Home

Sunday, 2 August 2020

அழிவும் ஆக்கமும் - கட்டுரை



ஓர் இயந்திரம் மனித வாழ்வுக்குத் துணையானதா அல்லது எதிரானதா என்கிற கேள்விக்கு வரையறுக்கப்பட்ட விடையைக் கூறுவது எளிதல்ல.  வெறும் கைகளால் மண்ணைத் தோண்டிக்கொண்டிருந்த ஆதிமனிதன், வலிமையும் கூர்மையும் பொருந்திய கல்லாலும் கட்டையாலும் வேகமாகவும் அதிகமாகவும் மண்ணை அகழ்ந்தெடுக்கமுடியும் என்பதைக் கண்டறிந்த கணத்தில் அவன் நிச்சயமாக ஆனந்தக் கூத்தாடியிருப்பான்.  முரட்டுத்தனமான அந்த ஆயுதங்களை மெல்ல உருமாற்றிஉருமாற்றி மண்வெட்டியாக வளர்த்தெடுத்தது அவனுடைய மாபெரும் சாதனை.  அதன் தொழில்நுட்பம் மென்மேலும் செழுமைப்படுத்தப்பட்டு மின்சாரத்தால் இயக்கப்படும் மண்நீக்கியாக இன்று மாபெரும் உருவத்துடன் வடிவமைக்கப்பட்டதும் மானுடனின்  மதிநுட்பமே.  தோற்றத்தில் மண்வெட்டி ஒரு சின்ன ஆயுதமாக இருந்தாலும் அது மனிதக்கைகளின் நீட்சியாகவும் விரல்களாகவுமே வேலை செய்கிறது.  அக்கணத்தில் அவனுக்கு அது அருந்துணை.  நூறு மனிதர்களின் கைவிரல்கள் ஒரே சமயத்தில் இணைந்து வேலை செய்வதுபோன்ற வேகத்தைக்கொண்டது இயந்திர மண்நீக்கி.  ஒருவகையில் நூறு மனிதர்களின் உழைப்பை அது தன்னந்தனியாக ஈடு செய்கிறது. தன் உழைப்புக்குப் பதிலியாக வந்து நிற்கிற ஓர் இயந்திர மண்நீக்கியை, உழைப்பையே நம்பியிருப்பவனின் பார்வையில் எதிரியாகக் காட்சியளிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று.


பல இயந்திரங்கள்  கூடி ஓர் ஆலையாக நிறுவப்பட்டு தொழிற்புரட்சிக்கு வித்திட்ட காலம் இருவிதமான விளைவுகளை இந்த மண்ணில் நிகழ்த்தின.  ஒரு பக்கம் அளவுகடந்த உற்பத்தி.  மறுபக்கத்தில் அழிவுகள். சிதைவுகள். பெருமூச்சுகள். இந்த முரண் இயக்கமென்னும் சாலையின் வழியாகத்தான் நேற்றுமுதல் இன்றுவரை மனிதர்கள் நடந்துகொண்டே இருக்கிறார்கள்.  அழிவும் ஆக்கமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகிவிட்டன.

அழிவின் சித்திரத்தைத் துல்லியமான நிறங்களுடன் தீட்டிக் காட்டும் தமிழ்ப்படைப்பு 'சாயாவனம்'.  காவேரிக்கரையை ஒட்டிய பலநூறு கிராமங்களில் ஒன்று சாயாவனம்.  வனம்போல  அடர்ந்த புளியந்தோப்பும் திசைகளோ வானமோ தெரியாத அளவுக்கு அடர்ந்த பலவகையான மரங்களும் கொடிகளும் எல்லையாக நிற்கிற கிராமம்.  ஊமையாகப் பிறந்த பிள்ளை பதினாறு வயதில் அமுதகானம் பொழிந்த அதிசயத்தைக் கண்ட மகாராணி அவனுக்கு மனமுவந்து சாசனமாக அளித்த ஊர்.  அந்த ஊரின் வனம்போல அடர்ந்த தோப்பை பணம்கொடுத்து வாங்குகிறான் சிதம்பரம். ஒரு கரும்பாலையையும் ஆலையில் வேலை செய்கிறவர்களுக்காக ஒரு குடியிருப்பையும் கட்டியெழுப்புவதற்காக அந்தப் புளியந்தோப்பு சிதைக்கப்படுகிறது.  இரவுபகலாக அது சிதைக்கப்படும் சித்திரங்கள் நாவலின் பல்வேறு காட்சிகளாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. திசைதெரியாத அளவுக்கு எங்கெங்கும் அடர்ந்து படர்ந்திருக்கிற கொடிகள் அறுபடுகின்றன.  புதர்கள் அழிக்கப்படுகின்றன.  பிறகு, பச்சை மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. மூங்கில் மரங்களை வெட்டுவது எளிதல்ல என்பதால் தோப்புக்கு தீவைக்கப்படுகிறது. பல நாட்களாக தொடர்ந்து எரிந்த  தீ வனத்தையே கரியாக்கிவிட்டு மொட்டையாகிவிடுகிறது.  பிறகு அவற்றை எளிதாக துண்டுதுண்டாக அறுத்தெடுக்கிறார்கள். மரங்கள் அகற்றப்பட்ட மொத்த நிலப்பரப்பும் வெட்டவெளியாக நிற்கிறது.  இறுதியில் ஆலைக்கான கூடம் எழுப்பப்பட்டு கரும்பாலை இயங்கத் தொடங்குகிறது.  பண்டமாற்றுகளால் இயங்கிக்கொண்டிருந்த வாழ்வின் ஒவ்வொரு பொருளுக்கும் பணமதிப்பு சூட்டப்படுகிறது.  தன் கனவைத் தவிர  வேறொன்றையும் பொருட்படுத்தாத ஒருவனுடைய நடவடிக்கைகளைத் தொகுத்துக் காட்டி நிற்கிறது சாயாவனம்.

'புளியந்தோப்பின் முகப்பில் நின்று வானத்தை ஊடுருவி நோக்கினான் சிதம்பரம்' என்று தொடங்குகிறது நாவல். ஒருவகையில் இது மிக முக்கியமான வரி.  ஒன்றை ஊடுருவி வளைத்துச் சிதைத்து தன் கடடுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் உத்வேகமும் சக்தியும் கொண்டவன் அவன்.   பிஞ்சுப் பருவத்தில் கிராமத்தைவிட்டு வெளியேறியவன் இளமைப்பருவத்தில் சாயாவனத்தில் ஊடுருவுகிறான் அவன்.  வெயிலால் ஊடுருவ மடியாத புளியந்தோப்பை விலைகொடுத்து வாங்கி அழித்து தன் ஆசைக் கனவை நிறைவேற்றிக்கொள்கிறான்.  நிறுவப்பட்ட ஆலைக்கு கரும்பின் விளைச்சல் மிகமுக்கியம்.  தன்னைச் சுற்றியிருப்பவர்கள் கரும்பு பயிரிட தயங்குகிறார்கள் என்பதைக் கண்டு, தானே பயிரிட புறம்போக்கு நிலத்தை ஊடுருவி வளைக்கிறான்.  சம்பந்தப்பட்ட அதிகாரியின் வீட்டுக்கு வெல்லமூட்டைகளை அனுப்பி ஆட்சி வளையத்தையே ஊடுருவி வளைத்துக்கொள்கிறான்.  வாழ்க்கை என்பது ஒவ்வொரு கட்டத்தையும் ஊடுருவிச் சென்று தனதாக்கியபடி உயர்கிற பேரின்ப விளையாட்டாக இருக்கிறது அவனுக்கு.

அந்த மனஅமைப்புதான் நாவல்.  இயற்கையறிவும் நிதானமும் கொண்ட சிவனாண்டித் தேவரின் ஆளுமை உள்ளூர அவனை அசைத்துப் பார்க்கிற ஒன்றெனினும், ஆத்திரத்தால் அவரை உதறிவிடாது, இறுதிவரை தன் இலக்கைநோக்கிய பயணத்திற்குத் துணையாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிடுகிறது அவன் மனம்.  சாயாவனத்தில் உழைப்பாளர்கள்  அனைவரும் அக்கிராமத்தின் மேல்சாதிக்காரர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்று அறியவந்த நிலையில் சிறுவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டி அவர்களைப் பார்த்துப் பேச எவ்விதத் தயக்கமும் காட்டாமல் செயல்படுகிறது அவன் மனம்.  பணம் வழியான விற்பனைச் செயல்பாடு புதியாததால் உள்ளூர்க் கடைக்காரர்கள் தொழிலாளிகளுக்கு உப்பு, புளி தர கடைக்காரர்கள் மறுக்கும் நிலையில் பணம் வழியான விற்பனை முறையைக் கடைப்பிடிக்கிற கடையை தானே முன்னின்று திறந்து நடத்தும் வேகத்தை உடையது அவன் மனம்.  ஏணிப்படிகளில்  மெதுமெதுவாக ஏறி தன் வெற்றியை கண்ணாரத் துய்க்கும் ஆவல் உடையது அவன் மனம். தன் வெற்றியை விரிவாக்கிக்கொள்ள நெறிகளைப் புறந்தள்ளி சமரசம் மேற்கொள்ளவும் தயங்காதது அவன் மனம்.  பல நிறம் காட்டும் மாயக்கதிர்போல மின்னுகிறது அவன் மனம்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் வனத்தை அழிக்கும் புதுப்புதுத் திட்டங்களும் பின்னடைவுகளும் முன்னேற்றங்களும் கட்டியெழுப்பப்படும் காட்சிகளே, ஒருவகையில் இந்த நாவலின் மையப்புள்ளிகள். ஒவ்வொரு பகுதியிலும் சிறுகச்சிறுக அவன் வெற்றியை நோக்கி நகரும் முன்னேற்றம் ஒவ்வொரு  பகுதியிலும் பதிவாகிறது.  தடைதாண்டும் ஓட்டத்தில் ஒவ்வொரு தடையாக ஓட்டப்பந்தய வீரன் தாண்டித்தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் சித்திரத்துக்கு நிகரான காட்சி அது. அடுத்த காட்சியில் புதுவிதமான பிரச்சனையொன்றை அவன் எதிர்கொள்கிவான். அதை எதிர்கொள்ள புதுவிதமாக திட்டமிடுகிறான்.  அடுத்தடுத்து பற்பல ஏற்றங்கள். இறக்கங்கள். சறுக்கல்கள். சமாளிப்புகள். ஒரேஒரு அங்குலமாவது தன் இலட்சியத்தைநோக்கி நகர்ந்தால்கூட அதை மாபெரும் சாதனையாக எண்ணிக் களிக்கிறான் அவன்.  சற்றே மூர்க்கமாகவே வெளிப்படுகிறது இயற்கையுடனான அவன் மோதல்.  வெல்லவேண்டும் என்கிற உத்வேகம் அவனை எதிர்காலத்தைநோக்கி நம்பிக்கையோடு உந்தித் தள்ளுகிறது.  இயந்திரங்களைக்கொண்ட ஒரு தொழிலை நிறுவி, கிராமத்துமக்களை விழிவிரிய ஆச்சரியத்தோடு பார்க்கச் செய்யும் ஆவேசம்   அவனிடம் உள்ளது.  அந்த ஆவேசத்தின் முன் சில வெற்றிகள். சில இழப்புகள். சில மேன்மைகள். சில சரிவுகள். இந்தச் சமன்பாடே நாவலின் தரிசனமாக மேலெழுந்து வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை, துல்லியமான தகவல்கள் மற்றும் உரையாடல்கள் வழியாக முன்னகரும் கந்தசாமியின் கலை ஆளுமை கவனத்துக்குரியது.  அவர் விட்டுச் செல்லும் இடைவெளிகள் நம் கற்பனைக்கு முழுஅளவில் இடமளிக்கின்றன.   மரங்களோடு பின்னிப்பிணைந்து வேர்கள் எங்கிருக்கின்றன என கண்டறிய இயலாதவண்ணம் அடர்ந்து வளர்ந்து செழித்திருக்கும் பலவகையான கொடிகளை அறுத்தல், தேனடையைக் கலைத்தல் என நாவலில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் தன்னளவில் குறியீட்டுத்தன்மை கொண்டதாகவே உள்ளது. இப்படி ஒரு தோப்பை அங்குலம்அங்குலமாக அழிக்கும் காட்சிகளை ஒரு படைப்பாளி தொகுத்து எழுதவேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை முன்வைத்து யோசிக்கும்போது அதன் படிம எல்லைகளை நாம் பல நிலைகளில் விரிவாக்கிக்கொள்ள முடியும்.  சாயாவனம் ஒரு தோப்பு அல்ல, நம் நாடு, நம் மண் எனக் குறியீடாகப் பார்க்கும்போது, இந்த அழிவின் வலியை நம்மால் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.  விவசாயச் சமூகத்தில் எந்திரங்களை மூலதனமாகக் கொண்ட தொழில் சமூகத்தின் நுழைவால் நிகழ்ந்த ஆதாயங்களையும் இழப்புகளையும் தொகுத்துக்கொள்ளவும் முடியும்.  தன்னை நிலைநாட்டிக் கொள்ளும் முனைப்பில் இரண்டு யுங்கள் மோதி ஏதோ ஒரு சமரசப்புள்ளியில் இரண்டாவது யுகம் தன் பயணத்தைத் தொடங்கிவிடுகிறது.  புளியந்தோப்பு அழிந்த பிறகுகூட புளி கிடைக்கிறது. ஆனால் அது ஒரே மரம் வழங்கும் தூய புளி அல்ல.  விற்பனைக்காக பல நூறு இடங்களிலிருந்து திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டு மூட்டைமூட்டையாகப் பிரிக்கப்பட்டு அனுப்பப்படும் சிறு சரக்கு. தூய புளியின் ருசிக்குப் பழகிய நாக்குக்கு அதன் பன்மை ருசியை ஏற்றுக்கொள்வது அசாத்தியமாக இருக்கிறது. புளிய வாயில வைக்கவே முடியல்லே என்று நாவலின் இறுதிக்காட்சியில் குறைபட்டுக்கொள்ளும் ஆச்சியின் குரல் முக்கியமானது.  'அதான் எல்லாத்தயும் கருக்கிட்டியே, இன்னமே எங்கிருந்து அனுப்பப் போறே' என்று சுட்டிக் காட்டும் ஆச்சியின் ஆற்றாமைக்குரல் இனி ஒருபோதும் திரும்பாத இறந்த காலத்தையும் பன்மை ருசிக்குப் பழகி மானுடம் வாழவேண்டிய நெருக்கடிகளைக் கொண்ட நிகழ்காலத்தையும் முன்வைக்கிறது.

சிதம்பரத்தின் வெற்றியையும் அகச்சரிவையும் இணைத்தே நாம் காணவேண்டியிருக்கிறது. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாக ஏறஏற, அவன் மனத்தளவில் ஒவ்வொரு படியாக இறங்கிச் சரிகிறான். நிழல்மண்டிய காட்டை அழிக்கத் தொடங்கிய முதல்நாளில் துணைக்கு ஆளின்றி தானே தொரட்டியை எடுத்து மரங்களைப்பற்றி ஏறியிருக்கும் கொடிகளையெல்லாம் இழுத்து வெட்டி வீசும் காட்சியில் ஒரு முக்கியமான சம்பவம் இடம்பெறுகிறது.  அவன் தொரட்டியை இழுத்த வேகத்தில் தழைகள் உதிர்கின்றன. பிறகு காட்டு மலர்கள் பொலபொலவென கொட்டுகின்றன.  இன்னும் இன்னுமென்று இழுக்க, மேற்கிளையில் இருந்த குருவிக்கூடொன்று சரிந்து விழுகிறது. ஒரு சின்னஞ்சிறு குருவியின் பரிதாபக்குரல் இடைவிடாது கேட்டபடியே இருக்கிறது. தொடக்கத்தில் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.  தன் வேலையிலேயே மூழ்கியவனாக இருக்கிறான்.  ஆனாலும் வேதனைமிகுந்த அக்குரலின் அழைப்பை வெகுநேரம் கேட்க இயலாமல் தொரட்டியை அப்படியே விட்டுவிட்டு, உடம்பெல்லாம் முட்கள் கீற உள்ளே செல்கிறான். இறக்கை முளைக்காத குஞ்சொன்று வெட்டுண்ட ஒரு கிளையின் நுனியில் செருகிக்கொண்டு கிடப்பதைப் பார்க்கிறான்.  அவன் கண்களில் நீர்திரண்டு நிற்கிறது. உடம்பில்  முள் கீறுவதையும் பொருட்படுத்தாமல் தலைகுனிந்தபடியே வெளியே வந்து ஒரு மரத்தடியில் தலைகவிழ்ந்து உட்கார்கிறான். ஒருவகையான குற்றஉணர்வால் அவன் மனத்தில் வேதனை படர்கிறது. குருவிகளையொத்த பறவைகள் சுதந்திரமாகத் திரிந்து வாழக்கூடிய அதன் இருப்பிடத்தை தன் பேராசையால் கைப்பற்றிக்கொண்டதை நினைத்து அவன் மனம் ஒரு கணம் குழம்பித் தவிக்கிறது. நாவலின் இறுதியில் இன்னொரு காட்சி இடம்பெறுகிறது. ஆலை தொடர்ந்து இயங்க, தொடர்ச்சியாக கரும்பு தேவைப்பட்டபடி இருக்கிறது. அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட கரும்பையெல்லாம் அவனே கொள்முதல் செய்கிறான். அதற்காகவே வண்டிகள் இயக்கப்படுகின்றன. ஒருநாள் வெளியூரிலிருந்து கரும்புக்கட்டுகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஆற்றைக் கடந்துவரும்போது வெள்ளத்தின் இழுப்பில் அகப்பட்டு உயிர்விடும் இளைஞனின்  மரணச்செய்தியை ஒரு தகவல் என்கிற அளவில்மட்டுமே அவன் உள்வாங்கிக்கொள்கிறான். அப்போது இரக்கமோ, குற்றஉணர்ச்சியோ எதுவுமற்ற உலர்ந்த மனத்தவனாக அவனைத் தகவமைத்துவிடுகிறது காலம்.  மனத்தளவில் நிகழும் அகச்சரிவுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

வனத்தையொட்டி ஓடும் வெட்டாற்றங்கரையில் ஒரு பிள்ளையார் கோயில் இடம்பெற்றிருக்கிறது.  மனம் கொந்தளிக்கும் ஒருநாள் பஞ்சவர்ணத்தின் வீட்டில் இரவைக் கழித்துவிட்டுத் திரும்பும் சிதம்பரம் பிள்ளையார் கோயில் துறையில்தான் நெடுநேரம் நீந்திக் குளித்து தன் மனவெப்பத்தைத் தவிர்த்துக்கொள்கிறான். தனக்குள் கொழுந்துவிட்டெரிவது காமமென்னும் தீயல்ல, வெற்றியைச் சுவைக்கும் ஆசைத்தீ என்பதை அக்கணம் உணர்கிறது அவன் மனம். மதத்தில் கலவையானவன் என்பதால் பிள்ளையாரை அவன் ஏறிட்டுப் பார்க்கவில்லை.  ஆனால் அதே சிதம்பரம் நாவலின் இறுதிக்காட்சியில் அக்கோயிலைப் பார்த்தபடி நிற்கிறான். 'அதான் எல்லாத்தயும் கருக்கிட்டியே , இன்னமே எங்கிருந்து அனுப்பப்போறே' என்றபடி பட்டுப்புடவையைப் பிழிந்து தோளில் போட்டுக்கொண்டு கோயிலுக்குள் செல்லும் ஆச்சியையே அப்போது பார்க்கிறான்.  தெய்வமே பெண்ணுருவில் வந்து சொல்லிவிட்டு கருவறைக்குள் சென்றுவிட்டதைப்போல இருக்கிறது நமக்கு. தொடக்கத்தில் ஆறு, அதையொட்டி கோயில், அதையொட்டிய தோப்பு என்று காட்சியளித்த இடத்தில் இப்போது ஆறும் கோயிலும்மட்டுமே உள்ளன. தோப்பு மறைந்துவிட்டது. தன்னால் மறுபடியும் உருவாக்கித்தரமுடியாத ஒன்றை மனிதன் அழிப்பது துயரமானது. ஆனால் வெற்றியைச் சுவைக்கும் ஆசைத்தீ அவன் கண்களை மறைத்துவிடுகிறது. ஒரு காலத்தில் தனக்குச் சாசனமாகக் கிட்டிய வனத்தைப்பற்றிய கவனமே இல்லாமல் காலம்முழுதும் அமுதகானத்தைப் பொழிந்தபடிய வாழ்ந்தவனைக் கண்டது அந்தக் கோயில். தன் கனவை நனவாக்கிக்கொள்ளும் வேகத்தில் பணம்கொடுத்து வாங்கிய தோப்பை அணுஅணுவாக அழித்துச் சாம்பலாக்கியவனையும் கண்டது அந்தக் கோயில். மானுடனின் அகச்சரிவைப் பதித்துவைத்திருக்கும் காலத்தின் சாட்சியாக ஆற்றங்கரையில் அமைதியாக வீற்றிருக்கிறது அக்கோயில்.

சாயாவனம் நாவலில் கந்தசாமி காட்டியுள்ள நுட்பம் தமிழின் முக்கியமான ஒரு சாதனை.  சிதம்பரம் போல தனிப்பட்ட ஆட்களின் கனவுகளால் விளைந்த சின்னச்சின்ன தொழிற்சாலைகளில் பெரும்பான்மையானவை இன்று அழிந்துபோய்விட்டன.  பெரிய தொழிற்சாலைகளின் உற்பத்திப் பெருக்கத்தையும் வணிகவளையத்தையும் மீறி, உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த இயலாத அவலத்தாலும் உற்பத்தியைத் தொடரமுடியாத இயலாமையாலும் நசிந்துவிட்டன.  முதலில் சந்தையை உறுதிப்படுத்திக்கொண்டு மாபெரும் முதலீடுகளோடு தொழில்போட்டியில் பன்னாட்டு நிறுவனங்கள் கால்வைத்திருக்கும் இன்றைய இந்தியப் பின்னணியில்  பெரிய தொழிற்சாலைகள்கூட காலூன்றி நிற்கமுடியாமல் ஆட்டம் கண்டு தொடர இயலாமல் ஓய்ந்துபோகின்றன அல்லது இறுதிமூச்சைச் சுவாசித்தபடி உயிருக்குத் தத்தளிக்கின்றன. இப்படி ஒன்றையழித்து ஒன்றாக புதுயுகமென மாறிமாறி முகம்காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம்.  ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது.  சாயாவனம் நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக் காட்டியபடி நிற்கிறது.
(2008இல் காலச்சுவடு வெளியீடாக கிளாசிக் வரிசையில் வந்த சாயாவனம் நாவலுக்கு எழுதிய முன்னுரை.)
(அரைநூற்றாண்டுக்கும் மேலாக தம் படைப்புகளால் தொடர்ச்சியாக தமிழ்ப்படைப்புலகத்துக்கு வளம் சேர்த்த சா.கந்தசாமி 31.01.2020 அன்று மறைந்தார். அவருக்கு அஞ்சலிகள் )