சமீபத்தில்
நடந்து முடிந்த யட்சகானச் செய்திகளில் குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் அக்கலைவிழாவில்
யட்சகானத்தை ஆடும் குடும்ப உறுப்பினர்கள் பணியின் காரணமாக கனடாவில்
குடியேறிவிட்டவர்கள். ஒவ்வொரு ஆண்டும் இக்கலைவிழா நடைபெறும் தருணத்தில்
விடுப்பெடுத்துக்கொண்டு தாய்மண்ணுக்குத் திரும்பி வருகிறார்கள். அரிதாரம் பூசி, சலங்கை கட்டிக்கொண்டு யட்சகானம்
ஆடுகிறார்கள். ஒருவார விழா முடிந்ததும் கனடாவுக்குத் திரும்பி வருகிறார்கள்.
தலைமுறை தலைமுறையாக யட்சகானம் ஆடிவரும் அக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரின்
நேர்காணலும் வெளியிடப்பட்டிருந்தது. யட்சகானத்தின்மீது தனக்கு உருவான
நாட்டத்தைப்பற்றி ஆழ்ந்த ஈடுபாட்டோடு விடையளித்திருந்தார் அவர்.
இரண்டுமூன்று
ஆண்டுகளுக்கு முன்னால் இதேபோல ஒரு இளைஞரின் நேர்காணலைத் தமிழ் இதழ்களில் படித்த
நினைவு வருகிறது. மெலட்டூர் பாகவத மேளாவைத் தொடர்ந்து ஆடிவரும் ஒரு குடும்பத்தினர்
வேலையின் காரணமாக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தாலும் மேளா சமயத்தில்
தமிழகத்துக்குத் திரும்பிவந்து தங்கியிருந்து ஆடிவிட்டுச் செல்வதாக தம்
நேர்காணலில் சொல்லியிருந்தார். கர்நாடக மண்ணின் பழைய கலைவடிவமான யட்சகானம் இன்றும்
மாநிலமெங்கும் ஆடப்பட்டு வருகிறது. நகரில் அக்கலைநிகழ்ச்சி நடைபெறுகிற அரங்குகளில்
அனுமதிச்சீட்டுகளுக்கு முன்பதிவு உண்டு. தாமதமாகச் சென்று சீட்டு கிடைக்காமல்
ஏறத்தாழ மூன்றுமணிநேரம் நின்றுகொண்டே யட்சகானம் பார்த்த அனுபவம் எனக்கிருக்கிறது.
யட்சகானத்துக்கு கர்நாடக மண் வழங்கிவரும் சமூக கெளரவத்தையும் மதிப்பையும் தெருக்கூத்துக்குத்
தமிழ்மண் வழங்குகிறதா என்பது முக்கியமான கேள்வி. நமக்கு நம் கலையின்
வடிவங்களைப்பற்றி போதிய அக்கறை இல்லை. அதைச் சுவைக்கவேண்டும் என்கிற ஈடுபாடு
இல்லை. அதை முறையாக வளர்த்து, அடுத்த தலைமுறையிரிடம்
கைமாற்றிச் செல்லவேண்டும் என்கிற வேகமும் இல்லை. தோட்டத்தில் வேண்டாத களையை அல்லது
முட்செடியை பிடுங்கியெறிவதுபோல தெருக்கூத்தைத் துறந்துவிட்டுச் செல்கிற
வேகம்மட்டுமே நம்மிடம் உள்ளது. பார்வையாளர்களோ ஆதரிப்பவர்களோ இல்லாத ஒரு கலை
உயிர்வாழ்வது என்பது பெரிய கேள்விக்குறி. கூத்துக்கலைவடிவம் தொடர்ந்து நிலைத்திருக்க,
முதலில் அதற்கு நிரந்தரமான பார்வையாளர்கள் உருவாகவேண்டும். எந்த
நிகழ்ச்சி, எங்கே நடந்தாலும் ஐந்நூறு அல்லது ஆயிரம் பேர்
கூடியிருந்து பார்க்கிற சூழல் உருவாகவேண்டும். அப்படிப்பட்ட ஆதரவுகள்
எல்லாப்பக்கங்களிலிருந்தும் கிடைக்கும்போது கூத்துவடிவம் இன்னும் பலநூறு ஆண்டுகள்
நிலைத்திருக்கும்வண்ணம் வேர்விட்டு செழித்து வளரும். ஏர்வாடி ஹரிகிருஷ்ணன்
சமீபத்தில் சில ஆண்டுகளாக கூத்துக்கலைக்கு பரவலான பார்வையாளர்களைத் திரட்டுவதை ஒரு
முக்கியமான நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து உழைத்துவருகிறார். சேலம், தருமபுரி மாவட்டங்களில் வாழ்ந்துவரும் பல கூத்துக் கலைஞர்களைத் திரட்டி
ஊக்கமளித்துவருகிறார். ஒரு நிறுவனம் செய்யவேண்டிய வேலைகளை தனிஆளாக விடாமுயற்சியோடு
செய்துவருகிறார் அவர்.
கூத்துக்கலைக்குப் பார்வையாளர்களை உருவாக்கும் முயற்சிகளில் ஒன்றாக அருங்கூத்து என்னும் நூல் கொங்குமண்டல நிகழ்த்துகலைஞர்களின் வாழ்க்கைப்பதிவாக இப்போது வெளிவந்திருக்கிறது. கூத்துக்கலைஞர்கள் மட்டுமில்லாமல், பொம்மலாட்டக் கலைஞர்கள், தோற்பாவைக் கலைஞர்கள் ஆகியோரும் இப்பதிவுகளில் பங்கெடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் பதினோரு கலைஞர்களின் கலைத்தடங்கள் இதில் பதிவாகியுள்ளன. அனைவரும் வயிற்றுப்பாட்டுக்கு ஒரு வாழ்க்கையையும் மனப்பசிக்கு கலைவாழ்க்கையையும் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்கள். நெஞ்சில் சுரந்த ஆர்வத்துக்கான காரணம், கலையில் ஈடுபட்ட விதம், பயிற்சிபெற்ற விதம் அனைத்தும் ஆத்மார்த்தமான உரையாடல்கள் வழியாக உணர்த்தப்படுகின்றன. வாழ்க்கையையே பணயமாக வைத்து இவர்கள் பயின்ற கலை இவர்களுக்கு மனநிறைவையளித்தது என்பது உண்மையின் ஒருபக்கம். இக்கலை இவர்களை சமூகத்தில் எந்த உயரத்துக்கும் அழைத்துச் செல்லவில்லை என்பது இன்னொருபக்கம். மாயமானைத் தேடிச் சென்றவன்போல இவர்கள் எதையுமே அடையவில்லை. அலைந்த அனுபவங்கள்மட்டுமே நெஞ்சை அடைத்திருக்கின்றன.
லட்சுமிஅம்மாள் என்கிற பெண்கலைஞரின் குரல் ஒரு முகவீணையின்
ஒலியைப்போல தொகுப்பைப் படித்துமுடித்த பின்னரும் நெஞ்சில் ஒலித்தபடி உள்ளது. “பக்கிக்கும் பரதேசிக்கும் ஏது சாமி சொந்த ஊரு? மானம்
கூர, மண்ணு ஆசாரம். பிச்சயெடுத்தா கேவலமின்னு ஊரூஊரா
கூத்தாடி வவுத்த கழுவறம்” என்று தொடங்கும் அவர், தன் அப்பாவின் துணையோடு கூத்து அடவுமுறைகளைக் கற்றுக்கொண்ட விதத்தையும்
ஆடவர்களும் ஆடத் தயங்குகிற ஆட்டங்களை எளிதாக ஆடிப் பெயர் வாங்கியதையும்
சொல்லிக்கொண்டே செல்கிறார். அடவிக்கொரு லட்சுமி என்கிற பட்டம் அவருக்கிருக்கிறது.
மயில் ராவணன் சண்டை கதையில் அனுமார் வேஷம், மாடுபிடிச்
சண்டையில் உத்தரகுமாரன் வேஷம், கடபலியில் அரவான் வேஷம்,
பதிமூன்றாம் நாள் யுத்தத்தில் அபிமன்யு வேஷம் என ஒரு பெண் ஏற்பதற்கு
சிக்கலான வேஷங்களையெல்லாம் சவாலாக ஏற்று ஆடியிருக்கிறார். அவருக்கு விருது
வழங்குகிற விழாவில்கூட அவர் கலந்துகொள்ளவில்லை. அன்று அதே தேதியில் வேறொரு ஊரில்
கூத்தாட வருவதாக ஒப்புக் கொண்டுவிட்டதால் குழுவோடு அங்கே சென்றுவிடுகிறார்.
வருசாவருசம் வாரமின்னு வாக்கு குடுத்துட்டம். நம்பளவச்சி பத்து பேரு தொழிலு
கெடக்கூடாது என்று எதார்த்தமாகச் சொல்கிறார். கலையால் தானும் தன்னால் கலையும்
உயிரோட்டம் பெறும் விதமாக வாழும் அவருக்கு இந்த உலகம் என்ன கைம்மாறு செய்யப்
போகிறது?
ஏகாபுரம் என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரு என்கிற
லட்சுமணன். பண்ணையக்காரனுக்கு மகனாகப் பிறந்தாலும் கூத்துக் கலையின் மீதிருக்கிற
ஆவலின் காரணமாக அதை முறையாகக் கற்று நேர்த்தியாக ஆடி வருபவர். கொம்பாடிப்பட்டி
ராஜு என்னும் உன்னதக் கலைஞனை உருவாக்கியவர். கனகு என்னும் திருநங்கையின் வாழ்வை
மடைமாற்றி கூத்துவெளியில் நல்ல கலைஞராக உலவத் துணையாக இருந்தவர். பாட்டும் அடவும்
கூத்துக்கு உயிராக மதிக்கப்படவேண்டியவை என்பது இவர் கருத்து. எந்தக் காரணத்தை
முன்னிட்டும் இந்த இரண்டு விஷயங்களிலும் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
உப்பும் காரமும் சரியாகப் பொருந்திப் போவதுபோல பாட்டும் அடவும்
பொருந்திப்போகவேண்டும். ஆட்டக்காரன் ஒரு பாத்திரமாக உருமாறும் கணத்தைப் பற்றி அவர்
சொல்லும் பதில் கலையில் அவருக்கிருக்கிற ஈடுபாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு. “
கை கால சுத்தஞ் செஞ்சி, கண்ணாடிய முன்ன வச்சி
முத்து வெள்ளய தொட்டு முந்தியே தவம்கெடந்து முந்நூறு நாள் சுமந்து அந்தியும்
ஒஅகலாய் சிவனயே ஆதரிச்சி தொந்தி சரியவே எனைப்பெற்ற தாயே உன் பாதம் கைதொழுதேன்,
அன்னையேன்னு பெத்தவளயோ, இல்ல குருவயோ வணங்கி
மொகத்துல பூசறாம் பாரு, அப்ப அந்த வேசத்துல பொருந்திப்
போறவன் தெரய வெளக்கிவுட்டு வெளிய வரும்போது அவன் போட்ட வேஷம் பூர்த்தியாவும்”
என்பதுதான் அந்த பதில்.
பெண்வேடமிட்டு ஆடும் எலிமேடு வடிவேல் பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கை
அனுபவங்கள் கூத்துக்கலையின்மீது அவருக்கிருக்கும் ஈடுபாட்டுக்கு
எடுத்துக்காட்டானவை. அவருடைய தந்தையாரும் நல்ல கூத்துக்கலைஞர். மகனைப் படித்து
பெரிய ஆளாக்கவேண்டும் என்பது அவருடைய ஆசை. அரசாங்கப் பள்ளிக்கூடத்தில்
சேர்த்துவிடுகிறார். ஆனால் மகனுக்கு பாடத்தைவிட கூத்தில் ஆர்வம். கூத்து நடக்கிற
இடங்களைத் தேடி கூத்து பார்க்கச் செல்வதையும் கூத்து இல்லாத நாட்களில் தனியாக
கூத்துப் பாடல்களைப் பாடித் திரிவதையும் வழக்கமாகக் கொள்கிறார். விஷயத்தைக்
கேள்விப்பட்டு கோபம் கொண்ட அப்பா அவரைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துத்
துவைக்கிறார். கடைசியில் அவருடைய ஆர்வம் கூத்தில்தான் என்று தெரிந்துகொண்டதும்
அமைதியாகிவிடுகிறார். கூத்துதான் தன் உலகம் என்று முடிவுகட்டியதும் அவர்
பெண்வேடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். “ஆம்பளயாப்
பொறந்த அத்தன பேருக்கும் கோவம், குறுக்குப்புத்தி, ஆங்காரம், ஆணவம், துடின்னு
அததுக்குண்டான குணாச்சாரம் இருக்கும். ஓராளு ஆண்வேசம் போட்டுகிட்டு இத புத்திக்கு
கொண்டாந்து அலங்காரம் வரிக்கிறது சுலபம். ஒடம்புல இருக்கற முறுக்க, கட்டுக்கு கொண்டாந்து இல்லாத ஒன்ன பாக்கற சனம் மெச்ச காட்டி
மெய்ப்பிக்கிறதுங்கறது ஒரு சாமர்த்தியம். பத்து பேத்தோட பதனொண்ணா காரியம்
செய்றதவிட அவிங்களுக்கு சவாலான ஒரு வேஷம் போடரது எனக்கு இஷ்டமான இருந்திச்சி.
அதனால பெண்வேசம் போட பிரியப்பட்டேன்” என்பது அவர் சொன்ன
பதில். பாஞ்சாலி, பொம்மி, போகவதி,
சங்குபதி, சுபத்திரை, சித்ராங்கதை
எல்லாம் அவர் ஆடிய பாத்திரங்கள்.
முத்துவீரன் வேடம் போட்டு பிரபலமான கலைஞர் எலிமேடு மகாலிங்கம்.
முப்பத்திரண்டு தீப்பந்தங்கள் முடைந்துகட்டிக் கொண்டு இவர் தர்பாருக்கு வருகை
தரும்போது, பார்வையாளர்கள் எல்லாரும் இவரை ஒரு தெய்வமெனக்
கருதி சூடம் ஏற்றித் தொழுததுண்டு. தன்னைச் சேர்ந்த சமூகத்தினரிடையே பொருளாதார
விழிப்புணர்வை உண்டாகச் செய்ததுடன், இருப்பு நிமித்தம் தமது
சமூகத்துக்கு நேரிட்ட பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும்
நிராகரிப்புகளுக்கும் எதிராக நின்று போராடி, இன்று எலிமேடு
பகுதியில் தொம்பர் சமூகக் குடியிருப்பை நிறுவியவர். கூத்துக்கலையில் கிடைக்கும்
வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவைச் சமாளிக்க முடியாது. வருமானத்துக்காக வேறு
ஏதேனும் தொழில் செய்யக்கூடாதா என்கிற கேள்விக்கு அவர் சொல்லும் பதில்
முக்கியமானது. ” பாடுபட பால்மர்றவனில்ல கூத்தாடி. ராவு
முச்சூடும் புழுதியில குதிச்சாலும் அவந்தாம் ஈசன், அவந்தான்
பிரமன், அவந்தான் கர்ணன். அவந்தான் அம்பத்தாறு தேசத்துக்கும்
ஏக சக்கிரவர்த்தி. இப்படி தந்தோணி பொழப்பு பொழக்கறவன் போயி ஒருத்தவங்கிட்ட நெலயா
நின்னு வேல செய்யமுடியாது. வயிறு காஞ்சி கெடந்தாலும், ஒரு
பாட்ட கீட்ட படிச்ச்சிகிட்டு, காத்துவாக்கில்
அடவுப்புடிச்சிகிட்டோ ஒட்டுத்திண்ணய காத்துகிட்டு கெடப்பனே தவிர பெறத்தியாங்கிட்ட
அடிம வேல செய்ய அவனால ஆகாது” என்கிறார் வடிவேல்.
கூத்தின்மீது அவருக்குள்ள ஈடுபாட்டை உணர இந்தப் பதில் ஒன்றே போதும்.
கூலிப்பட்டி சுப்பிரமணி, அம்மாபேட்டை கணேசன்,
கொம்பாடிப்பட்டி ராஜு, ஜெயா செல்லப்பன் என
இன்னும் பல கலைஞர்களின் வாய்மொழிப்பதிவுகள் இந்த நூலில் உள்ளன. அவர்களுடைய
நெஞ்சில் கூத்து வற்றாத ஊற்றெனப் பொங்கி வழிவதை அவர்களுடைய ஒவ்வொரு சொல்லிலும்
உணர்ந்துகொள்ளமுடிகிறது.
நூலின் பின்னிணைப்பாக உள்ள அரவான் களப்பலி தெருக்கூத்தின் எழுத்துவடிவம் மிகவும் சுவாரசியமானது. படிக்கப்படிக்க ஒவ்வொரு காட்சியும் நம் மனக்கண் முன்னால் அசைந்து கலைகிறது. அரும்பாடுபட்டு இந்தத் தொகுதியின் ஆக்கத்துக்காக உழைத்திருப்பவர் தவசிக்கருப்புசாமி. கொங்குமண்டலக் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையும் அவர்களுடைய வற்றாத ஆர்வமும் இத்தொகுதியில் மிகச்சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழுலகம் தவசிக்கருப்பசாமிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.
நூலின் பின்னிணைப்பாக உள்ள அரவான் களப்பலி தெருக்கூத்தின் எழுத்துவடிவம் மிகவும் சுவாரசியமானது. படிக்கப்படிக்க ஒவ்வொரு காட்சியும் நம் மனக்கண் முன்னால் அசைந்து கலைகிறது. அரும்பாடுபட்டு இந்தத் தொகுதியின் ஆக்கத்துக்காக உழைத்திருப்பவர் தவசிக்கருப்புசாமி. கொங்குமண்டலக் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையும் அவர்களுடைய வற்றாத ஆர்வமும் இத்தொகுதியில் மிகச்சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழுலகம் தவசிக்கருப்பசாமிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.
(அருங்கூத்து- தொகைநூல். தொகுப்பாளர்- தவசிக்கருப்புசாமி. மணல்வீடு வெளியீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம்-636 453. விலை. 250)
(27.02.2011 திண்ணை
இணைய இதழில் வெளிவந்த புத்தக அறிமுகக்கட்டுரை )