Home

Monday, 17 August 2020

பரிவு - சிறுகதை

 கரையில் ஏறி நின்றான் வீரன்.

ஆழங்கால் மதகில் சடேர்சடேர் என்று அலைகள் மோதின.

மதகின் பெருத்த கம்பிகள் அதிரஅதிர நுரைகள் சிரித்தன.

பெண்ணையாற்றில் பெருகிப் பொங்கிய வெள்ளம் ஆழங்காலில்

புகுந்து ஏரிக்குள் புரண்டது. ஈரம் மிதந்த காற்றின் விசிறலில்

குளிர் பெருகியது. கால் இருள் விலகிய அதிகாலையில்

கண்ணுக்கெட்டிய தூரம் தண்ணீர் புரண்டது. தாவித்தாவி ஓடும்

தண்ணீரின் பாய்ச்சல் மடங்கி நெளியும் அலையின் நுரைகள்.

சீரான இரைச்சலில் மனமிழந்து நின்றான் வீரன். அவன்

தோளில் வாகான பெரிய கோடாலி.


சரிவில் பெரிய நாணல் புதர். நடுவில் பனைமரங்கள்

காலைக்காற்றில் சுழன்றுசுழன்று நெளிந்தன. நல்ல காற்று.

கண்ணுக்குத் தெரிந்த மட்டில் குட்டை மரங்களும் செடிகளும்

அடர்ந்து கிடந்தன. விடியாத இருளில் அவற்றின்நிறம் கவர்ச்சி

காட்டியது. நெடுகவும் காற்றின் நெளிவு. நெடுகவும் புதர்களின்

வளைவு. விசுக்விசுக்கென்று மடங்கிமடங்கி ஓடியது.

தலையாட்டியது. பறக்கும் இலைகள்போல காக்கைக்கூட்டம்

வானில் சுற்றியது. யாருமற்ற தனிமையில் சூரியன் மேலேறிச்

சிவந்தது. ஒரு நூலைப் பிடித்துக் கொண்டே இறங்குகிறவன்

மாதிரி ஏரிக்குள் எகிறிக் குதித்தான் வீரன்.


வீரன் ஒரு மீனைப்போல நீரில் வளைந்துவளைந்து

நீந்தினான். ஒரு கல்லைப்போல அடிமண்ணைத் தொட்டு

அம்புபோல மேலே வந்தான். ஒரு தெப்பம் மாதிரி மிதந்தான்.

பாளம்பாளமான அவன் மார்பின் பிளவுகளில் தண்ணீர்

பூப்போலச் சுழன்றது. முழுவெளிச்சமும் தரையைத்

தொடும்போது கரைக்கு வந்தான். நத்தையும், அட்டையும்

செத்தையும் சருகும் தழைந்து மின்னியது கரை.


கரையையொட்டி நடந்து வருகிற தயிர்க்காரப் பெண்களின்

பாட்டு காற்றில் மிதந்தது. பட்சிகள் சத்தம் மாத்திரமே ஒலிக்கிற

நேரத்தில் முன்னும்பின்னும் இழுத்துக் குறைத்துச் சிதறுகிற

பாடலில் காற்று குளிர்ந்தது. குரல் இனிமையில் தன்னை இழந்த

வீரன் பெண்கள் பக்கம் திரும்பினான். வீரனின் ஆகிருதியான

தோற்றத்தைக் கண்டதும் பெண்களின் பாட்டு நின்றது.

 பாடுங்க, ஏன் நிறுத்திட்டிங்க? நல்லா இருக்குது

எந்த ஊருயா நீ?’

இந்த ஊருதா

இல்லியே

ஊரு பேரு சொன்னாதான் பாடுவீங்களா

பாட்டும் இல்ல. கூத்தும் இல்ல. வழிய உடுயா. வளவனூர்

போயாவணும் நாங்க

அது எந்த ஊரு?’

அதோ அந்தக் கர

இந்தக் கரைலேந்து அந்தக்கரை போவத்தான் பாட்டா?

சரி பாடிக்னே போங்க. நானும் வரன்

பெண்கள் சிரித்தபடி நடக்கத்தொடங்கினார்கள்.

தடமெங்கும் மக்கிப்போன இலைகளில் பாதம் உரசும் சத்தம்

இசையாக வளர்ந்தது. மீண்டும் பாட்டுத் தொடங்கியது.

பாட்டில் அவர்கள் காலம்காலமாக வாழ்கிற வாழ்வின் கசப்பு

இருந்தது. முள்மரங்கள், பூ, புதர், செடி எங்கும்

நுழைந்துநுழைந்து சுழன்றது பாட்டின் துக்கம்.

காலை வெயிலில் பனிமுத்து உடைந்து சிதறியது.

வெளிச்சத்தின் விசிறலில் மரங்கள் மினுமினுத்தன.


தயிர்க்காரிகள் நடக்கநடக்க பின்னாலேயே தொடர்ந்து

கொண்டிருந்தான் வீரன். களைப்பின் காரணமாக பெண்கள்

பாட்டை நிறுத்தியதும் உற்சாகம்கொண்டு வீரன் பாடினான்.

லங்காபுரிக்குக் குரங்குகள் கூடிப் பாலம் கட்டித் தந்த பழைய

வசனப்பாட்டு. ராகத்தோடு இழுத்து இழுத்துப் பாடினான்.

சருகு நக்கத் தாவினான். தயிர்க்காரப் பெண்களுக்கு

முன்னால் போகக் கோடாலியைக் குறுக்கில் பிடித்துபாறை

சுமக்கிற குரங்குமாதிரி நடந்து காட்டினான்.லட்சம் லட்சம்

குரங்களாயும் குறுக்கும் நெடுக்கும் தாவிப் பாறைகள் சுமந்து

துள்ளுவதாகவும் கட்டி நிற்கிற பாலம் மேல் குதித்துத்

தாவுகிறதாகவும் பல ரூபங்கள் காட்டினான். பாவம் காட்டி

பாட்டில் மிதந்தான்.


அதிசயித்து உட்கார்ந்தார்கள் பெண்கள். அவர்கள்

கண்களில் ஆச்சரியம் உறைந்திருந்தது. கொஞ்சம் உடம்பு

நடுங்கியது. மார்பைத் தொட்டு தெகவத்தை நினைத்துக்

கொண்டார்கள். ஏரியும் இல்லை தண்ணீரும் இல்லை.

வானமும் இல்லை பூமியும் இல்லை என்கிற மாதிரி

பிரம்மாண்டமானதாக இருந்தது ஆட்டம். பாலத்தில் இருந்து

இறங்கி வருவதுமாதிரி நடந்து வந்தான் வீரன். மாறாத சிரிப்பு.

சற்றே பெண்மை ஏறிய முகத்தில் சந்தனம் பூசியமாதிரி இருந்தது.

தோளிலேயே இருந்தது கோடாலி.


போதும் போதும் ஆட்டக்காரா. அனுமாரே வந்து

ஆடனமாதிரி இருக்குது, ஒக்காரு. இப்பவாச்சும் சொல்லு. எந்த

ஊரு நீ?’

இந்த ஊருதான்

சிரிப்பு.

இன்னா சிரிப்புகயா இது? மர்மச்சிரிப்பு?’

மீண்டும் சிரிப்பு.

இந்தா சாப்புடு


தூக்குவாளித் தட்டில் அள்ளிஅள்ளி பழைய சோறும்

துண்டு மீனும் வைத்து நீட்டினாள் ஒருத்தி. ருசித்து ருசித்துச்

சாப்பிட்டான். இந்தா இதையும் போட்டுக்கஎன்று

ஆளாளுக்குப் பெண்கள் நீட்டினார்கள். சிரித்துக்கொண்டே

வாரியுண்டான். கொஞ்சநேரத்துக்குப் பின்பு மண்குடுவையில்

மோர் குடித்தான்.


களைப்பாறிய பெண்கள் தலைச்சுமையோடு மீண்டும்

நடந்தார்கள்.

எவ்ளோ தூரம் வளவனூரு?’

ஏரிக்கு உள்ள போனா ரெண்டு மைல்தான். சுத்திம்போனா

ஆறு மைலு. வருசம் பூரா தண்ணி ஓடுது. கடல் மாதிரி

பொங்குது பாரு. கரைத்தண்ணில காலு வகக்கவே நடுங்குது.

நடக்க சுலபம்னு நெனச்சா,  ஊருக்கு தண்ணி வேணும்ல்லியா?

அந்த ஆத்தா தண்ணிய மட்டும் கொறயில்லாம குடுத்திருக்கா.

போவ ஆறு, வர ஆறு மைல்னு தெனம் பன்னெண்டு மைலு

நடந்துதான் போயாகணும்.

பன்னெண்டு மைலா...?’

படி தயிருக்குப் பாதிபடி நெல்லு. பானத் தயிரு வித்தா

மரக்கா தேறும். நடயப் பாத்தா வயிறு நெறயுமா...?

அப்புறம் பெண்கள் பாட்டு அவன் காதுக்குள்

இறங்கவில்லை. மனசு லயிக்கவில்லை. இருட்டுக்குகையில் வழி

தேடுகிற மாதிரி யோசித்தான். பரிவு கொண்ட மனம் உருகியது.

பேச்சில்லாமல் நடந்தான்.

வயிறு நனஞ்சதும் தொரைக்கு ஆட்டம் அடங்கிடுச்சா...?’

பெண்களின் கேள்வி கூட அவனை உலுக்கவில்லை. ஊர்

எல்லையில் உட்கார்ந்து கொண்டான். பெண்கள் அவனை

ஆன மட்டும் சீண்டிப் பார்த்து விட்டு பேச்சை

வரவழைக்கமுடியாமல் தயிர் விற்கப் போனார்கள்.

_

திடுமென உணர்ச்சிவசப்பட்டு எழுந்தான் வீரன்.

சரக்சரக்கென்று திரும்பி கரைமேல் நடந்தான். கரையோரம்

நிற்கிற காட்டைக்கண்டு உற்சாகத்தில் சிரித்தான். பாதி ஏரியில்

விலகி காட்டுக்குள் இறங்கி நடந்தான். காலடிபட்ட சருகுகளின்

சத்தம் வருக வருக என்று அழைக்கிறமாதிரி இருந்தது.

அடர்த்தியான இலைகளுடன் எட்டுத் திசைகளிலிலும்

கிளைகளை நீட்டித் தலைகவிழ்ந்த பெண்மாதிரி நின்றிருந்தது

ஒரு மரம். இடுப்புத்துண்டை வரிந்து கட்டிக்கொண்டு வீரன்

ஆவேசத்துடன் கோடாலியை ஓங்க, முதல் வெட்டு கிளையில்

பதிந்தது. இலையும் பூவும் சிதறின. தொட்டதில் பூரித்தமாதிரி

மரம் சிலிர்த்தது. மாறிமாறி வெட்டினான் வீரன். காலைச்

சூரியன் மேலே ஏறிச் சரியத் தொடங்குகிற வரைக்கும் வெட்டு

நிற்கவில்லை. னச் னச் என்று பச்சை மரத்தில் வெட்டுகள்

இறங்கின. தொடர்ச்சியான வெட்டுகள் நரநரவென்று எழுகிற

சிரிப்பொலி மாதிரி இருந்தது. ஒவ்வொரு வெட்டுக்கும் ஒரு

பிடி செதில்கள் பிளந்து சிதறின. ஒரு பிடி தூள் சிதறியது.

துண்டான கிளைகள் சுற்றிலும் கிடந்தன.


திரும்பிப் போகிற கூலி ஜனங்கள் ஜேஜே என்று

கரையெங்கும் நின்று வேடிக்கை பார்த்தது. அசராமல் வெட்டிச்

சாகக்கிற அவன் தேகக்கட்டில் பதிந்த கண் எடுக்காமல்

அதிசயித்துக் கிடந்தது. திரும்பி வந்த தயிர்க்காரப்

பெண்கள்தான் அடையாளம் சொன்னார்கள். பக்கத்தில்

சென்று ஒருத்தி கூப்பிட்டாள்.

இங்க வா தொர

கோடாலியுடன் திரும்பினான் வீரன்,

எதுக்கு மரத்த வெட்டற?’

சிரிப்பு.

மண்ணிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உடம்பின்

வேர்வையை வழிந்து உதறினான் வீரன். கோயில் லிங்கம்போல

கருத்த தேகம் மின்னியது. உருண்ட தோளில் நரம்பு

புடைத்திருந்தது. தசைமடிப்பில் கட்டுக்கட்டான ஏற்றத்திலும்

இறக்கத்திலும் மரத்தூள்கள் படிந்து மஞ்சள் பூசிய மாதிரி

இருந்தது.

என்ன செகற தொர, சொல்லு.

சிரிப்பு.

இந்தா இந்த மோரக்குடி

பானையில் மிச்சமான மோரை ஊற்ற வாங்கிக் குடித்தான்

வீரன்.

என்னமோ செய்யி. ஊர்க்காரங்க உட்டுவச்சா சரி.

பெண்களும் மற்றவர்களும் திரும்பி நடந்தார்கள். இருள்

மெல்ல இறங்கி அங்கேயே படுத்துத் தூங்கினான் வீரன்.

ஏரித்தண்ணீர் சமுத்திரம்மாதிரி பொங்கிப்பொங்கி

இரைச்சலிட்டது.

_

சரியாப் போச்சி. ரெண்டு மரத்த சாச்சிட்டாப்ல. தொர

நல்ல வாட்டமான ஆளுதான்

மறுநாள் பெண்கள் முகவாயில் கைவைத்து

ஆச்சரியப்பட்டார்கள். விஷயம் தெரிந்து ஊர்ப்பெரியவர்

வந்துபார்த்தார். விசாரித்தார். அதட்டினார். மின்னல்

வெட்டியது மாதிரி ஒரு சின்னச்சிரிப்பு. அதோடு சரி.

அமைதியாக நின்றான் வீரன்.

சரியான கிறுக்குப்புடிச்ச பய. வெட்டனா வெட்டிட்டுப்

போறான் போங்கடா. ஒத்த ஆளு வெட்டியா காடு

கொறஞ்சிடும். காடா இது? ஆத்தா மடி. அள்ளஅள்ளக்

கொறையாத மடிடா. வெட்டிக்காஞ்சா வெறவாவும் உடு...

பெண்களுக்கு என்னவோ அவன்மேல் மரியாதை பிறந்தது.

அருகில் கூப்பிட்டு சோறும் மீன் துண்டும் மோரும்

கொடுத்தார்கள். எதற்கு இந்த பேசாத விரதம் என்று

ஆச்சரியப்பட்டார்கள்.

ஒத்த வேள சாப்ட்டுட்டு எப்டிய்யா இந்த வெட்டு

வெட்டற?’

சிரிப்பு.

நான்கு மரங்களைத் தள்ளினான். தழைகளைச் சீவித் தள்ளி

ஒதுக்கினான். அளவு வாரியாகக் கிளைகளைத் தள்ளினான்.

அடிமரத்தைத் தனியே உருட்டினான்,

தினமும் சோறு கொடுத்தார்கள் பெண்கள். ஒரே சிந்தனை

வயப்பட்ட மாதிரி வீரன் சளைக்காமல் வெட்டிக் கொண்டே

இருந்தான். இரவுகளில் அங்கேயே படுத்துக்கிடந்தான்.

_

இங்கே பாருங்கடி மரவாடில அடுக்கறமாதிரி அடுக்கி

வச்சிருக்கான்

சட்டம் சட்டமா பலக சீவி வச்சிருக்கற தினசு பாருடி

நேத்து பாத்தா பலக மாதிரி கெடந்தது. அதுக்குள்ள

எதஎதயோ சேத்து ஜோடிச்சி கள்ளுப் பீப்பா மாதிரி

ஆக்கிட்டான் பாருடி

ஏழு, எட்டு, ஒம்போது, பத்து. ஐயோ பத்துப்பீப்பா

பண்ணிட்டானே. இத வச்சி இன்னாடி செய்யப்போறான்...?’

மரத்துண்டுகளில் அளவு பார்த்தும் செதுக்கியும் வேலையில்

மூழ்கி இருந்தான் வீரன். எந்த சீமைலேந்து வந்திருக்கானோ?

புட்டுக்கு மண்ணு தூக்கன கடவுள் மாதிரி பழய சோத்துக்கும்

மோருத் தண்ணிக்கும் மாஞ்சி மாஞ்சி வெட்டறான்என்றது

ஜனம். ஊரு காட்டவெட்டறான் ஊமமாதிரி பாத்து

நிக்கலாமா? என்ன உடுங்க. ஆளயே துண்டு துண்டாக்கிடறன்.

உட்டுக்னே போனா இன்னிக்கி காட்ட வெட்டுவான். நாளக்கி

ஊட்டயும் இடிப்பான்என்று துடித்தது ஒரு இளம்வட்டம்.

கோழி முண்டம் மாதிரி கெடந்து துடிக்காதடா.. ஆளு

சாமான்யமா தெரியல. நல்லதா இருந்தாலும் சரி, கெட்டதா

இருந்தாலும் சரி. கடசியா பாப்பம்என்று அடக்கியது பெரிய

மனிதனின் பேச்சு. பெரிய மனிதன் பேச்சு கடவுள் பேச்சு.

ஒவ்வொரு வார்த்தையும் லட்சுமணக்கோடு. மீறும்போது

ஊரழியும், காற்றும் தண்ணீரும் குறைந்து நாசமாகும். சாபம்

வந்து சேரும். நீதியாலும் நேர்மையாலும் ஊர்காக்கும் சக்தி

பெரிய மனிதன். சாதி வித்தியாசமின்றி எல்லாரும் அவர்

பிள்ளைகள். எந்தக் காலத்திலும் ஒரு வார்த்தைக்கு

மறுவார்த்தை கிடையாது. போங்க போங்க. போக

அவுங்கவுங்க வேலயப் பாருங்கஎன்றார். ஜனங்கள்

கலைந்தார்கள். திரும்பிக்கூடப் பார்க்கவில்லை வீரன்.

வெட்டிக்கொண்டே இருந்தான்.


லட்சாதி லட்சம் கொரங்குச் சைனியம்

லங்கையை நோக்கித் தாவுதே  -ராவணன்

லங்கையை நோக்கித் தாவுதே.

கடலத் தாண்டப் பாலம் கட்ட

கல்லும் மண்ணும் சுமக்குதே - அட

கல்லும் மண்ணும் சுமக்குதே...


விடியலில் வீரனின் பாட்டு காற்றில் மிதந்தது. ஏரிச் சரிவில்

காடு கழனியெங்கும் மிதந்தலைந்தது. சிறிதும் பிசிறின்றியொலித்த

இனிமை ததும்பும் குரல் ஜனங்களை இழுத்தது. ஆதரவு

தொனிக்கும் அன்பின் அழைப்பு. ஆன்மாவில் நிரம்பி

தவிக்கவைக்கிற அழைப்பு. கிழக்குத் திசையில் மரங்களின்

தலைக்குமேல் மேகங்களின் ஊடே வெளிச்ச உருண்டை

உருளஉருள அவன் குரலின் குதூகலம் புரண்டுகொண்டிருந்தது.

கிராமத்தின் மடியில் கொத்து மலர்களைப்போல விழுந்தது.

தயிர்க்காரப் பெண்கள் அரக்கப்பரக்க நடந்து வந்தார்கள்.

பிள்ளைகள், இளைஞர்கள், கிழவர்கள், கிழவிகள் எல்லாரும்

ஓடிவந்தார்கள். சருகு படர்ந்த பாதை அதிரஅதிர நடந்தார்கள்.

கும்பலைக் கண்டு பறவைகள் அஞ்சிப் பறந்தன. ஏரித்தண்ணீர்

குமுறிக்கிடந்தது. அதிகாலை வெளிச்சத்தில் மார்பு மின்ன

தண்ணீரில் கால்கள் தாளமிட வீரன் பாடிக்கொண்டிருந்தான்.

காலுக்கடியில் ஒரு குழந்தைமாதிரி மிதந்துகொண்டிருந்தது

தெப்பம். ஒரு பெரிய படுக்கை போல. அகண்ட

பட்டுப்புடவையின் விரிவு போல. மின்னும் வெள்ளித்தட்டு

போல.

தெப்பம்...

முகவாயில் கைகுவித்து அதிசயித்துக் கூவினார்கள். கண்கள்

விரிய ஆச்சர்யப்பட்டார்கள். வார்த்தைகள் தடைப்பட்ட

மௌனத்தில் பொங்கினார்கள். சட்டென்று முன்னால் எட்டி

தெப்பத்தைத் தொட்டார்கள். வட்ட மிட்டு நிற்கிற ஜனங்களைப்

பார்த்து வீரனின் உதட்டில் புன்னகை நெளிந்தது. தேனை

வாரித் தெளித்த குரல் நின்றது.

பாட்டப் பாருடி, குளுர்காத்து மாதிரி

எத்தன ஒட்டாரமா பேசாம இருந்தான். எல்லாம் இத

செய்யத்தானா...?’

அன்னிக்கு ஆறும் ஆறும் பன்னெண்டு மைல் நடக்கறோம்ணும்னு

சொன்னதும் தெகச்சிப் போக நின்னானே, மகராசா, இத

செஞ்சிக் குடுக்ணும்னு முடிவு செஞ்சான் போல. கொஞ்ச

நஞ்சமான ஒழப்பா, கஷ்டமா, தனியாளா எவ்ளோ சிரமம்

அப்போதுதான் அவனை முழுக்கப் புரிந்துகொண்ட மாதிரி

உணர்ச்சி வசப்பட்டார்கள் ஊர்க்காரர்கள் நெகிழ்ந்து போன

பெரிய மனிதர் முன்னால் வந்து கட்டி

அணைத்துக்கொண்டார். நாலுபேர் உக்காருங்கஎன்று வீரன்

சொன்னதும் குழந்தைகளும், பெண்களும் ஆசையால்

உந்தப்பட்டு முன் வந்து தண்ணீரில் கால் வைத்ததும் தயங்கிப்

பின்வாங்கினார்கள். ரொம்ப தைரியசாலிகள் சிலர் மாத்திரம்

வந்து உட்கார்ந்தார்கள். தயிர்க்காரப் பெண்கள் சும்மாட்டுத்

துணியைக் கூடைக்குள் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

வளவனூர்க்குக் கூலிவேலைக்குப் போகிறவர்களுக்கு ஆனந்தமாக

இருந்தது. எங்க ஜனமே ஒனக்குக் கடமப்பட்டிருக்கு ராசாவே

என்று தழுதழுத்தார்கள். ஆயுள் பூரா எங்க கூடவே இருக்ணும்

ஆண்டவனேஎன்று கூவினார்கள். சாப்பாடு மூனு  வேளை.

தங்கிக்க பெரிய ஊடு. எல்லாம் ஏற்பாடு செய்யறம். எங்க கூடவே

தங்கிடு ராசாஎன்று வேண்டினார்கள். தெப்பக்கூடையில்

ஜனம் அலை மோதியது.


நீளத்துடுப்பை தண்ணீருக்குள் ஊன்றித் தள்ளி, தெப்பத்தைக்

கிளப்பினான் வீரன். பூமாதிரி மிதந்து புறப்பட்டது தெப்பம்.

நகரநகரப் பெண்களுக்கு சந்தோஷம் பெருகியது. பொங்கிப்

புரளும் பெண்ணையாற்றுத் தண்ணீரைக் கிழித்துக்கிழித்து

நகர்ந்தது தெப்பம். காலையின் அமைதியில் ஊரார் பாட்டு

வீரனின் பாட்டுடன் கூடி மிதந்தது.


ஆறுமைல் நடைச்சிரமம் இல்லாமல் தெப்பம் அடுத்த

கரையைத் தொட்டது. நெகிழ்ந்து உணர்ச்சிவசப்பட்ட

பெண்கள் மண்குடுவை நிறைய மோர் கொடுத்தார்கள். நெஞ்சில்

வார்த்தைகள் குழற நன்றியுடன் நின்றார்கள். சட்டென தலையை

அசைத்து வெற்றுத் தெப்பத்தை பழைய கரைக்குத் திருப்பினான்

வீரன்.


கரையில் மேளதாளத்தோடு காத்திருந்தார்கள் ஜனங்கள்,

வீரனை இழுத்துத் தோள்மேல் உட்காரவைத்துக் கொண்டு

கூத்தாடினார்கள். வீரன் தடுத்தான், கெஞ்சினான், மசியவில்லை

ஜனங்கள். நீ கடவுள்யா கடவுள்என்று தொழுது ஆடினார்கள்.

குளிர்க் காற்றாகச் சிரித்தான் வீரன்.


இன்னொரு நடை தெப்பம் வளவனூர்க்குச் சென்று

மீண்டது. சற்றும் அயராமல் துடுப்புப் போட்டான் வீரன்.

உச்சிவெயிலில் அவன் கருத்த தேகம் மின்னியது. ஆசைப்பட்ட

இளைஞனை உட்காரவைத்து துடுப்பு இழுக்கச் சொல்லித்

தந்தான். பத்துத்தரம் தப்புத்தப்பாக கூழ் துழாவுகிறமாதிரி

இழுத்தான் அவன். அடுத்த இழுப்பு லாவகமாகியது. பழகிக்

கொண்டதும் அப்பிடி போடுஎன்று சிரித்து தட்டிக்கொடுத்தான்.

கூலிக்காரர்கள் ஊர்திரும்ப, பொழுது இறங்கியது. ஏரியின்

சரிவில் பெரிய முளையடித்து தெப்பத்தை இழுத்துக் கட்டினான்

வீரன். வற்புறுத்தி ஊர்க்குள் அழைக்கஅழைக்க மறுத்து

மல்லாந்து படுத்தான். இரவில் வெளிச்சத்துக்கு கையில் தீவட்டி

ஏந்தி ஊர்க்காவல்காரன் தூக்குவாளியில் கொண்டுவந்த

மீன்குழம்பையும் கம்புச் சோற்றையும் ருசித்துச் சாப்பிட்டுப்

பசி தீர்த்தான். அடிவயிறும் மனமும் குளிர மனசில் பெரிய

நிம்மதியை உணர்ந்தான். குதூகலம் புரள இனிய குரலில் பாடத்

தொடங்கினான். மீண்டும் பழைய பாட்டு, வானையும்,

மண்ணையும் போர்த்தி விடுகிற மென்மையான துணியாக குரல்

இறங்கியது. மனத்தின் தாகம் தணியாதவன்போல காவல்காரன்

மேலும்மேலும் வேண்டிக்கொள்ள பாட்டு தொடர்ந்து

கொண்டே இருந்தது. தீவட்டி வெளிச்சம் மெல்லமெல்லக்

குறைந்து அணைந்து இருண்டது. புகை கிளம்பும்

தீபக்கோலுடன் வரட்டுமாஎன்று சொல்லிக்கொண்டு

காவல்காரன் கிளம்பியபோது நடுநிசி.


மறுநாள் விடுயும் நேரம் ஏரிக்கு வந்த ஆண்களும்

பெண்களும் காத்திருந்தார்கள். முளைக்குச்சியில் இழுத்துக்

கட்டப்பட்ட கயிற்றின் ஆதாரத்தில் தெப்பம் அடங்கிய

கைக்குழந்தையாகக் கிடக்க, அலை ஒதுங்கும் கரையில் வீரனின்

கோடாலி மாத்திரம் கிடந்தது. எங்கடி ஆளக் காணம்?’

சின்னக்குரலில் கிசுகிசுத்தார்கள் பெண்கள்.

(1990)