறைப்பூண்டி திருநாவுக்கரசுவின் மகன்
வீரபாண்டியன் தன் தந்தையின் அன்பு வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக இப்படி ஒரு தொகுப்பை உருவாக்கியதாக முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பொது வாழ்க்கைக்காகவே வாழ்நாள் முழுக்க வாழ்ந்த ஒரு பேராளுமைக்குத் தொடர்புடைய சம்பவங்களைப் படிக்கும்போது ஒரு வரலாற்றை வாசிக்கும் உணர்வு அரும்பி மனத்தை நிறைக்கிறது. இருபது ஆண்டுகள் அலைந்து முப்பது ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்ட நேர்ப்பேச்சுகளை எழுத்து வடிவத்துக்கு மாற்றித் தொகுப்பது என்பது மாபெரும் உழைப்பைக் கோரக்கூடிய வேலை. காமராஜர் மீதும் தன் தந்தையாரின் மீதும் வீரபாண்டியன் கொண்டிருந்த அன்பையும் மதிப்பையும் புரிந்துகொள்ள இத்தொகுதி உதவுகிறது.
காமராஜர் எளிமையானவர் என்பதையும் எளிய மனிதர்கள் மீது அவர் அளவற்ற அன்புடன் வாழ்ந்துவந்தார் என்பதையுமே இக்குறிப்புகள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு குறிப்பும் ’காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்’ என்ற திருக்குறளை நினைவுபடுத்தியபடி இருக்கிறது.
’எளியவர் சார்புநிலை’ என்பது எந்த அளவுக்கு காமராஜருடைய
மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது என்பதை இத்தொகுதியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்கள் சொல்லும் தனித்தனி நிகழ்ச்சிகளை இணைத்துப் புரிந்துகொள்ளமுடியும்.
முதல் நிகழ்ச்சி. காமராஜர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவர் சாத்தூர் தொகுதி சார்பாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவருடைய வெற்றிக்காக விருதுநகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடுமையாகப் பாடுபட்டது. பெரிய செல்வந்தர்கள் அவர்கள். அவர்களுடைய செலவில்தான் அங்கு பிரச்சாரமே நிகழ்ந்தது. அக்குடும்பத்தினர் தம் பிள்ளைக்கு மருத்துவப்படிப்பில் ஒரு இடம் வேண்டும் என்று கேட்டு வந்தபோது எக்காரணத்தை முன்னிட்டும் விதிப்படி இயங்கும் ஓர் அமைப்பை குலைப்பது மிகப்பெரிய பிழை என்றும் முறையை மீறி இடம்பெற்றுத் தரமுடியாது என்றும் கண்டிப்பாகத் தெரிவித்துவிடுகிறார் காமராஜர். “எங்களுக்குக்கூட செய்யாம வேற யாருக்கு செய்யப் போறீங்க?” என்று அவர்கள் கேட்டபோது அவர்கள் தேர்தலுக்குச் செலவு செய்ததை
சுட்டிக் காட்டுகிறார்கள் என்பதை அவர் மனம் புரிந்துகொண்டது. உடனே அவர்களிடம் “தேர்தலில் செலவு செய்வது என்பது தொழில் போடப்படும் முதலீடு அல்ல” என்று கறாராகச் சொல்லி அனுப்பிவைத்துவிடுகிறார்.
இரண்டாவது நிகழ்ச்சி. மருத்துவத் தேர்வுக்குழுவுக்கு தலைவராக வழக்கமாக ஒரு மூத்த அதிகாரி செயல்படுவது வழக்கம். அந்த அதிகாரியை அரசுதான் நியமிக்கும். தாம் நியமித்த அதிகாரி மிகவும் நேர்மையானவர் என நம்பியிருந்தார் காமராஜர்.
ஆனால் அவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்கிறார் என்னும் புகார்கள் தொடர்ந்து வருவதைப் பார்த்து கவலை கொண்டார். எப்படி உண்மையைக் கண்டறிவது என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருந்த வேளையில் கட்சிக்காரர்கள் சிலரே லஞ்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற செய்தி அவருக்குக் கிடைத்தது. அவர்களை அழைத்து “லஞ்சம் கொடுக்கறவன் இருக்கறதாலதான வாங்கறவனும் இருக்கிறான். நீங்க ஏன் கொடுக்கறீங்க?” என்று நொந்துகொண்டார். அன்றே அந்த அதிகாரியை தன் வீட்டுக்கு வரவழைத்து விசாரித்தார். அந்த அதிகாரி மறுக்கத் தொடங்கியதும் உண்மையை சாட்சிகளின் அடிப்படையில் நிரூபித்ததும் அவர் ஒப்புக்கொண்டார். அடுத்த நாளே அங்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அந்த அதிகாரியே தன் சொந்தக் காரணங்களுக்காக தன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்து வெளியேறும்படி செய்தார். அவர் நினைத்தால் அந்த அதிகாரியைத் தண்டித்திருக்கலாம். ஆனால் காமராஜருக்கு அதிகாரியுடைய பிழையை உணர்த்தவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் இருந்ததே தவிர தண்டிக்கும் எண்ணமல்ல.
இப்படி கறாராகவும் கண்டிப்பாகவும் நடப்பவரே சிற்சில சமயங்களில் சிலருக்கு கல்லூரியில் படிப்பதற்கு பரிந்துரை செய்ததுமுண்டு.
ஆனால் அந்தப் பரிந்துரையை மிகவும் வெளிப்படையாகவே செய்திருக்கிறார்.
முதல் நிகழ்ச்சி. ரேடியோக்ராஃபி என்னும் படிப்பு முதன்முதலாக அறிமுகப்பட்ட நேரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இத்தொகுதியில் நினைவுகூரப்பட்டிருக்கிறது. சைதாப்பேட்டையில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று திரும்பிய ஒரு சலவைத்தொழிலாளி வசித்துவந்தார். அவருக்கு அந்த வட்டாரத்தில் தியாகி என்பது பட்டப்பெயர். தியாகிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர். முதல் இருவரும் சரியாகப் படிக்காமல் தந்தை செய்துவந்த துணிவெளுக்கும் தொழிலையே செய்துவந்தனர். மூன்றாவது மகன் மட்டும் தட்டுத்தடுமாறி எப்படியோ பள்ளியிறுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றுவிட்டான். அவனாவது துணிவெளுக்கும் தொழிலைவிட்டு வேறு எதையாவது செய்து பிழைக்கவேண்டும் என்ற எண்ணம் தியாகிக்கு இருந்தது. அவனை அப்போதுதான் அறிமுகமாகியிருந்த ரேடியோகிராபி படிப்பில் சேர்த்துவிடவேண்டும் என அவர் விரும்பினார். அந்தப் படிப்புக்குக் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டிருந்தன. மிகுதியான மதிப்பெண்கள் எடுத்தவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தனர். அப்போதுதான் தியாகி காமராஜரைச் சந்தித்து தன் மகனுக்காக பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லி வந்தவர்களை அனுப்பிவைத்துவிட்டார். பிறகு அந்த மருத்துவத்துறைத் தலைவரோடு பேசினார். “நீங்க வச்சிருக்கிற இருபது இடத்துல கை வைக்கவேணாம். படிச்சிட்டு வந்திருக்கிற பிள்ளைகளையே எடுத்துக்குங்க. இருபத்தோராவதா ஒரு இடத்தை இந்த பையனுக்குக் கொடுங்க. காலம்காலமா ’வண்ணான் குடும்பம்’னு பேரு வாங்கன குடும்பம் இந்தத் தலைமுறையிலாவது ‘ரேடியோக்ராபிகார குடும்பம்’னு பேரு வாங்கட்டுமே. அதிகப்படியான சீட்டுக்கு என்ன செய்முறை சேங்ஷன் வேணுமோ அத கேட்டு வாங்கிக்குங்க” என்று சொல்லிவிட்டார்.
அடுத்த
நிகழ்ச்சி. 1975ஆம் ஆண்டு. அவர் பதவியிலேயே இல்லாத நேரம். அப்போது ஒரு மாணவர் எம்.பி.ஏ. படிப்பில் சேரவேண்டும் என்ற விருப்பத்தோடு இடம் கேட்டு அவரைச் சந்தித்தார். நேர்காணல் வழியாக மட்டுமே அந்தப் படிப்புக்கு இடம் முடிவு செய்யப்படுவது வழக்கம். அவருக்கு நேர்காணல் ஆணை வரவில்லை. அதனால் பரிந்துரைக்காக வந்திருந்தார். சந்திக்க வந்த
மாணவரிடம் அந்தப் படிப்புக்கு பரிந்துரைக்கு இடமில்லையே, நான் எப்படி சொல்லமுடியும் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள் ஏற்கனவே இரு மாணவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் சேர்ந்திருப்பதாகச் சொன்னார். உடனே அவர் பல்கலைக்கழகத் துணைவேந்தருடன் தொலைபேசியில் உரையாடி “நீங்க விதிகளின்படி படிப்புக்கான இடங்களை நிரப்புவதாக இருந்தால், என் பேச்சை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒருவேளை பரிந்துரைக்கும் இடமிருக்கும் என்றால் நான் பரிந்துரைக்கும் மாணவனுக்கு ஒரு இடம் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். மறுநாள் பல்கலைக்கழகத்தில் அந்த மாணவனுக்கு இடம் கிடைத்து விட்டது.
மதுரையில் வைகை நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் ராமனாதபுரம் வறட்சியால் பாலைவனமாகக் கிடந்தது.. அதுவும் முதுகுளத்தூர் வட்டத்தில் பொதுமக்கள் தண்ணீர்ப்பிரச்சினையால் தவித்திருந்தனர். மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பம் கொடுத்திருந்தாலும் ஒரு பயனும் விளையவில்லை. மனம் வெறுத்துப்போன பொதுமக்கள் ஒருமுறை காமராஜரை சந்தித்து தம் குறையைச் சொல்லி அழுதனர். முடிந்ததைச் செய்யலாம் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் காமராஜர். பிறகு அதிகாரிகளை அழைத்து ஓர் அவசரக்கூட்டம் நடத்தினார். மதுரைக்கும் முதுகுளத்தூருக்கும் கால்வாய் வெட்டும் வேலை அந்த அளவுக்குப் பயனளிக்காது என்று ஒவ்வொரு அதிகாரியும் மறுத்தனர். அறுபது கிலோமீட்டர் தொலைவுள்ள கால்வாயை வெட்ட ஏற்படும் செலவையும் சுட்டிக் காட்டித் தயங்கினார்கள். யோசனையில் ஆழ்ந்திருந்த காமராஜர் “அறுபது கிலோமீட்டர் நீளத்துக்கும் ஒரே கால்வாயாக ஏன் வெட்டவேண்டும். மதுரைக்கும் முதுகுளத்தூருக்கும் நடுவில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கண்மாய்களை இணைக்கும் திட்டமாக இதை நாம் நிறைவேற்றலாம். முதுகுளத்தூர் மட்டுமல்ல, வழியிலுள்ள கிராமங்களுக்கும் அது பயன்படும்” என்று மாற்றுவழிமுறையை முன்வைத்தார். அதிகாரிகள் அதற்கு உடன்பட்டனர். முதுகுளத்தூர் திட்டம் இப்படித்தான் நிறைவேற்றப்பட்டது.
02.10.1975 அன்று காமராஜர் இந்த மண்ணுலகை விட்டு நீங்கினார். அவர் மறைவதற்கு மூன்று நாட்கள் முன்பு அவர் தன் உதவியாளரை அழைத்தார். மாவட்டக் கமிட்டிகளிடமிருந்து மாநில அமைப்புக்கு வந்து சேர்ந்த தொகையைக் கணக்கிடச் சொன்னார். ஏறத்தாழ பத்து லட்ச ரூபாய் இருந்தது. இன்னும் பாக்கித்தொகை சில அமைப்புகளிடமிருந்து வரவேண்டியிருந்ததால் கணக்கை முடிக்காமல் வைத்திருந்தார் உதவியாளர். பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலைத் தயாரித்து தன்னிடம் கொடுக்கும்படியும் தான் ஒவ்வொரிடமும் விசாரிப்பதாகவும் சொன்னார். ஆனால் அதுவரைக்கும் பெரிய தொகை தம்மிடம் இருப்பது நல்லதல்ல என நினைத்து உடனே சென்று வங்கியில் கட்டிவிட்டு வருமாறு சொன்னார். அன்றே பத்து லட்ச ரூபாயும் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டது. அந்த வங்கியில் அப்போது அதிகாரியாக இருந்தவர் குழந்தைக்கவிஞராக அழ.வள்ளியப்பா. பணம் கட்டிய ரசீதையும் கணக்குப் புத்தகத்தையும் வாங்கிப் புரட்டி சரிபார்த்த பிறகே அவர் மனம் நிம்மதியடைந்தது. பொதுப்பணத்துக்கு கணக்கெழுதி வைத்துக் காப்பாற்றிய மாமனிதர் அவர்.
இத்தொகுதி முழுதும் இப்படி சின்னச்சின்ன நுண்தகவல்கள் ஏராளமாக உள்ளன. இவற்றின் வழியாக மனத்தில் விரியும் காமராஜரின் கோட்டோவியம் அவரை மிகவும் நெருக்கமாக உணரவைக்கிறது. காமராஜரைப் பார்த்திராத, காமராஜரின் பெயரைக்கூட அறிந்திராத ஒரு தலைமுறை இப்போது உருவாகி வந்துவிட்டது. நம்மிடையே ரத்தமும் சதையுமாக இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை உணர்த்துவதற்கு இத்தொகுதி ஒரு வழிகாட்டி நூலாக இருக்கிறது.
(ஆகட்டும் பார்க்கலாம். காமராஜரைப்பற்றிய நினைவலைகள். திரு.வீரபாண்டியன். தூரிகை வெளியீடு. சென்னை. விலை.ரூ.300 )
(சர்வோதயம் மலர்கிறது - ஜூலை 2020 இதழில் வெளிவந்த கட்டுரை)