”அண்ணே” என்று சந்தோஷத்தில் கூவினேன். சட்டென நாற்காலியிலிருந்து எழுந்து மேசை டிராயரை மூடிவிட்டு, மேசைக்கெதிரில் வைக்கப்பட்டிருந்த நாலைந்து மூட்டைகளைத் தாண்டிக்கொண்டு படியிறங்கி ஓடி வாசலில் நின்றுகொண்டிருந்த வேலாயுதன் அண்ணனுக்குப் பக்கத்தில் நின்றேன். “உள்ள வாங்கண்ணே, நம்ம கடைதாண்ணே. எப்பிடி இருக்கிங்க?”
அவரைப்
பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஒரு கதாநாயகனுக்குரிய முகவெட்டு. தோற்றம். உயரம். அவர் திரும்பி நிற்கும்போதுகூட மேடையிலிருந்து ஒரு கதாநாயகன் இறங்கிவந்து நிற்பதுபோலவே இருந்தது. அக்கணத்தில் அவருக்கு
சூட்டுவதற்காக ஒரு காலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த அவினாஷ், கெளசிக், சுதானந்த்
என்ற பெயர்களெல்லாம் அடுத்தடுத்து நினைவுக்கு வந்தன.
“ஐயப்பன்
கோயில் பக்கத்துல புது மில்லு தெறந்திருக்கறன்னு ஆயா சொன்னாங்க. அந்தப் பக்கமா
இந்தப் பக்கமான்னு தெரியாம பாத்துகினிருந்தேன்.” அண்ணன் புன்னகைத்தார். கவர்ச்சியான புன்னகை.
”வாங்கண்ணே, உள்ள போவலாம்”
“அந்த
பழய மில்லு என்னாச்சி?”
“அது
கொஞ்சம் சின்ன இடம்ண்ணே. அம்பது நூறு
மூட்ட நெல்ல அவிச்சி காய வைக்கறதுன்னா கூட அங்க எடமில்ல. அதனால அத
வித்து இத வாங்கிட்டன்.”
“நல்லா
இருக்குது இது சோமு. ரெண்டு ட்ராமா
தேட்டர் கட்டலாம் போல இருக்குது. பெரிய எடம்.”
அண்ணன்
என் கைகளைப்பற்றி இழுத்து ஒருகணம் தன்னோடு சேர்த்து இறுக்கித் தழுவிக்கொண்டார். பிறகு மூச்சை இழுத்து வாங்கி புன்னகைத்தவாறே “ஒன்ன பாக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது சோமு” என்றார்.
படியேறி
அவரை கடைக்குள் அழைத்துவந்து என் பக்கத்தில் வேறொரு நாற்காலியில் உட்காரவைத்தேன். பிறகு திரும்பி “டேய் ஏழுமல, கிராமணி ஓட்டலுக்கு போயி டீயும் வடையும் வாங்கிட்டு வா” என்று
அனுப்பிவைத்தேன்.
எதிரில்
நெல் மூட்டையோடு நின்றிருந்த உப்புமூட்டைத் தாத்தாவிடம் ”தாத்தா, இது யாரு
தெரிதா?” என்று கேட்டேன்.
“நல்லா
தெரியுமே. நம்ம ஊருல
திருழால வருஷாவருஷம் வந்து நாடகம் போடுமே, அந்த தம்பிதான?” என்றார். “ஒரு நாடகத்துல கர்ணனுனும் குந்தியும் பேசிக்கற மாதிரி ஒரு எடம் வரும். அப்ப இவரு
பேசற பேச்ச கேட்டு அழாத ஆளே இல்ல ” என்று உற்சாகத்தோடு சொன்னார் தாத்தா.
வரிசையில்
நின்றிருந்த மற்றொரு இளைஞன் தானாகவே முன்வந்து ”எங்க நரையூருல கூட இவரு வந்து நாடகம் போட்டிருக்காரு. நான்
பாத்திருக்கேன். நீதி எங்கேன்னு ஒரு நாடகத்துல குற்றவாளி கூண்டுல நின்னு வக்கீல பாத்து அடுக்கடுக்கா கேள்வி கேப்பாரு. மறக்கவே முடியாத
அனுபவம் அது. பாதிக்கப்பட்ட
ஆளாவே உருமாறி பேசறதுன்னா சாமானியமான விஷயமா என்ன?” என்றான்.
அண்ணன்
இருவரையும் பார்த்து கைகுவித்து புன்னகையுடன் வணங்கினார். ”நீங்கள்லாம் மறக்காம இருக்கறத பாக்கும்போது எனக்கு ரொம்பரொம்ப சந்தோஷமா இருக்குது” என்று கண்கள்
தளும்பச் சொன்னார்.
நான்
மேலும் ஊக்கம் கொண்டு பக்கத்தில் இருந்த இரண்டு சிறுவர்களை அழைத்து “டேய்,
இவர பாத்தா யாரு மாதிரி தெரியுது?” என்று கேட்டேன்.
அவர்கள்
இருவரும் அண்ணனை வெவ்வேறு கோணங்களில் நின்று கண்களைச் சுருக்கிப் பார்த்தார்கள். பிறகு ஒருகணம் புன்னகைத்தார்கள். மெல்ல “இளமை ஊஞ்சலாடுகிறது
கமல்மாதிரி இருக்காரு” என்று சொல்லிவிட்டு
புன்னகைத்தபடியே “சரியா சொன்னனா?” என்று கேட்டுக்கொண்டே சென்றார்கள். “என் மனசுல இருந்தத அப்பிடியே சொல்லிட்டிங்கடா நீங்க” என்று அவர்களைப்
பாராட்டினேன்.
”பாத்திங்களா
பாத்திங்களா, என் நெஞ்சில இருக்கறத கண்ணால பாத்து சொன்னாப்புல சொல்லிட்டானுங்க பசங்க, பாத்திங்களா?” என்று அண்ணனைப்
பார்த்துக் கேட்டபோது அண்ணன் பதில் பேசவில்லை.
டீத்தம்ளர்களையும்
தாள் சுற்றி எடுத்துவந்த வடைகளையும் மேசைமேல் வைத்துவிட்டுச் சென்றான் ஏழுமலை.
ஒரு துண்டு வடையை கையிலெடுத்த அண்ணன் “இளமை ஊஞ்சலாடுகிறது
பாத்துட்டு வந்த புதுசுல நீயும் நம்ம பசங்களும் அதத்தான் சொன்னிங்க. ஒரு கட்டத்துல
பித்து புடிச்சிபோயி அந்த பேர் சொல்லியே கூப்புட ஆரம்பிச்சிங்க” என்றார்.
“நவரச
நாயகன் அவினாஷ், கெளசிக், சுதானந்த்…”
“ஆமாம். ஞாபகம் இருக்குது. மூனுல எந்த
பேரு நல்லா இருக்குதுன்னு சீட்டு குலுக்கி போட்டுதான எடுத்தம். ஒரு நோட்டீஸ்ல
கூட அந்த மாதிரி பேர போட்டு அடிச்சிட்டிங்க இல்ல. அன்னைக்கு சித்ரா
மேடம் கூட நம்ம டீம்ல நடிச்சாங்க. வழக்கமா மேகலா மேடம் செய்யற பாத்திரம். திடீர்னு அவுங்க
வராம போனதால, இவுங்கள நீதான்
போய் கூப்ட்டு வந்த இல்ல? ஏழெட்டு வருஷம்
ஓடிப் போச்சி. இப்ப எங்க
இருக்காங்க?”
”அவுங்களுக்கு
கோயம்புத்தூர் பக்கம் ஒரு மில்லுல வேல கெடச்சி அங்கயே போய் செட்டிலாய்ட்டாங்கண்ணே. இந்த வருஷம் என்ன நாடகம்ண்ணே. தேயாத நிலவா, பச்சைவயலா? ”
“ரெண்டும்
வேணாம் சோமு. இதயேதான ஒவ்வொரு
வருஷமும் மாத்திமாத்தி போடறம்? இந்த வருஷம்
நாம ஒரு புதுசா நாடகம் போடலாம். அதுக்காகவே புதுசா
ஒரு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கேன்.”
“புதுசா? என்ன தலைப்புண்ணே?”
அண்ணன்
தன் கைப்பையிலிருந்து பைண்டிங் செய்யப்பட்ட ஒரு நோட்டை எடுத்து மேசையின் மீது வைத்தார். முதல் பக்கத்தில்
நடுப்பகுதியில் பெரிய எழுத்துகளில் கனவு மலர்ந்தது என்று எழுதியிருந்தது.
கனவு
மலர்ந்தது, கனவு மலர்ந்தது
என்று திரும்பத்திரும்ப மனசுக்குள்
சொல்லிப் பார்த்தேன். ஈர்ப்பான விசை அந்தத் தலைப்பில் இருப்பதை உணரமுடிந்தது.
”கனவு
மலர்ந்தது தலைப்பு ரொம்ப நல்லா இருக்குதுண்ணே.”
“நல்ல
சப்ஜெக்ட் சோமு இது. நாடகத்துல
மூனு முக்கியமான பாத்திரங்கள். மூனு பேருக்குமே வாழ்க்கைய பத்தி தனித்தனியா ஒரு கனவு இருக்குது. அந்த கனவை
நோக்கி போற பயணத்துல அவுங்களுக்கு கிடைக்கக்கூடிய அனுபவங்கள்தான் நாடகம்.”
”எனக்கு
வழக்கமா ஒரு சின்ன ரோல் போதும்ண்ணே. மறந்துடாதீங்க.”
“நீ
இல்லாத நாடகமா சோமு. செகன்ட் ஹீரோ
பாத்திரத்துக்கு நம்ம லோகநாதன போட்டுடலாம். அடுத்து ஒரு வலுவான பாத்திரம் இருக்குது. அதுக்கு குருசாமி
பேர மனசுல வச்சிருக்கேன். பெண் பாத்திரத்துக்குத்தான் இப்ப நமக்கு நல்ல ஆளா வேணும். ஒன் மனசில
யாரப்பத்தியாவது தோணுதா?”
“விழுப்புரம்
மாடப்புறாக்கள் ட்ரூப்ல தேவிகானு ஒரு மேடம் நடிச்சிட்டிருந்தாங்க. ஊருல சரியா ஆதரவில்லைனு இப்ப அந்த ட்ரூப்பே கலஞ்சி போச்சி. அவுங்ககிட்ட கேக்கலாம்ண்ணே.”
“எங்க
இருக்காங்க அவுங்க?”
“ரயில்வே
காலனிண்ணே.”
“சரி, ஒரு மாற்று ஏற்பாடா இன்னொரு ஆளயும் யோசிச்சி வச்சிக்கிடுவம்.”
“நம்ம
தியாகராஜனுக்கு சொந்தக்கார பொண்ணு கண்டமங்கலம் எலிமெண்ட்ரி ஸ்கூல் டீச்சரா இருக்குதுண்ணே. அவுங்க பாண்டிச்சேரி ரேடியோ ஸ்டேஷன்ல அடிக்கடி நாடகத்துல நடிக்கறதுண்டுன்னு சொன்ன ஞாபகம் இருக்குது. வேணும்ன்னா அவன்
மூலமா அவுங்கள முயற்சி செய்யலாம்.”
“பாட்டு
எழுதறதுக்கு?”
“வழக்கமா
நம்ம தமிழ் சார் ஆறுமுகம்தான எழுதற வழக்கம். அவர்கிட்டயே கேப்போம்.”
“அவருக்கு
ரெண்டு பாட்டு கொடுக்கலாம். இன்னும் ரெண்டு பாட்டுக்கு வேற புதுசா ஒருத்தர் கெடச்சா நல்லது.”
“ராமலிங்கம்னு
ஒரு கவிஞர். ரொட்டிக்கட வச்சிருக்காருண்ணே. இந்த வருஷம் பொங்கல் கவியரங்கத்துல கூட கவித படிச்சாரு. அவர கேட்டு
பாப்பமா?”
“ரெண்டே
நாள்ல எல்லா ஏற்பாடுகளயும் முடிக்கணும் சோமு. அதுக்கப்பறம் ரீடிங்
இருக்குது, ரிகர்சல் இருக்குது. நெறய வேல.”
“புல்லட்
எடுத்துகினு ஒரு சுத்து வந்தா, வேல முடிஞ்சிடும்ண்ணே. நீங்க கவலப்படாதீங்க. வருஷா வருஷம் திருழா நாடகத்துக்காகவே நீங்க பெங்களூர்லேருந்து வரீங்க. இங்க இருந்துகினு
இதக்கூட நான் செய்யலைன்னா எப்பிடிண்ணே?”
வடையைத்
தின்று முடித்து டீயையும் குடித்த பிறகு தம்ளர்களை ஓரமாக ஒதுக்கிவைத்தார் அண்ணன்.
“நீங்க
சினிமாவுல பூந்து ஒரு முட்டு முட்டியிருக்கணும்ண்ணே. அதான் எனக்கு பெரிய மனக்கொறச்சல். நீங்க இந்த பக்கமாவே ஒதுங்கியே இருந்துட்டிங்க.”
அண்ணன்
என்னை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தார். ”சோமு, பசுமாடு கன்னுக்குட்டியத்தான்
ஈன முடியும். ஆனக்குட்டிய ஈனமுடியுமா? ஒன்னொன்னுக்கும் ஒரு கணக்கு இருக்குது. புரிஞ்சிக்கோ. இந்த
வாழ்க்கையில நமக்கு நாடகம் ஒன்னு போதும். உயர உயர
பறந்தாலும் குருவி பருந்தாய்டாது. அப்பிடித்தான சொல்வாங்க?”
“நீங்க
எது சொன்னாலும் இப்பிடி ஏதாச்சிம் ஒரு பழமொழிய சொல்லி வாய அடச்சிடறீங்க.”
“பழமொழி
என்ன ஆகாயத்துலேர்ந்து நேரா குதிச்சிட்டுதா? அவனவன் வாழ்ந்து பாத்து கெட்டு அலஞ்சி அப்பறம்தான சொல்லி வச்சிட்டு போறான்.”
”சினிமாங்கறது
லட்சக்கணக்கான ஆளுங்க பாக்கற உலகம்ண்ணே. உங்க திறமைய
அந்த உலகம் தெரிஞ்சிக்க வேணாமா? வெறும் வளவனூரு
ஆளுங்க பாத்து பாராட்டினா போதுமா? எங்க அண்ணன்
வெறும் அம்பதுபேரு நூறு பேருக்கு நடுவுல மட்டுமே அடக்கமா தெரியற ஆளா இருக்கறது போதாதுங்கற ஆதங்கம்ண்ணே எனக்கு.”
“சோமு, நாடகம்ங்கறது ரெண்டுமூனு பேரு நின்னு விளையாடி ஜெயிக்கற எடம். சினிமாங்கறது பெரிய
குருச்சேத்திரம். வெறும் அஞ்சி பேரு ஜெயிக்க பதினோரு அக்ரோணி சேனைங்க சாவணும். இதெல்லாம் தேவையா
சோமு.”
“எல்லாத்தயும்
நீங்களே கற்பனை பண்ணிக்கறீங்கண்ணே.”
“நாடகம்ங்கறது
நான் ஜெயிக்கற எடம் சோமு. அது உறுதியா
எனக்கு தெரியும். சினிமாவுல அந்த
உறுதி கிடையாது.”
வாசலில்
நிழல் விழுந்ததால் திரும்பினேன். “செட்டியாரு அனுப்பனாருங்க” என்று கும்பிட்டபடி ஒரு ஆள் வந்து கதவோரம் நின்றார்.
“வாங்க, உள்ள வாங்க” என்றேன். அவர்
வந்து “பணம் குடுத்து
உட்டாருங்க. நீங்க வரவு வச்சிக்கிட்டு இந்த நோட்டுல பதிஞ்சி குடுத்துடுங்க” என்றார். அவர் கொடுத்த
பணத்தை எண்ணி டிராயரில் வைத்துவிட்டு கடை லெட்ஜரில் குறித்துக்கொண்டு அவர் கொடுத்த நோட்டிலும் குறித்துக்கொடுத்தேன். அவர் அதை வாங்குவதற்கு முன்னால் அண்ணனை மீண்டும் மீண்டும் பார்த்தபடி இருந்தார்.
“என்ன
பாக்கறிங்க, யாருன்னு தெரியுதா?”
“வருஷா
வருஷம் ட்ராமாவுல பாக்கறனே, ஐயாவ பார்க்க
முடியுமா? போன வருஷம்
கூட நாடகத்துல வருக வருக நிலவே தருக தருக ஒளியேனு பாட்டுலாம் பாடி நடிச்சிங்களே, எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது.”
அண்ணன்
முகத்தில் மகிழ்ச்சி கலந்த நாணம் படர்ந்ததைப் பார்த்தேன்.
“பரவாயில்லயே, நல்ல ஞாபக சக்தியுள்ள ஆளத்தான் கணக்குப்புள்ளயா வச்சிருக்காரு செட்டியாரு.”
“எனக்கு
நாடகம்னா உயிருங்க. அக்கம்பக்கத்துல பதினெட்டு பாளையத்துலயும்
எங்க நாடகம் நடந்தாலும் போய் பாத்துட்டு வந்துருவங்க. சின்ன வயசிலேர்ந்து அப்பிடி ஒரு பழக்கம். ஒரு காலத்துல
எங்க அப்பா தோள்மேல தூக்கி வச்சிகினு போயி காட்டி காட்டி பழக்கப் படுத்திட்டாரு. இப்ப உடமுடியல.”
“எந்த
ஊரு நீங்க?”
“இங்கதாங்க. பக்கத்துல. சிறுவந்தாடு. ஊருல
இப்பலாம் நாடகம் கெடயாதுங்க. ரெண்டுமூனு வருஷமாவே ரெக்கார்ட் டான்ஸ்தான். ஒன்னொன்னும் திங்குதிங்குனு குதிக்கும். அதப் போயி என்னன்னு பாக்கறது சொல்லுங்க. இந்த ஊருலதான்
இன்னும் நாடகம் இருக்குது. அதனால ராத்திரி
தங்கி பாத்துட்டுதான் போவன். ஐயா நடிப்பு
வசனம்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும்.”
அவர்
ஆனந்தத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தார்.
“ஐயா
குரல் எனக்கு ரொம்ப புடிக்கும். நல்ல வெண்கலக்குரல். அவ்வளவு தெளிவு. சுத்தம். நடையில
கூட எத்தனை வகை. சோகத்துல
ஒரு நடை. சந்தோஷத்துல
ஒரு நடை. கசப்புல
ஒரு நடை. நான்
இருந்தா இப்பிடித்தான் வளவளன்னு பேசிட்டே இருப்பன்.
கெளம்பறேங்க. சொல்லச்சொல்ல வந்துட்டே இருக்குது.”
அவர்
கைகுவித்து வணங்கிவிட்டுச் சென்றார். புன்னகையோடு அவர்
செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தார் அண்ணன். திடீரென “சோமு, அவர கொஞ்சம் கூப்புடு. நம்ம நாடகத்துல
அவருக்கு ஒரு ரோல் தரலாம்” என்றார். அப்போதுதான்
அவர் படியிறங்கி கடைவாசலைத் தாண்டி மின்கம்பத்தோரம் நிறுத்தியிருந்த சைக்கிளுக்கு அருகில் சென்றிருந்தார். அவர்
பெயர் நினைவுக்கு வரவில்லை. சட்டென்று கைகளைத்
தட்டி ஓசையெழுப்பினேன். அதைக் கேட்டதும் அவர் திரும்பிப் பார்த்தார். ”என்னையா?” என்பதுபோல மார்பில் விரல்குவித்து சைகையால் கேட்டார். “வாங்க, உங்களத்தான்” என்று
அழைத்தேன். அவர் வேகமாக
படியேறி வந்தார்.
“ஒரு
சின்ன ரோல் தரேன். நீங்க செய்வீங்களா?” என்று அவரிடம் கேட்டார் அண்ணன். அவருக்கு முதலில்
எதுவும் புரியவில்லை. புரிந்ததும் மகிழ்ச்சியில்
தடுமாறினார். “எனக்கு முன்னபின்ன பேசி பழக்கமில்லயே” என்றார்.
“அதெல்லாம்
நான் கத்துக் குடுக்கறேன். நீங்க செய்றீங்களா? ரெண்டு சீன்தான்.”
அவர்
தயக்கமும் மகிழ்ச்சியும் கலந்த நிலையில் தலையசைத்தார்.
“சரி, சாய்ங்காலமா வேலய முடிச்சிட்டு போவும்போது இங்க வாங்க. என்ன வசனம்ன்னு
சொல்றேன்.”
அவர்
மீண்டும் கைகுவித்து வணங்கிவிட்டுச் சென்றார்.
“என்னண்ணே, சட்டுனு இவர புடிச்சிட்டீங்க?”
“இப்படி
ஒரு உற்சாகமான ஆளத்தான் நாம பயன்படுத்திக்கணும் சோமு. நல்ல கற்பூர
புத்தி.”
ஒரு மாட்டுவண்டி வாசலில் வந்து நின்றது. வண்டியை ஓட்டிக்கொண்டு
வந்தவர் ஒவ்வொரு மூட்டையாக தூக்கிக்கொண்டு வந்து உள்ளே கொண்டுபோய் வைத்தார். ஐந்து மூட்டைகளும்
இறக்கப்பட்ட பிறகு வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு வந்தவர் பையிலிருந்து பணத்தை எடுத்து சோமுவிடம் கொடுத்துவிட்டு ”அரிசி வேற, தவிடு
வேற தனித்தனி சாக்குல புடிச்சி கட்டுகட்டி வச்சிடச் சொல்லுங்க. நம்ம வண்டிக்காரனுக்கு
செக்குமோட்டுக்கு போவற வேல இருக்குது. திரும்பி வரும்போது
எடுத்துக்குவான்” என்று சொன்னார்.
புறப்படும்போது
தயக்கமாக அண்ணன் பக்கமாகப் பார்த்தபடி “தம்பி நாடகக்காரர்தான?” என்று கேட்டார். “ஆமாம்” என்றதும் “ட்ராமா
குழு எறங்கனாதான திருழாவுக்கே ஒரு கள வரும். நம்ம ஊட்டு
பொம்பளைங்களுக்கு ஒங்க ட்ராமான்னா ரொம்ப விருப்பம். போன வருஷம்
போட்ட ட்ராமா வசனத்த அப்பப்ப சொல்லிட்டே இருப்பாங்க. என்னமோ நெலானு ஒரு நாடகம் போட்டிங்களே, அதுல வந்த பாட்டுலாம் அவங்களுக்கு மனப்பாடமா தெரியும். அதப் பாடிட்டுதான்
தெனமும் பெருக்கறது, கூட்டறது, காய் வெட்டறதுலாம். ஐயாவ பாத்தேன்னு ஊட்டுல போய் சொன்னா, எல்லாருமே சந்தோஷப்
படுவாங்க” என்று சொல்லிவிட்டுச்
சென்றார்.
சிறிது
நேரத்துக்குப் பின் “ஒங்க ஆயா
என்ன பாக்கும்போதுலாம் ஒரு விஷயம் சொல்லும்ண்ணே” என்று பேச்சைத் தொடங்கினேன்.
“என்ன
சொல்லும்?”
‘நீங்க
கோவிச்சிக்க மாட்டீங்கன்னா சொல்வேன். இல்லைன்னா அந்தப்
பேச்ச இப்படியே விட்டுடறேன்”
“என்ன
சோமு புதிர் போடற? சொல்லு. ஏன்
மென்னு முழுங்கற?”
“ஆயாவும்
தாத்தாவும் இங்க இருக்கறாங்க. நீங்க பெங்களூருல தனியா இருக்கறீங்க. ஒங்களால இங்க வரமுடியாது. அவுங்களால அங்க வரமுடியாது. ஒங்களுக்கு ஒரு தொணய தேடி வச்சிட்டா நிம்மதியா இருக்கும்ன்னு நெனைக்கறாங்க. நீங்க அந்த பேச்ச எடுத்தாவே எரிபுரினு பேசறிங்களாம். அதான் ஆயா என்ன பேசுன்னு சொன்னாங்க.” ஒரு வழியாக நானும் இழுத்து இழுத்து சொல்லிமுடித்தேன்.
ஒருகணம்
கழித்து அண்ணன் “எனக்கு ஒன்
மேலயும் கோவமில்ல. அவுங்க மேலயும்
கோவமில்ல சோமு. ஏற்கனவே அவுங்கதான
ஒரு தொணய தேடி வச்சாங்க. மங்களம் மாதிரி
ஒரு பொண்ண உலகத்திலயே பார்க்க முடியாது. உண்மைய சொல்லணும்ன்னா
எனக்கு நிதானத்தயும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் சொல்லிக்குடுத்து பக்குவப்படுத்தனதெல்லாம் மங்களம்தான். மங்களம் இல்லைன்னா நான் வெறும் கூழாங்கல்லா போயிருப்பன். என் நேரமோ, என் துரதிருஷ்டமோ, பிரசவ நேரத்துல அவளும் போயிட்டா, அவளோட சேர்ந்து
கொழந்தயும் போயிட்டுது. மங்களத்துக்கு குடுத்த இடத்த வேற ஒரு ஆளுக்கு நான் எப்பிடி தரமுடியும், சொல்லு. ஒருத்தனுக்கு ஒரு
வாழ்க்கையில ஒரு பொண்டாட்டிதான் சோமு. ரெண்டாவது பொண்டாட்டிங்கற
பேச்சுக்கே எடமில்ல. ஏதோ பாசத்தால
ஆயா சொல்லுதுன்னு நான் தப்பு பண்ணமுடியுமா?”
கனிந்த
குரலில் அண்ணன் சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவர் எண்ண ஓட்டத்தைப் புலப்படுத்தியது. தொடர்ந்து அவரை அந்த நினைவுகளில் நீடிக்கவிடுவது அவரைத் துயரத்தில் ஆழ்த்திவிடக் கூடுமோ என்று அச்சமாகத் தோன்றியது. அவரை மீட்டெடுக்கும்
விதமாக ”விழுப்புரத்துல தேவிகானு ஒரு
ஆர்ட்டிஸ்ட் சொன்னனே,
போய்
பார்த்துட்டு வந்துடலாமாண்ணே” என்றேன். அண்ணன் முகம்
உடனே மலர்ந்துவிட்டது.
“இப்பவே
போலாம் சோமு. நானே உன்ன
எப்படி கேக்கறதுனு யோசிச்சிட்டிருந்தேன்.”
நான்
மில்லுக்குள் சென்று ஆட்களுக்கு வேலைகளைச் சொல்லிவிட்டு கீற்றுக்கொட்டகைக்குள் நின்றிருந்த புல்லட்டை வெளியே எடுத்துவந்து நிறுத்தி, துடைத்தேன். போதிய
பெட்ரோல் இருக்கிறதா என ஒருமுறை டேங்கர் மூடியைத் திறந்து பார்த்துக்கொண்டேன்.
“ஸ்க்ரிப்ட்
எதுக்குண்ணே?”
“கையில
இருக்கட்டுமே. பாத்தா அவுங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்ல.?”
வண்டி
கிளம்பியது. நான் அக்கணமே அந்த நாடகம் மேடையில் நிகழ்த்தப்படுவதுபோல நினைத்துக்கொண்டேன். எனக்கு கொடுக்கப்படும் சிறிய பாத்திரத்தை சரியாகச் செய்து அண்ணனிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்து அம்மாவுக்கும் மனைவிக்கும் பிடிக்கும் வகையில் இருக்கவேண்டுமே என்னும் பதற்றமும் அக்கணத்திலேயே எழுந்தது.
ரயில்வே
காலனியில் ஆறு தெருக்கள் இருந்தன. பல இடங்களில்
விசாரித்தபிறகு சாலையோரத்தில் இஸ்திரி போடும் வண்டியை நிறுத்தியிருக்கும் ஒருவர் வழி சொன்னார். அது ஆங்கிலோ
இந்தியக் குடும்பங்கள் வசிக்கும் இடம். அவர்கள் தம்
வீடுகளை இரு பிரிவுகளாக்கி, ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். தேவிகாவின் வீடு அப்பகுதியில் இருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் நாங்கள் அந்த இடத்தில் ஆரம்பத்தில் விசாரிக்காமல் கடந்துபோயிருதோம்.
நாங்கள்
வண்டியை அந்த வீட்டில் நிறுத்தியபோது ஒரு பாட்டி முறத்தில் முருங்கைக்கீரையை வைத்துக்கொண்டு ஆய்ந்துகொண்டிருந்தார். ஈச்சரில் ஒரு தாத்தா உட்கார்ந்திருந்தார்.
“இங்க
ஆர்ட்டிஸ்ட் தேவிகான்னு………” என்று இழுத்தேன்.
“இந்த
வீடுதான். நீங்க?” என்று
கேட்டாள் ஆயா. எங்கள்
இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள்.
“நாங்க
வளவனூருலேந்து வரோம்மா. நான் பத்மாவதி
ரைஸ்மில் ஒனர். ஒரு நாடகம்
விஷயமா ஆர்ட்டிஸ்ட பாக்கணும்”
அதற்குள்
எங்கள் பேச்சுச்சத்தம் கேட்டு ஒரு பெண் வெளியே வந்தாள். முப்பத்தைந்து வயதிருக்கும். நல்ல பொலிவான முகக்களை. “யாருங்க?” என்று கேட்டாள்.
நாங்கள்
சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொண்டோம். அண்ணனிடமிருந்து நாடகப்பிரதியை வாங்கி ஒருமுறை புரட்டிப் பார்த்தாள்.
“மாடப்புறாக்கள்
ட்ரூப்ப ஏன் கலைச்சிட்டாங்க?” ஒரு உரையாடலைத் தொடங்கும் விதமாக நான் அவளிடம் கேட்டேன்.
“அதுவா
கலைஞ்சி போச்சி சார். எல்லாமே சினிமாமயமா
மாறிட்டுது. ஒரு நாளைக்கு நாலு சினிமா காட்டனாலும் மக்கள் பாக்க தயாரா இருக்காங்க. ஆனா ஒரே ஒரு மணி நேரம் நாடகம் பாக்க யாரும் தயாரா இல்லை. தானாவே வத்திப்
போவற கெணறுமாதிரி நாடகமும் வத்திப்போயிடுச்சி.”
“கனவு
மலர்ந்தது நாடகத்துல சுகுணானு ஒரு கேரக்டர் ரோல நீங்க பண்ணினா நல்லா இருக்கும். நல்ல லீட்
ரோல். நடிக்கறதுக்கு நல்ல
ஸ்கோப் உள்ள ரோல். அவசியமா நீங்க
வந்து நடிச்சி குடுக்கணும்.”
“விழுப்புரத்துலயே
இருந்தா பரவாயில்ல. கைக்குழந்தை இருக்குது. விழுப்புரத்துக்கு வெளியேன்னா எனக்கு கஷ்டம்.”
“உங்களால
மட்டும்தான் சுகுணா ரோல நல்லா செய்யமுடியும் மேடம். நாடகம் முடிஞ்சதும்
கனவு மலர்ந்தது புகழ்னு உங்களுக்கு பட்டப்பேரே வந்துடும்.”
அவள்
சிறிது நேரம் யோசித்தாள். மெல்லிய புன்னகையொன்று அவள் உதடுகளில் படிந்து மறைந்தது. “அம்மா, என்ன சொல்றீங்க? பாவம், வீடு தேடி
வந்து இவ்ளோ கேக்கறாங்க, என்ன சொல்லட்டும்” என்று கீரை ஆய்ந்துகொண்டிருந்த ஆயாவிடம் கேட்டாள். “போய்ட்டு வாடி, புள்ளய நான்
பாத்துக்கறேன். நீயும் அடுப்பயும் சுவத்தயும் எத்தன நாழிதான் மொறச்சி மொறச்சி பாத்துட்டிருப்பே” என்றாள் ஆயா. அதைக்
கேட்டு தேவிகாவின் முகம் மலர்ந்தது.
“நாளைக்கு
காலையில ரீடிங் வச்சிக்கலாம் மேடம். பஸ் ஸ்டாண்ட்
எறங்கி பத்மா ரைஸ் மில்னு கேட்டா யார் வேணும்ன்னாலும் சொல்வாங்க. ஒரு நூறு
மீட்டர் தூரம்தான்”
“சரி, வரேன். ஆனா தெனமும்
வரமுடியாது. நாளைக்கே என் வசனத்த ஒரு கேசட்ல பதிவு பண்ணி குடுத்திட்டிங்கன்னா நான் பாடம் பண்ணிடுவேன். நீங்க ஒன்னும் பயப்படவேணாம். ரிகர்சல் அன்னைக்கு நீங்களே தெரிஞ்சிக்குவிங்க.”
“கேசட்ல
பதிஞ்சி குடுத்துடலாம்ண்ணே. நம்மகிட்ட டேப்ரெக்கார்டர் இருக்குது” என்றபடி அண்ணனைப்
பார்த்தேன். அவரும் மெளனமாகத் தலையசைத்தார்.
”சரி, ஏதாவது அட்வான்ஸ் குடுத்துட்டு போனீங்கன்னா நல்லது.”
‘நாங்க
அவசரத்துல கெளம்பனதுல அப்படியே வந்துட்டம் மேடம். நாளைக்கி ஆபீஸ்க்கு
வருவிங்கல்ல. அப்ப குடுத்துடுவம் மேடம்.”
“ஒரு
நிமிஷம்” என்று சொல்லிவிட்டு
உள்ளே சென்ற தேவிகா இரு தம்ளர் நிறைய மோர் கொண்டுவந்து எங்களுக்குக் கொடுத்தாள். புதினாவும் ஒரு துண்டு பச்சைமிளகாயும் கலந்த ஐஸ் மோர். நாங்கள் மறுக்கவில்லை. வெயிலுக்கு அந்த மோர் இதமாக இருந்தது.
நன்றி
சொல்லிவிட்டு வெளியே வந்தபோது ஒரு பெரிய சுமை இறங்கியதுபோல இருந்தது.
“போற
வழியில கோலியனூருல லோகநாதனயும் பாத்து ஒரு வார்த்த சொல்லிட்டு போயிடுவோம்ண்ணே. இந்த பக்கத்து வேல முடிஞ்சிடும். கவிஞரையும் குருசாமியையும் சாய்ங்காலமாவோ ராத்திரியோ பாத்துடலாம்.”
கோலியனூரில்
கோயிலுக்குப் பக்கத்தில் லோகநாதனின் வீடு இருந்தது. ”போன வருஷம் வரைக்கும் நம்ம ஊருலதான் இருந்தாரு. அவரு ஊட்டுக்காரம்மாவுக்கு
இந்த ஊரு பால்வாடில வேல கெடச்சிருக்குது. அதனால ஊட்ட இங்க மாத்திகினு வந்துட்டாரு.”
வாசலில்
செருப்புகளைக் கழற்றிவிட்டு கோவிலைப் பார்த்து வணங்கிய பிறகு வீட்டுக்கதவைத் தட்டினேன். “லோகநாதா லோகநாதா” என்று அழைத்து
முடிப்பதற்குள் அவனே வந்து கதவைத் திறந்துவிட்டான். எங்கள்
இருவரையும் பார்த்து அவன் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டான். “வாங்க வாங்க, ராமலட்சுமணரு மாதிரி
ரெண்டுபேருமா வந்திருக்கிங்க, என்ன விஷயம்?” என்று கேட்டான்.
அண்ணன்
சுருக்கமாக விஷயத்தைச் சொன்னார். “அண்ணே, இதுக்குப் போயி
நீங்க எதுக்குங்கண்ணே வரணும். சொல்லி உட்டா
போதாதா? காலையில பத்து
மணிக்கு நான் வரேண்ணே” என்று மகிழ்ச்சியுடன்
சொன்னான்.
மில்லுக்குத்
திரும்பும்போது மணி ஒன்றரையைத் தொட்டுவிட்டது. அண்ணனை மேசைக்கு அருகில் உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று விவரங்களைத் தெரிந்துகொண்டு திரும்பினேன். அண்ணன் தன் கையிலிருந்த கையெழுத்துப் பிரதியை புரட்டிக் கொண்டிருந்தார்.
“சோமு, இந்த ஸ்க்ரிப்ட்ட பாத்து கார்பன் பேப்பர் வச்சி யாராச்சும் எழுதி குடுப்பாங்களா? கையில ரெண்டு மூனு பிரதியா இருந்தா நல்லதுதானே? அந்த தேவிகா பொண்ணுக்கு கேசட்ல போட்டு குடுக்கறதவிட புத்தகமாவே குடுக்கலாம்.”
”நம்ம
ராமதாஸ் ஐயர் பொண்ணு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் வச்சி நடத்தறாங்கண்ணே. அங்க கேட்டுப் பாக்கறேன். அழகா டைப்
அடிச்சிடலாம். சிலர் கையெழுத்து சிலருக்கு புரியும். சிலருக்கு புரியாது. எதுக்கு அந்தப் பிரச்சின?”
“சாய்ங்காலம்
ஏரிக்கரை பக்கம் போவும்போது கேட்டுருவமா?”
”சரிங்கண்ணே. ராத்திரி சாப்பாடு நம்ம வீட்டுல வச்சிக்கலாம்ண்ணே. ஆயாகிட்ட சொல்லிடுங்க. சரியா?”
“அதெல்லாம்
எதுக்கு சோமு?”
“நீங்க
சும்மா இருங்ணே. நீங்க வந்து
எங்க ஊட்டுல சாப்புடறது எங்களுக்கு ரொம்ப கெளரவம்ண்ணே.”
“சரி சரி. வரேன்.”
பேச்சு
சுவாரசியத்தில் நான் ஒருகணம் வாசல் பக்கம் கவனிக்க மறந்துவிட்டேன். சோமு சோமு என்று படியேறி உள்ளே வந்தபிறகுதான் நான் அவரைப் பார்த்தேன். கோயில் தர்மகர்த்தா.
“வாங்க வாங்க” என்று எழுந்து வரவேற்றேன். “என்ன சோமு, கோயில் பக்கம்
வரவே இல்லை?” என்றார் அவர்.
“காலையில அண்ணன்
வந்தாரு. நாடகம் விஷயமா
பார்ட்டிய பாத்து பேசறதுக்காக விழுப்புரம் வரைக்கும் போய்ட்டு இப்பதான் வந்தம்.”
அவர்
அப்போதுதான் என் பக்கத்தில் அமர்ந்திருந்த வேலாயுதம் அண்ணனைப் பார்த்தார். “அடடே, வேலாயுதமா, எப்பப்பா
வந்த பெங்களூருலேந்து? நல்லா இருக்கியாப்பா?” என்று நலம் விசாரித்தார். ”கண்ணு
கொஞ்சம் சாலேஸ்திரம்பா. வெயில்லேந்து உள்ள வந்ததும் ஒன்னும் தெரியல. நீ உக்காந்திருந்தத
கவனிக்கலை” என்றார்.
“இருக்கட்டும் சார். கோவில் வேலைலாம் எப்பிடி போயிட்டிருக்குது?”
“இன்னைக்குதான் வெள்ளை
அடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. வசூலுக்கு வேற போவணும். இந்த வெயில்
வேற மண்டய பொளக்குது. என்ன செய்யறது?” என்றபடி துண்டையெடுத்து கழுத்தையும் முகத்தையும் துடைத்துக்கொண்டார்.
“சோமு,
சித்த வா இப்பிடி” என்றபடி படியிறங்கி
வாசல்பக்கம் சென்றார் தர்மகர்த்தா. “ஒரு நிமிஷம்’ என்று அண்ணனிடம்
விரலைக் காட்டியபடி நானும் அவருக்குப் பின்னாலேயே நடந்தேன்.
கதவைத்
தாண்டியதும் அங்கிருந்த புல்லட் மீது கையை வைத்தபடி “என்ன சோமு, நாம இன்னும் எது எது எந்தெந்த தேதியிலனு தேதி கூட குறிக்கலை. அதுக்குள்ள அந்த
தம்பிய வரவச்சிருக்கே?” என்று சலித்துக்கொண்டார்.
“தேதியில என்ன
மாற்றம் வந்துடப் போவுது தலைவரே. ஒன்னு ரெண்டாவது
வெள்ளியா இருக்கும், இல்ல மூனாவது
வெள்ளியா இருக்கும். அவ்ளோதான?”
“எதுவா இருந்தாலும்
உறுதி பண்ணாம அந்த தம்பிக்கு எப்பிடி தகவல் போச்சு?”
“சித்திரமாசம் திருழானு
அவருக்கு தெரியாதா என்ன? நான் எதுவும்
சொல்லலை தலைவரே. அவுராதான் வந்திருக்காரு”
“அந்த தம்பி
வரட்டும் சோமு. நான் வேணாம்னு
சொல்லலை. அந்த தம்பி
நாடகம் போடற திட்டத்துலதான வந்திருப்பாரு”
“ஆமா தலைவரே. இந்த திருழாவுக்காவே அண்ணன் புதுசா ஒரு நாடகம் எழுதி வச்சிருக்காரு. கனவு மலர்ந்தது.”
“அதுதான் நான்
சொல்ல வர விஷயம். மோட்டுத்தெரு ஆளுங்க
நாடகம் வேணாம்ன்னு ஒத்த கால்ல நிக்கறானுங்க. போன வருஷமே அவனுங்க ஆளுங்க வந்து என்கிட்ட பேசனானுங்க. நான் ஏதோ கதையை சொல்லி அந்த பேச்ச அப்படியே அழுத்திட்டன். ஆனா இந்த தரம் அவனுங்க அப்பிடி உடறதா இல்ல. புடிவாதமா இருக்கானுங்க. என்னால அவனுங்கள எதுத்து பேச முடியலை. நம்ம கோயில்
வட்டாரத்துல அஞ்சி வார்டு மெம்பர்ங்க இருக்கானுங்க. அதுல நாலு பேரு நாடகம் வேணாம்ங்கறான். நான் என்ன செய்யமுடியும்? நீயே சொல்லு.”
“நாடகம் வேணாம்ன்னா?”
“நாடகத்துக்கு பதிலா
ரெக்கார்ட் டான்ஸ் வைங்கன்னு சொல்றானுங்க. சுத்துபட்டுல இருக்கற பதினெட்டு பாளையத்துலயும் ரெகார்ட் டான்ஸ்தான நடக்குது. அதுமாதிரியே இங்கயும்
நடத்துங்கன்னு ஒத்த கால்ல நிக்கறானுங்க.”
எனக்கு
உடல் நடுங்கத் தொடங்கியது. “இப்பிடி சொன்னா எப்படி தலைவரே, அண்ணன் ரொம்ப
நம்பிக்கையா புது நாடகம் எழுதி எடுத்துட்டு வந்திருக்காரு..”
“நான் என்ன
செய்யமுடியும் சொல்லு? நா ஒத்த
ஆளு. அவனுங்க
முன்னால என்னால பேசமுடியல. யாரோ வனஜாவோ
கிரிஜாவோ நெட்டப்பாக்கத்துக்காரியாம், அவளுங்களுக்கு அட்வான்ஸ் குடுத்துட்டு வரம்னு சொல்லி கெளம்பி போயிட்டானுங்க.”
“அப்ப அண்ணன்?”
“நீயே ஏதாச்சிம்
சொல்லி ஆயக்கட்டி அனுப்பற வேலய பாரு. நான் கெளம்பறேன். அந்த பெய்ண்ட் அடிக்கறவன் இன்னும் கொஞ்சம் சுண்ணாம்பு கேட்டான்.”
தலைவர்
வேகமாக திரும்பிச் சென்று சுவரோடு சாய்த்து நிறுத்தியிருந்த சைக்கிளில் ஏறி வேகமாகச் செல்வதை குழப்பத்தோடு பார்த்தபடி நின்றுவிட்டதில் நேரம்
போனதே தெரியவில்லை. அண்ணனை எப்படி எதிர்கொள்வது என்று புரியாத சங்கடத்தோடு படிக்கட்டை நோக்கித் திரும்பிய கணத்தில் அண்ணன் படிக்கட்டுகளில் இறங்கிக்கொண்டிருந்தார். தர்மகர்த்தாவின் வார்த்தைகள் அவருக்குக் கேட்டிருக்கக்கூடும் என்பதில் எனக்கு சந்தேகமே எழவில்லை.
“அண்ணே…”
என்
நெஞ்சு அடைப்பதுபோல இருந்தது. சொல் எழவில்லை. நான் நீட்டிய கைகளை அண்ணன் பிடித்துக்கொண்டார். விழியோரம் ஒரு துளி கண்ணீர் திரண்டுவிட மீண்டும் “அண்ணே…” என்றேன்.
அண்ணன்
ஒரு கதாநாயகனுக்கே உரிய நேர்த்தியான புன்னகையோடு கைகளை விடுவித்துக்கொண்டு திரும்பினார். சற்றே சோர்வு படிந்த அவர் நடையைப் பார்த்தபடி நின்றிருந்தேன் நான்.
(24.07.2020 சொல்வனம் இணைய இதழில் வெளியான
சிறுகதை)